உள்ளே இருப்பவர்கள்

சுஜாதாவுடனான என் உறவு ஆரம்பிப்பது அவர் குமுதத்தில் எழுதிய அனிதா இளம் மனைவி என்ற தொடர்கதையில் இருந்து. அதுதான் அவரது முதல் தொடர்கதை. பிற்பாடு அதிகம்பேசாத அறிவுஜீவியாக உருவான கணேஷ் என்ற கதாபாத்திரம் அதில் கொஞ்சம் வசந்த் சாயலுடன் வந்து துப்பறிந்தது. அந்தத் தொடர்கதையின் மொழிநடை அந்த ஆரம்பநாட்களிலேயே என்னை ஈர்த்தது. நான் அன்றெல்லாம் உடனுக்குடன் வாசகர்கடிதம் எழுதக்கூடியவன். பிரசுரநோக்கம் இல்லை. என் எண்ணங்களை எழுதுவேன். பலபக்கங்களுக்கு. அதன் வழியாகவே நான் எழுத்தாளனாக ஆனேன் என்று சொல்லலாம்

பின்னர் பல ஆண்டுகளுக்குப்பின் நான் சுஜாதாவை நேரில் சந்தித்தேன். அப்போது நான் செயல்பட்டுக்கொண்டிருந்த ஓர் அரசியலமைப்பின் பிரதிநிதியாக. சுஜாதா சென்னையில் ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருந்தார். எங்களை மிகுந்த தயக்கத்துடன் வரவேற்று மிகமிகக் கவனமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் ஒரு கட்டத்தில் அவர் எங்கள் மனநிலையைப் பகிர்ந்துகொள்பவரல்ல என்று புரிந்துகொண்டேன். கிளம்பும்போது கொஞ்சம் தயக்கத்துடன் அனிதா இளம் மனைவிக்கு நான் அனுப்பிய வாசகர்கடிதம் பற்றிச் சொன்னேன்.

சுஜாதா சட்டென்று மலர்ந்தார். அப்போது ஆச்சரியமாக இருந்தாலும் இன்று அதைப்புரிந்துகொள்கிறேன். அது எழுத்தாளனின் ஆதார இயல்பு, அவன் பாராட்டுக்களை மறப்பதே இல்லை. சுஜாதா என் கடிதத்தை சரியாக நினைவுகூர முயன்றார். ’ஒரு கடிதம் வந்தது ஞாபகமிருக்கு. அப்ப எல்லாக் கடிதமும் எனக்கு முக்கியம்…ஆனால் வேற ஒண்ணும் ஞாபகமில்லை’ என்றார். அதன்பின் சரசரவென்று பேச ஆரம்பித்தார். அப்போது எழுதிவந்த ஜூனியர்விகடன் அறிவியல் கேள்விபதில்களைப்பற்றி. மேற்கொண்டு தொடர்கதைகள் எழுதப்போவதில்லை என்றார் ‘தொடர்கதை எல்லாம் சும்மா. மூணுசீட்டு வெளையாட்டு. நீ ராணியிலே காசு வச்சா நான் ஸ்பேடைத் திருப்பிக்காட்டுவேன்கிற மாதிரி’

‘அவன் காசு வச்சது எப்டி தெரியும்?’ என்றேன். ‘தொடர்கதை வர்ரப்பவே ஜனங்க எங்க போறாங்கன்னு தெரிஞ்சிரும். நேர் எதிரா ஒண்ணில கொண்டுபோய் நிப்பாட்டவேண்டியதுதான். என்னோட தொடர்கதைகளிலே தொடக்கம்தான் முக்கியம், நான் சுருக்கமா போறபோக்கில ஒரு உலகத்த, ஒரு வாழ்க்கையைக் காட்டியிருப்பேன். அதிலே என்னோட இன்வால்வ்மெண்ட் தெரியும். அது முடிஞ்சதும் அப்டியே கதை படுத்திரும்…’ என்றார். நான் கரையெல்லாம்செண்பகப்பூவை நினைவுகூர்ந்து அதை ஆமோதித்தேன்

‘நீங்க எழுதுவீர்களா?’ என்றார் சுஜாதா. ‘இல்லியே, ஏன்?’ என்று பொய் சொன்னேன். ‘இல்லை, பொதுவா எழுத்தாளர்கள்தான் நீளமான வாசகர் கடிதங்கள் போடுவாங்கங்கிறது என்னோட ஃபேவரைட் தியரி. அது ஒரு வர்ஷிப், கூடவே ஒரு சேலஞ்ச். நல்ல எழுத்தாளன் அவன் யாருக்கு வாசகர்கடிதம் போட்டானோ அவரைத் தாண்டிப்போக முயற்சிசெஞ்சுட்டே இருப்பான்’ ‘நீங்க யாருக்கு வாசகர் கடிதம் போட்டீங்க?’ என்றேன். சிரித்துக்கொண்டு ‘ஜானகிராமனுக்கு…எங்களுக்கெல்லாம் அவர்தானே ஆதர்சம்’ என்றார்.

கிளம்பும்போது சுஜாதா என்னிடம் ‘நீங்க எழுதலைங்கிறதை நான் நம்பலை’ என்றார். நான் சிரித்துக்கொண்டே கிளம்பிவிட்டேன். அதன்பின் நான் அவரைச் சந்திக்கவேயில்லை. எனக்கும் அவருக்குமான வாசக உறவு மிகவும் விலகிவிட்டது. என் ரசனையும் தேடலும் எங்கெங்கோ விரிந்து சென்றன. என்னுடைய முதல்நாவல் ரப்பர் வெளிவந்தபோது அவர் அதைப்பற்றிப் பாராட்டி எழுதியிருந்தார். அதன்பின் திசைகளின் நடுவே தொகுப்பை. அனேகமாக என்னுடைய எல்லா ஆரம்பகால நூல்களையும் அவர் பாராட்டி எழுதியிருக்கிறார்.

மறுமுறை நான் அவரை சந்தித்தபோது கூடவே கோமல் சுவாமிநாதன் இருந்தார். என்னை அவர் சுஜாதாவுக்கு அறிமுகம்செய்தபோது நான் சிரித்துக்கொண்டே ‘என்னை அவருக்குத் தெரியும்’ என்றேன் சுஜாதா ஆச்சரியத்துடன் ’நீங்கதானா அது? நான் ரிலேட் பண்ணிக்கவேயில்லை’ என்றார். ‘ஓ..உங்களுக்கு அறிமுகம் உண்டா?’ என்றார் கோமல். ‘இவரை நான் ஆசீர்வாதம் பண்ணியிருக்கேனே…’ என்று சிரித்தார்.

சுஜாதாவுடனான உறவு பல தளங்களில் நீண்டு சென்றிருக்கிறது. எப்போதும் அவருடன் ஒரு தொடர்பு எனக்கிருந்தது. அவர் சென்னை வந்தபின் சிலமுறை வீட்டுக்குச்சென்று சந்தித்திருக்கிறேன். ஒருமுறை நான் செல்லும்போது அவர் சட்டை இல்லாமல் பனியனுடன் வந்து கதவைத்திறந்தார். நெற்றியில் நாமம் போட்டிருந்தார். அந்த பிம்பத்துடன் என்னால் சுஜாதாவை ஒட்டிக்கொள்ளமுடியவில்லை. திகைத்து நின்றிருந்தேன். ‘உள்ளே வாங்க’ என்றார்

‘ஆச்சரியமா இருக்கு’ என்றேன். ‘இன்னைக்கு என்னமோ விசேஷம்…வீட்டிலே நான் மட்டும்தான் இருக்கேன்’ என்றார். நான் உள்ளே நுழைந்து அவருக்காகக் கொண்டுசென்றிருந்த சில புத்தகங்களைக் கொடுத்தேன். எப்போதும் அவர் கற்பனைசெய்ய முடியாத ஒரு புத்தகமாகவே அது இருக்கும். அன்று நான் கொண்டுசென்ற நூல் ‘சண்டிஹோமம் அல்லது மலையாள மாந்த்ரீக மகிமை’ இன்னொன்று பாவண்ணனின் ’முள்’ என்ற சிறுகதைத் தொகுதி. அவர் சிறுகதையை அப்பால் வைத்துவிட்டு சண்டிஹோமத்தைஆர்வமாகப் புரட்டி ஆங்காங்கே வாசித்தார். ‘இண்ட்ரெஸ்டிங்’ என்றார். ’இதெல்லாம் எங்கே பிடிக்கிறீங்க?’

‘இந்தமாதிரி புத்தகங்களுக்காக ஒரு தனி சர்க்யூட் இருக்கு. பப்ளிஷிங் டிஸ்ட்ரிப்யூஷன் எல்லாமே நம்ம கண்ணுக்குத் தெரியாம அதுபாட்டுக்கு நடக்குது. சில கோயில்வாசல்களிலே கிடைக்கும்’ என்றேன் ‘இதேமாதிரி போர்ன் பப்ளிஷிங்குக்கு ஒரு சர்க்யூட் உண்டுன்னு கேள்விப்பட்டேன்’ என்றார் சுஜாதா. ’ஆமா. அது வேற. சமயங்களிலே ஒரே வியாபாரி ரெண்டு புக்ஸையும் சேத்துப்போட்டு விப்பான்’

சுஜாதா சட்டென்று புத்தகத்தைத் தட்டி, ‘சரியான கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்…நான் இதெல்லாம் வெறும் ஃபோக்கா இருக்கும்னு நினைச்சேன்’ என்றவர் அதை இருமுறை வாசித்தார் ‘யாரோ கவிராயர் எழுதினது. சந்தேகமே இல்லை’ என்றார். நிமிர்ந்து ‘நீங்க இதையெல்லாம் ஏன் வாங்கி வாசிக்கிறீங்க?’ என்றார்

நான் அவரது நாமத்தால் கவரப்பட்டிருந்தேன். அவரைப் புதிய ஒருவராகப் பார்த்தேன். ஆகவே என் உள்ளூர பத்தாண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த திட்டத்தைச் சொன்னேன். ‘நான் ஒரு நாவல் எழுதற திட்டத்தோட இருக்கேன். விஷ்ணுபுரம்னு பேரு’ . சுஜாதா உற்சாகமானார். ‘என்ன நாவல் ? எப்படிப்பட்ட நாவல்?’ என்றார். நான் அதன் மையக்கருவைச் சொன்னேன். மூன்று கருவறைகளை நிறைத்துக்கிடக்கும் விஷ்ணுவின் பெருமேனியைச் சொன்னதும் அவர் கண்கள் கனிந்தன. ‘திருவனந்தபுரத்திலே பாத்தேன்…டிவைன்’ என்றார்.

நான் என் கதையின் கருவைச் சொன்னேன். சுஜாதா பரவசமாக அந்நாவலை எப்படி அமைப்பது என்று சொல்ல ஆரம்பித்தார். வைணவநூல்கள் பலவற்றைக் குறிப்பிட்டார். அன்று நெடுநேரம் வைணவம் பற்றித்தான் பேசினோம். ‘கோமல் கிட்ட போங்க.. அவருக்கும் வைணவநூல்களிலே இண்டிரஸ்ட் உண்டு’ என்றார். பின்னர் தொலைபேசியில் பேசிக்கொண்டோம். அந்நாவலின் ஆய்வுகளில் சுஜாதாவின் பங்களிப்பு மிக அதிகம்.

நாவலை எழுதியதும் நான் கைப்பிரதியை அவருக்குக் காட்டச்சென்றேன். நாவல் அப்போது கட்டின்றிப் பல பக்கங்களுக்குப் பரந்து கிடந்தது.’நீங்க வாசித்து எடிட் பண்ணிக் குடுங்க சார்’ என்றேன். ‘கண்டிப்பா…அது ஒரு கௌரவம்’ என்று சொல்லி வாங்கிக்கொண்டார். ஆனால் அதன்பின் அவர் எதிர்வினையாற்றவே இல்லை. தொலைபேசியில் அழைக்கவுமில்லை. ஒருமாதம் கழித்து நான் கூப்பிட்டேன். ‘ஜெயமோகன், நீங்க மேனுஸ்கிருப்டை வந்து வாங்கிட்டுப் போங்க. எனக்கு இப்ப வேலை கொஞ்சம் அதிகம்’ என்றார்

’எவ்ளவு வாசிச்சீங்க?’ என்றேன். ‘வாசிக்கவே இல்லை’ என்றார். நான் ஏமாற்றமாக உணர்ந்தேன். சிலநாட்கள் கழித்து நேரில் சென்று கைப்பிரதியை வாங்கிக்கொண்டேன். அந்தமுறை சுஜாதா என்னிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. ‘நான் அவசரமா திருச்சி போய்ட்டிருக்கேன்’ என்று மட்டும் சொன்னார். அவரது மனத்திரிபு எனக்குத் தெரிந்தாலும் காரணம் புரியவில்லை. நான் நாகர்கோயில் வந்து எம்.எஸ்ஸிடம் நாவலைக்கொடுத்து எடிட் செய்து தரச்சொன்னேன். அவரது உதவியுடன் நாவல் வடிவம் பெற்றது. நீண்டபோராட்டத்துக்குப் பின்னால் மூன்றாண்டுக்காலம் கழித்து வெளியாகியது. நான் சுஜாதாவுக்குக் கடிதத்துடன் பிரதி அனுப்பினேன்.

வெளியான நாள்முதல் இன்றுவரை இடைவெளியில்லாமல் பேசப்படும் தமிழ்நாவல் என்றால் விஷ்ணுபுரம்தான். ஆரம்பத்தில் அதன் சிக்கலானவடிவமும் அடர்த்தியான மொழியும் கனவுத்தன்மையும் வழக்கமான வாசகர்களுக்குப் பிடிகிடைக்காதவையாக இருந்தன. ஆனால் இன்று அதற்கான மிகச்சிறந்த வாசகர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். நாவல் வெளிவந்தகாலத்தில் தமிழிலக்கியத்தின் அறியப்பட்ட ஆளுமைகள் பல எதுவும் புரியாமல் அபத்தமாக எதிர்வினையாற்றியிருந்தன. நான் என் ஆசிரியராக மதிக்கும் சுந்தர ராமசாமிகூட. ஆகவே நான் சுஜாதாவின் எதிர்வினையைப் பெரிதும் எதிர்பார்த்தேன். அவர் மௌனமாக இருந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் சுஜாதா விஷ்ணுபுரம்பற்றி எதுவும் சொல்லவில்லை. நான் கேட்கவும் முற்படவில்லை. அதற்குள் அந்நாவல் ஒரு கிளாஸிக் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டிருந்தது. அதன்பின் ஒருநாள் சுஜாதாவுக்கும் எனக்குமான பொதுநண்பர் ஒருவர் பேச்சுவாக்கில் சொன்னார் விஷ்ணுபுரம் சுஜாதாவை மிகவும் சீண்டியது என்று. நாவலின் மூன்றாவது அத்தியாயமே படுத்திருக்கும் விஷ்ணுவின் கால்களுடன் ஒரு குஷ்டரோகியான பிச்சைக்காரனின் கால்களை ஒப்பிடுவதுதான். அதுவே அவரைக் கொந்தளிக்கச்செய்தது. அதில் ஆழ்வார்கள் இருவர் கேலிச்சித்திரங்கள்போல வருகிறார்கள். ஒருவருக்கு நம்மாழ்வாரின் சாயல். அதை சுஜாதாவால் தாங்கிக்கொள்ளவேமுடியவில்லை.

விஷ்ணுபுரம் ஒரு காவியநாவல். உச்சங்களையும் கீழ்மைகளையும் மாறிமாறித் தொட்டு விரியக்கூடியது காவியம் என்பது வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் பேசக்கூடியது , எல்லாத் திசைகளையும் ஆராயக்கூடியது . விஷ்ணுபுரத்தில் விஷ்ணுவின் பேரழகுக்காட்சி சித்தரிக்கப்பட்டால் மறுகணமே அதன் குரூரமும் கோரமும் சித்தரிக்கப்படும். தத்துவ உச்சம் பேசப்பட்டால் மானுட இச்சையின் கீழ்மையும் பேசப்படும். எதையும் மகத்துவப்படுத்தவோ புனிதப்படுத்தவோ அந்நாவல் முயலவில்லை. அது உண்மை மேலும் உண்மை என உடைத்து உடைத்து சென்றுகொண்டே இருப்பது. அந்த ஆன்மீகப்பயணம் இந்து மெய்ஞான மரபில் என்றும் உள்ளதுதான். அதை மட்டுமே நாவல் சித்தரிக்கிறது. அதை சுஜாதா புரிந்துகொள்ளவில்லை.

பலவருடங்கள் சுஜாதாவுக்கு என் மேல் கோபமும் விலக்கமும் இருந்தது. அவர் அதன்பின் என்னுடைய எந்தப் படைப்பையும் பற்றி எதுவும் பேசவில்லை. என்னைப்பற்றிய குறிப்பே அவர் பேச்சில் வந்ததில்லை. மேலும் பலவருடங்கள் கழித்து ஒரு திருமணத்தில் நான் சுஜாதாவைச் சந்தித்தேன். ஆரம்பத்தில் மிக இறுக்கமாக இருந்தார். நான் பேசப்பேச மெல்ல இலகுவானார். நான் அவரிடம் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னேன்.

என் மூன்றாம் நாவலான பின்தொடரும்நிழலின்குரல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மறுநாள் நான் பதிப்பாளரிடமிருந்து பெற்ற நான்கு நாவல்பிரதிகளுடன் சென்னை திருவல்லிக்கேணி வழியாகப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஒருபிரதியை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது அருகே இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் என்னை அவர் அருகே அமரச்சொன்னார். எண்பது வயதுக்குமேலிருக்கும். பெரிய நாமம் போட்டு நரைத்தகுடுமி வைத்திருந்தார். சவரம் செய்யப்பட்ட முகத்தில் நீண்ட மூக்கு. சிவப்பான உதடுகள். சட்டை இல்லாத கனத்த உடம்பு. பஞ்சக்கச்ச வேட்டி. காதுகளில் சிவப்புக்கல் கடுக்கன்கள். ஏதோ புராணக்கதாபாத்திரம்போலிருந்தார்.

நான் அமர்ந்ததும் ‘நீங்கதான் ஜெயமோகனா?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘பின்னாடி ஃபோட்டோ பாத்தேன்…இது நீங்க எழுதின நாவலா? கொண்டாங்க’ என்று வாங்கிப் புரட்டிப்பார்த்தார். ‘கம்யூனிஸம் பத்தி எழுதியிருக்கேளா?’ என்று விசாரித்தார். நான் ‘நீங்க படிக்கிறதுண்டா?’ என்றேன். ‘ஆமா…பையன் அப்பப்ப ஏதாவது புக் குடுப்பான்…’. ’நீங்க என்ன செய்றீங்க? ‘ என்றேன். ‘நான் புரோகிதம் பண்றேன்..’ என்றார் பெரியவர்.

நான் சற்று கழித்து ‘நீங்க என்னை முன்னாடி கேள்விப்பட்டிருக்கீங்களா?’ என்று கேட்டேன். அன்றெல்லாம் இலக்கிய வாசிப்பு என்பது ஒரு தலைமறைவுச்செயல்பாடு மாதிரி. அவர் சிரித்து ‘விஷ்ணுபுரம் வாசித்திருக்கேன்…ரெண்டுவாட்டி’ என்றார். நான் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கவனித்துக்கொண்டே இருந்தேன். ‘நல்ல நாவல். ஒரு மகாகாவ்யம் வாசிச்ச நெறைவு இருந்தது’ என்றார். ‘பெரியவங்க சொன்ன உபமானம் ஒண்ணு உண்டு. ஞானத்தைத் தர்க்கத்தாலே அள்றது மேகத்திலே சில்பம் செதுக்கறது மாதிரின்னு… மேகத்த பாஷையாலே அள்ளிட்டே இருக்கேள். அதெல்லாமே கவித்துவமா வந்திருக்கு. ஆனா பல எடங்களிலே அதையும் மீறிப்போய் எதைத் தொடணுமோ அதைத் தொட்டிருக்கேள். அதெல்லாம் குருவோட அனுக்ரகம். நல்லா இருங்கோ’

நான் உண்மையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அதை இன்றும் நினைக்கிறேன். அனேகமாக நூறுமுறையாவது இந்நிகழ்ச்சியை சொல்லியிருப்பேன். அன்று மனஎழுச்சியால் கண்ணீர் மல்கினேன். பின்பு கேட்டேன் ‘இல்லை…அதிலே உங்களுக்குச் சங்கடமா ஒண்ணும் தோணலையா?’ அவர் ‘எதுக்கு?’ என்றார். ‘அதில்லை, அதிலே சாதாரணமா பாத்தா அசிங்கமான விஷயங்கள் பலது இருக்கு’. அவர் சிரித்து ‘காவ்யத்துக்கு பீபத்ஸமும் ஒரு ரஸம்தானே?’ என்றார்

நான் இன்னும் அபாயகரமாக நெருங்கினேன். ‘…அதிலே ஆழ்வார்களையும் விஷ்ணுவையும் எல்லாம்கூட கிண்டலும் கேலியும் பண்ற எடங்கள் இருக்கு’ .அவர் நன்றாகவே சிரித்தார். ‘ஆமா….பாத்தேன். ஆனா நம்ம மரபிலே காவ்யகர்த்தனுக்கு அதுக்குண்டான லைஸன்ஸ் இருக்கு… அப்றம் உளன் எனின் உளன் எனவும் இலன் எனின் இலன் எனவும் சொல்லத்தானே கரியதிருமேனியா வடிச்சுக் கண்முன்னாடி போட்டிருக்கா…அது அங்க இருக்கிறது கும்பிட்டுக்கதறுறதுக்கும் சிரிச்சுக் கிண்டல்பண்றதுக்கும் எல்லாத்துக்கும்தான்…இருக்கட்டுமே’

அவர் இறங்கும்போது என்னை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். எனக்கே விஷ்ணுபுரம் பற்றி ஒரு சஞ்சலம் இருந்தது. அதை அந்நாவலின் முதல்பதிப்பின் முன்னுரையில் சொல்லியுமிருந்தேன். விஷ்ணுபுரம் ஒரு பெரும் கனவு. கனவின்மீது நமக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கனவுகளில் அழகும் அழுக்கும் அமுதமும் விஷமும் எல்லாம் இருக்கும். அதன் கட்டமைப்பும் கூறுமுறையும் இந்தியக்காவியமரபைச் சேர்ந்தது என்றாலும் ஆய்வும் அணுகுமுறையும் நவீன ஐரோப்பிய சிந்தனைமுறையைத் தொடர்பவை. முன்னது பின்னதை அங்கீகரிக்கிறதா என்று குழப்பம் இருந்தது. அன்று அது விலகியது. அதன்பின் இன்று வரை எனக்கு அந்த சஞ்சலம் இல்லை. அதன் மீதான விமர்சனங்கள் என்னை ஒன்றும் செய்வதில்லை. நம்முடைய மரபே வந்து அளித்த அங்கீகாரம் அது என நினைக்கிறேன்.

அதை சுஜாதாவிடம் சொன்னேன். ‘உங்க மனசுக்குள்ள பாரம்பரியம் இருக்கிறது  மாதிரி நம்ம மரபுக்குள்ளே நித்யநவீனமா ஒண்ணு இருக்குசார்…’’ என்றேன் ‘’நீங்க நாவலை வாசிச்சுக் கொதிச்சுப்போனதை என்னால புரிஞ்சுக்கிட முடியுது. உங்கப்பாகூட அப்டி கொதிச்சிருப்பார். ஆனால் உங்க தாத்தா அப்டி நினைச்சிருக்க மாட்டார்’ என்றேன். சுஜாதா அதை ஒரு சிறு அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். அதன்பின் எதுவும் பேசவில்லை.

அன்று கிளம்பும்போது சுஜாதா என் கையைப் பிடித்துக் குலுக்கினார். ‘பாப்போம்’ என்றார். கண்கள் மாறுபட்டன .’நீங்க அப்ப சொன்னது சரிதான்’ என்றார். நேராகக் காருக்குச் சென்றுவிட்டார். அதன்பின் அவர் இறக்கும் வரை எங்கள் உறவு சீராகவே இருந்தது.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 20, 2012

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47
அடுத்த கட்டுரை‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’