ஃபெட்னா- கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா? நாடலும் அதுவே.

தங்களின் வலையகத்தில் பெட்னா குறித்த கடிதங்களைக் கண்டேன். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

பெட்னா மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.

அ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;
ஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது
இ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது

நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ வேறு  யாராவது தனி மனிதரின் புகைப்படமோ இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.

மேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது!’ என்பார்.

இத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னைத் துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார்! எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.

பெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் ரூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கிய ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைத்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.

பத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.

துர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்குப் பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வாகத்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.

இராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.

வீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.

என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.

இன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.

இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.

வருடாந்திர விடுமுறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.

‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.

ஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.

அதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்பு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.

குறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.

இவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.

நான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்குத் தமிழ் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளைத் தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.

பெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வரவழைக்கலாமா?” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க! உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு!” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.

புகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளைக் கூப்பிடலாம். முதியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளைப் பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்!
பாலா
பாஸ்டன்
(balaji)

ஆசிரியருக்கு,

வணக்கம். தங்கள் பதில் கண்டேன். நன்றி. தமிழின் மசாலா பண்பாடு , மேடைப் பேச்சு மேல்தான் வளர்ந்தேன். தங்களது “யூத்” கட்டுரையில் எழுதப்பட்ட “யூத்” என்னும் அளவில்தான் அறிவு முதிர்ச்சி இருந்தது. அந்தத் தவறுகள் முதலில் உள்ளத்தில் ஒரு போதாமையைக் கொடுத்தன. நிறைவு இல்லை. அந்தப் போலித்தமான பூச்சு வேலைகள் கொடுத்த மனச்சோர்வினைத் தங்களது சங்க சித்திரங்கள், விஷ்ணுபுரம் போன்றவை தாண்ட உதவின. அன்பு மனைவி இந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி இந்தப் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தாள். இந்த வாசிப்பு ஒரு மன நிறைவினைக் கொடுத்தது. தொடர்ந்து உங்களை வாசித்து வருகின்றேன். இந்த மசாலா பண்பாட்டினை முடிந்த அளவில் தாண்டவே முயன்று வருகின்றேன்.

இப்போது இந்தியப்பண்பாடு , மரபு முதலியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதி உண்டு. என் பழம் மரபின் மேல் ஒரு அதிகார அரசியல் படர்ந்து உள்ளது. அதை ஒதுக்கி இலக்கியத்தையும், இசையையும் காணுதல் தற்போதைய முயற்சி. நான் கடிதம் எழுதுவது பெட்னாவினைக் குறித்த தங்கள் கருத்தினை மாற்றி அமைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அல்ல.உங்களது கருத்து உங்களது அனுபவத்தின் மீது , நம்பிக்கையின் மீது நீங்கள் உருவாக்கியது. நான் சொல்ல விழைவது ஒரு மறுபக்கம் உண்டென்பதினை மட்டுமே.

பெட்னாவில் சினிமா நிகழ்வுகள் இல்லை என சொல்ல மாட்டேன். இருந்தது. அது வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. எனவே அது இருக்கும். ஆனால் கீழ்க்கண்ட நிகழ்வுகளும் இருந்தன என்பதை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்.

http://www.youtube.com/watch?v=vssynAcaLT0 —- காவிய தலைவிகள் நாட்டியம்

http://www.youtube.com/watch?v=6ryxPpR_XWk&feature=relmfu– கண்ணதாசன் பாடலுக்கு நடனம்

http://www.youtube.com/watch?v=lmXGB4YYn4I&feature=related– நியூ ஜெர்சி தமிழ் சங்க நடனம்

http://www.youtube.com/watch?v=h1xyhDk1lAA– சிலம்பாட்டம்

http://www.youtube.com/watch?v=icq_ahXTROk&feature=related- தமிழிசை (இதை நான் தவற விட்டு விட்டேன். இதில் நிறைய குழந்தைகள் பங்கு கொண்டன. நிகழ்ச்சி நிரல் பார்த்துத் தெரிந்து கொண்டேன்)

http://www.youtube.com/watch?v=BQGqQ_Lw_HM&feature=related- வீணை இசை (இதை நான் பார்க்க வில்லை )

இன்னும் ஒரு அருமையான நாட்டிய நிகழ்வு இருந்தது. அதைப் பார்த்தேன். அதன் ஒளிக் காட்சி கிடைக்கவில்லை. இந்த நாட்டிய நிகழ்வுகள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் உச்ச வெளிப்பாடு அல்ல.
ஒரு தொடக்க நிலை அனுபவங்களே. ஆனால் இவை புலம் பெயர் குழந்தைகளின் வெளிப்பாடு. பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்க மண்ணில் வேறுபட்ட இடங்களில் வாழும் தமிழ்ப்பிள்ளைகள் தங்களை முன்வைக்க அமைக்கப்பட்ட தளத்தில் நிகழ்த்தும் வெளிப்பாடு.இங்கு நாம் காண வேண்டுவது மரபுக்கலை வடிவங்களில் மன மகிழ்வை , கலை வடிவின் நுணுக்கத்தினை அல்ல. தமிழ் நாட்டில் வாழும் பெற்றோருக்கு இல்லாத ஒரு சிரமம் இங்கு புலம் பெயர் தமிழனுக்கு உண்டு. தமிழ் வெளிப்பாட்டுத் தளங்கள் எங்கள் குழந்தைகளுக்கோ, எங்களுக்கோ எளிதானது கிடையாது. அவர்கள் ஒரு சாதாரண உரையாடலைத் தமிழில் நிகழ்த்துவது அதிசயமாக உள்ள இடத்தில் மரபுக் கலை வடிவங்களில் தமிழ் காண விழைவது மிகக் கடினமான ஒரு காரியம்.

இதைத் தவிர குழந்தைகளுக்கான தமிழன் தமிழச்சி நிகழ்வு, இலக்கிய வினாடி வினா நன்றாக இருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். அதன் ஒளிக் காட்சியும் கிடைக்கவில்லை. நான் குடும்பதோடு செல்லவில்லை. என் நோக்கம் எஸ்.ராவோடு நேரத்தினை செலவிடுவது. நான் பால்ட்டிமோரிலும் தங்கவில்லை. எனவே மூன்று நாட்களும் தினசரி ஒரு வழி 60 மைல் கார் ஓட்டம் , எஸ்.ராவுக்கு அருகில் இருக்க முயற்சிப்பது என நேரம் செலவாகியது.

நான் மிக மதிக்கும் சில குடும்பங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றன . நான் இந்திய இசை மரபின் தொடர்ச்சியாக மதிக்கும் , தமிழ்க் கல்வி செயல்பாட்டில் பெரும் நேரம் செலவிடும் எனக்குத் தெரிந்த குடும்பங்கள் தன்முனைப்போடு பங்கு பெற்றன. இங்கு உணவுக் கூடத்திலும் ,அரங்கிலும் ,அரங்குக்கு வெளியிலும் நான் பலரது உழைப்பையும் கண்டேன். இவர்களது செயல் எனக்குப் பிடித்த விதத்தில் , எனக்குப் பிடித்த தளங்களில் மட்டும் இருக்க வேண்டுமென நான் கோர இயலாது. ஆனால் எனக்கு விருப்பமான தளங்களிலும் கூட உண்டு என்பதைக் கண்டேன். முன்பே சொன்னது போல இது ஒரு மன மகிழ் நிகழ்வு. தமிழ் நாட்டில் உள்ள உங்களுக்கு பெரும் கூட்ட சூழலில் பல தமிழ்க் குடும்பங்கள் ஒன்றாய்க் காண வேண்டும் என்பது ஒரு சிறு ஆசை போல இருக்கலாம் , ஆனால் அது புலம் பெயர் சூழலில் கொடுக்கும் மன நெகிழ்வு சொல்ல இயலாது. திரை கடலோடி திரவியம் தேட வந்து எங்கள் அம்மா ,அப்பா ,உடன் பிறப்புகள் விட்டுத் தள்ளி வாழ்கிறோம். இந்த வாழ்வு எங்கள் தேர்வே,யாரும் கட்டாயாயப்படுத்தவில்லை. இந்தத் தேர்வின் காரணமாய் நிறைய திருமணங்கள் தவறவிட்டிருக்கின்றேன். மொட்டை அடித்தல் , காது குத்துதல் போன்ற சிறு நிகழ்வுகள் தவற விட்டிருக்கின்றேன். இங்கு மொத்தமாய் இத்தனை தமிழ்க் குடும்பங்கள் காண்கையில் கங்கையின் சங்கமத்தில் நீங்கள் சொன்ன மன நெகிழ்வே உண்டாயிற்று. கங்கையின் அசுத்தமோ. காசியின் நெரிசலோ முக்கியமில்லை. மனம் ஒரு விஸ்வரூபக் காட்சியை உருவாக்கித் தருகின்றது. அது போலவே இங்கிருந்தது.

இங்குள்ள சில அரசியல்,அதன் வாதங்கள் , சினிமா வேகம் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் .ஆனால் அவை மட்டுமே அங்கே இல்லை.பிறவும் இருந்தன. ஆனால் அவை இல்லாத ஒரு தமிழ் இடத்தினைத் தேடிக் காணுதல் புலம் பெயர் சூழலில் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. நிச்சயம் என் பெண் இழிவாகக் காணாத ஒரு தகப்பனாக இருப்பேன் என நம்புகின்றேன். நீங்கள் எனது ஆசிரியர், உங்கள் வார்தைகள் சரஸ்வதி வடிவம். இது போல என்னைக் குறித்து சொல்லும் பொழுது சிறிது உறுத்துகின்றது .

ஏதோ ஒரு வகை அரசியலும் , அரசியல்பால் உண்டாகும் குறைபாடுகளும் எல்லா இடங்களிலும் உண்டு. எல்லா மக்கள் திருவிழாவிலும் உண்டு. வேறு வேறு வடிவங்களில், ஆனால் அதைக் காட்டித் திருவிழாக்களை நிராகரிக்க வேண்டுமா?

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்

கடுமையாக சொல்லிவிட்டமைக்கு வருந்துகிறேன். மன்னியுங்கள். ஓர் உரிமையால் சொல்லப்பட்டது.

பொதுவாக நாம் ஒரு பொறுமையின்மையைக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சுற்றுச்சூழல், பண்பாட்டுச்சூழலை மலினப்படுத்தும் விஷயங்களுக்கு எதிரான பொறுமையின்மை. அதை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். எவ்வளவுமுடியுமோ அவ்வளவு தீவிரமாக. ஏனென்றால் நூறுபேருக்கு ஒருவர் கூட அதைச் சொல்வதில்லை. நாம் அதைச் சொல்லிக்கொன்டிருக்காவிட்டால் அந்தக்குரலே ஒலிக்காமல் போய்விடும்

என் அளவுகோலே இதுதான். எவரேனும் அதைச் சொல்கிறார்களா என்பதே. ஆகவே ‘சமரச’க் குரல்கள் சட்டென்று கடுப்பேற்றிவிடுகின்றன

நான் சொல்வதையும் யோசிப்பீர்கள் என நினைக்கிறேன். நாம் ஆறுகளையும் ஏரிகளையும் அசிங்கமாக்குகிறோம். அறிஞர்களுக்குப்பதில் கோமாளிகளை மேடை ஏற்றுகிறோம். இலக்கியங்களுக்கும் கலைகளுக்கும் பதில் கூத்தடிப்புகளை ரசிக்கிறோம். எதன்பேரினாலாலும் இது நம் அடுத்த தலைமுறைக்குமுன் நம்மை கேலிக்குரியவர்களாக ஆக்கிவிடாதா என்று நாம் சிந்தித்தே ஆகவேண்டும்

நம் குழந்தைகளிடம் இவற்றுக்கு எதிரான கண்டனத்தை உருவாக்குவதே நல்லது. நான் அப்படித்தான் உருவாக்கினேன் என்பதனால் இதைச் சொல்கிறேன். அவர்கள் மேலான ரசனையை அடையாளம் கான அது உதவும். அவர்கள் நம் குரலைத் தொடர்ந்து ஒலிக்கட்டும்

என் குழந்தைகளை இம்மாதிரி ஒரு ‘கலாச்சார கூத்தடிப்புகளுக்கும்’ நான் கொண்டுசென்றதே இல்லை. கடுமையான விமர்சனம் இல்லாமல் அவர்கள் கண்ணில் இவற்றைக் காட்டியதே இல்லை. நான் நண்பர்களிடம் எதிர்பார்ப்பதும் இதுவே

ஜெ

முந்தைய கட்டுரைகுலதெய்வம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுதுவதுபற்றி…