2006-ஆம் ஆண்டு மதுரை புத்தகத்திருவிழாவில் தான் ஜெ.யை அறிமுகம் செய்துகொண்டேன். அவரின் சில சிறுகதைகள் சிற்றிதழ்களில் வெளிவந்த விவாதங்கள், கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் கன்னியாகுமரி நாவல் இவை மட்டுமே அப்போது படித்திருந்தேன்.
கன்னியாகுமரி நாவல் பற்றிப் பாராட்டு சொல்லிவிட்டு அதை ஃபெலினியின் 81/2 படத்துடன்2 ஒப்பிட்டுச் சொல்வதற்காக எண்ணங்களளைத் திரட்டிக்கொண்டிருந்தபோது, ”விஷ்ணுபுரம் படித்தீர்களா?” என்றார். “இல்லை” என்றதும் “அது படிக்கக் கொஞ்சம் கஷ்டமான புத்தகம் தான்” என்றார். விஷ்ணுபுரம் நூலை அப்போது நான் உண்மையிலேயே வாசித்திருக்கவில்லை என்பதால் என்னிடம் சொல்ல ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவரே அப்படிச்சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு வேறு விஷயங்களை விவாதித்தோம்.
அறிவியல் ஆய்வு தொடர்பான பணிகளில் வார விடுமுறை உள்பட எந்நேரமும் ஓயாத ஆய்வக வேலைகள், படிக்கும் எழுதும் வேலைகள். நவீன வாழ்க்கையின் முழுநேர வேலை என்பது மனிதனின் முழு ஆற்றலையும் உறிஞ்சிக்கொள்வது. இரண்டாம் முறையாக ஜெ.யைச் சந்திப்பதற்கு ஒருவாரம் முன் எப்படியாவது இம்முறை முடித்துவிடவேண்டும் என்று படிக்க ஆரம்பித்து வலுக்கட்டாயமாக முதல் இருபது பக்கங்கள் தாண்டி நுழைந்து விஷ்ணுபுரத்தில் அகப்பட்டுக்கொண்டேன். வழக்கம்போல படிப்பது தவிர பொருள்கள் வாங்க வீட்டு ஆட்களை உள்ளே அனுப்பி விட்டு கடைக்கு வெளியே நின்றும் அமர்ந்தும் படித்தேன். முடியாமல் இரவு உணவுக்குப்பின் ஓய்வின்றி அதிகாலை வரை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். இதேபோல தொடர்ச்சியாக சில நாட்கள் கழிந்து தூக்கமின்றி உடல் நலமில்லாமல் விடுப்பு எடுத்துக் காய்ச்சல் படுக்கையிலும் படித்துக் கொண்டிருந்தேன்.
விஷ்ணுபுரத்தில் சங்கர்ஷணன் உள்படப் பலரின் ஆளுமைகளையும் அண்மையில் நெருங்கிச் சென்று அறிய முடிவதாக ஒரு எண்ணம். பதின்ம வயதில் கடவுள் நம்பிக்கையை இழந்து இசைக்கல்வியைக் கைவிட்டதன் இழப்பு, அதனால் நிரந்தர வடுவாக எஞ்சித் தொடர்ந்து வரும் சலனங்கள், எதிர்பாராத ஊர்மாற்றங்கள், பல்கலைக்கழகங்கள் தோறும் சுற்றியலைந்து திரிந்த பிறகும் தீராத கேள்விகளால் இடைவிடாத ஆய்வாக நீண்டு அழைக்கழிப்புகளாலும் ஓய்வின்மையாலும் நிறைந்துவிட்ட வாழ்க்கை, வாழ்நாளின் பெரும்பகுதி கல்வியிலேயே கழிந்து விட்டமை, என அல்லது இப்படியெல்லாம் வலிந்து கற்பனையாக எண்ணிக்கொள்ள முடிவதும் கூட புனைவில் திளைக்கும் வாசகனுக்கு இயலாத ஒன்றா என்ன? பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையின், ஏதோ ஒரு காலத்து மானுடப்பிரதியின் தவிப்புகளை, மொழிகள் தேசங்கள் காலங்கள் கடந்து வந்து நமக்குள் நம் தனிப்பிரக்ஞையின் வெளியில் பிணைத்து ஒருமையடையச் செய்பவைதான் பேரிலக்கியங்கள் இல்லையா!
சிந்தனையின் வலிமையை முழுக்க ஒன்று திரட்டி அதன் விளிம்பில் நின்றும், விளிம்பைத் தாண்டிச்சென்றும் ஏதோ ஒன்றன் உச்சத்தின் நிறைவை உணரும் மனஎழுச்சி. நம்மை நாமாக இருத்தியிருக்கும் மனித நியதிகளையும் மீறி மானுடத்தின் இயலாமையை அற்பத்தை சிறுமையை உணர்ந்ததன் தாழ்வுணர்ச்சியின் இழிவு. நீந்தத் தெரியாதவனை எல்லாத்திசைகளிலிருந்தும் மூழ்கிச் சூழ்ந்து கொள்ளும் கிணற்று நீர் போலப் புலன்களையெல்லாம் வன்முறையாக ஆக்கிரமித்துக்கொண்ட முடிவற்ற வெறுமை. என் ஒட்டுமொத்த வாசிப்பில் என் தர்க்கம் முழுதையும் அடித்து நொறுக்கி இல்லாமலாக்கிப் புரட்டிப்போட்டு மிரட்டி அச்சுறுத்தியது விஷ்ணுபுரம் அன்றி வேறில்லை. இதை மேலும் பல வாசகர்கள் சாட்சியப்படுத்தக் கூடும்.
படித்து முடித்ததும் மனதை நிறைத்திருந்த வெறுமையின் நிறைவில் அதைப்பற்றி விரிவாக விவாதிக்கும் துணிவோ ஊக்கமோ ஜெ.யை நேரில் சந்திக்கையில் இருக்கவில்லை. ”விஷ்ணுபுரம் அளவுக்கு செறிவான தத்துவ விவாதங்களை ஒரு நாவலில் படித்ததில்லை. படிக்கையில் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினேன்” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ”அவ்வளவு தத்துவமும் நாவலில் கதையோடு வருவதால்தான் அப்படி இருக்கிறது” என்றார்.
இப்போதுங்கூட, பார்வைபட மேசைமேல் எப்போதுமிருக்கும் பிரதியை திடீரென நெருங்கிச் சென்று ஆவேசமாக எடுத்துப் புரட்டிப்பார்த்து அடிக்கோடிட்ட வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பார்த்து பொங்குவதுண்டு.
சில விஷயங்கள் துலக்கமின்றி நதியின் கலங்கல் போல ஆழ்மனதில் தங்கியிருந்தது போல. வருட இடைவெளிக்குப்பின் இந்தப்பதிவை எழுதும் பொருட்டு மீண்டும் ஒரு முறை முழுமையாகப் வாசித்தபோதுதான் நான் தவற விட்டிருந்த முக்கியமான மிகவும் அடிப்படையான பல விஷயங்கள் கவனத்துக்கு வந்தன என்பதை ஒத்துக்கொள்வது முற்றிலும் வெட்ககரமானதுதான் என்றாலும் பதிவுசெய்யத் தகுந்ததே. மாநகரின் பிரம்மாண்டத்துக்குள் வழிதவறி நுழைந்துவிட்ட கிராமத்துப் பயணி போலப் புதிய உலகுள் அதிசயித்து மயங்கும் மனம் திகைப்பில் சூழலின் முழுமையையும் அவதானிக்கத் தவறிவிடுகிறது போலும். ”பெரும் நாவல் என்பது பிரம்மாண்டமான ஆலயத்தைப் போன்றது, எவ்வளவு முறை பார்த்தாலும் அதன் நுட்பத்தின் முழுமையையும் பார்த்துவிடவே முடியாது, அடுத்தமுறை பார்க்கும் போது புதிதாக ஏதாவது ஒன்று கண்ணில்படும்!” என்று செயிண்ட் பால் தேவாலயத்தில் சிறில் உடன் இருக்கையில் ஜெ சொன்னது ஒரு அசரீரி போல நினைவுக்கு வருகிறது.
எல்லா மதக்கிரந்தங்களிலும் விஷ்ணுபுரம் பற்றிய ஐதீகங்கள் உள்ளன. பாண்டிய நாட்டின் எல்லையைத் தாண்டி ஓடும் பிரியதாரா நதி தாண்டி, ஒற்றை இலையால் ஒரு யானையையே கொன்றுவிடும் கடும் நச்சுச்செடியான நாகஹஸ்தி மண்டிய கானகத்திற்கு அப்பால் இருப்பதும், நாய்களை மயக்கமடைய வைக்கும் மணமும் தளிர்களை வாடச்செய்யும் மூச்சுக்காற்றும் கொண்டவனும் இரும்பைக் கடித்து உடைப்பவனும் நச்சரவை முத்தமிடுபவனும் ஒற்றை நகக்கீறலில் எதிராளியை நீலம் பாரித்து மரிக்கச்செய்யும் விஷம் உடலெங்கும் நிறைந்த ஹடயோகியுமான வீரமடங்கனும் அவன் சீடர்களுமே எட்ட முடியாததும் விஷ்ணுபுரம். திக்நாத மகாப்பிரபுவின் சீடரான மகாஅஜிதரின் காலதரிசன சூத்திரத்தில் விஷ்ணுபுரம் பற்றித் தெளிவான குறிப்புகள் இருந்தும் விஷ்ணுபுரம் என ஒன்று இல்லை கடக்க முடியாத இந்த விஷக்காட்டைக் கண்ட முன்னோர்கள் ஒரு மாயநகரை அதற்கு அப்பால் கற்பனை செய்து கொண்டார்களோ என்றும் எண்ணச்செய்வது. விஷ்ணுபுரத்தைச் சென்றடைந்தவர்களை விட பிரியதாராவின் மடித்தட்டில் உயிர் விட்டவர்களே அதிகம் என மகாபத்மபுராணம் குறிப்பிடும் விஷ்ணுபுரத்தை அவ்வளவு எளிதில் அடைந்து விட முடியுமா என்ன? ஞானமே எல்லாத்திசைகளிலும் ஆபத்தான பயணம்தான் இல்லையா?
காவல் மிகுந்த ஐந்தாம் நூற்றாண்டின் எந்த நகரையும் போல விஷ்ணுபுரத்துக்கும் அகழி உண்டு. வெண் திரவமாகத் ததும்பும் மணலால் நிரம்பிய அகழி. உக்கிரமான மொழிவீச்சை அறிமுகம் செய்துகொள்ளாதவர்கள் இந்த அகழியைத் தாண்ட முடியாமல் துணுக்குற்று நின்று வெறுங்கையுடன் திரும்பிவிடக்கூடும். விஷ்ணுபுரத்துக்குள் நுழைந்து விட்டவர்களின் கையில் அகப்படுவது எதுவாயினும் அது விலைமதிப்பற்றதே.
தத்துவங்கள் விருட்சங்களாகவும் தருக்கங்கள் புதர்களாகவும் நிறைந்து மண்டிய பிரம்மாண்டமான காடு விஷ்ணுபுரம். இது பஞ்சார்த்த ஆகம விதிப்படி அர்த்தசக்கர மண்டலமாக அமைக்கப்பட்டது. இக்காவியத்தை எப்படியும் மாற்றியமைத்து வாசிக்கலாம். இதில் வரும் எந்த வாதகதியையும் இதில் வரும் இன்னொரு வாதகதியால் ஜெயிக்கலாம். இதில் வரும் எந்தத் தருக்கத்தையும் இதில் வரும் இன்னொரு தர்க்கத்தால் தகர்க்கலாம். நமது பக்குவத்திற்கு ஏற்ப மாற்றிப் பொருள் கொள்ளலாம். கனவுகள் நிரம்பிய இளம் வயதில், லெளகீகம் முற்றிய நடுவயதில் ஞானம் கனிந்த முதுவயதில் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால் பாதம், உந்தி, முகம் என ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிச்சென்று ஞானமுழுமை பெற்ற ஒருவர்தான் விஷ்ணுபுரத்தை முழுமையாகத் தரிசிக்க முடியும்.
குறைந்தது நான்கு முறையாவது இந்நூலை ஆழ்ந்து வாசிக்காதவர்கள் இந்நூலை வாசிக்காதவர்களே, என்பது என் சொந்த அனுபவம். இந்நூலை முழுமையாகக் கற்க ஒருவர் எத்தனை முறை வாசிக்கவேண்டும் என்று நிர்ணயிப்பது வாசகமனதையும் அனுபவத்தையும் தரப்படுத்துவதாக ஆகாது என்றாலும். தேர்ந்த வாசகர் கூட இதில் வரும் எல்லா விஷயங்களையும் ஓரிரு வாசிப்புகளில் அவதானத்தில் கொள்ளமுடியாமைக்கு எந்தவொரு பெரும் ஆக்கத்தையும் போல இந்நூலின் செறிவே காரணம் என்றாலும் விஷ்ணுபுரத்துக்குள் ஸ்தூலமாக அடர்ந்து விஸ்வரூபமெடுத்து பிரிந்தும் மறைந்தும் நிற்கும் மாய உருவத்தின் புதிர்களை இணைத்து ஒன்றாக்கிப் புலன் கொள்ள அதைச் சில பல முறைகள் சுற்றிவந்தே ஆக வேண்டும்.
தருக்கம் சிந்தனையின் முற்றிய வடிவம். தருக்கம் வேறு ஞானம் வேறல்ல. தருக்கம் என்பதே ஞானம். எதையும் உன் அனுபவ வட்டத்துக்குள் கொண்டுவந்து யோசி. உன் அனுபவத்தை மீறியவை கூட அனுபவத்தின் தருக்கத்திற்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். அதுவே ஞான வழி. மீதியெல்லாம் சுயஏமாற்று என்கிறார் விஷ்ணுபுரத்தின் மகாசிற்பி பிரசேனன்.
ரிக்வேதம், சாங்கியம், சத்காரியவாதம், வியவகார ஞானம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், ஸ்யாத்வாதம், அனேகாந்த வாதம், தண்டாபூமிகா நியாயம், வைபாஷிகம், காரணகாரிய வாதம், பிரதீத சமுத்பாதம், சர்வாஸ்திவாதம், தூலாருந்ததி நியாயம், மாயூர நிருத்த நியாயம், ஷணபங்கவாதம், மாத்யமிகம், சூனியவாதம், சதுஷ்கோடி தர்சனம், தீர்க்க சமுச்சயம் மற்றும் ஆத்யவயாசம் -என ஒவ்வொரு தத்துவத்தையும் நிறுவியும் மறுத்தும் அடுத்த தத்துவத்திற்குச் சென்று அதையும் மறுத்து இன்னொன்றை நிறுவியும் செல்லும் விவாதம் கெளஸ்துபத்தில்.
எந்தச் செடியும் வேரை நிராகரித்தபடிதான் மேலெழுகிறது. அதே சமயம் வேரை நம்பியுமிருக்கிறது. அது அதன் ஒரு பகுதியுமாகும். எந்த ஞானமும் சுதந்திரமான போக்கு அல்ல. சாங்கியமும், வைசேஷிகமும், மீமாம்சகமும், வேதாந்தமும், சைவமும், பெளத்தமும், சமணமும் அனைத்துமே ஒன்றை ஒன்று மறுத்தும் ஏற்றும் மானுடனின் தேடலை முன்னெடுத்துசெல்லும் பாதைகளேயாகும்.
இவை எல்லாமே உண்மைதான். பொய்யென்றால் சரிசமமான பொய்கள். உண்மையில் இந்த ஞானசபை விவாதமென்பது ஒரு கூட்டுப்பாவனை. மோதிக்கொள்பவை நியாய தருக்கக் கட்டுமானங்களே தவிர தரிசனங்கள் அல்ல. இத்தரிசனங்களின் சாரத்திற்கும் நியாய தருக்கத்திற்கும் எவ்விதமான உறவும் இல்லை. தரிசனங்களை ஒருவகைக் கற்பனைகள் என்றுதான் கூறவேண்டும். நியாய தருக்கம் மூலம் எந்த தரிசனமும் தோற்கடிக்கப்படிவதுமில்லை, வெற்றி பெறுவதுமில்லை.
சூழ்நிலைக்கு ஏற்பவே மனம் தருக்கங்களை உண்டுபண்ணுகிறது. தர்க்கம் வெறும் காற்று. அது எப்படி வேண்டுமானாலும் சுழன்று வீசக்கூடும். அதற்கு முடிவு என்பது இல்லை. உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது. சிக்குமெனில் சதுரங்க விளையாட்டு வழியாகவே பரமஞானம் அடைய முடியும். ஞானம் முழுக்க இந்தப்பூமியின் நியதிகளைக்கொண்டு பிரபஞ்சத்தை அளக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட கற்பனையேயாகும். தர்க்கவடிவான ஞானம் ஒருபோதும் பூரணமல்ல. ஞானத்திற்கு வெளியே விரிந்து கிடப்பது வெளி. அதை அளக்க ஏது அடிப்படை? அது எங்கும் எப்போதும் செல்லுபடியாகுமென யார் கூறியது? தருக்கத்தின் முதல் கதிர் பட்டதும் உலகம் பிரிவுபட ஆரம்பிக்கிறது. தருக்கம் வளருந்தோறும் உலகம் பிளவுபட்டு, பிளவுகள் பின்னி சிக்கலாகி, தோற்றம் தருகிறது. உடைப்பதும், பிரிப்பதும், பெயரிடுவதும், தொகுப்பதும்தான் தருக்கத்தின் போக்கு.
ஆனால் பெருவெளியில் திசை இல்லை. எந்தப்பயணமும் போதியதூரம் சென்றால் ஒரே புள்ளியையே சென்றடைகிறது. தருக்கத்தின் உச்சியில் மனம் அதருக்க நிலையை அடைகிறது. மகத்தான முழுமையுடன் பிரபஞ்சம் மீண்டும் காட்சி தருகிறது. வாதகதிகள் பயனை உத்தேசித்து ஓர் எல்லைக்குள் மனிதமனம் உருவாக்குபவை. கோழைகளின் புகலிடம் அவை. வீரன் என்பவன் வெறுமையில் காலூன்றி நிற்பவன். நிர்குணரூபமான மனிதனுக்குத் தர்க்கம் இல்லை. அவன் முன் பிரபஞ்சம் மகத்தான ஒருமையாகக் காட்சியளிக்கிறது. வாதங்கள் தாங்கள் கட்டியெழுப்பியதை ஒரு கணத்தில் சாஸ்வதமாக எண்ணிக்கொள்கின்றன. அவற்றின் நிழலில் தங்கிவிடுகின்றன. காலம் தருக்க வடிவம் கொண்டுவரும் அப்போது. உடைத்து வீசும். வெறுமை நோக்கி அனைத்தையும் இழுத்துச்சென்றபடியே இருக்கும் பிரவாகமே காலமென்பது. நாம் வணங்கவேண்டியது அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலத்தையே.
காலமென்பது சம்பவங்களின் வரிசை. கால யதீத கால: என்கிறது கல்ப சாஸ்திரம். பிரகிருதியைப் பார்க்கும் மானுடப் பிரக்ஞையில்தான் உருவாகிறது காலம். நிகழ்வுகளை மனம் தன் இருப்பை வைத்து வகைப்படுத்த ஆரம்பிக்கும்போது காலம் உருவாகிறது. அதை தன் மன மயக்கத்தால் அப்பிரக்ஞை மீது ஏற்றி அதன் ஒரு பகுதியாகப் பார்க்க ஆரம்பிக்கிறது. நாம் காணும் காலம் பிரக்ஞையால் துண்டுபடுத்தப்பட்ட காலம். பிரக்ஞை மாறும்போது மாறும் காலம். எல்லா கணிதமும் பூஜ்யத்தில் தொடங்குகிறது, பூஜ்யத்தில் முடிகிறது பூஜ்யத்திற்கு இருபுறமும் முடிவின்மை உள்ளது. இரு பூஜ்யங்களுக்குள் நாம் சிக்க வைத்துள்ள காலமே கணிதத்தால் அளவிடப்படுகிறது. கணிதம் என்பது மாயையை மாயையால் அளவிடும் முயற்சியாகும். ஆகவே காலம் என்று எதுவுமில்லை. அது ஒரு மாயை.
தத்துவங்கள மட்டுமலாது, தர்க்கம் Xதர்க்க மறுப்பு, ஞானம் Xஞானமறுப்பு, சூனியம் Xஞானம், லெளகீகம் Xஅலெளகீகம் அனைத்தையும் ஒன்றை ஒன்று தொடர்புள்ளதாக சக்கர வடிவில் அமைத்துக் காட்டுகிறது விஷ்ணுபுரம். எத்தனயோ நூல்களைப் பயின்று முழு வாழ்க்கையையும் செலவிட்டு எங்கெல்லாமோ அலைந்து மகாஅஜிதர் நடந்து சென்ற பாதையில் நடக்க வேண்டும் அவரது வெற்றி ஸ்தூபியையும் மகா விகாரத்தையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் துளித்துளியாக வளர்ந்து பெருவெள்ளமாகப் பொங்கிய மனதுடன் செல்லும் முதிய புத்த பிட்சு பயணத்தின் கடைசி நொடியில் அஜிதரின் கால தரிசனம் வெறும் மனமயக்கம், பித்து என உணர்ந்து தளர்ந்த தோள்களுடன் கரிய நாயின் முன் நடந்து செல்கிறார். வேதசாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த பவதத்தரின் புதல்வன் விஷ்ணுதத்தன் கல்வியின் இறுதியில் ஞானம் என்பது படிபோல, ஞானமனைத்தும் சூனியத்திற்கே இட்டுச்செல்லும், அதன் பிறகு என்ன? என்ற கேள்விக்கு பதிலின்றி வைதீக வாழ்க்கையைத் துறந்து சுடுகாட்டுச் சித்தனாகிறான். ஞானமரபுகளையெல்லாம் கற்றுத்தேர்ந்த வைதீகரான விஷ்ணுபுரத்தின் ஞான சபையின் முதல்வர் பவதத்தர் காற்றில் எறியப்பட்ட கொடிபோலத் துவண்டு தரையில் கிடந்து தன்னைத் தாத்தா என்றழைக்கும்படி தன் பேரன் சந்திரகீர்த்தியிடம் கண்ணீருடன் கேட்கிறார். தர்க்கத்தை நம்பாதே, அது சூனியத்தில் விட்டுவிடும் என்று சொல்கிறார்.
காமத்தை வெல்ல முடியாத குற்ற உணர்ச்சியில் அரண்டு பிதற்றி கணிகை சாருகேசியைச் சென்றடைந்து மீண்டு தெளிந்து காவியங்கள் புனைகிறான் பிங்கலன். புலனடக்கத்தைச் சற்றும் கைவிடாத அவன் குருவாகிய மகாப்பிரபு அவர் அனுபவித்தறியாத காமத்தையும் இன்பங்களையும் எண்ணி மனம் வெதும்பி கண்ணீர் சிந்துகிறார். மனைவி குழந்தைகளுடன் வாழும் குடும்பஸ்தனான சங்கர்ஷணன் கணிகையைச் சென்றடைகிறான். கணிகையான பத்மாட்சி ஞானசபையேறுகிறாள். குடும்பப் பெண்ணாகிய லட்சுமி மகன் இறந்த சோகத்தில் நாமதாரிப்பெண்ணாகிறாள். மறக்குலத்தில் பிறந்த சித்திரை தன் பிராமணத் தோழி வைஜயந்தியுடன் பல்லக்கில் செல்லும் காரணத்திற்காக நரசிங்கரால் மகளாக சுவீகாரம் செய்யப்பட்டுத் தீயில் இறந்து கொன்றை வனத்தம்மனாகிறாள். கிழவரின் கைதவறி விழுந்த நஸ்யத்தை முகர்ந்து பீதியடைந்து ஓடிய குதிரை பாண்டியனைக் கொல்லும் சதித்திட்டமாக சொல்லப்படுகிறது. விஷ்ணுபுரத்தை தன் ஞானத்தாலும் வாதத்தாலும் வென்ற அஜிதன் மீளமுடியாத வெறுமையின் இறுதியில் சுள்ளிபோன்ற கைகளுடன் தண்ணீர் தரக்கூட எவருமில்லாத மாளிகையின் தனிமையில் கிடந்து மரணமடைகிறான். ஞானமரபுகளைக் கற்றுத்தேர்ந்து வென்றபின் ஞானசபையின் தலைவருக்கு சூட்டப்படும் மோதிரம் ஏதோ ஒரு நூற்றாண்டில் ஆரியதத்தரின் மகன் சோலைப்பைத்தியத்துக்கு மாட்டுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது மாட்டப்படுகிறது. பாரதவர்ஷத்தின் கலைகளுக்கும் ஞானத்திற்கும் உறைவிடமான விஷ்ணுபுரம் புதர்மண்டிய குக்கிராமமாகிறது.
காசியபவனைத் தன் சீடனாக சுடுகாட்டுச் சித்தன் கண்டடைவது அறுத்துக்கொண்ட உறவுகளின் இழப்பை ஈடுகட்டவா? தன் மகன் சந்திரகீர்த்தி அருகில் இல்லாத ஏக்கத்தினாலா? தன் குரு சுடுகாட்டுச்சித்தனைக் கொன்ற விஷ்ணுபுரத்தை அழித்துப் பழிவாங்கத்தானே எல்லாவற்றையும் துறந்த நிர்வாணியாகிய காசியபவன் நூற்றாண்டுகளாக குகைகளில் வாழ்ந்து திரிகிறான்? நிர்வாணியாகிய பிறகும் கூட அறுத்துக்கொள்ள முடியாதவையா உறவும் குரோதமும்? மகாயந்திரத்தை அவிழ்க்கும் தீர்மானத்துடன் ராஜகோபுரமேறும் சிற்பி அதைச்செய்யாமல் ஏன் மேலிருந்து விழுகிறான், அனிருத்தன் எப்படி இறக்கிறான், அனிருத்தனின் சடலத்தைக் கண்டு சங்கர்ஷணன் ஏன் வெறுப்படைகிறான், பிங்கலன் ஒரு நாமதாரிப்பெண்ணை ஏன் கூடுகிறான், லட்சுமி பிங்கலனைக் கூடும்போது ஏன் அனிருத்தன் பெயரைச் சொல்கிறாள். அஜிதன், வைஜயந்தி, சித்திரை ஆகிய பாத்திரங்கள் அவை எழுதப்பட்ட சமகாலத்தின் தமிழக வரலாற்றுக்குமான உறவு, புராணப் பிண்ணனியுடன் எப்போதுமே அழகிய வருணணைகளோடு பிரம்மாண்டமாகப் பாய்ந்தோடும் சோனா, எந்த வருணனையுமின்றி எளிமையாக ஓடும் ஹரிததுங்கா, -என ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தெளிவு பெறவேண்டிய இடங்கள் ஏராளம்.
விஷ்ணுபுரத்து மகாஸ்தபதி பிரசேனன் சொல்வது போல ஒரு தற்செயலில் இருந்து இன்னொன்று என தற்செயல்களின் பிரவாகம்தானா பிரபஞ்சம்? காமம், குரோதம், பகை, வன்முறை இவற்றால் வடிவமைக்கப்படுவதுதனா மானுட சரித்திரம்? சோனாவின் நீர் சிவப்பாக இருக்கக் காரணம் அவள் வானம் நிறைக்கும் நெருப்பாக எழுந்து நின்றதா? அல்லது இரும்புத்தாது கொண்ட சிவந்த பாறைகள் வழி வழிந்து வருவதா? நடந்த சம்பவங்களை காவியக் கற்பனை ஒளிபெறச் செய்கிறதா? இல்லை மூதாதையர் மனங்கள் காவியக்கற்பனையை ஒட்டி இயங்கினவா? ஆற்றாமை வரும்போது மனம் ஆறுவதற்கான பொய்க்கதைகள்தானா நமது காவியங்கள்?
ஹேமந்தனும் வசந்தனும் கிரீஷ்மனும் தொடர்ந்து காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் கதைகளில் வரும் வெறும் பெயர்கள் தாமா நாம்? நாம் வெறும் சொற்கள்தானா? காலமே ஒரு வட்ட வடிவான கோடுதான் என்றால், நம் மானுடம் என்பது இவ்வட்டத்தில் ஒடிக்கொண்டிருக்கும் நண்டு போலத்தானா? மானுட மனத்தின் நியதிகளையெல்லாம் சிதறவைக்கும் காலதரிசன சூத்திரத்தின் கவிதை ஒரு பூனைக்குட்டியைப் பற்றிய பாட்டுதானா?
தன்னை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்தானா மனிதன்? ஏன் தனிமையே மனிதனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது? அதுவும் மாற்று இல்லாத, சமரசம் இல்லாத, இம்மிகூட மறைக்கவோ, மறுக்கவோ முடியாத தனிமை! இதிலிருந்து தப்பத்தானா கவிதை, காமம், உறவுகள், சமூகம், தத்துவங்கள் எல்லாம்? மனிதனுக்கு என்ன வேண்டும்? தனது நல்லியல்பு மீது நம்பிக்கை இழக்காமலேயே சகல போகங்களையும் அனுபவிக்க வேண்டும். பூமி மீது அத்தனை தத்துவங்களும் தர்மவிசாரங்களும் குவிந்து கிடப்பது இதற்காகத்தானா?
சாமானியர்களாகிய நம்மைப்பற்றி நாமே மிகையான கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள உதவும் வெறும் மனமயக்கங்கள்தானா கவிதையும் கலைகளும்? இங்குள்ள நூல்கள், தத்துவங்கள் எல்லாமே நாம் எதையுமே அறிய முடியாது என்பதற்கான சாட்சியங்கள்தானா? இளவயதில் ஒரு தேடல், பிறகு ஒரு சமாதானம், முதிய வயதில் வெறுமையை மறக்க அந்த சமாதானத்தையே ஒரு தரிசனமாக மாற்றிக்கொள்கிறோமா? உலகில் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான ஞானம் மட்டுமே உண்மையா?
காலங்களைத் தாண்டிய ஒரு நிரந்தரமான எண்ணம் போல இக்கேள்விகள் என்றென்றும் மானுட வாழ்வைக்கடந்து சென்றபடியே இருக்கும்.
லெளகீகம் அலெளகீகம் இரண்டில் ஒன்றைச் சேர்பவன் அதில் அதிருப்தியுற்று மற்றதை ஏங்குகிறான், மனிதன் பிறந்து வளர்ந்து லெளகீகம் அலெளகீகம் இரண்டுக்குமிடையேயான தவிப்புகளில் சிக்கிச் சுழன்று மாய்கிறான். தோற்றமும் வளர்ச்சியும் அதைத்தொடர்ந்து வரும் அழிவும் பெரும் சூனியமும். சூனியத்தைத் தொடர்ந்து வரும் தோற்றம். மனிதர்களும் நகரங்களும் நட்சத்திரங்களும், கோள்களும். ஏன் இப்பிரபஞ்சமுமே கூட இந்தச்சுழற்சிக்கு அப்பாற்பட்டதாக இருந்துவிட முடியுமா என்ன?
ஞானமோ முடிவற்ற பேரிருப்பு. அதற்கு முடிவு என்பது இல்லை. ஞானத்தைக் கடக்க ஞானம் தேவையில்லை. படிகளில் ஏறுவது படிகளை தாண்டத்தான். படிகளின் இருப்பே படிகளை தாண்டிச்செல்ல உதவுவதற்காகத்தான். தர்க்கவடிவான ஞானம் ஒருபோதும் பூரணமல்ல. ஞானமென்பதே முடிவற்ற பாட பேதங்களின் வரிசைதான். ஒவ்வொரு ஞானமார்க்கமும் அதை உள்ளூர அறிந்துமிருக்கிறது. ஆகவேதான் மேலும் மேலும் திருத்தமாகக் கூறவும் அழுத்திக்காட்டவும் தொடர்ந்து முயல்கிறார்கள். இதற்கு முடிவு என்பது இருக்க வாய்ப்பு இல்லை. ஞானத்தின் மையமான மகாஞானம் நம்மை அறிவதே.
விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவின் இருபுறமும் நிஜம் உள்ளது. எந்தப்பக்கம் வேண்டுமானாலும் ஒருவர் புரண்டு துயிலெழலக் கூடும். விஷ்ணுபுரத்தை முழுமையாக உள்வாங்கியபின் நாம் செல்ல செல்லமுடிவதும் செல்ல வேண்டியதும் அந்தப்பக்கம் தான்.
ஓம், அவ்வாறே ஆகுக!