கடல் சங்கு – கடலூர் சீனு

இனிய ஜெ.எம்,

இந்தப் பதிவினை ஓர் அறிமுக வாசகனின் எளிய பதிலாகவே முன்வைக்கிறேன். கடலின் ஆழமோ, விரிவோ, ஓய்வற்ற அலைநாவுகளின் தழலாட்டமோ, உள்ளடக்கிய உயிர்ச் சுழலோ இருக்காது, இது கரைமணலில் கிடக்கும் சங்கினில் அலை நிரப்பிய கடல் மட்டுமே.


உதிரத்தால் எரியும் சுடர்

தந்தை தனயன் உறவினை உள்ளார்ந்து இணைக்கும் உணர்வு எது? பிரியமா? துவேஷமா? தன் ஆளுமையைக் கடக்கும் மகன் மீது தந்தை கொள்ளும் பிரியம் அதன் ஆழத்தில் தன் தோல்வியின் வெறுப்பாகக் கனன்று கொண்டிருக்கிறதா? பவதத்தரின் விருப்பக் கனவு தானே விஷ்ணுதத்தன். ஞானத் தேட்டத்தில் பவதத்தரால் ஒருபோதும் தொடமுடியாத சிகரமல்லவா விஷ்ணுதத்தன் தொட்டது. பவதத்தர் அனுபவிக்கும் புத்திர சோகம் வரமாகி வந்த ஒன்றே சாபமாக மாறிப் போன துயரம் தானே? வேத ஞான வேள்வியில் அவிசாகிப் போனவன் விஷ்ணுதத்தனுக்காக வாழ்நாளின் இறுதிவரை வேத ஞானத்தை சிதையாக்கி எரிந்து கொண்டிருக்கிறார்

பவதத்தர். மகன் என்ற உறவு நிலை மனித உடலுக்கும் உதிர வழிக்கும் மட்டுமே சொந்தமான ஒன்றல்ல. “விட்டுவிடுங்கள் தம்புரானே, அவன் என் மகன்” என காலில் விழுந்து கதறுகிறான் வீரன் எனும் யானையின் பாகன் வாமனன். உதிரத்தில் குளித்த வீரபைரவனை உதிரம் காயாமல் ரசிக்க விரும்புகிறார் நரசிங்கர். அவரது கையால் அவனுக்கு மகரச் சுழி அணிவிக்க ஆசை கொள்கிறார். இந்த யானை நரசின்கரின் மகன். பைத்தியமாகித் திரிகின்றான் வாமனன். புத்திர சோகம் மகாவைதிகனுக்கு மட்டும் விதிக்கப்பட்ட ஒன்றல்ல. மலைமலையாக அக்கார அப்பங்களை சுட்டுக் குவிக்கிறான் வீமன். அவனால் ஒரு போதும் தான் மகன் வயிறார ருசித்து உண்பதைக் காண முடியாது.

சங்கர்ஷணன் அநிருத்தன் உறவில் முதல் அங்கம் வகிப்பது அநிருத்தன் மீதான வெறுப்பே என்பது அவனது தர்க்கமனம் கொண்டு சேர்க்கும் முதல் தளம். லட்சுமியுடனான தான் இயலாமை, லட்சுமியுடனான அனிருத்தனின் உறவு, அவனது சிதைவே அனிருத்தனின் வளர்ச்சி என தந்தைமை என்பதின் நுட்பமான பேதங்கள் அனைத்தும் விரிகின்றன. மகனின் இழப்பு என்று பெரிய துக்கத்தைக் கூட அவனால் கணிகையின் மார்பில் சாய்ந்தே கதறித் தீர்க்க முடிகிறது. திருவடி இசையில் சங்கமித்து நாதப்பெருவெளியில் உழன்று கொண்டிருக்க, இருட்டறைக்குள் மட்கி உலரும் அவன் தந்தையின் ஆன்மா. அவரது மௌன ஓலம் பவதத்தரின் தவிப்பை விட உக்கிரமான ஒன்று. சூரியதத்தரின் தர்க்கச சட்டகத்தில் ஒருபோதும் சிக்குவதில்லை ஸ்வேததத்தனுடனான உறவு. சூரியதத்தருக்கு அவரது மகன் விஷ்ணுபுரத்தின் தர்க்கப் பிழைகளில் ஒன்று மட்டுமே. மரணத் தருவாயில் தான் பவதத்தர் விஷ்ணுதத்தனை எண்ணிக் கதறுகிறார். புத்திரசோகத்தை புதைத்து வைக்க இறுதிவரை உதவிய தர்க்கம் உதறிச் செல்கிறது. ஆரியதத்தரோ மரணத்தருவாயில் மனதில் ஒலியின்றி கூவுகிறார். ” என் மகன், என் மகன், மகனே வேததத்தா”. அதுவரை அவருக்கும் வேததத்தன் ’ அது ’ மட்டுமே. சங்கர்ஷணன் தான் மகள் சுதாவை என்னவாகப் பார்க்கிறான் , “குட்டிப் பண்டாரம்” என்பதைத் தாண்டி? அனைத்து ரத்த உறவுகளையும் மறுத்து முன்செல்கிறான் நாகப்பன். அவனது வணிகத்தில் அம்மா செல்லாத சரக்கு. விஷ்ணுபுரத்திலேயே போட்டு விடுகிறான். பிரியை மதிப்புமிக்க சரக்கு , நல்ல லாபத்திற்கு விற்றுவிடுகிறான்.

தந்தைமை என்பது மகன் உறவால் மட்டுமே தீர்மானிக்கப் படும் ஒன்றா? கொன்றைவனத்து அம்மனாக ஆசியளிப்பது வீரநாராயணர் தான் பேத்தி சித்திரையின் மீது வைத்த கனன்றெரியும் பிரியம் தானோ? இத்தனையும் ஆன்மா தான் கொண்ட ஏழு விதமான மாயைகளில் ஒன்றுதானா?


வந்தமர்ந்த பறவையால் அசையும் கிளை

இது என்ன? இது என்பது ஞானத்தின் தொடக்கப் புள்ளி. விஷ்ணுபுரம் எனும் நிலவெளியில் ஞானத் தேட்டத்தின் அனைத்துப் பாதைகளும் திறக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று இடைவெட்டுகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக் கொள்கின்றன. ஒன்று பிறிதை மறுக்கவும் செய்கின்றன. ஞான சபையின் நிபந்தனையில் இருந்தே சுவாரசியம் துவங்கிவிடுகிறது. ஞானசபையில் ஞானம் தர்க்கப் பூர்வமாக முன்வைக்கப்படுகிறது. தீபஸ்தம்பத்தில் சுடராக ரிஷிகள் வருவது, இறுதியாகவந்திறங்கும் கிருஷ்ண பட்சி, என தர்க்க வெற்றியை அறிவிக்கும் மையமோ முற்றிலும் அதர்க்கப்பூர்வமான ஒன்று. கிட்டத்தட்ட அனல்வாதம் புனல் வாதம் போல. இது சங்கர்ஷணன் எழுதிய பிரதி என்ற எண்ணம் இடைவெட்டும்போது இன்னமும் சுவாரசியம் கூடுகிறது. ஞானசபை விவாதங்கள் முதல் பகுதியிலேயே பிங்கலனால் மறுக்கப்படுகிறது. தர்க்கத்தில் ஞானம் சிக்கும் எனில், சதுரங்க விளையாட்டு வழியாகவே ஒருவன் பரமபதம் எய்திட முடியும் என்கிறான் பிங்கலன். மூன்றாம் பகுதியில் அனுமானத்தை, அறிந்தவற்றை, தொகுத்துக் கொள்வதே தர்க்கம். தர்க்கத்தின் வழியாக “அறிதல்” சாத்தியமில்லை என்கிறார் சுதபாஸ். பவதத்தர் அச்சத்தை ஏழு படிநிலைகளாக முன்வைக்கிறார். இந்த நேர்கோட்டின் ஏதோ ஒரு படிநிலையிலோ அல்லது பிரபஞ்ச காரணம் எனும் ஊகத்தை முன்வைக்கும் ஏதோ ஓர் நிலையின் பிழையிலோ எதிராளியை மடக்கி விடுகிறார். சாங்கியமும் வைசேஷிகமும் படிநிலைகளை முன்வைப்பதில் பிழைசெய்ய, சமணம் பிரபஞ்ச இயக்கத்தின் சாரமான காரணத்தை முன்வைக்க இயலாமல் மௌனமாகிறது. சைவம் முன்வைக்கும் அத்தனையும் வைணவ வேதாந்தம் முன்வைத்த அதே தரிசனம் என்ற வாதத்தால் பின்தங்கி விடுகிறது. அஜிதன் சைவ ஞானியைக் கேட்கிறான் “பிரபஞ்ச காரணமாக மாறிய பின் பத்தி என்னவானது?” “பூரணமாகவே உள்ளது” என்கிறான் சைவ ஞானி. “இது தர்க்கப் பிழை” என முடிக்கிறார் பவதத்தர். ஆனால் சத் பற்றிய கேள்வியில் எது தர்க்கப் பிழை என பவதத்தர் சொன்னாரோ அதே பிழையை செய்கிறார். அஜிதன் இந்தத் தர்க்கமுறையை முன்பே கணித்து விடுகிறான். பவதத்தர் தேவதத்தனிடம் சொல்கிறார் “ குழந்தை, தர்க்கம் நம் ஆயுதம்.அது வெறும் விளையாட்டு அதை ஞானமென்று நம்பிவிடாதே”.

அஜிதன் வெல்ல சபைகள் இன்றி சிக்கிக்கொள்கிறான். சந்திரகீர்த்தி விஷ்ணுபுர அதிபனாகிறான். இங்கே ஏனோ லெனின் ஸ்டாலின் நினைவு குறுக்கே வருகிறது. ஞானசபைக்கு வெளியே லாமா திரோபா முன்வைக்கும் ஞானத்தை ஒரு தேங்காய் முடித்து வைக்கிறது. அஜீத மகாபாதரின் வெற்றி தூபியை காண ஆயுளையே கரைத்த முதியபிட்சுவுக்கு மரணத்தின் மூச்சுக்காற்று புறங்கழுத்தில் பட்டவுடன் அஜிதன் முன்வைத்த காலதரிசனம் எனும் மயக்கத்திலிருந்து விடுபட்டு கிருஷ்ண பைரவன் காலதடங்களைப் பின்தொடர்கிறார். பிரசெனர் பிரபஞ்ச நிகழ்வுகளை அதிர்வுகளாகவும், துளி நூறாக, நூறு பத்தாயிரமாகும் அர்த்தமற்ற சலனமாகவே பார்க்கிறார். ஞானத்தின் விளைவாகப் பைத்திய நிலைக்கே செல்கிறார். அவரது முன்னோர் அஸ்வசேனரும் பைத்தியமாகவே முடிகிறார். பிங்கலன் குருவை நிராகரித்து வெளியேறுகிறான், தவித்தலைந்து குருபாதம் சரணடைகிறான். இப்போது குரு தன்னிடத்திலிருந்து நீங்குகிறார். திருவடியின் சீடர்கள் பேச்சுகளைக் கேட்கும் போது ஏனோ மனதிற்குள் இயேசு இடைவெட்டுகிறார். கருவறையில் விஷ்ணுசிலை வெவ்வேறு கதைகளாக முன்வைக்கப்பட்டு வெவ்வேறு கதைகளால் மறுக்கவும் படுகிறது. சித்தன் சீடனுக்கு விஷ்ணு சிலை பற்றிய புராணக்கதை ஒன்றை சொல்கிறான், முடிவில் குலத்து நீரின் பிரதிபலிப்பில் கருவில் உள்ள சிசுவாக புரள்கிறார் விஷ்ணு. பெண்களின் ஞானத் தேட்டம் என்னவாக இருக்கிறது? அஜிதனின் கண்கள், பிங்கலன், பிரசெனரின் முகம் இதெல்லாம் சாருகேசிக்கு வியப்பையே அளிக்கிறது , ஆம் இவர்களுக்கு என்னதான் வேண்டும்.” பிழையான வாசிப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும். மிருகநயனியின் அருகே நிற்கும் அங்காரகன் எனக்கு ஞானமடைந்த பேருயிராகவே படுகிறது. விஷ்ணுபுரம் ஞானத்தை, ஞான மரபுகளைத் தூக்கிப் பிடிக்கிறதா? அல்லது தூக்கி வைத்த உயரத்தில் இருந்து தள்ளி உடைக்கிறதா? எல்லா ஞானத்தையும் கரைத்தழிக்கும் சோனாவை மலையுச்சியில் நின்று மௌனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறது பெண்மை எனும் பேராற்றல். இது எல்லாம் என்ன? இது என்பது ஞானத்தின் தொடக்கப்புள்ளி.


கிருஷ்ணபைரவனின் காலடிச்சுவடுகள்

விஷ்ணுபுரத்தின் பிரளயக் காட்சிகளில் ஒன்று ஒரு கொடுங்கனவு போல என்னுள்ளேயே தங்கிவிட்டது. கோட்டைச்சுவரில் மோதி மரிக்கும் பறவைகளை ஆர்ப்பரித்து உண்ணும மீன்களின் சித்திரம் அது. வானத்தின் பிரதிநிதிகளை நீரின் பிரதிநிதிகள் துவம்சம் செய்யும் அக்காட்சி விஷ்ணுபுரத்தின் உச்சகாட்சி சித்தரிப்புகளில் முதன்மையான ஒன்று. (இரண்டாம் காட்சி சித்திரையும் வைஜெயந்தியும் பங்கு பெரும் நிஷாதர் பண்டிகைக் காட்சி), தன்னையே தான் உண்ணும் பாம்பு, சிகப்பி ஈனும் இருதச்ளை எழுகால் கன்று என ஜெயமோகன் எழுத்துக்களில் பிரளயதேவியே குடியேறுகிறாள். நீலரேகா, மிருகநயனியின் பச்சை, சிகப்பு சோனா என அத்தனை அலைக்கழிக்கும் வண்ண பேதங்களையும் விஞ்சி நிற்பது கருப்பு கிருஷ்ண பைரவனே. கிருஷ்ண என்றாலும் மரணம் என்றாலும் கருப்பு என்று தானே பொருள்? தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால் இந்த பிட்சுவின் ஆசை நிறைவேறும். அஜிதனை வரவேற்க வருகிறான் கிருஷ்ண பைரவன். அநிருத்தன் மரணம் , பிள்ளை விளையாட்டின் ஒரு பகுதியாகவே முன்வைக்கப்படும் அதே தருணம் ஆரியதத்தரின் மரண அவஸ்தை சிதைந்த சோனாவுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஒன்றாகவே முன்வைக்கப் படுகிறது. குருவும் கைவிடப் பச்சை ஒளியில கரைந்து போகிறான் பிங்கலன். பிரசெனரின் மரண நொடியை அவரது கர்வத்தை அழிக்கும் புழுதியில் சக்கரம் வரையும் பூச்சி ஒன்று தீர்மானிக்கிறது. வீதியில் இறந்து கிடக்கும் மகாகாலனை கிழித்து உண்ணும் நாய் கிருஷ்ண பைரவனாகவும் இருக்கலாம். அனைத்து மரணங்களையும் தாண்டி வேததத்தனின் மரணம் மட்டுமே இயற்கை எய்துவதாக இருக்கிறது. மரணத்தை மறுத்தபடி உடல்களை மாற்றியபடி பிரளயத்துக்காகக் காத்திருக்கிறார் காசியபர். இறுதியில் குகைவாசலில் புறங்கழுத்தில் சோனாவாக மோதி காசியபரை கரையழித்தது கிருஷ்ண பைரவனின் மூச்சுக்காற்று என்றே எனக்கு படுகிறது.

மனிதனை ஆட்டி வைக்கும் இச்சைகள், ஆழமறியா அடிமனது சலனங்களின் அலைக்கழிப்புகள் , இருப்பும் ஞானமும் , ஞான மறுப்பும், இன்மையும் அதன் ஆற்றல்கள் முயங்கும் உந்திச் சுழி விஷ்ணுபுரம் எனும் சக்கரம். ஆம் மானுட துக்கம். விடுதலை தருவது எது?

ஒளி நோக்கிப் பறக்கும் ஞானமெனும் வெண்புள்ளா? அல்லது ரகசிய அழைப்பால் பின்தொடர்ந்து செல்லும் கிருஷ்ணபைரவனின் காலடிச் சுவடுகளா?


விஷ்ணுபுரம் இணையதளம்

முந்தைய கட்டுரைஃபோர்டு ஃபவுண்டேஷன், மியான்மார்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானத்தின் பேரிருப்பு – வேணு தயாநிதி