நடன மகளுக்கு
“ஓய்ந்த என் கால்கள் ஆடி முடிக்காத
அந்த நடனத்தை நீ ஆடத் தொடங்கு”
– சூத்ரதாரி
விஷ்ணுபுரம் நாவலில் பாவகன் ஒரு இடத்தில் சொல்வான். “மகாகாவியங்கள் தொலைதூரத்து மலைகளைப் போல. நம் மனதின் வடிவ கற்பனைகளுக்குள் அவற்றின் வடிவம் அடங்காது. ஒரு பகுதியைப் பார்க்கும்போது அதன் மறுபகுதி மறைந்திருக்கும். நாம் நிற்கும் இடத்திற்கு ஏற்பவும், நம் மனதின் கற்பனைக்கு ஏற்பவும் அது மாறிமாறித் தோற்றம் தரும். எப்போது நமது மனஉருவகங்களை அவற்றின் மீது போட ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் காவிய தரிசனம் முடிவடைகிறது. பிறகு நாம் பெறுவது வெறும் அகங்கார தரிசனம்தான்” என்று.
உண்மையில் விஷ்ணுபுரம் போன்ற படைப்பைப் பற்றி பேச முனையும் போது வரும் சிக்கலும் இதுதான் என்று தோன்றுகிறது. தருக்கத்தின் எல்லையை, அறிவைப் பின்தொடரும் அகங்காரத்தை அடிக்கோடிட்டு காட்ட முயலும் நாவலைப் பற்றிய திறனாய்வு என்பது பல சமயங்களில் ஒரு வகை முரண்நகையாகவே முடியும். அவரவருக்கு இருக்கும் ஆழ்மன ஆசைகள் மற்றும் பயங்களுக்கு ஏற்ப, உருவாக்க நினைக்கும் சுய அடையாளத்திற்கு ஏற்ப நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பிபோம். அப்படிப் பேச ஆரம்பித்துப் பின்னர் ஒரு முட்டுச் சந்தின் சுவற்றில் மோதி நிறுத்திக் கொள்வோம். ஒருவகையில் இது இயல்பானதும் கூட.
உதாரணமாக விஷ்ணுபுரம் குறித்த பல விமர்சனங்களில் சிற்பி பிரசேனனின் “எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி” என்ற வரி அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். அதிலிருந்து அனுபவமே முதன்மையானது, தருக்கத்தை விட மேலானது என்ற ஒரு “தர்க்க எதிர்ப்பு” நிலைப்பாட்டிற்கு விமர்சகர்கள் எளிதாக சென்று சேர்ந்திருப்பார்கள். ஆனால் அனுபவத்தின் நிலையின்மையை, அனுபவத்தை அறிவதில் உள்ள எல்லைகளைப் பற்றி விஷ்ணுபுரத்தில் பல பக்கங்களுக்கு பேசப்பட்டிருக்கும். அவற்றை பற்றி எதுவுமே கூறாமல் தாண்டிச் சென்றிருப்பார்கள். இதே போல் “மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்” என்ற பீதாம்பர மாமாவின் வரியும் விமர்சகர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். அங்கிருந்து ஞானத்தை உதறினால்தான் மனித விடுதலையும், வீடுபேறும் சாத்தியம் என்ற ஒரு “ஞான எதிர்ப்பு” நிலைப்பாட்டிற்கு சென்று சேர்ந்திருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை நாவலினுள் முன்வைக்கும் பீதாம்பர மாமாவுக்கும் சரி, சிற்பி பிரசேனருக்கும் சரி தினசரி வாழ்க்கை ஏன் ஒரு பெரும் இம்சையாக இருந்தது, காலம் அவர்களுக்கு ஏன் ஒவ்வொரு கணமும் சித்திரவதையாகத் தோன்றியது போன்ற கேள்விகளைக் கண்டும் காணாமல் போயிருப்பார்கள்.
ஒரு இலக்கியப் படைப்பைப் பற்றிப் பேசும் போது இவ்வகை விடுபடல்கள் தவிர்க்க முடியாத விஷயம் தான். மேலும் படைப்பை அது வாசகனில் உருவாக்கும் எதிர்வினை மூலம் மதிப்பிட முயலும் திறனாய்வு முறையில் [reader-response criticism] இத்தகு விடுபடல்களும், முன்னிலைப்படுத்தல்களும் முக்கியமான விஷயமும் கூட. இலக்கியப் படைப்பைப் புரிந்து கொள்ள எல்லா வகையான வாசிப்புகளும், விமர்சனங்களும் உதவியானவையே.
ஆனால் விஷ்ணுபுரத்தை அப்படி ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமே பார்த்து விமர்சிப்பது என்பது ஒரு என்னளவில் ஒரு கடினமான விஷயமாகவே இன்றும் இருந்து வருகிறது. அபிப்பிராயங்கள் உருவாக ஆரம்பிக்கும் வயதில் படிக்கும் சில புத்தகங்களைப் பற்றி நாம் நிறைய பேச ஆசைப்படுகிறோம். அப்படி பேசிப் பேசி நம் அபிப்பிராயங்களை எண்ணங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறோம். ஒரு கட்டத்தில் அபிப்பிராயங்களின் கூர்மை குறைந்து, அவை கேள்விகளாக நம் மனதில் கிளைவிட்டுப் பரவ ஆரம்பிக்கின்றன. அதிலிருந்து நமக்கென்ற தேடல் ஒன்று உருவாகிறது. அதன் பிறகு படிக்கும் புத்தகங்களின் தாக்கம் என்பது இன்னும் ஆழமானது. அந்தரங்கமானது. அவை நம் ஆளுமையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது. அத்தகைய ஆக்கங்களைப் பிரித்து வகுத்துத் திறனாய்வது என்பதில் ஒருவித உள்ளார்ந்த சங்கடம் உள்ளது. அதிலும் விஷ்ணுபுரம் போன்ற மிக அகவயமான பேசுபொருளைக் கொண்ட ஒரு படைப்பிற்கு இது மேலும் சிரமம். ஆகவே என்னால் விஷ்ணுபுரத்தை ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமே முன்வைத்தோ, அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையப்படுத்தியோ பேச இயலாது. பொதுவாக சில எண்ணங்களை மட்டும் இங்கு பகிர விரும்புகிறேன்.
***
நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம் என்று சொல்லப்படுவதுண்டு. அது வாழ்வின் முழுமையை, பன்முகத்தன்மையை, உட்சிக்கல்களை, முடிவில்லா விரிவை நோக்கிச் செல்ல வேண்டும். கல்லை ஒரு உளி கொண்டு கச்சிதமான உயிர்ச் சிற்பமாக வெளிக் கொண்டு வருவது போல ஒரு நாவலை உருவாக்கி விட முடியாது. ஒரு நிலப்பரப்பு காலவெளியில் செதுக்கப்படுவது போல், நூற்றாண்டுகளாக அடிக்கும் காற்று மழை புயலில் இருந்து மலை ஒன்று வடிவமற்ற வடிவமாக உருவாகி வருவது போல்தான் நாவலின் உருவாக்கமும்.
அவ்வகையில் நாவல் என்ற கலைவடிவின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விஷ்ணுபுரத்தைத் தயங்காமல் சொல்லலாம். எண்ணற்ற தகவல்கள், சம்பவங்கள், கதாபாத்திரங்கள் என நாவல் நாலா பக்கமும் பாய்ந்து விரைந்து செல்கிறது. அதில் எந்த ஒரு குவிமையத்தையும் நம்மால் எளிதாக அடையாளப் படுத்திக் காட்டிவிட முடியாது. விஷ்ணுபுரம் காவியமாக தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்வதால் வாழ்வின் முடிவில்லா உட்சிக்கல்களும், தரிசன உள் முரண்களும் வந்த படியே இருக்கின்றன. காலம் அகண்டகாலமாக விரிந்து பிரம்மாண்டமாக நம் முன் நிற்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் நம் கண்களுக்கு விஷ்ணுபுரம் வடிவமற்ற ஒரு பெரும் மலையாகவே காட்சியளிக்கும்.
இருந்தும் பக்கத்தில் செல்லச் செல்ல மலையின் காட்சியமைப்பு மாறுகிறது. எண்ணற்ற பாறைகள் தளிர்கள் செடிகள் மரங்கள் இழையமைப்புகள் முடிவில்லா வண்ணச்சாயல்கள் என. இன்னும் அருகில் செல்லும் போது உள்ளே ஒரு குடைவரைக் கோயில். அதில் எத்தனையோ சிற்பங்கள். வளைவுகள். நுணுக்கங்கள். ஒவ்வொன்றின் முன்னும் நாம் மணிக்கணக்கில் பிரமித்து நிற்கிறோம்.. அத்தனையையும் உள்வாங்கத் துடிக்கிறது நமது மனம். அப்படி ஒரு வெறி! ஆனால் அது முடியாமல் போவதால் ஏற்படும் தத்தளிப்பு! விஷ்ணுபுர வாசிப்பனுபவம் என்பதே இவ்வகை தத்தளிப்புகளால் அடித்துச் செல்லப்படுவது தான் என்று தோன்றுகிறது. ”குருத்துவாழைப்பூமடல் போல விரல்கள் ஒன்றையொன்று ஒட்டியிருந்தன. கனவு கண்ட குழந்தை போல கட்டைவிரல் சற்று விலகி நெளிந்திருந்தது” போன்ற வர்ணனை அழகுகளைத் தாண்ட முடியாமல், தாமரை இதழை சுற்றிச் சுற்றி வந்து, அதன் தேனைப் பருகி இதழினுள்ளேயே மாட்டிக்கொண்டு துயிலுறும் வண்டைப் போல் நாமும் அகப்பட்டு தவிக்கிறோம்.
அப்படி ஒரு மலையின் வடிவமற்ற பிரம்மாண்டத்தையும் ஒரு குடைவரைக் கோவிலின் நுண்மையையும் விஷ்ணுபுரம் நமக்கு ஒரு சேர அளிக்கிறது. நாவலின் முதற் சில பக்கங்களிலேயே கதைப்போக்கும், கதாபாத்திரங்களின் வருங்காலமும் சுட்டிக் காட்டப்படுகிறது. “பார்த்துக் கொண்டே இருங்கள் தாத்தா, ஒருநாள் நானும் இதேபோல விடிகாலையில் நின்று ஜொலிக்கப் போகிறேன்” என்று சித்திரை ஒரு இடத்தில் வீரநாராயணரிடம் சொல்கிறாள். இப்படி அனிருத்தனின், சங்கர்ஷணனின், திருவடியின், பிங்கலனின் வருங்காலமும் வாசகர்களுக்கு குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சொல்லப் போனால் நாவலின் ஆரம்பப் பக்கங்களில் வரையப்படும் அந்த ஸ்ரீசக்ரமே கூட நாவலின் பேசுபொருள் மற்றும் கதையமைப்பின் குறியீட்டு வடிவமாக நிற்கிறது. யோனியை மையமாகக் கொண்டு சுழலும் ஸ்ரீசக்ரம். அந்த மூலதார வடிவத்திற்கு, சக்தி மையத்திற்குப் பச்சை வண்ணம்! ஆம், ஞானத்தேடலின் தேவதையான மிருகநயனியின் பச்சை வண்ணம். பிங்கலனின் பச்சை நிறக் கல்!
இப்படி நாவலின் எல்லா முக்கிய விஷயங்களும் ஸ்ரீபாத பகுதியின் முதல் இருநூறு பக்கங்களுக்குள்ளேயே பேசப்பட்டிருக்கும். மீதி நாவலில் எல்லா தர்க்கங்களும் தத்துவங்களும் விரிவாக முன்வைக்கப்படுகின்றன. பேசிப் பேசியே எல்லா விஷயங்களும் மறுக்கப்படுகின்றன. தலைகீழ் ஆக்கப்படுகின்றன. பகடி செய்யப்படுகின்றன. ’உடல்கள் உடல்களில் தேடுவது எது? எத்தனை கல்வி கற்றாலும், எத்தனை உடல்களைப் போட்டாலும் நிரம்பாத பள்ளம் ஒன்று நம் மனதில் உள்ளதா?’ என்ற வினாவை ஒர் இடத்தில் எழுப்பும் பிங்கலன் பின்னர் அத்தகைய கேள்வியையே அபத்தமான ஒன்றாகப் பார்க்கிறான். அதில் இருந்தெல்லாம் வெளியேறி தப்பி ஓடிவிட நினைக்கிறான்.
’ஒரு யுகம்!. எத்தனை மனிதர்கள். எத்தனை கனவுகள்…” என்று வியந்து, அத்தனையையும் காவியத்தில் புனைய முற்படும் சங்கர்ஷணன் பின்னர் வெதும்பிப் புலம்புகிறான். எழுதும் கணங்களில் தன்னைத் தானே தூண்டி விட்டு அடைந்த போலியான மனஎழுச்சிகளின் மூலம் எழுதப்பட்ட வெற்றுக் கற்பனை என்று தனது காவியத்தைப் பழிக்கிறான். “…. எது மெய்மையோ அதுவல்ல இது. சொற்களின் ஆரவாரத்திற்குள் பதுங்கியிருக்கும் ஒரு விளையாட்டு தான்” என்கிறான். ஒரு நல்ல குடும்பஸ்தனாக இல்லாமல் போனதற்காக மனம் கரைந்து அழுகிறான்.
இதே போல் ”கீரைக் கூட்டு” கோபிலர் மகாகோபிலராகக் கல்வெட்டில் இடம் பிடிக்கிறார். பத்மபுராணவே அவர் எழுதியதாக கூறப்படுகிறது. அத்ரி ”ஒதுங்கு ஒதுங்கு” என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அத்ரிதேவர் ஆகிறார். காப்பிரிகைகள் கணிகையர் வீதிக்குப் போவது குறித்து நையாண்டி செய்யும் சுமந்திரன் [சுமத்திர்ர்!] எழுதிய காவியம் ஆகச்சிறந்ததாக – அங்கதம் கனிந்து உயர்கவித்துவம் வெளிப்படுவதாக – பாவகனால் முன்வைக்கப்படுகிறது. சங்கர்ஷணன் தர்க்கவாதி ஆகிறான்.
கவித்துவப் பேரழகு குறித்துப் பல பக்கங்களின் ஊடாக விரியும் வர்ணனைகள் ‘கவிதையென்பதே புண்பட்ட மிருகம் குகைக்குள் ஓடி ஒளிந்து தன் உதிரத்தை நக்குவது போலன்றி வேறல்ல” என்பதாக முடிகிறது. ஞானத் தேடலைப் பேசுபொருளாகக் கொண்ட ஆக்கத்தில் “ஞானமென்பதே முடிவற்ற பாடபேதங்களின் வரிசை தானே” என்பதாகக் கட்டிக் கவிழ்க்கப்படுகிறது. ”இளவயதில் தேடல். பிறகு ஒரு சமாதானம். முதியவயதில் வெறுமையை மறக்க அந்த சமாதானத்தையே ஒரு தரிசனமாக மாற்றிக் கொள்ளுதல். பிறகு நூல்கள், சீடர்கள், மடங்கள், குரு பரம்பரைகள்…” என்று எல்லாமே நாவலில் மறுக்கப் பட்டுத் தலைகீழாக்கப்படுகிறது.
இருந்தும் இதெல்லாம் ஒரு நாவலாசிரியன் எங்கோ உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜோடனை தான் என்பது படிக்கும் நமக்குப் பெரும்பாலான சமயங்களில் தெரியாமலேயே இருக்கிறது. நாவலின் முதல் வெற்றி இது. விஷ்ணுபுரம் போன்ற பேசுபொருள் உள்ள நாவல் வெகு எளிதாக ஒரு கருத்துப்படமாக, கதாபாத்திரங்கள் எல்லாம் கேலிச்சித்திரங்களாக மாறிவிடக்கூடிய அபாயம் எப்போதும் உண்டு. ஆனால் ஒருபோதும் அப்படி ஆகவில்லை என்பது நாவலின் அடுத்த வெற்றி. ஒரு தத்துவத்தை இன்னொரு தத்துவத்திற்கு எதிராக மோத விட்டு ஒன்றை இன்னொன்று ஜெயித்து உள்ளிழுத்தது என்ற ரீதியில் அல்லாமல் ஒட்டுமொத்த தத்துவப் பரப்பை, அது உருவாக்கும் அறிவை, முழுவதுமாக எடுத்துக் கொண்டு நாவல் நம்மிடம் பேச முற்படுகிறது. அத்தகு அறிவைப் பின்தொடரும் அகங்காரத்தை சுட்டிக் காட்டியபடி செல்கிறது. இது நாவலுக்கு ஒருவித அடர்த்தியை, தத்துவச் செறிவை அளிக்கிறது. மேலும் வரலாறு உருவாகும் விதமும், வரலாற்றுக்கும் தொன்மங்களுக்கும் இடையே இருக்கும் உறவும் நாவலுள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பெரும் வாசிப்பு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
பிரபஞ்ச இயக்கமே கதைசொல்லி ஒருவனின் மனோதர்மத்திற்கு ஏற்பப் புனையப்படுகிறது என்பதை நாவலாசிரியர் பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்திருப்பார். சொல்லப்போனால் கற்பனை என்பது நாவலினுள் ஆன்மீகத்திற்கு மிக அருகே, அதன் அடுத்த படியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுவதுண்டு. இதையே நாவலின் மிகப்பெரிய கலைசார் சாதனையாக நான் நினைக்கிறேன்.
ஆனால் இத்தகைய கலைசார்ந்த வெற்றிகளை மீறிய ஒரு தளம் விஷ்ணுபுரத்தில் உள்ளது. கநாசுவின் ”பொய்த்தேவில்” ஒலிக்கும் மணியோசை இங்கு மிருகநயனியாகக் காட்சியளிக்கிறது. சோமு முதலியை அலைக்கழித்த அதே மணியோசை இங்கு பச்சை வண்ணத்தில் உலா வருகிறது. ஏன் அந்த மணியோசை ஒலித்தது என்பது குறித்து பொய்த்தேவில் எதுவும் சொல்லப்படாதது போல், மிருகநயனி ஏன் விஷ்ணுபுரக் கதாபாத்திரங்களைச் சுற்றிப் படர்கிறாள் என்பது குறித்தும் நாவலில் பெரிதாக எதுவும் சொல்லப்படுவதில்லை. ஞானத் தேடலின் தேவதை அவள் என்ற ஒரு சிறு குறிப்பைத் தவிர. ஆனால் தொடர்ந்து மிருகநயனி நாவலில் வந்து கொண்டே இருக்கிறாள். ஏன்? அதற்கு எத்தனையோ பதில்கள் சொல்லப்படுகின்றன. ஏராளமான தருக்கங்கள், தத்துவங்கள் நாவலினுள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ஏன் ஏன் ஏன் என்ற அந்த கேள்வி மட்டும் பறவையின் சிறகடிப்பாக அத்தனை வேகத்துடன் அத்தனை படபடப்புடன் அடித்து கொண்டே இருக்கிறது.
முடிவில் வாசகனுக்கும் அந்தக் கேள்விக்கான விடை ஒன்று தேவையாகிறது. ஊகம் என்ற ஒரு வலையை வீசிக் கிடைக்கும் மீன்களை பதில்களை பெற்று ஒருவாறு அவன் சமாதானமடைகிறான். ஆனால் என் வலையோ சிறியது. நல்ல சுழிப்புள்ள மீன்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை. அதனால் தெளிவான பதில்கள் ஏதும் எனக்கு இல்லை. உண்மையில் விஷ்ணுபுரத்தை ”ஞானத்திற்கான தத்தளிப்புகள், தருக்கங்கள், தருக்கங்களால் விழுங்கப்படும் தருக்கங்கள். தருக்கங்களுக்கிடையே நசுங்கிப் போன தருக்கங்கள். பிறகு வெறுமை. பிறகு ஒரு கனவு.” என்று சங்கர்ஷணன் கூறுவது போலவே புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே இந்நாவல் முன்வைக்கும் கனவுகளிலேயே எனது ஆர்வம் முழுக்க இப்போது இருக்கிறது. விஷ்ணுபுரத்தைக் கனவுகளின் பெருவலையாகவே நான் பார்க்கிறேன். ”எங்கோ ஒருவனின் கனவுக்குள் புகுந்து, அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப்படுவதன்” விளைவே இந்த நாவல் என்று கூட சிலசமயம் தோன்றுவதுண்டு. ஆனால் தனிமனிதன் ஒருவனின் கனவல்ல இது. குறுக்கும்மறுக்குமாக முயங்கிப் பிணைந்து இணையும் பலரது கனவுகள். தெளிவான தோற்றமும் முடிவும் இல்லாத கனவுகள். யுகயுகமாக நீளும் கனவுகள்.
கனவுகள் இப்படிப் பிணைக்கப்பட்டுப் பெருவலையாக ஆக்கப்படுவதை நாவலாசிரியர் சில இடங்களில் மெல்லிதாக சுட்டிக் காட்டிருப்பார். திருவடி தொழுநோயாளியின் பாதத்தை மிதிக்க அங்கு வண்டிக்குள் சங்கர்ஷணன் அனிருத்தனின் காலை மிதித்து எழுந்து கொள்வான். சாருகேசியின் கனவில் வரும் அஜித பிக்குவின் துயரம் நிறைந்த கண்களை அவள் பிங்கலனின் கண்களோடு ஒப்பிட்டு ’அதே கண்கள், அதே துயரம். ஆனால் இது வேறு வகை’ என்று தனக்குள் சொல்லிச் செல்வாள். இப்படிக் கனவுகளில் உள்ள பிணைப்பே கதை மாந்தர்களை ஒருவரோடு ஒருவர் இணைவைக்கிறது. நாவலில் உள்ள மர்மமான தளமும் இதுதான் என்றும் தோன்றுகிறது.
குறிப்பாக மூன்று கனவுகள், அது உருவாக்கும் கவிதைகள் மற்றும் அருவமான சித்திரங்கள் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஒன்று, திருவடி பக்தி ஓங்கிய நிலையில் காணும் கனவு.
சதுப்பு வெளியின் உள்ளே
பாதிசெரித்த காடுகள் புரளும் நெளிவில்
உன்மீது படர்ந்த ஒளிநீர்த் திட்டுகள்
அலைபாயும் ஓராயிரம் சிமிட்டல்களில்
மந்திரித்தெழும் நாதம் நீண்டு
இவ்வெளியென மடிந்து வானாகி
வெளித்து நிறைத்த என் மனப் பிரவாகமெங்கும்
அலையும் மேகங்களில் சிறகசையப்
பறக்கும் மீன்களின் கனலின்
நிழல் படிந்த சேற்றுச் சதைப்பரப்பில்
சிலிர்த்த வரிகளில் உன் புரியாத காவியம்
இசைக்கும் வெளி உன் நடனம்
அடி என் சாகரத் திரைச்சீலை விலக்கிப்
புன்னகைக்கும் பெருமுகம்
….
என்று நீளும் இந்த கவிதை வரிகளின் மூலம் திருவடி உணரும் மகத்தான நெகிழ்வு நமக்கு உணர்த்தப்பட்டிருக்கும்.
இரண்டு, மனமுடைந்த அஜிதன் மௌனத்தை நோக்கி தியானிக்கும் வேலையில் வரும் கனவு.
ஆயிரம் காதத் திரையை
செவ்வலகால் கிழித்து வந்து
என் முன் அமர்ந்து நொடிக்கும்
இவ்வெண் பறவையின் முன்
செயலற்று அமர்ந்திருக்கிறேன்.
எண்ணங்கள் மீது
கவிகிறது வெண்மை.
சஞ்சலங்கள் மீது
கவிகிறது வெண்மை.
இருத்தல் மீது
கவிகிறது முடிவற்ற வெண்மை…
இன்மையின் நுரையெனக் காலம்.
அப்பாழ்க் குகை இருளில் சிறகசைய
படபடத்து அமிழும்
வினாவற்ற விடை.
காட்டு வெளியின் இலைகள்
நாநுனிகளெனத் துடிதுடித்து
காற்றை நிரப்பும்
ஓயாத பெயர்.
நின்று நின்று சிறு கீழ்வெளி
விளிம்பில் ததும்பிச் சிரித்திடும் எக்காளம்.
அந்திமங்கலில் கைதவறி
நழுவி நழுவிச் சரிந்து
விழுந்து
ஓசையின்றி உடைந்தழியும்
தனிமை.
இன்மையின் நுரையெனக் காலம்.
திரண்டு செழித்து வந்து என்
எல்லைகளை அழிக்கும் சலனம்.
ஒன்று உன் பீடம்
ஒன்று உன் பாதம்
ஒன்று உன்னில் சிதறியழியும் சிற்றலை
ஒன்று கடல்.
ஒளிவழியும் வெண்மையே
உன்னில் புதையும் எண்ணங்களில்
ஒரு திவலை
தயங்கித் தத்தளித்து
இப்புறம் சரிந்து சிதறும் பெருவெளியின்
பிறப்பிறப்பெனும் பெருநாடக முடிவில்
தாளமற்ற வெறுமையில்
இவ்வூழி நடனம்…
என்று போகும் இந்த வரிகளின் மூலம் அஜிதன் கண்ட அக்கனவின் உக்கிரமும், வெறுமையும், சூன்யநிலையும் நமக்கு உணர்த்தப்படும்.
மூன்று, பாவகன் மகத்தான தனிமையை நோக்கி ஏங்கி யத்தனிக்கும் போது வரும் கனவு..
உனது மகத்தான தனிமையின்
வெள்ளம் பெருகிவரும் நிலம்
நீர் அலையும் உன்னதங்களில்
உனது தனிமை ஒரு
மகாவிருட்சமென ஏந்திய வானை
நிரப்பும் மலர்ச்சரங்களின் கீழ்
வேர்கள் கவ்விய வான்மலர்கள்
என் சிரமெங்கும் கிளரும் விண்மீன்கள்
உனது சொற்களின் கார்வை மண்ணில்.
……..
இக்கணம் பூத்தெழும் முடிவின்மையில்
எது உன் பெயராகும்? எது
உன் அமர மந்திரம்? எது
நீ வெளித்த ரூபம்? எண்ணும் பொருள்களின்
வான் விளிம்பில் வடிவங்களெனப் பிறந்த
இவ்வனைத்திலும் திமிறும் பிழை நீ.
…
மலர்களின் யோனியில் முளைத்தெழுந்து
உனது மகத்தான தனிமையில்
கரிய பறவையெனப் பறந்து வரும்.
நீயெண்ணும் சொற்கடலின் அலைகள்
நக்கியுண்ணும் கரைமணலில் எஞ்சும்
நேற்றைய பாதங்களின் சாயலில் இன்று
எங்கு பதிகின்றன சுவடுகள்? உன்னுள்
வெளிக்கும் பாதச் சுவடுகளில் ஊறும்
உதிரும் ஒரு வெறும் ஞாபகம் என
எஞ்சும். பின் கண்ணீராகி உலரும்
உனது மகத்தான தனிமை ஒரு
பெரும் யோனியென நிலைதிறக்கும் அதன்
ஆழத்துள் தூங்கும் கருநாகச் சுருள்
விரிந்து கருக்கொண்டு மழைக்கும்…”
இந்தக் கவிதைகளை முதலில் படிக்கும் போது அதில் பெரும்பொருள் ஒன்று மறைஞான வடிவில் பொதிந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. பிறகு மறுபடி படிக்கும் போது பொருளற்ற சொற்குவியலாக, தருக்கங்களே இல்லாத தூய சித்திரங்களாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு முறையும் சித்திரப் பிரவாகமெனத் தூக்கி அடித்தது. அந்தி வேளையில் கால் போன போக்கில் அலைந்து கொண்டிருக்கும் போது திடீரென்று கேட்ட அந்த வீணை மீட்டலை, அது தந்த முதல் அதிர்வை, மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்த முயல்வது போன்ற ஒரு அனுபவத்திற்கு ஒப்பானது இக்கவிதைகளை வாசிப்பது. முதலில் ஏற்படும் பரவசம். பின்னர் கவிதையினூடே நுரைத்துப் பொங்கும் வார்த்தைகள். அவற்றை எவ்வளவு முயன்றும் காட்சிப்படுத்த இயலாது போவதில் ஏற்படும் துக்கம்.
கனவும், கற்பனையும், சொற்சித்திரங்களுமாக ஒரு புரிந்துகொள்ள முடியாத பெருவெளிக்கு நம்மை இக்கவிதைகள் இட்டுச் செல்கிறது. இப்பொழுதெல்லாம் விஷ்ணுபுரம் படிக்க வேண்டும் என்று தோன்றினால் இந்தக் கவிதைகள் ஒன்றின் முன்னால் உள்ள ஐம்பது பக்கங்களில் இருந்து படிக்க ஆரம்பிப்பேன். தருக்கங்கள், தருக்கங்களை விழுங்கும் தருக்கங்கள், தருக்கங்களால் உடையும் தருக்கங்கள் எனப் பக்கங்கள் மறையும். பின்னர் இக்கவிதைகள் ஒன்றின் மீது திடீரென முட்டி மோதி நிற்கும் போது ஒரு பெரும் மனஎழுச்சி ஏற்படுகிறது. அவை முன்வைக்கும் சித்திரங்களைக் காட்சிகளாக மனதில் நிறுத்துவது என்பதே விஷ்ணுபுர வாசிப்பின் உச்சகட்ட அனுபவமாகவும் சவாலாகவும் எனக்கு இருக்கிறது.
இந்தக் மூன்று கவிதைகளிலுமே நடன மகள் ஒருத்தி வருகிறாள் என்று தோன்றுவதுண்டு. இது எனது கற்பனையாகக் கூட இருக்கலாம்..
நடன மகள் இந்த நாவல் முழுதும் படைப்பாற்றலாக, இச்சா சக்தியாக பச்சை ஒளி பரப்பி வலம் வருகிறாள். சொல்லப் போனால் விஷ்ணுவோ, நாராயணனோ, மகாபாதரோ, பெருமூப்பனோ நாவலில் செயலற்ற சக்திகளாக இருக்கிறார்கள். அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. அவ்வப்போது புரண்டு படுக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் நடன மகளோ செயலென வீற்றிருக்கிறாள். விசைத் தூண்டலென அனைவரையும் கொந்தளிக்கச் செய்கிறாள். அவர்களை அவர்களுக்குத் திறந்து காட்டுகிறாள். சாத்தியமான ஒரு விளிம்பிற்கு இட்டுச் செல்கிறாள். நாவலே இந்த நடன மகளுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை, அவளை நோக்கிச் செய்யப்பட்ட தியானம்.
நடன மகள் அபிநயத்து ஆடிக் கொண்டிருக்கிறாள். அவளது கால் சதங்கை ஒலி உருவாக்குகிறது இன்னும் ஆயிரம் நடனங்களை. அத்தனை தயக்கங்களுடன் அத்தனை தத்தளிப்புகளுடன் யுகயுகமாகத் தொடர்கிறது அந்நடனம். சில கால்கள் சறுக்கி விழுகின்றன. சில எழும்ப முடியாமல் தவிக்கின்றன. சிலவற்றின் நடனப் பாதை மாறிவிடுகிறது. சில நடுவிலேயே விலகிக் கொள்ள நேருகிறது. இருந்தும் அந்த நடனம் மட்டும் பெருவெளியென முன்னோக்கிச் சென்றபடி இருக்கிறது.
ஆம், நடன மகள் இங்கு சுழன்றாடிக் கொண்டிருக்கிறாள்.
விஷ்ணுபுரம் இணையதளம்