விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 4, ஜடாயு

மதிப்பீடுகள்:

 

“துயில் கலைந்த பாம்பொன்று வேரில் சுழன்றேறி, மரம் பிணைத்தேறி கிளைகள் படர்ந்தேறி உச்சி நுனியொன்றில் தன் தலைவிழுங்கி சுருண்டு ஒரு வெண்ணிற மலராக விரிந்தது.
குறையாத பாத்திரத்திலிருந்து நிரம்பாத பாத்திரத்திற்கு நீர் வழிந்தபடியே இருந்தது”

தொடர்ச்சி


கலைரீதியாக விஷ்ணுபுரத்தை எப்படி மதிப்பிடலாம்?

மரபார்ந்த செவ்வியல் கலைகள் எப்போதும் மேலும் மேலும் அந்தக் கலைப் பரப்பின் நுட்பங்களுக்குள் சென்று கொண்டே இருக்கும் இயல்பு கொண்டவை. கோயில்களின் உள்மண்படங்களிலும் பிராகாரங்களிலும் முடுக்குகளிலும் என்றோ ஒரு நாள் வந்து பார்க்கப் போகிற ஒரு தீவிர கலாரசிகனுக்காக ஒரு சிற்பி படைத்திருக்கும் செதுக்கல்களை நாம் காண முடியும்.

லட்சண சுத்தமும் நுட்பங்களும் ஒளிச்சிதறல்களின் விளையாட்டால் அந்த கணத்தில் துலங்கி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் இருட்டு மூலைகளும் வாய்ந்தது விஷ்ணுபுரம். தாராசுரம், பேலூர், ஹளேபீடு கோயில்களின் சிற்ப அற்புதங்களிலும் அஜந்தா ஓவியங்களிலும் நாம் காண்பது போல.
ஆனால் அது மட்டுமல்ல, நவீன ஓவியங்களுக்கே உரித்தான குறியீட்டுத் தன்மை, பூடகத் தன்மை, சலனம் ஆகிய இயல்புகளும் அதில் உண்டு. ஒரு இம்ப்ரெஷனிஸ ஓவியத்தையோ க்யூபிஸ ஓவியத்தையோ ரசிக்கும் போது ஏற்படுவது போன்ற “திறப்புகள்” விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பிலும் சாத்தியம்.

மரபு காலங்காலமாக உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள் ஒருவகையானவை என்றால் நவீன ஓவியங்கள் உருவாக்கும் குறியீட்டு வெளி இன்னொரு வகையானது. இந்த இரண்டுமே ஒரு கலைப்படைப்பாக, விஷ்ணுபுரத்தில் கைகூடியிருக்கிறது.

“இந்திய காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப் பட்ட பெரும் நாவல்” என்பதற்கேற்றவாறு, மரபார்ந்த காவியங்களில் உள்ளது போன்ற உன்னதமாக்கல்கள், தொகுப்புத் தன்மைகள் விஷ்ணுபுரத்தில் நிரம்ப உண்டு தான். ஆனால் அதே சமயம் ஒரு நவீன, நேர்கோடற்ற (non linear), பின்நவீனத்துவ பிரதியின் கட்டுடைத்தல்களையும், குலைப்புத் தன்மையையும் அதே அளவில் கொண்ட நாவல் இது.

விஷ்ணுபுர ஞான சபையின் மாணிக்கங்களாக, மானுட ஞானத்தின் சிகர ரூபங்களாகத் திகழும் பிராமணர்களை மட்டுமல்ல, ஊட்டுபுரையில் மாமிசப் பிண்டங்களாக அலைந்து, சத்துவ குண சம்பன்னரான தங்கள் மகாகுருவின் மீது வன்முறை நிகழ்த்தும் பிராமணர்களையும் அது காட்டுகிறது. கால தரிசனமும் ததாகதரின் பெருங்கருணையும் திரண்டு வந்த அஜித மகாபாதரின் தரிசனத்தின் வெற்றியை மட்டுமல்ல, அது பின்னர் சந்திர கீர்த்தி உருவாகிய அதிகார மையமாகவும், வக்கிர பிறழ்வுகள் கொண்ட தாந்திரீகமாகவும் சீரழிவதையும் சேர்த்தே எழுதிச் செல்கிறது.

நவீன ஓவியங்கள் குறித்து எழுதும்போது வெங்கட் சாமிநாதன் கூறுகிறார்:

அது அங்கு இருக்கிறதா அல்லது ஒரு பிரமையா? கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. யதார்த்தத்தின் பிரஸன்னம் அங்கு உள்ளது தான். அதே சமயம் அது ஒரு வெளியில், நாம் ஒரு வெளியில். இடையில் ஒரு வாயில். கண்ணில் படாத வாயில். நம் வீடுகளிலேயே வாயில் இரண்டு வேறுபட்ட காரியார்த்த இடங்களைப் பிரிக்கிறது. சமையலறைக்கும், கூடத்திற்கும் இடையே. கூடத்திற்கும், இடைகழிக்கும் இடையே. இடைகழிக்கும் வாசலுக்கும் இடையே. இவ்வாயிலின் ஒருபுறத்தில் நடப்பது மறு புறத்தில் நடப்பது இல்லை. இதை Liminality என்பார்கள். இரு வேறு மனநிலைகளுக்கான இடைவெளி.” (http://en.wikipedia.org/wiki/Liminality)
இத்தகைய இடைவெளிகள் விஷ்ணுபுரத்திலும் உண்டு. கௌஸ்துப காண்டம் எப்படி ஸ்ரீபாத காண்டத்திலிருந்து வேறுபடுகிறது. மணிமுடிக் காண்டத்தில் ஏன் இறுதியாக தமோகுணம் சித்தரிக்கப் படுகிறது – இப்படியாக இவற்றை வரையறுக்கும் கோட்பாட்டு விவாதங்கள் நாவலுக்குள்ளேயே நிகழ்கின்றன.

விஷ்ணுபுரத்தில் இத்தகைய இடைவெளிகள் மலைமுகடுகளையும் பள்ளத்தாக்குகளையும் போல. அவற்றினூடாக, அவையனைத்தையும் தொட்டுத் தீண்டி, அவற்றில் மோதி, அவற்றைத் தாண்டி சீறிப் பாய்ந்து, சோனாவின் நீர்ப்பெருக்கு போல முடிவற்ற பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கிறது காவிய நதி. பெரும்பாலான நவீன ஓவியங்கள் போல துண்டுதுண்டாக வெட்டுப்பட்டு இல்லாமல் இடையறாத தொடர்ச்சித் தன்மை கொண்டதாகவும் உள்ளது விஷ்ணுபுரத்தின் கலை வெளிப்பாடு. அதன் தொகுப்புத் தன்மையும், குலைப்புத் தன்மையும் எப்போதும் ஒன்றையொன்று சமன் செய்தபடியே உள்ளன. மகா பிரளயத்தின் போது கூட காவியம் நிலை பிறழ்வதில்லை. அழிவிலிருந்து மீண்டும் முளைத்து வருகிறது.

 

ஒப்புமைகள்:

விஷ்ணுபுரத்துடன் ஒப்பிடத் தகுந்த படைப்புகள் எவை என்பது இயல்பாகவே எழும் ஒரு கேள்வி. இந்த நாவலின் வகை மாதிரியில் அடங்கக் கூடிய படைப்புகள் அதிக அளவில் இல்லை, மிகக் குறைவாகவே உள்ளன என்று நினைக்கிறேன்.

தமிழின் எல்லா வகைமாதிரிக் கதைகளுக்குமான முதல் கதையை கட்டாயம் புதுமைப்பித்தன் எழுதிருப்பார் என்று ஜெயமோகன் ஊட்டி இலக்கிய முகாமில் ஒரு உரையாடலின் போது குறிப்பிட்டார். அந்த வகையில், விஷ்ணுபுரம் போன்றதொரு நாவலுக்கான கருவின் சாயலுடன் புதுமைப் பித்தன் இரண்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். “ஆற்றங்கரைப் பிள்ளையார்” பாரத நாட்டின் அனாதி கால சமய வரலாற்றை புதுமைப் பித்தனுக்கே உரிய அபாரமான அங்கதத் தீற்றல்களுடன் கூறிய படைப்பு. “கபாடபுரம்” நமது தாந்திரீகம், சித்தர் மரபு போன்றவற்றை மாய யதார்த்த தன்மைகளுடன் கலந்தளித்த ஒரு மிகுகற்பனைப் படைப்பு. ஆனால், இவை இரண்டும் மிகச் சிறிய சிறுகதை முயற்சிகள். இவை ஒரு சிறு துளியாகக் கோடி காட்டியிருக்கும் கதைவெளிக்குள் சஞ்சரித்து தமிழில் ஒரு மாபெரும் நாவல் எழுவதற்கு நாம் 1990கள் வரை, ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலுக்கு நிகரான ஆழமும் வீச்சும் முன்னோடித் தன்மையும் கொண்டது விஷ்ணுபுரம். ஒரு மாபெரும் போரையும் அது தொடர்பான ஒரு நூற்றாண்டு வரலாற்றையும் களமாகக் கொண்டது ‘போரும் அமைதியும்’. ராணுவமும் அரசதிகாரமும் நிகழ்த்தும் பகடை விளையாட்டும், அவற்றினூடாக மனித உயிர்களின் வாழ்க்கையும் மனித உறவுகளும், மகத்தான மனித லட்சியங்களும், மனித சிறுமைகளும் டாஸ்ல்டாயின் நாவலில் சித்தரிக்கப் படுகின்றன. அதன் பின்னணியில் மனித வாழ்வின் ஆதாரமான கேள்விகளுக்கும், ஆன்மீகமான, தத்துவார்த்தமான தளங்களுக்கும் செல்கிறது டால்ஸ்டாயின் நாவல்.

அதே போல, ஒரு மாபெரும் பண்பாட்டின் எட்டு நூற்றாண்டு கால வரலாற்றினூடாக ஞானத் தேடல், தொன்மங்கள், சமய மரபுகள், சமூக கட்டுமானம், கலைகள், தனிமனிதர்களின் அகப் பயணங்கள் ஆகியவற்றை வரைந்து காட்டுகிறது விஷ்ணுபுரம். அப்படி வரைந்து காட்டும் திரைச்சீலையும் சரி, தூரிகையும் சரி, மிகப் பிரம்மாண்டமானவை. அதில் உள்ள சவால்களும் சாத்தியங்களும் அசாதாரணமானவை. அமானுஷ்ய கற்பனா சக்தியும், கைவண்ணமும் கொண்ட சைத்ரீகன் தான் அதைத் திறம்பட கையாள முடியும். விஷ்ணுபுரத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது.
லௌகீக வாழ்க்கைப் போராட்டங்களை நிழல்வெளியாகவும், ஞானத் தேடலை மையமாகவும் கொண்டிருப்பதால், டால்ஸ்டாயின் நாவலை விடவும் நேரடியாக தத்துவ, ஆன்மீக தளங்களுக்கும், ஆழ்மன சித்தரிப்புகளும் விஷ்ணுபுரத்தால் செல்ல முடிந்திருக்கிறது.

அந்த அம்சத்தில் விஷ்ணுபுரத்துடன் ஒப்பிடத் தக்க ஒரு நாவல் ஹெர்மன் ஹெஸ்ஸியின் Glass bead Game (1940களில் எழுதப்பட்டது). பிரபலமான அவரது ‘சித்தார்த்தா’ நாவலை விடவும் பிரம்மாண்டமான படைப்பு இது. இந்த நாவலும் பல நூற்றாண்டுகளின் கால வெளியைக் களமாகக் கொண்டது – ஆனால் அது இறந்த காலத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நிகழ்கிறது. நான்கு விதமான ஞான தாகிகள், அவர்கள் செல்லும் வேறு வேறு பாதைகள், மானுட ஞானம் அதிகார மயமாக்கப் படுதல் போன்றவை இந்த நாவலின் பேசுபொருள்கள். கத்தோலிக்க பாதிரி, பாகனிய பூசாரி (shaman), இந்து யோகி ஆகிய பாத்திரப் படைப்புகள் உண்டு. ஐரோப்பிய தொன்மங்களின் மீட்டுருவாக்கம், கிரேக்க ஞானிகள் தொடங்கி நீட்ஷே ஈறான மேற்கத்திய தத்துவ சிந்தனைகளின் பரிணாமத்தை விவரித்தல், நாவலின் பாத்திரங்களே நாவலை எழுதிச் செல்லுதல் போன்ற கூறுகளும் உண்டு. ஆனால், ஒட்டுமொத்தமாக விஷ்ணுபுரத்தின் செழுமையும், முழுமையும் இந்த நாவலை விட பல மடங்கு செறிவானது.

உதாரணமாக, Glass Bead Game ல் பிரதான பெண் பாத்திரங்கள் இல்லவே இல்லை, ஆனால் விஷ்ணுபுரத்தில் லட்சுமி, பத்மாட்சி, லலிதாங்கி, சாருகேசி, வைஜயந்தி, நீலி என்று மனதில் நிற்கும் பல பெண் பாத்திரங்கள் உள்ளனர்.

காப்ரியெல் கார்சியா மாக்கோஸ் 1960களில் எழுதிய நூற்றாண்டு காலத் தனிமை (One hundred years of solitude) விஷ்ணுபுரத்துடன் ஒப்பிடத் தகுந்த மற்றொரு நாவல். ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கை வழியாக லத்தீன் அமரிக்காவின் சரித்திரத்தை அள்ளும் இலக்கியப் படைப்பு. அதன் மாய யதார்த்தக் கூறுகள் பின்நவீனத்துவத்தின் வருகைக்கு முன்னோடித் தடம் அமைத்தவை. வெளிவந்த சில ஆண்டுகளில் மிகப் பெரும் உலக இலக்கிய கவனத்தைப் பெற்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும் பட்டது.

காலனியம் தொல்குடிகளின் பண்பாட்டுடன் கொள்ளும் உறவுகள் மற்றும் மோதல்கள், அதீத உறவுகள், மீண்டும் மீண்டும் சுழலும் காலசக்கரம் போன்றவற்றை கலாபூர்வமாக சித்தரிப்பதில் பெரும் வெற்றியடைந்த ஒரு நாவல் இது. ஆனால் ஆன்மீக, தத்துவார்த்த தளங்களிலான தேடல் விஷ்ணுபுரம் அளவுக்கு தீவிரமாக இதில் பேசப் படவில்லை.

1997ல் விஷ்ணுபுரம் வெளிவந்த பொழுது, “நூறு வருடத் தனிமை” தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களிடையேயும் இலக்கிய விமர்சகர்களிடையேயும் பரவலான கவனத்தைப் பெற்றிருந்த, சிலாகிப்புக்குரிய ஒரு நாவலாக இருந்தது. ஆனால் பல வகையில் அதற்கு நிகரான, வேறு பல அம்சங்களில் அதையும் தாண்டிச் சென்ற அதே போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பான விஷ்ணுபுரத்தை, இதே வாசகர்கள், விமர்சகர்களில் பெரும்பான்மையினர் புறமொதுக்கினார்கள், மட்டம் தட்டினார்கள். அதில் இந்துத்துவ அரசியல் சார்பு நிலைகளும், இன்னபிற விதவிதமான விஷயங்களும் கண்டுபிடிக்கப் பட்டு ஜெயமோகன் மீது முத்திரைகள் குத்தப் பட்டன. இன்று வரை இது ஆங்காங்கு தொடர்ந்து வருகிறது. நமது இலக்கியச் சூழலின் அவலத்தையும், சிறுமைகளையும், சீரழிவையுமே இது காட்டுகிறது.

உலக இலக்கியத்தில் லத்தீன் அமெரிக்கப் பண்பாட்டின், வரலாற்றின் ஒரு பிரதிநிதித்துவப் படைப்பாக “நூறு வருடத் தனிமை” கருதப் படுகிறது. அதற்கு ஈடாக, நவீனத் தமிழிலக்கியத்தில் இந்திய, தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றின் பிரதிநிதித்துவப் படைப்புகளாகக் கருதும் தகுதி படைத்தவை ஜெயமோகனின் விஷ்ணுபுரம், கொற்றவை ஆகிய நாவல்கள். ஆனால் நமது இலக்கியச் சூழலில் கோலோச்சி வரும் அற்பத் தனங்களும், அரசியல் நிலைப்பாடுகளும், போட்டி பொறாமைகளும் இத்தகைய மகத்தானதொரு இலக்கியப் பிரதியின் வருகையை கவனிக்கத் தவறி விட்டன என்று கசப்புணர்வுடனேயே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

காலனியத்தின் கோரப் பிடியில் சிக்கி விடுதலையடைந்த லத்தீன் அமெரிக்க சமூகத்தின் ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்தது உலக அங்கீகாரம். காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின்னரும், காலனிய கருத்தாக்கங்களால் இன்னும் பீடிக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதே போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளனுக்கு அதற்கீடான அங்கீகாரம் பொதுவெளியில் கிடைப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் விஷ்ணுபுரத்திற்கு மகத்தான வாசக அங்கீகாரம் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்பது உவகை தரும் விஷயம். வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் மீண்டும் மீண்டும் புதிய வாசகர்களைத் தேடிக் கண்டடைந்த படியே உள்ளது என்பது மட்டுமல்ல, பழைய வாசகர்களுக்கும் மீண்டும் மீண்டும் புதிய திறப்புகளை அளித்த படியே உள்ளது என்பதும் விஷ்ணுபுரத்தின் தனிச்சிறப்பு. இத்தனை தூரம் அந்த நாவல் பற்றி தொடர்ந்து பேசி, எழுதப் பட்ட பின்னரும், இன்னும் பேசப் படாமல் எஞ்சியிருப்பதே அதிகம் என்ற உணர்வே தோன்றுகிறது – சாதாரணக் கண்களுக்குப் புலப்படாமல் மேகங்களுக்கிடையே மறைந்து நிற்கும் விஷ்ணுபுர பேராலயத்தின் கோபுரங்கள் போல.

விஷ்ணுபுர ஒப்பீடுகளில் கடைசியாகக் குறிப்பிட வேண்டியது மகாபாரதம். உலக இலக்கியத்தின் மகோத்தன சிகரம்! வியாசன் படைத்த பெருங்காவியத்தின் உந்துதலையும் தாக்கங்களையும் தெளிவாக விஷ்ணுபுரத்தின் ஒட்டுமொத்த படைப்பில் பல இடங்களில் நாம் காண முடியும். மானுடப் போர்க்களமான குருஷேத்திரத்தை புறத்திலும் அகத்திலும் சித்தரித்தது மகாபாரதம். அகத்தை மையமாக்கி, புறத்தை நிழல்வெளியாக விட்டு சித்தரித்துச் செல்கிறது விஷ்ணுபுரம். மகாபாரதத்தின் சொல்லப் படாத இடங்களை நுட்பமான வாசகர்களும், இன்னபிற படைப்பாளிகளும் காலந்தோறும் இட்டு நிரப்பிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

அத்தகைய சாத்தியங்கள் விஷ்ணுபுரத்தில் உண்டு என்று சொல்லலமா? சொல்லலாம். ஓர் உதாரணம்: கணிகையர் வீதியில் வளர்ந்த உத்தரன் எப்படி ஒரு மகா ஆசாரியனாக ஆனான்? தன் தந்தையின் வேர்களைக் கண்டறிந்தானா? காவிய தேவதையின் மகன் – அந்த பட்டத்தை எப்படி சுமந்தான்? எது அவனை துங்கபத்திரை நதி தீரம் வரை இட்டுச் சென்றது? இந்தக் கேள்விகள் இன்னொரு நாவலுக்கான கருப்பொருளாக ஆகக் கூடுமா? கட்டாயம் கூடும். அதற்கான கச்சாப் பொருள்களும், கற்பனைக்கான வரையறைகளும் சுதந்திரங்களும் அனைத்தும் விஷ்ணுபுரத்துக்கு உள்ளேயே பல இடங்களில் உள்ளன.

ஒரு யுகத்தையே சிருஷ்டித்துக் காட்ட வேண்டும் என்ற சங்கர்ஷணின் காவிய கற்பனை வீண்போகவில்லை. கதைப்பின்னலிலும், தத்துவ விவாதங்களிலும், பாத்திரப் படைப்பிலும், காவிய அழகியலிலும் பல வகைகளில் மகாபாரதத்தின் மதலையாக, குழந்தையாக விஷ்ணுபுரம் இருக்கிறது.
புராணக் கடலை அடக்கிய குறுமுனிக் கமண்டலம் போன்ற மனம் கொண்ட பாணர்கள் காலந்தோறும் அதைப் பாடக் கூடும். கல்லில் உறைந்து குளிர்ந்த கால ரூபமான காவிய மண்டங்களில் வைசம்பாயன ரிஷியும், சூதரும் வெண்பறவைகளாக சிறகடித்து அதை ஆசிர்வதிக்கக் கூடும். மகா வியாசனான கிருஷ்ண துவையான மகரிஷி சுடர்விளக்கில் வந்தொளிர்ந்து அதை அங்கீகரிக்கக் கூடும்.
ஓம். அவ்வாறே ஆகுக.

[முற்றும்]

விஷ்ணுபுரம் இணையதளம்

முந்தைய கட்டுரைஇந்நாட்களில்…
அடுத்த கட்டுரைகோணங்கி