புதுக்கவிதை என்று தமிழில் இப்போது வழங்கிவரும் இலக்கியவடிவம்.மிகமிகப்பரவலானதும் பல்நோக்குப் பயன்பாடு கொண்டதுமாகும். இன்றையசூழலில் இவ்வடிவத்தைப்பற்றிய ஒரு வரையறையை அளிப்பது எளிதல்ல என்னுமளவுக்கு இது பரந்து விரிந்திருக்கிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக ”ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல் வரக்கூடியதும் எழுதியவராலோ பிரசுரித்தவராலோ வாசித்தவராலோ அல்லது சம்பந்தமில்லாத பிறராலோ கவிதை என்று கருதப்படுவதுமான மொழியமைப்பே கவிதை’ என்ற பொதுவரையறை இங்கே அளிக்கப்படுகிறது.
புதுக்கவிதை என்ற பெயரை இதற்குப் போட்டவர் க.நா.சுப்ரமணியம் என்ற இலக்கிய விமரிசகர். ஆங்கிலத்தில் new poetry என்ற சொல்லை எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் பயன்படுத்திருப்பதைக் கண்ட இவர் ”அப்டீண்ணா நமக்கும் இருக்கட்டும் ஒண்ணு…என்னங்கிறேள்?” என்று தன் தோழர் சி.சு.செல்லப்பாவுடன் பூரிக்குத் தொட்டுக்கொள்ள புதினாச் சட்டினி கொடுக்கும் ஒரு ராயர் காபி கிளப்பைத் தேடி திருவல்லிக்கேணிவழியாகச் சென்றுகொண்டிருந்தபோது சொன்னார் என்பது வரலாற்றுத்தகவல். அதற்கு சி.சு.செல்லப்பா ”கெடந்துட்டு போகுது களுத… ஓஞ்சவேளைக்குப் போது போகும்” என்று ஆமோதிப்பு அளித்தார்.
உடனே வீடு திரும்பிய க.நா.சுப்ரமணியம் தன் பழைய நாட்குறிப்பை எடுத்து அதில் உள்ள அன்றாடக்குறிப்புகளை எஸ்ரா பவுண்டின் கவிதைகளின் வடிவுக்கு மடக்கி எழுதலானார். நாற்பது கவிதைகளை இவ்வாறு பெருமாச்செட்டி பென்சிலால் பிரதி எடுத்தபின் விடியற்காலையில் பிளாஸ்கில் எஞ்சியிருந்த காப்பியையும் குடித்தபின் அவற்றின் அடிப்படையில் எஸ்ரா பவுண்டின் புகழ்பெற்ற புதுக்கவிதை இலக்கணத்தின் சாயலில் [A retrospective to modernism] இவர் புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம் உருவாக்கினார் அவையாவன:
1 ஒருவரி எக்காரணத்தாலும் சாதாரண அளவுள்ள விரலில் ஒரு விரலுக்கு அதிகமாக நீளக்கூடாது. [வரி நீளமாக அமையும்போது அதற்கேற்ப விரலை நகட்டி அளவிடுதல் தகாது]
2 வரிகளைக் கீழ் கீழாக எழுதும்போது எதுகை மோனை முதலிவை நிகழாமல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்
3 பெண்கள் என்றால் மார்புகள், கூந்தல், இடுப்பு ,உதடுகள் மற்றும் அல்குல் போன்ற உறுப்புகள் வர்ணிக்கப்படலாகாது
4 ஆண்கள் என்றால் தோள்கள், புஜங்கள், மீசை போன்றவை வர்ணிக்கப்படக்கூடாது.
6 ஆண்களும் பெண்களும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் விதி 3,4 லில் இருந்து விலக்கு உண்டு
7. வரிகள் எந்நிலையிலும் எவராலும் பாடும்படி அமையலாகாது
8 மளிகைப்பட்டியலை எண்வரிசை இல்லாமல் எழுதியதுபோன்ற வடிவம் கொண்டிருக்கவேண்டும்
9 தினத்தந்தி நாளிதழ் பயன்படுத்தாத எந்தச் சொல்லையும் பயன்படுத்தக்கூடாது. குறைந்தபட்சம் தினமணியாவது அதைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்
10 ஒருசொல் சிற்றிதழில் உருவானதாக இருந்தால் விதி 9 ல் இருந்து விலக்கு உண்டு
11 பிரசுரிக்கும் இதழாசிரியருக்குப் பொருள் புரியக்கூடாது.
12 இதழாசிரியரே அக்கவிதையை எழுதினார் என்றால் விதி 11 இல் இருந்து விலக்கு உண்டு. ஆனால் அதை அவர் அனுபவித்தாகவேண்டுமெனக் கட்டாயமில்லை.
13 வாசகர்கள் [இருக்கும் பட்சத்தில்] தங்களுக்குத் தோன்றிய பொருளை அளிக்கும்படி சொற்சேர்க்கை இருக்க வேண்டும்.
14 கவிதை வாசகர்களுக்குப் புரியும்படி இருக்குமென்றால் கவிஞரே அதை விளக்கி பேட்டிகள் கொடுத்துக் கவிதையாக ஆக்க உரிமை உண்டு.பேட்டிகளை விளக்க மேலும் பேட்டி கொடுக்கலாம்.
15 சராசரிக் கைவிரலில் ஒரு விரல் அளவுக்குக் கவிதையின் நீளம் அமையலாம். அதற்குமேல் நீளுமென்றால் அதேயளவுள்ள பத்திகளாக அமைக்கலாம்.
இந்த இலக்கண அடிப்படையில் அன்று காலையிலேயே க.நா.சுப்ரமணியம் கீழ்க்கண்ட விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கினார்
1. சிறந்தகவிதை சி.சு.செல்லப்பா எழுதாததாகவே இருக்க இயலும்.
2 புதுக்கவிதையில் மேஜர் போயட் என க.நா.சுவை சொல்லலாம். பிறர் எதிர்பார்க்கப்படுகிறார்கள்
3 சிறந்த கவிதை கவிதைபோல இருக்காது. உரையாடல் போல இருக்கும். நல்ல உரையாடல் எங்ஙனம் கவிதையாக உள்ளதோ அதைப்போல
அதே நாளில் கிட்டத்தட்ட அதே வேளையில் அதே திருவல்லிக்கேணியில் அரிக்கேன் விளக்கொளியில் சிசு.செல்லப்பாவும் புதுக்கவிதைக்கான இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். எஸ்ரா பவுண்டின் அதே கட்டுரையை அவரும் வாசித்திருந்தமையால் கிட்டத்தட்ட அதே இலக்கணங்களையே அவரும் உருவாக்கியிருந்தார். உபரியாக அவர் உருவாக்கிய இரு இலக்கண விதிகள் கீழ்க்கண்டவை
1. புதுக்கவிதை அலங்காரமில்லா மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். உதாரணம், ‘அதற்கு’ என்பது அலங்கார மொழி. ‘அதுக்கு’ என்பது கவிதைமொழி
2. தமிழ்ப்பண்டிதர்களைத் தூக்கிலே போடவேண்டும். சேர்த்துப் போடுவது நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கும் என்றால் ஒவ்வொருவரையாகப் போடலாம். அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? ”யாரையோய் நீ?” என்று கேட்டால் ”யாரைப்பாத்து ஓய்னு சொல்றே?” என்று கேட்காதவர்கள் தமிழ்ப்பண்டிதர்கள்.
இதைத்தவிர அவர் மூன்று விமரிசனக் கோட்பாடுகளை உருவாக்கினார். அவையாவன:
1. சிறந்தகவிதை க.நா.சுப்ரமணியம் எழுதாததாகவே இருக்க இயலும்.
2 புதுக்கவிதையில் ‘மேஜர் போயட்’ என சி.சுசெல்லப்பாவைச் சொல்லலாம். பிறர் எதிர்பார்க்கப்படுகிறார்கள்
3 சிறந்த கவிதை கவிதைபோல இருக்காது. உரையாடல் போலவும் இருக்காது. அது பாட்டுக்கு இருக்கும்.
விளைவாக மறுநாள் காலை பத்துமணி அளவில் திருவல்லிக்கேணி ராயர் காபிகிளப்பில் வைத்துப் புதுக்கவிதை இயக்கம் வரலாற்றுச்சிறப்புமிக்க பிளவுக்கு ஆளாகியது. கோபத்துடன் வீடுதிரும்பிய சி.சு.செல்லப்பா, உடனே தன் கையாலேயே தலைப்பை வரைந்து எழுத்து என்ற சிற்றிதழை உருவாக்கினார். இவ்விதழ் தமிழ்ப்புதுக்கவிதைக்கான அடிப்படைகளை அமைத்தது
இவ்விதழில் பல இளைஞர்களைத் திரட்டி எழுதவைத்துத் தன் தரப்பை வலுவாக நிறுவினார் செல்லப்பா. தன் வீட்டுமுன் பெட்டிக்கடை வைத்திருந்த நாரண நாயுடு என்பவரைப் பற்றி ந.பிச்சமூர்த்தி எழுதிய ஒரு கட்டுரையைப் புதுக்கவிதை வடிவுக்கு ஒடித்து அமைத்து இவர் இதழில் வெளியிட்டார். ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற அக்கவிதையின் சாயலில் எழுதுபவர்களின் பெயர்கள் வெளியே விடப்படமாட்டாது என்ற உறுதியையும் அளித்தார்.
தொடர்ந்து எழுத்து இதழில் ஏராளமான பேர் எழுதினாலும் மூவர் முக்கியமான முன்னூதாரணங்களாக அமைந்தனர். நாகர்கோயிலைச் சேர்ந்த சுந்தர ராமசாமி என்பவர் பசுவய்யா என்ற மாற்றுப்பெயரில் ‘அம்மா இங்கே வா வா’ கவிதையால் ஊக்கம் பெற்று அவர் எட்டாம் வகுப்பில் படித்தபோது டிரில் வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடத்தை மையக்கருவாகக் கொண்டு ”நகத்தை வெட்டு உன் நகத்தை வெட்டு!” என்ற கவிதையை எழுதினார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரும் சிறிய செவிச்சிக்கல் கொண்டவருமான டி.கெ.துரைசாமி என்பவர் நகுலன் என்று பெயர் சூட்டிக் கொண்டு அவரது சமீபத்திய தடுமாற்றம் ஒன்றை எழுதி அனுப்பினார்.
”ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றான்
ராமச்சந்திரன்தானா என்றேன்
ஆமாய்யா என்றான்
ராமச்சந்திரனேதானா என்றேன்
டேய் ஆமாடா என்றான்”
என்ற இக்கவிதையை மேலும் சுருக்கி சி.சு.செல்லப்பா தன் இதழில் வெளியிட அது புகழ்பெற்றது.
மறுமாதத்திலேயே சிவராமன் என்ற இலங்கைக்காரர் தருமு சிவராமு என்றும் சீவராம் பிரமிள் என்றும் பலவாறாகப் பெயர் சூட்டியபடி அவர் ஹோமியோபதி மருத்துவருக்குத் தன் நோய் குறித்து எழுதியளித்த குறிமானத்தைக் கவிதைவடிவிற்கு மாற்றி அனுப்பி அச்சாயிற்று. ‘புறந்தோலில் அழுக்குத்தேமல் மருதி புணர்ந்து பாயும் விந்து..”என்ற அவ்வரிகள் அவரது கையெழுத்து புரியாமையால் ”பூமித்தோலில் அழகுத்தேமல் பரிதி புணர்ந்து பாயும் விந்து” என்று பிரசுரமாகி தமிழில் படிமக்கவிதைக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
டைரிக்குறிப்பு, தடுமாற்றம், படிமம் என்ற இம்மூன்று அம்சங்களின் நீட்சியாகவும் கலவையாகவும் தமிழில் புதுக்கவிதைகள் சரமாரியாக உருவாயின. இவற்றுக்கு இரு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு உருவாகி வந்தது. தமிழ்ப்பேராசிரியர்கள் எதிர்த்தமைக்குக் காரணம் புதுக்கவிதைக்கு உரை போட முடியாது என்று கோனார் நிறுவனம் மறுத்துவிட்டமையே.
க.கைலாசபதி,நா.வானமாமலை போன்ற இடதுசாரிகள் எதிர்த்தமை அரசியல் நெடுநோக்கினால். எதிர்காலத்தில் புரட்சி வெடித்து சோஷலிஸ ஆட்சி ஏற்பட்டு அவர்கள் கலாச்சார கம்மிஸார்களாக உருவாகும்போது கவிதை எழுதுபவர்களை எதிர்புரட்சிக்காகக் கைதுசெய்து ராஜஸ்தானில் கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்புகையில் தங்களுடையது கவிதையல்ல லாண்டிரி பட்டியல் அல்லது மச்சினிக்குக் கடிதம் என்று சொல்லி புதுக்கவிதையாளர்கள் தப்பிக்க வழியிருக்கிறது என அவர்கள் அஞ்சினர். மேலும் கவிதைகளைக் கண்டுபிடிக்கும் தானியங்கிக் கருவிகள் உருவாக்கப்படும்போது அவற்றுக்கு குழப்பம் வராமலிருக்க தெளிவான திட்டவட்டமான வடிவம் இருப்பது அவசியம். அது யாப்பே என்றனர் இவர்கள்.
குடத்திலிட்ட விளக்காக வெளியே புகை மட்டும் விட்டுக்கொண்டிருந்த புதுக்கவிதை இயக்கத்தை மேடைகளுக்குக் கொண்டுவந்தவர்கள் நா.காமராசன், மு.மேத்தா, அப்துல் ரகுமான் ஆகியோர். இவர்கள் வானம்பாடிகள் என்ற இதழை நிறுவிக் கவிதைகளை வெளியிட்டமையால் வானம்பாடிக் கவிஞர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சி.ஆர்.ஐ முறுக்குக் கம்பிகளின் விளம்பரத்தை அடியொற்றி மு.மேத்தா எழுதிய ஒரு நெம்புகோல் கவிதையால் இவர்களை நெம்புகோல்கள் என்றும் அழைக்கத்தலைப்பட்டார்கள்.
மேற்கண்ட நெம்புக்கவிதை வானம்பாடிகளுடைய அதிகார பூர்வ பிரகடனமாக வரலாற்றில் இடம்பெற்றது. பிற்காலத்தில் ஒரு விருதுவழங்கும் விழாவில் தொழிலதிபர் ஒருவர் ”இவர் இந்தப் பந்தையெல்லாம் போட்டு நெம்புற அந்தக் குச்சி பத்தி எழுதின ஒரு கவிதை…” என்று நெற்றியைத் தட்டியதாகவும் விடலைகளின் நகைப்பைத் தவிர்க்க அருகே அமர்ந்திருந்த அமைச்சர் ”கால்ஃப்,கால்ஃப்’’என்று அடியெடுத்துக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
வானம்பாடிக் கவிதைகளின் இலக்கணம் மூன்று. அவையாவன
1 உரக்கச்சொல்லப்படும் வரிகளே கவிதை எனப்படுகின்றன.
2 சொற்றொடர்களுக்கு முன் ஆ! ஏ! ஓ! போன்ற உயிரெழுத்துக்கள் அமைதல் வேண்டும்.[ அதிகப்பிரசங்கித்தனமாக ஈ!, ஊ! என்றெல்லாம் எழுதலாகாது]
3 ஒவ்வொருவரியையும் இரண்டுமுறை சொல்லுதல் வேண்டும்.[கைதட்டலை எதிர்பார்த்து அதிகபட்சம் நான்குமுறை மட்டும் சொல்லாம்.மேலே போவது அடுத்த கவிஞரின் நேரத்தை எடுத்துக் கொள்ளுதலாகும்]
4 கைதட்டல் எப்பகுதியில் விழ வேண்டும் என எழுதும்போதே கவிஞனே முடிவுசெய்து அதற்காக இடைவெளிவிட்டுக் காத்து நிற்றல் வேண்டும்.
5 எதுகைமோனைகளை எங்கு வாய்ப்புகிடைத்தாலும் சேர்க்கலாம்.
6 சொற்பொழிவுக்கும் கவிதைக்கும் ஒரே வேறுபாடுதான், பிந்தையது கவியரங்கத்தில் ஒலிக்கும்
7 முதிர்கன்னிகள், வண்ணத்துப்பூச்சிகள், தீக்குச்சிகள், அக்கினிக்குஞ்சுகள் ஆகியவற்றைப் பற்றி ஒரு கவிதையாவது எழுதியிருக்கவேண்டும்
எழுபதுகளில் இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தபோது வானம்பாடிகள் மறைந்தார்கள். கோவை ஞானி தலைமையில் சிறு குழு மட்டும் எஞ்சி ராப்பாடிகள் என்று பெயர் மாற்றி சிலகாலம் இயங்கியதாக தெரியவருகிறது. இவர்களில் பலர் பின்னர் திரைப்படப் பாடல்கள் எழுதத் தலைப்பட்டார்கள். ஆவாரம்பூ என்ற பூவைத் திரைப்பாடலில் அழுத்தமாக நிறுவியவர்கள் இவர்களே. எதற்கெடுத்தாலும் லாலால லாலா என்று மோகனத்தில் மெட்டமைத்த இளையராஜாவே இதற்குக் காரணம் என்று ஒரு கவிஞர் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்
வானம்பாடிகளின் சாதனை என்பது கவிதையை மக்கள் மயமாக்கியது. இவர்களின் கவிதைகளைக் கேட்கும் எவரும் ”இம்புட்டுத்தானா? தாளி , இதை நானே எழுதுவேனே” என்ற தெளிவை அடைந்தமையால் எங்கும் கவிதை பெருகியது. இளைஞர்களின் செலவில்லாப் பொழுதுபோக்காகக் கவிதை மாறியது. காதல்கடிதங்கள் புதுக்கவிதையில் எழுதப்பட்டன. இவ்வகைப்பட்ட கவிதைகள் ஏறத்தாழ ஒரு லட்சத்தி அறுபதாயிரம் வரை ஒரு மாதத்தில் வெளியாவதாகத் தெரியவருகிறது. சமீபத்திய தொகுதிச் சீரமைப்பில் நெல்லை பணகுடி நடுவே இவர்கள் ஒரு தனித்தொகுதி கேட்டுப் போராடியிருக்கிறார்கள்
இவ்வகைக் கவிதைகள் மூன்று வகை என விமரிசகர் வகுத்துள்ளனர்
1.’அடி இவளே’ பாணி . இதற்கு முன்னோடியாக விளங்குபவர் அண்ணன் என்று சான்றோரால் அழைக்கப்படும் அறிவுமதி அவர்கள். உதாரணம்
”இனியவளே
நான் என் காதலை விளக்கினேன்
நீ வாரியலால் விளக்கினாய்”
2 ‘ஏ சமுதாயமே!’ பாணி. இவ்வகைக் கவிதைகளுக்கு எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் முன்னோடியாவார். உதாரணம்
குனிந்து பெருக்காதே
நிமிர்ந்து கூட்டு!
புதிய திட்டம் வகுத்திடு!
3 ‘ஓ இளைஞனே’ பாணி. இவ்வகைக்கவிதைகளுக்கு முன்னோடி என திரைப்படத்துக்கு எழுதுவதற்கு முந்திய வைரமுத்து குறிப்பிடப்படுகிறார். பள்ளிமாணவர்கள் அதிகமும் இதை எழுதுகிறார்கள். உதாரணம்
இளைஞனே நீ
பேனாவை எடு
அது போர்வாள்
ஒழிக சார்வாள்!
புதுக்கவிதையின் வளர்ச்சிப் படிக்கட்டில் உச்சநிலை திரைப்பாடலாக அதன் பரிணாமம். இரு கவிதைகள் இதன் சிறந்த உதாரணங்களாகும்
மாறுகோ மாறுகோ மாறுகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்ன்னா குமுக்குதான்!
புதுக்கவிதையின் பிதாமகர்கள் விழைந்த முடிவிலாது பொருள் கொள்ளும் தகைமை கொண்டவரிகளை இங்ஙனம் தமிழ்ப்புதுக்கவிதை அடைந்தேவிட்டது!
மறுபிரசுரம் . முதற்பிரசுரம் Aug 28, 2009