விஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-2

2. மகத்தான தனிமை

உனது மகத்தான தனிமை
கரிய பறவையெனப் பறந்துவரும்.
நீயெண்ணும் சொற்கடலின் அலைகள்
நக்கியுண்ணும் கரைமணலில் எஞ்சும்
நேற்றைய பாதங்களின் சாயலில் இன்று
எங்கு பதிகின்றன சுவடுகள்?


[தொடர்ச்சி]

இந்த நாவலை நான் முதல் முறை வாசித்த போது எனக்கு இதன் இலக்கிய நுட்பங்கள் சரிவரப் புலப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். முதல் வாசிப்பின் முடிவில் நான் இதை ஓர் தத்துவ- ஆன்மீக நூலாகவே அணுகினேன். அதுவரை நான் வாசித்திருந்த தத்துவ- ஆன்மீக நூல்கள் வாழ்வைப் பற்றி முன்வைத்த நம்பிக்கைகள் அத்தனையும் பொசுங்கி சாம்பலாயின. விஷ்ணுபுரம் வாழ்வைப் பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை, வறட்டுத் தத்துவங்களாக இன்றி உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்கள் மூலம் எழுப்பியதால் அதன் உக்கிரத்தைப் பன்மடங்கு அதிகமாக உணர முடிந்தது..

இந்த நாவலின் அடிநாதமாக நான் காண்பது தனிமையும் தவிப்பும், ஆன்மீக தகிப்பும் தான். ஒருவகையில் ஜெ வுடைய தனிமையும் தவிப்பும் அதற்கான தேடலுமே இந்த விஷ்ணுபுரத்தின் மூலக் கூறு  என்று எண்ணுகிறேன். விஷ்ணுபுரம் எனும் நாவலை ஒட்டுமொத்தமாகப் பிணைப்பது தனிமை எனும் இழை தான் என்று எனக்குப் படுவதுண்டு. ஆன்மீக அகப் பயணம் என்பது கருந்துளைக்குள் hole வழுக்குமரத்தில் ஏறுவதைப் போலத்தான். ஒளி என்றேனும் நம் மீது விழக்கூடும் எனும் நம்பிக்கை மட்டுமே எஞ்சும், திசைகள் அற்ற இருளும், வெறுமையும் மட்டுமே சூழ்ந்த பயணம் அது.

அக்னிதத்தனின் வழித்தோன்றலாக விஷ்ணுபுரத்தைக் கட்டுப்படுத்தும் மகாவைதிகர்களுக்குப் புத்திர சோகம் மட்டுமல்ல தனிமையும் குலச்சொத்து தான். அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் மனிதனுக்கு அந்த அதிகாரத்தைத்தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பு எப்போதும் இருப்பதுதான். அதற்கு அவன் தன்னைப் பிறர் அணுகமுடியாத தொலைவில், அகந்தையின் கோட்டைக்குள் புதைத்து வைத்திருக்கிறான். அதிகார நாட்டமும் ஆன்மீகத் தேடலும் ஒருபோதும் இணைந்திட முடியாது. சூரியதத்தரின் தனிமை இத்தகையதே. ஸ்வேததத்தன் சொன்னது போல் சூரியதத்தனின் தனிமைக்குக் காரணம் விஷ்ணுபுரம் அல்ல, மாறாகத் தன்னையே அவன் விஷ்ணுபுரம் என எண்ணுவதால் விளைந்தது. அகந்தையை ஊதிப் பெருக்கிக் கட்டப்பட்ட அதிகாரத்தின் மீதான ஐயத்தால், அவரால் அவருடைய மகன் ஸ்வேததத்தனைக் கூட நெருங்கமுடியவில்லை. மலர்மாலைகளைக் கருகச்செய்யும் நெருங்கமுடியாத நெருப்பாகவே அவர் மரணத்திற்கு பின்பும் நினைவுகூரப் படுகிறார்.

நிலவின் குளுமையில் அனைவரையும் வசீகரிக்கும் பவதத்தர் உணர்ந்த தனிமை தன் குலத்தின் ஆகச்சிறந்த வாரிசு அக்குலத்தின் மரபிற்கு எதிராக, மகாகாலனாய் உருவெடுத்து அதன் அஸ்திவாரங்களைப் பெயர்க்கத் தொடங்கியபோது எழுந்தது. சூரியதத்தரின் தனிமை அதிகாரத்திலும் அகங்காரத்திலும் விளைந்தது, அதை மீறிச் செல்ல அவர் முனையவும் இல்லை விரும்பவும் இல்லை. பவதத்தர் தனிமையைத் தன் மேல் அழுத்தும் சுமையாக அறிகிறார், விஷ்ணுபுரத்து சர்வஞர் எனும் பட்டம் தன் பாதையில் அகற்றமுடியாத கரும்பாறையாக அடைத்து நிற்பதை எண்ணி வருந்துகிறார். அதிலிருந்து மீண்டு தன் மகனோடு சேர்ந்து காசியபனைப்போல் குதித்தாட வேண்டும் எனத்துடிக்கிறார்.

புராணங்களையும் , குல நினைவுகளையும் மட்டுமே சுமந்து கொண்டு விஷ்ணுபுரத்தின் அழுகிய உடற்பரப்பின் மீது தன் மரணத்தருவாய்க்காக காத்துக்கொண்டிருக்கிறார் ஆரியதத்தர். நோய்மையும், மகனைப் பற்றிய கவலையும் அவரைத் தனிமையில் ஆழ்த்துகிறது. தத்தர்களின் வரிசையில் தனிமையின் துன்ப நிழல் படாத இரு ஆளுமைகள், விஷ்ணுதத்தனும் வேததத்தனும் தான்.

சோலைப் பைத்தியம் என்று அடையாளப்படுத்தப்படும் வேததத்தனுக்குத் தனிமை என்பதே இல்லை. தருக்கத்தால் மறைக்கப்படாத தூய மனம் கொண்ட மோன விரதரே விஷ்ணுபுரத்தின் கடைசி சர்வஞர் என்று புராணங்கள் கூறுகின்றன. மகத்தான பிரபஞ்சப் பேரியக்கத்தில் கச்சிதமாகத் தன்னைப் பொருத்திக்கொண்ட ஒளித்துகள் அவன். என்னைப் பொருத்தவரை விஷ்ணுபுரத்தின் ஆகச் சிறந்த சர்வஞன் வேததத்தன் தான். அவன் ஒருவனுக்குத்தான் விஷ்ணுபுரத்து சர்வஞரின் நீல மோதிரம் ஒரு பொருட்டே அல்ல.

மானுட ஞானத்தின் உச்சநிலையைத் தொட்டவன் விஷ்ணுதத்தன். அவன் கற்காத ஞான நூல் இல்லை, ஆனால் அவன் கேள்விகளின் விடைகளை அவை நெருங்கவில்லை. தர்க்கத்தின் எல்லையை உணர்ந்து அதை அங்கீகரித்த அக்னிதத்தனின் வாரிசு, அதைக் கடந்து செல்ல முயல்கிறான். அவனுடைய தனிமையை அவன் பூரணமாக ஏற்றுக்கொண்டான், அதுவே ஞானப்பாதையின் இயல்பு என்பதை புரிந்துகொண்டான். மானுடச்சிறுமைகள் தீண்டாத உயரத்தில் அவனிருந்ததால் தனிமை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அஜிதனையும் சித்தனையும் நாம் இணைகோடுகளாக வைத்துப் புரிந்துகொள்ள முடியும். அஜிதணும் அனைத்து ஞான நூல்களையும், தர்க்க சாத்திரங்களையும் கற்றுத் தேறுகிறான், அனைத்து சபைகளையும் தன் வாதத்தால் வெல்கிறான்.

ஆனால் சித்தன் எந்த அமைப்பின் அதிகார பீடத்தைத் தன் ஆன்மீக வேட்கைக்காகத் துறந்தானோ, அந்த அமைப்பில் வெண்ணெய்க்குள் சிக்கிய ஈ என அஜிதனின் ஆன்மா சிறைப்படுகிறது. தர்க்கத்தின் எல்லைகளை உணர்கிறான், மெல்ல ஆன்மா உலர்ந்து தனிமையில் மரிக்கிறான். சித்தன் தொட்ட உயரத்தை , வேததத்தனின் பூரணத்தை அவனால் இறுதிவரை தொட முடியவில்லை. ஞானத்தின் படிநிலைகளை ஒரேமூச்சில் தாண்டிய காசியபன், தன் குருநாதனின் அழிவுக்குக் காரணமாக இருந்த அமைப்பை அழித்து ஒழிக்க வன்மத்தை சுமந்துகொண்டு பல பிறவிகளாகக் கசந்த தனிமையில் காத்திருக்கிறான். தரிசனங்கள் நாளடைவில் நிறுவனங்களாக மாறிப்போவதை உடைக்க நினைத்த சித்தனின் தரிசனமும் ஒரு நிறுவனமாக ஆகிவிடுகிறது.

பிரசெனர், பிரபஞ்சம் தற்செயல்களின் பிரவாகம் என்கிறார். ஒரு செயலில் இருந்து நூறு செயல்கள் என பிரபஞ்சம் பெருகியோடுகிறது. எல்லோர் தலைமீதும் கூரை இருக்கிறது இவரைத் தவிர. காலம் அவருக்கு ஒவ்வொரு கணமும் பெரிய சித்திரவதையாக இருக்கிறது. காலத்தை மறக்க போதை என்று பிரசெனரைப் பற்றி கூறுகிறாள் பத்மாட்சி.

‘எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி. உன் அனுபவத்தை மீறியவை கூட அனுபவத்தின் தருக்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். அதுவே ஞான வழி.மீதி எல்லாம் சுய ஏமாற்று. ஞான வழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுய திருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் அதுவே’ என திருவடியிடம் கூறுகிறார் பிரசெனர். உறக்கமின்றி, சிவந்த கண்களோடு அலைந்து திரியும் அந்த சிற்பியைத் தனிமை வதைக்கிறது. கடல்நீரைத் தன் அலகுகளால் அள்ளிப் பருகி அதன் ஆழத்தை அளக்க முயலும் கடல்பறவைப் போலத் தர்க்கத்தைக் கொண்டு வாழ்க்கையை அறிய முனைகிறார். இந்த மானுட வாழ்வின் நோக்கம் தான் என்ன? அறியமுடியாத அந்தக் கேள்விக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் உழன்ற இரு பூச்சிகள் ஏதோ ஒரு விடையை அவர் காதில் ரகசியமாகக் கூறின. சிறகை விரித்து சக்கரத்தை நோக்கிப் பறந்து மறைந்தார். யுகங்கள் கடந்து பயணித்தது அவருடைய தனிமை. பிரசெனரின் நேரெதிர் பாத்திரம் பத்மாட்சி. அவளுடைய தெளிவும், திட சித்தமும் எனக்கு ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளின் ‘ நாயகி கல்யாணியை நினைவுபடுத்துகிறது. ஒருவகையில் கல்யாணியின் காவிய வடிவு தான் பத்மாட்சி என்று தோன்றியது. கூரைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறாள்.

பிங்கலன் தன் குரு சிரவனரிடம் தன் வாழ்க்கையையும் அனுபவங்களையும் மட்டுமே பிரமாணமாகக் கொள்வேன் எனக் கூறுகிறான். அவனது சிந்தனை காவியத்தாலும், தான் கற்றறிந்த நூல்களாலும் இயக்கப் படுவதை உணர்கிறான். அந்த சிந்தனைச் சுழலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடுகிறான். எதையும் அறிவு பூர்வமாகச் செய்யாமல்- புலன்களை மட்டும் நம்பி முன் நகர்வது, என முடிவெடுக்கிறான். பிங்கலன் கையில் கண்டெடுத்த சுடர்விடும் அந்தப்பச்சைக் கல் உண்மையில் உயிரற்ற ஜடப்பொருள் அல்ல, அது ஓர் விதை இருளில் சுடரும் விழிகளென வழிகாட்டும் மிருகநயனியின் விதை. அந்த விதை வேர்விட்டு முளைத்து, கேள்விகளால் ஆன ஒரு வனத்தை உருவாக்குகிறது. ஒற்றை விதை விருட்சமாகி, விருட்சம் பெரும் வனமாகி ஓங்கி நிற்கிறது.

‘தனிமையே மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மாற்று இல்லாத சமரசம் இல்லாத தனிமை. இந்தத் தனிமையை இம்மி கூட மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இதிலிருந்து தப்பத்தான் கவிதை காமம் உறவுகள் சமூகம் தத்துவங்கள் எல்லாமே. ஆம் . ஒரே உண்மை தான் . பிரபஞ்ச விரிவில் ஒவ்வோர் உயிர்த்துளி மீது கவிந்திருக்கும் மகத்தான தனிமை’ என்று உணர்கிறான் பிங்கலன். ஏறத்தாழ கவிதைகள் காவியங்கள் பற்றி இதே கருத்தை வந்தடைகிறான் காஞ்சிக்கவி சங்கர்ஷணன்.

சூரியதத்தரின் முன்னிலையில் காவியத்தை முதன்முறை அரங்கேற்றும் சங்கர்ஷணன், கவிதையும் காவியமும் வெறும் மனமயக்கங்கள், சாமானியன் தன்னைப் பற்றிக்கொள்ளும் மிகை எண்ணங்களே அது என்று திருவிக்ரமரிடம் புலம்புகிறான். விஷ்ணுபுரத்திற்குள் நுழைவது அங்கு நுழைவது வரை அவனுடைய கனவாக இருந்தது. தனக்கான வாழ்வு அங்கு காத்திருக்கிறது என்று கனவு கண்டான். ஆனால் ஊரில் நுழைந்தவுடன் அந்த ஊரின் பிரம்மாண்டத்தில் தன் அடையாளம் கடல்நீரில் கலந்த உப்பாகக் கரைந்து சுவடின்றி மறைந்துவிடுவோமோ என அஞ்சுகிறான். அனிருத்தனின் மரணத்திற்குப் பின்பு பத்மாட்சியைக் காணவரும் சங்கர்ஷணன் முதன் முறையாகத் தான் எத்தனை தனிமையானவன் என உணர்கிறான். தனது வித்யா கர்வம் தன்னைக் கற்கோட்டைக்குள் அடைத்து விட்டது என்கிறான். தன் தர்க்கத்தால் பெருமாளின் தர்க்கத்தை அளக்க முனைகிறேனோ என ஐயம் கொள்கிறான்.

ஒருவகையில் இந்நாவலில் வரும் அனேக பாத்திரங்கள் தங்கள் தர்க்கங்களினால் பிரபஞ்சத்தின் தர்க்கத்தை அளக்க முயன்று அடிபட்டு விழுகின்றன. தன்மீது போடப்படும் அனைத்துத் தர்க்கத் தூண்டில்களையும் பொருட்படுத்தாமல் காலம் ஒரு நதிபோல தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அகங்காரத்தோடு இருக்கும் போது விழும் அடி அதிகமாக வலிக்கும் என்கிறாள் பத்மாட்சி. உங்கள் மூட பக்தியைக் காட்டிலும் எனது ஞானம் மேல் என்கிறான் சங்கர்ஷணன். பரந்து அகன்ற காலநதியில் மனிதன் தன் சிறிய ஓடங்களைக் கொண்டு தன் இருப்பின் சுவடுகளை நிரந்தரமாக்க முயல்கிறான், அதன் மூலம் தன் வாழ்விற்கு ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாத அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ள முயல்கிறான், அம்முயற்சியில் திருப்தியும் அடைகிறான். தன் காவியத்தை சுய ஏமாற்று என்றும் போலி எழுச்சிகளும் பொய்மையும் நிறைந்தது என்றும் எண்ணி உழன்று அதிலிருந்து வெளிவந்து தர்க்க சம்பிரதாயத்தை நிர்மாணிக்கிறான்.

சாருகேசி அவள் கனவில் வாழ தொடங்குகிறாள். பிங்கலன் அவள் கனவுக்கு உயிரூட்ட வந்த ஓர் நிமித்தம் என்றே எண்ணுகிறாள். தன் மகன் உத்திரன் வெல்ல வேண்டிய சபைகளைப் பற்றியும் கற்க வேண்டிய நூல்களைப் பற்றியும் கனவு கண்டு கற்பனை உலகில் வசிக்கத் தொடங்குகிறாள். பிங்கலன் மீதான ஏமாற்றத்தையும் அதை ஒட்டி அவளடைந்த தனிமையையும் அவள் அப்படித்தான் தாண்டி வருகிறாள். சங்கர்ஷணனின் மீதான இனம்புரியாத ஏமாற்றத்தைத்  தனது கனவு ஆண் பிம்பத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் தாண்டி வர முனைகிறாள் லட்சுமி. அனிருத்தனின் வரவு அவளது தனிமையையும் வெறுமையையும் போக்கியது. அனிருத்தனின் மரணம் அளித்த வெறுமையின் உச்சத்தில் அந்தக் கனவு பிம்பத்தின் உயிர்வடிவமாக ஒரு கனம் உணர்ந்த பிங்கலனைக் கூடுகிறாள். பத்மாட்சியிடமிருந்து விலகும் சங்கர்ஷணனைப் பூரணமாக ஏற்கும் லட்சுமி, வாழ்நாளெல்லாம் அந்தக் குற்ற உணர்வோடு வாழ்ந்து கடைசியில் அவன் பொருட்டு சிதை ஏறுகிறாள். லட்சுமியைக் கூடியபின்னர் சோர்வும் விரக்தியும் நிறைந்த பிங்கலன் அஜிதரின் தூபியில் நாற்பது ஆண்டுகளாக விளக்குக்கு எண்ணெய் விடும் பிக்குவை சந்திக்கிறான். இந்த வாழ்வின் நோக்கம் என்ன என்று குழம்பும் போது வெளியில் உன் வாழ்க்கையின் நோக்கத்தை காட்டிலும் இது குறைந்தது அல்ல என்கிறார் பிக்கு. அந்தப் புள்ளியில் தனிமையின் கணம் அவனை உடைத்து வீசியது. அங்கிருந்து அவன் மகா பிங்கலனாகி மற்றுமொரு ஞானத்தொகையை உருவாக்கும் மற்றும் ஒரு குருவாக அறியபடுகிறான்.

தனிமனிதனின் தவிப்பும் தனிமையும் அவனை அலைக்கழிக்கின்றன. அதைத் தாண்டிவர முட்டிமோதி ஏதோ ஒரு பாதையை அவன் கண்டடைகிறான். அவனுக்கான பாதை, அனைவருக்குமான பாதையாகிறது, பிற பாதைகளை அது மறுதலிக்கிறது, புதிய பாதைகள் உருவாவதை அது எதிர்க்கிறது. நிறுவனமயமாகி மெல்ல அது சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும் இறுகிய அதிகாரக் கட்டமைப்பாகக் காலபோக்கில் மாறிவிடுகின்றது. விஷ்ணுபுரத்தில் இதையே நாம் ஒவ்வொரு ஞான மரபிலும் காண்கிறோம்.

அனைத்தையும் நம்பும் புதுப் பாலாக இருக்கும் திருவடியை மோகம் பீடிக்கிறது. தியானத்தால் கூடக் குவியாத மனதை மோகம் குவியச்செய்கிறது. மோகம் பித்தாகி, பித்தம் முற்றி அவனை ஆழ்வாராக்கியது. திருநெல்வேலிப் பக்கம் கோவிலில் குட்டிபட்டராகத் திரிந்துகொண்டிருந்த மந்தபுத்தி வைணவர் தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்த துக்கத்தில் சித்தம் கலங்கிப் பிதற்றுகிறார். அந்தப் பிதற்றல்கள் ஞான வாக்கியமாக மாறிவிடுகின்றன.ஊர் ஊராக அவரை ஆழ்வாராக்கித்  தூக்கிகொண்டு செல்கிறது ஒரு கும்பல். காமம் திருவடியை வாட்டுகிறது, அதை அவனால் தாண்டிச் செல்ல முடியவில்லை. தனிமையும் சலிப்பும் எரிச்சலும் மட்டுமே எஞ்சியது. ஒரே பிரபஞ்ச அனுபவத்தைத்தான் புலன்கள் வெவ்வேறாக அறிகின்றது என்று பிரசெனரின் வாக்கை பீதாம்பரம் மாமா அவனிடம் சொன்னார். பிரசெனர் உணராத ஒன்றை அவன் அனுபவிக்கத்தொடங்கினான். அவன் அனைத்தையும் நாதமாக உணரத்தொடங்குகிறான். பிரபஞ்ச இசையின் ஒருபகுதியை தன் யாழ் மீட்டுகிறது என உணர்கிறான். நாதப்பெருவெளியில் மிதக்கிறான். மானுட காமம் உன்னதமாகி உன்னதமாகி அதன் உச்சத்தில் அனைத்தையும் தன்னோடு இணைத்துக் காணும் பிரபஞ்ச காமமாக மாறிவிடுகிறது. பிரபஞ்சம் அவனுக்கு இசைக்கும் நடனவெளியாகிவிடுகிறது.

சோமன் தான் சார்ந்திருக்கும் அமைப்பின் குரூரத்தை உணரும் அந்த நொடியிலிருந்து சஞ்சலம் கொள்கிறான். பிங்கலனிடம் ஆறுதல் தேடிவருகிறான். பிங்கலனைப் போல் மரபுகளிலும் புலன் அடக்கத்திலும் அவனுக்கு இருந்த நம்பிக்கை சிதைந்தது. பிங்கலன் உதாசீனப்படுத்திய பின்னரும் அவனுடைய அக நமைச்சல் குறையவில்லை. தனிமையும் தவிப்பும் அவனை வாட்டியது. ஆனால் அவன் பிங்கலனின் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. திருவடியின் சீடனாகச் சென்று இணைகிறான்.

சாகசங்கள் மீதும் சவால்கள் மீதும் உள்ளுர நாட்டம்கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்து விஷ்ணுபுரத்தை வந்தடைகிறான் யோக விரதன். தன்வாழ்வைக் காவிய பாவனையில் வாழ்ந்து கொண்டிருந்த யோகவிரதன் பாத்திரம்,யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பாரதிபுரம் நாவலில் வரும் ராகவ பணிக்கரை நினைவுபடுத்தியது. சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேய கனவானுக்குரிய வாழ்க்கையைத் தன் பங்களாவை விட்டு வெளியே வராமல் வாழ்ந்துகொண்டிருப்பார் அந்தக் கிழவர். தான் மரணிக்க எண்ணும் இடத்தைத் தேடிகொண்டிருந்தார் யோகவிரதர். இறந்த காலக் கனவுகளில் வாழ்ந்து நிகழ்காலத்து யதார்த்தத்தில் கண்விழித்து, தன் அத்தனை ஆண்டுகாலத் தேடல்களும் வெறும் அபத்தம் என உணர்வது எத்தனை கொடுமை.

ஆரியதத்தரிடம் காவியம் பயிலும் பத்மன் தன் குருநாதரின் உடல்நலகுறைவுக்குப் பின் , தான் தட்டித்தூங்கவைத்துகொண்டிருந்த மிருகம் துயிலெழுவதை உணர்ந்தான். தன்னைக் கண்காணிக்கும் கண்கள் அப்போது இல்லாததால் காமம் கட்டற்றுப் பீறிடத் துவங்கியது. ஸ்ரீநாமர் அவனைப் பிங்கலரின் மார்கத்தில் கொண்டு இணைக்கிறார். காமத்தால் நிரம்பிய குளமென அவன் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. எதிர்ப்பற்று அனைத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள் என முன்வைக்கும் பிங்கல மார்க்கமே அவனுக்கு உரித்தானது. ஸ்ரீ நாமரின் விரிவான வேறு ஓர் நவீன வடிவம் தான் ஜெ எழுதிய இரவு நாவலில் வரும் முகர்ஜி என்று எனக்குத் தோன்றியது. உள்முகமாகப் பயணப்படும் இயல்புடைய பாவகனுக்கு உரித்தான யோக மார்க்கத்தை சுதபஸ் காட்டுகிறார். அறியமுடியாமையே உச்சகட்ட அறிதல் என்பதை அகந்தையோடு பாவகன் முன்வைப்பதாக பத்மன் எண்ணுகிறான். தியானத்தில் அவன் கண்டடையும் மந்திரம் ‘ உனது மகத்தான தனிமை’! இதையே பிங்கலன் ஸ்ரீபாதத்தில் கண்டடைகிறான்.

ஒவ்வொரு உயிரின் மீதும் கவிந்திருக்கும் மகத்தான தனிமை. தூரிகையில் உள்ள அஜிதனின் கண்களை ஒத்த கண்ணுடைய பிங்கலன் முன்வைக்கும் யோனியை மையமாகக் கொண்ட பிங்கல மார்க்கம் அஜிதரின் காலச்சக்கரத்தின் வேறுவடிவம் என்று அறியப்படுகிறது. தனிமையும் வெறுமையும் மனிதனை அலைக்கழிக்கின்றன. மனிதனை அழுத்தும் தனிமையை மனிதன் முதன்முதலாக எதிர்கொள்ளும்போது அதை எதிர்க்கிறான், ஏற்க மறுக்கிறான், அதைப் போக்க எதிலெதிலோ தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறான், தத்துவமும், தர்க்கமும், காவியமும், கவிதையும் எதுவும் அவனுக்கு அந்த அமைதியை அளிப்பதில்லை. ஏதோ ஓர் கணத்தில் அவனை அழுத்தும் அந்தத் தனிமை, அவனை இயக்கிய அந்தத்தனிமையை ‘மகத்தான தனிமை’ என உணர்கிறான். அவன் தனிமையைப் பூரணமாக ஏற்றுக் கொள்கிறான், அங்கு தனிமையின் துக்கமும் சோகமும் இல்லை. ஒருவகையில் விஷ்ணுபுரமே அழுத்தும் துக்கமும் துயரமும் அளித்த தனிமையிலிருந்து மகத்தான தனிமையைக் கண்டடைவதை நோக்கிய பயணமாகவே இன்றைய வாசிப்பில் எனக்குத் தோன்றுகிறது.

ஞானம் என்பது முடிவற்ற பாட பேதங்கள் மட்டும்தானா ? தர்க்கம்தான் ஞானமா? தர்க்கம் என்பது ஞானமென்றால் சதுரங்க விளையாட்டு மூலமே முக்தியைப் பெறமுடியும் அல்லவா? தர்க்கம் என்பது குழந்தை கையில் கிடைத்த ஆயுதம் தானே? தர்க்கம் என்பது அறிதல் அல்ல, அது அறிதலைத் தொகுத்து சொல்லும் வழிமுறையன்றி வேறு இல்லையோ? அப்படியென்றால் ஞானம் வெறும் பொய்யா? இல்லை, எதையும் அனுபவ வட்டத்தில் கொணர்ந்து சிந்திக்க வேண்டும், ஞான வழியில் நிம்மதி இல்லை ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு மீதியெல்லாம் சுய ஏமாற்று மட்டும் தானா? மூட பக்தியைக் காட்டிலும் ஞானம் மேல் அல்லவா? அறிதல் அல்லவா வாழ்க்கையின் நோக்கம்? எதை அறிதல்? அறிதலை அறிய முற்படுபவர் யாரென அறிதலா? எதையுமே பூரணமாக அறியமுடியாது என்பது தான் மானுடன் அறிந்த உச்சபட்ச அறிதலா? இருட்டறையில் சுவற்றில் முட்டி நிற்கத்தானா இத்தனை தத்துவமும் தர்க்கமும்? அறியமுடியாது என்று தெரிந்த பின்னும் ஏன் மனம் அதை அறிய முனையாமல் இருப்பதில்லை?

சிரவண மகாபிரபுவின் சீடனாக வேதம் கற்ற பிங்கலன் வாம மார்க்கியாகிறான். புதிய மரபைத் தோற்றுவிக்கிறான். அதே குருவிடம் சீடனாக இருந்த சோமன் திருவடியைத் தன் குருவாக ஏற்கிறான். சூரியதத்தரின் புதல்வன் அந்த மரபில் இருந்து வெளிவந்து பிங்கலனை குருவாக ஏற்கிறான். தன் குரு ஆரியதத்தரின் மரணத்திற்குப் பின்னர் தன் ஆழ்மன இச்சைகள் பத்மனை ஸ்ரீ நாமரிடம் இட்டு சென்று  பிங்கல மார்க்கத்தை ஏற்கிறான். பதினாறு வயதில் விஷ்ணுபுரத்து வைதிகர்களை வெல்லும் உத்திரன் துங்கபத்திரா தீரத்தில் சுதேவம் எனும் புதிய யோக மார்க்கத்தை உருவாக்குகிறான். கற்பனையும் காவியமும் தன் வாழ்க்கையாகக் கொண்ட சங்கர்ஷணன் அனிருத்தனின் மரணத்திற்குப் பின்னர் காவியங்களை ஏளனம் செய்யும் தார்கிக்க சம்பிரதாயமான சங்கர்ஷநீயத்தை உருவாக்குகிறான். அந்த சம்பிரதாயத்தில் பயின்ற பாவகன் சுதபசை தன் குருவாக ஏற்றுக்கொண்டு உத்திரரின் சுதேவ மார்கத்தை வந்தடைகிறான். அஜிதனை மரணப்படுக்கையில் சந்திக்கும் நரோபா டோர்ஜே திரேக்பா ஆக மாறி சக்கராயனத்தைத் தோற்றுவிக்கிறான். அக்னிதத்தனின் குல வாரிசான விஷ்ணுதத்தன் சுடுகாட்டு சித்தனாகிறான். சித்தனின் சீடன் காசியபன் சித்தனை குருவாக கொண்ட ஸ்ரீ பாத மார்க்கத்தை உருவாக்குகிறான்.
ஞானி ஒருவனே அவனுள் உள்ள ஞானத் தவிப்பு ஒவ்வொரு கதவையும் முடிவின்றித் தட்டிக்கொண்டே இருக்கின்றது.

விஷ்ணுபுரத்திற்குள் அங்கதத்திற்கும் பகடிக்கும் குறைவில்லை. மலம் கழிக்கும் போது தான் சிந்திப்பதன் மூலம் ஞானத்தைப் பழிவாங்கிய நிறைவு தமக்கு ஏற்படுவதாக முன்வைக்கிறார் பீதாம்பரம் மாமா. விஷ்ணுபுரத்து சித்தனும் ஞானத்தைப் புறக்கணிக்கிறான் பீதாம்பரமும் புறக்கணிக்கிறார். ஆனால் ஒருவர் பந்தயத்தில் ஓடிக்களைத்து இனி ஓடுவதற்கு இடமில்லை எனும் போது அவரது கண்டடைதலை முன்வைக்கிறார், பீதாம்பரத்தின் அந்த வரிகள் எளியமக்கள் அறிவியக்கம் மீது கொள்ளும் வெறுப்பு மற்றும் இகழ்ச்சியின் பதிவன்றி வேறேதும் இல்லை. பந்தயத்தில் பங்குபெறாமல் அஞ்சி ஒதுங்கி வெளியிலிருந்து ஒலிக்கும் சவுடால் குரல்களின் பிரதிநிதி பீதாம்பரம் மாமா.

காவிய உச்சத்தின் மறுபக்கமான மனிதர்களின் சிறுமையைத் தயக்கமின்றிப் பதிவு செய்தவன் சுமத்திரன் என பாவகன் அவனைப் புகழ்கிறான். விஷ்ணுபுரத்தை வாசித்து முடிக்கையில் உண்மையில் உளமார சிரித்து மகிழ்ந்து வாழ்வதைக் காட்டிலும் இந்த வாழ்க்கைக்கு என்னதான் பொருள் எனும் கேள்வி எழாமல் இருப்பதில்லை.
பிரம்மச்சர்யத்தைக் கட்டிக்காக்க சிரவண மகாபிரபு உண்ட காஞ்சிர விதைகள் சொர்க்கத்தில் ஓர் காஞ்சிர வனமாக மாறியது போன்ற நுட்பமான அங்கதம் கற்பனையின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

சூரியதத்தரின் அவையில் அவமானபடுத்தப்பட்டு மனம் வெதும்பி ஆறுதல் தேடி திருவிக்ரமரை சந்திக்கக் குடிபோதையில் வருகிறான் சங்கர்ஷணன். “நான் சாகப்போகிறேன்”

“சரி”

“ அதற்கு முன்னர் உங்களிடம் சில விஷயங்களை சொல்ல வேண்டும்”

“ நான் இரங்கற்பா எழுதுவதில்லை”

இந்த விவாதத்தை வாசித்தவுடன் பளிரென்று ஒரு சிறுநகை பூத்தது. விஷ்ணுபுரத்தில் வந்து செல்லும் எத்தனையோ பாத்திரங்களில் சடாரென்று சிலர் மனதிற்குள் புகுந்து விடுவர், அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த திரிசாகரம் திருவிக்ரமர். ஏனோ ஏழாம் உலகம் ராமப்பனை நினைவுபடுத்தினார் திருவிக்ரமர். கனவுகளோடு விஷ்ணுபுரத்திற்குள் உள்நுழைந்த எத்தனையோ ஆன்மாக்களில் அவரும் ஒருவர். கடைசியில் தான் எழுதிய காப்பியத்தை நெருப்பாக்கிக் குளிர்காய்ந்து சுவடின்றி மறைந்துபோனார்.

உடலை வளர்ப்பதன் மூலம் நிர்வாணத்தை அடையமுடியும் என கூறும் லாமா பிட்சுவின் தலை மீது தேங்காய் விழுந்து மரணம் ஏற்படுகிறது. தன் உபாசன மோகினியின் யோனி பிலத்துக்குள் புகுந்திட முடியும் என நம்பும் ஸ்ரீ நாமர் கிழட்டுப் புலியின் வயிற்றுப் பிலத்துக்குள் புகுந்து மறைகிறார். மிருக நயனியின் கிளையடியில் தியானம் செய்த பாவகனின் சடலத்தைக் காட்டுப்பூனை இழுத்து சென்றது. மகாகாலன் கல்லால் அடித்துக் கொல்லபடுகிறான். காலம்தான் எத்தனை நிர்தாட்சண்யமானது!

ஒருவகையில் விஷ்ணுபுரம் ஒரு மகத்தான அங்கத நாடகம் எனத்தோன்றுவதுண்டு , காலம் நாற்காலியில் சாய்ந்தபடி மனிதர்களின் ஞானத்தையும், தர்க்கத்தையும், அகங்காரத்தையும், அச்சத்தையும் கண்டு ரசித்துக் கைகொட்டி எள்ளி நகையாடும் மகத்தான அங்கத காவியம்தான்.

பத்மாட்சியைப் போல திட சித்தம் வாய்க்காதா? வீர நாராயணர் போல் தெளிவான நம்பிக்கைதான் வாய்க்காதா? பெருமூப்பனின் காலில் மண்டையை மோதி தங்களையே பலிகொடுக்கும் நிஷாதர்கள் போல அகங்காரம் நிறைந்த கனத்த தலையைக் கொண்டு காலமெனும் கரிய சுவற்றில் முட்டி மரிப்பது தான் நம் வாழ்வா? மிருக நயனியின் பச்சைப் பார்வை படாது வாழ்ந்து மறைந்த எளிய மக்கள் தான் எத்தனை பாக்கியசாலிகள்?

தூசித்தகட்டில் விடாது சக்கரம் வரையும் அந்தப் பூச்சியைப் போல், கிண்ணத்தின் வட்ட விளிம்பில் சோர்வின்றி ஓடிக் களைக்கும் அந்தப் பூச்சியை போல் நான் இயங்கிக்கொண்டே இருந்தாக வேண்டும். அப்படி என் தனி வாழ்வில் நான் தூசியில் வரையும் சக்கரம் தான் காந்தியும் ஆயுர்வேதமும். விஷ்ணுபுரத்து வெறுமையை, தனிமையை நான் தாண்டிச் சென்றது காந்தி எனும் மிதவையை இறுகப் பற்றியதால் மட்டுமே என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியபோது விஷ்ணுபுரத்தைப் புறவயமாக அணுகி எழுத வேண்டும் என்றே எண்ணினேன். வாசிப்பரங்கிற்குப் பின்பான மனநிலையில் அது சாத்தியமில்லை என்றாகிவிட்டது. மீண்டும் அகவயமான வாசிப்பனுபவமாகவே இது எழுந்து நிற்கிறது. இந்தக் கட்டுரையை எங்கு நிறுத்துவது என்பதே இப்போது எனது சிக்கல்.


எனது மரணம் மனிதர்கள் அறியாமலிருக்கட்டும்!
எனது பிணத்தைக் கழுகுகள் காணாமலிருக்கட்டும்!
தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்
இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும்!.

-ஓம் அவ்வாறே ஆகுக–


விஷ்ணுபுரம் இணையதளம்

முந்தைய கட்டுரைஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே
அடுத்த கட்டுரைசங்கசித்திரங்கள்