பருவமழைப் பயணம் 2012

2007 வாக்கில் நாங்கள் ஆரம்பித்தது ஜூலை மாதத்திய பருவமழைப்பயணம். அதற்கு முன் ஈரோட்டு பசுமைபாரத நண்பர்கள் தற்செயலாகச் செய்த ஒரு கேரள மலைப்பயணத்தில் அந்த இடத்தைக் கண்டடைந்திருந்தனர். பீர்மேட்டில் மிக மலிவான ஒரு தங்கும்விடுதி. பயணத்திட்டம் மிக எளியது. நண்பர்களின் கார்களில் அங்கே சென்று சுற்றுமுள்ள மலைப் பகுதிகளில் மழையில் நனைந்தபடி சுற்றி வருவது, அவ்வளவுதான்.

வழக்கம்போல இதுவும் இப்போது ஒரு ‘நாடறிந்த’ சடங்காக ஆகிவிட்டது. ஆகவே காதோடுகாதாக இதை இப்போது செய்கிறோம். அடுத்தமுறை முறையான அறிவிப்பு கொடுத்து புதிய நண்பர்களுடன் சென்றாலென்ன என்ற எண்ணம் உள்ளது. ஏனென்றால் வழக்கமாக வரும் நண்பர்கள் இப்போதெல்லாம் சலிப்புற்று ஏதேனும் காரணம் சொல்லி விலகிவிடுகிறார்கள். உலகியல் வாழ்க்கையில் இருந்து பிரிந்து ஒரு பயணத்துக்காகக் கிளம்புவதெல்லாம் அதற்கான அபாரமான வேகம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

வாகைமண்

வியாழக்கிழமை காலையில் மொத்தம் ஐந்துபேர்தான் எஞ்சினார்கள். ஒன்பதுபேருக்கான அறைவாடகை கொடுக்கவேண்டும். ஆகவே மதியம் குழுமத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டோம். சொந்தக்காருடன் வரக்கூடிய நான்குபேர் தேவை, பயணம் கிளம்ப நான்குமணி நேரமே உள்ளது என்றார் கிருஷ்ணன். ‘இவ்ளவு கடைசியா சொன்னா எப்டிசார் வருவாங்க?’ என்றார். ‘அறிவிப்பைப் போட்டுப்பாப்போம்…எனக்கென்னவோ வர ஆளிருக்கும்னுதான் தோணுது’ என்றேன்.

நான் நினைத்ததுபோல உடனே வருவதற்கு ஆள் திரண்டுவிட்டார்கள். பலருக்குத் தாமதமாகச் சொன்னதில் பெரிய ஏமாற்றம். திருச்சி விஜயகிருஷ்ணன் அவரது காரில் வருவதாகச் சொன்னார். கடலூர் சீனுவும் சென்னையில் இருந்து பிரபுவும் வந்தார்கள். மொத்தம் எட்டுபேர். சேலம் பிரசாத், ஈரோடு கிருஷ்ணன், பெங்களூர் தினேஷ் நல்லசிவம், தஞ்சை சுதாகர், நான் ஆகியோர் ஏற்கனவே உறுதியானவர்கள்.

நான் வியாழக்கிழமை மாலை கிளம்பி மதுரைசென்று அங்கிருந்து தேனி சென்று தேனி பேருந்துநிலையம் அருகே நள்ளிரவில் காத்திருந்தேன். சுதாகரும் தேனிக்கு வந்திருந்தார். திருச்சி விஜயகிருஷ்ணன் கடலூர் சீனுவுடனும் சென்னை பிரபுவுடனும் வந்தார். இரவு இரண்டுமணி ஆகிவிட்டது. சாலையோரம் நின்று அதி தீவிரமாக இலக்கியமும் தத்துவமும் பேசிக்கொண்டிருந்தோம். அருகே பெரிய குப்பைத்தொட்டிகள். ‘அந்தப்பக்கமா போயிடலாம் சார், நாறுது’ என்றார் விஜயகிருஷ்ணன். விஷ்ணுபுரம் சுடுகாட்டுச்சித்தனிடம் ஞானம்பெறும் தகுதியை எப்படி வளர்த்துக்கொள்வது என்றேன்.

மூன்றுமணிக்கு கிருஷ்ணனும் தினேஷ் நல்லசிவமும் சேலம் பிரசாத்தின் காரில் வந்துசேர்ந்தார்கள். அப்போதுதான் திறந்த கடையில் ஒரு டீ குடித்தபின் கிளம்பினோம். நான் காரில் படுத்த உடனே நன்றாக தூங்கிவிட்டேன். மற்ற நண்பர்கள் தூங்கவில்லை என்றார்கள். குமுளி வண்டிப்பெரியார் வழியாகப் பீர்மேடு. வழியில் நல்ல மழை. ஆகவே நன்றாக விடிந்தபின் காலை ஆறரை மணிக்குத்தான் போய்ச்சேர முடிந்தது. வழியில் ஒரு மிளாக்கூட்டத்தைப் பார்த்ததாகச் சொன்னார்கள். அரைத்தூக்கத்தில் ஏதோ கூச்சல்களைக் கேட்டேன். அதனால் எழுந்ததாக இருக்கலாம்.

மொத்த பீர்மேடுமே மழைமேகத்தால் போர்த்தப்பட்டிருந்தது. மகாராஜா காலத்தைய விடுதி. ஓடு வேய்ந்த உயரமான கூரை. பெரிய சன்னல்கள். நிறைய இடம் ஆனால் ஆறுபேர்தான் நன்றாகத் தங்கமுடியும். எட்டுபேர் சமரசம்செய்து தங்கலாம். ஆனால் அந்தச்சூழல் வேறு ஒரு காலத்தை வேறு ஒரு சூழலை அளிப்பது. ஒருமணிநேரம் ஓய்வெடுத்தபின் பல்தேய்த்துக் குளித்துவிட்டுக் கிளம்பினோம்.

வாகைமண்

பீர்மேடு பொதுவாக ஒன்பது மணிக்குத்தான் கண்விழிக்கும். பீர்மேடு என்பது ஒரே ஒரு சாலைச்சந்திப்பு மட்டும்தான். கடைகள் எதுவுமே திறக்கவில்லை. தேடிப்போனபோது ஒரு தமிழரின் டீக்கடை இருந்தது. சென்றமுறை வந்தபோது சூடான குழாய்ப்புட்டு சாப்பிட்ட நினைவு. இப்போது ஆப்பமும் பரோட்டாவும் மட்டும்தான். தொட்டுக்கொள்ள கடலைக்கறியும் மாட்டுக்கறியும். புட்டு இப்போது எங்குமே கிடைப்பதில்லை, உள்ளூர்க்காரர்களின் தேர்வு பரோட்டா மட்டுமே என்றார்கள். ஏமாற்றமாக இருந்தது.

பருவமழைப்பயணங்களில் இதுவரை ஒரே ஒருமுறைதான் மழையில்லாமலிருந்திருக்கிறது. இம்முறை மழை இருந்ததா என்றால் இருந்தது, இல்லையா என்றால் இல்லை. அதாவது பெரும் மழைக்கு முந்தைய கணம்போல இருண்டு குளிர்ந்து இருந்தன மூன்று நாட்களும். அவ்வப்போது நல்ல தூறல். இரவில் நல்ல மழை.

முதலில் வாகைமண் சென்றோம். அங்கே ராணுவத்துக்குச் சொந்தமான மாபெரும் புல்வெளி உள்ளது. கேரளத்தின் உச்சிநுனி அதுவே. மிக அதிகமாக மழைபெய்யும் பகுதி. கேரளத்தையும் தமிழகத்தையும் வளமாக்கும் பல ஆறுகளின் நீர்பிடிப்புப்பகுதி அது.

உண்மையில் அது பிரம்மாண்டமான ஒரு பாறைமுகட்டுப்பரப்பு. பாறைகளுக்குமேல் இரண்டடி கனத்தில் மண் அவற்றை போர்த்தியிருந்தது. அதில்தான் புல் செறிந்து அந்தப் புல்அலைவிரிவு உருவாகியிருந்தது. பாறைஉச்சிகளில் மரங்கள் வளருமளவுக்கு மண் இல்லை. பாறைகளின் மடிப்புச்சந்திகளில் தேங்கியமண்ணில் அடர்த்தியான புதர்மரங்கள் செறிந்திருந்தன. புல்வெளியின் பச்சைக்கு நடுவே மரக்கூட்டங்கள் நீலம்கலந்த பச்சையுடன். புல்வெளியில் இருந்து பச்சை நிறம் கரைந்து ஊறி தேங்கியதுபோல.

பாஞ்சாலிமெட்டு

புல்வெளிக்குமேல் அடர்த்தியான மழைமேகம். இரண்டடிக்கு அப்பால் நிற்பவர்களைப்பார்க்க முடியாது. சட்டென்று மழைத்துளிகளை அள்ளி வீசியபடி அடிக்கும் காற்றில் பிரம்மாண்டமான பட்டுத்திரைச்சீலை போல மேகம் விலக பச்சைப்பேரொளியுடன் புல்வெளி விரிந்து வந்தது. புல்வெளிக்குமேல் சாய்வாக அடித்த மழை. இதமான ஒளியில் ஒவ்வொரு புல்நுனியையும் பார்க்கமுடியும் என்று தோன்றியது. புல்சரிவில் ஓடினோம். முன்பு ஒரு முறை நான் தடுக்கிவிழுந்து நெடுந்தூரம் உருண்டுசென்றிருக்கிறேன். மூச்சிரைக்க ஓடி நின்றபோதுதான் புல்வெளிக்கும் எங்களுக்குமான இடைவெளி மறைந்தது. நாங்கள் அதன் பகுதிகளானோம்.

காலை பதினொரு மணிக்கு புல்வெளிக்கு வந்தது முதல் இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டே இருந்தோம். மேகங்களினூடாக மிதந்தோம். புல்லில் கால்அளைந்தோம். கிருஷ்ணன் சொன்னார் ‘ஒவ்வொருமுறை இங்க வாரப்பவும் அந்தக் குறளைச் சொல்வீங்க சார். இப்பவும் சொல்லிடுங்க’ .

‘விசும்பின் துளிவீழின் அல்லால் பசும்புல் தலைகாட்டலரிது’ என்ற குறள் என்னைப்பொறுத்தவரை ஒரு சாதாரணமான மழைச்சிறப்பு அல்ல. விசும்பு என்றால் வான் மட்டும் அல்ல. அது வெளிக்கு Space க்குரிய தமிழ்ச்சொல். அலகிலா விசும்பைப் புல்லுடன் இணைத்திருக்கும் தரிசனம் எப்போதுமே என்னைப் பரவசமடையச்செய்கிறது. பசும்புல் என்பது விசும்புக்கு மண் காட்டும் எதிர்வினை.

மண்ணில் விசும்பை முதலில் அறிவது பசும்புல்தான். ஏப்ரல் மேமாதங்களில் இந்தப்புல்வெளி காய்ந்து மஞ்சளாகக்கிடக்கும். முதல்மழை பெய்த மறுநாளே பசுமைபூத்துவிடும். பிரியத்துக்குரியவரின் பெயரைக்கேட்டே மலரும் முகம்போல.

பாஞ்சாலிமெட்டு, தினேஷ் நல்லசிவம்

மாலை மூன்றரை மணிவரை மழை வருட, மேகம் போர்த்த மாறி மாறி வானத்தால் குலாவப்பட்டுக்கொண்டிருந்த புல்வெளியில் திரிந்துகொண்டிருந்தோம். இந்தவகையான பயணங்களில் பேசப்படும் எந்தப்பேச்சுக்கும் பின்னால் இயற்கைதான் கருப்பொருளாக இருந்துகொண்டிருக்கிறது. இயற்கை அளிக்கும் உள்ளார்ந்த பரவசமே சிந்தனைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. பின்னர் யோசிக்கையில் அப்போது சொல்லப்படும் முடிவுகளையும் அதுவே தீர்மானிக்கிறது என்று தோன்றுகிறது.

திரும்பும்வழியில் ஆறிப்போன சாப்பாட்டைக் குட்டிக்கானம் சந்திப்பில் ஒரு கடையில் சாப்பிட்டோம். அங்கிருந்து பீர்மேட்டில் விடுதிக்கு வந்து ஒருமணிநேரம் தூக்கம். ஐந்துமணிக்குக் கிளம்பி அருகே உள்ள பருந்துப்பாறை என்ற இடத்துக்குச் சென்றோம்.

பருந்துப்பாறையும் மலை உச்சிதான். சுற்றிலும் பச்சை அடர்ந்த, மலையின் மென் சிரிப்பு போல வெள்ளை அருவிகள் தெரிந்த மலைச்சிகரங்கள். ஆனால் கனத்த மேகக்கூட்டங்களால் மூடப்பட்டிருந்தது அப்பகுதி. ஒருகட்டத்தில் எங்கள் வண்டி மேகங்களைப் பஞ்சுப்படலம்போலப் பிய்த்தபடி செல்வதுபோலிருந்தது.

பருந்துப்பாறை, சுதாகர்

மலைவிளிம்பில் சென்று நின்றிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தை காற்று பிய்த்து விலக்கிய இடைவெளியில் மலைச்சிகரங்கள் தெரிந்தன். பார்த்துக்கொண்டிருக்கையிலேயே மேகவாயில் மூடிக்கொண்டது. அத்தனை அழுத்தமாக மேகம் மூடியிருக்கையில் மிக எளிதாக இருட்டு வந்துவிடும் என்றுதான் நினைப்போம். ஆனால் அங்கே எப்போதும் இருக்கும் அரையிருட்டு ஏழரை மணிவரைக்கும்கூட நீடித்தது. மேற்கில் இருந்து ஒளியைப் பெற்ற மேகப்படலம் நெடுநேரம் அதைத் தக்கவைத்திருந்தது. விளக்கின்மீது போர்த்திய பட்டுத்துணிபோல.

மேகத்தின் நிறத்தை எப்படி வகுத்துக்கொள்வது என்று பேச ஆரம்பித்து இம்ப்ரஷனிஸ ஓவியங்கள், காவியஇலக்கணம் ஒன்றுடன் ஒன்று தொட்டுத் தொட்டுச் சென்றோம். நித்யா குருகுலத்தில் ஓவியர்கள் வரைவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு இயற்கைக்காட்சியைப் பார்த்த பின்னர்தான் அதன் சரியான நிறக்கலவையை உருவாக்குவார்கள். அதிலும் சம்பந்தமில்லாத நிறங்களை அவர்கள் கலந்து கலந்து பலமணிநேரம் எடுத்து சரியான வண்ணத்தை உருவாக்குவார்கள். மேகம் சாம்பல் நிறம் என்போம். ஆனால் அங்கே தெரிந்த மேகங்களை வரைய கொஞ்சம் செந்நிறமும் கலந்தாகவேண்டும். இல்லையேல் உள்ளாந்த ஊதாநிறம் உருவாகாது.

பாஞ்சாலிமெட்டு, சேலம் பிரசாத்

அதுதான் இலக்கியத்திலும். ஒரு shade ஐ சொல்வதே இலக்கியத்தின் முக்கியமான சவால். வண்ணமானாலும் உணர்ச்சியானாலும். இந்த நிறம் என்று வார்த்தையால் சொல்ல முயலும்போது அதற்காகக் கற்பனையால் மொத்த அனுபவ மண்டலத்தையும் இழுத்துக்கொண்டு வரவேண்டியிருக்கிறது. இலக்கியம் எப்போதும் உவமை வழியாகவே அதை நிகழ்த்துகிறது. அந்த மேகத்தை கத்தரிப்பூவின் நிறம் சாம்பல்நிற பட்டுத்துணியில் படிந்ததுபோல என்று சொல்லலாம்.

நன்றாக இருட்டி மேகங்களால் சூழ்ந்த ஒரு மலைமுகட்டில் நின்றிருந்தோம். பிரம்மாண்டமான கிண்ணம் ஒன்றுக்குள் நிற்பது போலிருந்தது. ‘இவ்வளவுதான் பூமி. நாம் இதற்குள்தான் நிரந்தரமாக வாழ்ந்தாகவேண்டும் என்றால் என்ன செய்வோம்?’ என்று எண்ணிக்கொண்டேன். ‘அங்கேயே வாழ்க்கையின் எல்லா அழகுகளையும் எல்லா அறைகூவல்களையும் உருவாக்கிக்கொள்வோம்’ என்று தோன்றியது. ஒரு மணல்குழிக்குள் உலகை உருவாக்கிக்கொண்ட நிக்கி ஜூம்பி [மணல்மேடுகளில் ஒரு பெண். கோபோ ஆப்] நினைவுக்கு வந்தார்.

இரவு எட்டுமணிக்குத் திரும்பிவந்தோம். நல்ல களைப்பு இருந்தபோதிலும்கூட இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். ஊட்டிபோல இல்லாமல் மிதமான குளிர். ஒரு போர்வை இருந்தாலே போதும். காலை ஆறுமணிக்கு கிருஷ்ணன் கூப்பிட்டபோதுதான் விழித்தேன்.

காலையில் பாஞ்சாலிமேடு என்ற மலையுச்சிக்குச் சென்றோம். பலமுறை பீர்மேடு வந்திருந்தாலும் அந்த மலையுச்சியைக் கேள்விப்பட்டதில்லை. கீழே சாலையில் இருந்து மலைக்குமேல் செல்ல ஒற்றையடிப்பாதைபோல வழி. மேலே புராதனமான பழங்குடிகளின் நடுகற்கள் உள்ளன. எந்தக்காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று தெரியவில்லை. பெருங்கற்கால நாகரீகத்தின் எச்சங்கள் என்கிறார்கள்.

பாஞ்சாலி மெட்டு

ஒரு மலையுச்சியில் பழங்காலத்தைய காளிகோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. அருகே அதை சமீபமாக எடுத்துக்கட்டியிருக்கிறார்கள். அங்கே சாஸ்தா நாகபூதம் போன்ற தெய்வங்களுக்கும் சிறிய பிரதிஷ்டைகள் உள்ளன. சாஸ்தா சிலை மழையில் மொண்ணையாக ஆகியிருந்தாலும் நல்ல நுட்பமான செவ்வியல்பாணி செதுக்குவேலைகொண்டது. கண்டிப்பாக பழங்குடிகளின்சிலை அல்ல.

அந்த மலையின் மறுநுனியில் வரிசையாக கான்கிரீட் சிலுவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி முழுக்கவே குடியேற்ற கிறித்துவர்கள் நிறைந்தது. சிலுவையை வணங்க ஏராளமானவர்கள் வருவதுண்டாம்.நாங்கள் செல்லும்போதுகூட சில குடும்பங்கள் இருந்தன.

பாஞ்சாலிமேடு

மலையுச்சி ஒரு பிரம்மாண்டமான மதில் போல நீண்டு வளைந்து சென்றது. அதன் மறுநுனியில் கீழே இறங்கிச்சென்றோம். அங்கே ஒரு தடுப்பணை. பழங்காலத்தில் குடிநீருக்காக உருவாக்கபட்ட பெரிய உறைகிணறு கைவிடப்பட்டுக் கிடந்தது.

அன்று சிறிய தூறல் விழுந்ததைத் தவிர மழை இல்லை. காற்று குளிராக வேகமாக அடித்தது. கண்ணுக்குத்தெரியாத சின்னக்குழந்தைகளின் கைகள் சிரித்துக் குதூகலித்தபடி உடைகளை பிடித்து இழுப்பது போல, முதுகில் குத்தித் தள்ளுவதுபோல. வானம் ஓரளவு பிரகாசமாக விதவிதமான மேகக்கோபுரங்களுடன் விரிந்து கிடந்தது. மலையுச்சிகளுக்கே உரிய தனிமையும் மௌனமும்.

பாஞ்சாலிமேடு

மதியம் மீண்டும் பீர்மேட்டுக்கு வந்தோம். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு அருகே உள்ள ஏ.வி.டீ எஸ்டேட்டுக்குள் சென்றோம். அங்கே அவர்கள் ஒரு தடுப்பணை சொந்தமாகக் கட்டிவைத்திருந்தார்கள். சாலையில் இருந்து அவ்வளவுதூரம் நடந்தே சென்றோம். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நடுவே அமைதியாக ஒரு பெரிய கண்ணாடிச்சில்லுபோலக் கிடந்தது அணை.

திரும்பி வரும் வழியில் மீண்டும் பருந்துப்பாறை. இம்முறை அங்கே எவருமே இல்லை. நீலப்பச்சைநிற பாசிபடிந்த மணற்பாறை உச்சியில் அமர்ந்துகொண்டு மெல்ல அந்தி அணைவதைப் பார்த்தோம். எப்போதும் பரந்த பாறை குறிஞ்சித்திணைப் பாடல்கள், காளிதாசனின் மேக சந்தேசம், வர்ட்ஸ்வர்த் என கலவையாக பல படிமங்களை நினைவில் கலங்கி மறியச்செய்யும்.

நித்ய சைதன்ய யதியும் நடராஜகுருவும் இமயமலைக்குச் சென்றபோது நடராஜகுரு சொன்ன வரி ஒன்று அடிக்கடி என் நினைவில் மீளும். ‘இந்த இமயமலைக்காட்சியைக் காளிதாசன் நமக்கு உருவாக்கி அளித்திருக்கிறான்’ . நாம் உணரும் இயற்கை என்பது அதுவே அல்ல. நம்முடைய கற்பனை மரபு கவிதைகளால், ஓவியங்களால் நமக்கு உருவாக்கியளித்தது. இன்று நவீன புகைப்படக்கலை வழியாகவே நாம் இயற்கையைப் பார்க்கிறோம்.

ராமக்கல்மெட்டு-குறவன் குறத்தி சிலை

பருந்துப் பாறையில் இருந்து இருட்டில் ஊடுருவித் திரும்பிவந்தோம். இருட்டில் ஒவ்வொன்றும் வேறுமாதிரி இருக்க வழிதவறிவிட்டோமா என்ற பீதி இருந்துகொண்டே இருந்தது. வண்டிகளின் செவ்வொளி பனியில் விரிந்து பறக்கும்தட்டுகள் மண்ணில் இறங்குவதுபோல பிரமையளித்தது.

பீர்மேட்டில் சாலைமேலேயே அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன. கடைகளில் ஒன்றுதான் திறந்திருந்தது. பரோட்டாவேதான். நான் இரவுணவு உண்பதில்லை என்பதனால் பிரச்சினை இல்லை. இரவில் பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். வாழ்க்கையை ருசியாலானதாக ஆக்குவதில் ஆரம்பித்து அதன் ஆன்மீகம் வரை நீண்டது பேச்சு.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பிவிட்டோம். குமுளி வந்து கம்பம்மெட்டு ஏறி ராமக்கல்மேடு என்ற இடத்தை அடைந்தோம். இரு மலைச்சிகரங்கள் எதிரெதிரே இருக்கும் இந்த முனைக்குக் கீழே ஆழத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விரிந்து கிடக்கிறது. மலைக்காற்று பேரருவி போலப் பள்ளத்தாக்கை நோக்கிக் கொட்டிக்கொண்டிருந்தது.

ஒருமலை கேரள சுற்றுலாத்துறையால் பேணப்படுகிறது. மலைமேல் சிற்பி ஜினன் செய்த பிரம்மாண்டமான கான்கிரீட் சிலை ஒன்று இருக்கிறது. நவீனபாணி சிலை. ஆனால் யதார்த்தச்சாயல் கொண்டது. இந்த குறவன் குறத்தி சிலைதான் கேரளத்திலேயே உயரமானதாம். குறத்தி தோளில் தூளியில் குழந்தையுடன் அமர்ந்து குறவனிடம் ஏதோ சொல்கிறாள். மடியில் சேவலுடன் அமர்ந்து குறவன் அதைப் புன்னகையுடன் கேட்கிறான். அவர்கள் மடியைப்பிடித்தபடி ஒரு குழந்தை நிற்கிறது.

பிரம்மாண்டமான சிலைகளுக்குரிய மொண்ணைத்தனம் இல்லாமல் உயிர்த்துடிப்புடன் அமைந்த சிலை இது. பார்க்கப்பார்க்க அந்த குடும்பத்தின் எளிய இனிய தருணம் ஒன்று நம் மனதிலும் நிறைகிறது. குறிஞ்சித்திணையின் தலைவனும் தலைவியும் என்ற கருவில் அதை உருவாக்கிய சிற்பி ஜினன் எங்களூர்க்காரர். பாலராமபுரம் அவரது சொந்த ஊர்.

எதிரே ஒரு பெரிய மலையுச்சி. அது ஒற்றைப்பாறையாலானது. அதனடியில் ஒரு வளைந்த வாசல்போல மலைச்சரிவு. அப்பால் அடுக்கடுக்காக மலையுச்சிகள். மலைகள் ஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நிறைந்திருக்க திருநடை திறந்தது போன்ற காட்சி. அங்கேயே இரண்டுமணிநேரம் வரை அமர்ந்திருந்தோம்.

மதியம் அங்கிருந்து கிளம்பினோம். இரு குழுக்களாக. ஒரு குழு அப்படியே மூணாறு சென்று அவ்வழியாக உடுமலைப்பேட்டையில் இறங்கி சேலம்செல்வதாகக் கிளம்பினார்கள். நானும் சென்னை பிரகாஷும் விஜயகிருஷ்ணன் காரில் கம்பம் மெட்டு வழியாகக் கம்பம் இறங்கினோம். மாலை ஆறுமணிக்கு மதுரையில் என்னை இறக்கிவிட்டார்கள். இரவு பன்னிரண்டுமணிக்கு நாகர்கோயில் வந்துவிட்டேன்.

கிருஷ்ணன் தலையில் கையுடன், கடலூர் சீனு கண்ணாடியுடன், சேலம் பிரசாத் கறுப்பு சிவப்பு, விஜயகிருஷ்ணன்

விடுதியில் இரவு பேசும்போது ஒருவிஷயம் சொன்னேன். கோயில்களின் சடங்குகளைப் பார்க்கையில் ஆச்சரியமூட்டும் ஒன்று உண்டு. ஒவ்வொரு பருவமாறுதல்களுக்கும் கோயில்களில் அதற்கான சடங்குகள் உண்டு. அந்தந்தப் பருவத்திற்குரிய பூக்களும் கனிகளும் படைக்கப்படும். அதற்கான வாத்தியங்கள் இசைக்கப்படும். அதற்காகப் பஞ்சாங்கம் பார்ப்பார்கள். ஒவ்வொரு பருவமாறுதல்களும் துல்லியமாகக் கணித்துவைத்திருக்கப்படும். அது பண்டைய வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.

என்னுடைய அப்பாவை நினைவுகூரும்போது அவரது வாழ்க்கைமுறையும் எந்த அளவுக்கு மண்ணின் பருவங்களுடன் பிணைந்திருந்தது என்பதை உணர்கிறேன். விவசாயம் செய்தால் அப்படிப் பிணைந்திருந்தாகவேண்டும். எப்போது மழை ஆரம்பிக்கும் எவ்வளவு நீடிக்கும் என்றறியாமல் வேளாண்மை செய்யமுடியாது. அவ்வாழ்க்கையில் மழைவெயில்காற்று எல்லாமே பிரக்ஞையின் ஒரு பகுதியாக ஆகியிருக்கும்.

ஆனால் நவீன வாழ்க்கையில் நாம் பருவங்களை கவனிப்பதே இல்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையின் சுழற்சியில் அவை எப்படி எப்படித் தடைகளாக ஆகின்றன என்ற அளவில் மட்டுமே அவற்றை நாம் உணர்கிறோம். ஒருமுறை ஓர் உரையாடலில் கூடியிருந்த எந்த இலக்கியவாதிக்கும் புங்கமரம் கோடைகாலத்தில்தான் தளிர்விடும் என்ற தகவல் தெரியவில்லை என்பதை அறிந்து நான் ஆச்சரியம் கொண்டிருக்கிறேன்.

தமிழின் நவீன இலக்கியங்களில் நிலமும் பருவங்களும் மிகமிகக் குறைவாகவே வர்ணிக்கப்பட்டுள்ளன. பதேர்பாஞ்சாலி போன்ற ஒரு நாவலுடன் நம்முடைய இலக்கியங்களை ஒப்பிட்டால் அது தெரியும். பெரும்பாலும் இயற்கையிலிருந்து விலகி ‘தெருக்களில்’ வாழும் மனிதர்களாக ஆகிவிட்டிருக்கிறோம் என்பதே காரணம். மழை என்பது நமக்கு தெருக்களில் சாக்கடையை ஓடவிடும் ஒரு நிகழ்வு மட்டுமே.

ஆகவே நாம் இயற்கையைக் காணக் கிளம்பிச்செல்லவேண்டியிருக்கிறது. இந்த நவீனகாலகட்டத்தில் நாம் செய்யவேண்டிய புனிதப் பயணம் இதுதான்.


புகைப்படங்கள்

*

பழைய கட்டுரைகள் வாசிக்க


கவி சூழுலா


பருவமழைப்பயணம் 2010


பருவமழைப்பயணம்


அவலாஞ்சி பங்கித்தபால்

ஒரு மலைக்கிராமம்

பருவமழைப்பயணம் மழையில்லாமல்

மூன்று சிறுத்தைகலும் ஒரு புலியும்

அவலாஞ்சி

பருவமழைப்பயணம் 2008


மேகமலை


மேகமலைக்கு மீண்டும்

முந்தைய கட்டுரை”வாங்க! வாங்க! வாங்க…”
அடுத்த கட்டுரைஃபெட்னா-கடிதம்