ராஜமார்த்தாண்டன் கடிதங்கள்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணமான செய்தி என்னை மிகவும் துயரத்துள் வீழ்த்தியது. நம்பவே மனசு மறுக்கிறது.
கவிஞர் ராஜமார்த்தாண்டனை  ஆரம்பத்தில் பெயரளவில் அறிந்திருந்தாலும் அவரது கவிதைகளை படித்துப் பார் என ஒரு ஊக்கிவிப்பைத் தந்தவர் வெங்கட் சாமிநாதன். இதன் பின் அவரது கவிதைகளை தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.  ஈழத்து கவிதைகள் பால் வெகு அக்கறை கொண்டிருந்தார். இவர் போண்றவர்களின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு.


கடந்த ஜனவரியில் வெளியான எனது இருள்-யாழி கவிதைத் தொகுப்பில் பின் இணைப்பாக எனது கவிதைகள் தொடர்பான நீண்ட மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். வருகிற ஜனவரியில் இவரை நேரில் சந்திப்பேன் என்கிற பேராவலில் இருந்தேன்
இவ்வளவு எளிதில் காலன் அவரை கவர்வான் என எதிர் பார்க்கவில்லை.


அன்னாருக்கு தலை சாய்த்து என் அஞ்சலி.
திருமாவளவன்

அன்புள்ள ஜெ
ராஜமார்த்தாண்டன் மரணச்செய்தி அறிந்து மனம் வருந்தினேன். எனக்கு அவரை தெரியாது என்றாலும் அவரைப்பற்றிய செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறேன். கவிதைகளை மிகவும் கவனமாக தொடர்ந்து வாசித்து வந்தார் என்று சொன்னார்கள். நான் என்னுடைய கவிதை தொகுதியினை அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் எழுதிய புதுக்கவிதை வரலாறு என்ற நூலை படித்திருக்கிறேன். தமிழில் நல்ல கவிதைகள்  உருவாகிவந்த வரலாற்றினை அதில் இருந்து தெரிந்து கொண்டேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி

சுகதேவன்

அன்புள்ள ஜெயமோகன்,

ராஜமார்த்தாண்டன் மறைவு குறித்து உங்கள் தளத்தின் மூலமே அறிந்தேன். 61 வயதில் விபத்தில் சிக்கி இறந்தார் என்ற செய்தி துக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய ஆசிரியப் பொறுப்பில் முன்னர் வெளிவந்த கொல்லிப்பாவை என்ற சிற்றிதழின் தொகுப்பு நூலைத்தான் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களின் முதல் கவிதை ‘கொல்லிப்பாவை’யில்தான் வந்ததாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பரவலாக அறியப்படாத, இலக்கியத்துக்கு தன்னுடைய தீவிர பங்களிப்பை ஆரவாரமில்லாமல் செய்து கொண்டு வருபவர்களில் ராஜமார்த்தாண்டனும் ஒருவர் என அறிகிறேன். அவருக்கு என் அஞ்சலி.


சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com

 


அன்புள்ள ஜெ,

ராஜமார்த்தாண்டன் மரணச்சேதியை அறிந்து ஆழ்ந்த வருத்தம் வந்தது. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்ததே உங்களுடைய இணையதளம் வழியாகத்தான். அவரது அறுபதாம் விழாவைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். அதன்பின்னர் அவருக்கு உயிரெழுத்து என்னும் இதழ் வெளியிட்ட மலரையும் பார்த்தேன். அவருடைய  புதுக்கவிதை வரலாறு என்ற நூலை வாங்கி கொஞ்சம் வாசித்தேன். கறாரான மதிப்புகள் கொண்ட நல்ல விமரிசகரும்கூட என்ற எண்ணம் உருவாகியது. அவரது அவமரணம் ஒரு துன்பியல் சம்பவம்தான். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்.ரமேஷ்
சென்னை

அன்புள்ள ஜெமோ

ராஜமார்த்தாண்டன் மரணித்த செய்தியை உங்கள் இணையதளத்திலே வாசித்ததாக ஒரு நண்பர் ·போன்போட்டு சொன்னார். உடனே நானும் வாசித்தேன். ஆனால் அவரது நண்பர்கள் சிலரிடம் பேசியபோது அவர்களுக்குச் செய்தி தெரிந்திருக்கவில்லை. நான் சொன்னேன். அண்ணாச்சியை எனக்கு அதிகமாக தெரியாது. நாகராஜ் மேன்ஷனில் அவருடைய ரூமுக்கு நானும் நண்பர்களும் நாலைந்துமுறை சென்று குடித்திருக்கிறோம் அண்ணாச்சியைப்போன்ற தெய்வீகப்பிறவி எவருமே இந்த உலகில் அதிகளவில் இருக்க முடியாது. எந்தவகையான கோபதாபங்களும் இல்லாத அருமையான மனிதர். மனிதர்கள்மீது அவருக்கு உள்ள உண்மையான அன்பை அவரது கண்களிலே காணலாம்

சண்முகம்

முந்தைய கட்டுரைஒருங்கிணைதலின் வழி
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சி