அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று உங்கள் நண்பர் ஷாஜி விஜய் டிவியின் நீயா நானாவில் பேசினார். தன் தனி வாழ்வின் சில கடுமையான தருணங்களை எப்படி நெஞ்சுரத்தோடு அணுகுகிறார் என்று பேசினார். ஷாஜி நன்றாகப் பேசினார். என் ஆசிரியர் காந்தியைப் பற்றி சொல்லும்போது சொல்லுவார் பிறரை வீழ்த்துவது வெற்றியல்ல தன்னை வெல்வதே வெற்றி என்று. அந்த ஒரு வீரராகத்தான் நான் ஷாஜியைப் பார்த்தேன். வாழ்வின் கடினநிகழ்வுகளை ஒரு புது வெள்ள உற்சாகத்தோடு என் வழியை நானே தீர்மானிப்பேன் என்ற தெளிவோடு அவர் அணுகியது பாராட்டுக்குரியது.
உடனே ஏனோ எனக்கு தங்களுடைய ஒரு கட்டுரைதான் நினைவுக்கு வந்தது. அந்த கன்யாகுமரி கோயிலுக்கு வெளியில் மதில் சுவரில் கடலை நோக்கி உங்கள் பெண் குழந்தை என்ன ஆறு ஏழு வயதில் அந்த பட்டுப் பாவாடை கடல்காற்றில் சிறகடிக்க தொலைவில் இருந்து நோக்கும் போது அடையும் பேரின்பம். நான் உங்களைப் பெரும் இலக்கிய அறிவிற்காக வாசிக்கவில்லை. இந்த உன்னதமான மனித உணர்வுகளை ஈரம் கசியும் தருணங்களை எப்படியோ என் மனதிற்கு உகந்தவாறு உங்களை எழுதமுடிகிறது. நம் குழந்தையின் அதுவும் ஒரு தகப்பனாக நம் பெண் குழந்தையைப் பார்க்கும் பார்வை அடையும் மனநெகிழ்வு யாராலும் அதை வார்த்தைப் போர்வை போர்த்தி ஒரு உருவகம் கொடுக்கமுடியாது. ஏதோ ஒரு சில வரிகள் வாசிக்கும் போது அந்த உணர்வு நெஞ்சில் வந்து நெருடுகிறது.
காற்றில் ஆடும் பாவாடை ஒரு ஆணின் பார்வையில் பல தருணங்களில் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுதான். பெண் தெய்வ வழிபாட்டில் ‘பாலா’ என்று அழிக்கக்கூடிய வயதில் பெண் குழந்தையிடம் இருக்கும் ஒரு உறவை அனுபவிக்கும் நெகிழ்ச்சி அற்புதமானது. எந்தப் பாவாடையும் தராத ஒரு அனுபவத்தை அந்தக் கடற்கரைக் காட்சி மனதில் ஏற்படுத்துகிறது.
அதே பெண் வளரும் பல அறிவார்த்த விஷயங்களைப் பேசும் அதெல்லாம் வேறு. மெதுவாக நடந்து வந்த விரிந்த கூந்தலுடன் ஒரு எழிலரசியை நம் உலகமாய் நம் உயிராய் புலன்களின் அழுத்தங்களை மறந்து அறிவின் விவாதங்களை விலகி மனதே ஒரே தருணத்தில் ஒன்றுபட்ட உணர்வோடு கட்டி அணைத்து உச்சிமுகர்ந்து முத்தமிடும் போது அது உயிரின் ஒரு ஜீவ அணுவை இடமாற்றும் அல்லவா.
இந்த ஒரு அனுபவத்தை நான் ஒரு கருவைக் கலைத்திருந்தால் அடைந்திருக்கமுடியுமா… எப்படி இந்த ஒரு மன உறவு ஒரு சுயநலத்தின் நோக்கோடு பார்க்கமுடிகிறது. பெற்றோராக இருக்கும் உறவை இந்த சுயநல நோக்கோடு பார்க்கப்படுகிறது என்பதே இன்றைய மனிதனின் மனசாட்சி இழந்த நிலையைக் காட்டுகிறது. அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நானும் என் மனைவியும் மருத்துவர் அறையில். என் மனைவி உள்அறையில் படுக்கையில். மருத்துவர் பரிசோதித்து உறுதியான பின் என்னை அழைக்கிறார் திரையை நீக்கி. சில கருவிகள் என் மனைவியோடு இணைக்கபட்டிருக்கிறது. கருவிகள் அதன் அறிதல்களை எங்கள் முன் இருக்கும் மானிட்டரில் பார்க்கிறோம். உயிர்த்துடிப்பு. கருப்பையின் அகவெளியில் தவளைக்குஞ்சு போல் உயிர்த்துடிப்பு. பெண் மகப்பேறு மருத்துவர்தான். தினசரி இதுதான் வேலை. இருந்தும் அவருக்கும் ஒரு மகிழ்ச்சி உற்சாகம். காமத்தில் விதைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அது காதலின் வேர் அல்லவா…
இன்று கருக்கலைப்பு ஒரு பெரும் தொழிலாகப் பெருகிவிட்டது. இன்று சுய கட்டுப்பாடு என்பதைக் கடந்துவிட்டோம். அறுவடையில்லாமல் விதைப்பது எப்படி என்று தேடுகிறோம். வினைக்கான பலனை நான் தீர்மானிப்பது எப்படி என்று தேடுகிறோம். அந்த உயிருக்கு ஒரு தனி மனம் கருவிலேயே வந்துவிடுகிறது என்பதை நம் மரபு நம்புகிறது இன்றைய அறிவிலும் நிரூபிக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி அதைக் கொலை இல்லை என்று சொல்லமுடியும். அதிகமான கருக்கலைப்புகள் இன்று பாதுகாப்பற்ற உடலுறவுகளால்தான் நிகழ்கிறது. சுகத்தின் உச்சத்திற்காக இந்த சில சல்லாப சேஷ்டைகள்.
நீங்கள் எழுதிய இயற்கை வேளாண்மை அதனில் அறிவியலின் பங்கு அதன் பல நிலைப் பார்வைகள் எல்லாம் இந்த விஷயத்திற்கும் பொருந்தும். இயற்கையைப் புரிந்துகொள்கிறோம் என்பதில் ஆரம்பித்து அதை கட்டுப்படுத்துவது எப்படி என்று ஆராய்கிறோம். இயற்கையில் நானும் ஒரு அங்கமே என்ற மன அறிதலே விலகி நான் இயற்கையை ஆளவேண்டும் என்று பார்ப்பதே இந்த வழி தவறுதலுக்குக் காரணம்.
விசேஷ குழந்தைகள் என்று அழைக்கப்படும் மன உடல் குறைகளோடு பிறப்பது நமக்கு ஒரு இடையூறா என்ன… அறிவியலின் பெரும் வீச்சில் இந்தக் குழந்தைகள் எதிர்காலத்திலெல்லாம் பிறக்காமல் போகுமா என்ன… துயரம் அழிவு இவையாவும் இயற்கையின் ஒரு பகுதிதானே. அப்படி ஒரு துயரமில்லா வாழ்வு நிலை வரமுடியுமா என்ன…
இது போன்ற கவலைகளையெல்லாம் மறக்கச் செய்யும் ஒரு தருணம்தானே நம் குழந்தையை தூரத்திலிருந்து அதன் மகிழ்ச்சியை அதன் நம்பிக்கையை அதன் தன்னிறைவை அனுபவிப்பது. அந்த பாலை நம் மீது உறங்கும் போது நம் காதுகளை உரசும் உஷ்ணகாத்து அதன் உள்ள அதிர்வு அதையெல்லாம் அறிவியல் விளக்கமுடியுமா… எந்தக் காலத்திலும்…
அன்புடன்
திருச்சி வே விஜயகிருஷ்ணன்