குலதெய்வம்-கடிதங்கள்

ஜெ,

குலதெய்வம் கட்டுரை கண்டேன்

நானும் ஸ்மார்த்த பிராமணனே. என் அப்பா வடமர் என் அம்மா வாத்திமர்.என்அம்மாவுக்கும் அவர்கள் வழி உறவினர்களுக்கும் குல தெய்வம் காட்டுமன்னார்கோயிலில் உள்ள தாண்டவராயன் சாமி. அவரும் பெரு தெய்வம் அல்ல ஒரு கிராமதேவதையே.இதைப் போல சிறு தெய்வத்தைக் குல வழிபாடு செய்யும் பிராமணர்கள் பலபேர் எங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள்.

பிராமணர்களில் சில குடும்பங்கள்ஆதியில் வேறு சடங்கு வழி முறையில் இருந்த சமய, சாதிகளில் இருந்து பிராமண சாதிக்குள் புகுந்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் உருவம் அமைப்பு,நிறம், இவற்றில் இருந்து திராவிட இனக் கூறுகளை எளிதில் கண்டு கொள்ளலாம்..நானும் மாநிறமே, மேலும் வடக்கில் இருந்து 2500 வருடங்களுக்கு முன் வந்தபிராமணர்கள் குடும்பம் குட்டியுடன் வண்டி கட்டி கொண்டு வந்ததற்கான எந்தமுகாந்திரமும் இல்லை.அவர்கள் இங்கு வந்து இங்கேயே பெண் எடுத்துக் கலந்திருக்க வேண்டும். ஆரியர்களும் அப்படியே. இதை தான் dna டெஸ்ட்போன்றவை நிரூபிக்கின்றன. அவை அதிகமாக செய்திகளில் வரும் போதும் இப்படிஉளறுபவர்களை என்னவென்று சொல்வது.

இனக்குழுக்களில் மேன்மை கீழ்மை என்பதுஆப்பிரிக்காவில் இருந்து நமக்கு வந்ததாக இருக்கலாம். உலகம் எங்கும் இனக்குழுக்கள் மோதி வருவது இதையே காட்டுகிறது. ஊர்க் கிணற்றில் தண்ணிஎடுப்பதில் இருந்து விலக்கு போன்றவை ஆப்ரிக்காவில் இருப்பதாகkalaiy.blogspot.com அதில் எழுதி இருந்தார். ஆப்ரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்பது அந்த தொடர்

கோபிநாத்

அன்புள்ள கோபிநாத்

இந்திய நிலப்பகுதியில் தொடர்ச்சியான மக்கள் குடியேற்றமும் இனக்கலப்புகளும் நிகழ்ந்தது எப்படியும் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர். கடைசிப்பனியுகத்தில். அதன்பின்னரே மானுடநாகரீகமே ஆரம்பித்தது. பண்பாட்டுவிளக்கத்துக்கு இனவாதம் அதற்கு எதிராக டிஎன்ஏ சோதனை இரண்டுமே அபத்தம்

ஜெ


தென்கரை மகாராஜன் என்ற பதிவு படித்தேன்.

நானும் பிராமண குலத்தில் பிறந்தவன் தான். (எனக்கு ஜாதியில் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் அவரவர் நம்பிக்கை பண்பாடு வாழ்கை முறை இவற்றை அவதானிப்பது பிடிக்கும். இந்த அளவிற்கு variety வேறெங்கிலும் எந்த நாட்டிலும் இல்லை )

எங்கள் குல தெய்வம் காடன் தேத்தி என்று வேதாரண்யம் அருகில் உள்ள அய்யனார் அல்லது சாஸ்தா தான்

பல வருடம் வைதீஸ்வரன் கோவில்தான் குல தெய்வம் என்று நினைத்திருந்தோம். பின் எங்கள் முன்னோர் ஒருவர் பதினைந்து வருடம் முன் கூறியபின் காடன்தேத்தி அய்யனார் தான் குலதெய்வம் என்று அறிந்தோம்.

அய்யனார் சாஸ்தா ஐயப்பன் இவை அனைத்துமே ஒரே கடவுளாகவே கொள்ளப்பட்டதா. எங்கேயாவது இது குறித்து எழுதியிருக்கிறீர்களா ?

ஸ்ரீதர் விஸ்வநாத்

அன்புள்ள ஸ்ரீதர்,

குலதெய்வம் ஒருபோதும் சிவன் விஷ்ணு போன்ற பெருந்தெய்வமாக இருக்காது. சிலர் அறியாமையால் திருப்பதி வெங்கடேசப்பெருமாள் எங்கள் குலதெய்வம் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பெருந்தெய்வக்கோயிலில் பாரம்பரியமாக ஊழியம்செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கும் எங்கோ சிறுதெய்வம் ஒன்று குலதெய்வமாக இருக்கும். குலதெய்வம் ஒரு குலத்தின் அல்லது இணையான பல குலங்களின் தனிப்பட்ட தெய்வமாகவே இருக்கும்.

நீங்கள் இக்கடிதம் எழுதுவதற்கு முன் ஒரு சாதாரணத் தேடலை என் தளத்தில் நிகழ்த்தியிருக்கலாம். சாஸ்தா என்றே விரிவான கட்டுரை அதில் உள்ளது.

அய்யப்பன் சபரிமலை தர்மசாஸ்தா என்றே அழைக்கப்படுகிறார். கேரளத்தில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாஸ்தாக்களில் ஒருவர்தான் அவர்

அய்யனார் சாஸ்தா போன்ற தெய்வங்களுக்கு சில பொது அம்சங்கள் உள்ளன. யானை, குதிரை போன்றவை வாகனமாக இருப்பது முக்கியமனாது.

சாஸ்தா பெரும்பாலும் யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். யோகபந்தம் என்ற பட்டை இருக்கும். மிகப்பெரிய அலங்காரக்கிரீடம் இருக்கும். காதுகளில் பெரிய குண்டலங்களும் நகைகளும் இருக்கும். கணிசமான சாஸ்தாக்கள் வஜ்ராயுதமோ , மலராத தாமரை மொட்டோ வைத்திருக்கும். இவையெல்லாம் சிற்ப மரபில் போதிசத்வர்களுக்குரியவை.

சாஸ்தாக்களுக்கு எங்குமே உயிர்ப்பலி கிடையாது. சாஸ்தாக்களுக்கான நைவேத்தியங்களும் தனிச்சிறப்பு கொண்டவை, வேறெங்கும் இல்லாதவை. அவர்கள் போதிசத்வ வழிபாட்டின் மிச்சங்கள் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

அய்யனார் வழிபாடு சாஸ்தா வழிபாட்டுக்கு நெருக்கமானது. ஆனால் கேரளத்தில் சாஸ்தாவழிபாடு தாந்த்ரீக மரபால் நெறிப்படுத்தப்பட்டுள்ளதனால் மாற்றங்களில்லாமல் நீடிக்கிறது. தமிழகத்தில் அய்யனார் வழிபாடு நாட்டார் வழிபாடாகையால் ஆங்காங்கே அவ்வப்போது மாறுதல்கள் நிகழ்கின்றன. உயிர்ப்பலியும் உட்பட.

சாஸ்தா தொல்தமிழகத்தின் சாத்தன் என்ற தெய்வம். அது பௌத்த மரபுக்குள் சென்று போதிசத்வ வழிபாட்டுடன் இணைந்து சாஸ்தா ஆகியது. பின்னர் பௌத்தம் மறைந்தபின்னர் சாஸ்தா வழிபாடு தனியாகவே நீடித்துவருகிறது. இதுவே பொதுவான கொள்கை. மறுப்பும் வலுவாக உள்ளது

ஜெ


தென்கரை மகாராஜன்


நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்


தெரளி

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்
அடுத்த கட்டுரைஃபெட்னா- கடிதங்கள்