கடலடியில்

இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விவாதம் இது. ஒரு பெண்ணெழுத்தாளரைப் பற்றிய விமர்சனத்தில் சு.சமுத்திரம் எழுதினார் ‘இப்போதெல்லாம் பெண்ணெழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிக்கிறார்கள்’. கீழ்த்தரமான உள்ளர்த்தம் கொண்ட வரி. நான் அப்போதைய இந்தியா டுடேயில் அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினேன்.

தமிழிலக்கியத்தின் ஆயிரமாண்டுக்கால வரலாற்றில் சங்ககாலம் தவிரப் பெண்கள் எப்போதுமே தீவிரமாக எழுதியதில்லை. ஔவையும் ஆண்டாளும் காரைக்காலம்மையும் விதிவிலக்குகள். ஔவை முதுமையைத் தருவித்துக்கொண்டார். ஆண்டாள் இளமையை அடையவேயில்லை. காரைக்காலம்மை பேயுருக்கொண்டார். நவீன இலக்கியம் உருவானபின்னரும் பெண்கள் அதிகம் எழுதவரவில்லை. எல்லா மொழிகளிலும் இதுவே நிலை.

இந்தியவரலாற்றில் அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் பெண்களுக்கு கௌரவமான ஒரு நுழைவாயிலைத் திறந்தது காந்திய இயக்கம்தான். அதிலும் குறிப்பாக காந்தி பெண்களை நோக்கி நேரடியாக அறைகூவல் விடுப்பவராக இருந்தார். பெண்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவராமல் இந்தியா விழிக்காது என ஆத்மார்த்தமாக நம்பி அதற்காகத் தொடர்ந்து முயன்ற ஒரே இந்தியத்தலைவர், அனேகமாக  கடைசித்தலைவர், அவர்தான்

இந்தியா எங்கும் அதிகமான பெண்கள் பொதுவெளியில் அறிமுகமானது காந்திய அலையின்போதுதான். இந்தியாவில் இன்றும் புகழ்மிக்க சாதனையாளர்களாக விளங்கும் பெண்எழுத்தாளர்கள் பாடகிகள் கலைஞர்கள் சமூகசேவகிகள் அதிகபட்சம் முப்பதாண்டுக்காலம் நீடித்த அந்த அலையில் எழுந்து வந்தவர்கள் மட்டுமே. தமிழகத்திலும் அதுதான் வரலாறு. வை.மு.கோதைநாயகி அம்மாள், லட்சுமி போன்ற எழுத்தாளர்கள், பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற பாடகிகள், சௌந்தரம் ராமச்சந்திரன், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போன்ற சமூகசேவகர்கள்,ருக்மிணி அருண்டேல் முதலிய கலைஞர்கள் என ஒரு நூறுசரித்திரநாயகியரை நாம் பட்டியலிடலாம்.

பின்னர் உருவான கம்யூனிச இயக்கமும் அதன்பின்னர் வந்த திராவிட இயக்கமும் பெண்களுக்கான இடத்தை மிகமிகக் குறைவாகவே அளித்தன. அந்த தரப்புகளில் இருந்து பெண் ஆளுமைகளை மிக அரிதாகவே காணமுடியும். அதன்பின் இன்றுவரை பெண்கள் பொதுவெளிக்கு வருவது பெரிய அளவில் நிகழ்வதுமில்லை. நவீன இலக்கியத்திலேயேகூட பெண்களின் பங்களிப்பு ஒப்புநோக்க குறைவுதான். தொண்ணூறுகளில்தான் பெண்கள் ஒரு சிறிய அலைபோல இலக்கியத்துக்குள் நுழைந்தனர். அதிகமும் எளிய கவிதைகள் எழுதிக்கொண்டு.

அவரது தரமற்ற சொற்களால் சமுத்திரம் அவமதித்தது அந்த சிறிய அலையைத்தான். நான் அதற்குக் கடுமையாகவே எதிர்வினையாற்றியிருந்தேன். அதில் சாகித்ய அக்காதமி ’வாங்கிய’ சமுத்திரம் என்ற ஒரு வரி இருந்தது. அது சமுத்திரத்தைக் கடுமையாகப் புண்படுத்தியது. அவர் வேறு ஒரு இதழில் என்னை மேலும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதன்பின் அவர் நினைத்து நினைத்துப்பார்த்தபோது என்பெயர் தட்டுப்பட்டது.

எங்கிருந்தோ என் விலாசத்தைத் தேடி எடுத்து அவர் எனக்கு பதில் போட்டிருந்தார். ‘டேய் நான் சாகித்ய அக்காதமிக்குத் தகுதியற்றவன் என்று சொல் . ஆனால் வாங்கியவன் என்று சொல்லாதே. நான் எப்போதும் எதற்கும் அலைந்தவன் கிடையாது. திமிராக இருக்கவேண்டும் என்றே திமிராக இருந்து கிடைத்தவற்றைக்கூட இழந்தவன் நான். திமுக தலைவருக்கே நெருக்கமானவன். ஆனால் அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள மறுத்தவன் ’ என்று ஆரம்பித்து ஒரு நீண்ட வசை

‘நீ யார்? நீ என் கதைகளை வாசித்து வளர்ந்தவன். ஒரே –யில் இருந்து பிறந்தவர்கள் நாம். நீ இளையவன் நான் மூத்தவன். பெரிய — போல பேசினால் பத்மநாபபுரத்த்துக்குத் தேடிவந்து உதைப்பேன். எனக்கு உன் வீடு விலாசம் எல்லாம் தெரியும். எனக்கு எல்லா இடத்திலும் ஆளிருக்கிறார்கள்’ என்று சமுத்திரம் எழுதியிருந்தார். நான் அவருக்கு சுருக்கமாக ‘எல்லாரையும் உருவாக்கும் அந்த — பற்றிய உணர்வு உங்களுக்கும் இருந்தால் சரி’ என்று எழுதி விட்டுவிட்டேன்.

ஏழெட்டு மாதம் கழித்து கோவையில் விஜயாபதிப்பகத்தின் ஒரு புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். விஜயாவேலாயுதம் வந்து ‘இப்பதான் சமுத்திரம் வந்துட்டு போனார். அந்தப்பக்கம் நிக்கிறார்’ என்றார். ‘என்னைப்பார்த்தாரா?’ என்றேன். ‘பாத்ததனாலதானே போனார்’ என்றார். ”போய்ப்பேசலாமா?” என்றேன். ’கண்டிப்பா. அவரு நல்ல மனுஷனுங்க’ என்றார் வேலாயுதம்

நான் நேராக சமுத்திரம் நின்றிருந்த இடத்தை நோக்கிப்போனேன். எனக்குப் பின்பக்கம் காட்டி எவரிடமோ பேசிக்கொண்டிருந்த சமுத்திரத்தின் அருகே சென்று ’அண்ணாச்சி’ என்று அழைத்தேன். அவர் திரும்பியதும் ‘அண்ணாச்சி, நான் ஜெயமோகன். ஒரு காலத்திலே உங்க எழுத்துக்களை வாசித்து உருவானவன்’ என்றேன்.

‘டேய் நீ என்னடா பெரிய -யா?’ என சமுத்திரம் ஆரம்பித்தார். நான் சிரித்துக்கொண்டு ‘விடுங்கண்ணாச்சி, நான் கணக்குப்படி உங்க தம்பியில்ல? தம்பி அண்ணனை ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? மன்னிச்சிருங்க’ என்றேன். சமுத்திரம் சட்டென்று என்னை அப்படியே கட்டிக்கொண்டார். ‘டேய் நீ என் தம்பிடா…இப்ப சொன்னியே இது போரும்’ என்றார்.

சமுத்திரம் கரிய நெடிய மனிதர். ஏதோ கரிசல்காட்டு விவசாயி என்று தோற்றமளிப்பார். ஆனால் எப்போதும் சஃபாரிதான் உடை. எண்ணைபூசிப் படிய வைத்த சுருள்முடி. எச்சில்தெறிக்கும் உரத்த பேச்சு. கிட்ட்டத்தட்ட கத்தல்தான் அது. ஒரு விரோதம் என்றால் அவரிடமிருக்கும் எல்லா முட்களும் சிலிர்த்துக்கொள்ளும். அவரளவுக்கு ஆவேசமான உயிராற்றல் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை. அன்று நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ‘சாயங்காலம் நீ என்னைப் பாக்க வரே’ என்றார். ‘இல்லை, நான்…’ என்றேன். ‘டேய் எதுத்துப்பேசாதே’ என்றார்

மாலை அவர் தங்கியிருந்த விடுதிக்குப் போனேன். சஃபாரியைக் கழட்டிவிட்டு பனியனுடன் இருந்தார். நான் மது அருந்துவதில்லை என அறிந்து மனமுடைந்தார். எனக்காக அவரும் குடிக்கவில்லை. பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு அந்தரங்கமென்பதே இல்லை. விமர்சனங்கள் ,கோபங்கள், நக்கல்கள் எனக் கொட்டிக்கொண்டே இருந்தது. பேசப்பேச நெருங்கி வந்து, ஒரு கட்டத்தில் நம் ஆன்மாவில் அவரே ஒரு நாற்காலியை பயங்கர சத்தத்துடன் இழுத்துப்போட்டு அமர்ந்து , காலைத்தூக்கி சப்பணம் போட்டுக்கொண்டு நம்மை அதட்ட ஆரம்பிக்கும் மனிதர் அவர்.

’டேய் நான் சரியான கரிசல்காட்டான். எங்க தலைமுறையிலேதான் படிச்சு பரீட்சைகள் எழுதி இந்தா இப்டி வந்து சேர்ந்திருக்கோம்.நீ சும்மா குமாஸ்தா வேலைசெய்றே. உனக்கு சொன்னா புரியாது. ஆபீசரா இருந்தா தெரியும்…டேய், நம்மள பாக்குற ஒவ்வொருத்தனும் வீட்டுக்குள்ள நுழைஞ்ச நாய பாக்கிற மாதிரி பாப்பானுங்க. நம்ம கலரு நம்ம உருவம் எல்லாம் அதுக்கேத்தமாதிரி இருக்கு…நல்ல அவமானம்லாம் பட்டிருக்கேன். செருப்ப கழட்டி மூஞ்சியில அடிச்சதுமாதிரி பேச்சுகேட்டிருக்கேன்.டேய் காறி மூஞ்சிலே துப்புற மாதிரி பேச்சு கேட்டிருக்கேன் தெரியுமா…’

‘சீனியர்கிட்ட கேட்டாக்க பணிஞ்சுபோன்னு சொன்னாங்க. நம்ம காலம்னு ஒண்ணு வாரது வரை எல்லாத்தையும் தாங்கிட்டுபோன்னு சொன்னாங்க. மனசிலே குறிச்சு வச்சுகிட்டு சிரிச்சுட்டு இருன்னு அட்வைஸ் பண்ணினாங்க…..அது நம்ம சாதிக்குள்ள புத்தி இல்ல. எனக்கு அதெல்லாம் சரிவராது…குமுறிட்டிருந்தப்ப ஒருவாட்டி அய்யா வைகுண்டர் கோயிலுக்கு உங்கூருக்கு வந்தேன். அப்ப ஒரு வெளிச்சம் கிடைச்சுது. நான் எப்டியோ அதுதான் என் வழின்னு தெரிஞ்சுட்டுது…அதோட ஆளே மாறிட்டேன்’’

‘பாத்தியா சஃபாரி….இதைத்தான் போடுவேன். எனக்கு என்ன மரியாதையோ அதைக் குடுத்தாகணும். இல்லேன்னா அவன் நார்நாரா ஆகிற வரைக்கும் விடமாட்டேன். என் பேரைக்கேட்டாலே அலற வச்சிருவேன்…சமுத்திரமா அவன் ஓநாய்லான்னு சொல்லுவானுக…பணிஞ்சு போக மாட்டேன். ஒரு இஞ்சுகூட விட்டுக்குடுக்க மாட்டேன்…. அப்டி ஒரு ஆங்காரத்த மனசிலே ஏத்திக்கிட்டேன்.. எத்தன பேர கதறிட்டு ஓட அடிச்சிருப்பேன். சர்வீஸிலே கையில கருக்குமட்டையோட அலைஞ்சவன் நான்…எவ்வளவு டிரான்ஸ்பர்.எவ்வளவு சஸ்பென்ஷன்… என்னை ஒரு மண்ணும் செய்யமுடியாதுன்னு காட்டினேன்’

‘ஆனா நானே உருவாக்கிக்கிட்ட அந்த ஆங்காரத்த என்னாலேயே தாங்கமுடியல்லை. ஒரு கட்டத்திலே எப்ப பாத்தாலும் கால்படி வத்தல மென்னுட்டிருக்கிற மாதிரியே இருந்தது. அலைமோதிட்டிருந்தேன். அப்ப நான் செண்டிரல் கவர்மென்ட் செர்வீஸிலே இருந்தேன். நெறைய வாசிப்பேன். எனக்கு புதுமைப்பித்தன்தான் ஆதர்சம். ஒருநாள் ஒரு கதை எழுதினேன். கடல்மணிங்கிற பேரிலே அதைக் குமுதத்துக்கு அனுப்பினேன். அப்டியே பிரசுரமாச்சு. அதான் என் மொதல் கதை…’

நான் புன்னகைசெய்தேன். ‘அந்தக்கதைக்கு எட்டு லெட்டர் வந்திச்சு. ஒரு சின்னப்பையன் லெட்டர் போட்டிருந்தான். அஞ்சாம்கிளாஸோ ஆறாம்கிளாஸோ படிக்கிற பையன்…கொழந்தைமாதிரி கையெழுத்து. நல்லா இருக்கு கதைன்னு. லெட்டர கையிலே வச்சுகிட்டு நான் அழுதேன்’

நான் சிரித்தேன். ‘ -க்காளி நீ எழுதின லெட்டர் அது’ என்றார் சமுத்திரம் . ’கதை எழுதல்லேன்னா எவனையாவது வெட்டிப்போட்டுட்டு ஜெயிலிலே இருந்திருப்பேன். எழுதி எழுதி ஆத்திக்கிட்டு இதுவரை வந்துட்டேன். எனக்கு எலக்கியம் ஒரு மண்ணும் தேவையில்ல. என் எழுத்து வேற…’

இளமையில் சமுத்திரத்திற்கு நான் நிறைய வாசகர்கடிதங்கள் எழுதியிருக்கிறேன். தொடர்சியாகப் பல வருடங்கள். ஆச்சரியமென்னவென்றால் கடல்மணியும் சமுத்திரமும் ஒருவரே என்றுகூட ஊகித்து எழுதியிருந்தேன். அவரது கதைகளின் முகத்திலறையும் அப்பட்டம் எனக்கு மனவிலகலைக் கொடுத்தது. ஆனால் அவற்றின் நேர்மையான உணர்ச்சிவேகம் இன்றும் என்னைக் கவர்கிறது.

சமுத்திரம் மறுமுறை நாகர்கோயில் வந்தபோது சதங்கை ஆசிரியர் வனமாலிகை என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் வனமாலிகையுடன் மீனாட்சிபுரம் ஆசாரிமார் சாலையில் சமுத்திரம் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். செல்லும்வழியில் ’அண்ணாச்சிக்கு நீங்கதான் என்னோட அட்ரஸைக் குடுத்ததா?’ என்றேன். ’ஆமா, ஏன் கேக்கிறியோ?’ என்றார்.

இரவு ஏறுவது வரை சமுத்திரத்திடம் பேசிக்கொண்டிருந்தேன் என்றால் அது பிழை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்தபோது வனமாலிகை சொன்னார் ‘தப்பா நினைச்சுக்கிடாதீய…அவரு இப்பிடித்தான். ஆனா நல்ல மனுசனாக்கும்’ .நான் புன்னகைசெய்தேன். மறுநாள் அவர்கள் சாமிதோப்புக்குச் செல்வதாக இருந்தது.

அதன்பின் பலமுறை நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் வரும்போது வனமாலிகைதான் தகவல் தருவார். பின்னர் அவர் நாகர்கோயில் வருவது நின்றுபோனது. விஷ்ணுபுரம் நாவலை ஒரு பிரதி அனுப்பி வைத்தேன். ’பசிச்சு எலையிலே ஒக்காந்திட்டிருக்கிறப்ப ஆத்துமணலக் கொண்டாந்து முன்னால வச்ச மாதிரி இருக்கு’ என்று சொல்லிக் கடுமையாகத் திட்டி போன்செய்துவிட்டு அதையே எழுதி ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார்

அதன்பின்னர் ஒருமுறை நான் எங்கோ படிமம் என்று சொன்னதை வாசித்துவிட்டு ‘படிமம்னா என்ன? அக்கானி காய்ச்சுறப்ப அடியிலே தங்குறத நாங்க படிமம்னு சொல்லுவோம். அதுவா? இதெல்லாம் பம்மாத்து. ஏழைகளை ஏமாத்துற பசப்பு. சொல்றதுக்குண்டானத வெட்டித்தெறந்து சொல்லாம என்ன படிமமும் மத்ததும்?’ என்று ஃபோனில் சத்தம்போட்டுவிட்டு அதை ஏதோ இதழில் எழுதவும்செய்தார்.

‘வாயாடியாக இருந்த என்னை சில பத்திரிகையாசிரியர்கள் ஊமையாக்கிவிட்டார்கள்’ என்று தொண்ணூற்றி மூன்றில் எனக்குக் கடிதம் எழுதினார் சமுத்திரம். ஆனால் கொஞ்சநாள் கழித்து ஆனந்த விகடனில் அவர் வாடாமல்லி என்ற நாவலை எழுதினார். சமுத்திரத்தின் கதைகளில் மனித இயல்புமீதான அவதானிப்புகளோ வாழ்க்கை நுட்பங்களோ இருக்காது. சமூகப்பிரச்சினைகளின் கொந்தளிப்பான வெளிப்பாடுதான் அவரது கலை. அவ்வகையில் வாடாமல்லிதான் அவரது நல்ல படைப்பு.

அந்நாவலை நான் 2000 த்தில் புத்தக வடிவில்தான் வாசித்தேன். என் எண்ணத்தை எழுதி அனுப்பினேன். உணர்ச்சி மேலிட்டு எனக்கு ஃபோன் செய்தார். ‘நீ இந்த மாதிரி ஒண்ணு எழுதணும்…நம்ம நாட்டு பஞ்சப்பராரிகளப்பத்தி எழுதணும்… கலைன்னா அதுதான்யா’ என்றார். அதுதான் நான் கடைசியாக அவரிடம் பேசியது..

திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் அருகே திப்பண்ணம்பட்டி என்ற சின்ன கிராமத்தில் 1941இல் பிறந்தவர் சமுத்திரம்.மக்கள் தொடர்பாளராக மத்திய அரசில் பணியாற்றினார். கொஞ்சகாலம் திட்டம் என்ற மத்திய அரசின் செய்தி இதழின் ஆசிரியராக இருந்தார். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார். அடிப்படையில் அவர் காங்கிரஸ்காரர். திமுகவிலும் கம்யூனிஸ்டுக்கட்சியிலும் அவருக்கு நண்பர்கள் அதிகமிருந்தாலும் குடும்பப் பாரம்பரியம்போல காங்கிரஸ்பற்றைப் பேணிவந்தார்

2003இல் ஒருநாள் தினமணியில் செய்தி வாசித்துத்தான் சமுத்திரம் காலமான தகவலை அறிந்தேன். உடனே இதழாளர்களான நண்பர்களிடம் விசாரித்து நடந்ததைத் தெரிந்துகொண்டேன். சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம்பெருகக் கிடந்திருக்கிறார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டுசென்று சேர்த்திருக்கிறார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்கமுடியாது என எண்ணி அவசியமான அறுவைசிகிழ்ச்சை செய்யாமல் இரண்டரை மணிநேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருக்கிறார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர் இறந்திருந்தார்.

சமுத்திரத்தின் கதைகளில் வருவது போன்ற ஒரு நிகழ்ச்சி. மனித மனத்தின் சிறுமையை, நம் அமைப்புகளின் ஈவிரக்கமற்ற தன்மையைப் பிடித்து நிறுத்திக் கன்னத்திலறைவதுபோன்ற நடையில் எள்ளலும் எரிச்சலுமாக எழுதியவர் அவர். வாசக ஊகத்துக்கோ கற்பனைக்கோ ஒரு துளிகூட மிச்சம் வைப்பதில்லை. பல கதைகள் ரத்தம் கொதிக்கச்செய்பவை. ஊமை ஜனங்கள், கைவிடப்பட்ட மக்கள் – அவருடைய மொழியில் சொல்லப்போனால் சோற்றுப்பட்டாளம்- தான் அவருடைய கதைமனிதர்கள். ஒவ்வொரு கதையும் அந்த மனிதர்களுக்காக நரம்பு புடைக்க தொண்டை தெறிக்கக் குரலெழுப்புகிறது. அவர் கடைசிவரை அவர்களில் ஒருவராகவே இருந்தார்.

‘நான் காட்டானாக்கும் தம்பி’ கைகளை முஷ்டி பிடித்து சமுத்திரம் சொல்வார். ‘நம்ம பாட்டு காட்டான் பாட்டாக்கும். இதிலே பல்லவி அனுபல்லவி சங்கீதம் ஒண்ணும் கெடையாது…’அவரைக் கோவையில் சந்தித்த முதல்நாள் முதல் நான் கேட்க முனைந்து இடைவெளியே கிடைக்காமல் தவித்ததை நாகர்கோயிலில் சந்தித்த முதல்நாள் கேட்டேன். ‘அண்ணாச்சி , நீங்க எழுதினது சரியா? பொண்ணுங்க இப்பதானே எழுதவே வராங்க?’

சமுத்திரம் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்பவரல்ல. உரத்த குரலில் கத்த ஆரம்பித்தார். ‘மனுசன் செத்திட்டிருக்கான் தம்பி…வாங்க காயாமொழி இட்டமொழிக்கு வந்து பாருங்க…முள்ள நட்டு வெள்ளாம பண்றான். கரி எடுத்து வித்துக் கஞ்சி குடிக்கான். இவளுக என்னத்த எழுதறாளுக? எனக்குப் பத்தலைன்னு எழுதறாளுக”

மீண்டும் கொஞ்சம் இடைவெளி கிடைத்தபோது நான் சொன்னேன் ‘ நீங்க எழுதறது உங்க பிரச்சினை அண்ணாச்சி, ஏன் அது அவங்க பிரச்சினையா இருக்கக்கூடாது?’

‘கொழுப்பு. நல்ல கருக்கு மட்டையால குண்டியிலே போட்டா புத்திவரும்’ என்று மேலும் கத்தினார் சமுத்திரம்.

‘அண்ணாச்சி மனுஷனுக்கு வயிறு நெறைஞ்சா அடுத்த பிரச்சினை ஆண்பெண் உறவுதானே? அது அவங்களுக்குப் பெரிய விஷயமா தோணினா அவங்க ஏன் அதை எழுதக்கூடாது?’

‘அப்ப நீ ஏண்டா அதை எழுதல?’

நான் சிரித்து ‘அது எனக்குப் பெரிய விஷயமா இல்லியே’.

அவர் அதைப்பிடித்துக்கொண்டார்.’பாத்தியா நீயே சொல்லிட்டே”

ஒருவழியாக அவர் கத்தவேண்டியதை எல்லாம் கத்தியபின் நான் கிளம்பும்போது கார் பார்க்கிங்கில் அரை இருட்டில் வைத்துக் கேட்டேன் ‘சரி அண்ணாச்சி, எண்ணைக்காவது நம்ம சோத்துப்பட்டாளத்துக்கு வயிறு நெறைஞ்சபிறவு நம்ம பொண்ணுக இதை எல்லாம் எழுதினா என்ன சொல்லுவீங்க?’

சமுத்திரம் சட்டென்று என் தோளைப் பிடித்தார். இருட்டில் ஈரக்கரிய முகம் மிளிரச் சொன்னார். ‘தம்பி,டேய், நம்ம சனம் சோத்தைவிட அதைப் பெரிய பிரச்சினையா நினைக்கிற அளவுக்கு ஆயிடுச்சின்னா அதைவிட அண்ணனுக்கு என்னடா வேணும்?’

Aug 15, 2012 முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைவெடிக்கக் காத்திருக்கும் ஒரு சூழியல் பேரழிவு
அடுத்த கட்டுரைமதங்களும் ஏற்றத்தாழ்வும்