வாழையும் விஷமும்

இங்கே வாழை என்பது விஷத்திலேயே முளைக்கச்செய்து விஷத்தில் வளார்ந்து விஷத்தில் விளையும் ஒரு விஷகன்னி.

உங்கள் கட்டுரையில் இந்த வரி என்னை மிகவும் யோசிக்கவைத்தது. நான் ஆரோக்கியமான உணவு உண்ணும் ஆசையில் வாழைப்பழம் அதிகமாக உண்ணக்கூடியவன். நேந்திரம்பழம், செவ்வாழை போன்றவற்றை உண்கிறேன். நெல்லுக்குத்தான் பூச்சிமருந்து அடிப்பார்கள் என்று கேட்டிருக்கிறேன். வாழைக்குமா பூச்சிமருந்து தெளிக்கிறார்கள்?

ராஜாராம்
மதுரை

அன்புள்ள ராஜாராம்

நீங்கள் ஒருமுறை கன்யாகுமரிமாவட்டம் வரவேண்டும். இப்போது நாங்களும் திருச்சியில் முசிறிப்பகுதியும்தான் தமிழகத்தின் வாழைவேளாண்மையின் மையங்கள். நாகர்கோயிலில் இருந்து தக்கலைக்குப் பேருந்தில் போனால் இருபக்கமும் வாழைத்தோட்டங்கள் வரும். சாதாரணமாகச் செல்லும்போதே பூச்சிமருந்து வாசனை மண்டையைத் தாக்கும்.

ஒருமுறை தேவதேவன் ஆசைப்பட்டார் என்று பத்மநாபபுரம் அருகே ஒரு மாபெரும் வாழைக்காட்டுக்குள் நடை கூட்டிச்சென்றேன். தொழிற்சாலைக்குள் வந்தது போல இருக்கிறது என்றார். கொஞ்ச நேரத்தில் மூச்சிளைப்பு ஏற்பட்டு உட்கார்ந்துவிட்டார்.

நான் பள்ளிநாளில் இருந்தே வாழை விவசாயம்செய்தவன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லாருக்குமே பத்துமூடு வாழையாவது இருக்கும். சொந்தமாக வாழை இல்லாதவன் கௌரவக்குறைவான பையனாக பள்ளியில் கருதப்பட்ட காலம் அது. ஓணத்துக்கு ‘அடிச்சு பொளிச்சு’ கொண்டாடுவதற்கு அந்தப்பணம்தான். சட்டைதுணியெல்லாம் அதில்தான் வாங்குவோம்.

இங்கே வயலை ‘வாழைக்குக் கொடுப்பது’ அக்காலத்தில் பயிற்சுழற்சியின் ஒரு பகுதி. நீர் ஒருபோதும் வற்றாதநிலமாகையால் பூச்சிகளும் புழுக்களும் பரம்பரைகளாக நீடிக்கும்.மேலும் களிநிலம் நீரிலேயே இருந்தால் அதன் சாம்பலும் உப்பும் குறையும். ஆகவே பயிற்சுழற்சி இன்றியமையாதது. வாழை அதற்குச் சிறந்தது.

இரண்டாண்டு நெல் போட்டபின் நிலத்தை வாழைக்குக் கொடுப்பார்கள். எட்டுமாதத்தில் வாழைநட்டு குலை எடுத்தபின் இரண்டுமாதம் ஏதாவது காய்கறி. அது குத்தகைக்கு எடுத்தவனுக்கு போனஸ். அதன்பின் மீண்டும் நெல்.

வாழைக் குத்தகையை முன்பணம் கொடுத்து ஒருவர் எடுத்தால் அதைத் தனித்தனி வாழைமூடுகளாக எண்ணி உபகுத்தகைக்கு விடுவார். ஒருமூடு வாழைக்கு அக்காலத்தில் பத்து ரூபாய் சராசரியாக நிலவாடகை இருக்கும். நூறு ரூபாய் திரட்டி பத்துமூடு வாழை எடுத்தால் முந்நூறு ரூபாய் வரை நிகரலாபம் கிடைக்கும்.

வாழைக்கு இங்கே வயலில் ஆழமாக சால் வெட்டி நடுவே மேடான பாத்தி உருவாக்கி அங்கே நடுவார்கள். நிலத்தில் சேறாக நீர் தேங்காமல் அதை சால் வடித்து வெளியேவிடும். கோடையில் சாலில் உள்ள நீரை அள்ளி வாழைக்கு இறைக்கவும் செய்யலாம். அதற்குக் கமுகுப்பாளையாலான தோண்டியைப் பயன்படுத்துவோம்

வாழைக்குத் தழை உரம் அதிகம் தேவை. ஆகவே காட்டுக்குச்சென்று தழை கொண்டுவந்து அதை வாழை மூட்டில் அடுக்கி மேலே மண்போட்டு மூடுவோம். மரச்சீனி பிடுங்கும் காலத்தில் மரச்சீனித்தழை கிடைக்கும். மரச்சீனியைக் கம்புடன் வைத்தால் இரண்டே வாரத்தில் முளைத்துத் தழைக்கும். அந்தத் தழையை ஒடித்து அடுத்த தழையுரம் வைக்கலாம்.நேந்திரனுக்கு எட்டு தழையுரம் வைப்போம். சாணியை உலரச்செய்து உடைத்து சாம்பலுடன் சேர்த்து ஒருமுறை உரம் வைப்போம். அவ்வளவுதான்.

நேந்திரனுக்கு அதிகபட்சம் மொத்தம் ஐம்பதுநாள்கூட தண்ணீர் இறைக்கவேண்டியிருக்காது. மிச்சநாளெல்லாம் சாரல் மழையாவது இருக்கும். ஆகவே எட்டாம்வகுப்புப் பையன்கூடச் சொந்தமாகச் செய்யக்கூடிய ஒரு விவசாயமாக இருந்தது அது.

‘வாழை ஒழியும்’போது கன்றுமாணங்கள் வெட்டி எடுத்தபின் மிச்சமுள்ள வாழைத்தடி இலை சருகு எல்லாமே வயலுக்குத்தான். வெட்டி கொத்திமறித்துப்போட்டு வெள்ளரி நடுவார்கள். காய் எடுத்தபின் வெள்ளரிச் செடியோடு சேர்த்து உழுது பதினைந்து நாள் மட்கச்செய்தபின் அந்தச் சேற்றுமண்ணில் நெல். வயல் புதிதாக உருவாகி வந்ததுபோலிருக்கும்.

ஆனால் நான் பள்ளியில்படிக்கும்போதே நிலைமை மாற ஆரம்பித்தது. முதலில் வாழையின் அடியில் ’எறும்புப்பொடி’ என்னும் டிடிடி போட ஆரம்பித்தார்கள். இது வாழையின் தழை மட்கும்போது வரும் எறும்புகள் வண்டுகள் முதலிய பூச்சிகளை அழித்தது. ஏன் இதைப் போட ஆரம்பித்தார்கள் என இன்றும் புரியவில்லை. அந்தப் பூச்சிகளால் வாழைக்கு எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் அரசாங்க ஊழியர்களே அந்தப்  பூச்சிகளை அழிக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து ‘எறும்புப்பொடியை’ப் பையில் கொண்டுவந்து விற்றார்கள். எங்களூருக்கு லாசர் என்ற பிளாக் ஊழியர் சைக்கிளில் கொண்டுவந்து விற்பார்.நானெல்லாம் கிலோக்கணக்காக வாங்கிப் போட்டிருக்கிறேன்.

அதன்பின் ‘சீமையுரம்’ என்னும் அம்மோனியம் சல்பைட் . அது வாழைக்காயை நன்றாக தடித்து வெளுத்து உருண்டு சினிமாஸ்டார் கணக்காக இருக்கச்செய்யும் என்றார்கள். சீமையுரம் போட்ட வாழைக்காயை உள்ளூர்க்காரர்கள் தின்ன மாட்டார்கள். ‘பிளும்’ என்று ஒரு வெள்ளரிக்காய்த்தனம் இருக்கும். அந்த உரம்போட்டால் வாழைமூட்டில் நீர் வாடவேகூடாது. முதுகொடிய இறைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

அதன்பின் பூச்சிமருந்துகள். வாழையில் சில பிரச்சினைகள் எப்போதுமுண்டு. செவ்வாழையில் பத்துக்கு ஒன்று ‘நாக்கு தள்ளும்’. அதாவது குற்றிலை வந்து வளர்ச்சி நிலைக்கும். அதை வெட்டிவிடுவார்கள். நேந்திரனில் நூற்றுக்கு இரண்டு நாக்குதள்ளும். அது பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. மற்றபடி வாழையில் பெரிதாக பூச்சித்தாக்குதலோ நோயோ நான் கண்டதில்லை.

உண்மையில் இப்போது சொல்லப்படும் எல்லாப் பிரச்சினைகளும் பூச்சிமருந்துகள் வந்தபின் உருவானவை. பூச்சிமருந்து நிறுவனங்கள் அவற்றைப் பரப்பின என்று விவசாயிகள் சொல்கிறார்கள். அரசாங்கமே பரப்பியது என்றுகூடப் பலர் சொல்கிறார்கள்.

இன்று பூச்சிமருந்துக்கள்தான் வாழை விவசாயத்தின் முக்கியமான செலவினம். வாழை நடும்போதே அந்தக்குழிக்குள் பூச்சிமருந்து தெளிக்கிறார்கள். அதன்பின் தழையுரம் வைக்கும்போதெல்லாம் பூச்சிமருந்து. கொஞ்சம் வளர்ந்து இலைபொதியாக மேலே எழும்போது இலையின் அக்குளுக்குள் பூச்சிமருந்து தெளித்து உள்ளே இறக்குகிறார்கள். வாழைத்தண்டு முழுக்க நீருடன் மருந்தும் ஊறியிருக்கும்.

வாழைக்காய் பொதியவிழுகையில் பூச்சிமருந்து ஒவ்வொரு வாரமும் அடிக்கிறார்கள். அதன்பின் கடைசியாக மடல் விரிந்தபின் பூவை ஒடித்துவிட்டு ஒரு சின்னப் பையில் யூரியா உரமும் பூச்சிமருந்தும் கலந்து அதை அந்தக் காயத்தில் கட்டி வைக்கிறார்கள். மருந்தும் உரமும் நேரடியாகவே காய்க்குள் செல்கிறது.அதே சமயம் வாழையின் தண்டுக்குள்ளேயே நேரடியாக உரத்தையும் பூச்சிமருந்தையும் ஊசிமூலம் செலுத்துகிறார்கள். காய் முற்றுவதற்கு மூன்றுமுறைகூட இதைச்செய்யவேண்டும்.

என்னென்ன பூச்சிமருந்துகள் என்று தெரியவில்லை. அவை வருடாவருடம் மாறிக்கொண்டிருக்கின்றன. அவற்றை வாழைக்குள் செலுத்துபவர்களுக்கே பெயர் தெரியவில்லை. கடையில் கேட்டு வாங்கிக்கொண்டுவருகிறார்கள். கொஞ்சம் விசாரித்தால் பெயர்களையும் பின்விளைவுகளையும் பட்டியலிட்டுவிட முடியும். அதை அறிவியலாளர்கள்தான் செய்யவேண்டும்.

அப்படி எவராவது செய்தால் மிச்ச அறிவியலாளர்கள் அவர்களைக் கொத்திப்பிடுங்கிவிடுவார்கள். உலகமெங்கும் இருந்த வாழைப்பஞ்சத்தைப் பூச்சிமருந்துக்கள்தான் இல்லாமலாக்கின என்பார்கள். பூச்சிமருந்து இல்லாவிட்டால் வாழையே அழிந்திருக்கும் என்பார்கள். ஆதாரங்கள் காட்டுவார்கள். கோட்பாடுகள் சொல்வார்கள். இதுதான் இருபதாண்டுக்காலமாக இங்கே நடக்கிறது.

இன்று இங்கே வாழைவிவசாயம் என்பது பெரும் முதலீடு இருந்தால் மட்டுமே செய்யக்கூடிய தொழில். வாழைவயல்களைக் குத்தகைக்கு எடுப்பவர்கள் சொந்தமாக லாரிகள் வைத்திருக்கிறார்கள். வாழைவயல்கள் பலவருடக் குத்தகைக்கு எடுக்கப்படுகின்றன. போட்டபணத்தை வட்டியுடன் மீட்டாகவேண்டும். ஆகவே அவர்களுக்கு வேறு வழி இல்லை

நிலத்தை வாழைக்குக் கொடுத்து மீட்டால் அந்த வயலில் அதன்பின் மரவள்ளிதவிர எதையும் விவசாயம் செய்யமுடியாது. காரணம் அதில் வாழைத்தண்டு இப்போதெல்லாம் மட்குவதில்லை. சொல்லப்போனால் டிடிடி போட ஆரம்பித்ததுமே வாழைத்தண்டு வயலில் மட்குவது குறைந்துவிட்டது. பூச்சிகள்தான் அவற்றை மட்கச்செய்திருந்தன. இன்று வாழைவயலருகே வாழைத்தண்டுகள் மலைபோலக் குவித்துப் போடப்பட்டிருக்கின்றன. அவற்றை எரித்து சாம்பலாக்குகிறார்கள். வயலின் களிமண் மணல் போல ஆகிவிடுகிறது. மண்ணில் விஷம் ஊறிவிடுகிறது. ஆனால் நெல் விவசாயம் நஷ்டமாக இருப்பதனால் வேறு வழியும் இல்லை.

குமரிமாவட்டத்தில் இந்த வாழைப்புரட்சியால் ஒட்டுமொத்த வாழை உற்பத்தி அதிகரித்திருக்கிறதா? வேலைவாய்ப்பு கூடியிருக்கிறதா? மக்களுக்கு லாபம் அதிகரித்திருக்கிறதா? வாழை மலிவான உணவாகியிருக்கிறதா? வாழையின் தரம் அதிகரித்திருக்கிறதா? எல்லாவற்றுக்குமே இல்லை என்பதுதான் பதில். அப்படியென்றால் எதற்காக இந்த மாற்றம்?

ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. பூச்சிமருந்து உர விற்பனைக்கூடங்கள் பெருகியிருக்கின்றன. அதுதான் வளர்ச்சி.

சென்ற ஐந்தாண்டுகளாக வாழை விவசாயமும் வீழ்ச்சியை நோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. ஏனென்றால் இப்போது பூச்சிமருந்து விலைகள் கடுமையாக ஏறிவிட்டன. இடுபொருட்செலவை வட்டியுடன் கணக்கிட்டால் லாபம் மிகமிகக் குறைவு. பெரிய வாழை உற்பத்தியாளர்கள் பின்வாங்கிவிட்டார்கள். நான் தேவதேவனைக்கூட்டிச்சென்ற வாழைவயல்வெளி இப்போது ரப்பர் காடாக மாறிக்கொண்டிருக்கிறது.

சித்த வைத்தியர்கள் செவ்வாழையை ‘சந்தான விருத்தி’ அளிக்கும் என்கிறார்கள். பூச்சி மருந்தில் வளர்ந்த செவ்வாழை, இருக்கும் சந்தான வாய்ப்புகளையும் இல்லாமலாக்கும். குழந்தைகளுக்கு மூச்சிளைப்பு போன்ற பல சிக்கல்களை உருவாக்கும்

குமரிமாவட்டத்தில் உள்ளூர்க்காரர்கள் இந்த விஷவாழைகளை அதிகம் சாப்பிடுவதில்லை. சரியான விஷக்கன்னி என்றால் செவ்வாழைதான். அதைச்சாப்பிடுவது நேரடியாக விஷம் சாப்பிடுவதுதான். நேந்திரம் அடுத்தபடியாக. இவை இரண்டுமே உண்மையான பணப்பயிர்கள் இங்கே. பெரும்பாலும் ஏற்றுமதியாகின்றன.

அதிகம் பூச்சிமருந்து கொடுக்கப்படாத சில வாழையினங்கள் இங்கே உள்ளன. மட்டி, சிங்ஙன், பேயன் போன்றவை. ருசியானவை. அவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். ஆனால் அனேகமாகப் பூச்சிமருந்தே அடிக்கப்படாமல் தானாகவே தோட்டங்களில் வளர்ந்து காய்க்கும் பழம் என்றால் இங்கே உள்ள நாட்டுமஞ்சள் வாழைப்பழங்கள்தான். கதலி, பாளையங்கோடன் என்று அவை பலவகை. அன்றாடம் உண்ண அவைதான் சிறந்தவை. பாளையங்கோடன் புளிக்கும். மலிவும்கூட. கௌரவம்பார்க்காமல் வாங்கினால் நல்ல உணவு

ஜெ

முந்தைய கட்டுரைஹலோ! ஹலோ!
அடுத்த கட்டுரைஆப்ரிக்க யானைடாக்டர்