சுஜாதாவுக்காக ஓர் இரவு

சுஜாதா அறிமுகம்

 

ஒரு மரணத்திற்கு எதிர்வினையாக நாம் குறைந்தபட்சம் வைக்கக் கூடியதென்ன? ஓர் இரவின் துயில் நீத்தலே. இன்றும் ஏராளமான பழங்குடிச் சமூகங்களில் அவ்வழக்கம் இருக்கிறது. இரவு நம்மைச்சூழ்ந்து அமைதியாக இருக்கையில், செயலழிந்த பிரபஞ்சம் ஒன்றை உணரும்போது, நாம் மரணத்தின் இருண்ட வெளியை மிக அந்தரங்கமாக அறிகிறோம். அது ஒருவரின் இழப்பு என்பதைத் தாண்டி மரணம் என்ற பிரபஞ்சநிகழ்வாக ஒருகணமேனும் நம்மை அடைகிறது.

இன்றிரவு முழுக்க விழித்திருந்தேன். படுத்தும், எழுந்தமர்ந்தும். சுஜாதாவின் எந்த நூலையும் படிக்கத்தோன்றவில்லை. அவை ஒருவகை கொண்டாட்டங்கள். இத்தகைய மனநிலைகளுடன் இயைவன அல்ல. இயல்பாகவே நாடி நாலாயிர திவ்யபிரபந்தத்தை படித்தேன்.

சுபமங்களாவின் நிகழ்ச்சி ஒன்றில் கோமல் சுவாமிநாதன் துணையுடன் சுஜாதாவை நான் முதலில் சந்திக்கும்போது என்னிடம் அவர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசித்ததுண்டா என்றார். அத்தகைய நூல்களை வாசித்ததுண்டு என எப்படிச் சாதாரணமாகச் சொல்ல முடியும் என்று கேட்டேன். வாசித்துக் கொண்டே இருக்கிறேன் என்றேன். அந்தப் பதில் சுஜாதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லா மனநிலைகளிலும் அவ்வப்போது அதைப்பிரித்து எதையாவது படித்து சரியான வரிகள் கண்ணில்பட்டதும் மூடிவிட்டு அதைப்பற்றி எண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

கோமலுக்கு வைணவ இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடும் தொடர்ந்த வாசிப்பும் நல்ல சேகரிப்பும் இருந்தது என்பது பலர் அறியாத தகவல். மூவரும் அன்று அதிகமும் நம்மாழ்வார் பற்றியே பேசிக் கோண்டிருந்தோம். பிற்பாடு நான் விஷ்ணுபுரத்தில் நம்மாழ்வார் சாயலில் ஒரு கதாபாத்திரத்தை கேலிச்சித்திரமாக எழுதிவிட்டேன் என்று சுஜாதா மிகவும் மனம் வருந்தி அந்நாவலை முழுக்கப் படிக்க மறுத்துவிட்டார். நெடுநாட்களுக்குப் பின்னர் நம்மாழ்வாரை நான் தமிழின் மாபெரும் கவிஞர்களில் ஒருவராக கருதுகிறேன் என்று எழுதியிருந்ததை வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசினார். [ கபிலர், ஔவையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, இளங்கோ, திருவள்ளுவர், கம்பன், நம்மாழ்வார்]

”ஏன் அப்படி எழுதினீர்கள்” என்றார் சுஜாதா, ஆழ்ந்த வருத்ததுடன். ”அது அந்த நாவலின் இலக்கிய உத்தி மட்டும்தான் சார். அதில் ஒட்டுமொத்தமாகவே உயர்தத்துவம் மீதான ஒரு அங்கதம் அப்படி பல கோணங்களில் வெளிப்படுகிறது” என்றேன். சுஜாதாவால் இறுதிவரை அதை ஏற்க இயலவில்லை. ஆனாலும் மீண்டும் நம்மாழ்வார் பற்றி பேசினோம்.

”ஆண்டாளை விடவா?” என்றார் சுஜாதா. அதே கேள்வியை ஆண்டாளின் தீவிர ரசிகரான வேதசகாயகுமார் பலமுறை கேட்டிருக்கிறார். ஆண்டாளிடம் நெகிழ்ச்சியும், தன்னைமீறும்கவித்துவ வேகமும் இருக்கிறது. பெரியாழ்வாரிடம் நெகிழ்ச்சியின் உச்சநிலைகள் உள்ளன. ஆனால் பெருங்கவிஞன் என்பவன் ஆழ்ந்த அறிவுத்தளமும் கொண்டவன். அவன் தத்துவஞானியும் கூட. நம்மாழ்வாரின் கவிதைகளில் விரிந்த தத்துவநோக்கும், கல்வியும் சுத்தமான பித்துநிலையுடன் பிறிதிலாது முயங்குகின்றன. பறவைகள் பறப்பது அழகு. யானை பறக்குமென்றால் அதுவே அற்புதம்.

இன்றிரவெல்லாம் விட்டுவிட்டு நம்மாழ்வாரையே படித்துக் கொண்டிருந்தேன். மேலே எழுப்பி காற்றில் உலவ விடும் ஒரு வரியுடன் வீட்டுக்குள் உலவி டீ போட்டு குடித்து சற்று நேரம் படுத்து மீண்டும் நூலைப்பிரித்தேன். அரவிந்தர் கவிதையின் மொழிவெளிப்பாட்டை Poetic utterance – கவித்துவ உளறல் என்கிறார். கவிதையின் உச்சம் Supreme poetic utterance என்கிறார். அந்நிலையில் மொழி மொழியாக மட்டுமே நின்று பேருவகையை அளிக்கிறது. ஒரு சொல்லிணைவு அதற்கு அப்பால் சிந்தனை நகர முடியாமல் நிறுத்திவிடுகிறது. பலசமயம் உச்சகட்ட கவித்துவநிலைகள் பிரமிப்பு நெகிழ்வு ஏக்கம் போன்ற ஆதி உணர்ச்சிகளில் நேரடி வெளிப்பாடுகள் மட்டுமே. ஆகவே அவை வெறும் வர்ணனைகள் அல்லது கூச்சல்களாகவே சாதாரண வாசிப்புக்குத் தென்படுகின்றன. விளக்க முடியாத ஒருமொழிநுட்பமே அவற்றை என்றுமழியா கவிதையாகவும் ஆக்குகிறது.

ரத்தினங்கள் கூழாங்கற்களாக இடறும் ஒரு நிலவெளியில் விழிபிரமித்து நடப்பது போன்றது நம்மாழ்வாரின் கவிதை. இந்த இரவின் தனிமையில் வெளியே தென்னையோலைகள் மேல் கோடைமழையின் தூறல்ஒலி தவளைக்கூச்சலுடன் சேர்ந்து ஒலிக்கும்போது என் தமிழ் ஒரு மொழியென்ற நிலையையே இழந்து தூய ஆனந்தவெளியாக முன்னால் நிற்கிறது.

”அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகமர் சூழொளியன்…”[2410] ”அழகமர் சூழொளி” என்ற சொல்லிணைவைத்தாண்டிச் செல்ல இயலவில்லை. சச்சிதானந்தம் என்ற கலைச்சொல்லின் ஒரு தமிழ் வடிவம் என ஒருவகையில் சொல்லலாம். அழகும் சாரமும் ஆன ஆனந்த வெளியானவன். ஆனால் அழகு அமர் சூழ் ஒளி என்ற சொல்லிணைவு அது மட்டுமல்ல. அந்த சொல்லிணைவு அந்நாவில் அமர்ந்த தருணத்தை சென்றடையும் வரை நம்மை இட்டுச்செல்லும் பயணம் அது.

”துளிக்கின்ற வானிந்நிலம்”. [2223] வைணவர்களின் வழக்கமான வாசிப்பிலும் உரைமரபிலும் பக்தி மற்றும் வேதாந்தம் சார்ந்து வரும் பொருள்கோடல்களைத் தாண்டிச்சென்று மதம்சாராத பக்திசாராத தூய கவிதைவாசிப்பொன்றை நிகழ்த்தினால் சடகோபனின் கவிதையில் திறக்கும் வாசல்கள் பல. கவிதையில் ஒட்டுமொத்த பாடலின் பொதுப்பொருள்தளத்தைவிட்டு எடுத்துக்கூட நாம் சொல்லிணைவுகளை நம்முள் விரித்துக் கொள்ளலாம். துளிக்கின்ற வானமே இந்நிலம். வானின் ஒருதுளி. இதன் அனைத்து இழிவுகளுடனும் இது வானமே. அளிக்கின்ற மாயப்பிரான் பள்ளி கொள்ளும் விசும்பு.

கருமை என்ற பொருள்நிலையை ஒரு பேருருவகமாக ஆக்குகின்றன வைணவ இலக்கியங்கள். ஒரு கருத்துநிலையாக ஒரு பிரபஞ்சநிலையாக இறுதியில் ஒரு பிரபஞ்ச அனுபவமாக. ‘மைதோய் சோதி” [2283] கருமையடர்ந்த பேரொளி. கருமையே பேரொளியாக ஆனது. பேரொளி என்பதே கருமையின் ஒரு நிலைதானா? மீண்டும் மீண்டும் பலநூறு முறை இந்த முரண்களுக்குள் சென்று வருகின்றன ஆழ்வார் பாடல்கள்.

நம்மாழ்வாரின் பாடல்கள் நெகிழ்ச்சியின் எல்லைகளுக்குள் முழுமையாக வருவது தலைவி,செவிலித்தாய் பாவனைகளில் பாடப்பட்ட பதிகங்களில். தமிழின் மகத்தான காதல்பாடல்கள் பல இவற்றில்தான் உள்ளன. சங்ககாலம் தொடங்கி அறுபடாது வளர்ந்து வந்த தமிழ் அகமரபின் உச்சநிலைகள் என ஏராளமான பாடல்களைச் சொல்ல முடியும். மிக எளிமையாக வெளிப்படும் உணர்ச்சிகரம் அந்த நேரடித்தன்மையாலேயே கவிதைவாசகனை தோயவைத்துவிடுகிறது. ”நின் பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்தென் நெஞ்சமே” [2436]ஆவிதழுவுதல் என்ற சொல்லை பல்லாயிரம் முறை சொன்னாலும் இணையாகாத உருவகம்.

காமம் பக்தியாக உன்னதப்படுத்தப்பட்டிருப்பது[Sublimation] உலகமெங்கும் உள்ள பக்திப்பாடல்களில் காணப்படுகிறது. கவிதை எல்லாவற்றையுமே உன்னதப்படுத்தும் கலை என்ற நோக்கில் இக்கவிதைகளின் மதிப்பு மிக அதிகம். தமிழின் மிக்ச்சிறந்த காதல்வெளிப்பாடுகள் நம்மாழ்வாரின் கவிதைகளில் உள்ளன. அவை மானுடக்காதலென்னும் நிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு காதல் என்ற தூயநிலையாக ஆக்கபப்ட்டவை. அவற்றை பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளின் உன்னதமாக்கலுடன் ஒப்பிட்டு வாசிக்கும் வாசிப்பு பல புது அனுபவங்களைத் திறக்கக் கூடும்.’அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதா என்னும்’ [2449]காதல்வேகத்தை கவிதையின் வழியாகவே அறிய முடியும்.

பக்தியின் உச்சநிலையை புரிந்துகொள்ள இன்றைய வாசகனுக்கு இருக்கும் இடர்கள் பல. கவிதைகளின் வழியாக அங்கே சென்றுசேர ஒரு வழி உள்ளது. உலகமெங்கும் எல்லா கவிதைகளிலும் காணப்படும் ‘தன்னை இழந்து பெரிதொன்றில் கரைவதற்கான’ மனநிலையை ஒரே மைய உணர்வாக உருவகித்து அதன் ஒரு பகுதியாக பக்தியையும் எடுத்துக் கொள்வதே அந்த பாதை. அந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதக் கவிதைகளில் உள்ள இயற்கையும் ,இருபதாம் நூற்றாண்டு இருத்தலியல் கவிதைகளில் உள்ள காலமும் ஒன்றே. அதையே விண்ணளந்தோன் என்றும் அம்பலத்தாடியவன் என்றும் வானுறை பிதா என்றும் கவிஞர் சொல்கிறார்கள் என்று கொள்ளலாம்.

நம்மாழ்வார் கவிதைகளின் பக்திவேகம் இரு எல்லைகளைத் தொட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. அந்த முதல்முழுமைக்கும் தனக்குமான தொலைவை உணரும்போது வரும் ‘அக்கணமே அழிந்துமறையத்துடிக்கும்’ ஆவேசம் ஒருபுறம். அந்த முதல்முடிவிலா வெளியை தானறியும் தன்மையுடன் சொந்தமாக்கிக் கொண்டுள்ள பரவசம் மறுபக்கம். ”நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை” [2464] என்று பெருமாளை சொந்தமாக அருகில் வைத்திருக்கும் அந்த நிலையை ஊகித்து இரவின் தனிமையில் புன்னகைசெய்துகொண்டேன்.

இன்றிரவு முழுக்க நம்மாழ்வாரின் சொற்கள். நூற்றுக்கணக்கில். விடிந்து வெகுதொலைவில் பறவைகள் எழும் ஒலி. ”பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்!” புவனமுழுதையும் ஆளும் பறவைகள் சொல்கின்றன விடிந்துவிட்டதென்று. இந்த இரவு சுஜாதாவின் நினைவுக்கு.

தொடர்புடைய கட்டுரைகள்:

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதா: மறைந்த முன்னோடி

முந்தைய கட்டுரைகத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைநம்மாழ்வார்- ஒரு கடிதம்