கல்வி

’குரு சரணம்’

‘வாழ்க பல்லாண்டு. வாழ்க நலம் சூழ’

’இப்ப கொஞ்சநாளாவே இங்கதான் வந்திட்டிருக்கேன் சாமி. பைல்ஸ் இருக்கு. மூட்டு ஆப்பரேஷனும் பண்ணிட்டிருக்கேன்…இருந்தாலும் விடாப்பிடியா வந்திட்டிருக்கேன்…’

‘நீங்க எங்க கோர்ஸுகள விடாம ஃபாலோ பண்ணினீங்கன்னா—’

‘எல்லா கோர்ஸும் முடிச்சாச்சு சாமி. சொல்லப்போனா கோர்ஸுகளிலே நான்தான் பஸ்ட். வெள்ளிக்கிண்டிகூட பிரைஸா குடுத்தாங்க’

‘வெரிகுட்…’

‘அதெல்லாம் சிஸ்டமேட்டிக்கா பண்ணிடுவேன்… எல்லா ஹேண்ட்புக்கையும் கரெக்டா படிச்சிருவேன். பிராக்டீஸெல்லாம் கரெக்டா பண்ணுவேன்’

‘வைபரேஷன் இருந்திருக்குமே’

‘நான் ஆஃப் மோடிலே போட்டுக்கறது…சார்ஜ் தீராது பாத்தீங்களா?’

‘வெரிகுட்’

’அப்றம் கேட்டேன், மேக்கொண்டு கோர்ஸ் ஒண்ணும் கெடையாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா என்னோட பிராஃப்ளம் அப்டியேதான் இருந்தது. அதை நாலஞ்சு கேள்வியா கேட்டேன். பரமானந்தாவும் ஆத்மானந்தாவும் சத்யானந்தாவும் நீங்க இத சித்குருக்கிட்டேதான் கேக்கணும்னு சொல்லிட்டாங்க…சரீன்னு ஆறுமாசமா வெயிட்பண்ணி இந்த ஒன்னவர் அப்பாயின்மெண்டை வாங்கியிருக்கேன்…எனக்கு நீங்கதான் வழிகாட்டணும்’

‘கேளுங்க’

‘சாமி,வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?’

‘புரியலை’

‘அதாவது நாம எதுக்காக பிறக்கிறோம் எதுக்காக வாழறோம் எதுக்காக சாகறோம்?’

‘இதைத்தான் நசிகேதன்–’

‘கடோபநிஷத் கிளாஸ்லாம் அட்டெண்ட் பண்ணிட்டேன். நான் கேக்குறது எனக்குண்டான பதிலை…நீங்க வழிகாட்டணும்’

‘சரி , அப்ப ஒண்ணு பண்ணுவோம்…நீங்க உங்க வாழ்க்கைய விரிவா சொல்லுங்க…நான் அதுக்கான அர்த்தமென்னன்னு சொல்றேன். சரியா?’

‘சரிங்க சாமி… ‘

‘உங்கபேரு, அப்பாஅம்மா பேரு, ஊரு, வேலை, குடும்பம் மத்த டீடெயிலெல்லாம் ஏற்கனவே ஃபைலிலே இருக்கு. பாத்துட்டேன். நீங்க சொல்லவேண்டியது சம்பவங்கள…உங்க ஞாபகத்திலே என்ன இருக்கொ அதை வரிசையா சொல்லுங்க’

‘என் ஞாபகத்திலே இருக்கிற முதல் விஷயம்னாக்க நான் சின்ன வயசிலே பிரிகேஜி போனதுதான் சாமி. அப்பா மெட்ராஸிலேதான் வேலைபார்த்தார். அங்கியே செட்டிலாயிட்டோம். எனக்கு ஒண்ணேமுக்கால் வயசா இருக்கிறப்ப வீட்டிலே கண்டதையும் கடியதையும் எடுத்து தின்னு ரகளை பன்றேன்னுட்டு நேரா கொண்டுபோயி பிரிக்கேஜியிலே சேத்துட்டாங்க. ரெண்டுவயசு தாண்டியாச்சுன்னு பொய் சொல்லிட்டாங்க. அப்ப எனக்கு பேச்சு வராது. அம்மா அப்பா டிவி மூணும்தான் சொல்லுவேன். நாங்க சின்ன ஃப்ளாட்டிலேதான் இருந்தோம். ஸ்கூல் அதைவிட கொஞ்சம் சின்ன இன்னொரு ஃப்ளாட். கூட்டிட்டுபோய் திரும்பக்கொண்டாந்துவிட ஆட்டோ வந்திரும். நான் எங்கப்பாகூட ஸ்கூட்டரிலே ஏறி முதல்முதலா பிரிஸ்கூலுக்குப்போனது ஞாபகமிருக்கு. எங்க அம்மா அன்னிக்கு கற்பகவல்லியம்மன் கோயிலுக்குப்போயி வேண்டுதல் பண்ணி பிரசாதம் கொண்டுவந்து நெத்தியிலே போட்டுவிட்டாங்க. நல்லா படிப்பு வரணும்னுட்டு’

‘ஓகோ….நீங்க நல்லா படிச்சிருப்பீங்களே’

‘ஆமா சார். எல்லாத்திலேயும் நான்தான் ஃபஸ்டு. அதுக்கு எங்கம்மாதான் காரணம். அம்மாவுக்கு என் படிப்பு மேலே பெரிய வெறி. சொல்லப்போனா ப்ரிஸ்கூலுக்கு போறதுக்கு ஒருவாரம் முன்னாடியே எங்கம்மா எனக்கு வீட்டிலே கோச்சிங் ஆரம்பிச்சிட்டாங்க. கைக்குழந்தையா இருக்கிற நாளிலே இருந்து எங்கம்மா எங்கிட்ட ஸ்கூல்பாடத்த மட்டும்தான் பேசியிருக்காங்க….சமையல்செய்றப்ப மேடையிலே ஒக்காந்து படிக்க வைப்பாங்க. அவங்களும் சொல்லிக்குடுப்பாங்க. வெளியே கூட்டிட்டுப்போனா போற வழி முழுக்க பாடம்தான் சொல்லிக்குடுப்பாங்க. ராத்திரி சாப்பாடு ஊட்டிட்டே பாடம் சொல்லிக்குடுத்து பக்கத்திலே படுக்கவைச்சு பாடம் சொல்லிக்குடுத்து தட்டித்தட்டி தூங்க வைப்பாங்க’

‘அப்றம்?’

‘பிரிக்கேஜி படிக்கிற காலத்திலேயே எங்கம்மா காலையிலே அஞ்சுமணிக்கெல்லாம் எழுப்பிடுவாங்க…அதிகாலையிலே எந்திரிக்கிற பழக்கம் அப்பதாங்க ஆரம்பிச்சுது. இப்பகூட காலம்ப்ற நாலுமணிக்குமேலே தூங்குறதில்ல. எந்திரிச்சதும் போர்ன்விட்டா. டாய்லெட் போய்ட்டுவந்ததும் கோச்சிங் ஆரம்பிச்சிருவாங்க. எட்டு எட்டரைக்கெல்லாம் முடிச்சுட்டு குளிச்சு கெளம்பினா ஆட்டோ வந்திரதுக்குள்ள ரெடியாயிருவேன்… குளிப்பாட்டுறப்ப ஷூபோட்டு விடுறப்ப ஈஸியான பாடமா எடுப்பாங்க…சாயங்காலம் ஸ்கூல் விட்டா நேரா டியூஷன்…ஏழரைக்கு வீட்டுக்குவந்ததும் கைகால்முகம் கழுவிட்டு உக்காந்தா அம்மா பாடம் சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிருவாங்க…அப்டி படிச்சேங்க’

‘நல்ல ஸ்டூடண்டா இருந்திருக்கீங்க’

‘ஆமா சாமி. எப்பவும் நான்தான் பஸ்டு. அது ஒண்ணும் சின்ன விசயம் இல்ல. எங்க ஸ்கூலிலே எல்லா பசங்களும் என்னைய மாதிரியே படிக்கிறவங்கதான். அவங்களிலே நம்பர் ஒன்னா இருக்கிறதுங்கிறது ரொம்ப கஷ்டம்… ஒரு செகண்ட் அசந்தா போயிரும்…எங்கப்பாவையும் சொல்லணும். அவருக்கு நேரமில்ல.இருந்தாலும் ராத்திரி ஒருமணிநேரம் கோச்சிங் குடுப்பார். ஞாயித்துக்கெழமை வெளியே பார்க் கடற்கரைன்னு கூட்டிட்டு போயி அங்கவச்சு பாடம் சொல்லிக்குடுப்பார்… போறவழியிலே பைக்லே நான் படிச்ச பாடங்கள ஒப்பிச்சுகிட்டே இருப்பேன்…அம்மாவுக்கு இதெல்லாம் பிடிககது. டைவர்ஷன்னு சொல்லி கத்துவா…பிள்ளைங்களுக்கு ஒரு ரிலாக்ஸ் வேணும்டீன்னு அப்பா சொல்லுவார். அவரு ரொம்ப ஃப்ரீ டைப்பு…ஒம்பதாம் கிளாஸுக்குமேலே அப்பா எக்ஸாம் டைமிலே லீவு போட்டிருவார். பத்தாம் கிளாஸிலே வருஷம் முழுக்க அப்பா அம்மா ரெண்டுபேருமே வீட்டிலே இருந்து கோச்சிங் குடுத்தாங்க…எங்கப்பா என்னை பைக்லே உக்காரவச்சு ஸ்கூல் கூட்டிட்டுப்போவார். போறவழியிலே நான் ஒப்பிச்சுகிட்டே போவேன்…பிளஸ்டூவிலே இருந்து நான் தெனம் மூணுமணிநேரம் தூங்குற பழக்கத்துக்கு வந்துட்டேன். எங்கப்பா அம்மா ரெண்டுபேரும் நான் தூங்கினபிறகு தூங்கி நான் முழிக்கிறதுக்குள்ள எந்திரிச்சிருவாங்க’’

‘பிளஸ்டூவிலே நல்ல மார்க் எடுத்திருப்பிங்களே’

‘நல்ல மார்க்குன்னு சொல்லணும்…தொண்ணூத்தொன்பது பர்சண்டேஜ் இருந்திச்சு. ஆனா ஸ்டேட் லெவல்லே பதினாறாயிரத்தி பதிமூணாம் ரேங்கு. டாக்டருக்கு கெடைக்கலை. அதனால எஞ்சீனியரிங் சேர்ந்தேன். அங்கியும் படிப்புதான். படிப்பு முக்கியம்டா, கேம்பஸ் இண்டர்வியூவிலே வந்திரணும்டான்னு அப்பா சொல்லிட்டே இருப்பார். வீட்டிலே டிவி, ரேடியோ, நியுஸ்பேப்பர் ஒண்ணும் கெடையாது. ஸ்கூலைவிட்டா எங்கியுமே போறதில்ல. அட்டென்ஷன் டைவர்ட் ஆயிடும்ல? அப்பா நான் படிக்கிற நேரம் முழுக்க கூடவே அவரும் இருப்பார். கேள்விகள் கேப்பார். அம்மா நான் படிக்கிறதுக்குண்டான சமையல் எல்லாம் பாத்துக்குவார்…’

‘நல்ல மார்க் வாங்கி பாஸாயிருப்பீங்க’

‘ஆமா சாமி… ஆனாலும் கடுமையான போட்டி. நாநூத்தி எட்டாம் பிளேஸ்தான் நான். வேலையிலே சேர்ந்துட்டே பல கோர்ஸுகள் படிச்சேன். அப்றம் வேலைய விட்டுட்டு மூணுவருஷன் எம்பீஏ பண்ணினேன். இன்னொரு கம்பெனியிலே சேந்தேன். அங்க நல்லவேலைதான். ஆனா நாம அப்டேட் பண்ணிக்கலைன்னா போட்டியிலே தட்டிருவானுக. அதனால அங்கயும் படிச்சேன். மொத்தம் பதினேழு கோர்ஸ் முடிச்சிருக்கேன்…’

‘சரி…அப்றம் கல்யாணம்…’

‘அம்மா அப்பா பாத்துவச்சதுதான்…கரெக்டா பத்தாம் மாசம் பிரபா பிறந்துட்டா. அடுத்தவருசம் பிரசன்னா.சரி போரும்னு கல்யாணி சொன்னா. ரெண்டையும் படிக்கவச்சு ஆளாக்கறதுன்னா கஷ்டமில்லியா?’

‘நல்லமுடிவுதான்’

‘முழுகாம இருக்கிறான்னு டாக்டர் சொன்னப்பவே கல்யாணி சொல்லிட்டா புள்ளைங்க பத்மாசேஷாதிரிலே படிக்கணும்னு.. பழைய ஃபிளாட்ட வித்துட்டு ஸ்கூல் பக்கமா பிளாட் வாங்கினோம். கொழந்தைக்கு இப்பல்லாம் ஒருவயசுக்குள்ளேயே எஸென்ஷியல் கோச்சிங் குடுக்கிறாங்க…’

‘ஓ, ஸ்பெஷலிஸ்டுகள் இருக்காங்களா?”

‘இல்ல…நாமதான் கோச்சிங் குடுக்கணும். அதுக்கு நமக்கு கோச்சிங் உண்டு. பிள்ளை உண்டானதுமே சேந்திரணும். பிரபாவுக்கு நான் ஆறுமாசத்திலே கோச்சிங் ஆரம்பிச்சுட்டேன்…ஒண்ணர வயசிலே பிரிகேஜியிலே சேத்தோம். அதுக்குள்ள சின்னவன். அவனுக்கு பேஸிக் கோச்சிங். இவளுக்கு எலிமெண்டரி கோச்சிங். காலையிலே நாலுமணிக்கு எந்திரிச்சு ஆரம்பிச்சா ராத்திரி பத்துமணிக்கு ரெண்டையும் தூங்க வச்சுட்டு என்னோட கோர்ஸுக்குண்டானத படிச்சுட்டு நான் தூங்க பன்னிரண்டோ ஒருமணியோ ஆயிடும்…’

‘சரி’

‘ரெண்டும் நல்லபடியா படிச்சுதுங்க…நாம சொல்லிக்குடுக்கிறதிலேதான் இருக்கு எல்லாம். நானும் வைஃபும் அதில கொறைவைக்கல்லை. சொல்லப்போனா நாங்க எந்த டைவர்ஷனும் வச்சுக்கிடறதில்லை சாமி. டிவி, பத்திரிகை, சினிமா, பாட்டு, ஒண்ணும் கெடையாது. ஜெயலலிதா எலக்‌ஷனிலே தோத்த தகவல் எனக்கு ஒருவருசம் கழிஞ்சுதான் தெரிஞ்சுதுன்னு சொன்னா ஆச்சரியப்படுவீங்க…அதை என் வீட்டுக்காரிகிட்டே சொன்னா ஜெயலலிதாவா யாருன்னு கேக்கிறா…எங்களுக்கு புள்ளைங்க படிப்புதான் முக்கியம்….நான் போன ஒரே கோயில்னாக்க கபாலீஸ்வரர் கோயில்தான்…அதும் சின்னவயசிலே எப்பவோ. மெட்ராஸ்லே ஒரு தியேட்டருக்கு போனதில்லை. சொல்றதுக்கென்ன நான்லாம் ரஜினியோ கமலோ நடிச்ச ஒரு படம்கூட பாத்ததில்ல…போஸ்டரிலே மொகம் பாத்ததோட சரி’

‘சரவணபவன்ல சாப்பிட்டிருப்பீங்களே’

‘அது எந்த எடம்? ஓட்டலா?’

‘ஆமா…ஒருவழியா பிள்ளைங்கள கரையேத்திட்டீங்க’

‘பின்ன? அதுக்குன்னே வாழ்ந்தோம் சாமி.. இருவத்தெட்டு வருஷம் அதுதான் கனவும் நனவும் எல்லாம்…நான் என் மனைவிகிட்ட பிள்ளைங்க படிப்பைப்பத்தி மட்டும்தான் பேசியிருக்கேன். வேற ஒரு வார்த்தை பேசினதில்ல….பிள்ளைங்ககிட்டகூட வேற ஒரு வார்த்தை பேசினதில்லை. டைவர்ட் ஆயிடக்கூடாது பாருங்க…சரிதான் பேச எங்க நேரம்? படிக்கிறதுக்கே மலை மலையா இருக்கும். இப்பல்லாம் புக்ல இருக்கிற புள்ளி கமால்லாம் சரியாப்போட்டாத்தான் நூறுமார்க் குடுக்கிறாங்க…பிரசன்னா ஒருவாட்டி தொண்ணூத்தொன்பது வாங்கிட்டான். போய்ட்டேன்ல? புக்கோட போய் கேட்டேன்…பாத்தா இந்தக்கேனையன்தான் தப்பு பண்ணியிருக்கான். ஊட்டிக்கிட்டே கோச்சிங் குடுத்ததனால ஒரு கடுகு பாடப்புத்தகத்திலே விழுந்து ஒட்டியிருக்கு. முட்டாப்பய அதை ஃபுள்ஸ்டாப்னு நெனைச்சு போட்டு தொலைச்சிட்டான்…அப்றம் புக்கை ஈரத்துணியாலே மெள்ளமா தொடைச்சதுக்குப்பிறவுதான் கோச்சிங் குடுகிறது…’

‘பிள்ளைங்க நல்லா இருக்காங்கள்ல?’

‘ஆமா சாமி …மூத்தவ பிளஸ்டூ முடிக்கிறப்ப சின்னவன் பிளஸ் ஒன். பிரபாவுக்கு ஒடனே பிளேஸ்மெண்ட் ஆயிடுச்சு. அவ மேக்கொண்டு படிக்கிறா. அவ அங்கியே ஒருபையன பாத்துட்டா. ரெண்டுபேரும் சேர்ந்து என்னமோ கோர்ஸ் படிச்சிருக்காங்க. அவங்களே சொன்னதனால கல்யாணம் பண்ணிவச்சோம். அவங்க ரெண்டுபேரும் இப்ப ஜப்பான்ல இருக்காங்க. அவ அங்க புதிசா ஒரு கோர்ஸிலே இப்பதான் சேந்திருக்கா…பிரசன்னா எஞ்சீனியரிங் முடிச்சான். பிறகு எம்பிஏ முடிச்சான். நாலஞ்சு கோர்ஸ்பண்ணிட்டு இப்ப அமெரிக்கால இருக்கான். போனவருஷம் அவனுக்கும் ஒரு கல்யாணத்த பண்ணிவச்சோம். அங்க எப்டியாவது எம்மைட்டியிலே சேர்ந்து படிக்கணும்னு கடுமையா கோச்சிங் எடுத்துக்கறான்…இப்ப நானும் வைஃபும் அமிஞ்சிக்கரையிலே ஒரு ஃப்ளாட்டிலே இருக்கோம்….’

‘சுருக்கமாவே சொல்லிட்டீங்க’

‘இப்ப எனக்கு நெறைய ஃபிலாசபிக்கலா டவுட்டுங்க இருக்கு சாமி. அதாவது இந்த மனுஷப்பிறவிக்கு என்ன அர்த்தம்? இப்ப இந்த வாழ்க்கைய ஒரு பரீட்சையா வச்சுக்கிட்டோம்னா நாம ஜெயிச்சோமா தோத்தோமாங்கிறத எப்டி தெரிஞ்சுகிடறது?’

‘எப்ப இந்த கேள்வி ஆரம்பிச்சது?’

’போனவருஷம் எனக்கு ஒரு ஹார்ட் அட்டாக் வந்திச்சு…அப்பதான் நினைச்சேன். இப்டியே செத்துட்டேன்னா நம்ம வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்னு…ஒடனே உங்க கோர்ஸிலே சேந்துட்டேன். எல்லா கோர்ஸிலேயும் நான்தான் ஃபஸ்ட். கிண்டி கெடைச்சிருக்கு. ஆனாலும் கேள்வி அப்டியே இருக்கு. வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?’

‘இந்த கேள்விக்கு பதிலை நேரடியா சொல்லமுடியாது…ஏதாவது பரீட்சை வச்சுத்தான் சொல்லமுடியும்’

’சொல்லுங்க சாமி…நான் எதுக்கும் ரெடி’

‘இதப்பாத்தீங்கள்ல?‘

‘உங்க புக்ஸ்…’

‘மொத்தம் நாநூத்தி எம்பெத்தெட்டு புக்ஸ் இருக்கு. எல்லாத்தையும் ஒக்காந்து படியுங்க’

‘படிச்சுடறேன் சாமி’

‘ஈரத்துணியால தொடைச்சுட்டு படிக்கணும்…கமா புள்ஸ்டாப் ஒண்ணும் தப்பாயிடக்கூடாது’

‘அதெல்லாம் கவனமா படிப்பேன் சாமி’

‘அப்றம் இங்க ஒரு எக்ஸாம் வைப்போம். இருநூறு மார்க். அம்பது மார்க்கு அம்ஜெக்டிவ் டைப். அதில இருநூறுக்கு இருநூறு எடுத்தீங்கன்னா பதிலை சொல்லிருவோம்’

‘ரொம்ப சந்தோஷம் சாமி…சரியா எழுதிடறேன்…’

‘ஒரு வருஷம் எடுத்துக்கிடுங்க’

‘சரிங்க சாமி…கொஞ்சம் கஷ்டம்தான்… இருந்தாலும் பாப்ப்போம்…இந்த வாய்ப்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்’

‘வாழ்க பல்லண்டு. வாழ்க நலம் சூழ’

முந்தைய கட்டுரைபயணம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …