சோ-ஒருபதில் கடிதம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ என்ற தலைப்பிலான உங்களின் கருத்துக்களிற்கு வாசகர் ஒருவரின் எதிர்வினை ஒன்றைப் பதிவாக்கியிருந்தீர்கள்.

எனது சிறுவயதில் பாடசாலைப் பருவத்தில் இருந்தே சில சஞ்சிகைகளைத் தொடர்ந்து வாங்கிவருகின்றேன்.அவற்றில் துக்ளக்கும் ஒன்று.இவ்வருடத்துடன் இருபதாண்டுகள் ஆகின்றன.எனவே இது தொடர்பில் சில கருத்துக்களை என்னால் பகிர்ந்து கொள்ளமுடியும் என நினைக்கின்றேன்.அண்ணா ஹசாரே விடயம் தொடர்பாகப் பார்ப்பதற்கு முன் சோ ராமசாமியின் கருத்து உருவாக்கம் அதற்கான அவரின் அணுகுமுறையை அவதானிக்கவேண்டியுள்ளது.அவர் பெரும்பாலும் ஒரு இலட்சியவாத அற அடிப்படையிலான அணுகுமுறை அல்லாமல் நடைமுறைவாத அணுகுமுறையையே தனது கருத்துக்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்துகின்றார்.இது இருப்பதில் ஒப்பீட்டளவில் சிறந்ததைத் தெரிவுசெய்தல் என்பதாக அமைகின்றது.

இந்த ஒப்பீட்டுரீதியான தெரிவு சோவினுடைய சொந்த அடிப்படைக்கருத்தியல் சார்ந்தே அனேகமாக அமைகின்றதே அல்லாமல் பல்வேறுகாரணிகளை,சிக்கல்களை,ஆழங்களை ஆராய்வதன் அடிப்படையில் அமைவதில்லை.இதன் அடுத்த கட்டமாக அவர் ஏதாவது ஒரு காரணத்தை அல்லது கோணத்தை வைத்து இருமையை அல்லது எளிமைப்படுத்தலை செய்வார்.பின்னர் அவரின் தெரிவுக்குரியதற்கு ஆதரவாக ஒரு வழக்கறிஞரின் பாணியில் வாதங்களை முன்வைப்பார்.இந்த நிலையில் அவர் எடுத்துக்கொண்ட தரப்பின் குற்றங்கள், தவறுகள்,குறைபாடுகள்,பலவீனங்கள் இருட்டடிப்பு செய்யப்படும் அல்லது தாக்கப்படும்.மற்றைய தரப்புக்களின் நிறைகளிற்கும் இதுவே நடக்கும்.அவர்களின் குற்றங்கள்,தவறுகள்,குறைபாடுகள்,பலவீனங்கள் ஊதிப்பெருக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படும்.ஒரு எடுத்துக்காட்டுக்கு பெங்களூரில் நடக்கும் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய சோவின் மௌனங்களையும் கருத்துக்களையும் அவதானித்தால் போதுமானது.

இதை சோவினுடைய இன்னுமொரு பாத்திரத்தையும் இணைத்தே புரிந்து கொள்ளவேண்டும்.சோ ராமசாமி ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்ல ஒரு அரசியல் தரகரும் கூட.எனவே அவரால் மற்றைய பத்திரிகையாளர்களைப் போல் இலட்சியவாத நோக்கில் கருத்துக்களை முன் வைக்கமுடியாது.அவரின் பத்திரிகையாளர் பாத்திரமும் அரசியல்தரகர் பாத்திரமும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வைக்கப்பட்ட ஆடிகள் போன்றவை.ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டே இருக்கின்றன.(ஜெ அண்ணா வேறு இடத்தில் பயன்படுத்திய இப்படிமத்தை இங்கு பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும்.)

நான்கு தசாப்தங்களிற்கு மேலாகத் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்விற்கு துக்ளக் ஆற்றிவரும் பங்களிப்பு புறக்கணிக்க முடியாதது.ஆயினும் சிந்தனைகளை வளர்த்து கொண்டு செல்லவிரும்புபவர்கள் அதன் குறும் அணுகுமுறையைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும்.வரலாற்று,சமூகப் பின்புலத்தில் ஆழ்ந்து அகன்று நுண்ணிய நோக்கை நாடுபவர்களுக்கு அது போதுமானதன்று.

அண்ணா ஹசாரே தொடர்பான சோவின் நிலைப்பாட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்குமொருவர் அதில் இருந்து பெறுவது என்ன?அண்ணா ஹசாரே மீதான மட்டம்தட்டலையும்,நம்பிக்கை இழப்பையும் கோமாளியாக்கத்தையுமே.மற்றையவை எல்லாம் வெறும் சப்பைக்கட்டுக்களே.

இதற்கான காரணம் என்ன?உண்மையிலேயே காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்திகொள்ளவேண்டிய பிரதான எதிர்க்கட்சியான பாஜக எடியூரப்பாவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களாலும் உட்கட்சி ஒற்றுமையின்மையாலும் சந்தர்ப்பத்தை தவறவிட்டுக்கொண்டிருந்தவேளை அண்ணா ஹசாரே அந்த இடத்தை நிரப்பத்தொடங்கியமை சோவிற்கு இயல்பாகவே ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.எனினும் அண்ணா ஹசாரேயின் போராட்டமானது ஊழலைப்பற்றிய பெரிய அளவிலான எதிர்ப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தியது.இது அரசியல் களநிலையில் ஆளும் கூட்டணிக்கு பாதகத்தையும் எதிர்க்கட்சியான பாஜகவிற்கு சாதகத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

அவ்வாறாயின் அண்ணா ஹசாரே போராட்டத்தை ஏன் சோ மலினப்படுத்த முனைந்தார் என்ற கேள்வி எழுகின்றது.இதற்கு முக்கிய காரணம் எதிர்கால சாத்தியகூறு ஒன்றுதான்.அண்ணா ஹசாரேயின் பிரபலம் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளப்படக்கூடும் என்று அவர் அச்சமடைந்தார் என்றே கருதமுடிகின்றது.மதச்சார்பற்ற,ஊழலுக்கு எதிரான மூன்றாவது அணியொன்று உருவாகி அது அண்ணா ஹசாரேவை முன்னிறுத்தினால் அல்லது அவரின் ஆதரவைபெற்றால் அது காங்கிரசைவிட பாஜகவையே அதிகம் பாதிக்கும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வே சோவின் கருத்துக்களை வடிவமைத்தன.

சோ ஒரு வடமொழி சுலோகத்தைத் தமிழ்ப்படுத்தியிருப்பார்.அது…ஒரு கிராமத்தின் நன்மைக்காக ஒரு தனிமனிதனை விட்டுவிடலாம்.ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு கிராமத்தை விட்டுவிடலாம் என்றவாறு அது போகும்.தனிமனிதன் குற்றங்கள் எதுவும் செய்யாத நிலையில் அவனைக் கிராமத்தின் நன்மைக்காக விட்டுவிடுவது சரியானதுதானா என்ற அறத்தின் அடிப்படையிலான கேள்விக்கு இங்கு பதில் கிடைப்பதில்லை.இது ஒரு ராஜநீதி அவ்வளவுதான்.சோவைப் பொறுத்தவரை அண்ணா ஹசாரேயைவிட காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு நன்மையானது.அதற்காக அவர் அண்ணா ஹசாரேயை விட்டுவிட்டார்.

ந.சிவேந்திரன்

அன்புள்ள சிவேந்திரன்

என்னுடைய கருத்து நீங்கள் சொல்வதுடன் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போகிறது

ஜெ

முந்தைய கட்டுரைநினைவில்நிறுத்துதல்…
அடுத்த கட்டுரைதென்கரை மகாராஜன்