மரபு, நவீனத்துவம், பின் நவீனத்துவம் – சதுரங்கத்தின் வரலாற்றில்: கெ.எம் நரேந்திரன்

எல்லா விளையாட்டுகளும் குறியீடுகள்தான். ஆயினும் சதுரங்கம் போல முழுமையான ஓர் குறியீட்டு ஆட்டம் வேறில்லை. அது போரின் ஆட்டம். மனித மனங்களில் உறைந்துள்ள கறுப்புக்கும் வெளுப்புக்கும் இடையேயான போர். ரத்தமின்றியே உச்சகட்ட வன்முறை தெறிக்கும் களம் அது.

புராண காலம் முதல் இந்தியாவில் சதுரங்கம் இருந்துள்ளது. சதுரங்கத்தின் பிறப்பிடம் இந்தியா என்பது வரலாறு. அரேபியா வழியாக அது ஐரோப்பா சென்றது. வெகுகாலம் அது அரச சபைகளுக்குரிய உயர்குடி விளையாட்டாகக் கருதப்பட்டது. சதுரங்கத்தைப் பிற விளையாட்டுகளில் இருந்து பிரித்துக் காட்டும் முதன்மையான அம்சம் அது மற்ற விளையாட்டுகளைப்போல நற்செயல்களின் மூலம் தீர்மானிக்கப்படுவதாக இல்லை என்பதே. மற்ற விளையாட்டுகளில் திறமையும் மனஉத்வேகமும் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்ற போதிலும் ஆட்டத்தருணத்தில் நிகழும் தற்செயல்களின் முக்கியத்துவம் மிகப் பெரியது. உதாரணம் கிரிக்கெட்  போன்ற உடல்வலிமையை மட்டுமே சார்ந்த ஆட்டங்களில் கூடத் தற்செயலின் இடம் அதிகம். ஆனால் சதுரங்கத்தில் தற்செயல் வடிவில் ‘கடவுள்’ முகம் காட்ட முடியாது. அது முழுக்க முழுக்க மனிதமூளையின் ஆட்டம். தருக்கம், கற்பனை, மனவலிமை என்ற மூன்று அம்சங்களும் ஒரு மூளையில் ஒன்றாகக் குவிவதன் விளைவு அது.

காரி காஸ்பரொவ்

ஆகவேதான் பிற ஆட்டங்களிலிருந்து மாறாக சதுரங்க ஆட்டம் எழுத்துவடிவத்துக்கு மிக நெருங்கியதாக உள்ளது. அதை நாம் முழுமையாக எழுதிப் புத்தகங்களில் சேமிக்க முடியும்! அப்புத்தகங்களை வாசிப்பதன் மூலம் சதுரங்க ஆட்டத்தை நம் மனதில் முழுமையாக நிகழ்த்திவிடமுடியும். அவ்வாட்டத்தின் புதிய புதிய சாத்தியக்கூறுகளை நாம் கற்பனை செய்து கொள்ளவும் முடியும்.

உதாரணமாக சதுரங்க ஆட்டங்கள் கடந்த முன்னூறு வருடங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் பால் மோர்·பி என்ற சதுரங்க மேதை தன் எதிரிகளை முழுக்க ஒருமுறைகூட தோற்காமல் வென்றார். இவரது ஆட்டங்கள் முழுக்க பதிவு செய்யப்பட்டுள்ளன! இன்று இவற்றைப் பார்க்கையில் மோர்பியின் தந்திரம் என்ன என்று புரிகிறது. தன் எதிரியின் கவனப் பிசகுகளிலேயே அவர் குறியாக இருந்தார். அவற்றை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அவ்விஷயத்தை முதலிலேயே எதிரிக்குத் தெரியவும்படுத்தினார். ஆகவே எதிரிகள் தொடக்கத்திலேயே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால் அவர்களால் மோர்·பியை வெல்லவே முடியவில்லை! மோர்·பியின் ஆட்டத்தை இன்று பார்க்கையில் ஏராளமான பிழைகள் தெரிகின்றன. அவற்றை எதிரிகள் பயன்படுத்தவேயில்லை.

இன்று மோர்-பியின் ஆட்டம் அணு அணுவாக ஆராயப்படுகிறது. அவரது பிழைகளை இன்று ஆரம்பகால ஆட்டக்காரர்கள் கூட நிகழ்த்துவது இல்லை. இது சதுரங்க ஆட்டத்தின் இன்னொரு முக்கியமான சிறப்பம்சத்தை நமது கவனத்துக்குக் கொண்டு வருகிறது. அதாவது பிற ஆட்டங்களைப் போலன்றி சதுரங்கம் ஒரு முழுமையான மரபுத் தொடர்ச்சி. அறிவுத்துறைகளில் மட்டுமே இத்தகைய தொடர்ச்சி காணப்படுகிறது. ஆகவே ஆட்டத்தின் தரம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மூதாதையரின் முழு ஆட்டங்களும் இளம் ஆட்டக்காரனுக்குக் கிடைத்துவிடுகிறது.

ஆகவே சதுரங்கம் மானுட அறிவியக்கத்தின் இணைகோடாக நகர்ந்து வருகிறது. சிந்தனை இயக்கத்தில் உள்ள எல்லா ‘அலை’ களும் சதுரங்கத்திலும் உண்டு. சதுரங்க ஆட்டம் செவ்வியல் காலகட்டம், நவீனத்துவ காலகட்டம் என்று பிரிக்கப்படுகிறது!. 1497இல் வெளிவந்த லூயி ராமிரே தி லூசியானா என்பவரின் ஒரு கட்டுரையை சதுரங்கம் குறித்து எழுதப்பட்ட நூல்களில் புராதனமானது என்று குறிப்பிடுகிறார்கள். (அரபுமொழிகளில் வேறு நூல்கள் எழுதப்பட்டு மறைந்திருக்க வாய்ப்பு உண்டு). இது சதுரங்க ஆட்டவிதிகளைப் பற்றியது. 1512-இல் இத்தாலிய சதுரங்க அறிஞர் டாமியானே எழுதிய சிறுநூல் புகழ் பெற்றிருந்தது.

எனினும் 1561இல் ஸ்பெயின் சதுரங்க அறிஞர் ரூய்லோபஸ் எழுதிய ‘ஆன் ஸோஸ் ·புல்னெஸ் இன் செஸ்’ என்ற நூலே முதல் சதுரங்கப் பேரிலக்கியம் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான விளையாட்டுகளுக்குப் பலநூறு வருடப் பாரம்பரியம் இருந்தும் இவ்விளையாட்டுகளை ஆடிய திறனாளர்களின் பெயர்கள் வரலாற்றில் காணப்படுவது மிகச்சமீபகாலமாகத்தான். ஆனால் சதுரங்க ஆட்டத்தில் பதினாறாம் நூற்றாண்டு முதல் பெரும் ஆட்டக்காரர்களின் பெயர்கள் புகழ்பெற்று, வரலாற்றுப் பதிவுகளாக ஆகியுள்ளன. ரூய் லோபஸ், லியனடோ தி குத், ·பில்டோர், போலரியோ, டோமினிகோ முதலிய பல பெயர்களை நாம் இவ்வாறு காணலாம்.

இதற்குக் காரணம் சதுரங்க ஆட்டத்தில் வெளிப்படும் திறன் அந்தத் தனிமனிதனை முற்றிலுமாகச் சார்ந்தது என்பதே. மேலும் அது பயிற்சியின் விளைவு மட்டுமல்ல, அடிப்படையான அறிவியல் பலன். சதுரங்கத்தில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட ஆட்ட உத்தியோ தந்திரமோ அது உருவாக்கியவர் பேரில் அறியப்படுகிறது. மார்க்கோஸி பைன்ட், ரிச்சடர் ரோஸர் தாக்குதல் என்றிவ்வாறு. இதை நாம் அறிவியக்கத்தில் மட்டுமே காணமுடியும். இந்த அம்சமே சதுரங்கத்தில் செவ்வியல் என்ற கருத்தை உருவாக்கியது. செவ்வியல் என்ற கருதுகோள் உண்மையில் மனிதமனங்கள் கூட்டாகச் செயல்பட்டு ஒரு அறிதல் முறையை மேம்படுத்தி அதன் அடிப்படைகளை அமைப்பதையே குறிக்கிறது.

அறிவுத்துறைகளில் இதைக் காணலாம். சதுரங்கத்திலும் அப்படியே. பலநூறு சதுரங்க விற்பன்னர்கள் பல்வேறு உத்திகள் மூலம் சதுரங்க ஆட்டத்தின் பல்வேறு இடைவெளிகளை நிரப்பி, ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்து, அதன் அடிப்படைகளை வகுத்துத் தருவதைக் காணலாம். இவ்வாறு சதுரங்கத்திலும் இலக்கியத்தைப் போலவே செவ்வியல் முன்னோடிகள் பலர் உண்டு. இவர்கள் வரலாற்றின் பகுதியாக ஆனவர்கள். தனிப்பட்ட ஆளுமைகளாக அறியப்படாமல் தங்கள் ஆட்ட உத்திகளின் மூலம் அறியப்பட்டவர்கள்.

இதைத் தொடர்ந்து சதுரங்கத்திலும் நவீனத்துவம் குடியேறியது. இலக்கிய நவீனத்துவத்தின் எல்லா அம்சங்களும் இந்தச் சதுரங்க நவீனத்துவத்திலும் உண்டு என்றால் அது சற்றும் வியப்புக்குரியதல்ல. பிரான்ஸ் காஃப்கா, காம்யூ. ழெனே முதலிய நவீனத்துவப் படைப்பாளிகள் தனியர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சமூகத்தைப் புறக்கணிக்கும் கலகக்காரர்கள், அதிர்ச்சிகளை உருவாக்குபவர்கள்,அதிகார அமைப்புகளை அவமதிப்பவர்கள், இறுதியில் தவிர்க்க முடியாத தோல்வியை அடைபவர்கள். இதே போன்ற சதுரங்க ஆட்டக்காரர்கள் உருவானார்கள். சதுரங்க ஆட்டத்தின் மனநிலையே நவீனத்துவத்திற்குரிய இருண்மையும் எதிர்மறைத்தன்மையும் உடையதாக ஆயிற்று. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பாபிஃபிஷர்.

பாபி ஃபிஷர்

பாபிஃபிஷர் மனநோய்க் கூறுகள் கொண்ட மேதை… முற்றிலும் தனியன். விளம்பரங்களை வெறுத்தவர். கலகக்காரர். இயந்திரத்தனமான பயிற்சிகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் மூலம் சோவித் ருஷ்யா உருவாக்கிய சதுரங்கக் கோட்டைகளைத் தன்னந்தனியாளாகத் தோற்கடித்து சரித்துப்போட்டவர் ஃபிஷர். அவரது வெற்றியை அமெரிக்கா கொண்டாடிய போது அக்கொண்டாட்டத்திலும் பங்கு பெறத் தீர்மானமாக மறுத்தவர் அவர். 1972இல் ரெய்க்யானிக்கில் நடந்த ஃபிஷர் – ஸ்பாஸ்கி நேரடிப் போட்டிக்குப் பிறகு ஃபிஷர் முழுமையாக சதுரங்கத்திலிருந்து பின்வாங்கித் தலைமறைவானார். அவரை ஊடகங்கள் தேடி அலைந்ததும் பயனில்லாமலாயிற்று.

சதுரங்கத்தில் உருவான பின் நவீனத்துவத்தின் குறியீடு காரி காஸ்பரோவ். காஸ்பரோவ் ஒரு நிறுவனம். பல்லாயிரம் சதுரங்க நிபுணர்கள், உயர்தர கணிப்பொறிகள், உளவியல் நிபுணர்கள், இணைந்து அவரை உருவாக்குகிறார்கள். அவர்மீது பிரமிக்கச் செய்யுமளவு பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவருக்காகத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அனைத்துக்கும் மேலாக காஸ்பரோவ் ஒரு பன்னாட்டு நிறுவனம். அவருக்கு தேசிய அடையாளம் இல்லை. கிட்டத்தட்ட காஸ்பரோவ் ஒரு கார்ட்டூன் ஹீரோபோலத் தொழில்நுட்ப நிபுணர்களின் கூட்டுத்தயாரிப்பு. அதேசமயம் காஸ்பரோவ் ஒன்றும் சாதாரண நபரல்ல. இந்தப்பெரும் அமைப்பைக் கட்டுப்படுத்தும் மூலவிசை அவரது மூளைதான். இன்றைய ஆட்டக்காரர்களான ஆனந்த், காம்னி முதலியோரும் நிறுவனங்களே.

இன்று நாம் இணையம் மூலம் காஸ்பரோவிடம் சதுரங்கம் விளையாட முடியும். அதற்குப் பரிசுகளும் உண்டு. ஆனால் நாம் உண்மையில் காஸ்பரோவிடம் விளையாடவில்லை அது ஒரு பிம்பமே. அதற்குப்பின்னால் உலகின் தலைசிறந்த ஆட்டநிபுணர்களும் கணிப்பொறி மென்பொருட்களும் உள்ளன. காஸ்பரோவ் இறந்தாலும் இந்தப் பிம்பம் இருக்கும். பின் நவீனத்துவம் உருவாக்கும் பல அடிப்படைக் கொள்கைகளுக்கு இது ஒரு சிறந்த குறியீடாகும்.

பின்நவீனத்துவம், நவீனத்துவம், செவ்வியல் என்று நாம் பின்னகர்ந்து செல்வோமெனில் ஒரு நாட்டார் சதுரங்க மரபையும் நாம் கண்டடைய முடியும். அங்கு ஆட்டவிதிகள் கூட இடத்துக்கேற்ப மாறும். தனித்திறன் மரபின் தொடர்ச்சி இல்லாமல் இயங்கும். சரித்திரம் என்பதே அங்கு இல்லை. எந்த ஆட்டமும் சேமித்து வைக்கப்படுவது இல்லை, எனவே வரலாற்றில் எவர் பெயரும் இருப்பதில்லை. அரச சபைகளுக்கு வெளியே சதுரங்கம் அவ்வாறு பலநூறு வருடம் ஆடப்பட்டது. அம்மரபிலிருந்து ஆடவந்து, வரலாற்றில் பதிய நேரிட்டவர் சுல்தான்கான்.

1905இல் பஞ்சாபில் ஸர்கோடா மாவட்டத்தில் மீத்தா என்ற குக்கிராமத்தில் சுல்தான்கான் பிறந்தார். அவரது சதுரங்கத் திறமை மிகவும் தற்செயலாக சர் உமர் உறயாத்கான் என்ற பிரபுவின் கண்ணில் பட்டது. அவர் கானை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். ஆங்கிலமோ உளவியல் உத்திகளோ தெரியாமல் இருந்த கான் முதலில் சில தோல்விகளை அடைந்த போதிலும் பிறகு பெரிய ஆட்டக்காரர்களையெல்லாம் வென்றார். பலமுறை பிரிட்டிஷ் சாம்பியனாக ஆனார். 1930-31இல் ஹேஸ்டிங்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கான் அன்றைய உலக சாம்பியனும், சதுரங்க வரலாற்றின் முதல்தர செவ்வியல் நாயகனுமாகிய மேதை காப்பா பிளாங்காவைத் தோற்கடித்தார்! மெல்ல மெல்ல எதிரியைக் கட்டி நிறுத்தி வெல்லும் உத்தி கார்ப்பொவின் பேரில் இன்று அறியப்படுகிறது. ஆனால் கானின் இந்த ஆட்டத்தின் அழகும் நுட்பமும் கார்போவின் ஆட்டத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

சுல்தான் கான்

காரி காஸ்பரோவின் ஒரு ஆட்டத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வரும் ஊதியம் பல தேசங்களின் தேசிய வருமானத்தைவிட அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் 1933இல் தன் கிராமத்துக்குத் திரும்பிய சுல்தான்கான் மெதுவாக மறக்கப்பட்டார். தேசப்பிரிவினையின்போது அவர் உடைமைகள் சூறையாடப்பட்டன. பாகிஸ்தானுக்கு ஓடி அங்கு கூலிவேலை செய்து வாழ்ந்தார். கடும் வறுமையில், நீண்ட கால நோயில் வதைபட்ட கான் 1966இல் இறந்த போதுதான் அவரை உலகம் நினைவுகூர்ந்தது. கான் முதல் ஃபிஷர், கார்ப்போவ் வரை நீளும் சதுரங்க வரலாற்றில் மனிதனின் அறிவியக்கத்தின் வரலாறு முழுக்கக் குறியீட்டு வடிவில் உள்ளது.

[ மருதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை. மீட்கப்பட்டது. எழுத்துரு மாற்றம் செய்யப்பட்டது]

முந்தைய கட்டுரைநீங்களும் மேடைப்பேச்சாளராகலாம்.
அடுத்த கட்டுரைகடன்