புண்ணியபூமி,மறுகடிதங்கள்

ஜெயமோகன், இது எதிர்பார்த்த பதில்தான். எதிர்வினைகள் என்று தங்களின் வலைப்பூவில் தலைப்பிட்டு இந்திய அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெரும்பாலும் தங்களின் பெருமை பேசும் கடிதங்களையே அங்கே பிரசுரித்து மகிழ்ந்து கொள்ளும் தங்களை போன்றவர்களிடம் நான் எதிர்பார்த்த பதில்தான் இது. நான் சொல்ல வந்த உட்கருத்தை தள்ளி வைத்து வெளிப்பூச்சை எடுத்து அதில் கோமாளிதனமான நகைச்சுவையை சேர்த்து கடைசிவரை தங்கள் எழுதிய ‘விளம்பரம்’ பற்றிய விமரிசனத்திற்கு பதில் இல்லாத தங்களின் உக்தியும் நான் எதிர்பார்த்த ஒன்றுதான். தாங்கள் நல்ல எழுத்தாளர். ஒன்றிரண்டு தவிர தங்களின் படைப்புகள் அனைத்தும் படித்திருக்கிறேன். அனால் தங்கள் எழுத்து கொண்டிருக்கும் தளம் எப்போதும் ஒரே மாதிரியானவை. காரணம் தாங்கள் இதுவரை கண்ட உலகத்தையே முழு பிரபஞ்சம் என்ற கருதி அதையே தளமாகக்கொள்ள முயல்கிறீர்கள். இது வேண்டுமானால் எதாவது ஒரு கோமாளி அரசியல்வாதியை பிடித்து சாகித்திய அகாதமி விருது வாங்க வேண்டுமானால் பயன்படும். மற்றபடி மொழி, சமூத்தை கடந்து தங்கள் எழுத்து பாய்வதற்கு தங்களின் தளம் வேறுபட வேண்டும் அதற்க்கு தங்களின் உலகம் விரிவுபட வேண்டும். இந்த எழவைத்தான் என் கடிதத்தில் “தாங்கள் உலகை மேலும் அறிய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தேன். இதை தவிர்த்து, உலகின் நீள அகலத்தை கணக்கிட்டு, அதனோடு வாழ்நாளை பெருக்கி, அதன் மூலம் வரும் கீழ்த்தரமான நகைச்சுவையின் மேல் ஏறி நின்று நடனமாடுவதெல்லாம் தங்களின் தரத்துக்கு உகந்ததா? அமெரிக்காவை “புண்ணிய தேசம்” என்று கிண்டல் செய்திருக்கிறீர்கள். நிச்சயமாக இந்தியாவை ஒப்பிடும்போது அமெரிக்கா ஒரு புண்ணிய தேசம் தான். 

1. 500 ரூபாய்க்கு தன் ஓட்டையும் விற்று தன் சகோதரனின் 30 ஆண்டு கால விடுதலை போராட்டத்தையும் கூவி விற்ற ஒருவனை கூட அமெரிக்க “புண்ணிய தேசத்தில்” காண முடியாது. 2. கடைகோடி மக் டோனல்டில் வேலை செய்யும் மேல் நிலை பள்ளி கூட முடித்திராத ஒருவன் கூட ஸ்டெம் செல் அராய்ச்சி பற்றி தெளிவாக பேசுவான் இந்த “புண்ணிய தேசத்தில்”. அனால் தங்களின் “காந்தி தேசத்தில்” உள்ள ஒரு பில்லியன் ஆட்களில் எத்தனை பேருக்கு பக்கத்துக்கு நாட்டில் உள்ள ஆங் சண் சுய் கியி பற்றி தெரியும்? அனால் ரஜினிகாந்த் பற்றி….கேட்கவே வேண்டாம். ஏன் தெரியுமா? தங்களின் காந்தி தேசத்து ஆட்டு மந்தைகள் இலவச அரிசி வங்கி சாப்பிட்டு இலவச டிவியில் படம் பார்த்து உடலை மட்டும் வளர்த்துக்கொடிருக்கிறார்கள். 3. இந்த “புண்ணிய தேசத்தில்” இலவசம் உண்டு. எப்படி தெரியுமா? கடந்த எட்டு ஆண்டில் இரண்டு முறை அமெரிக்க அரசு வரி கட்டும் அனைத்து குடும்பத்துக்கும் இந்திய பண மதிப்பில் ரூ 60,000இலவசமாக கொடுத்தது. ஏனென்றால் இறுகிக்கிடக்கும் பொருளாதாரத்தை இலகசெய்வதர்க்காக. இது போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரே ஒரு திட்டம் வடிவமைக்கப்பட்டு அது அரசியல்வாதிகள் எனும் பன்றிக்கூட்டத்தை தாண்டி தங்களின் “காந்தி தேசத்து” மக்களை சென்று அடைதிருக்கிறதா? ஒன்றே ஒன்று????? 4. என்ன பெரிய மண்ணாங்கட்டி காந்தி தேசம் வே? உங்களால் தங்களின் பிரதம மந்திரியை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியுமா? யாருக்கோ வோட்டு போடுகிறீர்கள். பின்னர் எங்கோ ரேபரேலியின் MP யான ஒரு இத்தாலி பெண் இந்த மண்குதிரை சிங் மன்னிக்கவும்….இந்த மன்மோகன் சிங் தான் உங்களின் பிரதமர் என்கிறார், உடனே சுற்றி இருக்கும் நம் பன்றிகளும், குட்டிகளும் அடுத்த ஐந்தாண்டு ஆட்சி சாக்கடையில் பாய்ந்து விழுகின்றன. ஆகா அதுவல்லவோ காந்தி தேசம். அனால் இந்த “புண்ணிய பூமியில்” எவன் ஒருவன் அதிபர் ஆக வேண்டுமோ அவன் ஒரு சிறு கரை கூட படாத கைக்கு சொந்தகாரனாக இருக்க வேண்டும். அவன் கீழயிருந்து சுத்தமான ஜனநாயக முறைப்படி தன் கருத்தை, தன் லட்சியத்தை, தன் திட்டங்களை மக்கள் மன்றத்தில் வைத்து வாதிட்டு வர வேண்டும் பதவிக்கு. கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு சாதாரண பிளம்பர் ஒபமாவின் சட்டையை பிடித்து சாட்டையால் அடித்தது போல ரோட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டான், அதற்கு ஒபாமா நின்று நிதானமாக பதில் சொல்லி சென்றான். “Joe the Plumber” என்று கூகிள் செய்து பாருங்கள். இதையெல்லாம் கனவு கூட காண முடியுமா தங்களின் “காந்தி தேசத்தில்”?
5. இந்த “புண்ணிய தேசத்தில்” ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஒரு நதி கூட விடாமல் பாலம் கட்டி, ஒரு சந்து கூட விடாமல் ரோடு போட்டு, இந்தியாவை போல நான்கு மடங்கு பெரிய நாடான இதில் எந்த ஒரு ஐவேயிலும் இறங்கி சிக்னலே இல்லாமல் இந்த நாட்டையே சுற்றி வரக்கூடிய விஷயங்களை செய்து கொண்டிருந்த போது, தங்களின் “காந்தி தேசத்தில்” ஒருவன் தன் மொழியை இன்னொருவன் மீது திணிக்க முயன்று கொண்டிருந்தான், இன்னொருவன் அதை எதிர்த்து தன் பிள்ளைகளை வீட்டில் வைத்துவிட்டு ஊரான் பிள்ளைகளை தீக்குளிக்க வைத்துக்கொண்டிருந்தான், இன்னொரு கூட்டம் பழைய பாடலா? புதிய பாடலா என்று பட்டிமன்றம் வைத்து மக்களை முட்டாளாக்கி கொண்டிருந்தான்.
6. தங்கள் “காந்தி தேசத்தில்” சிவாஜி பற்றியும் MGR பற்றியும் தாங்கள் எழுதிய நகைச்சுவை கருத்துக்கு எத்தனை எதிர்ப்புகள்? ஆஹா என்னே ஒரு கருத்து சுதந்திரம்? அதவிட பரிதாபம் “கருத்து” என்று வெப்சைட் நடத்தியவர்களே தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு காட்டியது. இந்த “புண்ணிய பூமியில்” ஒரே ஒரு உதாரணம். Jay Leno (Retired) and David Letterman. பின்னிரவு தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்தும் இருவரது நிகழ்ச்சிகளையும் கண்டீர்களானால் “இந்த புண்ணிய தேசத்தின்” கருத்து சுதந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். தாங்கள் “காந்தி தேசத்து” யூகி சேதுவிடம் கேளுங்களேன் என்ன மாதிரியான “கர்ர்ர்ர்ருத்து” சுதந்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டது என்று. ஜெயமோகன், இதுபோல நான் சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் தங்களை வாதத்தில் வெல்வதற்காக சொல்லவில்லை. இவையெல்லாம் நான் பிறந்த நாட்டை பற்றி மனதிலே இருக்கக்கூடிய வேதனைகள். மக்களை பட்டினி போட்டு சிவனுக்கு வானுயர கோவில் கட்டிய மன்னரை புகழ்ந்த நம் மூதாதயரின் எண்ண படிமங்கள் நம் மனதில் இன்னும் இருப்பதற்கான ஆதாரம்தான் ஊழலின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் ஒரு நாட்டை “காந்தி தேசம்” என்றும், மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் பல பல துறைகளின் முன்னோடியாக இருக்கும் ஒரு தேசத்தை “புண்ணிய தேசம்” என்று கேலி செய்யும் தங்களின் கூற்று!

மணிவண்ணன்

 


 

திருமணிவண்ணன்,

தங்கள் கடிதத்தையும் பிரசுரிக்கிரேன். சந்தோஷம் தானே? தங்கள் தரம் தெரியட்டும்.

நான் அறிந்தவரை அமெரிக்காவில் அல்லது ‘நாகரீகமான ‘ தேசத்தில் ஒருவன் ஒரு எழுத்தாளனுக்கு எழுதும் கடிதம் அவனது சொந்த தகுதியை உணர்ந்த மரியாதையுடன் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் சூழந்த நாட்டில் இதைத்தான் எதிர்பார்க்கமுடியும்

j

 

 

ஜெயமோகன், என்னுடைய பதில் கிறுக்கல்கள் தங்களின் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. அந்த எண்ணம் தங்களுக்கு வந்ததற்கான காரணம் தங்கள் என்னைப்பற்றி எதுவும் அறியாததால் வந்தவை. நான் ஈட்டிய பொருள் கொண்டு தமிழ் இலக்கியத்துக்கு, சிறு எழுத்தாளர்களுக்கு, பல மொழி பெயர்புகளுக்கு என்று எத்தனையோ உதவிகள் செய்ததுண்டு. தற்போது எழுத்தாள நண்பர் ஒருவருக்கு உதவி செய்வதின் மூலம் “Conversations with Ernest Hemingway” தமிழில் மொழிபெயர்ப்பாக வர வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் எங்கேயும் விளம்பரம் செய்துகொண்டதில்லை. அதனால என் பதில் தங்கள் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. தங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை, சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஈமெயிலில் தங்களுடைய கம்ப்யூட்டர் மெதுவாக உள்ளது என்று தெரிவித்த போது தங்களுக்கு ஒரு புதிய கம்ப்யூட்டர் அமெரிக்காவில் இருந்து வாங்கிவர விருப்பம் தெரிவித்த அதே நபர்தான் நான். எனக்கு இலக்கியம் எழுத தெரியாதே தவிர நல்ல இலக்கியம் எழுதுபவர்களை மதிக்க தெரியும். நன்றி.

 

 மணிவண்ணன்

அன்புள்ள மணிவண்ணன்,
நான் சற்றே கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். அதற்காக மன்னிக்க்கவும். உங்கள் இலக்கிய ஈடுபாடு எனக்கு உண்மையில் தெரியவில்லை. பொதுவாக ஒருவகை அறியாமையின் திமிருடன் எழுத்தாலருக்கு அட்வைஸ் செய்து எழுதபப்டும் கடிதங்கள் அவ்வப்போது வரும். பெரும்பாலும் உதாசீனம்செய்வேன். சிலசமயம் கடுமையாக எழுதிவிடுவதுண்டு. உங்கள் கடிதம் அதில் ஒன்று என எண்ணினேன்.

உங்கள் பிழை என்பது விளம்பரத்தைப் பற்றிய என் கிண்டல்கட்டுரையை நேரடியாக ஒரு ‘கருத்தாக’ எடுத்துக்கோன்டது. இன்னொன்று ஒரு படி மேலே நின்று எழுதுவதுபோன்று அதில் வந்துவிட்ட தொனி

எந்த எழுத்தாளனும் அவனுடைய அனுபவ தளத்தில் நின்றபடியே எழுதுகிறான். தமிழில் தான் வாழும் மண்ணுக்கு வெளியே போய் எழுதின எழுத்தாளனே இல்லை தெரியுமா? நான் உள்பட. தான் நன்கறிந்த வாழ்க்கையையே எழுத்தாளன் எழுத முடியும்.

என்னுடைய கருத்துக்களை நீங்கள் கண்டால் ஒன்றை உணரலாம்–நான் இருபது வருடங்களாக நெரடியாக ஈடுபட்டுவரும் தளங்கள் குறித்து மட்டுமே நான் கருத்து சொல்வேன். இலக்கியம், இந்தியதத்துவம், தமிழக வரலாறு, மாற்று மருத்துவம். இந்த தளங்களில் உள்ல எந்த துறை அறிஞனுக்கும் நிகரானவன் நான் என்பது எனக்கு தெரியும். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் அதை ஒப்புக்கொள்வார்கள். நான் பெரிதும் அறியா துறைகளில் — உதாரணம் சினிமா- நான் எந்தக்கருத்தையும் சொல்வதில்லை

ஆகவே கடிதங்கள் எழுதும்போது அதன் தொனி மேல் எப்போதும் கவனமாக இருங்கள். நானும் என்னுடைய கோபத்தின் மேல் கவனமாக இருக்கிறேன்

மீன்டும் மன்னிப்பு கோருகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைராஜமார்த்தாண்டன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : மோதி ராஜகோபால்