விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்-2

தொடர்ச்சி

நிறுவனப்படுத்தப்படும் ஞானம்

வளைந்து பின்னிய குறுகலான சந்துகளில் வழிதவறிச் சென்று, தொலைந்து விட்டோம் மீளவே மாட்டோம் என்று மனம்பதறி திசைமறந்து அலையும் போது, ஒரு சந்தின் திருப்பத்தில் எதிர்பாராமல் சட்டென்று தெரியும் பரபரப்பான பிரதான சாலை போன்று தங்கள் ஞானத்தேடலில் மிகச்சிக்கலான அகப்பாதைகளில் அலைக்கழிக்கபட்டு தவித்து ஒருகணத்தில் உண்மையை தரிசிக்கின்றனர் சிலர். அதன் பிறகு அவர்களின் வெறுமையில் துணையிருப்பது தனிமையும் மௌனமுமே. அத்தகைய ஞானிகளை முச்சந்தியில் மேடைகட்டி அமர்த்தி அதிகார அரசியல் செய்கின்றனர் அனுக்கர்கள்.

திருவடி ஆழ்வார் ஆகிறார், சோமன் அவருடைய சிஷ்யனாகிறான். பீதாம்பரமும், பரமனும் திருவடியை வைத்து பிராமணர்களை ஓரங்கட்டி ஆழ்வார்மடம் அமைத்துக் கோயில்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் திட்டத்தைப் பேசுகிறார்கள். வெளியே ஸ்ரீபாத திருவிழாவின் பிரம்மாண்டமான தேர் இரண்டு ஆட்டுக்குட்டிகளின் மீதேறி நசுக்கிக் குருதி பலி கொடுத்து அசைந்து நகர ஆரம்பித்திருக்கும்.

திரும்பத்திரும்ப ஞானத்தைப் புறவயமாக நிறுவ முயலும் ஒவ்வொரு ஞானியையும் அதிகார வேட்கையுள்ளவர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்கின்றனர். தங்கள் தருக்க உத்வேகத்தை இழந்தால் ஞானிகளை அவர்கள் கொல்லவும் தயங்குவதில்லை. அவர்களுக்குத் தேவை அடுத்து தர்க்கங்களை உருவாக்கிக் கொடுக்கும் இன்னொரு ‘ஞானி’. பவதத்தரைக் கொல்லச் சதி செய்யும் அதிகாரி வீரசிங்கர், அஜிதனை வைத்து ‘தர்ம’ ராஜ்ஜியம் நடத்தும் சந்திரகீர்த்தி போன்றவர்கள் மூலமாக இது சுட்டிக் காட்டப்படுகிறது. சந்திரகீர்த்தி லௌகீக நியாயங்கள் பேசிப் போலி தருக்கங்களை உருவாக்கி, உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளால் ஆவேசமாக சாமான்யர்களின் மீட்சிக்காக மகாதருமம் தன்னை இவ்வாறு தூண்டுவதாகச் சொல்கிறான். அஜிதன் ஒத்துக்கொண்டு ஒதுங்கியிருக்காவிட்டால், புதர் மறைவில் ஒளிந்திருந்த லாமாமகாபாதரின் வேங்கை போன்ற சிஷ்யர்கள் அஜிதனை மகாநிர்வாணத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.

ஞானத் தேடல் தன் மனத்தின் தவிப்பையும், கேள்விகளுக்கு விடையும் கண்டடைவதற்குக் கருவியாகும் வரை உபயோமானது. அதற்கான தர்க்கம் மனத்தின் ஊசலாட்டத்தை நிறுத்தி நிலைப்படுத்த உதவும். ஆனால் அந்த ஞானத்தைக் கொண்டு பிறரை வென்றடக்கவும், தனது ஞானத்தைப் பொது ஞானமாக நிலைநிறுத்தவும் முனையும் கணமே அது சுமையாக அழுத்த ஆரம்பித்து விடுகிறது. இந்த ஞானப் பந்தயங்களில் இருந்து விலகியதாலேயே சித்தன் சுதந்திரமானவனாக இருக்கிறான். அவனுக்கு இந்த விவாதமெல்லாம் வெறும் விளையாட்டு. அஜிதன் இதையே உணர்கிறான், சித்தனின் கட்டற்ற தன்மையை நினைத்து ஏங்குகிறான். சித்தனின் தந்தையான பவதத்தரும் கூட அந்த நிலையை அடைந்து அழுத்தும் ஞானத்தின் சுமையிலிருந்து விடுதலை பெற ஏங்குகிறார்.


குழந்தைகள், பெண்கள்

பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு (மகனுக்கு) உயிரும் உடலும் மட்டும் அளிக்கவில்லை. எண்ணங்களால் தாங்கள் விரும்பும் உருவத்தையும் அளிக்கின்றனர். அந்த உருவம் பெரும்பாலும் அவர்களின் பகல்கனவு அல்லது ஆழ்மனதில் இருக்கும் கற்பனையான ஆண் பிம்பமாகவே இருக்கிறது. லட்சுமி அநிருத்தனுக்கு தருவதும், சாருகேசி உத்தரனுக்குத் தருவதும் அது தான். அல்லது தங்களுக்குள் இருக்கும் புரியாத ஆண் தன்மை தான் அவர்களின் ஆண் குழந்தைகள்.

சாருகேசிக்கு அவள் ஓவியத்தில் கண்ட அமைதி நிரம்பிய துக்கம் கொண்ட கண்களுடைய புத்த பிட்சுவே மறுபிறப்பு எடுப்பதற்காக அவளுள் குடியேறி இருக்கிறார். பிங்கலன் வெறும் நிமித்தம் தான். இனி அவளுக்கு அவன் முக்கியமே இல்லை. லட்சுமிக்கு அவள் இளமையில் பகல்கனவுகளில் உருவாக்கிக் கொண்ட சிதறிய ஆண் பிம்பம்தான் அவளுடைய ஆழ்மனதில் இருக்கிறது. மெதுவாக அந்த உருவத்தை வளர்த்தெடுத்துத் தன் மகன் அநிருத்தனுடன் பொருத்துகிறாள். அவளால் வலது பக்கமாகப் புரண்டு படுத்தால் தன் அந்தரங்க உலகத்துக்குள் சென்றுவிடமுடியும். அங்கே அவள் கற்பனை ஆண் பிம்பமாக அநிருத்தன்.

அநிருத்தன் இறந்த செய்தியைக் கேட்டதும் மயங்கி விழுகிற லட்சுமியைப் பார்க்கும் பெண்கள், நெஞ்சம் பதற கவனிக்கிறார்கள். அவள் மார்பில் தாய்ப்பால் சுரந்து கொண்டிருக்கிறது. பின்னர் பிங்கலனைக் கூடும் போதும் சங்கர்ஷணன் நினைவு ஒரு கணம் வருகிறது. தன்னை மறந்து ‘அநிருத்தா’ என்கிறாள், அப்போதும் அவள் மார்பில் தாய்ப்பால் சுரக்கிறது. லட்சுமி, பிங்கலன் இருவருக்குமே அந்தக் கணம் மிகப்பெரிய திருப்பத்தைத் தருகிறது. நாவலில் இது மிகமிக உக்கிரமான ஒரு நிகழ்வு. பல்வேறு உளவியல் ஊகங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருள் பொதிந்த முக்கியமான ஒரு குறியீடு.
பத்மாட்சிக்கு அவள் இருப்பை அர்த்தப்படுத்துவதே ‘மகாபத்மபுராணம்’ தான். அவள் குழந்தை அதுதான். சங்கர்ஷணன் அவளை அந்த நூல் வந்தடைய ஒரு நிமித்தக்காரன் மட்டுமே. அவளுக்கு சங்கர்ஷணன் ஒரு பொருட்டே அல்ல.

தந்தை மகன்

அக்னிதத்தன் தன் தந்தையைக் கொன்றவன். புத்ரசோகம் அவன் குலத்தைத் தொடர்ந்து துரத்தும் சாபம். பவதத்தர்-விஷ்ணுதத்தன், சூரியதத்தர்-ஸ்வேததத்தன், ஆரியதத்தர்-வேததத்தன் என தலைமுறைகளுக்கு அது நீள்கிறது.

விஷ்ணுபுரம் ஞானசபைத் தலைமையையும், வைதிக ஞானத்தையும் உதறிப் பெருச்சாளித் தோல் கோவணம் அணிந்து, பிச்சையெடுத்துப் புழுதியில் தூங்கும் சுடுகாட்டுச் சித்தனாகிறான் விஷ்ணுதத்தன். தன் மகனை மிகவும் விரும்பிய பவதத்தர் புத்ர சோகத்தால் உடைந்துவிட்டவர். அஜிதனின் இளமையும், ஞானமும், சிரிப்பும் அவருக்குத் தன் மகனையே நினைவூட்டுகின்றன. அது பவதத்தரின் மிகப்பெரிய பலவீனம். அஜிதன், “பித்ருபுத்ர தொடர் மரணமின்மை ஆகாது. அது மனித மனதின் ஆற்றாமை தான்” என்றதும் பவதத்தர் ஞானசபையிலேயே உணர்ச்சி ததும்ப குரல் உடைந்து இடறுகிறார். பிள்ளைப் பாசத்தால் உணர்வு ரீதியாக அஜிதனிடம் மனதளவில் அவர் ஏற்கனவே தோற்றுவிட்டார். அல்லது தன் மகனுக்கு (அஜிதனுக்கு) ஞானசபையின் அதிகாரத்தைத் தந்துவிட்டு ஒரு தந்தையின் நிறைவுடன் உயிர்துறக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

சர்வக்ஞராக அல்லாமல் வாழ்வில் ஒருநாள் கூட ஒரு தந்தையாக தன்னிடம் அன்பாகப் பேசாத சூரியதத்தரை வெறுத்து அவருக்கு நேர்எதிர்த் திசையில் ஸ்வேததத்தன் போகிறான். சர்வக்ஞர் பதவியைத் தூக்கி எறிந்து பிங்கலனின் வாமமார்க்கத்தில் இணைகிறான்.

சாருகேசி – அநிருத்தன் உறவுச் சித்திரம் போல சங்கர்ஷணன்-அநிருத்தன் உறவும் மிக அழுத்தமான, மிக அந்தரங்கமான நுண்ணிய உணர்ச்சிகளால் பின்னப்பட்டது. சங்கர்ஷணன் தன் மகன் அநிருத்தனின் மரணத்திற்குத் தான் எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும், ஏன் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒளிகிறேன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். அதன் விடையாகத் தன் மகன் தன்னுடைய அழிவிலிருந்து உருவாகுபவனாக, தனது தோல்விகளில் வெற்றியடைபவனாக அவன் ஆழ்மனத்தில் எண்ணியிருப்பது தெரிகிறது. தன் ஆத்மாவின் வெறுப்புதான் தன் மகனைக் கொன்றதாக உணர்ந்து துடிக்கிறான்.

ஒவ்வொரு தந்தையும் தன் மகனின் வழியாகத் தாங்கள் இளமையோடு நீடித்து வாழ்வதாகவே எண்ணிக் கொள்கிறார்கள். மகன் தன் நீட்சி –ஆனாலும் தன் முக்கியத்துவத்தை உடைத்து வளர்ந்துவிடக் கூடாத, தன் நிழலைப் போல இருக்க வேண்டுமெனவே விரும்புகின்றனர். தன் மனைவிக்கு மகனிடம் தடைகள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் மனம் ஜீரணிக்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் மகனைத் தன் போட்டியாளனாக உணரும் மேற்கின் உளவியல் கருத்துக்களின் சாயல் சங்கர்ஷணனின் புலம்பல்களில் நிறையவே தெரிகிறது.

 

கலையின் கர்வம்

பொருளியல் தேவைகளுக்கும், பதவி, அதிகாரம் என உலகியல் வேட்கைகளுக்கும் ஆட்பட்டுத் தங்கள் சுயத்தை விலைபேசும் படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் நாம் இன்று காண்கிறோம். இவர்களின் மனசாட்சியை நோக்கி அற ஆவேசத்துடன் கேட்கப்படும் கேள்விகள் விஷ்ணுபுரத்தில் வருகிறது.

தூய கலை கலைஞனுக்கு உள்ளார்ந்த ஒரு கர்வத்தைக் கொடுக்க வேண்டும். தன் படைப்புத் திறன், காலத்தை விலகி நின்று பார்க்கும் கூரிய மனம் ஆகியவை அவனையறியாமல் அவனுக்கு பெருமையும் தலைநிமிர்வும் தரவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் உலகியல் யதார்த்தங்களுக்கும் அதன் அரசியல், சமூக, பொருளாதார, அதிகார அழுத்தங்களுக்கும் பணிந்து வளைந்துகொடுத்துப் படைப்பாளி கூனிக் குறுகிப் போவான். பணமும் பதவியும் இல்லாவிட்டாலும், தான் படைப்பவன், வெகுஜனங்களின் சாமானிய தளத்தில் தன் மனம் இயங்கவில்லை, உயர்ந்த உண்மைகளைக் கலைகளின் வழியாக தரிசிப்பவன் என்ற நிறைவும் சுயமரியாதையும்தான் கலைஞனின் படைப்புத் திறனுக்கு ஆதாரசக்தி. தன்மானத்தை விற்று உருவாக்கும் படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் எவ்வித உண்மை மதிப்பும் இல்லை. இதை உண்மையான படைப்பாளி தன் அக ஆழத்தில் அறிவான்.

பெருந்தச்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் கடைசிக் கணங்களைத் தன் பிள்ளைகளுடன் செலவிட விரும்புவதாகக் கூறுகிறான். அநீதிமுன் தன்மானம் இழந்து துவண்டு நிற்கும் பெருந்தச்சனின் நிலையைக் கண்டு சோமனுக்கு வெறுப்பும் கோபமும் வருகிறது, “கடைசிக் கணங்களை மக்களுடன் செலவிடுகிறானாம், அற்பப் புழு, உளியை எடுத்துத் தன் தலையை வெட்டிக் கொண்டிருக்க வேண்டாமா? அவனுடைய கலை இதற்குக் கூடவா தைரியம் தரவில்லை?” என்று எரிச்சல்படுகிறான். இத்தகைய கணங்கள் கலையின் தோல்வி என்பதே அவன் எரிச்சலுக்குக் காரணம்.

சங்கர்ஷணன் காவிய அரங்கேற்றம் முடிந்த பின் குடித்துவிட்டு தாழ்வுணர்ச்சியும், குற்ற உணர்வும் மேலோங்க சாருகேசியிடம் புலம்புகிறான், “வெற்றுக்கர்வத்தை சாந்தி செய்வதற்காக ஆத்மாவைக் கறைபடுத்திய அசடன். நான் உண்மையானவனாக இருந்திருந்தால், என் காவியம் ஆத்மாவின் குரலாக இருந்திருந்தால் சூரியதத்தரின் அழைப்பை மறுத்திருக்க வேண்டும். என் நூலை அணைத்தபடி சோனாவின் ஆழ்கயத்தில் மூழ்கி உயிர்விட்டுருக்க வேண்டும்”.

சோமனின் குரல் விமர்சகனுடையது என்றால், சங்கர்ஷணனுடையது படைப்பாளியின் அந்தராத்மாவின் குரல்.


பூஜ்யம் முதல் ஒன்று வரை

பிரளயம் பூஜ்யம் எனக்கொண்டால், படைப்பு ஒன்று. பூஜ்யத்திலிருந்து ஒன்று வரை நகர்ந்து பின்னர் பூஜ்யத்தை அடைகிறது காலம். மீண்டும் அதே வட்டம். காலம் சக்கரமென மாறாமல் சுழன்று கொண்டே இருக்கிறது.

காலநதி சுழன்று ஓடும் விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு எண்ணமும், செயலும், ஒரு சருகு மல்லாந்து படுக்கும் அசைவும் கூட மீண்டும் நிகழும். தழல் எரியும் நாவும், கூரிய தர்க்கமும் உடைய அக்னிதத்தன் தன் சொல்லால் விஷ்ணுபுரத்தை நிர்மாணித்தான். அவன் வம்சத்தின் கடைசி ஆண்மகன் வேததத்தனோ ஐம்புலன்களும் ஒன்றே என்று அறிந்த, தருக்கத்தால் மறைக்கப்படாத தூய மனம் கொண்ட மோன விரதன்.

இந்து மரபு, வேதங்கள் மனிதரால் உண்டாக்கப்பட்டதல்ல, பிரபஞ்ச உற்பத்தியின் போதே வேதங்களும் நாத வடிவாகத் தோன்றுகின்றன. பின்னர் ரிஷிகள் அவற்றைத் தங்கள் தவத்தால் கண்டடைகிறார்கள். யுக முடிவில் மகாபிரளயத்தில் பிரபஞ்சம் அழியும் போது வேதங்களும் அழியும் என்கிறது. அடுத்த யுகத்தின் தொடக்கத்தில் மீண்டும் இவை தோன்றும். அவ்வாறு காலச்சுழற்சி தொடரும் என்கிறது. விஷ்ணுபுரத்தின் வைதிக ஞான மரபின் கடைசி சர்வக்ஞன் பெயர் வேததத்தன் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

சோனாவில் ஒரு கற்பாறையில் ஒதுங்கியிருந்த அக்னிதத்தனைக் காப்பாற்றிக் கைபிடித்து ஓடத்தில் எற்றிக்கொண்டு வந்தவள் ஒரு செம்பி. அதுவே விஷ்ணுபுரத்தின் துவக்கம். காலச்சக்கரம் சுழல்கிறது. இறுதியில் பிரளயத்தில் அக்னிதத்தனின் குலத்தின் கடைசி வாரிசு வேததத்தன் சோனாவின் வெள்ளத்தில் ஒரு கரிய பாறையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறான். செம்பர் குல வழித்தோன்றல் பெண் ஒருத்தி ஓடத்தில் வந்து கை நீட்டுகிறாள். ஆனால் பிடி நழுவி சோனாவில் மூழ்குகிறார்கள். ஒரு நாடகீய உச்ச தருணத்தில் வட்டம் தொடங்கிய புள்ளியில் வந்து முழுமை அடைகிறது.

ரூபிக்கின் கனசதுரத்திற்கு (Rubik’s cube) 43,252,003,274,489,856,000 வரிசை மாற்றங்கள் (Permutations) சாத்தியமுண்டு. இத்தனை கோடானுகோடி வரிசைமாற்றங்களுக்கு நடுவில் அதன் ஆறு பக்கங்களையும் முழுமையாக்கும் நகர்வுகள் உண்டு. அந்த சரியான சில நகர்வுகள் பிற கோடிக்கணக்கான நகர்வுகளுக்கும் பொருள் ஆகின்றன. விஷ்ணுபுரத்தின் முழுமையும் அப்படி எண்ணற்ற சம்பவங்கள் மற்றும் மனிதர்களால் பின்னப்பட்டுள்ளன.கடைசியில் அவை ஒட்டுமொத்தமான ஒரு முழுமையையும் பொருளையும் அடைகின்றன. பிரபஞ்ச தரிசனமும் இதுவே.

விஷ்ணுபுரம் ஒரு கனவு. மனிதகுலம் தன் துயிலில் இதைக் கண்டு கொண்டிருக்கிறது. பிரளயம் விழிப்பு போல.

விஷ்ணுபுரம் ஒரு புராணம். ஒரு சூதன் தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொண்டு யுகம் தோறும் மீண்டும் மீண்டும் கதை சொல்லிக் கொண்டிருப்பான். ஏனென்றால் அதுவே அவன். நிறுத்தினால் அவன் இல்லாமலாகி விடுவான்.

ராஜகோபுரத்தின் உச்சிமண்டபத்தின் தரையின் தூசுப்படலத்தில் எண்ணற்ற சிறு பூச்சிகள் சேர்ந்து தங்களை அறியாமல் ஒரு மாபெரும் சக்கரத்தை வரைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பூச்சியின் வாழ்வும் ஒரு எழுத்து. அவை அனைத்தும் சேர்ந்து சக்கரம் முழுமை பெறப் பங்காற்றுகின்றன. ஆனால் அதன் அர்த்தம் அவற்றால் அறியாமுடியாத எல்லைக்கப்பால் உள்ளது.

கீழே விஷ்ணுபுரம் ஸ்ரீசக்ர வடிவமாக மின்னிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தின் ஞான சபையில் சொல்லப்பட்ட ஒரு சொல் கூட வீணாவதில்லை. அந்த மண்ணில் தோன்றிய யாருடைய ஞானத்தேடலும் பொருளற்றுப் போவதில்லை. அதன் படைப்பு அழிப்பு சுழற்சியில் அனைத்தும் அர்த்தமும் பூரணமும் அடைகிறது.

இது விஷ்ணுபுரத்தின் உண்மை. இதுவே பிரபஞ்ச உண்மையும் கூட.

ஓம். அதுவும் பூர்ணம். இதுவும் பூர்ணம்.

பிரகாஷ் சங்கரன்

முந்தைய கட்டுரைஃபெட்னாவும் காந்தியும்
அடுத்த கட்டுரைஇலவச தமிழ் மின்னூல்கள்