பயணம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்:

நலம் தானே? உங்களது விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு நடந்து முடிந்தது குறித்துக் கேள்விப்பட்டுக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நான் வருகிற ஜூலை 15 தேதியில் இருந்து ஆகஸ்டு 13 ஆம் தேதி வரை இந்தியா வர உள்ளேன். அதுவும், குழந்தைகள்/மனைவி இல்லாமல். இன்னும் சில நாட்கள் தள்ளி இந்த வாசிப்பரங்கு இருந்திருந்தால் அவசியம் வந்திருப்பேன்! சரி, இந்த முறை பங்கேற்க முடியாமல் போய் விட்டது.

உங்களது அருகர்களின் பாதையைப் படித்ததில் இருந்து அவசியம் இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இந்த முறை தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் ஒரு அமைதியான சில இடங்களில் ஓரிரண்டு வாரங்கள் தங்க வேண்டும் என்று உத்தேசித்து உள்ளேன். அந்த உந்துதலுக்கு உங்களுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு நேரமிருந்தால் நேரில் சந்திக்கவும் ஆசை.

நீங்கள் அடுத்த வருடம்ஊட்டி கருத்தரங்கு நடத்துகிற போது அவசியம் வர உத்தேசித்து உள்ளேன். தேதிகள் உறுதியானதும் தெரிவிக்க வேண்டுகிறேன். இதற்கிடையே, திரு. நாஞ்சில் நாடனுடன் அடுத்த வாரம் ஓரிரண்டு நாட்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து உள்ளேன். கீழ்க் கண்ட தகவலை உங்கள் வலை தளத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
ராஜா
ஹூஸ்டன்

அன்புள்ள ராஜா

பொதுவாக சந்திப்புகள் நாம் விரும்பியபோது நிகழ்வதில்லை. வேடிக்கையாக சொல்லப்போனால் சந்திப்புக்கான தேவதை அந்த முடிவை எடுக்கவேண்டும்

சந்திப்போம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
அருகர்களின் பாதைப் பயணக்கட்டுரை படிக்க ஆரம்பித்தேன். என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

படிக்கப் படிக்கக் கொஞ்ச நஞ்சமிருக்கும் அகங்காரமும் குறைவதைக் கண்டேன்.

அருமை. அடுத்த இந்தியப் பயணம் எப்பொழுது. வருவதற்குப் பெரிய ஆசை உள்ளது.
நான் அதிகம் பேசுபவன் அரட்டை அடிப்பவன். இந்த மாதிரிப் பயணம் செல்லும்போது மனம் திளைத்து பேச முடியா ஆழ் மௌனம் உருவாகும்.

அதுவும் உங்களுடன் பேசும், இல்லை, நீங்கள் பேசி நான் கேட்க ஆசையாக உள்ளது.

இப்படி எழுதுவது பிறவிப்பயன். உங்கள் கைகளுக்கு ஒரு முத்தம். அருமை.

நன்றி. நீங்கள் நலமாக என்றும் இருக்கவும் இப்படி உங்களுக்கு நற்பயணங்கள் அமையவும் நீங்கள் எழுதவும் வாழ்த்துகிறேன்

உங்களோடு இது குறித்து விரிவாகத் தொடர்பு கொண்டு உங்கள் நேரம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரிந்து திட்டம் வரைகிறேன்.

அமெரிக்காவில் வேலையில் இருக்கிறேன். அதனால் 2 மாதம் விடுமுறை எடுத்து உங்களுடன் ஒரு மாதமாவது நீண்ட பயணம் செய்ய ஆசை

இந்தத் திட்டம் எப்படி தீட்ட வேண்டும் என்று இப்போது தெளிவில்லை. இப்போதைக்கு ஆசை இருக்கிறது ஆனால் திட்டம் போட அறிவில்லை.

August இற்குப் பிறகு நான் எப்பொழுது வேண்டுமானாலும் வர இயலும். உங்கள் நேரம் குறித்து சொன்னீர்கள் என்றால் நான் மேற்கொண்டு இங்கிருந்து இந்தியா வர ஏற்பாடுகள் செய்வேன்.

கீழ்க்கண்ட வரிகள் உங்கள் மன எழுச்சியை அழகாகப் பதிவு செய்கிறது

சிலந்தி வலையின் மென்மையுடன், வெண்தாமரையின் மெருகுடன், நுரைக்குமிழியின் ஒளியுடன், நாரைச்சிறகின் நுட்பத்துடன், வழியும் பாலின் நெளிவுடன், வெண்ணையின் குழைவுடன் கூடிய செதுக்குதல்கள். ஒவ்வொரு சிற்பம் முன்னாலும் சில கணங்கள் சிந்தை அழிந்த பித்துநிலை கைகூடுகிறது.

நன்றி
ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர் விஸ்வநாத்

ஒரு பயணம் போகவேண்டுமென உண்மையிலேயே ஆசைப்பட்டால் போவதொன்றும் பெரியவேலை அல்ல. சாதாரணமாக அது நிகழும்

போவோம்

ஜெ

முந்தைய கட்டுரைதென்கரை மகாராஜன்
அடுத்த கட்டுரைகல்வி