பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு துறவி போல வாழவேண்டும் என்கிற ஆவலில் தத்துவப்பாடப்பிரிவில் சேர்ந்தேன். முறையாகத் துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன். கல்லுரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன். விவேகானந்தரின் சுயசரிதையைப் படித்தபோது அவரும் இதே போல நடந்து கொண்டதைப் படித்திருந்ததால் நானும் அதுபோலவே இருக்க விரும்பினேன். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை. அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை. ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார். தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார் அவர்.
என்னாலும் அதைப் போலச் செய்ய முடியும் என்று நினைத்தேன் நான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன். ரமணமகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை. யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை. அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதைத் தடுத்ததுமில்லை. எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன். திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லுரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன். அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.
.
துறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என் அப்பா வீட்டில் இல்லாத நேரம். எப்போதுமே வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார். என் அம்மாவிடம் நான் துறவு மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன். அதைக் கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது. புன்சிரிப்புடன் தம் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர். “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயணகுருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண்குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.” என்று மேலும் சொன்னார் அவர். என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவாள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன். பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.
அந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு. அவர் பெயர் ஜெயராம். அதற்கு முன்னால் சென்றிருந்த ஒருமுறை மற்றொருவரும் நண்பரானார். அவர் பெயர் ஸ்ரீராம். அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்தா ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா. அவர் சுமாமி சாமதாஸ் அவர்களின் சீடர். அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரே குழுவாகச் சுற்றியலைந்தோம். ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
ஜெயராம் சுவாமி ராமாதேவானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டார். ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமாதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் புதிய பெயரால் அழைத்துத் துறவு வழங்க வேண்டும் என்றும் சொல்லி வைத்தேன். பிரமச்சாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்கவேண்டும் என்றும் சொன்னார் அவர். சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்நான்.
சுவாமி என்கிற சொல்லுக்குப் பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார். ஆனால் மக்கள் என்னைச் சுவாமி என்கிற ஒட்டுச்சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள். அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள். உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லைப் பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக் கொண்டேன். அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு நான் தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது. நான் யாரையும் சீடராக வைத்துக் கொள்ளவில்லை. என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம் போல என் பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.
தமிழில் : பாவண்ணன்
[1998 ல் மருதம் பழைய இணைய இதழில் இருந்து. இப்பகுதி பின்னர் தமிழினி வெளியீடாக வந்த நித்ய சைதன்ய யதியின் அன்பும் ஆசிகளும் என்ற நூலில் சேர்க்கப்பட்டது]