1948 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன். டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அப்படிப்பட்ட மகானைப் பார்ப்பது வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று எண்ணியிருந்தேன்.
திருவண்ணாமலை மிகவும் வெப்பமான இடம். ஒருவரால் அந்த இடத்தில் இலகுவாக உணர்வது சிரமம். ஆசிரமத்தில் இருந்த ரமணமகரிஷியைக் காணச் செல்லும் முன்பு, தவமிருந்த அவருடைய ஆரம்ப நாட்களில் அவர் திருவண்ணாமலையில் தங்கிய சில இடங்களைக் காண வேண்டும் என்று ஆவலெழுந்தது. மிகப்பிரபலமான திருவண்ணாமலை ஆலயத்தைக் காண முதலில் சென்றேன்.
கோவிலுக்குள் சென்று உருவவழிபாடு செய்வதில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் முன் நின்றேன். இளம் வயது ரமணர் குளிக்காமலேயே கோயிலுக்குள் நுழைந்தபோது எப்படி இருந்திருப்பார் என்றும் அவர் கோயிலுக்குள் நுழையும் தருணத்தில் எதிர்பாராத விதமாக பெய்த மழையே அவரை எவ்விதமாகக் குளிப்பாட்டியிருக்கும் என்றும் கற்பனை செய்தபடி அசையாமல் அங்கேயே நின்றிருந்தேன். நான் அங்கே சென்று சேர்ந்த தருணத்திலும் அப்படிப்பட்ட ஒரு மழையை எதிர்பார்த்திருந்தேன். அது நடக்கவில்லை. மாறாக, வேர்த்து வேர்த்து வழிந்ததில் என் ஆடைகள் முழுக்க முழுக்க ஈரமாகிவிட, மழையில் நனைந்தவனைப் போல நின்றிருந்தேன்.
மலைக்குச் சென்று அவர் தம் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கக் கூடிய எல்லா இடங்களையும் காணவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் எழுந்தது. ஆனாலும் கட்டுக்கடங்காமல் எனக்குள் பொங்கிக் காண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆசிரமத்துக்குள் நேராகச் சென்றுவிட்டேன். பாய்விரித்த ஒரு மரக்கட்டிலின் மீது சோர்வோடு மண்டியிட்ட நிலையில் உட்கார்ந்திருந்த மகரிஷியைப் பார்த்த வண்ணம் அக்கூட்டத்தில் பல பேர் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமாக அணிந்திருக்கக்கூடிய ஆடைகளை அவர் அணிந்திருக்கவில்லை. அங்குள்ள விவசாயிகளைப் போன்று இடுப்பில் அரைஞாண்கயிறு மட்டுமே இருக்க கோவணம் அணிந்திருந்தார். ஆசிரமத்துக்குள் செல்லும் முன்னாலேயே, பல இளைஞர்களும், முதியவர்களும் கோவணங்களை மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்திருந்ததால் மகரிஷியையும் அந்தக் கோலத்தில் பார்த்தபோது எனக்குள் எந்த வியப்பும் உண்டாகவில்லை.
அவருடைய கைக்கக்கத்தில் சுருட்டிய ஒரு வெள்ளைத்துண்டு இருந்தது. அவருடைய கட்டிலின் முன்னால் மூன்று பக்கங்களிலும் ஆண்களும் பெண்களும் மண்டியிட்ட நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். கட்டிலின் பின்புறம் ஒரு திரைசுவர் போல இருந்தது. இரவும் பகலும் பக்தியுடன் கூடும் பொதுமக்கள் எப்போதும் காணத்தக்க நிலையில் உட்கார்ந்திருந்த அந்த மகானைப் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் எப்போதும் நான் கண்டதில்லை.
மகரிஷியின் உட்காரும் இடமாகவும் படுக்கையாகவும் இருந்த அக்கட்டில் மிகப்பெரிதாக இருந்த அக்கூடத்தின் இறுதிப்பகுதியில் இருந்தது. பெரும்பாலான நேரத்தில் அந்தக் கூடம் ஆட்களால் நிறைந்தே இருந்தது. அனைவரும் ஆழ்ந்த அமைதியுடன் உட்கார்ந்திருப்பதால், உள்ளே நுழையும் வரை அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தின் இருப்பை நம்மால் உணரவே முடியாது. அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்த பிறகும் கூட கூட்டத்துக்கு நடுவில் இருக்கிற உணர்வே மனத்தில் எழுவதில்லை. அங்கே கூடியிருக்கிற ஒவ்வொருவரும் உள்முகமாக மனத்தைக் குவித்து ஆழ்ந்த அமைதியில் உட்கார்ந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
சிலர் தம் கண்களை வெறுமனே மூடிய நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். பலர் தூங்கி வழிந்தார்கள். ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் ஒரு புத்தகத்தைப் படித்தவண்ணம் உட்கார்ந்திருந்தார். ஒருவேளை அது பைபிளாக இருக்கலாம். கையில் ஜெபமாலையை உருட்டி மணிகளைக் கணக்கிட்டபடி ஒரு முஸ்லீம் பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவருடைய உதட்டசைவு மூலம் மிக மெதுவாக எதையோ முணுமுணுப்பதை அறிந்தேன். அச்சான ஒரு புத்தகத்திலிருந்து எதையோ பார்த்துப் பார்த்து தம் நோட்டு ஒன்றில் பிரதியெடுத்துக் கொண்டிருந்தார் ஒரு முதிய பெண்மணி. சிவந்த முகம்கொண்ட ஒரு அமெரிக்கன் உருக்கமாகக் கண்ணீர் விடுவதையும் அடிக்கடி பெருமூச்சு விடுவதையும் மூக்கை உறிஞ்சிக் கொள்வதையும் பார்த்தேன்.
மகரிஷி நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவரைப் போலக் காணப்பட்டார் அவர். அவர் தலை மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவரைக் கண்டதும் என் முதல் மனப்பதிவில் ஏதோ ஒரு நோயால் அவதிக்குள்ளான ஒரு முதியவராகவே அவர் தெரிந்தார்.
என் மனதுக்குகந்த மகானாக அந்தக் காலத்தில் இருந்தவர் சுவாமி விவேகானந்தர். அவரைப் போலவே நானும் இந்தியாவின் ஏழ்மையைப் பற்றியும் அறியாமை பற்றியும் கவலை கொண்டிருந்தேன். அவரைப் போலவே நானும் இந்தியாவின் சோர்வை உதறித் துடித்தெழுந்து மக்கள் கூட்டத்துக்கு நன்மை பயக்கும் பல நல்ல செயல்களை ஆற்றக்கூடியவனாக என்னைப் பற்றி கற்பனை செய்திருந்தேன். ஆகவே அந்த இடத்தில் இருந்த அமைதியைப் பற்றியும் வேகமின்மையைப் பற்றியும் வருத்தப்பட்டேன். இந்தியாவின் செயலின்மையின் மொத்தக் குறீயிடாக மகரிஷி என் முன்னால் அமர்ந்திருந்தார்.
ஒரு கணம் அவரைக் காண அங்கே நான் வந்ததைப் பற்றி வருத்தமுற்றேன். செல்வம் மிக்கதாகவும் அழகானதாகவும் இந்தியாவை மாற்றக் கடுமையான உழைப்பைச் செலுத்துமாறு மக்களைத் தூண்டுவதை விட்டுச் செயலற்று உட்கார்ந்திருக்கும் ஒருவரைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு பெரியபேச்சைப் பேசுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. சூரியன் மறையப் போகும் நேரத்தில் மகரிஷி எழுந்து வழக்கமான தன் மாலைநடைக்குப் புறப்பட்டார். மலையைச் சுற்றிலும் நடப்பது அவருடைய நீண்ட நாளையப்பழக்கம் என்று ஏற்கனவே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அங்கிருந்த வேளையில் மிகச் சிறிய தொலைவே அவர் நடந்தார். பிறகு ஒரு பாறையில் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.
இடமாற்றம் ஒன்றைத் தவிர அவர் அப்பாறையின் மீதும் அப்படியே இருந்தார். கூடத்தில் செய்ததைப் போலவே, தொடர்ந்து வந்த மக்கள் அனைவரும் அங்கும் உட்கார்ந்தார்கள். திறந்தவெளியிலேயே ஒரு சிறிய குளியலுக்குப் பிறகு மறுபடியும் தம் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார் அவர். தைத்திரிய உபநிடதத்திலிருந்து பிருகுவள்ளிப் பகுதியைச் சில பிராமணர்கள் அவர் முன்னால் உட்கார்ந்து படித்தார்கள். என்னால் உடனடியாக அடையாளம் கண்டுணர முடியாத சில வேத மந்திரங்களையும் அவர்கள் படித்தார்கள். மொத்தச் சூழலிலும் ஒரு வாட்டம் படிந்திருந்தது. மகரிஷி ஒரு பெரியசோம்பேறி என்கிற எண்ணம் மட்டும் என் மனத்தில் தொடர்ந்தபடி இருந்தது.
திருவண்ணாமலையில் காலைநேரம் மிகவும் புத்துணர்வு கொடுக்கக் கூடியதாவும் உயிர்த்தன்மையோடும் இருந்தது. இரவு மிக வேகமாகக் கவிழ்வது போல இருந்தது. அதைத் தொடர்ந்து தம் தங்கக் கதிர்க்கைகளால் அனைத்தையும் தழுவியவண்ணம் சூரியன் எழுந்து வந்தான். கூடவே இனிமையான மந்திர கோஷம் எழுந்தது.
ஆசிரமத்துக்குள் முதல் ஆளாக நுழைந்ததும் மகரிஷியின் முன்சென்று தலைதாழ்ந்து வணங்கினேன். ஆனால் அவர் என்னைக் கவனிக்கவில்லை. சுயமரியாதையும் வீம்பும் மிக்க இளைஞனாக இருந்த நான் என் அழகான உச்சரிப்பால் கீதையை வாசித்து எல்லாரையும் கவர எண்ணினேன். சில நாட்கள் இந்தவிதமாகவே கழிந்தன. எனக்கு மிகவும் அலுப்பாக இருந்தது. எனவே, அந்த இடத்தைவிட்டுக் கிளம்பத் தீர்மானித்தேன். ஒரு துறவியைக் காணச்செல்லும் போதும் விடை பெறும்போதும் ஏதேனும் காணிக்கையோடு செல்வது இந்திய மக்களின் பழக்கமாகும். எனவே வெளியே சென்று, சில ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வந்து மகரிஷியின் முன்னால் வைத்தேன். அப்போதும் அவர் என்னைக் கவனிக்கவில்லை. உள்ளூர எனக்கு விருப்பமில்லாவிட்டாலும், அப்பழங்களை அவரது பாதங்களின் அருகில் வைத்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன். என்னை ஏதோ ஒரு நிழல் அல்லது செத்த பிணம் போல அவர் நடத்துவதாக நினைத்துக் கொண்டேன். அதைப்பற்றிய கடுமையான மனவருத்தம் எனக்குள் பொங்கியது. அவருக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கையைக் கொடுத்தபிறகு உடனடியாக வெளியேறிவிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
காரணத்தோடோ அல்லது காரணமின்றியோ, சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து செல்ல வேண்டும் என்று தோன்றியதால் உட்கார்ந்தேன். என்ன அதிசயம். மகரிஷியின் பார்வை என் மீது படிந்தது. என் தலைமீது அப்பார்வை பரவியது. என் தலை குலுங்குவதைப் போலிருந்தது. அவர் என் கண்களுக்குள் நேராகப் பார்ப்பது போலத் தோன்றியது. இருவிதமான காந்தங்கள் என்னை ஒரே நேரத்தில் வலிமையாகக் கவர்ந்திழுப்பதைப் போல! என் இதயத்தின் நடுப்பகுதியைத் தாக்குவதை உணர்ந்தேன். சட்டென, என்னைச் சூழ்ந்திருந்த பகுதி இருள்வதைப் போலிருந்தது. மயக்கம் வருவது போலவும் இருந்தது. என் உடல் நடுங்கத் தொடங்கியது. என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மிகவிரிந்த இருள்வெளியில் என் சுயஉணர்வென்னும் சுடர் அசையாமல் எரிவதைப் போலத் தோன்றியது.
நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்தை நோக்கிய ஒரு தாவலும் அலசலும் எனக்குள் நிகழ்ந்தது. நான் உலுக்கி எழுப்பப்படும் வரையில் என் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் மனக்கண் முன்னால் வேகமாக அசைந்து நகர்ந்தன. என் தாயின் கருப்பைக்குள் உறங்கும் கருவாகவும் பிறகு சட்டென ஏதோ உச்சியில் இருந்து வீசப்படும் ஒன்றாகவும் மாறிமாறி உணர்ந்தேன். என் தாய் ஒரு பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்தபோது, சட்டென எதிர்பாராத நேரத்தில் அப்பாலம் இடிந்து விழுந்துவிட, பாலத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த ஓடைக்குள் அவள் சரிந்து விழுந்த சம்பவம் நடந்த தருணத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் என் காதில் ஒலித்தன. அவள் தன் வயிற்றில் கருவாக என்னைச் சுமந்து கொண்டிருந்த காலம் அது.
யாரோ என் முதுகில் தட்டி எழுப்பினார்கள். நான் எனது சுயஉணர்வை அடைந்தேன். என் முன்னால் மகரிஷியைக் காணவில்லை. கூடத்தில் இருந்த அனைவரும்கூட வெளியேறிவிட்டிருந்தனர். எல்லாரும் உணவுண்ணும் கூடத்துக்குச் சென்றிருந்தார்கள். நானும் மெல்ல நடந்து உணவுண்ணும் கூடத்தை அடைந்தேன். நான் உள்ளே நுழைந்த தருணத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் மகரிஷிக்கு வலப்புறம் இருந்த இலைக்கு அருகே இருந்த இடம் காலியாக இருந்தது. என்னை அங்கே சென்று உட்காரச் சொன்னார்கள். உணவு பரிமாறப்பட்டபோது மகரிஷி என் இலையைப் பார்த்தார். தமக்கு வழங்கப்பட்ட எல்லா உணவு வகைகளும் என் இலையிலும் பரிமாறப்படுகிறதா என்று கண்காணிப்பது போல இருந்தது அப்பார்வை.
அந்தத் தருணத்திலிருந்து மகரிஷி ஒரு சாதாரண ஆளாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய இருப்பு மிகப்பெரிய பேரிருப்பாகத் தோன்றியது. எங்கெங்கும் நிறைந்திருக்கக் கூடிய இருப்பாக – எதைக் காண வேண்டும் என்று நான் ஆவலுற்றிருந்தேனோ அத்தகு பேரிருப்பாக – அவர் தோன்றினார். அதற்கப்புறம் அவரைப்பற்றி நினைக்க எந்த முயற்சியும் எனக்குத் தேவைப்படவில்லை. மிகவும் மிகப்பெரியமனிதர் ஒருவரைப் பற்றிய நினைவுக் குறிப்போ அல்லது மறக்க முடியாத ஒருவருடன் கழித்த நெருக்கமோ அல்ல. புரிந்து கொள்பவனுக்கும் புரிந்து கொள்ளும் விஷயத்துக்கும் இடையே இருக்கும் இருமை அழிந்து ஒருமையாக மாறும் நிலையே ஆகும்.
இதுதான் முதல்முறையாக ரமணமகரிஷியை நான் சந்தித்த அனுபவம். இதற்கப்புறம் பலமுறை அவரைக்காண, அவர் சமாதிநிலையை எய்துவதற்குச் சில நாட்கள் வரை பலமுறை சென்று வந்தேன்.
[நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையின் பகுதி. மருதம் பழைய இணைய இதழில் இருந்து. இப்பகுதி பின்னர் தமிழினி வெளியீடாக வந்த நித்ய சைதன்ய யதியின் அன்பும் ஆசிகளும் என்ற நூலில் சேர்க்கப்பட்டது. தமிழாக்கம்: பாவண்ணன்]