தென்கரை மகாராஜன்

அன்புள்ள ஜெ! வணக்கம்.


வள்ளியூர் அருகில் இருக்கும் தென்கரை மகாராஜர் கோவிலா?

எங்கள் குலதெய்வம் அவர்.சித்தூர் சாஸ்தா என்றும் கூறுகிறார்கள் அல்லவா? நீங்கள் குறிப்பிடுவது அவர்தானா? எங்கள் மூதாதையர்கள் தாழையூத்து அருகில் உள்ள நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்கள்.ஸ்மார்த்தப் பிராமணர்களாகிய எங்க‌ளுக்கு தென்கரை மகாராஜர் எப்படி குலதெய்வம் ஆனார்?அப்படியென்றால் தாழையூத்துக்கு வரும் முன்னர் எங்கள் மூதாதையர் வள்ளியூர்ப் பகுதியில் வாழ்ந்து இருக்கலாமோ?

கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)

அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்

சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் ஒன்றே ஒன்றுதான். தென் தமிழ்நாட்டில் நெல்லையப்பர்- தாணுமாலையன் அளவுக்கே புகழ்பெற்ற கோயில். நெல்லைமாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது.

அருகே நம்பியாறு ஓடுகிறது. மழைக்காலத்தில் நீர்நிறைந்தோடும் இந்த ஆற்றங்கரையில் மிகத்தனிமையாக இருந்தது இக்கோயில். பாண்டியர் காலகட்டத்தில் கட்டப்பட்ட மிகச்சிறிய மூலக்கோயில். பின்னர் மண்டபங்கள் கட்டப்பட்டன

இப்போது இதைத் தெய்வமாகக் கொண்ட குலங்கள் பல்கிப்பெருகியமையால் கான்கிரீட் மண்டபங்கள் துணைக்கட்டிடங்கள் என விரிவாக மாறியிருக்கிறது. பல சாதிகளுக்கும் இங்கே சிறிய தங்குமிடங்கள் அவர்களால் கட்டப்பட்டுள்ளன

மூலதெய்வம் சாஸ்தா. யானை வாகனம் கொண்டவர். பெரும்பாலான சாஸ்தாக்களைப்போல யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கை தொங்கவிட்டு ஒரு கை அபயஹஸ்தமாகக் காட்டுகிறார். ஓங்கிய மணிமுடி. சபரிமலை சாஸ்தாவின் சாயல் கொண்ட சிலை.

ஆனால் வெள்ளிக்காப்பணிந்த நிலையிலேயே நாம் சாஸ்தாவைக் காணமுடிகிறது. அந்த வெள்ளிக்காப்பு மூல சாஸ்தாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.வெள்ளிவேல் ஒன்று கடந்த பல ஆண்டுகளாகச் சாத்தப்படுகிறது. ஆகமநிபந்தனைகள் இல்லாத காரணத்தால் வழிபாடுகள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட குலங்களின் எண்ணங்களுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழக நாட்டார்வரலாறு பற்றியும் இந்துமதம் பற்றியும் எல்லாம் போகிறபோக்கில் கொள்கைகளை உருவாக்கிப் பரப்புகிற ‘aided folklore’ மேதைகளின் உள்நோக்கமுள்ள முடிவுகளுக்கு ஒவ்வாமல் நிற்கும் ஆலயம் இது.

பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, பிராமணர்களுக்கும் நாட்டார்தெய்வங்களுக்கும் தொடர்பு கிடையாது, பிராமணர் பெருந்தெய்வங்களையும் மற்றவர்கள் நாட்டார்தெய்வங்களையும் வணங்குகிறார்கள், நாட்டார்தெய்வங்களை பிராமணமைய இந்துமதம் வாசலுக்கு வெளியே நிறுத்துகிறது – என்றெல்லாம் உருவாக்கப்படும் பல ஒற்றைவரிகளுக்கு இந்தக்கோயில் பெரிய சவால்.

இந்த ஆலயம் பிராமணர்கள், வேளாளர்கள்,செட்டியார்கள், தேவர், நாடார், சில தலித் குலங்கள் உட்பட பல சாதிகளைச்சேர்ந்த பல குடும்பங்களுக்குக் குலதெய்வம். கவனிக்கவும், அனைவரும் வணங்கும் பொதுத் தெய்வமோ ஊர்க்காவல் தெய்வமோ அல்ல, குலதெய்வம். குடும்பத்துக்கு மட்டும் பாத்தியப்பட்ட தெய்வம்.

இப்படிப் பல சாதிகளுக்கு ஒரே தெய்வம் குலதெய்வமாக இருப்பதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. பாரதியாரின் குலதெய்வமான தேசமுத்துமாரி இன்னொரு உதாரணம். தென்கரை மகாராஜாவின் குலங்கள் எல்லா சமூக அடுக்குகளையும் சேர்ந்தவை. ஆனால் எல்லா சாதிகளுமே தமிழ்ச்சாதிகள்தான்.

இந்த தெய்வத்தை அவர்கள் எங்கே சென்றாலும் நினைத்திருக்கிறார்கள். அனேகமாக திருமணம் காதுகுத்து பெயர்சூட்டல் போன்ற சடங்குகளுக்காகத் தேடிவருகிறார்கள். நான் சென்றது கோவையில் உள்ள ஒரு பிராமண இளைஞருடன்.

அவருக்கு இந்த ஊரையே தெரியாது, தெய்வத்தையும் தெரியாது. திருமணமானதும் அவரது அம்மா இங்கே வந்து கும்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கும் இங்கே உள்ள வேர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் என் வீட்டுக்கு வந்தார். நாங்கள் விசாரித்துச் சென்றோம்.

இதற்கான ஒரே விளக்கமாக இருப்பது, எல்லா சாஸ்தாக்களையும்போல சித்தூர் தென்கரை மகாராஜன் ஒரு பௌத்த தெய்வம், போதிசத்வர் என்பதே. அவரை வழிபட்ட குலங்கள் பிறகு இந்துமதத்தில் நுழைந்தபின்னரும் அந்த வழிபாட்டை நீட்டித்துக்கொள்கின்றன.

ஆனால் பௌத்தத்துக்குள் நுழைந்த சாத்தன் என்ற புராதன தமிழ்தெய்வமே போதிசத்வ அடையாளத்துடன் அவர்களின் தெய்வமாக ஆக்கப்பட்டது என்பது இன்னொரு கோணம்.

மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே குலதெய்வங்கள் பொதுவாக இருந்துள்ளன. குலங்கள் தொகுக்கப்பட்டு இந்திய சமூகம் உருவானபோது அவை பெருவழிபாட்டு மரபுக்குள் நுழைந்து தங்கள் இடத்தை எடுத்துக்கொண்டன. இன்றும் இந்த ஒருங்கிணைப்பு எந்த மோதலுமின்றி நீடிக்கிறது.

நமது ‘நிதியூட்ட நாட்டாரியல்’ மெல்லமெல்ல சித்தூர் தென்கரை மகாராஜனின் குலங்களுக்குள் சாதிச்சண்டையை ஊட்டிவிடாமலிருக்க சித்தூர் தென்கரையான்தான் அருள் பாலிக்கவேண்டும்

ஜெ

 

சித்தூர் பங்குனி உத்திரம் ஒரு கட்டுரை


தென்கரை மகாராஜன் சுகா

முந்தைய கட்டுரைசோ-ஒருபதில் கடிதம்
அடுத்த கட்டுரைபயணம் கடிதங்கள்