திரு ஜெ அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
என்னுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு தங்களிடமிருந்து கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.
நான் திரிபுரா பல்கலையில் தொலைதூரக் கல்வியில் ஒரு மாஸ்டர் டிகிரி படிக்கிறேன். லண்டன் பல்கலையில் தொலைதூரக் கல்வியில் (8 வாரக் கல்வி மட்டுமே) ஒரு கோர்ஸ் படிக்கிறேன். தங்களுடைய இன்றைய காந்தி, அறம் ஆகியவற்றை முடித்துவிட்டு நவீன தமிழ் இலக்கியம் ஒரு அறிமுகம் பாதியில் இருக்கிறேன்.
என்னால் இவை அனைத்தும் நினைவில் நிறுத்தி வைக்க முடியவில்லை. உங்களால் மட்டும் முடியும்பொழுது என்னால் ஏன் முடியாது ?? !! இத்தனைக்கும் நான் உங்களைவிட 10 வயது இளையவன். நேற்று டைட்டானிக் வரலாறு படித்தேன். அதிலுள்ள தகவல்களில் சில தகவல்கள் எனக்கு இன்றைக்கு நினைவில் வர மறுக்கிறது. உதாரணத்துக்கு அது கட்டப்பட்ட வருடம், அது பயணம் துவங்கிய வருடம், விபத்து நடந்த தேதி மற்றும் அதன் பயணிகளின் எண்ணிக்கை இதில்தான் பிரச்சினையே. இப்படியிருக்கையில் நான் அசோகவனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.
இதற்காக எந்தவொரு பயிற்சிக்கும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ரவிசங்கரின் மூச்சுப் பயிற்சியிலும் அனுபவமுண்டு. தயவுசெய்து வேறு காரணங்கள் எதுவும் சொல்லாமல் நல்ல ஒரு வழியை எனக்குக் காண்பியுங்கள்.
சுரேஷ்பாபு
அன்புள்ள சுரேஷ் பாபு
பலமுறை நானே சொன்ன விஷயங்கள்தான் இவை
முதலில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மூளையில் சேமிப்பவை உங்கள் சிந்தனையாகவே இருக்கும். பிறரது சிந்தனை உங்களுக்குள் நிற்காது. ஆகவே பிறரது சிந்தனையை உங்கள் சிந்தனையாக மாற்றிக்கொள்வது மட்டுமே நினைவில்நிறுத்துவதற்கான சிறந்த வழி.
நீங்கள் வாசித்தவை அல்லது தெரிந்துகொண்டவை உங்கள் நினைவில் நிற்கா. அவை வெளியே இருந்து வரும் தகவல்கள். அவை உங்கள் மூளைக்கு சுமைகள். வலிந்து நினைவில் நிறுத்தவேண்டுமென்றால் ஒரே வழிதான் உள்ளது. திரும்பத்திரும்ப அவற்றை சொல்லி எழுதிப் பழகுதல். அப்போது மூளைக்குள் ஒரு தடம் உருவாகிறது. தண்ணீர் ஓடிப் பாறையில் தடம் உருவாவதுபோல.
இதுவும் ஒருவகைக் கல்வியே. இந்தவகைக் கல்வி நெடுங்காலமாக இந்திய மரபில் முக்கியமானதாக இருந்துள்ளது. மூலநூல்களையும் மூலவரிகளையும் இவ்வாறு மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்வது அவசியம்தான். ஒருதுறையில் உள்ள அடிப்படைத் தேற்றங்களையும் ஆதாரமான தகவல்களையும் இப்படி நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
வெளியே இருந்து வரும் விஷயங்கள் மீது நாம் என்ன சிந்தித்தோம் என்பது மட்டுமே நம் நினைவில் நிற்கும். சிந்தித்தவற்றைவிட செய்தவை இன்னும் அதிகமாக நினைவில் நிற்கும்.
வாசித்த விஷயங்களைச் அகத்தே சொந்த சொற்களில் சொல்லிப்பார்ப்பது ஒரு நல்ல பயிற்சி. அதற்கு ஒரு நல்ல மனநாடகம் தேவை. அந்த விஷயத்தைக் காதலிக்குக் கடிதம் எழுதுவது போல ஐநா சபையில் பேருரை ஆற்றுவதுபோல ஒரு வகுப்பில் கற்பிப்பது போலக் கற்பனைசெய்துகொண்டு சொல்லிப்பார்க்கலாம்.
ஆனால் அதைவிட எழுதுவது இன்னும் நினைவில் நிற்கும். அது செயல் அல்லவா? ஆகவே நான் எப்போதுமே நான் வாசித்தவிஷயங்களை என் சொந்த வார்த்தைகளில் திருப்பி எழுதிப்பார்ப்பது வழக்கம். அந்தக்குறிப்புகளை அந்நூலுக்குள்ளேயே வைத்து நூலகத்தில் வைத்துவிடுவேன்
இருபது வருடங்கள் கழித்து அந்த விஷயத்தைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியபின் அந்நூலை எடுத்துப் பார்க்கையில் முன்பு எழுதிய அதே வரிகளை எழுதியிருப்பதைக் காண்கிறேன்.
இவ்வாறு நீங்கள் வாசித்து உங்களுடையவையாக ஆக்கிய சிந்தனைகள் உங்களுக்குள் நீடிக்கும். அவற்றைக்கொண்டு நீங்கள் உருவாக்கிய சிந்தனைகளே ஒரு கட்டத்தில் உங்களுக்குள் எஞ்சியிருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதில் சின்ன விஷயங்கள் பின்னுக்குப்போய் மறையும். அதுவே இயல்பான நிலை
ஜெ