சோ-அண்ணா ஹசாரே-ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய இணைய தளத்தில், அண்ணா ஹஸாரே, ஞாநி, சோ என்ற தலைப்பிலான கட்டுரையைக் கண்டேன்.

http://www.jeyamohan.in/?p=19834

கொஞ்சம் வருத்தம் அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். திரு. ஞாநி பற்றி நான் அறிந்தவன் அல்ல. அவருடைய ஓ பக்கங்களைத் தவிர அவருடைய எழுத்துக்களையோ, கருத்துக்களையோ படித்தவன் அல்ல. எனவே அவரைக் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு என்னிடம் எந்த எதிர் கருத்துக்களும் இல்லை.

ஆனால் சோ விஷயத்தில் வேறுபடுகிறேன். அவருடைய கருத்துக்களைத் துக்ளக்கிலும், வேறு பல ஊடகங்களில் அவர் அளிக்கும் பேட்டிகளையும் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகிறேன். தங்கள் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள இந்தக் கட்டுரை குறித்த என் எண்ணங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும் அன்னா குறித்த தங்களின் கருத்துக்களிலும் பெருமளவு நான் மாறுபடுவதால் அவற்றையும் இந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தங்களுடைய கருத்துக்களையும் பணிவுடன் வரவேற்கிறேன்.

முதலாவதாக, தங்களிடம் கேள்வி கேட்டிருக்கும், திரு. வெங்கட் ராமானுஜம் “ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் சொல்கிறார்.” என்று எழுதியுள்ளார். இந்தக் கருத்தை (தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறித்து) சோ அவர்கள் எங்கு தெரிவித்துள்ளார்கள் என்று அவர் எழுதினால் மிகவும் உதவியாக இருக்கும். எனக்குத் தெரிந்த வரையில் சோ அவ்வாறு எங்கும் கூறவில்லை! தங்களிடமோ, அல்லது திரு. வெங்கட் அவர்களிடமோ அதற்கான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஏறக்குறைய இதை ஒட்டி, சோவிடம் துக்ளக்கில் ஒரு வாசகர் கேட்ட கேள்வியும், அவருடைய பதிலும் பின்வருமாறு.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

கே : வட இந்தியாவில் மட்டும் ஆதரவு திரட்டும் அன்னா ஹஸாரே குழு, தென்னிந்தியா பக்கமே வரவில்லையே, ஏன்?

ப : பயம்! உதறல்! நடுக்கம்! ஸ்பெக்ட்ரம் பூமியில் தங்களை என்ன செய்து விடுவார்களோ என்று, ஊழல் ஒழிப்புவாதிகள் அஞ்சி நடுங்கி இருக்கிறார்கள்

இது மேலோட்டமாகப் பார்க்கும் போது அன்னாவைப் பற்றிய கிண்டலாக இருந்தாலும், உண்மையில் திமுகவைப் பற்றிய தாக்குதல்தான். நான் பார்த்த வரையில் வேறு எங்கும் அன்னா vs தமிழர்கள் பிரச்சனையை(!?) சோ பேசியிருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்ததாக, திரு. வெங்கட் எழுப்பிய கேள்விகளுக்கான தங்கள் பதில்கள். நான் முன்பே கூறியது போல், திரு. ஞாநி பற்றி எனக்கு அதிகம் தெரியாததால், சோ விடம் செல்கிறேன். தங்களின் இந்தக் கட்டுரையை முழுவதும் படித்த பிறகு, லோக்பால், மற்றும் அன்னா ஹஸாரேவைப் பற்றிய சோவின் கருத்துக்களை உறுதிப் படுத்திக் கொள்ள, பழைய துக்ளக் இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தேன். ஏப்ரல் 2011 லிருந்து ஆகஸ்ட் 2011 வரையிலான இதழ்களில் அன்னா குறித்த அனேகக் கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தார். 4 தலையங்கள், மற்றும் பல கேள்வி-பதில்கள் ஆகியவற்றில் அவரது கருத்துக்களை எடுத்துள்ளேன். இறுதியில் அன்னா தனது போராட்டம் வெற்றி என்று அறிவித்துக் கொண்ட போது, துக்ளக் வாசகர்களின் கேள்விகளைத் தொகுத்து summarize செய்து வெளியிட்ட தொகுப்பையும் கணக்கில் கொண்டு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

(குறிப்பு : சில துக்ளக் கேள்வி பதில்களை intentional-ஆக தவிர்த்து உள்ளேன். அவற்றில் வெறும் கிண்டல் த்வனி கேள்வி மற்றும் பதில் இரண்டிலுமே இருந்ததினால்)

முதலில் சோ அவர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம்.

* சோ அவர்கள் அன்னாவின் நேர்மையை சந்தேஹிக்கவில்லை.

* அன்னாவைப் பற்றி அவதூறாக எதையும் எழுதவில்லை.

* ஆச்சரியகரமாக பாபா ராம்தேவைப் பற்றியும் மேற்கண்ட இரு நிலைப்பாடுகளையும் சோ கொண்டுள்ளார்.

* லோக்பால் வரும் பட்சத்தில் அதை ஆதரிக்கவும், ஏற்கவும் தயாராக உள்ளார்.

* அதே சமயத்தில் லோக்பாலை ஒரு சர்வரோக நிவாரணியாகப் பார்ப்பதை ஏற்க மறுக்கிறார்.

* லோக்பாலுடன் முரண்படுகிறார். ஏனெனில்,

– அது சரியாக வடிவமைக்கப் படவில்லை.

– அது அமுல்படுத்தப் படும் பட்சத்தில், தற்போதைய சட்டங்களுடன் நிறைய வகைகளில் முரண்படுகிறது. (அதாவது ஒரு deadlock-ஐ ஏற்படுத்துகிறது)

– புதிய சட்டங்கள் எவ்வளவு வந்தாலும், அதை நிறைவேற்றுபவர்கள், அதாவது, ஆட்சிப் பொறுப்பிலும், அதிகார வர்க்கத்திலும் அமர்ந்திருப்போரே அந்தச் சட்டத்தின் நிலையைத் தீர்மானிக்கிறார். எனவே, லோக்பால் பிழைகளில்லாமல் கொண்டுவரப் பட்டாலும், அதை நிறைவேற்றுபவர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் குறையப் போவதில்லை.

* அன்னாவுடனும் முரண்படுகிறார். ஏனெனில்

– அன்னா, ஊடகங்களின் கைப்பொம்மையாக பல சமயங்களில் ஆகிவிடுகிறார். அவரை வேண்டும் வகையில் ஆட்டுவிக்க ஊடகங்களால் எளிதில் முடிகிறது. உதாரணமாக ”இது டெலிவிஷன் நாயகம்” என்ற தனது தலையங்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

”….இப்படியாகத்தானே, இந்த சேனல்கள் கொடுத்த ‘கீ’ நன்றாகவே வேலை செய்திருக்கிறது. அன்னா ஹஸாரேவே இதில் மயங்கிப் போய், தன்னுடைய இயக்கத்தை, ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று வர்ணித்துக் கொண்டு விட்டார். மற்றவர்கள் ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தை மறந்து இருக்கலாம். இவர் மறக்கலாமா? ஊழலுக்கு எதிராக, ஜெ.பி. நடத்திய இயக்கத்திற்குக் கிட்டிய ஆதரவைக் கண்டு, அன்று பிரமித்தது – இன்றைய பிரதமரைப் போன்ற பலவீனமான ஆட்சியாளர் அல்ல – பலம் மிக்கவராகத் திகழ்ந்த இந்திரா காந்தி! மற்ற கட்சிகளை நம்பி நடத்தப்பட்டது அல்ல அவருடைய அரசு. அசுர பலம் பெற்றிருந்த அவரே திகைத்துப் போய், அரசுக்கு ஆபத்து என்று பயந்து, (ஒரு நீதிமன்ற உத்திரவும் சேர) எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தார். பல தலைவர்கள், பத்தொன்பது மாதம் தனிமைச் சிறையில் இருந்தனர். ஜெ.பி. யின் அந்தப் போராட்டம் ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று பின்னர் பாராட்டப்பட்டது. ஆனால், அன்னா ஹஸாரே அதை அமுக்கி விட்டு, தன் இயக்கத்திற்கு ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று, தானே பட்டம் சூட்டுகிறார்!…”

இதைத் தாங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். தாங்கள் (நானும்) மதிக்கும் ஜெபி-யே தனது மகத்தான போராட்டத்தை “2வது சுதந்திரப் போர்” என்று அழைத்துக் கொள்ளாத நிலையில், அன்னா அவ்வாறு அழைத்துக் கொள்ளுவது எவ்வளவு சரி? அதற்கான தகுதியை அந்தப் போராட்டம் பெற்றுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

– தான் கொண்ட கருத்துக்களில் நிலை கொள்ளாமல் இருப்பதால். இதற்கு அடிக்கடி சோ காட்டும் உதாரணம், மோடியின் குஜராத் அரசைப் பற்றிய அன்னாவின் positive பாராட்டும், அதை அடுத்து எழுந்த கண்டனங்களை ஒட்டி, ஒரு moderate நிலைப்பாடும், பின் கண்டனங்கள் மேலும் வலுத்த போது, குஜராத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் என்று மொத்தமாக negative நிலைப்பாடும் எடுத்ததை. குஜராத் அரசில் ஊழல் இருக்கிறது என்று அங்கு எதிர் கட்சியாக உள்ள காங்கிரஸாலேயே கூற முடியவில்லை. ஆனால் இவரால் கூற முடிகிறது என்றால்? எனக்கு விளங்கவில்லை.

தனது போராட்டம் திசை மாறிப் போகாமல் இருக்க செய்து கொண்ட ஒரு சமரசமாகவும் இதை என்னால் பார்க்க முடியவில்லை. “பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுடன் தனக்குத் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டுபவர்களை, மனநல மருத்துவமனைக்கு அனுப்புங்கள்” என்று சொல்பவரை நான் ஏன் நம்ப வேண்டும்? ”பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் மதம் சம்பந்தமான கொள்கைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஊழலை ஒழிப்பதில் அவற்றின் கொள்கைகளோடு நான் ஒத்துப் போகிறேன். அதனால் காவிச் சாயம் கிடைத்தாலும் பரவாயில்லை” என்று அன்னா சொல்லியிருந்தால் அது சமரசம். ஊழலை ஒழிக்கும் ஒரே நோக்கத்திற்காக, நான் ஏற்றுக் கொள்ளாத வேறு பல கொள்கைகளை உடைய ஆர்.எஸ்.எஸ் உடனும் கூட்டு சேர தயாராக உள்ளேன் என்றல்லவா இவர் கூறியிருக்க வேண்டும்?

நான் அன்னாவிடம் உள்ள சிறிய குறைகளைக் கூட பெரிதாக்குகிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். பாஜகவோ, ஆர்.எஸ்.எஸ்.ஸோ, ஊழலை ஒழிப்பதில் தவிர்த்து விடக் கூடிய சக்திகள் இல்லை என்பது நிதர்சனம். அதை ஏற்றுக் கொள்ளும் மனவலிமை இல்லாதவரை, அவரின் நோக்கத்தை குறை கூறக் கூடாதா என்ன?

– தன்னுடைய லோக்பால் வழிமுறைகளை அரசு ஏற்பதற்கு, உண்ணாவிரதத்தை ஒரு மிரட்டல் ஆயுதமாகப் பயன்படுத்தியதை. தன்னை ஒரு காந்தியவாதியாகக் காட்டிக் கொண்டு, இவ்வாறு ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பதில் என்ன வகை நியாயம் இருக்க முடியும்? மஹாத்மாவும் உண்ணாவிரதம் இருந்தவர்தான். ஆனால் தான் கொண்ட கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தக் கூடாது என்ற கருத்தை உடையவரா என்ன?

– அவருடைய அப்பாவித்தனத்தால். இது குறித்து தாங்கள் தினமணியில் (சரத் பவார் அறையப்பட்டதை ஒட்டி அன்னா தெரிவித்த கருத்தைப் பற்றி) எழுதிய கட்டுரையே வேண்டிய ஆதாரத்தைத் தரும் என்று நினைக்கிறேன். அன்னா மக்கள் மொழியில் பேசட்டும். ஆனால் அவரைப் பின் தொடரும் மக்களின் நம்பிக்கை எப்பேர்பட்டது? பல ஆண்டுகளாக ஊழல்களின் அசுரப் பிடியில் அகப்பட்டு, துன்பங்களை அனுபவித்து, அன்னாவின் வருகைக்குப் பிறகு அதை ஒரு நம்பிக்கை ஒளியாகப் பாவித்து பின்வரும் அப்பாவி மக்களின் நம்பிக்கை அல்லவா அது? அன்னாவின் வன்முறைகள் அடங்கிய தண்டனைகள் அல்ல எனக்கு (என்னைப் போன்றவர்களுக்கு) வருத்தத்தை அளிப்பது. மாறாக அவரின் அப்பாவித்தனமே.

தன்னுடைய எதிரிகளின் பலத்தை இவர் எவ்வளவு குறைவாக மதிப்பிட்டு இருக்கிறார் என்பதையே இந்த நிகழ்ச்சி, என்னைப் போன்ற சாமானியர்களுக்குக் காட்டுகிறது. ஒரு சாதாரண விஷயத்தில், இவர் தன்னுடைய எதிரிகளை இவ்வளவு குறைத்து மதிப்பிட்டு இருந்தால், பெரிய விஷயங்களில் எவ்வாறு எதிர் கொள்வார் என்று சந்தேஹப்படும் உரிமை, அவரைப் பின்பற்ற விரும்பும் மனிதனான எனக்கு உண்டு என்றே நினைக்கிறேன்.

இப்போது தங்கள் கட்டுரையில் தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள சில விஷயங்களுக்கு வருகிறேன். எனக்கு ஒரு சிறிய சந்தோஷம் என்னவென்றால், சோவைக் குறித்து அதிகம் தாங்கள் தாக்கவில்லை என்பதே. எனினும், அவரைக் குறித்து தாங்கள் எழுதிய சில கருத்துக்களுக்கான எனது கருத்துக்களை கீழே அளித்துள்ளேன்.

சோ அவர்கள், அன்னா விஷயத்தில் வரலாற்றுப் பிண்ணனியில் வைத்துப் பார்க்கவில்லை, அதனால் நேர்மையற்றும் இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். எந்த விதமான வரலாற்றுப் பிண்ணனியைப் பற்றிக் கூறுகிறீர்கள் என்று எனக்கு சிறிது குழப்பமாக இருக்கிறது.

சோ 1937 வாக்கில் பிறந்தவர். சட்டம் பயின்றவர். தனது இளைய வயதிலேயே வழக்கறிஞராக ஆனவர் என்று படித்திருக்கிறேன். 1970 வாக்கில் துக்ளக்கை ஆரம்பித்ததாக நினைவு. அதில் அரசியல் தவிர்த்து ஏனைய செய்திகள் வருவது மிகக் குறைவே. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க இந்தத் தகுதிகள், அதாவது

சட்டம் பயின்று பெற்ற சட்ட அறிவும் (அவர் ஆஜரான வழக்குகளில் ஒன்றிரண்டைத் தவிர வேறு எதிலும் தோற்றவரில்லை என்பதைத் தாங்கள் அறிந்திருக்கக் கூடும்),

42 ஆண்டுகளாக தமிழக மற்றும் இந்திய அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வந்து,

பல்வேறு வகையான அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி,

சில அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாகி,

ஏறக்குறைய அனைவரையுமே விமர்சித்து வந்து,

அதன் மூலமாகப் பெற்ற நாட்டின் தற்போதைய நிலையைப் பற்றிய அறிவும்,

இந்நாட்டில் ஊழலை ஒழிக்க போதுமான வரலாற்றுப் பிண்ணனியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் தாங்கள் மாறுபடும் பட்சத்தில், தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்.

மேலும், சோ அவர்களே முன்பு ஒரு முறை கூறியபடி, அவருடைய கருத்துக்களை, அவரது ஆசிரியர் குழுவில் இருப்பவர்களைக் கொண்டு மெருகேற்றிக் கொள்கிறார். அதில் ஏற்படும் ஓட்டைகளை அடைத்துக் கொள்கிறார். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக அறியப்படும் இரா.செழியன், முன்னாள் ஐஏஎஸ் திரு. முருகன் மற்றும் ஆடிட்டர் & பத்திரிக்கையாளர் திரு. குருமூர்த்தி ஆகியோரும் அவரது கருத்துக்களுக்கு வலு சேர்க்கின்றனர். இதன் மூலம் அவர் சொல்லும் கருத்துக்களின் வலிமையை அதிகரித்துக் கொள்கிறார்.

உதாரணத்திற்கு, திரு. முருகன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய “நேரடி ஜனநாயகம் சாத்தியமா?” என்ற கட்டுரையை இணைத்துள்ளேன். அது லோக்பாலின் பாதக அம்சங்களைப் பற்றிய ஒரு தெளிவைப் படிப்போருக்குக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன். அவர் அன்னாவையோ, அவரது நோக்கத்தையோ எதிர்க்கவில்லை. அவரின் செயல்பாடுகளையும், மேற்கொள்ளும் வழிமுறைகளையும், அவரின் பலஹீனங்களையுமே எதிர்க்கிறார்.

அன்னாவைக் கிண்டலடித்து காங்கிரஸாரிடமிருந்து வரும் கருத்துக்களுக்கு நன்றாகவே பதிலடிகள் கொடுத்திருக்கிறார். பிரதமரை லோக்பாலுக்குள் (லோக்பால் வரும் பட்சத்தில்) கொண்டு வர பலமுறை வலியுறுத்தியுள்ளார். இந்தக் கடிதத்துடன் இணைத்துள்ள “துக்ளக் கேள்வி-பதில்”களை வாசிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஞாநி போன்றவர்களுக்கு இந்திய அரசுத்துறைகள் செயல்படும் விதம் பற்றி அரிச்சுவடியே தெரியாது என்று எழுதியிருக்கிறீர்கள். சோவைப் பற்றிய இத்தகைய கருத்தைத் தாங்கள் கொண்டிருக்க வில்லையென்றே நினைக்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில் அதையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் சில உதாரணங்களுடன்.

என்னுடைய இன்னொரு கேள்வி. இந்த போராட்டத்திற்கு, ஊடகங்கள் அளித்த மிகைப் படுத்தப்பட்ட முக்கியத்துவம். அன்னா இதை ஏன் ஏற்றார்? அவர் அதை முற்றிலும் நிராகரித்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நிச்சயமாக சமரசம் செய்து கொள்ளும் area அல்ல இது. இன்று அதன் விளைவைப் பாருங்கள். ஊடகங்களின் கையில் இந்தப் போராட்டதின் switch சென்றுவிட்டது. அவை நினைத்தால் மட்டுமே இனி போராட்டம் நடக்கும்! நாம் நமது ஆத்திரம் தீர சொல்லிக் கொள்ளலாம். போராட்டம் ஏதேனும் ஒரு வகையில் முன்னேறும் என்று. ஆனால் நிதர்சனம் வேறு!

கடைசியாக “சோவைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்த பிஜெபி தொண்டனையும்போலத்தான் அவரும். அவருக்கான நோக்கங்களே வேறு.” என்று எழுதியிருக்கிறீர்கள். எனக்கு உண்மையிலேயே இவ்வார்த்தைகள் சோர்வைத் தருகின்றன. எந்த வகையில் அவர் பிஜேபி தொண்டன் ஆனார் என்று விளக்க முடியுமா? பிஜேபியில் தொண்டனாக இருப்பது (இப்போதும் கூட) என்னைப் பொறுத்தவரையில் சம்மதமான ஒன்றுதான். நான் கூற விரும்புவது, அவர் பிஜேபி தொண்டனைப் போல் அல்லாது, பிஜேபியை, அதன் தலைவர்களை, கடுமையாக விமர்சிக்கும் தைரியமும் வாய்க்கப் பெற்றவர் என்பதை!

ஒரு துக்ளக் ஆண்டு விழாவில், திரு. அத்வானியையும் வைத்துக் கொண்டு சோ, பிஜேபியை விமர்சித்துப் பேசியவையும், பிஜேபி தலைவர்களுள் தீவிரமான ஒருவராக அறியப்பட்ட உமா பாரதியை, அவரிடமே “நீங்கள் இருக்கும் வரை பிஜேபிக்கு கஷ்டம்தான்” என்று கூறியதும், ஒரு பிஜேபி தொண்டன் செய்யக் கூடியவை இல்லை!

அவருக்கான நோக்கங்கள் வேறு என்றும் சொல்கிறீர்கள். அவை என்னவாக இருக்கும்? கொஞ்சம் சொல்ல முடியுமா?

அன்புடன்

கணேஷ் பெரியசாமி.

பின்குறிப்பு : இந்தக் கடிதம் மூலம், நான் சொல்ல வந்த கருத்துக்களை, ஓரளவு தெளிவாகவும், விரிவாகவும் எழுத முடிந்தது. அந்த வாய்ப்பளித்த வகையில் மிகவும் நன்றி :) வழக்கம் போல், தங்களின் கட்டுரைகளை, பதிவுகளைத் தங்கள் இணைய தளத்தில் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. நான் நீள, நீளமாக எழுதுவதைப் படிப்பதில் திறமையாளன் என்று நினைத்திருந்தேன். தாங்கள் தங்களின் வாசகர்களுக்கு அளிக்கும் விரிவான பதில்கள் எனக்கு படிப்பதற்கு சவாலாகவே இருக்கின்றன. ஓர் இனிய அனுபவம் என்றே சொல்வேன் :)

முந்தைய கட்டுரைரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு
அடுத்த கட்டுரைநட்பு