1969 ஜூலை 21 அம் தேதி மனிதன் சந்திரனில் கால்வைத்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.அப்போது நான் இரண்டாம்வகுப்பில் படிக்கும் மாணவன். என்னுடைய ஆசிரியர் வகுப்புக்கு மிகமிக உற்சாகமாக வந்தார். ‘லே, இண்ணைக்கு மனுஷன் சிவனுக்க தலையிலே சவட்டிட்டான்லே’ என்றார். நிலா சிவனின் தலையில் இருக்கிறது, அதில் மனிதன் மிதித்துவிட்டான். அறிவியலின் வெற்றி, நவீனத்துவத்தின் வெற்றி, மேற்குலகின் வெற்றி!
மனிதன் நிலாவை மிதித்த அந்நிகழ்ச்சிக்கு உலகளாவிய பண்பாட்டில் உள்ள தாக்கத்தை எத்தனை பேர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. உலகம் முழுக்க ஒரு புதிய யுகத்தில் காலடி எடுத்துவைத்த நாட்கள் அவை. ஆப்ரிக்க, ஆசியநாடுகள் பலவும் அரசியல் விடுதலை அடைந்துகொண்டிருந்தன. அந்நாடுகளில் இருந்த மரபான சமூக அமைப்பு உடைந்துகொண்டிருந்தது. பழைமையான வாழ்க்கைமுறைகளும் நம்பிக்கைகளும் மாற்றமடைந்தன. பலநாடுகளில் மன்னராட்சியோ நிலப்பிரபுக்களின் ஆட்சியோ அழிந்து குடியரசோ சர்வாதிகாரமோ வந்துகொண்டிருந்தது. அரசப்பிறப்பு இல்லாத சாதாரண மனிதன் ஆட்சிசெய்யமுடியும் என்ற அற்புதத்தை மக்கள் காண ஆரம்பித்தனர்
காலனியாதிக்கம் அதற்கு அரைநூற்றாண்டு முன்பே உலகமெங்கும் நவீன அறிவியலைக் கொண்டு சென்று சேர்த்திருந்தது. ரயிலும் பேருந்தும் தபாலமைப்பும் பள்ளிக்கூடமும் உருவாகிவிட்டிருந்தன. வானொலி கேட்க ஆரம்பித்திருந்தது. ஆனால் அதெல்லாம் காலனிநாடுகளின் ஆட்சிக்கான வசதிகளாகவே இருந்தன. மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிவியலின் தொடர்பு இருக்கவில்லை. ஆனால் சுதந்திரம்பெற்ற ஆப்ரிக்க ஆசிய அரசுகள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மக்களிடையே பரப்பி ஓர் இயக்கமாக முன்னெடுக்க ஆரம்பித்தன. அதை ‘வளர்ச்சி’க்கான வழியாக அவை மதிப்பிட்டன.
இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது . கிராமங்களுக்குச் சாலைகளும் மின்சாரமும் சென்று சேர ஆரம்பித்தன. இந்தியாவின் அடித்தளச்சாதிகள் பள்ளிக்கூடம் நோக்கி வர ஆரம்பித்திருந்தனர். இந்தியாவின் இந்தக்காலகட்டத்தையே கல்வியுகம் என்று சொன்னால் மிகையல்ல. அந்தக் கல்வி நவீன அறிவியல்கல்வியாகவே இருக்கவேண்டும் என்று நேருவும் அவரது ஆலோசகர்களான மகாலானோபிஸும் பி.என்.ஹக்ஸரும் தீர்மானித்தனர். அந்த நவீன அறிவியலென்பது ஐரோப்பிய நிரூபணவாத அறிவியல்தான்.
விளைவாக ஐம்பதுகளின் இறுதியில் இந்தியா நவீன ஐரோப்பிய அறிவியலின் விளிம்பில் நின்று தள்ளாட ஆரம்பித்தது. பண்டாரமாடனின் வம்ச பரம்பரை தாங்கள் என எண்ணியிருந்தவர்கள் மனிதனின் மூதாதை குரங்கு என்று அறிந்து திகிலடைந்தார்கள். மாரியம்மனால் வைசூரி வருகிறது என புரிந்துகொண்டிருந்தவர்கள் வெள்ளைக்கடவுளான வைரஸை அறிமுகம் செய்துகொண்டார்கள். ஆனால் நவீன அறிவியலுக்கும் இந்திய மனதுக்கும் இடையே பெரும் அகழி ஒன்று இருந்தது. எந்த அளவுக்கு ஒருவர் மண்ணுடன் உறவுள்ளவரோ அந்த அளவுக்கு அவரால் நவீன அறிவியலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
நவீன அறிவியல் அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கண்டடைந்த எல்லா விவேகங்களையும் நிராகரிக்கும்படி அவர்களுக்குக் கற்பித்தது. மண்ணுக்குமண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு தாய்க்கும் மக்களுக்குமான உறவென எண்ணியிருந்தவர்கண் மண் என்பது இடுபொருளை விளைபொருளாக ஆக்கித்தரும் ஒரு இயந்திரம் மட்டுமே என்று எண்ண பயிற்றுவிக்கப்பட்டார்கள். மரங்களும் மனிதர்களைப்போலவே மண்ணில் வாழும் உரிமை உள்ளவை என எண்ணியிருந்தவர்கள் மனிதனுக்கு பயனற்ற மரங்கள் மண்ணில் இருக்கத்தேவையில்லை என்று கற்பிக்கப்பட்டார்கள்.
ஒட்டுமொத்தமாக அவர்கள் நம்பி வந்த பூமியே அவர்களின் கண்முன்னால் இல்லாமலாகியது. பூச்சிகள், புழுக்கள், பறவைகள், மிருகங்களினாலான ஒரு பெரும் உயிர்வெளி அவர்களின் பூமி. மனிதன் அதில் ஒரு துளி. அதன் நோக்கமும் இலக்கும் அதை ஆக்கிய ஆற்றலுக்கு மட்டுமே தெரிந்தவை. ஆனால் நவீன அறிவியல் அவர்களுக்கு காட்டிய பூமி அள்ளி அள்ளி தின்றுகொண்டே இருக்கவேண்டிய ஒரு சட்டி மட்டும்தான். குடைந்து குடைந்து எடுக்கவேண்டிய ஒரு புதையல் மட்டும்தான்
எந்த நூலில் இருந்தும் நான் இந்த மாற்றத்தை அவதானிக்கவில்லை. என் கண்ணெதிரே இந்த மாற்றம் நிகழ்ந்ததை நான் அந்த வயதிலேயே கண்டிருக்கிறேன்- ஆம் , நான் அந்த மாற்றத்தை வரவேற்பவனாகவும் அந்த மாற்றத்தை அஞ்சுபவர்களை இகழ்பவனாகவும் இருந்தேன். என் ஆசிரியர்கள் எனக்கு அதைத்தான் கற்பித்தார்கள். என் அப்பா மறைந்த பாகுலேயன்பிள்ளை நவீனக்கல்வி கற்றவராக இருந்தாலும் முழுக்கமுழுக்க பாரம்பரியவாதிகளின் குரலாகவே ஒலித்தார். அனேகமாக ஒவ்வொருநாளும் நவீன அறிவியலுக்கு எதிராக அப்பா வீட்டில் இருந்து நண்பர்களிடம் கொதித்துக்கொண்டிருந்தார். அறைக்குள் இருந்து நான் அவரை நையாண்டி செய்வேன்.
பத்திரப்பதிவுத்துறை அரசூழியராக இருந்த அப்பா கடைசிவரை ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை இல்லாமலேயே வெற்றிகரமாக விவசாயம்செய்ததுடன் அதைப்பற்றி கடைசிநாள் வரை அனேகமாக தினமும் தற்பெருமையடிக்கும் வழக்கமும் கொண்டிருந்தார். அது ஒட்டுமொத்தமாக நவீன அறிவியல் மீது கொண்ட சந்தேகத்தால்தான். அவர் வாழ்நாளில் பார்த்தது ஒரே சினிமாதான். சாவதற்காக மட்டுமே ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார்- மற்றபடி ஆயுர்வேத மருந்துதான். கடைசிவரை ரேடியோ பெட்டி வாங்க திட்ட்வட்டமாக மறுத்துவிட்டார். கிட்டத்தட்ட இந்த மனநிலைதான் கிராமத்தில் நிலவியது
கிராமத்தில் விவசாயத்தை நவீனப்படுத்த அரசாங்கம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளை கிராம மக்கள் நிராகரித்தே வந்தனர். எங்கள் கிராமத்தில் எட்டு ஆயுர்வேத சிகிழ்ச்சையகங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தன. நவீன மருத்துவம் தெரிந்த எவருமே இருக்கவில்லை. அந்நிலையில்தான் மனிதன் சந்திரனில் இறங்கினான். அது கிராமத்தையே அதிரவைத்த நிகழ்ச்சியாக இருந்தது. இன்றுகூட அந்த பரபரப்பை துல்லியமாக நினைவுகூர்கிறேன்.
தினத்தந்தியில் தலைப்புச்செய்திபக்கமே நினைவிருக்கிறது ‘சந்திரனில் மனிதன்’. எங்களூர் கண்ணன் சவரக்கடையில் ஐம்பது பேருக்குமேல் கூடி செய்தித்தாளை மீண்டும் மீண்டும் வாசிக்கச்சொல்லி கேட்டார்கள். ஒரேநாளில் சாணிபொறுக்கும் பிலோமி ஆயாவுக்குக்கூட தகவல் தெரிந்துவிட்டது. ஆச்சரியமென்னவென்றால் சிலநாட்களிலேயே வெள்ளைக்காரன் நிலாவில் கால்வைத்துவிட்டான் என்பதை அனேகமாக அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!.
அதற்கு முன்னரே யூரி ககாரின் விண்வெளியில் பறந்துவிட்டிருந்தார். ஆனால் அதெல்லாம் ஊரில் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் விண்வெளி என ஒன்றிருப்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. ஏற்கனவே விமானங்கள் வானில் பறந்துகொண்டும் இருந்தன. ஆனால் சந்திரன் அப்படி அல்ல. அது ஒரு தெய்வம். தெய்வத்தின் மேலிருக்கும் சின்ன தெய்வம். கண்கூடானது. அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, திருவிதாங்கூர் மன்னர்கள் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அந்த நிலவில் மனிதன் காலை வைத்துவிட்டான்.
பசுமைப்புரட்சிக்கும் மனிதன் சந்திரனில் இறங்கியதற்கும் நெருக்கமான தொடர்புண்டு என நான் சொன்னால் அதை இந்தப்பின்னணியில் வைத்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும். மனிதன் சந்திரனில் இறங்கியது எங்களூரில் தெளிவாக ஒரு செய்தியை சொன்னது- நவீன அறிவியல் யுகம் உருவாகி விட்டிருக்கிறது. பழைய காலத்தின் தலையில் காலை வைத்துவிட்டார்கள்.
அந்த படிமத்துக்கு நம் மரபில், குறிப்பாக கேரளச்சூழலில் உள்ள அர்த்தத்தை யோசித்துப்பாருங்கள். நாடாண்டுகொண்டிருக்கிற மாவலி சக்கரவர்த்தியைத் தேடி வாமனன் வருகிறான். மூன்றடி மண் கேட்கிறான். விஸ்வரூபமாக காலை தூக்கி மண்ணையும் விண்ணையும் தாண்டி விடுகிறான். சக்கரவர்த்தியின் தலையில் மூன்றாவது காலை வைத்து பாதாளத்துக்கு அழுத்திவிடுகிறான். அந்த மூன்றாவது கால்தான் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் வைத்தது
அவரே சொன்னார், இது என்னுடைய சிறிய காலடி மனிதகுலத்துக்கு மாபெரும் தாவல் என. அதை இந்தியா அப்படியே ஏற்றுக்கொண்டது. அந்த நாளுக்குப்பின்னால் ஒவ்வொன்று மாறிய வேகத்தை எண்ணினால் இப்போது பயமாகவே இருக்கிறது. அறிவியல் என எதைச்சொன்னாலும் அதன் மேல் மக்களுக்கு ஆழமான நம்பிக்கை வந்தது. ‘வெள்ளக்காரன் சும்மா சொல்லுவானா?’ என்ற எண்ணம் வேரூன்றியது.
வெறும் ஐந்தே வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள்! தயங்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் வீடுகளுக்கு மின்சாரம் எடுத்துக்கொண்டார்கள். என் அப்பா பிடிவாதமாக கடைசிவரை , 1984ல் அவர் இறப்பது வரை, வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்தார்.நாங்கள் அரிக்கேன் விளக்கிலே படித்தோம். கிராமங்களில் ரேடியோப்பெட்டி பரவலாகியது. நைலான் உடைகள் வந்தன. வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் வந்து சேர்ந்தன. கிராமத்தில் ஏராளமான அலோபதி கம்பவுண்டர்கள் வந்து தொழில் செய்ய ஆரம்பித்தனர். ’சாயக்குளிகை’ என்றாலே அஞ்சி ஓடிய ‘அம்மச்சி’கள் எல்லாம் கைகளில் குப்பிகளுடன் மருந்து வாங்க ஆஸ்பத்திரிகளுக்குச் சென்றார்கள். ஆயுர்வேத வைத்தியர்கள் வறுமையானார்கள்.
அந்தக்காலகட்டத்தில்தான் பசுமைப்புரட்சி அலையாக கிராமங்களை தழுவியது. கலப்புவிதைரகங்களும் உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் மக்களிடையே நவீன அறிவியலின் அடையாளங்களாகவே எண்ணப்பட்டன. நவீன விவசாய பிரச்சாரகர்களை கண்டு ஓடி ஒளிந்த அதே மக்கள் உரம் வாங்க ‘சொசைட்டி’ எனப்படும் கிராமக்கூட்டுறவுசாலைகளிலும் ‘பிளாக்கு’ எனப்பட்ட வட்டார அலுவலகங்களிலும் காலையிலேயே சென்று வரிசை வரிசையாக நின்றார்கள். உரமும் பூச்சிமருந்தும் ஏதோ அரிய சஞ்சீவிகளாக கருதப்பட்டன. சீமையுரம் எனப்பட்ட அமோனியா சல்ஃபைட்டை அள்ளி அள்ளி பார்த்து ‘ நயம் கல்கண்டு மாதிரில்லா இருக்கு…’ என பரவசமடையும் விவசாயிகளை பார்த்திருக்கிறேன்.
நவீன அறிவியலும் பசுமைப்புரட்சியும் சமானமாகவே கருதப்பட்டன என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். என் சின்ன வயதில் ஐ.ஆர்.எட்டு என்ற நெல்ரகம் வந்தது. தாக்குப்பிடிக்கும் நெல்வகை என்று சொல்லி கொண்டுவரப்பட்ட இந்த நெல் கொஞ்சநாளிலேயே காணாமல் போயிற்று. உண்மையிலேயே தாக்குப்பிடிக்கும் பல பாரம்பரிய நெல்ரகங்கள் மறைந்தன. ஆனால் ஐயாறெட்டு என்ற சொல் நவீன விதைகளின் ஒட்டுமொத்தச் சொல்லாக இன்றும் குமரிமாவட்டத்தில் புழங்குகிறது. அன்று அது நவீன அறிவியலைச் சுட்டும் சொல்லாகவே இருந்தது
மிகவும் அறிவியல்பூர்வமாக ஒருவன் பேசினால் ‘ஆளு ஒரு ஐயாறெட்டாக்கும்’ என்பார்கள். ‘நல்ல ஐயாறெட்டு சாதியாக்கும்’ என சிந்தி எருமை சொல்லப்பட்டது. ‘இண்ணைக்குள்ள காச்சலுக்கு பளைய மருந்து கேக்காது…நல்ல ஐயாறெட்டு மருந்து வேணும்’ என்பார்கள். ‘ஏமானே எனக்க பிள்ளைக்கு ஐயாறெட்டு மருந்து குடுங்க’ என்று கிராமப் பெண்கள் டாக்டரிடம் கேட்பார்கள். ஏன், நல்ல மதிப்பெண் வாங்கி ‘உயர்தர’ குழந்தையாக விளங்கிய நான் நெடுங்காலம் ஐயாறெட்டு என அன்புடன் அழைக்கப்பட்டேன்.
மிகச்சீக்கிரத்திலேயே பசுமைப்புரட்சியின் எதிர்விளைவுகளை அனைவரும் உணர ஆரம்பித்தார்கள். ஆனால் வேறுவழியில்லை. அரக்கில் சிக்கிய ஈ சிறகடித்தால் இன்னும் நன்றாகச் சிக்கும். பிற இடங்களைப்போல குமரிமாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை. தண்ணீரை வயலில் இருந்து வடியச்செய்வதே பிரச்சினை. ஆனால் எங்களுக்கே உரிய பல சிக்கல்கள் இருந்தன. முதல் பிரச்சினை பூச்சிமருந்துக்கள் மழையால் கரைக்கப்படுவது . இங்கே சின்னச்சின்ன நிலங்களாக வைத்திருப்பார்கள். அரைஏக்கா நிலம்தான் ஒரு துண்டாக இருக்கும். ஆகவே ஒருவர் பூச்சிமருந்து அடித்தால் பூச்சி அடுத்த வயலுக்கு போய் சொந்தக்காரர்களுடன் ராத்தங்கிவிட்டு காலையில் திரும்ப வந்துவிடும். உரம் மழையில் பெருகி புல்லுக்கும் பொசிய ஆரம்பித்துவிடும். ஆகவே ஒன்றுக்கு மூன்றுமடங்கு இடுபொருட்க்ள் தேவைப்பட்டன.
குமரிமாவட்டத்தில் அதற்கு முன்னால் கேள்விப்பட்டே இருக்காத பிரச்சினைகள் உருவாயின. நீர்வளம் மிக்க பகுதியாதலால் பலவகையான புற்களும் களைகளும் இங்கே அதிகம். ஆனால் ரசாயன உரம் வந்ததும் சிலவகை புற்கள் பெரிதாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பித்தன. எங்களூரில் வளரி எனப்படும் ஒரு வகை சேற்றுப்ப்புல் வயலில் நிறைய முளைக்கும். அதை அப்படியே கொத்தி கவிழ்த்து சேற்றிலே போட்டு அழுகவைத்து உழுது நெல் போடுவார்கள். அதை களை தாழ்த்துவது என்போம். வளரியை பிடுங்கி நீருக்குள் அழுத்தி புதைப்பதுதான் வழக்கம். வளரியை எருமைக்கு கூட கொடுக்கமுடியாது,பீச்சியடிக்கும்.
சாதாரணமாக பூவுக்கு மூன்று களை எடுக்கவேண்டும். நல்ல மழைக்காலம் என்றால் நான்கு. ரசாயன உரம் வந்தபிறகு வாராவாரம் களை எடுக்கவேண்டியிருந்தது. அதற்கு கட்டுப்படியாகாமல் நில உரிமையாளர்கள் அனேகமாக தினமும் காலையில் வயல்களில் கொஞ்சம் கொஞ்சமாக களை பிடுங்கினார்கள். முதுகொடிய வருடமெல்லாம் களைபிடுங்கவேண்டும். வாழ்க்கையே களைபிடுங்குவதென்றாயிற்று. கூலிகொடுத்து களைபிடுங்க முடியாத காரணத்தாலேயே நெல் விவசாயம் அழிய ஆரம்பித்தது.
கட்டற்ற கிராம வாழ்க்கையில் நான் சின்ன வயதில் கோயில்மண்டபம் குளமண்டபம் என எங்கே தூக்கம் வருகிறதோ அங்கேயே இரவு தூங்குவது வழக்கம். எண்பதுகளில் அது சாத்தியமில்லாமல் கொசுப் பிரச்சினை வந்தது. இப்போது இங்கே திறந்த வெளியில் மாலையில் அமர்ந்திருக்கும் அனுபவமே எவருக்கும் கிடையாது. என் மகனுக்கு அந்த நாட்களைப்பற்றிச் சொன்னால் பிரமிக்கிறான். அன்றெல்லாம் எங்கும் நீர் நிறைந்த நிலம். மடைகள், ஓடைகள், ஆறுகள். ஆனால் நாலைந்து முறை கன்னத்தில் அடித்துக்கொள்வதை தவிர கொசு என்ற ஒன்றை குமரிமாவட்டத்தில் உணரவே முடிந்ததில்லை.
தென்குமரிமாவட்டம் என்பது அக்காலத்தில் தவளைகளின் உலகம். மாலையில் சத்தம் போட்டு பேசினால்தான் கேட்கும் என்ற அளவுக்கு தவளைக்கூச்சல். இரவில் கன் விழித்தால் நம்மைச்சுற்றி பல்லாயிரம் தவளைகள் கூடிநிற்பது போல ஓசை இருக்கும். தேங்கிக்கிடக்கும் குட்டைகளை அசைவிலா நேரத்தில் பார்த்தால் கரிய சாக்கடை போல தெரியும். அருகே சென்றதும் சட்டென்று நீர் தெளியும். அந்த அளவுக்கு தலைப்பிரட்டைகள். தவளைகள் காணாமலாக ஆக கொசு பெருகியது. வயல்களில் விதவிதமான பூச்சிகள் வந்து பெருகின.
பூச்சிபார்க்கும் தலைப்புலையர்களிடம் புகையிலையும் பணமும் காணிக்கை கொடுத்து வாழை இலையில் பொதிந்த பூச்சியிலையை கொண்டு சென்று காட்டுவோம். ‘ஏமானே இது மேலமலைக்காட்டு புளுவாக்குமே…இதெங்கே இங்க வந்தது…எளவு ரெண்டு எரட்டியில்லா வளர்ந்திருக்கு’ என பீதியடைவார்கள். தோட்டத்தில் இருந்து தேங்காயையும் வாழைக்குலையையும் கொண்டுசென்று சந்தையில் விற்று பூச்சிமருந்து வாங்கிவருவார்கள். சந்தைக்கு போனாலே கிழங்கு மீன் மண்ணெண்ணையுடன் பூச்சிமருந்தும் பட்டியலில் இருக்கும். அருமனையிலும் குலசேகரத்திலும் பூச்சிமருந்து கடைகள் பெருகின. அவர்கள் பெரிய வீடுகளை கட்டினார்கள்.
முப்பதாண்டு கழிந்து இன்று தென்குமரி நாட்டில் நெல்விவசாயம் அனேகமாக இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. வயல்கள் எல்லாமே ரப்பர் தோட்டங்களாக ஆகிவிட்டன. ரப்பர் பலமுறை விவசாயிகளை பலிவாங்கிய பணப்பயிர். ரபப்ர் இல்லாத இடங்களில் வாழை. இங்கே வாழை என்பது விஷத்திலேயே முளைக்கச்செய்து விஷத்தில் வளார்ந்து விஷத்தில் விளையும் ஒரு விஷகன்னி. பசுமைப்புரட்சியின் பலி என பசுமை பொங்கிப்பரவிய இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பூமியை தாராளமாகச் சொல்லலாம்.
ஆகவேதான் சங்கீதா ஸ்ரீராமின் ‘பசுமைப்புரட்சியின் கதை’ என்ற இந்த நூல் எனக்கு என் வாழ்க்கையை விளக்கும் மிக அந்தரங்கமான, கொந்தளிப்பான ஒரு வாசிப்பனுபவமாக அமைந்தது. பசுமைப்புரட்சியைப்பற்றிய பெரும்பாலான ‘நவீனதொன்மங்களை’ இந்த நூல் மிக விரிவான ஆதாரங்களுடன் மறுக்கிறது. பசுமைப்புரட்சி நல்லது என்று இன்று கொஞ்சம் நிதானமான எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ‘பசுமைபுரட்சிதான் இந்தியாவில் பட்டினியை இல்லாமலாக்கியது’ என்று சொல்வார்கள். ‘இப்ப அது எப்டி இருந்தாலும் அப்ப அது நன்மைக்காகத்தான் வந்திச்சி சார்’ என்பார்கள்
விரிவாக பலவகையான வாதங்களும் இந்த கோணத்தில் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் உருவான பெரும் உணவுப்பஞ்சங்களில் மொத்த மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் செத்துப்போனார்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. உலகத்தில் வந்த மாபெரும் பஞ்சங்களில் அவை முக்கியமானவை. அந்தப்பஞ்சங்களுக்குக் காரணம் இந்தியாவில் இருந்த வேளாண்முறையின் பின்தங்கிய நிலையே. அந்தப் பஞ்சங்களில் இருந்து இந்தியாவை கரையேற்றியது பசுமைப்புரட்சியே என சுட்டிக்காட்டுவார்கள்.
உண்மையில் நவீன இந்தியச் சிற்பிகளான நேருவும் சி.சுப்ரமணியமும் பிறரும் இத்தனை விரைவாக பசுமைப்புரட்சியை ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம் அவர்களும் இந்த எண்ணத்தில் இருந்ததுதான்.நாற்பதுகளின் இறுதியில் பிகாரைத்தாக்கிய பஞ்சம் நேருவை பசுமைப்புரட்சி நோக்கிச் செலுத்தியது. கனரகத் தொழில் போன்ற உடனடி நிவாரணங்களை நம்பச் செய்தது. பின்னாளில் தான்செய்த பிழைகளை நேரு ஓரளவு உணர்ந்தார்.
இந்தியப்பஞ்சங்களுக்கு இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலை காரணம் என்ற எண்ணம் எத்தனை அபத்தமானது என்ற உண்மையை விரிவான தரவுகள் மூலம் இந்நூல் விவாதிக்கிறது. இன்று பலநூலாசிரியர்கள் பல கோணங்களில் அந்த பஞ்சங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் பெரும்பஞ்சங்கள் எவையும் உற்பத்திக்குறைவால் உருவானவை அல்ல. அந்தபஞ்சகாலத்தில் இந்தியாவில் மழைபொழிவிலோ விளைச்சலிலோ ஒட்டுமொத்தமாக பெரிய குறைவு ஏதும் நிகழவில்லை. மாறாக பெருமளவுக்கு உணவு இங்கிருந்து வெளியே கொண்டுசெல்லபப்ட்டது. அதாவது அந்தப்பஞ்சங்களுக்கு திட்டவட்டமான காரணம் சொல்லவேண்டும் என்றால் ரயில்பாதைகளையே சுட்டிக்காட்டவேண்டும்
இந்தியாவில் மரபாக நடந்து வந்த உணவுப்பரவலாக்கம் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. அதுவே பஞ்சத்தை உருவாக்கியது. அதாவது அவை செயற்கைப் பஞ்சங்கள். அரசியலால் உருவாக்கப்பட்ட பஞ்சங்கள். நிலம் இந்தியாவை கைவிடவே இல்லை. இந்திய வேளாண்மை அன்றும் இன்றும் இந்தியாவுக்குச் சோறுபோடும் திராணி கொண்டதாகவே இருக்கிறது. பண்டைய இந்திய நிலங்களின் உயர்விளைச்சல் பற்றிய விரிவான தகவல்கள் ஆவணப்பதிவுகளில் இருந்து எடுத்தளிக்கப்பட்டுள்ளன.
இந்திய வேளாண்மையை ‘சீர்திருத்த’ ஆங்கில அரசு நிபுணர்களை அன்னுப்பியது. வால்லிக், வோல்கர் போன்ற நிபுணர்கள் இங்கிருந்த வேளாண்முறையை பாராட்டி உலகிலேயே சிறந்த வேளாண்முறை, இதனிடமிருந்து கற்றுக்கொள்ளத்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். நாம் எழுப்பவேண்டிய முதல் கேள்வியே பிரிட்டிஷ் அரசுக்கு இந்திய வேளாண்மை ‘சீர்திருத்தம் செய்யபப்டவேண்டிய ஒன்று’ என ஏன் தோன்றியது என்பதுதான். அதற்குப்பின்னால் உள்ள மனநிலைதான்
இந்திய விவசாயி ஒரு ஐரோப்பியரின் பார்வையில் கல்வி அறிவற்றவனாக இருக்கிறான். அரைக்கோவணம் அணிந்து சேற்றில் நிற்கிறான். அவனுடைய ஆசாரங்கள் நம்பிக்கைகள் எல்லாமே பழைமையானவை காலாவதியானவை, அழியவேண்டியவை. ஆகவே அவனுடைய அறிவும் நவீனமானது அல்ல. இந்த காலனியாதிக்க மனநிலையில் இருந்தே அவனை சீர்திருத்தவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அவனைப்புரிந்துகொள்வதற்குப் பதிலாக அவனை மாற்றியமைக்கவேண்டும் என்று தோன்றுகிறது
இந்த மனநிலை இன்று வரை நம் படித்த வர்க்கத்திடம் இருக்கிறது. நாம் உருவாக்கியனுப்பும் வேளாண்மைப்பட்டதாரிகள் நடைமுறையில் வேளாண்மை என்றால் என்ன என்றே தெரியாத அசடுகள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் படிக்காத விவசாயிகளை மீட்டெடுக்கவேண்டிய தேவதூதர்கள், ஞானத்தின் அமுதசுரபியுடன் கிராமங்களுக்குச் செல்பவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. நம் வேளாண்மையை அழித்ததில் நம் வேளாண் பல்கலைகளுக்கும் அவர்களின் பட்டதாரிகளுக்கும் உள்ள பங்களிப்பு சாதாரணமானதல்ல.
இருபதாண்டுகளுக்கு முன்னால் நான் என் மனைவியை திருமணம் செய்துகொண்டபோது மிகச்சிறந்த வேளாண் அறிவியல் மாணவியாக இருந்த அவள் சொன்னாள் ‘என்ன வந்தாலும் நான் விவசாயத்துறையில் வேலை பார்க்க மாட்டேன். இது விவசாயிகளை ஏமாற்றுவதற்காக பூச்சிமருந்துக் கம்பெனிகள் தயாராக்கிய படிப்பு. படித்து முடித்தபிறகுதான் எனக்கு தெரிகிறது. இதைச்செய்வது பெரிய பாவம்…’ அவள் விவசாய நிபுணர் வேலைக்கு முயலவே இல்லை. தபால் குமாஸ்தாவாக ஆனாள். அதிலேயே நீடிக்கிறாள்.
இந்திய விவசாயிக்கு மண்ணைப்பற்றி இருக்கும் அறிவை விரிவாக ஆவணப்படுத்திச் செல்கிறார் சங்கீதா. எனக்கு அது ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் நான் சின்ன வயதில் மண்ணைப்பற்றிய பேரறிவுகொண்ட தலைப்புலையர்களை கண்டிருக்கிறேன். அப்பா வாங்கப்போவதாக இருந்த மண்ணை பொட்டலம் கட்டி ஒரு பெரியவரிடம் கொண்டு சென்று காட்டினேன். வாயில் போட்டு ருசித்துவிட்டு அதில் என்ன விளையும் என்று சொன்னார் அவர்.
பாரம்பரிய விதைகளைப்பற்றி சங்கீதாவின் விவரணைகள் ஒவ்வொன்றும் என் நினைவை மோதுகின்றன. எங்கள் நிலத்தில் எப்போதுமே பாரம்பரிய விதைகளைத்தான் விதைத்து வந்தோம். நான் சிறுவயதில் கரைநெல் என சொல்லப்பட்ட ஒரு நெல்லை பேச்சிப்பாபறை போன்ற காட்டு அடிவாரங்களில் கண்டிருக்கிறேன். ஆறடிவரை தாள் உயரும். மரவள்ளி நட மண்குவியல் செய்வதுபோல சருகுகளை செதுக்கி மண்ணோடு கூட்டி அதில் இந்த நெல்லை விதைப்பார்கள். அவ்வளவுதான். ஒன்பது மாதம் கழித்து போய் அறுவடை செய்யவேண்டியதுதான்.
நல்ல வரட்சியும் வெள்ளமும் தாங்கக்கூடிய நெல் அது. நெல்மணிகளை மட்டும்தான் அறுவடை செய்வார்கள். வைக்கோல் கனமானது, எருமை மட்டுமே தின்னும். நெல் பெரிதாக இருக்கும். கஞ்சிக்கு அந்த நெல் மிக உகந்தது. அந்த நெல்லை நான் இன்று பார்க்கவே முடிவதில்லை. அதில் ஒருவகை நெல்லை பயறுமணியன் என்பார்கள். அதை பச்சரியாக்கி ஒரு தேங்காய் கொட்டையால் கமுகுப்பாளையிலிட்டு உருட்டினால் மாவாகிவிடும். புட்டுக்கு அதைப்போல சுவையான நெல் கிடையாது.
நம் மரபான விவசாய ஞானம் அனைத்துமே சட்டென்று அர்த்தமிழந்து போயிற்று. விஸ்வரூப வாமனன் தலைமேல் மிதித்து பாதாளத்துக்கு தள்ளிவிட்டான். அந்தச்சித்திரத்தை இந்த நூலில் தரவுகள் வழியாக வாசிக்கும்போது ஓர் இருண்ட காவியத்தை வாசிக்கும் பெரும்துயரம் நெஞ்சை நிறைக்கிறது.
இந்தியவேளாண்மை பசுமைபுரட்சியால் அதிக உற்பத்தியாற்றல் கொண்டதாக ஆகவில்லை. என் அப்பா அளவுக்கு மகசூல் எடுத்த நவீன விவசாயியை நான் கண்டதில்லை. ஆனால் பசுமைப்புரட்சி உணவு உற்பத்தியை அதிகரித்தது உண்மை. எப்படி? பசுமைபுரட்சி என்னும்போது அணைக்கட்டுகளையும் தான் சொல்கிறார்கள். அவை வேளாண்நிலத்தின் அளவை பலமடங்கு அதிகரித்தன. ஒட்டுமொத்தமாக உணவு உற்பத்தி அதிகரித்தது
இன்று நாம் உணவுத்தன்னிறைவுடன் இருக்கிறோம். உண்மை, ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை என்ன? பல்வேறு வகையில் மானியங்கள் இந்திய விவசாயம் மீது கொட்டப்படுகின்றன. அந்த மானியங்கள் நிறுத்தப்பட்டால் அக்கணமே இந்திய விவசாயம் அழியும் என்பதே உண்மை. அந்த மானியப்பணம் பல்வேறு விவசாய இடுபொருட்களுக்கு அளிக்கப்பட்டு அன்னிய நிறுவனங்களுக்குக் கொண்டு போகப்படுகிறது. அதாவது இப்போதும் தானியத்தை பணம்கொடுத்து வாங்கத்தான் செய்கிறோம், மறைமுகமாக.
சங்கீதாவின் நூல் சமூக,அரசியல் தளத்திலும் பல ஆழமான விழிப்புகளை உருவாக்கக்கூடியது .இந்தியாவின் விளைநிலம் தனியாருக்குரியதாக ஆன அரசியல் பரிணாமத்தை விவரிக்கிறது இந்த நூல் இந்தியாவில் விளைநிலம் தனியாருக்குரியதாக இருக்கவில்லை. பெரும்பாலும் அது கிராமங்களுக்கு கூட்டு பொறுப்பு கொண்டதாகவே இருந்தது. அந்நிலம் ஆங்கில ஆட்சியின் ரயத்துவாரிமுறைப்படி தனியுடைமை ஆக்கப்பட்டபோது நிலங்களை வாங்கமுடிந்தவர்கள் நில உடைமையாளரானார்கள். நிலத்தில் உழைத்தவர்கள் நிலமற்றவர்களானார்கள். இப்படி நிலம் தனியுடைமை ஆனபோது பெருமளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தலித்துக்களே.
பாரம்பரிய வேளாண்மைஞானம் நவீன விவசாய அறிவியலால் நீக்கம் செய்யப்பட்டதன் விளைவாக உருவான அழிவுகளை விவரிக்கிறார் சங்கீதா. இந்நூலில் உள்ள ஒவ்வொரு தகவலும் என்னுடைய சொந்த அறிதல்களுடன் இணைந்துகொண்டு என்னை பலமடங்கு விரிவடையச் செய்கிறது. நவீன வேளாண் அறிவியல் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக பார்க்க ஆரம்பித்ததும் பண்டைய விவசாய ஞானம் நிலத்தின் இயற்கைச்சுழற்சி பற்றி அடைந்திருந்த எல்லா ஞானமும் ரத்துசெய்யப்பட்டது
குமரிமாவட்டத்தில் ஒவ்வொரு வயல்வெளிக்கும், மரவள்ளித்தோட்டத்துக்கும் நடுவே காவு என்று சொல்லப்படும் ஒரு துண்டு காடு ஊர்ப்பராமரிப்பில் இருக்கும். பாம்புகள் மண்டிய அடர்காடு. இதை சர்ப்பக்காவு என்பார்கள். அனேகமாக உள்ளே பாம்புகளுக்கான திறந்தவெளி கோயில் இருக்கும்மிகமிகக் கவனமாகவே உள்ளே செல்லமுடியும். சில சர்ப்பக்காவுகளில் கூட்டம்கூட்டமாக பாம்புகளை கண்டிருக்கிறேன். வேர்கொத்துகளைப்போல. மாலையானால் வயல்வெளிக்கு போகக்கூடாதென்பது வழக்கம். அந்தப்பாம்புகள் சுற்றியுள்ள வயல்வெளிகளில் இரவெல்லாம் ேட்டையாடும்.கிழங்குவகைகள் அதிகமாக உண்ணப்படும் கேரளத்தின் காவல்தேவதை பாம்பாகவே இருக்கமுடியும்
ஒவ்வொரு வயலுக்கும் அதேயளவுக்கு யட்சிக்காவும் இருக்கும். இது தழைமரங்களுக்காக. தழைகள் வெட்டுவதற்கும் அவற்றை வயலில் தறித்து போடுவதற்கும் அந்த தழை மட்கி நொதித்து சிவப்புப்படலமாக பூத்து வருவதற்கும் எல்லாம் நிறைய விதிகளும் மரபுகளும் இருந்தன. அந்த ஞானம் அழிந்தது, காவுகள் எல்லாம் கான்கிரீட் கட்டிடங்களாக பலவண்ண சிமிட்டிப் பொம்மைகளுடன் ,டிஸ்டெம்பர் பளீரிடலுடன் காணக்கிடைக்கின்றன.
இந்தியாவில் பணப்பயிர்களின் தொடக்கத்தை விவரித்துச்செல்கிறார் சங்கீதா. நானெழுதிய முதல்நாவல் ரப்பர் இதைப்பற்றியதுதான். வாழைவனங்கள் ரப்பராக ஆனபோது உருவான சமூக மாற்றம், ஆன்மீக மாற்றம். அனேகமாக தமிழில் அந்த விஷயங்கள் அப்போதுதான் பேச ஆரம்பிக்கப்பட்டன. இன்று இந்நூலில் விரிவான தகவல்களைப்பார்க்கையில் நேரடி அனுபவம் மூலம் நான் பெற்ற அந்த அறிதல்கள் பெரிய வாழ்க்கை தரிசனமாகவே வளர்கின்றன.
சங்கீதாவின் நூல் இந்தியவிவசாயத்தின் பரிணாமத்தில் அனேகமாக எல்லா தளங்களையும் தொட்டுச் செல்கிறது. இந்தியாவின் பாரம்பரிய நீர்மேலாண்மை எப்படி படிப்படியாக சீரழிக்கப்பட்டது என்பதன் சித்திரம் இந்நூலில் உள்ளது. அனேகமாக இந்தியா முழுக்க எந்த ஊரைச்சேர்ந்தவரும் சங்கீதா அளிக்கும் சித்திரத்தை தன்னுடைய ஊரைச்சார்ந்து விரிவாக்கம் செய்துகொள்ளமுடியும்.
முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் குமரிமாவட்ட ஏரிகள் மற்றும் குளங்களைப்பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அந்த ஆய்வுபற்றி அவர் விரிவாக பேசுவதுண்டு. குமரிமாவட்டத்தில் சோழர்காலம் முதல் ஏரிகள் வெட்டப்பட்டன. நாயக்கர் காலத்திலும் பின்னர் திருவிதாங்கூர் மன்னர் காலகட்டத்திலும் நீர்நிலைகள் அமைப்பது ஒவ்வொருவருடமும் நடைபெற்றது. நீர்நிலைகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் நீர் வினியோகம் செய்யவும் கிராமசபைகள் உருவாக்கப்பட்டன. அவை ஐம்பது அறுபதுகள் வரைக்கும்கூட சிறப்பாக நடைபெற்றன
ஆனால் பசுமைப்புரட்சி ஒருபக்கம் வலுப்பெற மறுபக்கம் நம் நீர்நிலைகளும் நீர்நிர்வாக அமைப்புகளும் அழிவுக்குத்தள்ளப்பட்டன. குமரிமாவட்ட குளங்களில் பாதிப்பங்கு சென்ற ஐமபதாண்டுக்காலத்தில் அழிக்கப்ட்டது. இன்று கால்வாசி குளங்களில் கூட நீர் நிறைவதில்லை.மன்னர்கள் மக்களுக்காக விட்டுச்சென்ற பெரும்செல்வம் அவை. அவை நவீன ஜனநாயகத்தால் சூறையாடப்பட்டன.
மனம்பதைக்கச்ச்செய்யும் இந்த அழிவின் பின்னணியில் அரங்கேறிய பசுமைப்புரட்சி என்ற அப்பட்டமான சுரண்டலின் சித்திரத்தை மிக ஆதாரபூர்வமாக சித்தரிக்கிறார் சங்கீதா. பசுமைப்புரட்சியின் அழிவுத்தன்மைக்கு அடிப்படைகள் இரண்டு. ஒன்று அது நவீன அறிவியலைச் சார்ந்தது. நவீன அறிவியலின் அடிப்படையிலேயே சில கொள்கைப்பிழைகள் உள்ளன. அது இயற்கையை ஒரு நுகர்பொருளாகக் காண்கிறது. . அது மனிதனை மட்டுமே கருத்தில்கொள்கிறது. அவன் நலனுக்காக இயற்கையை ஒட்டச்சுரண்டுவதற்கான தொழில்நுட்பத்தையே அது உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
நவீன அறிவியல் ஒட்டுமொத்த முழுமையை கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொன்றையும் துண்டுபடுத்தி எடுத்த அறிவுத்துறையாக ஆக்கி ஆராயக்கூடியது. விவசாய அறிஞனுக்கு அந்நிலத்தின் பண்பாடு பற்றிய ஞானம் இருப்பதில்லை. இந்த துண்டுகளுக்குள் செல்லுபடியாகும் நிரூபண விதிகளை மட்டுமே நவீன அறிவியல் நம்புகிறது. இயற்கையோ ஒற்றைமுழுமை. அதன் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. ஆகவே துண்டுபட்ட அறிவு மூலம் நவீன அறிவியல் இயற்கையை கையாண்டபோது பேரழிவுகளை உருவாக்கியது. நவீன அறிவியலே சூழியலை அழிக்கும் பெரும் சக்தி
இரண்டாவது காரணம் பசுமைப்புரட்சி உண்மையான நோக்கத்துடன் கொண்டுவரப்படவில்லை என்பது. அது லாபநோக்கம் கொண்ட, ஆதிக்க நோக்கம் கொண்ட அமைப்புகளால் இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்டது. விவசாய வளர்ச்சியை விட அதன் நோக்கம் இந்திய விவசாயத்தை தன் கைக்குள் கொண்டு வருவதே. அதற்காக பொய்யான தகவல்களை உருவாக்க பரப்ப அது தயங்கவில்லை.
இந்தியாவில் பசுமைப்புரட்சியின் வன்முறைவரலாறு சங்கீதாவின் சொற்கள் வழியாக விரியும்போது அது பதினேழாம்நூற்றாண்டில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் பரவிய அந்த வரலாற்றையே நினைவுறுத்துகிறது. ஒருங்கிணைந்த தாக்குதல், மோசடி, நல்ல எண்ணம் கொண்டவர்கள் போல பசப்புதல், பிரிவுபடுத்தி ஆளுதல் எல்லாமே அப்படியே அதேதான்.
இந்நூலின் மிக முக்கியமான அத்தியாயம் ‘சர்வாதிகாரத்துக்கு வன்முறை என்றால் ஜனநாயகத்துக்குபிரச்சாரம்’ பிரிட்டிசார் இந்தியாவை ஆண்டது இந்திய மக்கள் அவர்களுக்கு அளித்த அங்கீகாரத்தினால்தான். அவர்களின் சுரண்டல் மிக மறைமுகமானதாக இருந்தது. அவர்களின் பிரச்சாரம் உயிர்துடிப்புள்ளதாக இருந்தது. இன்று அந்த சுரண்டல் மேலும் நுட்பமானதாக ஆகியிருக்கிறது. பிரச்சாரம் இன்னும் பலமடங்கு வல்லமை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது.
இந்த பெரும் தேசம் முழுக்க கோடானுகோடி மக்களை எப்படி ஒரே திட்டத்துக்குள் கொண்டு வந்தார்கள்? அதைப்பார்க்கும்போதுதான் வன்முறையை விட வல்லமை கொண்ட பிரசாரத்தின் ஆற்றல் புரிகிறது. இன்று நம்மைச்சுற்றி வளைத்திருக்கும் மாபெரும் பிரசார வலையின் வழியாக நாம் எப்படி மீண்டு செல்லப்போகிறோம் என்பது பெரும் அறைகூவல்தான்.
பசுமைப்புரட்சியின் வன்முறைக்கு மாற்றாக சங்கீதா மீண்டும் பாரம்பரிய வேளாண்மைக்கும் இயற்கை வேளாண்மைக்கும் செல்வதற்கான வழிகளைப்பற்றி ஆராய்கிறார். ஆனால் வெற்றுக்கனவாக் இல்லாமல் நடைமுறை யதார்த்தத்துடன் தகவல்களின் பின்புலத்துடன் விவரிக்கிறார். இயற்கை வேளாண்மை எல்லாருக்கும் சோறுபோடுமா, தொழில்துறையை தாங்கி நிற்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு ஆணித்தரமான விடைகளை அளிக்கிறார்
மாசானபு ஃபுகோகாவின் ஒற்றைவைக்கோல் புரட்சியை நான் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னால் வாசித்தேன். அட்டப்பாடியில் இயற்கை வேளாண்மை செய்துவந்த விஜயலட்சுமி – கோபாலகிருஷ்ணன் தம்பதிகள் அப்போது அந்நுலை பிரச்சாரம்செய்து வந்தனர். அந்நூல் என் சிந்தனையில் பெரிய புரட்சியை உருவாக்கியது. சட்டென்று காந்தியை மிக நெருக்கமாக உணரச்செய்தது
அந்நூலில் இறுதியில் ஃபுகோகா வேளாண்மை பற்றிய சிந்தனையை ஒட்டுமொத்த வாழ்க்கை பற்றிய சிந்தனையாக ஆக்கிக்கொண்டு செல்வதை, ஓர் உச்சத்தில் மெய்ஞானத்திற்குச் சென்று சேர்வதை கண்டேன். அது ஒரு கீழை மனத்தின் மிக இயல்பான முழுமைப்பயணம் என நினைத்தேன். சங்கீதாவின் இந்த நூலின் இறுதியிலும் அதே மன எழுச்சி ஏற்பட்டது. வேளாண்மை என்பது ஒரு தொழில் அல்ல, ஒரு வணிகம் அல்ல. அது இயற்கையை புரிந்துகொண்டு அதன் முழுமைக்குள் இருப்பதுதான் என்ற எண்ணத்தை இந்நூல் உருவாக்குகிறது
பசுமைப்புரட்சி பற்றியும் இயற்கைவேளாண்மை பற்றியும் விழிப்புணர்ச்சி உருவாகிவரும் தமிழ்ச்சூழலில் இதுவரை வந்த நூல்களில் தகவல்பலத்தாலும் தீவிரத்தாலும் முழுமைநோக்காலும் முதலிடத்தில் நிற்கும் மகத்தான நூல் இது. இந்நூல் அளவுக்கு மனஎழுச்சியும் சிந்தனை விரிவும் அளிக்கும் நூல்கள் சிலவே தமிழில் வெளிவந்துள்ளன. இது வேளாண்மை பற்றிய நூல் மட்டும் அல்ல, நம் அரைநூற்ராண்டு சமூகப்பரிணாமம் பற்றிய ஆய்வு. சிந்தனைசெய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் தேவையானது.
இந்நூலை ஓர் அறிவுத்தள விவாதமாக நான் வாசிக்கவில்லை. இது எனக்கு உணர்ச்சிகரமான ஒரு அந்தரங்க தரிசனமாகவே ஒவ்வொரு பக்கத்திலும் உணர்ந்தேன். இந்நூல் எனக்களித்த வாசக அனுபவமும் அகத்தெளிவும் அப்படிப்பட்டது. எனக்குள் எப்போதும் இருந்த ஒன்றை இந்நூல் வழியாகவே கண்டுகொண்டேன். அதற்காக நான் சங்கிதாவுக்கு கடமைபப்ட்டிருக்கிறேன்
என் அப்பா எனக்கு நிலத்தை அளிக்கவில்லை. எங்கள் மலையாளச் சமூக வழக்கப்படி நிலம் முழுக்க பெண்ணுக்குத்தான் சென்றது. நான் விரும்பிய நிலங்கள் எல்லாம் இப்போது விற்கப்பட்டுவிட்டன. நான் சம்பாதித்து கையில் பணம் வந்ததும் முதலில் விரும்பியது நிலம் வாங்கவே. கோவை ,காரமடை அருகே காட்டுவிளிம்பில் நண்பர்களுடன் இணைந்து சில ஏக்கர் நிலம் வாங்கவிருக்கிறேன். விவசாயியாக ஆரம்பித்தேன். இன்று எங்கோ வந்துவிட்டாலும் மீண்டும் திரும்ப முடியுமென ஒரு நம்பிக்கை. அதை உருவாக்கியது இந்நூல்.
நல்ல விவசாயிகளுக்காக ஒரு சொர்க்கம் இருந்தால் அப்பா அங்கேதான் இருப்பார். இத்தனை புத்தகங்களை நான் எழுதியது என் அம்மாவை சந்தோஷப்படுத்தும். ஆனால் அப்பா முகம் சுளிக்கத்தான் செய்வார். அவரையும் நான் சந்தோஷப்படுத்தியாகவேண்டும்.
[காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கும் சங்கீதா ஸ்ரீராமின் பசுமைப்புரட்சியின் கதை நூலுக்கு எழுதிய முன்னுரை]
நீர்ப்படுகொலைகள்
ப்சுமை ஒரு கடிதம்
வேளாண்மை இரு கடிதங்கள்
வேளாண்மை ஒரு கடிதம்