இலக்கணம், அ.ராமசாமி கடிதம்

ஜெயமோகனுக்கு
தங்களின் இணையத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கடிதத்திற்கு நீங்கள் அளித்துள்ள பதில் தொடர்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.


”தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நமக்கு உரைநடைக்கான இலக்கணம் இல்லை.உரைநடைக்கான இலக்கணம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. அதிகமும் ஆங்கில இலக்கணத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.உரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை இலக்கணத்தை ஏதோ புனித விதிபோல கடைப்பிடிப்பதனால் இலக்கணத்தைக் கற்பதென்பதே நவீன உரைநடைக்கு எதிரான செயலாக ஆகிவிட்டிருக்கிறது.”

இந்தக் கூற்றுகள் சரியானவை அல்ல என்பது எனது கருத்து. எய்தவர்களை மனதில் கொண்டு அம்புகளை நோவது எப்போதும் நடக்கிறது. எமது தமிழாசிரியர்கள் தொல்காப்பியத்தையும் நன்னூலையும் அதன் அடிப்படை நோக்கங்களிலிருந்து விலகிச் சென்று கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை நானறிவேன். கற்றுக் கொடுப்பவர்களின் பிழையான கற்பித்தல் முறையால் இலக்கண நூல்களைக் குறைத்து எடை போட வேண்டாம் எனச் சொல்ல விரும்புகிறேன். அப்படிச் சொல்லும் போது நீங்கள் இலக்கண நூல்களைக் குறைபட வாசித்தவர் அல்லது வாசிக்கவே செய்யாதவர் என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது.

நமது பல்கலைக்கழகங்களில் அடிப்படை இலக்கண நூலாகக் கற்றுத் தரப்படும் தொல்காப்பியமும் நன்னூலும் செய்யுளுக்கானவையோ, செய்யுளை உருவாக்குவதற்கான இலக்கணத்தைச் சொல்வனவோ அல்ல. அவை மொழியைப் பற்றிய இலக்கணங்கள். மொழியை உருவாக்கும் ஓசைகள், வரிவடிவங்கள், அவற்றின் சேர்க்கையால் உருவாகும் சொற்கள், சொற்களால் உருவாகும் வாக்கியங்கள், வாக்கியங்களின் சேர்க்கையால் உருவாகும் தொடர்புமுறை அல்லது இலக்கியம் எனத் தமிழ் இலக்கண நூல்கள் பேசுகின்றன.

நன்னூலில் செய்யுள் பற்றியோ, செய்யுளின் அமைப்பு பற்றியோ பேச்சே இல்லை. நன்னூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு பகுதிகள் மட்டும் தான் உண்டு. தொல்காப்பியத்தில் இவ்விரு அதிகாரங்களோடு பொருளதிகாரம் என மூன்றாவது பகுதியும் உள்ளது. எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் தமிழின் வரிவடிவம், அதன் உச்சரிப்பு முறை, எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை, சொல்லாக மாறும்போது ஏற்படும் மாற்றங்கள், சொற்களின் சேர்க்கையால் ஏற்படும் தொடர்கள், தொடர்கள் உருவாகத் தேவையான அடிப்படைச் சொல்வகைகளான பெயர்ச்சொற்கள் (Noun) வினைச்சொற்கள் (Verb) இவ்விரண்டும் இணைந்து தொடர்கள் உருவாகும் விதம், அப்போது தேவைப்படும் இடை மற்றும் உரிச்சொற்கள்,[ ஆங்கிலத்தில் முன் ஒட்டுகள்(Prefix) பின்னொட்டுகள் (Suffix) , இடையொட்டுகள்(Infix ) எனப் பேசப்படுவன] தொடர்களின் வகைகள் என விரிவாகப் பேசுகின்றன.

இப்படிச் சொல்லும் இலக்கணம் செய்யுளுக்கானது என எங்கும் சொல்லப்படவில்லை. உரைநடைக்கும் தான். எழுத்துமொழிக்கும் பேச்சுமொழிக்கும் சேர்த்தே அவை பேசுகின்றன. அப்படிப் பேசும்போது தமிழ்ச் சொற்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; பேச்சு மொழியாகப் பயன்படுத்தும்போது அடையக்கூடிய திரிசொல், அண்டை மொழிகளிலிருந்து வந்து புழங்கும் திசைச்சொல், அந்தக் காலத்தில் தமிழோடு அதிகம் உறவு கொண்டிருந்த வடசொல் ஆகியவற்றையும் எவ்வாறு ஏற்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விதிகளாகத் தற்பவம்; தற்சமம் போன்றவற்றையும் அவை கூறுகின்றன. (இன்று மொழிபெயர்ப்பாளர்கள் இந்த அடிப்படைகளையே அதிகம் பின்பற்றுகின்றனர்).

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தையும் தாண்டிச் செந்தமிழ் நிலஞ்சேர் பகுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கணம் சொன்னவர் தொல்காப்பியர். நவீன மொழியியல். மொழியைப் பற்றிப் பேசும் பெரும்பாலான கூறுகளும் தொல்காப்பியத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கறாரான விதிகளை எங்குமே வலியுறுத்தியதில்லை தொல்காப்பியம். முன்னோர் உருவாக்கிய விதிகள், நிகழ்கால நடைமுறை, பிறமொழி மரபு என அனைத்தையும் கவனித்து விதிகளையும் விதிவிலக்குகளையும் (புறனடைகளையும்) சொல்லும் தொல்காப்பியம் அதன் சரியான நோக்கத்தில் இங்கே கற்றுத் தரப்படாததால் இலக்கணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் செய்யுள் பற்றிய கவனம் இருக்கிறது. ஆனால் அந்தச் செய்யுள் என்பது கவிதை அல்லது இலக்கியம் என்ற அர்த்தம் கொண்டது பொருளதிகாரம் இலக்கிய உருவாக்கம் பற்றித்தான் கவனத்தைக் குவித்துள்ளது. அக்காலத்தின் இலக்கிய வெளிப்பாடு செய்யுளாக இருந்ததால் செய்யுளின் வடிவம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் . வடிவம் மற்றும் உள்ளடக்கத்தை விளக்கும்போது இடம் பெற வேண்டிய பாத்திரங்கள், காலம் மற்றும் இடச் சூழல் என விரிவாக்கிக் காட்டுவது செய்யுள் உருவாக்கம் அல்ல; இலக்கிய ஆக்கம். இலக்கியத்தின் உள்ளார்ந்த நுட்பங்களே அணிக்கோட்பாடும், மெய்ப்பாடுகளும். அரிஸ்டாடிலின் கவிதையியலும் இவற்றைத் தான் பேசுகிறது. இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு ஒன்று இருக்கிறது. அரிஸ்டாடில் கவிதையியல் எனத் தலைப்பு வைத்துக் கொண்டு நாடகம் என்ற வடிவத்தை முதன்மையாகக் கருதி எல்லாவற்றையும் விளக்குகிறார். தொல்காப்பியர் பொருள் (Matter) என்பதைத் தலைப்பாக்கிக் கொண்டு கவிதையை முதன்மையாக வைத்து நுட்பங்களைப் பேசுகிறார். அரிஸாடிலின் கவிதையியலையும் தொல்காப்பியரின் பொருளதிகாரத்தையும் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தையும் இலக்கணமாகக் கருதுவதை விட இலக்கிய ஆக்கம் என்பதாகக் கருதுவதே சரியான பார்வையாக அமையும்.

அண்மையில் சரஸ்வதி சம்மான் விருது வாங்கிய அ.அ.மணவாளனின் தமிழ், ஆங்கில நூல்களை நீங்கள் வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அப்பதிலில் இருக்கும் இன்னொரு கூற்று :


உரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை இலக்கணத்தை ஏதோ புனித விதிபோல கடைப்பிடிப்பதனால் இலக்கணத்தைக் கற்பதென்பதே நவீன உரைநடைக்கு எதிரான செயலாக ஆகிவிட்டிருக்கிறது.

நான் முன்பே சொன்னது போலத் தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களில் இலக்கணம் கற்பிக்கப்படும் முறை (எல்லாக் கலை இலக்கியங்களையும் கற்பிக்கும் முறையும் தான்) மாற்றப்பட வேண்டுமே தவிர எழுதப்பட்டுள்ள இலக்கணங்கள் போதாமை கொண்டன என்பதை ஏற்க முடியாது.

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்து உரைநடைக்கான இலக்கணங்கள் பல எழுதப்பட்டுள்ளன. எம்.எ. நுஃமான் எழுதி அடையாளம் வெளியிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் கொஞ்சம் வறட்சியான இலக்கண நூல் தான். ஆனால் அதன் பார்வை நூல்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள நூல்கள் முழுமையும் நிகழ்காலத்தமிழின் மாற்றங்களை உள்வாங்கி – உரைநடையின் போக்கையும் புரிந்து கொண்டு எழுதப்பட்ட நூல்களே. குறிப்பாக கு பரமசிவம், அவர்களின் இக்காலத் தமிழ் மரபு சுவாரசியமான எடுத்துக் காட்டுகளுடன் தமிழ் இலக்கணத்தைச் சொல்லித்தரும் நூல்.

மரபிலக்கணத்தையும் மொழியியலின் வீச்சையும் உள்வாங்கிக் கொண்டு அகத்தியலிங்கம், அ.சண்முகதாஸ், செ.வை, சண்முகம். முத்துச் சண்முகன், ப.ரா.சுப்பிரமணியன், த.ராஜாராம், பொற்கோ போன்றோர் தமிழிலும், ஆந்திரநோவ், இ.அண்ணாமலை, தாமஸ் லெக்மோன், எஸ்.ஆரோக்கியநாதன், போன்றோர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள நூல்கள் முழுமையும் இக்காலத் தமிழுக்கான – உரைநடைக்கான இலக்கணங்கள். இவையெல்லாம் தமிழ் மொழி கற்பித்தலில் – பல்கலைக்கழகப் பாடப்பகுதிகளில் இடம் பெறாமல் இருப்பதால் ஒருவருக்கும் தெரியாமல் போய்விட்டது. பாடப்பகுதிகளில் இடம் பெறும் யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள் போன்றன தொல்காப்பியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட சரக்குகள். அவைகளே இங்கு முதன்மையான பாட நூல்களாக ஆக்கப்படுகின்றன என்பதையும் ஒரு பேராசிரியராக நான் அறிவேன்.


பின்குறிப்பு:

நிதிகள் –சதிகள் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள நினைத்து எழுதத் தொடங்கினேன். ஆனால் விவாதங்களின் சூடும், வேகமும் வழக்கம்போல நிதானப்படுத்தி விட்டன. உள்ளே நுழைந்தால் எதாவது ஒரு பக்கச் சார்பாக இருப்பதாக அறியப்படும் ஆபத்து நிரம்பிய தமிழ்ச் சூழலில் பின் வாங்கல்கள் தான் சாத்தியமாகின்றன. ஆய்வுகளின் பின்னணியில் நிதியுதவிகள் செலுத்தும் வினைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி கால் நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகள் இவை,

தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்: முன்னும் பின்னும் நா.வா.வின்ஆராய்ச்சி,27, தூத்துக்குடி 1988

நகரும் நாட்டுப்புறங்கள் யுகம் மாறும் (பக்.49-51) – பத்மநாப அய்யர் லண்டன்,இங்கிலாந்து 1998

சுகமான சுமைகள் ,தீம்தரிகிட,ஞாநி , சென்னை , ஜூலை, 2009

பல்கலைக்கழக ஆய்வுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிதியுதவிகள் பெற்றதால் நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், நாடகவியல் எல்லாம் எவ்வாறு திசை திரும்பின என்பதை இவற்றில் சொல்லியிருக்கிறேன். இக்கட்டுரைகள் எனது வலைப்பக்கங்களில் உள்ளன. லீணா மணிமேகலை விவகாரம் வெடிப்பதற்கு முன்பே எழுதி அனுப்பிய “ வந்தார்கள்; வென்றார்கள்; செல்லவில்லை” என்ற கட்டுரை அம்ருதாவில் இந்த மாதம் அச்சில் வரும் இப்போது எழுதியிருந்தால் கொஞ்சம் மாற்றி எழுதி இருப்பேன். அதனால் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நிதிகள்-சதிகள் பற்றி இன்னொரு கட்டுரை எழுதி விடலாம்.

அ.ராமசாமி

அன்புக்கும் பெரும்மதிப்புக்குமுரிய அ.ராமசாமி அவர்களுக்கு,

உங்கள் கடிதம் கண்டேன்.

தமிழிலக்கணம் சார்ந்த விஷயங்களில் ஒரு தமிழறிஞரின் கோணத்தில் நான் பேசவில்லை. பிற நவீன எழுத்தாளர்களுக்கு மரபு, மற்றும் இலக்கணம் மீதான உதாசீனம் எனக்கில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழின் இலக்கணநூல்கள், தொல்காப்பியம் நன்னூல் போன்றவை முன்வைக்கும் எழுத்து,சொல் இலக்கணங்கள் செய்யுள் நடையை மனதில் கொண்டவை என்ற என் எண்ணம் நான் என் பதினேழாவது வயதில் பழைய மரபுப்படி நன்னூலை பாடம் கேட்டபோது உருவானது. நான் சொல்வது யாப்பிலக்கணத்தை அல்ல. செய்யுளுக்கான நடையை. அவ்விலக்கணம் செய்யுள்நடையை உருவாக்கவே உதவும்.

அதைப்பற்றி பேராசிரியர் ஜேசுதாசன் உட்பட பலரிடம் விவாதித்திருக்கிறேன். பேராசிரியரும் அதே கருத்து கொண்டவர். அவரது முதல் மாணவரான வேதசகாயகுமார் அதே கருத்தை பலமுறை கூறியிருக்கிறார்.

அவ்விலக்கணங்களை அப்படியே எடுத்துக்கொண்டு உரைநடையை உருவாக்கமுடியாது. ஆகவேதான் நவீனகாலகட்டத்தின் தொடக்கத்தில் உரைநடைக்கான இலக்கணங்களை உருவாக்க முயன்றவர்கள் ஆங்கில சொற்றொடர் வடிவை முன்னுதாரணமாகக் கொண்டனர். தமிழின் இலக்கணத்தை அதற்கேற்ப கட்டமைத்தனர்.

ஆனால் பின்னர் வந்தவர்கள் இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட உரைநடை இலக்கணத்தை நன்னூலும் தொல்காப்பியமும் வரையறை செய்தவை எனப் புரிந்துகொண்டு அதை மாற்றவே கூடாது என்று இன்று உரைநடைவளர்ச்சியை பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நிறுத்திவிட முயல்கிறார்கள். இதுவே நான் சொன்னது.

இந்தக் காரணத்தால்தான் நவீன உரைநடைக்கும் நம்முடைய இலக்கண மரபுக்கும் இடையே இத்தனைபெரிய இடைவெளி உள்ளது.

நீங்கள் சொன்னதை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் எழுத்து-சொல் இலக்கணத்தைக் கொண்டு நவீன உரைநடைக்கான இலக்கணத்தை உருவாக்கமுடியும். அவை சொல்வது மொழியின் அடிப்படை விதியாக மாற்றக்கூடிய இலக்கணத்தையே என.

அப்படி என்றால் நவீன உரைநடைக்கான இலக்கணங்கள் உருவான காலகட்டத்தில் எப்படியெல்லாம் அவை மரபிலிருந்து அடிப்படைகளைப் பெற்றுக்கொண்டன என்பதை விரிவாகவே எவரேனும் விளக்கவேண்டியிருக்கிறது.

நம் மரபிலக்கணத்தில் இருந்து இனிவரும் உரைநடைச் சாத்தியங்களையும் உள்ளடக்கிய இலக்கணத்தை எப்படி உருவாக்கிக் கொள்வதென்பதற்கும் அது வழிகாட்டியாக அமையும்.

நீங்களே கூட அதைச் செய்யலாம்

http://www.jeyamohan.in/?p=28203

இலக்கணம்-கடிதங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஒரு மாற்றுக்கருத்து
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு