புண்ணியபூமியிலிருந்து ஒரு கடிதம்

ஜெயமோகன்,

தங்களின் ‘விளம்பரம்’ குறித்த கருத்துக்கள் படித்தேன். அதன்பிறகு தங்களின் அமெரிக்க பயணம் பற்றி படித்தேன். மனதில் ஒருவித மகிழ்ச்சி. அப்பாடா உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிக்கிற நேரம் வந்துவிட்டது. ஆமாம். நாம் அனைவரும் இந்தியாவில் பிறந்துவிட்டோம் என்கிற ஒரே காரணத்துக்காக இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகளாவிய அளவுகோலாக எடுத்துக்கொள்கிறோம். உதாரணத்துக்கு தங்களின் ‘விளம்பரம்’ பற்றிய கட்டுரை. இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களிடம் நாணயம், உண்மை கிடையாது. அதனால்தான் ‘க்ளோஸ் அப்’ விளம்பரக்காரன் ‘கோல்கேட்’ என்பதற்கு பதிலாக ‘அந்த வெள்ளை பேஸ்ட்’ என்கிறான். அனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் தன் விளம்பரத்தில் எதிர் நிறுவனத்தின் பெயரை சொல்லி, அவனை விட நான் இன்னின்ன விதத்தில் பெரியவன் என்கிறான். காரணம் அமெரிக்காவில் எல்லாமே ‘கருப்பு வெள்ளை’. யாரும் பொய் சொல்லி தப்பிக்க முடியாது. இந்தியாவை போல. என்னுடைய கருத்து. தங்களும், தங்களை போன்ற மற்றவர்களும் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வதை நிறுத்திவிட்டு முதலில் முடிந்தவரை உலகத்தை சுற்றுங்கள். பலவித மக்கள், கலை, கலாச்சாரம், அரசியல், தொழில் முதலானவற்றை படியுங்கள். Fyodor Dostoyevsky படித்தவுடன், ரஷ்யாவையே படித்ததாக நினைக்கக்கூடாதல்லவா? ஒரு விஷயத்தை வாழ்ந்து அனுபவித்துவிட்டு பின் அதனைப்பற்றி எழுதவோ, விவாதிக்கவோ வேண்டும். கி.ரா. போல. மற்றபடி, நான் இருப்பது மிச்சிகன் மாகாணம். கனடா எல்லை. கனடா காண வேண்டும் என்றால் சொல்லுங்கள், எங்கள் வீட்டில் தங்கிவிட்டு போய் வரலாம். குடும்பத்தோட வாரியளா இல்ல தனியாவா? முடிந்தால் பதில் போடுங்கள்.
மணிவண்ணன் (பட்டுக்கோட்டை)


 

அன்புள்ள மணிவண்ணன்

அழைப்புக்கும் ஆலோசனைக்கும் நன்றி. உங்கள் ஆலோசனையை கூர்ந்து கவனிக்கிறேன். அதில் உண்மை உள்ளதாகவே நினைக்கிறேன். உடனடியாக உலகம் சுற்ற கிளம்பவேண்டியதுதான். ஆனால் இப்போதே உலகம் சுற்ற ஆரம்பித்தால்கூட எப்படியும் நாற்பது வருடங்களாவது சுற்றாமல் உலகத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால் நான் அறிந்தவரை உலகம் என்பது முந்நூறு நாநூறு முக்கியமான தேசங்களாவது உள்ள ஒரு பிராந்தியம். என் எண்பத்தாறு வயதுக்குமேல் நான் அபிப்பிராயங்கள் சொல்ல ஆரம்பித்தால் அன்றைக்கு இருக்கும் சின்னப்பசங்களெல்லாம் என் கருத்துக்களை மதிப்பார்களா என்ற சந்தேகமும் வாட்டுகிறது. அதுவரைக்கும் உடம்பை வேறு ஆரோக்கியமாகவைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அமெரிக்கா, கனடா போன்ற உயர்ந்த நாடுகளில் அங்கேயுள்ள உலகம்சுற்றிகள் மட்டுமே இலக்கியம்- தத்துவம்- அரசியல் போன்றவற்றில் கருத்துக்கள் சொல்கிறார்கள் என்பதையும் அறிந்துகொண்டேன். அவர்களுக்கு கூடவே சேல்ஸ்மேன் வேலையும் இருக்கும்போல. எனக்கு மேலும் வேலைகளும் குடும்பமும் இருக்கிறதே என்ற எண்ணமும் குழப்பத்தை அளிக்கிறது. நான் ஏற்கனவே கனடாவில் இருமாதம் இருந்துள்ளேன். அங்கேநான் உலகத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. இப்போது அங்கே ஏதேனும் புதிதாக உலகம் நிறுவப்பட்டிருக்கிரதா என்ற எண்ணமும் ஏற்படுகிறது. பார்ப்போம். பொய்சொல்ல முடியாத ஒரு தேசம் இருப்பது புளகாங்கிதத்தை உருவாக்குகிறது. அந்த மண்ணிலே கால் வைக்கவே காந்திதேசத்தவர்களுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள்  போன பிறப்பில் செய்த புண்ணியத்தால் அங்கேயே வாழ்ந்து உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பையும் அடைந்திருக்கிறீர்கள்  வாழ்த்துக்கள்
முடிந்தவரை முயற்சி செய்கிறேன்
அன்புடன்
ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 13அறைகூவலும் ஆட்டமும்
அடுத்த கட்டுரைஅமெரிக்கா திட்டம்..