ஆஸ்திரேலியா பழங்குடிகள் உலகின் மிகத்தொன்மையான பண்பாட்டுக்கு வாரிசுகள் என்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்பு பெரும்பனியுகத்தில் கடல்கள் உறைந்திருந்தபோது அவர்கள் ஆசிய மையநிலம் வழியாக நடந்தே இங்கே வந்திருக்கலாம் என்கிறார்கள். வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது அந்தக் கண்டத்தில் ஏழரை லட்சம் பழங்குடிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்கள் பூமியில் தனித்துவிடப்பட்டமையாலும் எண்ணிக்கை குறைவாக இருந்து வளங்கள் அதிகமாக இருந்தமையாலும் அவர்கள் மானுட நாகரீக வளச்சியின் பல புற அடையாளங்களை அடையவேயில்லை. உதாரணமாக அவர்களுக்கு விவசாயம் தெரியாது. மிருகங்களை பழக்கவில்லை.
உணவை தேடிச்சேகரித்து உண்பதும் வேடையாடுவதும்தான் அவர்களின் வாழ்க்கை. ஆண்கள் கங்காருக்களையும் சிறிய மிருகங்களையும் வேட்டையாடினார்கள். பெண்கள் பொறிவைத்து பறவைகளைப் பிடிப்பது கிழங்குகள் சேகரிப்பது ஆகியவற்றைச் செய்தார்கள். ஆகவே அவர்கள் உணவுக்காக விரிந்த ஆஸ்திரேலிய நிலங்களில் அலைய நேர்ந்தது. இதனால் மிகக்குறைவான பொருகளையே கொண்டுசென்றார்கள். ஆயுதங்கள் சில உடைகள் வழிபாட்டுப்பொருகள். நிலையான உறைவிடம் அவர்களுக்கு இல்லாததனால் நிலையான பண்பாட்டு வளர்ச்சியும் சாத்தியமாகவில்லை.
கிட்டத்தட்ட 500 இனக்குழுக்கள் ஆஸ்திரேலியா பழங்குடிகளுக்குள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான மொழி உண்டு. குலமூத்தாரே மக்களுக்கு தலைவராக விளங்கினார். பெரும்பாலும் அது ஒரு மூத்தார்குழுவாக இருக்கும். ஒரு சமூகத்தின் புறவாழ்வின் வளர்ச்சிக்கும் அகவாழ்வின் வளர்ச்சிக்கும் நேரடியான உறவேதும் இல்லை என்பதற்கான சிறந்த உதாரணமாக ஆஸ்திரேலியா பழங்குடியினர் சுட்டப்படுகிறார்கள். அவர்கள் புறப்பண்பாட்டு வளர்ச்சி என்ற நிலையில் ஆரம்பப் படியில், பொறுக்கியுண்ணும் நிலையில், இருப்பவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை நோக்கு, அதாவது மெய்யியல், மிக வளர்ந்த நிலையில் இருந்தது.
ஆஸ்திரேலியாப் பழங்குடிகளின் மெய்யியலை இப்போது விரிவாக ஆராய்ச்சிசெய்துவருகிறார்கள். அவர்களின் மெய்யியலின் அடிப்படை அலகுகள் மூதாதையர் மற்றும் இயற்கை. இவ்விரு சொற்களும் அவர்களின் மெய்யியலில் ஆழமான பொருள் கொண்டவை. மூதாதையர் என்னும்போது அவர்கள் இறந்தவர்களை மட்டும் சொல்லவில்லைறீப்படிச் சொல்லலாம். இறப்பவர்கள் கருத்துருவமாக மாறி காலத்தில் பின்னுக்குச்செல்கிறார்கள். இவ்வாறு காலத்தின் பின்னுக்கு பின்னுக்குச் சென்று தொடக்கநிலையை அடைந்தால் அங்கே இருக்கும் தூய கருத்துநிலை என்பதும் மூதாதையே. அந்த கருத்துநிலையில் இருந்தே இந்த பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது. அதாவது மூதாதை என்பது முன்னால் இருந்தது என்றே பொருள்படுகிறது.
அதேபோல இயற்கை என்பதும் அவர்களுக்கு வெரும் ஜடப்பொருள்தொகை அல்ல. அவர்கள் நோக்கில் இயற்கை ஒரு உயிர் போன்றது. அதற்கு எண்ணங்களும் வாழ்க்கையும் உண்டு. அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இயற்கையில் உள்ள ஜடப்பொருட்கள் தாவரங்கள் மனிதர்கள் எண்ணங்கள் ஆகியவை எல்லாமே ஒன்றில் இருந்து இன்னொன்றாக மாறக்கூடியவை. இயற்கையைச் சேதப்படுத்துவது மாற்றுவது எல்லாம் பாவம். ஆகவே அவர்களுக்கு வேளாண்மை விலக்கப்பட்டது.
இவ்விரண்டு அடிப்படைகளை இணைக்கும் சக்தியாக கனவை அவர்கள் எண்ணுகிறார்கள். மூதாதையர் அனைவருமே கனவுகளுக்குள் சென்றுவிடுகிறார்கள். அங்கே இருந்துகொண்டு அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். இயற்கையை விட அதில் உள்ள மனிதர்களைவிட கனவு இன்னும் பிரம்மாண்டமானது. இயற்கையே அந்த கனவுக்குள் தன் நிகழ்கிறது.. ஆகவே ஆஸ்திரேலியா பழங்குடிகள் தங்கள் முன்னோர் வாழ்ந்து இயற்கையில் கனவுவடிவமாக உறைந்துவிட்ட வாழ்க்கையை அபப்டியே மாற்றமில்லாமல் மீண்டும் வாழ்கிறார்கள் எனலாம்.
இதிலிருந்து அவர்கள் தங்கள் குலக்குறி மரபை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தனிமனிதருக்கும் அவருக்குரிய குலக்குறி உள்ளது. மரங்கள், விலங்குகள்,இயற்கைப்பொருட்கள்,நட்சத்திரங்கள் ஆகியவை குலக்குறிகளாக ஆகின்றன. ஒருவருக்கு அவருக்குரிய மரம் அல்லது பூச்சி அல்லது மிருகம் இருக்கலாம். அந்த குலக்குறியை ஒட்டியே அவரது தனிவாழ்க்கையின் எல்லா விஷயங்களும் தீர்மானமாகின்றன. குலக்குறியே ஒருவரின் திருமண உறவுகள், சடங்காசாரங்கள் ஆகியவற்றை தீர்மானிக்கிறது.
உண்மையில் இந்த தகவல்களை ஆஸ்திரேலியச் சுற்றுலாத்துறையின் வெளியீடுகளில் இருந்தும் இணையத்தில் இருந்தும் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த கோணத்தில் ஒரு தமிழன் ஆஸ்திரேலியப் பழங்குடியை புரிந்துகொள்வதைப்போல முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. அவர்கள் நம்முடைய முன்னோர்களும்கூட. ஏதோ ஒருவகையில் நம்மை வைத்து அவர்களை புரிந்துகொள்ள முயலலாம். ஒருபோதும் வெள்ளையர்கள் அவர்களை புரிந்துகொள்ள முடியாது. வெள்ளையர்கள் நம்மைப்பற்றி எழுதியிருப்பது எவ்வளவு அபத்தம் என நாம் அறிவோம். அதைப்போலத்தான் இருக்கும் இவையும்
உதாரணமாக இந்த குலக்குறி [டோட்டம்] என்ற சொல். இது செவ்விந்திய பழங்குடிகளை ஆராய்ந்த லூயிஸ் மார்கன் போன்ற ஆரம்பகால மானுடவியலாளர்கள் உருவாக்கிக் கொண்ட ஒரு புரிதல். அம்மக்கள் சில இயற்கைச்சின்னங்களை தங்கள் குடும்பத்துக்குரியதாகவோ குலத்துக்குரியதாகவோ கொள்கிறார்கள் என்பதில் இருந்து உருவான புரிதலைக்கொண்டு குலக்குறி என்னும் கௌத்துருவை உருவாக்கி அதை உலகமெங்கும் உள்ள பழங்குடிகள்மீது போடுகிறார்கள். எந்த அளவுக்கு இந்த முட்டாள்தனம்செல்கிறதென்றால் நெற்றியில் படையாக திருமண் அணிந்திருக்கும் அய்யங்காரைக் கண்டு அவர் தன் குலக்குறியை நெற்றியில் வரைந்து வைத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு.
இயற்கையின் ஆற்றலை பிரபஞ்ச சக்தியான பிரம்மத்தின் தோற்றநிலைகளாகக் கண்ட வேதமரபை இயற்கைசக்திகளைக் கண்டு அஞ்சி அவற்றை கும்பிட்டார்கள் என்று எழுதிவைத்தார்கள் ஆரம்பகால இந்தியவியலாளர்கள். இந்தியர்கள் கல்லையும் மண்ணையும் மரத்தையும் வணங்குகிறார்கள் என்றார்கள். நாம் கல்லாய் மண்ணாய் மரமாய் – வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி – நின்ற ஒன்றை வணங்குவதைத்தான் அப்படி புரிந்துகொண்டிருந்தார்கள் என நாம் அறிவோம். ஆஸ்திரேலியப் பழங்குடிகளைபப்ற்றிய வெள்ளையனின் புரிதல் எந்த லட்சணத்தில் இருக்கிறதென எப்படித்தெரியும்?
ஆஸ்திரேலியாப் பழங்குடியின் குலக்குறி குறித்து நாந் என்னை வைத்தே புரிந்துகொள்ள முடியும். இந்திய சோதிடமரபில் ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் உண்டு. மரமும், விலங்கும் நிறமும் உண்டு. என்னுடைய நட்சத்திரல் அனுஷம். மரம் மௌதம். மிருகம் வெள்ளாடு. நிறம் இளஞ்சிவப்பு. என் அண்ணாவின் நட்சத்திரம் ஆயில்யம். மரம் கடம்பு. உயிரினம் பாம்பு. நிறம் நீலம். பழங்காலத்தில் திருமணம் உள்ளிட்ட சடங்குகளுக்கு இந்த தகவல்கள் பரிசீலனைசெய்யப்படும். இந்தவழக்கம் ஆஸ்திரேலியா பழங்குடியினரிடம் இருக்கலாம்.
ஆஸ்திரேலியப்பழங்குடியினரின் சடங்குகள் பல இந்தியச் சடங்குகளைப்போலவெ இருக்கின்றன. ஒரு வயதுவரை குழந்தைக்குப் பெயரிடுவதில்லை, அதுவரை அதை மனிதனாக எண்ணுவதில்லை. எங்களூரிலும் அப்படித்தான். ஒருவயதானபின்னர் ‘சோறுகொடுத்து’ பெயரிடுவார்கள். அது வரை அக்குழந்தைக்குப் பெயரில்லையாதலால் மரணதேவதைகள் அதை கூட்டிச்செல்லமுடியாது என்பார்கள். மாற்று கோத்திரங்களில் இருந்தே பெண் எடுக்கவேண்டும் என்ற வழக்கம் இங்கிருப்பதைப்போலவே அங்கும் இருக்கிறது.
சு.கி.ஜெயகரன் பல்வேறு ஆஸ்திரேலியா பழங்குடி மொழிகளில் தமிழ் மொழிச்சொற்களின் திரிந்த வடிவங்கள் இருப்பதை விரிவாக எழுதியிருக்கிறார். இம்மகக்ளைப்பற்றி தமிழ்பண்பாட்டு நோக்கில் விரிவான ஆய்வுகள் செய்யும்போது பல புதிய திறப்புகள் நிகழலாம். இந்திய சாதியமைப்பைப் பற்றியே ஒரு பொருட்படுத்தும்படியான புரிதலை இன்னும் உருவாக்க முடியாத வெள்ளையர் ஆஸ்திரேலியா பழங்குடிகளை பற்றி என்ன சொன்னாலும் அது தொண்ணூறு விழுக்காடு தவறாகவே இருக்கும்
ஆஸ்திரேலியா நிலத்துக்கு வந்த வெள்ளையர்கள் அதை ‘ஆளில்லா நிலம்’ [terra nullius] என்று அறிவித்தனர். அங்கே வாழ்ந்த மக்களை அவர்கள் மனிதர்களாகவே எண்ணவில்லை. 1993ல்தான் ஆஸ்திரேலிய அரசு இந்த சட்டத்தை நீக்கி ஆஸ்திரேலியா மண்ணில் பழங்குடிகளின் உரிமையை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. ஆஸ்திரேலியப்பழங்குடி மக்கள் மீதான வெள்ளையர் சமூகத்தின் எதிர்வினை அவர்களின் பண்பாடு, மதம் ஆகியவற்றின் சில அடிப்படைகளைச் சுட்டக்கூடியதாகும். மூன்றுவகையான அணுகுமுறைகள் அவர்கள்மேல் கடைப்பிடிக்கப்பட்டன.1. இன ஒழிப்பு முறை 2.
இனமேம்பாட்டுமுறை 3. தனிப்பண்பாட்டு அனுமதி முறை.
தெளிவத்தை ஜோசப்
முதலில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள் குற்றவாளிகளும் காவலர்களும் என்பதனால் ஐரோப்பியப் பண்பாட்டின் ஆகக்கடைசிநிலைகளில் இருந்தவர்களே இங்கே வந்தார்கள். அவர்களைப்பொறுத்தவரை ஆஸ்திரேலியாபழங்குடிகள் மனிதர்களே அல்ல. மிருகங்கள். ஊனுக்கும் தோலுக்கும் பயன்பாமாடார்கள் என்பதனால் மிருகங்களிலும் கடையர்கள். ஆகவே அவர்களைக் கூண்டோடு கொன்றே ஒழித்தார்கள் பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டது மானுட வரலாற்றின் பெரும் சோகங்களில் ஒன்று. கொடும் நோய்களிலும் செயற்கைப்பஞ்சங்களிலும் அவரக்ள் கொல்லபப்ட்டார்கள். அவர்களை எலிகளைப்போல வேட்டையாடி கொல்ல அரசு அனுமதி இருந்தது. பழங்குடிகளை துரத்திச்சென்று சுட்டுக்கொல்லும் விளையாட்டுக்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்தன.
இங்கே கவனிக்கவேண்டிய இரு விஷயங்களுண்டு. ஒன்று, ஆஸ்திரேலியாவுக்கு வந்து இந்த மானுட அழிவை நிகழ்த்தியவர்களில் கணிசமானவர்கள் ஐரீஷ் சுதந்திரப்போரிலும் ஸ்காட்லாந்து சுதந்திரப்போரிலும் கைதானவர்கள். அவர்களின் சுதந்திர லட்சியவாதம் இம்மக்களையும் தழுவியதாக இருக்கவில்லை. இது அன்றைய ஐரோப்பாவின் மனநிலையைக் காட்டுகிறது. ஐரோப்பிய அறிவொளி இயக்கமும் அதன் பண்பாட்டு, தத்துவ வெற்றிகளும் அடிப்படையில் இந்த இனவாதத்தின் மீதுதான் அமர்ந்திருந்தன.
உதாரணமாக, இந்த மாபெரும் இன அழிவு நடந்துகொண்டிருக்கும்போது கார்ல் மார்க்ஸ் லண்டனில் இருந்தார். ஐரீஷ் விடுதலைப்போராட்டம் போன்றவற்றை வரலாற்றின் முற்போக்கு நிகழ்ச்சிகளாக சித்தரித்துக்கொண்டும் இருந்தார். ஆஸ்திரேலியா இன ஒழிப்பு குறித்து அன்றிருந்த பிற பிரிட்டிஷ் சிந்தனையாளர்களைப்போலவே அவருக்கும் தெரிந்திருந்தது. குலக்குறி போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது அவர் ஆஸ்திரேலியாப் பழங்குடிகளைப்பற்றி விரிவாகவே அறிந்திருந்தார் என்றே எண்ணத்தோன்றுகிறது. அவர் ஐரோப்பியர் தொடர்பு மூலம் அப்பழங்குடிகள் ‘நாகரீகம்’ அடைகிறார்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.
கந்தராஜா வீட்டில்
இந்தியா குறித்து மார்க்ஸ் கொண்டிருந்த எண்ணங்களுக்கும் இதுவே பின்னணி. நிலப்பிரபுத்துவ இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பெரிய முன்னகர்வு சக்தி என அவர் எண்ணினார். பின்னர் மார்க்ஸியம் சோவியத் ருஷ்யாவில் ஆட்சியமைத்தபோது தொலைதூர ஆர்ட்டிக் நிலப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகளை அது கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டியமைக்கான கோட்பாட்டு விதை மார்க்ஸில் உள்ளது. பின்னர் சோவியத் ருஷ்யக் கூடமைப்புக்குள் ஐரோப்பிய ருஷ்யா ஆசிய ருஷ்யாவின் காவலனாகவும் கடவுளாகவும் ஆனதன் உளவியல் வேர் மார்க்ஸிலேயே உள்ளது
இன்னொன்று, இந்த இன ஒழிப்பு என்னும் கருதுகோள். இனத்தூய்மை என்ற கருதுகோள் தொன்மையானது. ஆனால் பூரணமான இன அழிப்பு என்பதை நாம் ஆபிரகாமிய மதங்களின் சிந்தனைகள் பரவிய இடங்களிலேயே காணமுடியும். ‘நாம் மற்றும் பிறர்’ என்ற பிரிவினையை திட்டவட்டமாக நிறுவும் தன்மை யூத மதத்தின் அடிப்படைகளில் ஒன்று. இஸ்லாமிய மதம் ஈரானுக்கும் வந்தபோது அங்கிருந்த பாரசீகப்பண்பாட்டை பூரணமாக அழித்ததுடன் அந்த இனமக்களையும் இல்லாமலாக்கியது. எகிப்தில் மாபெரும் நாகரீகத்தை உருவாக்கிய காப்டிக் இனம் வேரற்று போய் இன்று சில ஆயிரங்களே எஞ்சியுள்ளன.
ஐரோப்பாவில் தத்துவத்திலும் மெய்யியலிலும் பெரும் வளர்ச்சி பெற்றிருந்த பல்வேறு பாகன் இன மக்கள் சுவடற்று அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை கொடூரமான காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் கதைகள் மட்டும் உள்ளன. அவை இன்று திரைப்படமாகவும் வந்துகொண்டிருக்கின்றன. ஐரோப்பா சென்ற அமெரிக்கக் கண்டத்தில் செவ்விந்தியர்கள் ஆஸ்திரேலியா பழங்குடிகளைப்போலவே பூரணமான இன அழிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இங்கும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு, மானுட இனத்தின் பரிணாமம் குறித்த பல ஊகங்களை செவ்விந்தியர்களை ஆராய்ந்த லூயிஸ் மார்கனில் இருந்துதான் மார்க்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் செவ்விந்தியர்கள் பண்பாட்டால் பிந்தியவர்கள், அவர்களை ஐரோப்பியர் மீட்டார்கள் என்ற கருத்தையே அவர் கொண்டிருந்தார்.
இத்தகைய இன ஒழிப்பு என்பது இந்தியாவில் எந்தச் சிறிய பழங்குடி இனத்துக்கும் நிகழவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். தன் தனித்தன்மையை பேணுதல், பிறரை ஒதுக்கி வைத்தல், அடிமைப்படுத்துதல் இரண்டும் நிலப்பிரபுத்துவ காலத்துடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்தவை. ஏனென்றால் நில அடிமைமுறை அவ்வாறுதான் உருவாகிறது. அது அக்காலத்து பொருளியலின் அடிப்படை அலகு. ஆனால் அது இன ஒழிப்பு என்னும் அளவுக்குச் செல்லவில்லை. பெரும்பாலும் பழங்குடிப்பண்பாடு இருந்த கிழக்காசிய நாடுகள்மீது ஆதிக்கம் செலுத்திய சோழர்கள் அங்கே இன அழிப்பை நிகழ்த்தவில்லை.
1900த்தில் இரண்டாவது அணுகுமுறை பயன்பாட்டுக்கு வந்தது. இதை இனமேம்பாட்டுமுறை என ஏன் சொல்கிறோம் என்றால் ஐரோப்பியர் தங்களை பண்பாட்டால் மேம்பட்ட இனம் என்று எண்ணினார்கள். அந்த மேம்பட்ட பண்பாட்டை நோக்கி பிற மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து வர முயன்றார்கள். 1972 வரை ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்காலம் இந்த அணுகுமுறை நீடித்தது. பழங்குடிகள் வலுக்கட்டாயமாக பிடித்துவரப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நாகரீகம் வன்முறை மூலம்புகட்டப்பட்டது. குழந்தைகளை பெற்றோர் ‘கெடுத்து’ விடக்கூடும் என்பதனால் அவர்கள் பிடுங்கப்பட்டு முகாம்களில் பாதிரிமார் கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டார்கள். அந்த வதையை பழங்குடிகள் எதிர்த்தார்கள். ஆகவே இதுவும் பெரும் மனித அழிவையே உருவாக்கியது.
இந்த அணுகுமுறை ஐரோப்பிய இனவாதத்தின் இன்னொரு முகம் மட்டுமே. பிற பண்பாடுகள் மேல் அவர்களுக்கு மதிப்பில்லை. மக்களைக் கொல்வதற்குப் பதில் அவர்களின் ஆளுமையைக் கொல்லலாமே என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். உலகளாவிய மதம் மாற்றும் இயக்கங்களின் உளவியல் இதுவே. இந்தியாவுக்கு வந்த பல மதமாற்றக்காரர்கள் இந்த மனநிலையையே கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக புனித சேவியர், கால்டுவெல், ரிங்கல் துபே போன்றவர்கள் இந்தியர்களைப் பற்றி எழுதிய வரிகளை காணலாம். பூரணமான பண்பாட்டு அவமதிப்பும் இனவெறுப்பும் ததும்புபவை அக்குறிப்புகள். நாடார்களை மதம் மாற்றி கல்விபுகட்டி ‘மேம்படுத்த’ முயன்ற கால்டுவெல் திருநெல்வேலி சாணார்களின் வரலாறு போன்ற நூல்களில் அவர்களைப் பற்றி எழுதியிருப்பது மானுடவெறுப்பு ததும்பும் அவதூறு என்றே சொல்லவேண்டும்.
1967ல்தான் ஆஸ்திரேலியா பழங்குடிகளுக்கு குடியிரிமை வழங்கியது. பழங்குடிகளுக்குக் குடியுரிமை வழங்காத ஆஸ்திரேலியா அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பண்டித நேரு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். 1972ல் அவ்வரசு பழங்குடிகள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்னும் உரிமையை வழங்கியது. ஆனால் அதற்குள் பழங்குடிகள் மீளமுடியாதபடி சிதறடிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் பூர்வீக நிலங்கள் பிடுங்கப்பட்டு அவர்கள் நகரங்களில் கைவிடப்பட்ட தலைமுறையினராக ஆகிவிட்டிருந்தார்கள். தங்கள் தொன்மையான பண்பாடை இழந்து புதிய நகர்மயப்பண்பாட்டுக்குள் இணைய முடியாத தத்தளிப்பு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டிருந்தது.
ஆஸ்திரேலியா பழங்குடிகளின் இன்றைய நிலை இரு வகையாகப் பிரித்துப் பார்க்கத்தக்கது. ஒன்று திருடப்பட்ட தலைமுறை என்று அழைக்கபப்டுகிறது. வலுக்கட்டாயமாக தங்கள் வாழ்விடங்களில் இருந்தும் பண்பாட்டில் இருந்தும் பிரிக்கப்பட்டு ஐரோப்பியமயமாக்கப்பட்டு அந்த மாற்றத்தினால் ஆத்மாவை இழந்து அன்னியப்பட்ட மக்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் போதை அடிமைகள். திறனற்ற உதிரி உழைப்பாளர்கள்.
இரண்டாம் வகையினர் கைவிடப்பட்ட தலைமுறையினர். இவர்கள் நகர்ப்புறங்களிலும் தொலைதூர நிலங்களிலும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் கைவிடப்பட்ட மக்கள். இவர்களுக்கும் எவ்விதமான பண்பாட்டு வேர்களும் இல்லை. ஆனால் இப்போது அரசு இவர்களின் பூர்வ நிலங்களை திருப்பி அளித்து காடுகளுக்குள் வாழ அனுமதிக்கும்போது இயல்பான ஒரு வாழ்க்கைக்கு ஓரளவுக்கு திரும்பிச்செல்ல இவர்களால் முடிகிறது என்கிறார்கள்.
இச்சூழலில் இந்தியாவில் பழங்குடிமேம்பாட்டை வடிவமைத்த வெரியர் எல்வின் குறித்து பேசவேண்டியிருக்கிறது. வெரியர் எல்வின் ஒரு பிரிட்டிஷ்காரர். இந்தியாவுக்கு சாதாரணமாக வந்தவர் காந்தியைச் சந்தித்தார். காந்தியின் ஒரு கேல்வி அவர் மனதில் ஆழமாகப் பதிகிறது. ”வாழ்க்கையின் அல்லது பண்பாட்டின் வெற்றியை எதை வைத்து அளப்பது?” காந்தி சொன்னார் ”மகிழ்ச்சியை வைத்து” என்று.
பின்னர் இந்தியப் பழங்குடிகளுடன் வாழ்ந்து அவர்களின் வாழ்க்கையை ஆராயும் வெரியர் எல்வின் அந்த வரியையையே தன் கோட்பாடாக ஆக்கிக் கொண்டார்.பழங்குடிகள் தங்களுக்கென்று ஒரு முழுமையான வாழ்க்கைமுறை கொண்டவர்கள். அதில் அவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல உடையணிகிறார்களா நல்ல வீடுகளில் வாழ்கிறார்களா என்ற கேள்வியை வைத்து அவர்களை எடை போடலாகாது. அவர்களே விரும்பினாலொழிய அவர்களின் வாழ்விடங்களையும் வாழ்க்கைமுறையையும் மாற்ற நமக்கு அதிகாரம் இல்லை.
இந்தக்கொள்கை ‘எல்வின் கொள்கை’ எனப்படுகிறது. நேருவை இக்கொள்கையால் கவர எல்வினால் முடிந்தது. இந்தியப் பழங்குடி நல அமைப்பின் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பழங்குடிகளை தொந்தரவு செய்யாத ஒரு கொள்கையை இந்தியா வகுக்க இதுவே வழியமைத்தது. இதெல்லாம் 1950களில் என்பதையும் அப்போது ஆஸ்திரேலியா பழங்குடிகளை கொன்றொழித்துக்கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைவுகொள்ளவேண்டும்.
வெரியர் எல்வின்
எல்வின் கொள்கை பழங்குடிகளின் ‘வறுமையை கொண்டாடக்கூடிய கற்பனாவாத’ நோக்கு கொண்டது என்று இப்போது சில நவீன ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் அதை உலகளாவிய முன்னுதாரணங்களால் நிரூபிக்க முடியவில்லை. பழங்குடிகளை பல்கலை வட்டாரத்தில் நின்று ஆராயும் மேட்டிமைநோக்கே அவர்களிடம் காணக்கிடைக்கிறது. மேலும் அத்தகைய ஆய்வுகளுக்குள் மதமாற்ற சக்திகளின் நிதியுதவி பெருமளவில் உள்ளது என்பதும் வெளிப்படை
பழங்குடி உளவியல் அவர்கள்மேல் செலுத்தப்படும் சீர்திருத்தத்துக்கு எதிரானது என்பதற்கும், அச்சீர்திருத்தங்கள் அவர்களை பிச்சைக்காரர்களாகவே ஆக்கும் என்பதற்கும் ஆஸ்திரேலியா மட்டுமல்ல அந்தமானின் ஓங்கிகளின் நிலைமையும் உதாரணம். அவர்கள் பகுதிகளுக்குச் சாலை போட்டுக் கொடுக்கும்போது அங்கே வணிகர்கள் சென்று சேர்கிறார்கள். ஒரு சில வருடங்களுக்குள் அம்மக்கள் அடிமைகளாகவும் கடன்காரர்களாகவும் குடிகாரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். ஓங்கிகளும் ஜாரவாக்களும் சாலையோரம் நின்று சுற்றுலாப்பயணிகளிடம் பிச்சை எடுக்கிறார்கள் இன்று.
சிட்னி மையத்தில் இருந்து ஒரு மாபெரும் தெப்பப்படகில் ஏறி மறுபக்கம் கடற்கரைக்குச் சென்றோம். அதில் அமர்ந்துகொண்டு சிட்னிபாலத்தைப் பார்ப்பது பிரமிப்பான அனுபவமாக இருந்தது. சிறிய •பைபர் கட்டுமரங்களில் நைலான் பாய்களைக் கட்டிக்கொண்டு இளைஞர்கள் நீரில் சறுக்கிச் சென்றார்கள். *வில் நீர் விளையாட்டுகள் மேல் பொதுவாகவே மோகம் அதிகம் என்பதை கவனித்திருக்கிறேன். பல வீடுகளில் நீர்ச்சறுக்கு பொருட்களும் சிறிய படகுகளும் இருப்பதைக் காணலாம்
அலை வந்து தெப்பத்தை அடித்து உள்ளே நீரை அள்ளித்தூவியது. குளிர்ந்த காற்றில் அலைகள் நீல நைலான் பரப்பு போல வளைந்து எழுந்து அடங்கின. அருண்மொழி சிவசக்தியின் கறுப்புக்கண்ணாடியை வைத்துக்கொண்டாள். சிவசக்தி அவளை புகைப்படம் எடுத்தார். ஒரு படத்தில் மாமுக்கோயா என்ற மலையாள நடிகர் கறுப்புக்கண்ணாடி அணிந்து வரும்போது இந்திரன்ஸ் என்னும் மலையாள நடிகர் அவருக்கே உரித்தான திருவனந்தபுரம் உச்சரிப்பில் ”எவனாரெடே, ரெஜினீகாந்தோ?” என்பார். அது கேரளத்தில் மிகபிரபலமான ஒரு பகடி. அந்தச் சாயலில் நான் ”எவளாரெடே நெயனதாரெயோ?” என்றேன். அதன்பின் அருண்மொழி ஒருமணிநேரம் என்னிடம் பேசவில்லை.
மறுபக்கம் சென்று கடற்கரையை அடைந்தோம். மதியவெயில் பளீரென்றிருந்தது. கடல்முழுக்க நீர்விளையாட்டு ஆடுபவர்களின் பாய்மரங்கள் தெரிந்தன. அலைகளில் ஏறி நீர்ச்சறுக்கு செய்பவர்கள் நீரின் வளைவு பின்னால்வர ஆதிசேடனால் துரத்தப்படும் பூச்சிகள் போல பறந்து வந்து ஒரு கட்டத்தில் கவிழ்ந்து அலையால் உண்ணப்பட்டு மீண்டும் நுரை நெளிந்த நீர்ப்பரப்பில் மேலெழுந்தார்கள். மணலில் கைக்குட்டையாடை அணிந்த பெண்கள் படுத்துக்கொண்டு வெயிலில் வறுபட்டார்கள். படிகளில் கிழவிகள் அமர்ந்துகொண்டு கறுப்புக்கண்ணாடிகள் வழியாக ஒளிகொந்தளித்த கடலைப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒருமணிநேரம் இருந்துவிட்டு திரும்பி மீண்டும் தெப்பத்த்தில் ஏறி ரயிலுக்கு வந்தோம். எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே சீட்டுதான். சிட்னியில் அநுர ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு தாமதமாகிக் கொண்டிருதது. ரயிலில் கொஞ்சம் பதற்றம் அடைந்தோம். ஆனால் ஆசி கந்தராஜாவே இன்னும் அரங்குக்குப் பொய்ச்சேரவில்லை என்று முருகபூபதி •போனில் பேசிவிட்டுச் சொன்னார். ரயில் நிலையத்திற்கு ஆசி கந்தராஜா வந்து அழைத்துச்சென்றார்.
அரங்கில் குறைவாகவே கூட்டம் இருந்தது. இலக்கிய சந்திப்புகளுக்கான மனநிலை இல்லை. ஈழ அழிவுக்கு எதிராக அங்கே கிளர்ச்சிகள் நடந்துகொண்டிருந்த காலம் அது. மாத்தளை சோமு வந்திருந்தார். தெளிவத்தை ஜோசபைக் கண்டதும் இருவரும் கட்டிக்கொண்டு மலையகத்தின் விவரங்களைப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தில் முருகபூபதி தலைமை வகித்து என்னைப்பற்றியும் தெளிவத்தை ஜோசப்பைப்பற்றியும் பேசினார். தெளிவத்தை மலையக இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி இன்றைய நிலை ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். நான் பொதுவாக இலக்கியத்தைப்பற்றிப் பேசினேன். கேள்விகளின்போது பொத்தாம்பொதுவான கேள்விகளுக்குப் பதிலாக என்னுடைய படைப்புகள் மற்றும் கருத்துக்களை ஒட்டியே கேள்விகள் எழுந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
கூட்டத்தில் முருகபூபதி திடீரென்று அருண்மொழியிடமும் பேசச்சொன்னார். அவள் என் நூல்களை தொகுப்பதுண்டு. அதைப்பற்றி பேசுமாறு சொன்னார்கள். அவள் திகைத்து திணறியபின்பு வந்து ஒருவழியாக தன்னுடைய நூல்தொகுப்புமுறையைப்பற்றிச் சொன்னாள். ஒரு வகையான கோட்பாட்டையும் அளவுகோலையும் வைத்துக்கொள்ளாமல் அந்த எழுத்தாளருஅனான தனிப்பட்ட வாசகத்தொடர்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செய்யும் நூல்தொகுப்புமுறை தன்னுடையது என்றும் அதுவே இலக்கியபப்டைப்புகளுக்குரியது என்றாள்.
கூட்டம் முடிந்ததும் எஸ்பிஎஸ் [SBS – Special Broadcasting Service]என்னும் ஆஸ்திரேலிய தேசிய வானொலியின் பன்மொழிச்சேவைப்பிரிவுக்கு செல்லவேண்டும் என்றார் முருகபூபதி. அங்கே ஒரு பேட்டிக்கு ஏற்பாடுசெய்திருந்தார்கள். ரேய்சல் என்னும் ரேமண்ட் செல்வராஜ் என்ற நிகழ்ச்சியாளர் பேட்டியை எடுப்பார் என்றார். நானும் முருகபூபதியும் ஆசி.கந்தராஜாவும் அருண்மொழியும் வானொலி நிலையத்துக்குச் சென்றோம்.
ஆஸ்திரேலியாவில் மிகப்பிரபலமான வானொலி அது. அரசு முதலீடு கொண்டதென்றாலும் அரசுப்பிரச்சாரம் உள்ளதல்ல. கிட்டத்தட்ட பிபிஸி எனலாம். ஆஸ்திரேலியாவில்பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் சராசரி இரண்டுமணிநேரம் வரை அந்த நிகழ்ச்சியில் இடமளிக்கப்படுகிறது. நான் ஏற்கனவே அந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேந்- தொலைபேசிமூலம்.
ரேய்சல் என்னை பேட்டி எடுதார். உடனே அருண்மொழியிடமும் பேட்டி எடுக்கலாம் என்றார் முருகபூபதி. அருண்மொழி மூச்சுத்திணறக்கூடாதே என்று நான் எழுந்து பாத்ரூம் போய்விட்டேன். அங்கே பேசியபோது ஏற்கனவே சொன்னதை இன்னும் வளர்த்துக்கொண்டு சொன்னதாகச் சொன்னாள். இலக்கியத்தின் வடிவத்தை மட்டுமே எஇட் செய்யமுடியும். அதற்கான வடிவபோதம் பழைய செவ்வியல் நூல்களில் உள்ள வாசிப்பில் இருந்து உருவாகும் என்றாள்.
இரவில் நான் ஆசி.கந்தராஜாவின் காரில் அவரது வீட்டுக்குத் திரும்பினேன். ஆஸ்திரேலிய வானொலியை அங்குள்ள பழங்குடிகள் கேட்கிறார்களா என எண்ணிக்கொண்டேன். அங்கே இருபது பழங்குடி மொழிகளும் இருநூறுக்குமேல் துணைமொழிகளும் உள்ளன. எல்லாவற்றுக்கும் ஒரு மணிநேரம் கொடுத்து அவர்கள் ஒரு வானொலி நடத்தலாம். உலகுக்கு அது ஒரு புது முயற்சியாக இருக்கும்.