அன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]

Trojan-

[டிரோஜன் குதிரை. டிராய் நகருக்குள்]

இந்த இணையதளத்தில் கருத்துலகில் வரும் அன்னிய நிதியையும் அதன் பாதிப்பையும் பற்றி நான் எழுதி சர்ச்சைக்குள்ளான விஷயங்களை ஒருவாறு தொகுத்து முடித்துக்கொள்ள விரும்புகிறேன். ஓர் எல்லைக்கு மேல் இதைப்பற்றிப்பேசினால் வெறும் வம்புகளே எஞ்சும் என்பதனால்.

சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின், உலகமயமாதல் தொடங்கியபின், தொண்ணூறுகளின் நடுவில் தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலிலும் இலக்கிய-அரசியல் கோட்பாட்டுச்சூழலிலும் ஒரு திட்டவட்டமான மாற்றம் தென்பட ஆரம்பித்தது. பல சிற்றிதழ்சார் எழுத்தாளர்கள் கருத்தியல் தளத்தில் சடாரென்று ஒரு ‘யூ டர்ன்’ அடித்தார்கள். இதை பழைய இதழ்களின் தொடர்ச்சியை கவனிப்பவர்கள் காண முடியும்.

அதன் பின்னணி இதுதான். ருஷ்ய அமெரிக்க கெடுபிடிப்போர் காலத்தில் தமிழ் கருத்தியல்சூழலில் இரு அணிகள் இருந்தன. ஒன்று சோவியத்சார்பு அணி. இரண்டு அதை ஏற்காதவர்களின் அணி. இரு தரப்பிலும் நிதி வந்துகொண்டிருந்தது. அவை அவ்வளவு ரகசியமாகவும் இல்லை. நிதியுதவியும்கூட பெரிய அளவிலும் இல்லை.

சோவியத் அணி இஸ்கஸ் போன்ற அமைப்புகள் வழியாகவும் இங்குள்ள இடதுசாரிகளின் அமைப்புகள் வழியாகவும் எழுத்தாளர்களைத் திரட்டியது. சாதாரணமாக அவர்களிடமிருந்து எழுத்தாளர்கள் பெற்றது இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல்கலைக் கழகங்களின் கருத்தரங்குகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு. இடதுசாரி நூல்களை மொழியாக்கம் செய்வதன் ஊதியம். இவை கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். தி.க.சிவசங்கரன் போன்ற சிலர் ருஷ்ய அமைப்புகளில் பெரும் சம்பளத்துடன் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றனர்.

இத்தரப்பின் உச்சகட்ட லாபம் என்பது சோவியத் ருஷ்யாவுக்கு ஒரு பயணம். ஆனால் இதெல்லாம் மிக வெளிப்படையானவை. ஜெயகாந்தன் போன்றவர்கள் வெளிப்படையாகவே அன்றுமின்றும் அதில் ஈடுபட்டார்கள். அதை ஒரு பெருமையாகவே முன்வைத்தார்கள், வைக்கிறார்கள். அது கொள்கைசார்பானது என்றே கருதப்பட்டது.

வலதுசாரித்தளத்தில் இந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. ஆனால் இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பணம் அளித்தன என்பது உண்மை என்றே நான் நினைக்கிறேன். பேர்ல் பப்ளிகேஷன் மூலம் செய்யப்பட்ட மொழியாக்கங்கள் வழியாக பணம் அளிக்கப்பட்டிருக்கிறது . பல்வேறு மொழியாக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவை எவையும் பெரிய தொகை அல்ல. ஆனால் அதற்கொரு பங்களிப்பு இருந்திருக்கலாம்.

இந்தியாவின் சில இதழ்களுக்கும் சில அமைப்புகளுக்கும் அமெரிக்கக் கலாசார அமைப்புகளிடமிருந்து பணம் வந்திருக்கிறது. அந்தக் கலாசார அமைப்புகளுக்கு அமெரிக்க உளவுத்துறை பணம் கொடுத்த தகவல்கள் பின்னர் வெளிவந்தன. ஆனால் எழுத்தாளர்களுக்கு அனேகமாக பணம் ஏதும் வந்ததில்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அமெரிக்கர்களால் பெரிதாகக் கருதப்படவில்லை.

ஆனால் நான் விசாரித்தவரை அன்று தீவிரமாக கம்யூனிச எதிர்ப்பு பேசிய இதழாளர்களுக்கு பணம் வந்திருக்கிறது. அவர்களின் கட்டுரைகள் ஆங்கில இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்படுவதன் வழியாக. வரும் பணம் கணிசமானதே. வெளிநாட்டுப்பயண அழைப்புகள் அமெரிக்காவின் மிகப்பெரிய தூண்டிலாக இருந்திருக்கின்றன. ஆனால் பல்கலை அழைப்புகளை இதில் சேர்க்கமுடியுமா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள்.

ஃபோர்டு ஃபவுண்டேஷன், ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் போன்ற பல அமைப்புகள் ஐம்பதுகள் முதலே இந்தியாவில் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு தொடக்கமிட்டிருந்தன. பல்வேறு ஆக்கபூர்வப் பணிகளுக்கு அவை உதவியிருக்கின்றன. அவற்றிடமிருந்து படைப்பாளிகள் பலர் சிறிய நிதியுதவிகள் பெற்றிருக்கின்றார்கள். அவற்றின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெளிப்படையானவையாகவே இருந்தன.

இடதுசாரிகள் இந்த அமெரிக்கநிதியை எப்போதுமே பூதாகரமாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். திட்டவட்டமான ஆதாரமேதும் சொல்லப்படாமலேயே தொடர் அவதூறாக இந்தக் குற்றச்சாட்டை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் பற்பல வருடங்கள் தொடர்ந்து இந்த அவதூறின் நிழலில் வாழ்ந்தனர். கிட்டத்தட்ட நிராதரவாக பிறர் கொடைகளில் வாழ்ந்த க.நா.சு. ‘சிஐஏ சீமான்’ என்று இடதுசாரிகளால் சொல்லப்பட்டார். அவர் சொந்தமாக ஒரு போர்டபிள் டைப்ரைட்டர் வைத்திருந்தது ஆதாரமாகக் கொள்ளப்பட்டது.

அது கடைசிவரைக்கும்கூட அவருக்கு கடுமையான மனவருத்தம் அளிப்பதாக இருந்தது. நான் முதன்முதலாக அவரைச் சென்னையில் சந்தித்தபோது ஒருவர் அவரை காபி சாப்பிட அழைத்தார். ‘பில்லை நீங்கதான் குடுக்கணும்…எனக்கு சிஐஏ மணியார்டர் இன்னும் வரலை’ என்று வருத்தமான சிரிப்புடன் சொன்னார். எனக்கு பாவமாக இருந்தது. இன்று தங்கள்மீது திட்டவட்டமான குற்றச்சாட்டு வரும்போது மிகையுணர்ச்சிகொள்ளும் இதே இடதுசாரிகள்தான் க.நா.சு. போன்ற மேதைகளை திட்டமிட்டு அவமதித்தனர்.

தமிழில் வெளிவந்த சிற்றிதழ்கள் எல்லாமே இடதுசாரிகளால் இவ்வாறு அவதூறு செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளன. காகிதப்பொம்மைகள் செய்து விற்று வாழ்ந்த சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து சி.ஐ.ஏ.யின் நிதியால் நடப்பது என்றார்கள். கணையாழி சி.ஐ.ஏ. இதழ் என்றார்கள்.

கெடுபிடிப்போர் காலகட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க நிதியை பெருமளவுக்குப் பெற்றவர்கள் இந்துத்துவ அமைப்புகள் என்று என்னிடம் இந்துத்துவ இயக்கத்தில் முன்பிருந்த ஓர் இதழாளர் சொல்லியிருக்கிறார். டி.பி.டெங்கடியின் பாரதிய மஸ்தூர் சங்க் நிதி பெற்று உருவானது என ஒரு பரவலான பேச்சு அன்று இருந்தது. அது உண்மையாக இருக்கலாம். இடதுசாரி ‘அபாயத்துக்கு’ எதிரான ஒரு கொள்கை நடவடிக்கையாக அது பெறப்பட்டிருக்கலாம்.

தொண்ணூறுகளிலேயே இந்தியாவுக்கான இடதுசாரி நிதி நின்றுவிட்டது. சோவியத் கலாசார மையங்கள் பல இடங்களில் மூடப்பட்டன. கெடுபிடிப்போர் மறைந்ததும் அமெரிக்க நிதியும் இல்லாமலாகியது. ஆகவே இந்திய சிந்தனைச்சூழலில் ஒரு பெரிய ’வெற்றிடம்’ ஏற்பட்டது. அந்த இடத்தை பல்வேறு தன்னார்வக்குழுக்கள் ஆக்ரமிக்க ஆரம்பித்தன.

எண்பதுகள் முதலே தன்னார்வக்குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டுவந்தாலும்கூட தொண்ணூறுகளில்தான் அவை காளான்போலப் பரவின. தொண்ணூறுகளுக்கு முன்னர் இந்தியாவில் தன்னார்வக்குழுக்கள் நேரடியாகவே கிறித்தவ அடையாளம் கொண்டவையாக, கிறித்தவ சபைகளின் கண்காணிப்பில் உள்ளவையாக இருந்தன. இவற்றை WACC போன்ற அமைப்புகள் ஒருங்கிணைத்தன. கேரளத்தில் இடதுசாரிகளின் முதல் ஆட்சிக்கு எதிரான இவர்களின் போராட்டத்திற்குப்பின் இடதுசாரிகள் இவர்களை எப்போதும் கண்காணிப்பின் நிழலிலேயே வைத்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் அப்படி இருக்கவில்லை.

அப்போதே தமிழகத்தின் சில எழுத்தாளர்கள் இவ்வமைப்புகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இவ்வமைப்புகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் சேவைகள் செய்வது, அதையொட்டி மதமாற்றப்பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றையே செய்துவந்தார்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சிறு ஊதியம் பெறுவது இயல்பான ஒன்றாகவே இருந்தது. உண்மையான சமூகசேவைகளையும் இவர்கள் செய்துவந்தார்கள்.

தொண்ணூறுகளின் வெற்றிடத்தை இந்த தன்னார்வக்குழுக்கள் விஸ்வரூபம் எடுத்து நிரப்பினர். இப்போது தன்னார்வக்குழுக்களின் முகம் மாறிவிட்டிருந்தது. அவை முற்போக்குப் பாவனைகள் கொண்டவையாக, மக்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாக போராடக்கூடியனவாக உருவம் கொண்டன. அதாவது அவை இடதுசாரி முகமூடியை அணிந்துகொண்டன. தன்னார்வக்குழு என்பதற்குப் பதிலாக செயலார்வக்குழு என்று தங்களைச் சொல்லிக்கொண்டார்கள். மனிதஉரிமை, கிராமமறுமலர்ச்சி போன்ற திட்டங்களை முன்வைத்தார்கள்.

WACC போன்ற அமைப்புகள் இங்கே பிரம்மாண்டமாக வலைவிரிக்க ஆரம்பித்தது இக்காலகட்டத்திலேயே. அவற்றின் பணிகளுக்கு பெரும்நிதி வர ஆரம்பித்தது. அவற்றின் நிர்வாகிகள் மாபெரும் வணிகநிறுவனத் தலைவர்களின் வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சக்கரவர்த்திகளைப்போல அவர்கள் உலாவர தொழுதுண்டுபின்செல்லும் கூட்டம் ஒன்று உருவானது. அவர்களின் நேரடித்தலையீடு எழுத்தில், சிந்தனையில் நிகழ்ந்தது. ஒருபோதும் அப்படி ஒரு நிலை முன்பிருந்ததில்லை.

அது ஓர் ஆச்சரியமான திருப்பம்.. அதுவரை வலதுசாரிநிதி இடதுசாரிநிதி என்றிருந்த பிரிவினை மறைந்தது. வலதுசாரி ஏகாதிபத்தியத் தரப்பு இடதுசாரித்திட்டங்களும் இடதுசாரி கோஷங்களும் கொண்ட அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்கு நிதி வழங்கியது. அந்த அமைப்புகளுக்கு இடதுசாரிகள் சாரிசாரியாகச் சென்றார்கள். ‘இடதுமுகம் கொண்ட ஏகாதிபத்தியக் கருவிகள்’ என இந்தத் தன்னார்வக்குழுக்களைச் சொல்லலாம்.

இந்தத் தன்னார்வக்குழுக்கள் எல்லா தளங்களிலும் இலக்கியம் மற்றும் அரசியல் சிந்தனைச்சூழல்களில் செல்வாக்கைச் செலுத்தின. பல கருத்தரங்குகள் அவற்றின் ஆதரவில் நடத்தப்பட்டன. அவ்வாறு அவை ஒருங்கிணைத்த அரங்குகளில் பேசப்பட்ட விஷயங்கள் சில மாதங்களிலேயே சிற்றிதழ்களில் பேசுபொருட்களாக ஆனதை எவரும் சிற்றிதழ்களின் உள்ளடக்கத்தில் காணலாம். இவை எதுவும் ரகசியங்கள் அல்ல.

இவற்றின் இரட்டைநிலைபாட்டை நம்மால் இன்று தெளிவாகப் புரிந்துகொள்வது கடினம். எண்பதுகள் வரை அமெரிக்கநிதி பல்வேறு கல்வி-பண்பாட்டு அமைப்புகள் மூலம் இந்தியாவுக்கு வரும்போது அது இந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமானதாக இருந்தது. அதே அமெரிக்க நிதி அன்று WACC போன்ற கிறித்தவ அமைப்புகள் மூலம் வடகிழக்குக்கு வந்துசேரும்போது இந்தியதேசியத்துக்கு எதிரான போராட்டங்களை உருவாக்கியது. ஆனால் இடதுசாரி நிதி என்பது முழுக்கமுழுக்க இந்தியதேசிய ஒற்றுமைக்குச் சாதகமானதாகவே இருந்தது. ஏனென்றால் சோவியத் ருஷ்யா இந்தியா சிதிலமாவதை விரும்பவில்லை.

ஆனால் கெடுபிடிப்போர் முடிந்தபின் இடதும் வலதும் ஒன்றாயின. இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்தின் ஆயுதங்களான தன்னார்வக்குழுக்களுடனும் பல்வேறு கிறித்தவ மதமாற்ற நிதியமைப்புகளுடனும் சேர்ந்து செயல்படுவது பரவலாக ஆகியது. அந்த அமைப்புகள் அதற்கான வெளிமுகத்தை உருவாக்கிக்கொண்டன.

இந்த அமைப்புகள் நேரடியாகவே இந்திய அரசியல்சிந்தனைகளை வடிவமைக்க ஆரம்பித்த காலம் இதுதான். ஏகாதிபத்தியம் அதுவரை வடகிழக்கில் மட்டும் கடைப்பிடித்த கொள்கைகளை தெற்கிலும் ஆரம்பித்தது. இந்திய தேசியத்துக்கு எதிரான திரிபுகளும் அவதூறுகளும் வெறுப்புகளும் ஆய்வுகள் என்ற பேரில் ஊக்குவிக்கப்பட்டன. அந்த ஆய்வுநூல்கள் அவர்களால் இந்தியாவின் குரல்களாக உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டன. அந்த நூல்கள் அதன்பின் இங்குள்ள செய்தி ஊடகங்களில் மேற்கோள்களாகத் திரும்பிவந்தன. அவை நம் நாளிதழ்களையும் சிற்றிதழ்களையும் நிரப்பின.

இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் இன்று இந்திய ஊடகங்களில் ஒரு முக்கியமான ‘அஜெண்டா’வாக விளங்குகிறது. இந்திய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக, இந்திய முதலாளிவர்க்கத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக இப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டால் அதை இடதுசாரி நோக்கு என்று புரிந்துகொள்ளலாம். அது என்றும் இருந்தது.

மாறாக இவை இந்தியாவை ஒருங்கிணைத்துள்ள அடிப்படை தேசிய விழுமியங்களுக்கு எதிரான அவதூறுகளாகவும் திரிபுகளாகவும் இருந்தன. இந்திய தேசியம் என்பது இந்துதேசியம் மட்டுமே, அதில் பிற சிறுபான்மையினர் எல்லாருமே அன்னியர்கள், அடக்கப்படுபவர்கள் என்பது இவர்களின் தரப்பு. இந்துமதம் என்பது பிராமண, உயர்சாதியினரின் மதநம்பிக்கை மட்டுமே, பிற அத்தனைபேரும் இந்துமதத்தால் ஆக்ரமிக்கப்பட்டவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது இரண்டாவது தரப்பு.

ஆக, இந்தியாவின் தேசியம் என்பது ஒரு உயர்சாதிக்குழுவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆதிக்கமுறை மட்டுமே என்றும் இந்தியாவின் பெரும்பான்மையினரான மக்கள் அதை எதிர்த்துப் போராடவேண்டும் என்றும் தொண்ணூறுகளுக்குப்பின் உருவாகி வந்த இந்தப் புதிய கருத்தியல்தரப்பினர் அறைகூவுகிறார்கள். இந்துமதமே இந்தியா, ஆகவே இந்துமதமும் இந்தியாவும் அழிக்கப்படவேண்டியவை என்கிறார்கள். ‘இந்து இந்தி இந்தியா’ என்ற நூல் வழியாக எஸ்.வி.ராஜதுரை இந்த வெறுப்புக்குரலை, பிரிவினைக்குரலை தமிழகத்தில் கோட்பாடாக முன்வைத்தார். இன்று பல்வேறு வாய்கள் வழியாக ஒலிப்பது இந்த முன்னோடிக்குரல்தான்.

முழுக்கமுழுக்க மதமாற்ற நோக்கம் கொண்ட நிதியமைப்புகளின் தரப்பு இது. அவர்கள் உருவாக்க விரும்பும் நம்பிக்கையே இதுதான். இந்திய தேசியமும் இந்துமதமும் தங்களுக்கு எதிரானவை என்ற வெறுப்பை அடித்தள மக்களிடையே உருவாக்குவது. அக்குரல்களை முன்வைத்தவர்கள் அன்றுவரை தமிழகத்துக்குள் செயல்பட்ட சிறிய குரல்களாகவே இருந்தார்கள். நிதியமைப்புகள் அவர்களை உலகமெங்கும் கொண்டுசென்றன.இந்திய அரசியலில் பிற்படுத்தப்பட்டோர் பெரும் சக்தியாக எழுந்த காலகட்டத்தில் இந்தத் திரிபு நிகழ்த்தப்பட்டது என்ற யதார்த்தம் இவர்களின் பிரச்சாரத்துக்குத் தடையாக அமையவில்லை.

இந்துமதம் இந்து தேசியத்துக்கு எதிரான குரலுக்கு இந்திய சிந்தனையில் இடமில்லையா என்ன? கண்டிப்பாக உண்டு. நான் இந்துமதத்துக்கு எதிரான அயோத்திதாசரின் தாக்குதல்களை மிகமுக்கியமான கருத்துத்தரப்பாகவே காண்கிறேன். அத்தகைய மாற்றுக்குரல்கள் வழியாகவே ஒரு தேசியம் தன்னை சமநிலையில் வைத்துக்கொள்ளமுடியும். மாற்றிக்கொள்ளமுடியும். இந்தியா எல்லா மாற்றுக்குரல்களுக்கும் இடமளிக்கும் ஒரு விவாதவெளியாகவே இருக்கவேண்டும்.

அந்த மாற்றுக்குரல் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இருக்கவேண்டும். உண்மையான கொள்கையிலிருந்து பிறக்கவேண்டும். அந்த மாற்றுக்குரல்களுக்குப் பின்னால் ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் இருக்குமென்றால் அது மிக மிக கவனத்துக்குரியது. அந்நூல்களை அந்த ஏகாதிபத்திய நிறுவனங்களின் பின்னணியையும் கருத்தில்கொண்டே அணுகவேண்டும். நான் சொல்ல விரும்புவது அதை மட்டுமே.

இக்காலகட்டத்தில் தமிழகத்தின் இடதுசாரிக் குழுக்களிடையே உள்மோதல்கள் வலுத்தன. இந்த உள் மோதல்கள் மேற்குறிப்பிட்ட தன்னார்வக்குழுக்களின் செல்வாக்கால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என அவர்கள் இதழ்களிலேயெ சொல்லப்பட்டுள்ளது. அவர்களில் ஒருசாரார் தமிழ்த்தேசியம் நோக்கி நகர்ந்தனர். இந்தச் சிக்கல்களில் இடதுசாரிக்குழுக்களில் இருந்து விலகியவர்களை இந்தத் தன்னார்வக்குழுக்கள் உள்ளே இழுத்துக்கொண்டன. ஆகவே தன்னார்வக்குழுக்களைப்பற்றி இடதுசாரி இதழ்கள் கடுமையாக எதிர்வினையாற்றின.

இன்னொருபக்கம் ஃபோர்டு ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள். அவற்றையும் ஒற்றைப்படையாகச் சொல்வது கடினம். இந்திய அரசின் ஆதரவுடன் வெளிப்படையாகவே ஃபோர்டு ஃபவுண்டேஷன் இங்கே கலாச்சாரப்பணிகளில் ஈடுபட்டது. பல பணிகள் மதிக்கத்தக்கவை, முக்கியமானவை. குறிப்பாக நாட்டாரியல் போன்ற தளங்களில் அவர்கள் தகவல்சேகரிப்பு, நாட்டார் கலைகள் மீட்பு போன்ற பணிகளையே செய்கிறார்கள். உதாரணமாக, ஃபோர்டு ஃபவுண்டேஷன் இல்லாவிட்டால் ந.முத்துசாமி செயல்பட்டிருக்கமுடியாது. தெருகூத்துக்கு அவர் புத்துயிரளித்தார் என்பதை நாம் மறுக்கமுடியாது.

ஆனால் அதே ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதியால்தான் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நாட்டாரியல்துறை சனங்களின் சாமிகள் போன்ற கருத்தரங்குகளை பெரும் செலவில் நடத்தியது. இந்து மதத்தில் இருந்து பல்லாயிரம் வருடங்களாக பிரிக்கமுடியாமலிருந்துவரும் சிறுதெய்வங்கள் அனைத்தும் இந்துமதத்துக்கு வெளியே உள்ளவை, அவை இந்துமேலாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டவை என்ற கருத்தை இடதுசாரிகள் மனதில் திட்டவட்டமாக விதைத்தது. அந்தத் தெய்வங்களை வழிபடுபவர்கள் எவரும் இந்துக்களல்ல என்ற பெரும்பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

ஆரம்பத்தில் கல்வியாளர்களாலும் சிற்றிதழாளார்களாலும் ஆய்வரங்குகளில் கூறப்பட்ட இந்தக்கருத்து எளிய வடிவில் அடுத்து மதப்பிரச்சாரகர்களுக்குச் சென்று சேர்ந்தது. மோகன் சி லாஸரஸ் அல்லது சாது அப்பாத்துரை உரைகளில் இன்று அது பேசப்படுகிறது. மதமாற்றத்துக்கான இரைகளாக உள்ள அடித்தள மக்கள் மீதான உளவியல்தாக்குதலின் ஆயுதமாக அது உள்ளது.

ஃபோர்டு ஃபவுண்டேஷன் வடகிழக்குப்பகுதிகளில் இந்திய எதிர்ப்பரசியலின் அடித்தளங்களை உருவாக்கியது. அங்கே பழங்குடிப்பண்பாடுகள் நாட்டார் பண்பாடுகளை ஆராயும் பாவனையில் அவர்களிடம் அவர்களைப்பற்றிய திரிபுபட்ட சித்திரங்களை உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. உலகின் பலநாடுகளில் அவர்கள் பெரும் பண்பாட்டுத்திரிபு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இன்று பொதுவாகவே கருதப்படுகிறது.

தொண்ணூறுகள் வரை ஃபோர்டுஃபவுண்டேஷன் என்பது பொதுவாக கம்யூனிச எதிர்ப்பையே தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. இன்று அதன் செயல்கள் மிகச்சிக்கலான ஒரு வலைப்பின்னலாக உள்ளன. அதன் ஒட்டுமொத்த எதிர்மறைப்பங்களிப்பைப் பற்றி குற்றம்சாட்டப்பட்டால் உடனே அதன் நல்ல பங்களிப்புகள் பதிலாகச் சுட்டப்படும்.

ஆனால் பொதுவாகத் துறைசார்ந்தவர்கள் ஃபோர்ட் ஃபவுண்டேஷனை எப்போதும் ஐயத்துடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். அதிலும் சென்ற ஐந்தாண்டு காலமாகவே ஃபோர்டு ஃபவுண்டேஷனைப்பற்றிய ஆழமான விமர்சனங்கள் கண்ணுக்குப்படுகின்றன.அதன் பண்பாட்டு நடவடிக்கைகளில் சாதாரணமாகப் பங்களிப்பாற்றும் சேவையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கலையார்வலர்களுக்கும் அந்தப் பின்னணியே புரியாமலிருக்கலாம்.

இந்த நிதியுதவிகளை ஐந்தாம்படைகள் மட்டுமே பெறுகின்றன என்று நான் சொல்லவரவில்லை. இதெல்லாம் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன, இவற்றுக்குப் பிரதியுபகாரமாக என்ன செய்யப்படுகிறது, இவை ஏன் இத்தனை பூடகமாக கொடுக்கப்படுகின்றன, இந்தத் தொடர்புவலை எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். ஃபோர்டு ஃபவுண்டேஷன் அமெரிக்காவில் மிக முக்கியமான ஒரு நலம்நாடும் நிறுவனம் என்கிறார்கள். அது பிறநாடுகளில் செய்யும் செயல்களுக்கு வேறு பின்னணி உண்டா?

உதாரணமாக, காலச்சுவடு நிறுவனம் புதுமைப்பித்தன் ஆவணக்காப்பகத்தை ஓர் அன்னிய பண்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆரம்பித்தது. ஆனால் அந்நிறுவனத்தின் பின்னணி ஃபோர்டு ஃபவுண்டேஷன் என்னும்போது காலச்சுவடு எடுக்கும் இந்திய எதிர்ப்பரசியல் நிலைபாடுகளை அதையும் கணக்கில்கொண்டே யோசிக்கவேண்டும், நான் சொல்ல வருவது அதைப்பற்றி மட்டுமே.

நிதியுதவிகளின் பின்னணி வெளிப்படையாக பேசப்படவேண்டும். நிதியுதவிகளையும் கணக்கில்கொண்டே அவை உருவாக்கும் கருத்துக்களை விவாதிக்கவேண்டும்.

*

நான் இந்த நிதிப்பின்னணியை இந்த விஷயத்தை கவனப்படுத்த மட்டுமே சொல்கிறேன். இங்கே கருத்துக்கள் உருவாவதன் பின்னணியைப் பார்க்காமல் விவாதிப்பதில் பொருளில்லை என்பதையும் கண்ணுக்குத்தெரியாத ஒரு பெரும் சக்தி இந்த கருத்தியல் விவாதங்களுக்குள் காய்நகர்த்துகிறது என்பதையும்தான். இப்போது மிகமிகக் குறைவான தகவல்களுடன் வெற்று ஊகங்களுடன் இதை நான் சொல்லலாம். ஆனால் இந்தக் கவனம் வரும்காலங்களில் அதிகரிக்கும். இன்னும் அதிக தகவல்கள் வெளிவரும். என்னுடையது ஒரு முன்னோடிக்குரல்.

இந்தக்குரல் எதிர்கொள்ளப்பட்ட விதம் நான் எதிர்பார்த்தது போலத்தான். நான் தமிழில் கருத்துருவாக்கத்தின் பின்னணியில் நிதியுதவிகள் உள்ளன\ என்று வெளிப்படையாக ஏற்கனவே பேசப்பட்ட தகவலைச் சொல்லி கருத்துக்களுடன் சேர்த்து அதைப் பற்றி யோசிக்கவேண்டும் என்கிறேன். நான் அப்படி ஊகிப்பதற்கான முதற்கட்ட ஆதாரத்தையும் அவ்வமைப்புகளையும் சுட்டிக்காட்டுகிறேன். அந்தக்குற்றச்சாட்டை எனக்கு முன்னால் முப்பதாண்டுகளாகவே எப்படி இடதுசாரிகளே சொல்லிவந்திருக்கிறார்கள் என்கிறேன். அப்போதுகூட இந்தத் தெளிவற்ற ஆதாரமென்பது ஒரு ஊகத்துக்கான முகாந்திரமே என்றும், இந்த விஷயத்தில் இப்போது உறுதியான ஆதாரங்கள் முன்வைக்கப்படமுடியாதென்றும் சொல்கிறேன்.

அதற்குப்பதிலாக என்னிடம் உறுதியான ஆதாரங்களையே கேட்கிறார்கள். எப்படிப்பட்ட ஆதாரங்கள்? நிதி பெற்றமைக்கு ஆவணச்சான்றுகள். அப்படி ஆவணச்சான்று கிடைத்தால்கூடப் போதாது, இந்த நிதியினால்தான் இந்தக் கருத்து எழுதப்பட்டது என்று புறவயமாக நிரூபிக்கவும் வேண்டும். இல்லையேல் அது அவதூறு!

நான் முன்வைத்த மையமான விஷயத்தை அப்படியே தாண்டிச்சென்று ஏன் முதலில் நினைவுப்பிழையாகச் சொன்னாய் என்கிறார்கள். நீ மட்டும் அரசாங்க ஊதியம் பெறவில்லையா என்கிறார்கள். ஃபோர்டு ஃபவுண்டேஷன் நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறதே என்கிறார்கள். ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதி பெற்ற அத்தனைபேரையும் தனித்தனியாக கட்டுரை எழுதி கண்டித்துவிட்டு பேசு என்கிறார்கள். மொத்தத்தில் பிற பிரச்சினைகளில் ஆழ ஆழச்சென்று வேரைத் தேடுபவர்கள் இதில் மட்டும் வைக்கோல் போர்களை மேலே மேலே அள்ளிப்போட்டு மூட முயல்கிறார்கள்.

கட்டக்கடைசியாக எனக்குச் சொல்லப்படும் பதில் 1992-இல் எனக்கு அளிக்கப்பட்ட கதா விருது தந்த அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் நிதியை எப்போதோ பெற்றிருக்கிறது என்பது மட்டுமே. கதா விருது மத்திய அரசு உயரதிகாரியாக இருந்த தர்மராஜன் அவர்களின் மனைவி கீதா தர்மராஜனின் அமைப்பு. மத்திய அரசின் சில சமூகநலத்துறை நிதிகளால் அமைக்கப்பட்டது. அந்த விருது இந்தியாவின் பதினெட்டு மொழிகளிலும் உள்ள எழுத்தாளர்களுக்கு ஐந்தாறுவருடம் வழங்கப்பட்டது.

முதல்விருது சுந்தர ராமசாமிக்கு. அடுத்தவிருது எனக்கு. என்னுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட பல ‘முற்போக்கு’க் கலைஞர்களும் பரிசுபெற்றனர். விருதுடன் ரூ 2000 அளிக்கப்பட்டது. போக்குவரத்துச்செலவு இந்திய ரயில்வே இலவசமாக அளிக்க தமிழ்நாடு அரசு மாளிகை தங்கும் வசதி அளிக்க இந்திய ஜனாதிபதியால் அவ்விருது வழங்கப்பட்டது. ஏதோ ஒரு திட்டத்துக்காக ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதியுதவியை கதா பெற்றிருப்பது இருபது வருடம் கழித்து இன்று தெரியவருவதனால் நானும் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் உள்ளூர் முகவர்களும் நிகரானவர்கள் என்று ஒருவர் சொல்வாரென்றால், மாபெரும் மதமாற்ற தன்னார்வக்குழுக்களின் நிதி பெறுவதை அதைக்கொண்டு நியாயப்படுத்துவாரென்றால், அது மட்டுமே அவர்களின் தரப்பு பதில் என்றால் என்ன சொல்ல?

ஒருவர் அவர் தொடர்புகொள்ளும் ஓர் அமைப்பு, அல்லது மனிதர் ஃபோர்டு ஃபவுண்டேஷனுடைய அல்லது வேறு தன்னார்வக் குழுக்களுடைய ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்பதை எப்படி அறியமுடியும்? ஒரு கட்டத்தில் அறிந்தபின் என்ன செய்யமுடியும்? ஆச்சரியப்படலாம். வருத்தப்படலாம். ஃபோர்டு ஃபௌண்டேஷன் ஆதரவில் எம்.டி.முத்துக்குமாரசாமி நடத்திய நாட்டார்கலைகள் பற்றிய ஒரு திருவிழாவில்கூட நான் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறேன் – சொந்தச்செலவில். அவர் மீதான நம்பிக்கையும் அந்தப்பணி மீதான ஈடுபாடுமே காரணம். அவ்வமைப்பின் பின்னணி பின்னர் தெரியவந்தால் என்ன செய்யமுடியும்? அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதனால் நானும் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் ஆதரவாளர் என்றா அர்த்தம்?

ஆனால் சொந்தச்செலவில் நாட்டார்கலைகளை மீட்கப்போராடும் ஹரிகிருஷ்ணன் தான் எனக்கு முக்கியமானவர். அவருக்கே நான் என்றும் என்னுடைய அதிக கவனத்தைக்கொடுப்பேன். எம்.டி.எம்மின் கருத்துக்களை நான் இப்போதும் கவனிப்பேன், ஆராய்வேன். கொஞ்சம் எச்சரிக்கையுடன். அவ்வளவுதான்.

அப்படி ஓர் ‘உதவிபெற்ற’ ஒரு அமைப்புடன் ஒருவர் தொடர்பு கொள்வதும், அந்த அமைப்பு மனிதர்கள் நேரடியாக பிராஜக்ட் சமர்ப்பித்து அலைந்துதிரிந்து நிதிபெற்று அதன் விதிகளுக்குட்பட்டு ‘ஆராய்ச்சி’ செய்வதும் சமம்தான் என வாதிடும் புத்திசாலித்தனங்கள் ஒருபோதும் வாசகனின் மனதுக்குள் செல்லாது. முன்னரே ஒரு தரப்பை எடுத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே சால்ஜாப்புகளுக்குப் பயன்படும்.

என்னதான் ஆதாரத்துடன் எவ்வளவுதான் முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் தங்கள் நிலைபாடுகளில் உறுதியாக இருப்பவர்கள் அதை கவனிக்கப்போவதில்லை. தங்கள் சொந்த காழ்ப்புகள் மற்றும் கருத்துக்களுடன் வேண்டியவர்களை காக்கவும் வேண்டாதவர்களை வசைபாடவும் மட்டுமே முயல்வார்கள். இவர்கள் எவருக்கும் இதில் ஏதாவது உண்மை இருக்குமா என்றே தோன்றவில்லை. உண்மையாக இருந்தால் என்னாகும் என மனம் பதைக்கவில்லை.

மாறாக என்னை என் சொற்களைக்கொண்டு எப்படி மடக்குவது, என்ன எதிர்வாதங்களை கண்டுபிடிப்பது, எதை எதனுடன் முடிச்சுப்போடுவது என்ற பதற்றம் மட்டுமே இருக்கிறது. வாதிட்டு சமாளிக்கும் முனைப்பு மட்டுமே வெளிப்படுகிறது. இதுவே இவர்கள் யாரெனக் காட்டுகிறது. இவர்களுக்காக அல்ல, இதை பொதுவாசகர்களுக்காக எழுதியிருக்கிறேன்.

இந்தத் திரிபுவாதம் அல்லாமல் இந்த அடிப்படையான வினாவுக்கு மனசாட்சியின் குரலில் அமைந்த ஒரேயொரு பதில்கூட எழவில்லை என்பதே நான் சொன்னவற்றில் உள்ள உண்மைக்கான சான்று.

இது ஒரு அபாயகரமான புள்ளி. இதைத் தொட்டுவிட்டேன் என்பதனால் நான் அவதூறுகளை திரிப்புகளை தொடர்ந்து சந்திக்கவேண்டியிருக்கும். வசைகளையும் நக்கல்களையும் கேட்கவேண்டியிருக்கும். அது இன்னும் கொஞ்சநாள் இணையத்திலும் சிற்றிதழ்களிலும் நிகழும். நடக்கட்டும். அது தெரிந்தே இதில் இறங்கினேன்.

சரிதான், என்னைப்பற்றி இனி என்ன புதியதாகச் சொல்லமுடியும்? வலதுசாரி, இந்துத்துவ, தேசியவெறிகொண்ட, பிற்போக்கான,சாதியவாதியான, மனக்கோளாறுகொண்ட, தனிமனித அறமே இல்லாத, காப்பியடித்து கதைகளை எழுதக்கூடிய, ஆணவமும் தன்முனைப்பும் கொண்ட, விவாதங்கள்மூலமே நிலைநிற்கக்கூடிய, பொய்களை மட்டுமே சொல்லக்கூடிய, சுயமோகம் கொண்ட, தமிழ்விரோதி –அவ்வளவுதானே, அப்படியே வைத்துக்கொண்டு இந்த விஷயத்தை மேலே பேசுவோம்.

இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். நான் முன்வைத்த இந்தப்பிரச்சினை மட்டும் முச்சந்தியில் ஒரு பாறாங்கல் மாதிரி கிடக்கும். அது கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் July 2, 2012

குறிப்பிடப்படும் கட்டுரைகள்

நிதிப்பிள்ளைகளைப்பற்றி…

அன்னியநிதி ஒரு வரைபடம்

பழைய கட்டுரைகள்

அன்னியநிதி பற்றி…


போர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்

சிஐஏவும் ஃபோர்ட் பவுண்டேஷனும் மாற்று ஊடகங்களில் – இன்னொரு கட்டுரை

[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]


இந்திய அரசும் ஃபோர்டு பவுண்டேஷனும்

அன்னியந்தி கடைசியாக

ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்

அந்நியநிதி ஓர் அறிக்கை

முந்தைய கட்டுரை‘நிதிப்பிள்ளை’களைப் பற்றி…
அடுத்த கட்டுரைகூந்தல்பனை- கடிதம்