எஸ்.வி.ராஜதுரை கடிதம்

ஜெயமோகன்

என் மீது நீங்கள் செய்துள்ள அவதூறுகள், எனது எதிர்வினைகளுக்கான உங்கள் பதில்களின் மூலம் என்னென்ன அவதாரங்கள் எடுத்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

10.6.2012இல் உங்கள் வளைத்தளத்தில் எழுதியவை:

1.“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”.

இந்த அவதூறுக்கு நான் ஆற்றிய எதிர்வினை:

“அவருக்கு (jஜெயமோகனுக்கு) நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும். அவருக்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் தர விரும்புகிறேன்.”

இந்த எதிர்வினைக்கு நீங்கள் எழுதிய பதிலுள்ள முக்கிய அம்சங்கள்:

அ.“நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?நீங்கள் மேற்கோளாகச் சுட்டிய வரிகளில் உள்ளது என்ன? காலச்சுவடு பெற்ற ஒரு நிதியுதவி உண்மையில் ஃபோர்டு ஃபவுண்டேஷனால் அளிக்கப்பட்டது என எம்.டி.முத்துக்குமாரசாமி வெளிப்படுத்தியிருக்கிறார். அதைப்போல பிற நிதியுதவிகளைப்பற்றியும் அவர் வெளிப்படுத்துவாரென்றால் வாசகர்களுக்கு உண்மைகளை உணர வாய்ப்பு என்று சொல்கிறேன்.”.

ஆ..“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.அது அந்த அமைப்பின் நிபந்தனை. நான் நீங்கள் நிதி பெற்றதாக சுட்டிக்காட்டியது அதைத்தான். நீங்களும் வ.கீதாவும் பெற்றுக்கொண்ட பிற உதவிநிதிகள் இருக்கலாம். நீங்களே சொல்ல நேர்ந்த இதை மட்டுமே இப்போதைக்கு நான் ஆதாரமாகக் கொள்கிறேன்… இதை புதியதாகவும் சொல்லவில்லை. தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.”

3. இது அப்பட்டமான பொய் என்பதை நானும் ‘விடியல்’சிவாவும் சுட்டிக்காட்டிய பிறகு,16 ஆண்டுகளாக நீங்கள் சொல்லிவந்ததாக நீங்களே ஒப்புக் கொண்ட பொய்க்கு விடியல் சிவாவிடம் மன்னிப்பும் வருத்தமும் உங்கள் வளைத் தளத்தில் 24.6.2012 அன்று தெரித்திருக்கிறீர்கள்.

4.மேற்சொன்ன பொய்யைச் சுட்டிக் காட்டிய எனது கடிதத்தில் நானும் வ.கீதாவும் எழுதிய ‘Towards a Non Brahmin Millennium: From Iyothee Thass to Periyar’ என்னும் ஆங்கில நூலின் முதல் பதிப்பில் எங்கள் முன்னுரையிலுள்ள கீழ்க்காணும் வரிகளை உங்களுக்குச் சுட்டிக்காட்டியதே நான் தான்: None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work”.

மேற்சொன்ன வரிகளை எடுத்துக்காட்டிய பின் நான் எழுதியிருந்தேன்:

“ஜெயமோகன், இந்தத் தகவலுக்கு உங்கள் கற்பனை வளத்துக்கேற்ப விளக்கம் தந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. எனினும், எனது முதல் எதிர்வினையில் நான் கேட்ட கேள்வியை நான் மாற்றிக் கொள்ளவில்லை: “ஜெயமோகனுக்கு நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும்..உங்களது அவதூறை சட்டரீதியாக எதிர்கொள்ள எனக்கு இன்னும் வாய்ப்பி¢ருக்கிறது”

5.மேற்சொன்ன தகவலைத் தந்தது நானேதான்.ஆனால், நிங்கள் மேற்சொன்ன எங்கள் புத்த்கத்திற்குப் பின்னால் கிறிஸ்துவ சரவதேச ஏகாதிபத்திய வலைப்பின்னல் இருப்பதாகவும் அதனால்தான் இந்த புத்தக்த்திறகான ஆராய்ச்சி, வெளியீடு ஆகியவற்றுக்கு World Association of Christian Communication செய்துள்ளது என்றும் மிகப் ‘பெரிய புலனாய்வு’ அறிக்கையை உங்கள் வளைத்தளத்தில் 24.12.2012 அன்று வெளியிட்டிருக்கிறீர்கள்.

அதாவது, முதன்முதல் நீங்கள் வைத்த குற்றச்சட்டான,(‘·போர்டு ·பவுண்டேஷன் அல்லது இது போன்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து) “தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்” என்பதை உங்கள் ‘புலனாய்வு அறிக்கை’யின் மூலம் நிரூபித்துவிட்டதாக உரிமை கொண்டாடுகிறீர்கள்.

உங்களுக்கு நானே சுட்டிக் காட்டிய ஒரு வரியை மட்டுமே கொண்டு பெரும் புனைகதை படைக்கும் நீங்கள், எங்களது ஆங்கிலப் புத்த்கத்தில் ஒரு பக்கத்தைக்கூடப் படித்ததில்லை என்பதை மேற்சொன்ன வரிகளுக்கு மேலே நாங்கள் எழுதியுள்ள கீழ்க்காணும் வரிகளைப் பற்றி நீங்கள் மெளனம் சாதித்துள்ளதிலிருந்தே ஊகித்துக் கொள்ள முடியும்:

“When it seemed that we could not be able to finish the book because of financial constraints, Ravi Shankar and Nirmala were helpuful in putting us in touch with people who would support us.Anupama Rao,M.Sundaramourthy,Kumar N.Kkumarappan, Jaya Thirumalai and Jeyanth and Saroj Thirumalai were there to help. Palladam Manickam, Kavithasaran,Kurinji,”Nirapirigai’ D. Ravikumar, Subaveerapandian, Senthil, Anuradha, Sudha de, D.Geetha,the P.Sivagnanam, Ranjani and Ravi (from Switzerland), Aaranamuruval, Inquilob, V.Raghavan (Royan),late Fr Poornam de Mel, Fr.Manuel Alphonse, D.L.Sheth, Sudarshan and Veli Rangarajan: we thank them for their faith in our work and their consistent support.

சாதாரண அலுவலக ஊழியர்களாகவோ, வங்கி ஊழியர்களாகவோ, கல்லூரிப் பேராசிர்ரியர்களாகவோ,தொழிற்சாலைச் தொழிலாளர்களாகவோ இருந்த நண்பர்கள்தான் இந்தப் பட்டியலில் மிகப் பெரும்பான்மையினர்.இதில் பார்ப்பனர்களிலிருந்து ஒடுக்கப்பட்ட தலித் சாதிகளைச் சேர்ந்தவர்கள் வரை பலரும் அடங்குவர். எங்கள் நண்பர்களிl இரு கத்தோலிக்கப் பாதிர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் தலித். கத்தோலிக்கத் திருச்சபயிலுள்ள சாதியம், சாதி ஒடுக்குமூறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், இந்த நூல் வெளிவருகையில் உயிரோடு இல்லை

ஆகவே, எங்கள் ஆராய்ச்சிப் பணிகள் மேற்சொன்ன அனைவரின் ஒத்துழைப்புடனேயே சாத்தியமாகியது – தனியொரு நிறுவனத்தின் ஒத்துழைப்பின் மூலம் அல்ல.

‘சாரசரி வாச்கருக்குக் கொஞ்சம் பிரமிப்பு’ஊட்டுகிற அளவுக்கு எனக்கு நிதி உதவி கிடைத்துள்ளதாகவும் கூறும் நீங்கள் மேற்சொன்ன வரிகள் உள்ள பத்திக்கு மேலே உள்ள கீழ்க்காணும் வரிகளையும் பார்ப்பது நல்லது: “This manuscript was written, re-written ,lost and retrieved from a temperamental computer.We are grateful to Gita Wolff for sparing us her office computer to finish this book and for all the good cheer which lightened a hard day’swork”

சராசரி வாசகருக்குக் கொஞ்சம் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு நான் நிதி உதவி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்: அந்த நிலை இருந்திருக்குமானால், ஒரு கம்பூட்டடரைக்கூடவா என்னால் வாங்கியிருக்க முடியாது?

மேற்சொன்ன ஆங்கில நூல் கோல்கத்தாவிலுள்ள ‘சாம்யா’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளருக்கும் எங்கள் நூலில் நன்றி கூறியுள்ளோம். ஆனால் WACC நிறுவனத்தின் நிதி உதவியுடன்தான் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்

மேலும், விடியல் சிவாவுக்கு நீங்கள் உங்கள் வளைத்தளத்தில் 24.6.2012 அன்று எழுதியுள்ள பதிலில், சென்ற ஆண்டில் மட்டும் எனக்குக் கிடைக்கவிருந்த விருதுகளையும் நிதிகளையும் நான் வங்க மறுத்தது குறித்து நீங்கள் எழுதுகிறீர்கள்: “விருதுகளை ஏற்பதில் அவருக்கு பல தோரணைகள் தேவையாக இருக்கலாம்.”அப்படிப்பட்ட தோரணைகளை ஏற்படுத்திக் கொள்ளும் விருப்பம் எனக்கு இருந்திருக்குமேயானால்,அந்த விருதுகள் குறித்தும் அவற்றை நான் வாங்க மறுத்தது குறித்தும் எங்கேனும் நான் பதிவு செய்து விளம்பரம் தேடி இருக்க முடியும். மிக நெருக்கமான நண்பர்களைத் தவிர வேறு யாருடனும் பகிரங்கமாக ஒரு போதும் நான் பேசியிராத இந்தத் தகவல்களை ‘விடியல் சிவா’ தான் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.வாழ்க்கையின் இறுதிக் கணங்களில் இருக்கின்ற அவருக்கு என்னால் மன வேதனை ஏற்பட்டுள்ளதற்காக வருந்துகிறேன்.

5.இது ஒருபுறமிருக்க, வி;டியல் சிவாவுக்கு எழுதிய பதிலில் “எஸ்.வி.ராஜதுரை பற்றிய உங்கள் கருத்துக்களை நான் ஏற்கவில்லை. அவர் நீங்கள் சொல்ல நினைக்கும் பொருளியல் நிலையும் இல்லை என்பதை நான் அறிவேன். எண்பதுகளின் இறுதியில் அவரது பொருளியல்நிலை எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என அறியாதவனல்ல நான்.”

எந்த ஆதாரத்தின் அடிப்படையின் கீழ் இந்தத் தான்தோன்றித்தனமான கருத்துகளை உங்களால் கூற முடிகின்றது. நீங்கள் என்ன உளவுத் துறை போலீஸா” வருமான வரி அதிகாரியா? அவர்களாலும்கூட தக்க சான்றுகளின் அடிப்படையில்தானே இது போன்ற கருத்துகளைச் சொல்ல முடியும்?

6. உங்கள் வளைத்தளத்தில் 24.6.2012 அன்று நீங்கள் எழுதியுள்ள ‘எஸ்விஆருக்கு உள்ள சிக்கல்கள்’ என்னும் கட்டுரையில் ‘உயிர் எழுத்து’ மாத ஏட்டின் ஆசிரியர் சுதீர் செந்தில் ஜூன் 2012 இதழில் எழுதியுள்ள கட்டுரைக்குப் பதில் சொல்கையில் நீங்கள் எழுதுகிறீர்கள்:

‘அவர் (அதாவது நான்) வழிநடத்தி வெளியாகும் ‘உயிர்எழுத்து’ மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்கு பதிலாக முறிந்தபனை நூலில் இருந்து சில பகுதிகளும். அதனுடன் அவ்விதழின் ஆசிரியர் சுதீர் செந்தில் என்னை கடுமையாக வசைபாடி எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது.இதழ் வந்த சிலநாட்களுக்குள் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. செல்பேசியை எடுத்ததுமே காது கூசும் வசைகள். வேறுவேலையில் இல்லை என்றால் வசைபாடுபவர்கள் அனைவரிடமும் நான் பேசினேன். முக்கால்வாசிப்பேருக்கு நான் யாரென்றே தெரியவில்லை. என்னை இதழாளர் என்று நினைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. என்றுகூட ஒருவர் சொன்னார்.என்னுடைய எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன். ‘எஸ்.எம்.எஸ். வந்திச்சி. கூப்பிட்டு கண்டியுங்கன்ன்னு சொன்னாங்கஸஅதான்’ என்றார்கள். அவர்களுக்கு உயிரெழுத்து இதழோ எஸ்.வி.ராஜதுரையோ சுதீர்செந்திலோ கூட யாரென்று தெரிந்திருக்கவில்லை.கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளுக்கும் என்னுடைய செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்கள் எஸ்.வி.ராஜதுரையும் சுதீர் செந்திலும். கண்டிக்கும்படி கோரி தொலைபேசியில் மன்றாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டுவாரம் இருநூறு அழைப்புகள் வரை வந்தன. வசைகளை கேட்பதை ஒரு பயிற்சியாகவே வைத்திருக்கிறேன் என்பதனால் நான் அதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை.”

நான் எந்தெந்த வகையில் ‘உயிர் எழுத்தை’ வழி நடத்துகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? எனது கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுவதாலேயே அந்த ஏட்டை நான் வழி நடத்திச் செல்வதாகக் கருத முடியுமா?

எனினும் இது ஒரு பெரிய விடயமல்ல.ஆனால்,உங்களை வசைபாடுவதற்காக உங்கள் செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக நான் எந்தெந்தெந்த தமிழ் அமைப்புகளுக்கு அனுப்பினேன் என்பதைத் தக்க ஆதாரங்களுடன் உங்களால் மெய்ப்பிக்க முடியுமா? நீங்கள் போலிஸ் துறையின் e-குற்றப் பிரிவு அதிகாரியா?

அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது தொடுப்பதன் மூலம் நீங்கள் என்ன பயன் அடைகிறீர்கள்?

உங்களுடன் நான் எதிர்வினை புரிவது ஒரு தனிமனிதனாக நின்றுதான்.’விடியல் சிவா’ உள்ளிட்ட யாரையும் நான் துணைக்கழைக்க வில்லை. என் பொருட்டு யாரும் இந்த சக்தியில் சிக்கிக் கொள்வதை நான் விரும்புவதில்லை.

கூடங்குளம் போராட்டம் குறித்த தங்கள் நிலைபாட்டைத் தவறாகவும் தலைகீழாகவும் புரிந்து கொண்டது பற்றி நீங்கள் சுட்டிக் காட்டியபோது, அதற்கு நான் பதில் சொல்வதைத் தட்டிக் கழித்துவிட்டதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் என் மீது செய்துள்ள மிக மோசமான அவதூறின் காரணமாக ஒரு சாதாரணமான மனிதன் என்னும் முறையில் எனக்கு ஏற்பட்ட ஆத்திரமும் மன உளைச்சலும் நான் செய்த தவறை எனக்கு உரைக்காமல் செய்துவிட்டன. அதற்காக வருத்தம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.கூடங்குளம் போராட்டத்தைக் கொச்சைப்டுத்துவர்கள் மீதான உங்கள் விமர்சனத்தை ஆர்எஸ்எஸ், தினமலர் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்துங்கள்

எனினும், நீங்கள் என் மீது சுமத்தியுள்ள கீழ்க்காணும் அவதூறுகளைத் தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும்:

1 சராசரி வாசகருக்குக் கொஞ்சம் பிரமிப்பூட்டும் அளவுக்கு .·போர்ட் ·பவுண்டேஷனிடமிருந்தோ வேறு எந்த வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தோ (WACC உட்பட) நான் பெற்ற நிதி உதவி எவ்வளவு? அந்த நிதி எனது வாழ்க்கை மேம்பாட்டிற்கு எப்படி உதவியுள்ளது?

2, WACCயின் நிபந்தனைக்குட்பட்டு ‘Towards a Non Brahmin Millennium:From Iyoothe Thaass என்னும் நூல் எழுதப்பட்டுள்ளதா? அப்படியாயின் அந்த நிபந்தனைகள் யாவை?

3.அப்படி சில நிபந்தனைகளுக்குட்பட்டு எழுதப்பட்டதாக உங்களால் சொல்லப்படும் அந்த நூல் இந்திய/தமிழ் சமுதாயத்திற்கு இழைத்த தீங்குகள் யாவை?

4.அந்த நூலில் இந்திய அரசுக்கு விரோதமான கருத்துகளோ, ஏகாதிபத்தியத்துக்கு சார்பான கருத்துகளோ உள்ளனவா?

5.1980களின் இறுதியில் எனக்கு இருந்த பொருளாதார நிலை என்ன? இப்போது எனது பொருளாதார நிலை என்ன? சட்டவிரோதமாகவோ, சட்டத்துக்கு உட்பட்டோ நான் திரட்டிய செல்வமும் பொருளியல் வசதிகளும் யாவை?

6.உங்களை மிரட்டுவதற்காக நான் எந்தெந்த தமிழ் அமைப்புகளுக்கு உங்கள் செல்பேசி எண்ணை குறுஞ்செய்திகளாக அனுப்பினேன்?

இவற்றை மெய்ப்பிப்பதற்க்காக ‘தகவல் அறியும் உரிமை’, போலிஸ் புலனாய்வுத் துறை முதலிய அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது.

தக்க சான்றுகளுடன் வாருங்கள். காத்திருக்கிறேன்.

எஸ்.வி.ராஜதுரை 25.12.2012

எஸ்.வி.ஆர்,

நான் சொல்லிய விஷயங்கள் பலகாலமாக நான் விசாரித்து அறிந்தவை. அவற்றை என் மீதான நம்பிக்கையில் சொல்லியிருக்கிறேன், அவை ஓர் பொதுக்கவனத்தைப்பெறவேண்டுமென்பதற்காக. நம் கருத்துக்களின் பின்னணி வாசகர்களுக்கு தெரியவரவேண்டுமென்பதற்காக. இங்கே தனிமனிதர்கள் அல்ல கருத்துகளும் அவற்றின் பின்னணியுமே முக்கியம்

உயிர்எழுத்துவில் உங்கள் பங்கென்ன என்பது எவருக்கும் அதை வாசித்தாலே தெரியும். அதில் உங்கள் பங்களிப்புக்கு நான் கேட்டதும் உயிரெழுத்து ஆதாரக்கடிதம் அளிக்கப்போகிறதா என்ன? உயிர்எழுத்து குறுஞ்செய்திகள் அனுப்பியதை நிரூபிக்கவேண்டுமென்றால் என்னை வசைபாடியவர்களிடம் நான் ஆதாரம் கோரவேண்டும். இவற்றை புறவயமாக நிருப்பிப்பதற்கான அறைகூவல் மூலம் நான் எழுப்பிய அறம்சார் வினாக்கள் மழுங்கிவிடுவதில்லை.

WACC யின் ஊடக- வரலாற்றுக் கொள்கைகளுக்கும் உங்கள் ‘இந்தி இந்து இந்தியா’ முதல் Towards a Non Brahmin Millennium:From Iyoothe Thaass வரையிலான பெரும்பாலான நூல்களில் உள்ள அதி தீவிரமான இந்திய தேசிய எதிர்ப்புக்குமான தொடர்பையும் வாசகர்களே ஊகித்துக்கொள்ள முடியும். அந்நூல்களை வாசிக்கையில் அவற்றின் பின்னணி தொடர்புகளும் அத்தொடர்புகள் மூலம் அந்நூல் கொண்டுள்ள சர்வதேசக்கவனமும் வாசகர்களால் கணக்கில்கொள்ளப்படவேண்டும் என்பதே என் தரப்பு.

எந்த நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறதோ அந்த நூலில் உள்ள அந்த கருத்து அவர்களிடமிருந்து இப்படித்தான் வந்தது என்றெல்லாம் ‘நிரூபிக்க’ கோருகிறீர்களென்றால் அது சாத்தியமில்லை என நீங்களும் அறிவீர்கள். இத்தகைய வாதகதிகளுக்குப் பொருளேதுமில்லை. இவை உங்களை பிடிவாதமாக ஆதரிக்க விரும்புபவர்களுக்கு நிறைவளிக்குமென்றால் நல்லதே.

நான் கேட்கும் வினா இதுதான். அதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். காலச்சுவடு பெற்ற ஒரு பண்பாட்டுநிதி உண்மையில் ஃபோர்டு நிறுவனத்தின் நிதி என தெரியவந்துள்ளது. இதேபோல பலவகைகளில் நீங்கள் உள்ளிட்ட பலர் பெற்ற நிதியின் ஆதாரமும் வெளிவந்தால் நல்லது, அவ்வளவுதான் நான் சொன்னது.

உங்கள் மீது நான் கொண்ட ஐயமும் குற்றச்சாட்டும் உங்கள் தோழர்களால் இருபத்தைந்தாண்டுகளாக அச்சில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு வருபவைதான். அதை நான் திருப்பிச்சொல்லியிருக்கிறேன், அவ்வளவே.

ஆம், நான் போதாத தகவல்களுடன் அங்கே இங்கே முட்டி மோதித்தான் இந்த வினாவை எழுப்புகிறேன். நீங்களோ உங்கள் நண்பர்களோ சொன்ன சிலவரிகளே எனக்கு ஆதாரம். ஏனென்றால் இதற்குள் சாதாரணமாக புகமுடியாது. சரியான தகவல்கலையும் எளிதாக பெறமுடியாது. நான் சொன்னதில் உள்ள ‘தர்க்கப்பிழைகளை’ நம்பி நீங்கள் மேலே விவாதிப்பதாக இருந்தால் அது உங்கள் விருப்பம். ஆனால் இது தத்துவ விவாதம் அல்ல என்பதே என் எண்ணம்

உங்கள் நூலில் உள்ள அந்த நன்றியறிவிப்பு வரியை WACC என்னும் பேரமைப்பின் திட்டங்களுடன் இணைத்து வாசித்தால் எவருக்கும் புரியக்கூடிய விஷயம். நீங்கள் கேட்பது நீங்கள் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதற்கான முறையான ரசீது என்றால் தேடிப்பார்க்கிறேன் என்பதே என் பதில்.


நம் சிந்தனைகளை நாம் எழுதும்போது மதப்பரப்பு நோக்கமுள்ள மாபெரும் அன்னிய நிதியமைப்புகள் அங்கே என்ன பங்களிப்பாற்றுகின்றன? அவற்றின் நோக்கமென்ன?
— என்று நான் கேட்பதை முன்னரே அரசியல் தரப்பை எடுத்துக்கொண்டு நிலைகொள்ளாத வாசகர்கள் யோசிக்கக்கூடும். அந்த அன்னியத்தரப்பை கருத்தில்கொள்ளாது நீங்கள் உங்கள் நூல்களில் இந்தியதேசியம், இந்திய தேசிய இயக்க வரலாறு, தேசியத்தலைவர்கள் பற்றி முன்வைத்த விமர்சனங்கள் ஆகியவற்றை விவாதிகக்கூடாது என்பதே நான் சொல்லவருவது.

அதை தெளிவாக முன்வைத்துவிட்டேன். அதை வாசகர்கள் கவனிக்கவும் ஆரம்பித்திருப்பார்கள். மற்றபடி இதெல்லாம்தான் உங்கள் பதிலென்றால் இதையே எடுத்துக்கொள்கிறேன். எஸ்.வி.ஆர் மறுத்துவிட்டார் என உங்கள் ஆதரவாளர்கள் நிறைவடையட்டும்.

கூடங்குளம் விவகாரத்தை தெளிவுபடுத்திக்கொண்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி. நான் அவ்வகையில் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களும் ஆர்.எஸ்.எஸ், தி.மு.க முதலிய கட்சிகளும் எடுத்த நிலைபாட்டையும் கடுமையாகவே கண்டித்தேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்
அடுத்த கட்டுரைஎம்.டி.எம்.மின் கேள்விகள்