ஒரு பழைய கடிதம்

(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. )

அன்புள்ள பாரதிகுமார் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் கிடைத்தது. நட்புடனும் உரிமையுடனும் தாங்கள் எழுதியதைக் கண்டேன்.

தமிழில் இலக்கிய வாதிகளைக் கூர்ந்து கவனித்தால் ஏறத்தாழ 45 வயதில் அவர்களுக்கு பெரிய தேக்கமொன்று நிகழ்வதைக் காணலாம். அந்த ‘கண்டத்தை’ தாண்டி எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. நா. பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற சிலரே திரும்பி வந்தனர். பிறர் அப்படியே நின்றுவிட்டனர். பிடிவாதமாக எழுதிய சிலரோ தங்களையே பிரதியெடுத்தனர், ஒப்புக்கு எழுதி நீர்த்துப் போயினர். இது தமிழில் உள்ள தவிர்க்க இயலாத இரும்புவிதி ஒன்றையே காட்டுகிறது.

நான் முன்னரே அதைப் பற்றி சிந்தனை செய்துள்ளேன். பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவ்வயதில் அவர்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகமாகிறது. குழந்தைகள் உயர்நிலைப்பள்ளி தாண்டுகிறார்கள். பணச்செலவு கூடுகிறது. இரண்டு, அலுவலகத்தில் முதல் பதவி உயர்வு கிடைக்கிறது. புதிய வேலையும் புதிய பொறுப்புகளும் வந்து சூழ்கின்றன. இதையொட்டி குடும்பத்தின் அழுத்தம் அவன் மீது ஏறுகிறது. வாசிக்க, எழுத, பயணம் செய்ய நேரமும் மனநிலையும் கூடுவதில்லை. மன எழுச்சிகள் நிகழ்வதில்லை.

இவை புறக் காரணங்கள். இலக்கியம் சார்ந்தும், சில காரணங்கள் இருக்கலாம். ஒன்று, எல்லா எழுத்தாளர்களும் இளமைப் பருவம் தொடங்கி வாலிபப் பருவம் வரை சுற்றியலைந்து அறிந்தவற்றை எழுதுகிறார்கள். பதினைந்து வருடங்களுக்குள் அவை எழுதி எழுதிக் காலியாகிவிடுகின்றன. இரண்டு, அவனது எழுத்தைச் சுற்றி ஒரு எதிர்பார்ப்பு வளையம் உருவாகிவிடுகிறது. அவன் என்ன எழுதுவதென்பது அவ்வாறாகத் தீர்மானமாகி விடுகிறது. அதைத் தாண்ட முடிவதில்லை. மூன்று, அவனைச் சுற்றிய கோபதாபங்களின் வலையில் அவனுடைய உணர்ச்சிகளும் சிக்கிக் கொள்கின்றன. அவற்றுக்குத் தன்னை அறியாமலேயே எதிர்வினையாற்றி அவன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் தேங்கி விடுகிறான்.

மேலும் முக்கியமான ஒரு சிக்கல் உள்ளது. அது ஆன்மீகமானது. எழுத்தாளனை இப்படி வகைப்படுத்திக் கொள்ளலாம். அவன் உலகியல் சார்ந்த தளத்துக்கும் அதைத் தாண்டிய ஓர் ஆன்மீகத் தளத்திற்கும் இடையே ஆடும் ஊசல். இங்கிருந்து அங்கு நோக்கி எழுகிறான். அங்கே நின்றபடி இந்த தளத்தை மதிப்பிடுகிறான். இதில் ஏதேனும் ஒரு தளத்தை முற்றாகச் சாரும்போது அவனுடைய எழுத்து நின்றுவிடுகிறது. தல்ஸ்தோய் ஆன்மீகம் நோக்கி நகர்ந்தவர். நம் எழுத்தாளர்கள் உலகியல் நோக்கிச் செல்கிறார்கள்.

உலகியலில் ஆழ்ந்த பற்று எழுத்தாளர்களின் வரமும் சுமையுமாகும். அறவுணர்வு, அழகுணர்வு என்னும் இரு தளங்களில் அவனில் இது வெளிப்படுகிறது. அதுவே அவன் ஆக்கங்களின் சாரம். ஆனால் அது அவனைக் கட்டிப் போடுகிறது. ஏதோவொரு கட்டத்தில் உலகியல் பல மடங்கு விசை கொண்டு அவனை இழுத்து மேலெழாது செய்துவிடுகிறது. ஆகவே தான் துறவிகளுக்கு இணையாகவே எழுத்தாளனுக்கும் நிலையின்மை நெறியாக வகுக்கப்பட்டுள்ளது. அவன் அலைய வேண்டும், ஓடியபடியே இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

புதிய நிலக் காட்சிகள் புதிய மனிதர்கள் வழியாக சென்றபடியே இருப்பது எழுத்தாளனுடைய கற்பனைக்கு உரமூட்டுவது. அறிந்த வாழ்க்கை, பழக்கத்தின் களிம்பால் மூடப்பட்டுள்ளது. புதிய நிலம், புதிய மனிதர்கள் அவன் முன் புதிதாகப் பிறந்து எழுகிறார்கள். ஆகவே தான் துறவி மூன்று நாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தங்கலாகாது என வகுத்தது மரபு. பாவலர் பரிசில் வாழ்க்கையை தேர்ந்தனர். கம்பனும் காளிதாசனும் அப்படித்தான் வாழ்ந்தனர். நாமறியும் எல்லா ஐரோப்பிய படைப்பாளிகளும் அப்படித்தான் வாழ்கிறார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு அந்த வாய்ப்பே இல்லை.  மாறாக, அவனுக்கு விதிக்கப்பட்ட எளிய வாழ்வின் ஓயாத லெளகீகப் போராட்டத்தில் அவன் தன் நேரத்தையெல்லாம் இழக்கிறான். உள்ளத்து ஆற்றலை சிதறடிக்கிறான். சில துளிகளை எப்படியோ மீட்டுக் கொண்டு சிலவற்றை எழுதுகிறான்.

நான் நிறைய எழுதினேன் என்றால் அதற்கு இரு புறக்காரணங்கள் உள்ளன. ஒன்று, என் வழி எழுத்துதான் என முடிவு செய்துகொண்டு பிற அனைத்தையும் விலக்கினேன். பதவி உயர்வோ பிற உலகியல் வெற்றிகளோ வேண்டாமென மறுத்துக் கொண்டேன். அதற்கேற்ப தனிப்பட்ட தேவைகளை சுருக்கிக் கொண்டேன். இரண்டு, என் குடும்பமும் வேலையும் எனக்கு நேரமும் மனநிலையும் அளிக்கக் கூடியனவாக அமைந்தன. ஓரளவு பயணங்களும் வாய்த்தன.

இப்போது என் 44வது வயதில் என் வாழ்க்கையில் ஒரு தேக்கத்தை நானே உணர்கிறேன். மாறாத அலுவலக வாழ்க்கை சலிப்பு அளிக்கிறது. வீடு-அலுவலகம்-வீடு என என் அகநிலக்காட்சிகள் எல்லை கொள்கின்றனவா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. பயணங்களுக்காக, புதியனவற்றுக்காக அகம் ஏங்குகிறது. தமிழில் எழுதி இதிலிருந்து நான் விடுதலை பெற இயலாது. எழுதி நான் பயணங்களுக்காக பொருளீட்ட இயலாது. (இப்போது கிடைக்கும் மிக சொற்பத் தொகையைக் கண்டே இலக்கிய வணிகம் என்று இகழ ஆளிருக்கிறது)

இத்தருணத்தில் ஒரு முக்கியமான வாய்ப்பு எனக்கு வந்துள்ளது. வரவிருக்கும் பாலாவின் திரைப்படம். அதிகமில்லையேனும் பொருட்படுத்தத் தக்க அப்பணம் எனக்கு ஏராளமான பயண  வாய்ப்புகளை அளிக்கிறது. முழுக்க முழுக்க சுற்றியலைந்து அதை செலவிட எண்ணியுள்ளேன். என் இருபது வயதில் இருந்த அதே வேகத்துடன் அலைய வேண்டுமென்ற கனவு. அமர கால் தரிக்கவில்லை. வீட்டில், அலுவலகத்தில், எங்கும்.

திரைப்படச் செயல்பாடு சார்ந்து எனக்கு எவ்விதமான கனவுகளும் எதிர்பார்ப்புகளுமில்லை. உண்மையில் திரைப்படத்தையே நான் ஒரு பொருட்படுத்தத் தக்க கலைவடிவமாகக் கருதவில்லை. ஆனால் அதன்மீது நன்றியுடனிருக்கிறேன். என்னை இவ்வயதுக்குரிய தேக்கத்திலிருந்து மீட்பது அது அளிக்கும் பணம்தான்.

எழுதுவதை மீண்டும் தோன்றினாலொழிய தொடர்வதில்லை என்று முடிவு செய்ய பல உடனடிக் காரணங்கள் இருக்கலாம். சுந்தர ராமசாமியின் மரணம் முதல் உருவானதொரு மீள் நோக்கு ஒன்று. அதுவொரு அதிர்ச்சிதான். கோபங்கள் மோதல்கள் மூலம் நீளும் விவாதங்களைப் பற்றிய ஒரு ஐயம் ஆழமாக எழுந்துவிட்டது. இன்னொன்று, ‘கொற்றவை’. நான் இப்போதிருக்கும் சிறகுகளால் பறக்க சாத்தியமான உச்சகட்ட உயரமிதுவே. இனி இதை பிரதி செய்ய முயலக்கூடாது. மீண்டும் கூடிருந்து புதிய சிறகடைய வேண்டும்.

இன்னொரு எண்ணம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிராக கூடிய கும்பலின் வேகத்தைக் கண்ணுற்றதும் எழுந்தது. குட்டி ரேவதி, பிரபஞ்சன், வெளி.ரங்கராஜன், பா.செயப்பிரகாசம், அ. மார்க்ஸ் எத்தனை தரப்புகள் அதில். அந்த ஒற்றுமை! அது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிரான கோபமல்ல. எந்த சிக்கலிலும் மாட்டாத எம்.யுவனுக்கு எதிராக எல்லா படைப்பிலக்கியவாதிகளுக்கும் எதிராக நிகழ்ந்த வன்முறை. தொடர்பே இல்லை என்றாலும் ‘பரீக்ஷா  ஞாநி’ என்னையும் வசைபாடினார். அது அவர்களால் புரிந்து கொள்ள முடியாத படைப்புத் திறன் என்ற ஒன்றுக்கு எதிரான சினம். ஆனால் அது உண்மையான ஆங்காரம்தான். ஒரு முறையேனும் ஒரு எழுத்தாளனையேனும் பாராட்டாதவர்கள் வசைபாட மட்டும் ஒன்று திரண்டெழுகிறார்கள். எழுத்தாளனே தமிழ்நாட்டின் ஆகப்பெரிய நசிவு சக்தி என்கிறார்கள் இவர்கள். ஒழித்துக் கட்டுவோம் என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

எப்போதுமே நான் இவர்களை இம்மி கூடப் பொருட்படுத்தியதில்லை. இப்போதும் அப்படித்தான். ஆனால் ஒரு கணத்தில் அது தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரும்பான்மையின் குரலாகக் கேட்டது. படைப்பு சக்திக்கு தடைபோடுவதையே அது எக்காலமும் செய்து வந்துள்ளது. இதனுடன் போராடித்தான் கம்பன் எழுதினான், பாரதி எழுதினான், புதுமைப்பித்தன் எழுதினான். இன்று படைப்பூக்கத்துடன் எழுதும் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். ஒருபோதும் இக்கும்பலால் படைப்பு சக்தியை தடுக்க, வெல்ல இயலாது. ஆனால் ஒருகணம் தோன்றியது, சரி கொஞ்ச நாள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர்களிடம் சொல்ல. ஒரு தற்காலிக வெற்றியை அவர்களுக்கு தரலாமே. சரி, ஒருவனை ஒழித்து விட்டோம் என அவர்கள் விட்டு விடட்டுமே. இவர்களிடமிருந்து துண்டித்து ஓடிவிட வேண்டும் என்று ஒரு தருணத்தில் பட்டது. இவர்களை நினைப்பது கூட எப்படியோ என் ஆழத்தை தூர்க்கச் செய்துவிடும். கொஞ்ச நாள் மேலும் வசை. மேலும் அவதூறு. அவ்வளவுதான். அந்த அவகாசத்தில் என் ஊற்றை வேறு எங்கோ நானே தேடிக் கண்டடைகிறேன்.

**

இந்நாட்களில் மீண்டும் பயணம் செய்தபடி இருக்கிறேன். மண்ணில், மதநூல்களில். இருபது வயதில் நான் பேரிலக்கியங்களில் அலைந்தேன். இவ்வயது மதம் நோக்கி செலுத்துகிறது. பைபிள் (1995ல் புதுத் தமிழாக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க பைபிள் ஒரு பேரிலக்கிய ஆக்கம்) வேதங்கள், உபநிடதங்கள், சமண நூல்கள்…

இவ்வருடம் முழுக்க சமணத் தலங்களுக்குச் செல்ல திட்டம். தமிழக சமணக் கோயில்களுக்கு சென்று மீண்டபின் சிரவண பெலகொலா சென்று கர்நாடக மாநிலச் சமணத் தலங்களில் நீண்ட பயணம் மேற்கொண்டு இப்போதுதான் திரும்பினேன். உடனே மீண்டும் கிளம்பவிருக்கிறேன்.

மீண்டும் எழுதலாம். எங்கோ அதன் விதை ஈரம் காத்துப் புதைந்திருக்கிறது. பார்ப்போம்.

அன்புடன்,
ஜெயமோகன்,
28/02/2006.

முந்தைய கட்டுரை‘6’- ஒரு சினிமாவுக்குப்பின்னால்…
அடுத்த கட்டுரைபிரஜாபதி