அமெரிக்கா பயணம்

மீண்டும் ஒரு வெளிநாட்டுப்பயணம். இம்முறை அமெரிக்கா. அமெரிக்க நண்பர்களின் அழைப்புக்கு இணங்க வரும் ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் அங்கே இருப்பேன். ஜெயமோகன்.இன் இணையதளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் உட்பட எனக்கு அங்கே பல நண்பர்கள். ஆனால் சிறில் உட்பட பெரும்பாலானவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. இப்போது அதற்கான வாய்ப்பு

அமெரிக்கா எனக்கு நெடுங்காலமாகவே கவற்சியாக விளங்கிய நாடு. அதற்குக் காரணம் அந்நாட்டின் இலக்கியங்கள். ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு எழுத்தாளனுடன் மனதில் பிணைந்துள்ளது. அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ என்னும் நாவல் அமெரிக்க பயணத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மிஸிஸிப்பி ஆற்றின் மீது ஒரு பெரிய படகில் செல்கிறார்கள். ஒருவர் ”மார்க் ட்வைனின் மிஸிஸிப்பி!” என்கிறார் பிறரும் அதையே நினைத்ததாகச் சொல்கிறார்கள்.

கதைசொல்லி எண்ணிக்கொள்கிறார். அது எத்தனை ஆயிரம் வருடங்களாக இருந்துகொண்டிருக்கும் ஆறு. நாம் இப்படித்தான் இயற்கையை நமக்குத் தெரிந்த சில விஷயங்களை வைத்து சுருக்கிக் கொள்கிறோம் என்று. ஆனால் அது சுருக்குதல் அல்ல என்று எனக்குப் பட்டது. மிஸிஸிப்பி ஆறு ஓர் அனுபவம். அந்த அனுபவத்தை மார்க் ட்வைனின் அனுபவத்துடன் பிணைத்துக்கொண்டு பெரிதாக்கிக் கொள்வதற்கான முயற்சிதான் அது.

என்னைக் கவர்ந்த பல படைப்பாளிகளின் எழுத்தில் படிமங்களாக வந்த நிலத்தை உண்மையில் பார்க்கப்போகும் அனுபவம் என்றே அதை எண்ணிக்கொள்கிறேன். அத்துடன் நண்பர்கள்.

உத்தேசமான பயணத்திட்டம்  இது. சென்னையிலிருந்து ஜூலை பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை கிளம்புகிறேன். பதினென்றாம் தேதி சனிக்கிழமை நியூயார்க் சென்றடைகிறேன். அங்கிருந்து பாஸ்டன் செல்கிறேன். பதினெட்டுவரை பாஸ்டனில் இருப்பேன். நயகாரா செல்ல வாய்ப்பிருக்கிறது.

அங்கிருந்து ஜூலை 20 வரை நியூயார்க் நகரில் இருப்பேன். யேல் பல்கலைக்குப் போகிறேன். ஜூலை 25 மற்றும் ஜூலை 26 ஆம் தேதிகளில் வாஷிங்டன் டிசியை பார்க்கிறேன்.

அதன் இருபத்தேழாம் தேதி ·ப்ளோரிடாவுக்குச் செல்கிறேன். நண்பர் சிரில் கூட முப்பதாம் தேதிவரை தங்குகிறேன். முப்பத்தொன்றாம் தேதி  SFO வருகிறேன். அதன்பின் செப்டெம்பர் வரை அங்குதான்.செப்டெம்பர் ஆறாம் தேதி சென்னைக்கு திரும்புகிறேன்.

நண்பர்கள் அங்கே என்னை ச்ந்திக்கவிரும்பினால் என்னுடன் அல்லது [email protected] என்னும்  மின்னஞ்சலில் நண்பர் ராஜனுடன் தொடர்பு கொள்ளலாம்.

முந்தைய கட்டுரைதியானம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசேது சொக்கலிங்கம்