அன்பின் ஜெயமோகன்,
வணக்கம்.நேற்று முன்தினம், அ.முத்துலிங்கம் எடுத்த இந்த பேட்டியை (http://kalachuvadu.com/issue-150/page24.asp) படித்த பிறகு, நெடுநாட்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலை நேற்று படித்து முடித்தேன்.
ஓவியம் என்னும் கலை. அதன் நிலை சக்திகள் – மாறாமை. நிலை மாறும் சக்திகள் – மாறும் தன்மை. இவற்றை கொண்டு தனி மனித மாற்றங்கள் – சமூகம் – அதன் பரிணாமம், மதம் – கலை மேல் அதன் தாக்கம் – இவையாக பின்னப்பட்ட நாவல் என்கிற அளவில் ஒரு படைப்பு. நாவலில் சிறப்பு பற்றி சில கட்டுரைகள் தமிழில் வந்திருக்கின்றன. ஆனால் நான் தங்களிடம் கேட்க விரும்புவது நாவலின் தோல்வி பற்றி.
1 இந்த நாவலில் இருக்கும் அதிக வர்ணனைகள் – ஒரு கலை அதிலும் சித்திரக்கலையை அடிப்படையாகக் கொண்ட நாவலில் வர்ணனைகள் தேவைதான் என்றாலும், திரும்பத் திரும்ப வரும் – கதையில் எந்த மாற்றத்தையோ, பின் விளைவுகளையோ, மனித மனம் குறித்த பிம்பத்தையோ ஏற்படுத்தாத வெற்று வர்ணனைகள் எதற்காக? ஒருவேளை சித்திரக்கலையில் மீண்டும் மீண்டும் பிரதி எடுப்பதை மட்டுமே செய்யும் நுண் சித்திரக்காரர்களின் மனதை – அந்த நிலையை – சூழலை வாசகனுக்குக் கடத்தும் முயற்சியாய் இந்த சலிப்பேற்படுத்தும் ஒரே விதமான வர்ணனைகள் இருக்கின்றன என்பதாய் நான் புரிந்து கொண்டுள்ளேன்.
2 அடுத்து நாவலின் கட்டமைப்பு – நாவல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. காலம் மிகக் குறைவான அளவே உள்ள நாவல். அதிக பட்சமாக 1 மாதத்திற்குள் நடக்கும் கதை. பொதுவாக பின்நவீனத்துவ நாவல்களில் திட்டமிட்டு சிதைக்கப்படும் ஒரு கட்டமைப்பு , நாம் படித்து முடித்தவுடன் ஒரு ஒட்டுமொத்த அனுபவத்தை – ஒரு தரிசனத்தை – ஒரு உணர்வெழுச்சியை தரும். அதற்கு வாசகனின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். இது கட்டமைப்பு சிதைக்கப்படாத நாவல்களில் வாசகனின் நேரடி அனுபவமாக இருக்கும். எது எப்படியோ அந்த இறுதி ஒட்டுமொத்த தரிசனத்தை நோக்கியே நமது வாசிப்பு செல்கிறது. இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலுமோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ ஒரு உன்னத தருணம் (எனக்கு) நிகழவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு தருணம் ஒரு வாசகனுக்கோ/ நாவலுக்கோ தேவையே இல்லையா?
3 அடுத்தது இந்த நாவலில் வரும் பல கருத்தாக்கங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தேய் வழக்குகளாக இருப்பது. உதா: நுண் ஓவியனின் உச்சம் என்பது இருளை உணர்வது. வரையாமலிருப்பது. ஓவியத்தை புறந்தள்ளுவது. கண்ணை குருடாக்கிக்கொள்வது. நமது பேரிலக்கியங்களின் ஒரு துளியில் இவை அடங்கிவிடும் இல்லையா?
4 இறுதியாக ஒன்று – இந்த நாவலை விட எல்லாவிதத்திலும் (கதை-கட்டமைப்பு – வர்ணனை- பங்களிப்பு-நிகழ்வு- கதை மாந்தர் -சூழல்) மிகச்சிறந்த நாவல்கள் தமிழில் உண்டு இல்லையா? நமது நாவல்கள் குறித்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் (மிக முக்கியம் என்றாலும் கூட) – இத்தகைய வேற்றுமொழி நாவல்களுக்கு வருவதில்லையே ஏன்? எனக்குத் தெரிந்து “என் பெயர் சிவப்பு” குறித்தான மிகை விமர்சனமே(பாராட்டுகள்) நிறைய இருக்கிறது. இது குறித்த தங்களின் பார்வை என்ன?
5. நுண் ஓவியர்களின் வேலையைப்போலவே இந்த மொழிபெயர்பாளர்களின் வேலை இருப்பதை உணர்கிறேன்.இரு மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் மொழிபெயர்ப்பில் அடிப்படை பிரதியை தாண்ட முடியும் என்றும், மற்றவர் முடியாதென்றும் சொல்வது – நாவலில் வரும் இரு சக்திகளை (நிலை, நிலை மாற்றும்) போலவே இருப்பது நாம் என்றும் ஒரு நுண் ஓவிய காலத்தில் வாழ்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இன்னும் நிறைய விஷயங்கள் தோன்றினாலும், இந்த நாவல் முழுமையற்றது என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் வாசிப்பதில் தவறு இருந்து இருக்கலாம் என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன்.
இந்த நாவல் குறித்த தங்கள் பார்வை என்ன? என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.
நன்றி.
என்றும் அன்புடன்,
பா.சரவணன்
அன்புள்ள சரவணன்,
ஓரான் பாமுக்கின் இந்நாவலைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்ற எண்ணம் எனக்குண்டு. அநாவலை தமிழ் பண்பாட்டுச்சூழலில், இலக்கியப்புலத்தில் நின்று ஆராயவேண்டும் என்று. பார்ப்போம்.சுருக்கமாக ஒரு குறிப்பு அது வெளிவந்த காலத்தில், 2003-இல் என நினைவு, எழுதியிருக்கிறேன்.
உங்கள் எதிர்வினையைப்பற்றி மட்டும் இப்போது பேசவிழைகிறேன். உங்களுக்கிருக்கும் திகைப்புக்கான காரணங்களை நாம் தமிழில் நூல்களை வாசிக்கும் மனநிலையை வைத்தே ஆராயவேண்டும். தமிழில் உலக இலக்கியம் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. அவற்றைப்பற்றி பேசுபவர்கள் அதைவிடக்குறைவு. அவ்வாறு குறைவாகப் பேசப்பட்ட சொற்களைக்கொண்டு பொதுவாசகர்களிடம் உலக இலக்கியம் பற்றியும் நூல்களைப்பற்றியும் ஓர் எளிமைப்படுத்தப்பட்ட மனச்சித்திரம் உருவாகிவிடுகிறது.
விசித்திரமான விஷயம் என்னவென்றால் அழகுணர்வும் கலைபற்றிய தெளிவும் உடையவர்கள் ஆங்கிலம் வழியாக அதிகம் வாசிப்பதில்லை. காரணம் இலக்கியரசனையின் முக்கியமான அம்சம் மொழி என்பதுதான். மொழி என்ற பரப்பில் உள்ள முடிவடையாத பண்பாட்டுக்குறிப்புகளையே அவர்கள் அதிகமும் ரசிக்கிறார்கள். அக்குறிப்புகளை குறியீடுகளாக ஆக்கும் நுட்பத்தையே அவர்கள் இலக்கியத்தின் கலையாக எண்ணுகிறார்கள்.
ஆகவே அவர்கள் தமிழை விட்டு வெளியே சென்று வாசிக்கவேண்டுமென்றால் இந்த தளத்துக்கு அப்பால் செல்லக்கூடிய மாபெரும் வாழ்க்கைத்தரிசனத்தை, வரலாற்றுப்பார்வையை அளிக்கக்கூடியதாக அந்தப்படைப்பு இருந்தாகவேண்டும். அது பெரும்பாலும் பேரிலக்கியத்தகுதி கொண்டதாக இருக்கும். அந்நூல்கள் திரும்பத்திரும்ப அவர்களால் வாசிக்கப்படும், பேசப்படும்.
இதிலும் ஒரு நுட்பம் உண்டு. எல்லா உலகப் பேரிலக்கியங்களும் எல்லா பண்பாடுகளுக்கும் உகந்தவையாக ஆவதில்லை. அப்பண்பாடுகளின் தனியியல்பால் அவை சில படைப்புகளையே தங்களுக்கு உகந்த பேரிலக்கியங்களாக அடையாளப்படுத்தி ஏற்றுக்கொள்கின்றன. அவற்றையே பேசுகின்றன, அவற்றையே எதிர்கொள்கின்றன.
உதாரணமாக தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை தல்ஸ்தோயின் செல்வாக்கு மிக அதிகம். அனேகமாக எல்லா நல்ல படைப்பாளிகளும் தல்ஸ்தோயை வாசித்திருப்பார்கள். பாதிப்படைந்திருப்பார்கள். தொடர்ந்து தல்ஸ்தோய் இங்கே பேசப்படுகிறார். அவருக்கு அடுத்தபடியாக தஸ்தயேவ்ஸ்கி. ஆனால் மலையாள நவீன இலக்கியத்தில் இவ்விருவரின் செல்வாக்கும் மிகமிகக்குறைவு. அங்கே பெரும் செல்வாக்கைச்செலுத்திய பேரிலக்கியமென்றால் அது விக்டர் யூகோவின் லெ மிஸரபிள்ஸ்தான். அது தமிழில் வெளிவந்தாலும் நவீன இலக்கியத்தை பாதிக்கவில்லை.
அதேபோல மேலைநாட்டின் பல முக்கியமான பேரிலக்கியங்கள் ஒட்டுமொத்தமாகவே இந்திய நவீன இலக்கியத்தை கவரவில்லை. இந்தியாவுடனும் விவேகானந்தருடனும் காந்தியுடனும் நெருக்கமான உறவு கொண்டவராதலால் ரோமெய்ன் ரோலந்து நாம் நன்கறிந்தவர். ஆனால் அவரது ஜீன் கிறிஸ்தோஃப் இங்கே பேசப்படவே இல்லை. ஐரோப்பாவின் இலக்கியத்தில் ஆழமான செல்வாக்கைச் செலுத்திய செவாண்டிஸின் ’டான் குயிசாட் ’ இந்திய இலக்கியவாதிகளைக் கவரவில்லை.
இதற்கான காரணங்களை விரிவாகவே ஆராயவேண்டும். நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் இதுவே உலகப்பேரிலக்கியங்கள் இயல்பாக நம் பண்பாட்டுடன் உறவாடும் வழியாகும். இவ்வாறு உறவாடும் நூல்களே நம்மைப் பொறுத்தவரை உண்மையான உலகப்பேரிலக்கியங்கள். ஒரு பேரிலக்கியம் நம்மைக் கவரவில்லை என்பதற்கு நம்முடைய பண்பாட்டுப்பின்புலத்தில் நாமறியாத வலுவான காரணங்கள் பல இருக்கலாம்.
நுண்ணிய வாசகர்கள் தமிழ் மொழி இலக்கியங்களையும் பேரிலக்கியங்களையும் அதிகமும் கவனிக்கும் நிலையில் புதியநூல்களைச் சுடச்சுட வாசித்து உடனடியாகக் கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அழகியலுணர்ச்சியோ கலைப்பிரக்ஞையோ இல்லாத மேலோட்டமான வாசகர்கள். முதிராவாசிப்பு கொண்ட புதியவர்களும் வெறுமே வாசித்துத் தள்ளும் அறிவுஜீவிகளும் இவர்களில் உண்டு.
இவர்களில் தங்களை சிறந்த வாசகர்கள் என்று முன்வைக்கும்பொருட்டு புதியபுதிய நூல்களை வாசித்து கருத்துச் சொல்பவர்கள் ஒரு வகை. நூல்களுக்கு அளிக்கப்படும் விளம்பரங்களைக் கண்டு அதையே கருத்தாகக் கொள்பவர்கள் இரண்டாம் வகை. கோட்பாட்டுநோக்கில் தங்களுக்குத் தேவையானவற்றை முன்னிறுத்துபவர்கள் மூன்றாம் வகை.
இவர்களால் நூல்களைப்பற்றிய ரசனை சார்ந்த, நுட்பமான மதிப்பீடுகளை உருவாக்க முடிவதில்லை. தங்களை முன்வைப்பதற்காக நூல்களைப்பற்றிச் சொல்பவர்கள் எப்போதும் அபூர்வமான நூல்களைப்பற்றிச் சொல்லவேண்டுமென்று நினைப்பார்கள். அவற்றைச் சொல்லும்போதே மிகையாகச் சொல்லி அவற்றுடன் தமிழ்ப்படைப்புகளை ஒப்பிட்டு ‘இங்கே ஒண்ணுமே இல்லியே’ என்ற பாவனையை கொள்வார்கள். ‘நான்லாம் இங்க ஒண்ணுமே வாசிக்கிறதில்லே’ என்பார்கள். இவர்களை நான் மண்புழுக்கள் என்பேன்.
இவர்களின் வாசிப்பு என்பது மண்புழு மண்ணைத்தின்பது போன்றது. அதன் உடம்பே ஒரு பெரும் வயிறுதான். மூளைகீளை என்று எதுவும் இல்லை. முடிந்தவரை தின்றுகொண்டே இருப்பது, தலையணை உறைக்குள் தலையணையை திணிப்பது போல மண்ணைத் திணிப்பது. எடுத்துக்கொள்வது மிகமிகக் குறைவு. மண் அப்படி மண்ணாகவே வெளியே போய்விடும். இவர்களால் எந்த இலக்கியப்படைப்பு பற்றியும் சொந்தமாக ஒரு விமர்சனக்கருத்தோ மதிப்பீடோ முன்வைக்கமுடியாது. எந்த நூலில் இருந்தும் சொந்தமாக ஒரு நுட்பத்தை கண்டடைய முடியாது. உலகப்பேரிலக்கியங்களைப்பற்றி பேசுபவர்கள் தமிழின் ஏதாவது இலக்கிய ஆக்கம் பற்றி வாய் திறந்தால் அபத்தக்களஞ்சியமாக இருக்கும்.
இரண்டாவது வகை கத்துக்குட்டிகள். இவர்களை லார்வாக்கள் என்று சொல்லலாம். வளர்ச்சியின் அதீத உற்சாகம். உயிருக்குள் ‘தின்னு’ என்ற கட்டளை மட்டுமே உள்ளது. ஆகவே எதுவும் உணவே. இரவுபகலாக பேதாபேதமில்லாமல் உண்பதே வாழ்க்கை. எல்லாவற்றையும் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டவைதான் இவர்களின் கருத்துக்கள். மூன்றாம் வகை மாம்பழத்து வண்டு. கோட்பாட்டாளர்கள் இவர்கள். துளைத்து உட்புகுந்து உயிர்வாழ்வது இவர்களின் வழக்கம். பழமல்ல கொட்டையின் துவர்ப்புதான் இவர்களுக்கு உகந்தது.
இந்த மூன்றுதரப்பினரால்தான் பெரும்பாலும் உலக இலக்கியம் சார்ந்த கருத்துக்கள் உடனடியாக உருவாக்கப்பட்டு நமக்களிக்கப்படுகின்றன. நல்ல வாசகர்கள் அந்நூல்களை வாசிக்க கொஞ்சம் தாமதமாகும். ஏனென்றால் நுண்ணுணர்வு கொண்ட வாசகன் தன்னுடைய ஓர் அகத்தேடல் சார்ந்தே நூல்களைத் தேடி வாசிப்பான். அது ஒரு மாலை தொடுப்பது போல. காகம் குச்சிகள் தேடி கூடு கட்டுவதுபோல. அவன் வந்து வாசிக்கும்போது இந்த மூன்று தரப்பினரும் உருவாக்கி வைத்திருக்கும் மிகையான அபிப்பிராயங்கள் சிதறுகின்றன. அதுவே உங்கள் விஷயத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
இந்த விஷயங்களைப்பற்றி நான் யோசிக்க நேர்ந்த ஒரு தருணத்தைப்பற்றிச் சொல்கிறேன். ஒருமுறை மலையாள இலக்கியவாதிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அருந்ததிராயின் ‘சிறியவிஷயங்களின் தெய்வம்’ வெளிவந்தபோது அது ஒரு மாபெரும் கிளாஸிக் என்ற வகையில் பலர் மலையாளத்தில் எழுதினார்கள். அந்த எண்ணம் பரவலாக இருந்தது. ஆனால் அது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோதே அதன் முக்கியத்துவம் சரசரவென்று குறைந்து அது ஒரு சர்வசாதாரணமான நாவல் என்ற கருத்து பரவி இன்று உறுதிப்பட்டுவிட்டது.
இது எப்படி நிகழ்ந்தது என்றேன். கல்பற்றா நாராயணன் சொன்னார், அது மலையாளத்தில் வந்தபோதுதான் அதை குறிப்பிடத்தக்க கவிஞர்கள் வாசித்தார்கள். அவர்கள் மொழியாக்கத்தின் இழப்பை மீறி படைப்பை வாசிக்கவும் மதிப்பிடவும் கூடியவர்கள். ஆரம்பத்தில் நாவலைப்பற்றி பேசியவர்கள் அதிகமாக நூல்களைப்பற்றி எழுதும் இதழாளர்கள் , மேலோட்டமான விமர்சகர்கள். அவர்களுக்கு ‘ஜட்ஜ்மெண்ட் ‘ கிடையாது. கவிஞர்களின் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்ததுமே அந்நாவலின் இடம் வகுக்கப்பட்டுவிட்டது. நான் கவிஞர்கள் என்பதை ஒருமொழியில் உள்ள நுண்ணிய வாசகர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.
”]”]பெரும்பாலும் நாம் சமகாலத்தில் ஐரோப்பாவில் அதிகம்பேசப்பட்ட நூல்களை ஏராளமான அடைமொழியுடன்தான் அறிகிறோம். முத்துக்குடை, சப்பரத்தில்தான் காண்கிறோம். அந்த வகையான அலங்காரங்கள் இல்லாமல் அந்நூல்களை அணுகுவதே சரியானதாகும். அப்படி மிகையான எதிர்பார்ப்பு இன்றி அணுகினால் ஒரு நுட்பமான பண்பாட்டு அனுபவமாக ஆகக்கூடிய நல்ல நாவல் என் பெயர் சிவப்பு.
என் பெயர் சிவப்பு நாவலை எப்படி அணுகுவது? அதற்கு ஒரு சக வாசகனாக நான் ஒரு ரகவரையறையை சொல்கிறேன். படைப்புகளை ‘உலக மானுடரை நோக்கிப் பேசுபவை’ என்றும் ‘ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் காலத்தையும் நோக்கிப் பேசுபவை’ என்றும் நாம் ஒரு பிரிவினை செய்துகொள்ளலாம். ஆக்கத்திலேயே படைப்புகளுக்கு அந்தத் தன்மை வந்துவிடுகிறது.
தல்ஸ்தோய், விக்டர் யூகோ, நிகாஸ் கசந்த்ஸகீஸ், கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர், யசுநாரி கவபத்தா போன்றவர்கள் முதல்வகைப்பட்டவர்கள். நம் பண்பாட்டில் நின்றுகொண்டு, நம்முடைய உணர்ச்சி நிலைகளின்படி, நம் சொந்த ஆன்மீகத்தேடலுக்காக அவர்களின் ஆக்கங்களை நாம் வாசிக்கலாம். அந்நூல்கள் நின்று பேசும் பண்பாட்டுச் சூழலைப்பற்றிய தகவலறிமுகம் கொஞ்சம் இருந்தால் போதும்.
நேர் மாறாக ஜோசஃப் கான்ராட் , விளாடிமிர் நபக்கோவ், வில்லியம் ஃபாக்னர், ராபர்ட்டோ பொலானோ போன்ற படைப்பாளிகளை அவர்கள் முன்னால்கண்டு பேசிய காலத்தையும் பண்பாட்டையும் கருத்தில்கொண்டு அந்த எல்லைக்குள் வைத்து மட்டுமே வாசிக்க முடியும். நீங்கள் இப்போது அடையும் இந்த திகைப்பை நான் இவர்களை வாசிக்கும்போது அடைந்தேன். என்ன காரணத்தால் ஜெ.டி.சாலிங்கரின் கேச்சர் இன் த ரை ஒரு கிளாஸிக்காக கருதப்படுகிறது என வியந்திருக்கிறேன். என் பெயர் சிவப்பு இவர்களின் வரிசையில் வைக்கப்படவேண்டிய படைப்பு.
என் பெயர் சிவப்பு மானுடத்தை நோக்கிப்பேசும் படைப்பு அல்ல. மிக எல்லைக்குட்பட்ட ஒரு வகை எழுத்து அது. பேரிலக்கியங்களைப்போல அது நம்மை மானுடதரிசனம் எதையும் நோக்கிக் கொண்டுசெல்வதில்லை. உணர்வெழுச்சிகளுக்கோ சிந்தனையின் மின்னல்களுக்கோ அதன் புனைவு கொண்டுசெல்வதில்லை. பெரும்பாலும் அறிவார்ந்த பண்பாட்டு விவாதமே அதிலுள்ளது. அந்தப்பண்பாட்டு விவாதம் கலைவிவரணையாக உருமாற்றப்பட்டுள்ளது. அவ்வகையில் ஒரு நல்ல படைப்பு.
துருக்கி என்பது ஒரு பண்பாட்டு நிறக்கலவை கொண்ட நிலம். அது ஐரோப்பாவுக்குள் உள்ள அரேபியா எனலாம். அந்தப்பண்பாட்டு உரையாடலை பல தளங்களில் விரித்துக்கொண்டு செல்வதனால்தான் அது முக்கியமான நாவலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பியர்களுக்கு அந்நாவல் கொடுக்கும் ஆர்வம் புரிந்துகொள்ளக்கூடியதே.
நம்முடைய வாசிப்பில் அந்த அம்சங்களெல்லாம் முக்கியத்துவமிழக்கின்றன. நாம் நம் வாழ்க்கை -பண்பாட்டுச்சூழலில் இருந்து வாசிக்கும் விதமே வேறு. நம்முடைய கேள்விகளும் கவலைகளும் வேறு. என்றுமுள்ள மானுடப்பிரச்சினைகள் என்னென்ன பேசப்பட்டிருக்கின்றன என்ற வாசிப்பே நமக்குள்ளது. பாமுக் அந்த வினாவுக்குப் பெரிதாக எதையும் அளிக்கவில்லை. ஆகவே அது ஒரு நடுத்தரமான படைப்புதான்.
என் பெயர் சிவப்பு நாவலில் முக்கியமான இரு கலைசார்ந்த தோல்விகள் உள்ளன. அது ஓவியத்தை விவரிக்கையில் அந்த விவரிப்பு கவித்துவம் கொள்ளவில்லை, தகவல் சித்தரிப்பாகவே நின்று விடுகிறது. சித்தரிப்புகளுக்கு எப்படி கவித்துவம் சாத்தியமாகிறது? அவை படிமங்களாக ஆவதன் வழியாகத்தான்.
ஓவியம், சிற்பம், இசை, நடனம் என நுண்கலைகளை பேசுபொருளாகக் கொண்ட எல்லா இலக்கியங்களுக்கும் பொருந்தும் விஷயம் இது. இசைகேட்பது ஓர் அக அனுபவம். அந்த அனுபவத்தை ஏன் மொழியில் பிடிக்க முனைய வேண்டும்? அது ஒரு அர்த்தமற்ற வேலை அல்லவா? ஆம், அந்த விவரணை வெறுமே இசையை வர்ணிப்பதாக இருந்தால் அது தண்ணீரை கஜக்கோல் கொண்டு அளப்பது போன்றதே. ஆனால் இசையை, இசையனுபவத்தை ஒரு படிமமாகக் கொண்டு வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் அந்த இலக்கிய ஆக்கம் பேசும் என்றால் அது இலக்கியக்கலைதான். அந்த அனுபவம் ‘என் பெயர் சிவப்பு’-இல் நிகழவில்லை.
இங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்ளவேண்டும். நான் குறிப்பிடுவது படிமத்தை. அதாவது நுண்கலையனுபவம் நம் கற்பனையில் விரிந்து வாழ்வனுபவங்களின் படிமமாக ஆகும் நிலையை. நாம் அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். அந்த நுண்கலை உருவாக்கும் சித்திரங்களை ஆசிரியர் உருவகங்களாக ஆக்கும் அறிவாந்த முயற்சியைச் சொல்லவில்லை. அதற்கு சிறந்த உதாரணம் உம்பர்ட்டோ எக்கோவின் ‘நேம் ஆஃப் த ரோஸ்’. அதில் உள்ள ஓவிய விவரிப்புகள் ஆசிரியரின் சிந்தனைகளை மட்டுமே காட்டுகின்றன.
நான் வாசித்தவரையில் ரொமெய்ன் ரோலந்தின் ஜீன் கிறிஸ்தோஃப் இசைகேட்கும் அனுபவத்தை படிமங்களால் நெருங்கிச்சென்ற படைப்பு. ஹெர்மன் ஹெஸ்சியின் நார்ஸிஸஸ் அண்ட் கோல்ட்மண்ட் [Narcissus and Goldmund] இசையனுபவ வர்ணனைக்காக சட்டென்று நினைவுக்கு வரும் நாவல். என்னுடைய ரசனை இவ்வகையில் மிக எல்லைக்குட்பட்டது. ஏனென்றால் நான் நல்ல இசைரசிகன் அல்ல.
என் பெயர் சிவப்பு நாவலைப்பொறுத்தவரை அதன் அடுத்த பிரச்சினை என்பது அதன் மொத்த சிந்தனைத்தளத்திலும் ஊடுருவிசெல்லும் அழுத்தமான அவநம்பிக்கையும் பகுத்தறிவுநோக்கும். அது நாவல் அபாரமான மன எழுச்சிகளை நோக்கிச்செல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஆகவே கலை வழியாக மானுடம் சார்ந்த தேடல் என்பதற்குப் பதிலாக கலைவரலாறு வழியாக ஒரு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளுதல் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது.
ஐரோப்பாவில் ஒரு நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதனாலேயே நமக்கும் அது முக்கியமானதாக இருந்தாக வேண்டுமென்பதில்லை. அந்தத் தன்னம்பிக்கை நமக்கில்லாவிட்டால் நாம் சுயமான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாது. என் பெயர் சிவப்பு அதன் பேசுபொருள் காரணமாக ஐரோப்பாவைக் கவர்ந்த ஒரு நாவல். அவ்வளவுதான். அந்நாவலை விட மிகச்சிறந்த பல இந்திய நாவல்கள், தமிழ் நாவல்கள் உண்டு.
‘என் பெயர் சிவப்பு’-ஐ நாம் துருக்கியை அறிந்துகொள்ள, ஐரோப்பியப் பண்பாடு கீழைப்பண்பாட்டுடன் கலந்த ஒரு தருணத்தை அறிந்துகொள்ள, கீழைக்கலைமனம் மேலைக்கலையை சந்திக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள வாசிக்கலாம்.ஆனால் பேரிலக்கியங்களை நாம் நம்மைப்பற்றி அறிந்துகொள்ளவே வாசிக்கிறோம்.
என் பெயர் சிவப்பு ஒரு விமர்சனம்
மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமியுடன் ஓர் உரையாடல்
க.சீ.சிவக்குமார் எழுதிய விமர்சனக்குறிப்பு
விமர்சனம் -வினாயகமுருகன்
நாகரத்தினம் கிருஷ்ணா விமர்சனம்
சுகுமாரன் விமர்சனம்