எண்பதுகளில் நான் ஊர் ஊராக அலைவதைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் சொன்னபோது ”சும்மா இடங்களையும் முகங்களையும் பாத்துண்டே போறதினாலே என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. குத்து மதிப்பாக ”மனசுக்கு உற்சாகமா இருக்கும் சார். நெறைய கற்பனைகள் வரும்…” என்று சொன்னேன். ” அந்த எடத்தைப்பத்தியோ ஜனங்களைப் பத்தியோ உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே..அதனால என்ன பிரயோசனம்?” என்றார் சுந்தர ராமசாமி.
பயணங்களில் நம் முன் நிகழும் நிலக்காட்சிகளும் முகங்களும் நமக்களிக்கும் அனுபவ வெளி சாதாரணமானதல்ல. நாம் அறிந்த இடங்களும் முகங்களும் அளிக்கும் அனுபவத்தைவிடவும் அறிதலைவிடவும் அவை அளவில் அதிகம். அதை நான் இப்படி இப்போது விளங்கிக்கொள்கிறேன். இடத்தையும் மனிதர்களையும் நாம் அறியும்போது அந்த அறிதல் சார்ந்து அவை குறுகிவிடுகின்றன. தினம் அலுவலகம்செல்லும் வழி அலுவலகம்செல்லும் வழி மட்டும்தான். அவ்வழியில் உள்ள எந்தக்காட்சியும் அதற்கு அப்பால் நமக்கு பொருள்படுவதில்லை. வழியில் எதிர்படும் மளிகைக்கடைக்காரர் மளிகைக்கடைக்காரர் மட்டுமே. அவரை மனிதராக, தந்தையாக, மகனாக பார்க்க நாம் தயாராவதில்லை.
நம் அறிதல் நிகழும் இந்த முறையை பௌத்தம் விரிவாக விளக்கியிருக்கிறது. புதிதாக நாம் ஒன்றை காணும்போது நம் அகம் சலனமுறுகிறது. அதை அந்தக்கரணவிருத்தி என்று பௌத்தம் சொல்கிறது. அகநுழைவு நிகழ்வு. பின்னர் நாம் அந்தபொருளை அடையாளம் காண ஆரம்பிக்கிறோம். அதற்குப் பெயரிடுகிறோம். அடையாளபப்டுத்துகிறோம். அவ்வாறாக அதை ஓர் அறிவாக ஆக்குகிறோம். அதை பௌத்தம் சப்தாகரண விருத்தி என்கிறது. ஒலியேற்ற நிகழ்வு. பின்னர் அந்த அடையாளங்களால் அதை புரிந்துகொள்கிறோம். அது ததாககரண விருத்தி. அதுவாதல் நிகழ்வு.
நாம் அன்றாடம் காணும் ஒவ்வொன்றையும் அதுவாதல் நிகழ்வின் தளத்தில் நின்றுகொண்டு மட்டுமே பார்க்கிறோம். அதற்கு மேல் சென்று நம்மால் அதை அணுக முடிவதில்லை. மிக அபூர்வமாக ஒரு நிலவுவேளையில் அல்லது அதிகாலையில் பழகிய இடத்தைப் பார்க்கும்போது புதிதாகக் கண்டு நம் அகம் அதிர்கிறது. அது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒரு மனிதரை முற்றிலும் புதிய ஒரு சந்தர்ப்பத்தில்பார்ர்க்கும்போதும் அதேபோன்ற அனுபவத்திறப்பு சாத்தியமாகிறது. ஆனால் இது மிக அபூர்வமாக நிகழக்கூடிய ஒன்று.
பயணத்தில் நாம் அதுவாதல் நிகழ்வுக்கே இடமில்லாத நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு காட்சியும் முகமும் புதியது. ஒவ்வொன்றும் நமக்கு அக அதிர்வை அளித்து நம் ஆழத்தை சென்றடைகிறது. முதன் முதலாக ஒரு விஷயத்தைப் பார்க்கும் கிளர்ச்சியும் ஆழ்ந்த கவனமும் ஒவ்வொரு கணமும் நீடிக்கிறது. பயணத்தில் நாம் காணும் மனித முகங்கள் நம் அன்றாட முகங்கள் நமக்குச் சொல்வதைவிட அதிகமாகவே சொல்கின்றன. பயணத்தில் நாம் காணும் இடங்கள் நாம் அன்றாடம் அறியும் விஷயங்களைவிட அதிகமாக தெரிவிக்கின்றன.
ஆகவே ‘சும்மா’ வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வதை நான் எப்போதுமே மிகவும் விரும்புவேன். என்னுடைய கணிசமான பயணங்கள் அத்தகையவையே. 19 ஆம் தேதி கன்பராவில் இருந்து சிட்னிக்கு பெருந்தில் கிளம்பியபோது முழுமையாகவே அந்த மனநிலையில் இருந்தேன். ரகுபதி எங்களைக் கொண்டுவந்து பஸ் ஏற்றிவிட்டார். மிகநீளமான பஸ். அகலச்சாலைகளுக்கே உரியது. வசதியான இருக்கை. வெளியே பார்ப்பதற்கு ஏற்ற மிகப்பெரிய கண்ணாடி.
பஸ்சில் பலவகையான கூட்டம். என் முன் ஓர் அகலமான பெண்மணி நின்றாள். அகலமென்றால் இந்தியக் கணக்கில் அல்ல. ஆஸ்திரேலியாகணக்கில் அது இந்திய உச்சபட்ச எடைக்கு இரண்டு மடங்கு. அவளுடைய புஜங்கள் என்னைவிட பெரியவை. உடல் அவ்வளவு பெரிதாக ஆனமையால் தலை மிகச்சிறிதாக தெரிந்தது. உள்ளங்கைகளும் பாதங்களும் சிறிதாக இருந்தன. காலின் அமைப்பையே இழந்து ஒரு பெரிய சிலிண்டர்களாக ஆகிவிட்டிருந்த அவளுடைய கால்கள் மிகச்சிறிய பாதங்களில் முடிந்தன. எடை தாங்காமல் அவை ஒருவகையாக கோணலாக பின்னிக்கொண்டிருந்தன. அவள் தன் சீட்டை காட்டி முன்னால் நகர்ந்தபோது கவனித்தேன். அவள் ஒரு சிறுமி. அதிகபட்சம் பத்னாறு வயது இருக்கும்!
பொதுவாக ஆஸ்திரேலியர்கள் அதிக எடை கொண்டவர்கள். உலகின் மிகப்பெரிய ‘ஒபெஸிட்டி’ தேசம் அதுதான் என்கிறார்கள். சமீபத்தில் பேக்கர் இதய ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி ஏறத்தாழ ஒருகோடி ஆஸ்திரேலியர்கள் அதிக எடையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது மொத்த மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர். அதிக எடை உருவாக்கும் உடல்நலப்பிரச்சினைகளுக்கு அளவே இல்லை. இதயம் கல்லீரல் நுரையீரல் எல்லாமே அதிக வேலைசெய்கின்றன. மூன்று நான்குபேருக்குத்தேவையான வேலையை அவைசெய்வதுபோலத்தான். அடுத்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஒருலட்சம்பேர் அங்கே இதயநோயால் இறக்கக்கூடும் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவே ஒரு ‘கொழுப்பு வெடிகுண்டு’ மீதுதான் அமர்ந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் அதிக எடை பிரச்சினையாக இருப்பதற்கான காரணம் உணவே. அங்கே தானிய உணவே குறைவு. தொட்டுக்கொள்ள கொஞ்சம் ரொட்டி. மிச்சமெல்லாம் இறைச்சிதான். மாட்டிறைச்சி. அதை அதிக அளவில் உண்பதற்கு உகந்த முறையில் சமைக்கிறார்கள். அரைத்து கட்டிகளாக ஆக்கி ரொட்டிக்குள் வைத்து வேகவைக்கிறார்கள். துருவல்களாகவும் கொத்துகளாகவும் உண்கிறார்கள். அத்துடன் பால் மற்றும் பாலாடைக்கட்டி. அங்கே அனேகமாக எல்லா உணவிலும் பாலாடைக்கட்டி இருக்கிறது. எனக்கெல்லாம் ஒரு பர்கர் என்பது ஒரு முழுநாள் உணவாக ஆகிவிடும். ஆனால் அதை ‘இளம்கடி’யாக தின்றுகொண்டே இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா காப்பியும் ஒரு கொழுப்புசேர்ப்பு உணவு. காப்பிக்கொட்டை அதிகளவு கொழுப்பு உள்ளது. அங்கே உள்ள காப்பி என்பது கொழகொழவென கரிய தார்போல ஒரு குழம்பு. சிலர் அதில் கெட்டிப்பாலைச் சேர்க்கிறார்கள். சிலர் கிரீம்– கொழுப்பையே- சேர்த்துக்கொள்கிறார்கள். ஒரு காப்பியின் அளவு நாம் குடிக்கும் மூன்று காப்பி. அதை எங்கும் எப்போதும் கையில் கொண்டுசென்று குடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இளைஞர்கள் நடுவே சாக்லேட் ஒரு பெரிய கவற்சியாக இருக்கிறது.சாக்லேட் குழம்பை பெரும்பாலான உணவின் மீது கொழகொழவென ஊற்றி உண்கிறார்கள். சாக்லேட் கட்டிகளையும் குச்சிகளையும் மெல்கிறார்கள். சாக்லேட் பிஸ்கட்டுகளை சாப்பிடுகிறார்கள். சாக்லேட் அளவுக்குக் கொழுப்பேற்றும் உணவு அனேகமாகக் கிடையாது
பஸ்சில் ஏறி அமர்ந்ததுமே அந்தச்சிறுமி களைப்புடன் மூச்சுவாங்கியபடி தன் பையை திறந்து ஒரு பர்கரை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். அதன்பின் ஒரு சாக்லேட். நான் பார்க்கும்போதெல்லாம் அவள் தின்றுகொண்டே இருந்தாள். என் வலப்பக்கம் ஒரு சீன இளைஞன். கூடவே அவன் காதலி. சீனப்பெண்கள் பெரும்பாலும் என் தோளுக்கும் கீழேதான் உயரம். சிறுமிகளைப்போல. அவன் அப்பெண்ணை அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டிருந்தான். அவள் பேருந்தில் ஏறியதுமே ஒரு சிறு பெட்டியை திறந்து தன் முகத்தை புதிதாக வரைந்து உருவாக்கிக் கொண்டாள். ஓவியர்களின் கவனம்! அவன் முத்தமிட்டதுமே அவள் லிப்ஸ்டிக் சரிசெய்ய பெட்டியை திறப்பாள்.
பெரும்பாலான வெள்ளையர்கள் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் தூங்கினார்கள். அவர்களுக்கு அந்த பாதை சலிப்பூட்டும் காட்சியாக இருக்கலாம். ஆனால் சீனப்பையன்கள் பெரும்பாலானவர்கள் கையடக்க எலக்டிரானிக் விளையாட்டுப்பொருட்களில் ஆழமாக மூழ்கியிருந்தார்கள் என்பதைக் கவனித்தேன். சீனர்களில் எவரேனும் ரயிலில், பேருந்தில், காத்திருப்பு அறையில் எதையேனும் படித்து என் கண்ணில் படவேயில்லை. பெரும்பாலும் அமைதியாக அமர்ந்திருப்பார்கள். அல்லது விளையாடுவார்கள்.
சீனாவில் வாசிப்பே இல்லை என்றார் சீனாவை அறிந்த நண்பர். சீனர்களின் கடந்த முக்கால் நூற்றாண்டுக்கால வரலாறுதான் காரணம். வாசிப்பு என்பது தேவையில்லாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. ஏன் என்றால் முக்கால் நூற்றாண்டுக்காலமாக சீனாவில் மக்களுக்கு அரசியல் நடவடிக்கை அனுமதிக்கப்படவில்லை. அரசியல் நடவைக்கையே புதிய சிந்தனைகள் மேல் ஆர்வத்தை உருவாக்குகிறது. விவாதங்களை உருவாக்குகிறது. அடுத்தகட்ட வாழ்க்கை குறித்த கனவுகளை விதைக்கிறது. அரசியல் நடவடிக்கை இல்லாத சமூகம் சிந்தனையை இழக்கும். உழைப்பு இயந்திரங்களாக மனிதர்களை மாற்றும். எளிய கேளிக்கைகள் அன்றி வேறு பண்பாட்டுச் செயல்பாடுகளே இல்லாமல்செய்யும்.
மேலும் சீனாவில் வாசிப்பும் சிந்தனையும் ஆபத்தானவையும் கூட. அவை ஒருவர் மீது ஐயத்தை உருவாக்கும். கருத்து விவாதம் அனுமதிக்கப்படாத சமூகத்தில் ஒற்றைப்படையான, சலிப்பூட்டும், ஆதிக்கக் கருத்துக்களே வந்து கொண்டிருக்கும். அவை சிந்தனையில் சலிப்பையும் சோர்வையும் ஊடுகின்றன்றன. ஆகவே இடதுசாரி நாடுகளில் வாசிப்பும் சிந்தனையும் முழுமையாகவே தேக்கம் கண்டுவிடுகின்றன. சீனர்களுக்கு கடந்த முக்கால் நூற்றாண்டாக நீளும் இந்த வரலாற்றுப்பின்புலம் மெல்ல ஒரு மரபுக்குணமாகவே மாறிவிட்டிருக்கிறது.
வெளியே புல்வெளிகள். மீண்டும் புல்வெளிகள். மீண்டும் மீண்டும் புல்வெளிகள். பச்சைநிறத்தின் நூற்றுக்கணக்கான அழுத்த வேறுபாடுகள். பச்சை நிறத்தின் வளைவுகள். பச்சை நிறத்தின் ஒளி, பச்சை நிறத்தின் இருட்டு. குனிந்து மேய்ந்தபடியே சென்றன தடித்த மாடுகள். ஒரு விசித்திரம்தான். உணவின்மேலேயே பிறந்து, உணவின்மேலேயே நடந்து, உணவின்மேலேயே கழிந்து, உணவின்மேலேயே உறங்கும் வாழ்க்கை. புழுக்களைப் பற்றிச் சொல்லும்போது புழு பிறப்பது என்பதில்லை நாம். புழுத்தல் என்கிறோம். அதாவது ஒரு பொருள் புழுவாக ஆகிவிடுகிறது. இப்புல்வெளிகளை பசுத்தல் என்று சொல்லலாம்.
விழித்திருக்கும் நேரமெல்லாம் உண்பது. பின்னர் தூக்கம். அவற்றின் வாழ்க்கை நிறைவுற்றதாக இருக்குமா? தெரியவில்லை. அவை அதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதுகூட உண்மை அல்ல. அவை எதிர்நிலைச் சூழல்களைச் சந்தித்து தாண்டிச்சென்று வாழ்வதற்காகவும்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. சவால்களைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் இருப்பின் முழுச் சாத்தியங்களும் வெளிப்படுகின்றன. நாம் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்? நம்முடைய மிகச்சிறந்த சாத்தியங்கள் வெளிப்படும்போதுதான். ஒரு கவிதை எழுதும்போது, ஓரு மலையில் ஏறும்போது, ஓர் இக்கட்டைச் சமாளிக்கும்போது, ஒரு புதிரை விடுவிக்கும்போது…அந்த மகிழ்ச்சி இல்லாமல்தானே இந்த பசுக்கள் இருக்கும்? வாழ்க்கையின் நேர்நிலை சக்தியும் எதிர்நிலைச் சக்தியும் சரியானமுறையில் முரணியக்கம் கொள்ளும்போதுதான் இயல்பான இன்பம் சாத்தியம். ஆனால் அது பசுக்களுக்கும் பொருந்துமா?
மதியம் பன்னிரண்டு மணிக்கு சிட்னி பேருந்து நிறுத்துமிடத்துக்கு சென்றுசேர்ந்தோம். சிறிய பேருந்து நிலையம்தான். சாலையோரமாகவே பேருந்துகள் நின்றன. இறங்கி பெட்டியை உள்ளிருந்து மீட்டுக் கோண்டிருந்தபோது சாலைக்கு அப்பால் இருந்து ஒருவர் என்னை நோக்கி வந்தார். நான் எப்படியோ எஸ்.பொவின் சாயலைக் கண்டு பிடித்துவிட்டேன். பொன்.அநுர.
என் அருகே வந்து அநுர கைகுலுக்கினார். பெட்டியை சாலையோரமாக இழுத்துச்சென்று மறுபக்கம் அவரது கார் நின்ற இடத்தை அடைந்தோம். காரில் ஏறிக்கொண்டு கிளம்பினோம். ”உங்களை இன்றைக்கு சாயங்காலம் ஆசி.கந்தராசா வீட்டிலே கொண்டுபோய் விடுவேன். அதுவரைக்கும் நீங்க என்கூட இருக்கலாம்…”என்றார். மித்ர பதிப்பகத்தின் உரிமையாளரான அநுர ஒரு மருத்துவர். மருத்துவத்துறையின் பல தளங்களில் பணியாற்றிவிட்டு இப்போது மருத்துவ நிறுவனம் ஒன்றின் பொறுப்பாளராக இருக்கிறார். பொதுவாக இலக்கியவாதிகளின் பிள்ளைகள் அவரது இலக்கியச்செயல்பாடுகள் மீது மதிப்பே இல்லாமல் இருப்பதுதான் வழக்கம். சுந்தர ராமசாமிக்கு கண்ணனும் எஸ்பொவுக்கு அநுரவும் விதிவிலக்கான குழந்தைகள்.
அநுரவுடன் சிட்னி துறைமுக மேம்பாலம் அருகே அதைப்பார்த்தபடி அமைந்திருக்கும் சாலையோர உணவங்களின் வரிசை ஒன்றில் உணவருந்தச் சென்றோம். சீன உணவு பிடிக்குமா என்றார். ஆம் என்றோம். அங்கே சாப்பாடு மிகவும் விலை அதிகம். காரணம் அந்த இடம்தான். அஸ்திரேலியாவின் முக அடையாளமே சிட்னி பாலமும் அருகெ உள்ல ஓபரா ஹாலும்தான். இந்தியாவுக்கு டெல்லி கேட் போல. அந்த இஅத்திலிருந்து அப்பகுதியை நன்றாகவே பார்க்க முடியும்.
உணவகத்தில் இருந்த சீனர் பணிவுடன் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அருண்மொழியும் அநுரவும் மெனு ஆராய்ச்சியில் இறங்கினார்கள். நான் எப்போதுமே மெனுவை ஆராய்வதில் நேரம்செலவிடுவதில்லை. ஒருவழியாக அவர்கள் உத்தரவு கொடுத்தார்கள். பீங்கான் கிண்ணத்தில் டீ போன்ற சூடான திரவம் ஒன்றை கொண்டுவந்து வைத்த சீனர் அது கைகழுவுவதற்கு என்று தனியாகச் சொன்னார். இறாலுக்கு சொல்லியிருந்தார்கள். இறால்களை உயிருடன் ஒரு பிளாஸ்டிக் பொட்டலத்துக்குள் உள்ள நீரில் நீந்தவிட்டு கொண்டுவந்து காட்டினார்.
பின்னர் அவற்றை அப்படியே நீராவியில் அவித்து கொண்டுவந்து மேஜைமுன் வைத்தார். அவற்றை நாமே ஒவ்வொன்றாக எடுத்து தோலை பொளித்து உள்ளே உள்ள ‘பருப்பை’ எடுத்து சாப்பிட வேண்டியதுதான். அந்த முறை ஊரில் நெத்திலி, இறால் போன்ற எல்லா மீன்களுக்கும் கொண்டுவரலாம் என அருண்மொழி சிந்தனை செய்திருப்பாள். ஊரில் மீன் சமையலின் சள்ளைபிடித்த வேலையே மீனை சுத்தம்செய்வதுதான். சீனர் நான்குவகையான கறிரசங்களை [சாஸ்] கொண்டுவந்து வைத்தார். அவற்றில் இறாலைத் தொட்டு உண்ண வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். ஒன்றில் நல்ல கருவாட்டு வாசனை. நன்றாகவே இருந்தது.
அதன்பின்னர் தக்காளிச்சாறு போட்டு சமைத்த கோழி. தகடுகளாகச் சீவிய ஆட்டுக்குட்டி இறைச்சி. மாமிசத்தாலேயே வயிறு நிறைய உண்பது இந்தியாவில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நமக்கு மாமிசம் பக்கவாத்தியம் மட்டும்தானே. மேலும் சீன மாமிச உணவு எண்ணையிலும் வெண்ணையிலும் பொரித்தது அல்ல. பெரும்பாலான பொருட்களை நீராவியில் வேகவைத்துத்தான் சமைக்கிறார்கள். தாளிப்பதும் இல்லை. எண்ணையே மிகக் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
சிட்னியின் பாலத்தை அங்கே கோட்ஹேங்கர் என்று சொல்கிறார்கள். அதன் அமைப்புதான் காரணம் . இது சிட்னியின் மையநிலத்தை சிட்னியின் கடல்பகுதியுடன் இணைக்கிறது. நடுவே உள்ள ஆழமான கடல் உள்நீட்சியின் மீது இது எழுப்பப் பட்டிருக்கிறது. சிட்னியின் ராக்ஸ் பகுதியில் உள்ல மில்லர்ஸ் பாயிண்ட் என்னும் இடத்தில் இருந்து வடக்கு கடற்கரையில் உள்ள மில்சன்ஸ் பாயிண்ட் என்னும் இடம் வரை இந்தப்பாலம் உள்ளது ஆறு பட்டைச் சாலைகள், இரண்டு ரயில் சாலைகள்,சைக்கிள் சாலைகள் மற்றும் நடைபாதைகள் உள்ளன. இப்பாலத்தின் மேலே உள்ள நெடுஞ்சாலை பிராட்பீல்ட் நெடுஞ்சாலை எனப்படுகிறது. இரண்டரை கிலோமீட்டர் நீளமுள்ளது இது
1815 முதலே இபப்டி ஒரு பெரிய பாலத்தைக் கட்டவேண்டுமென்ற திட்டம் இருந்திருக்கிறது. 1900த்தில்தான் முடிவு எடுக்கப்பட்டது. பாலத்தின் முன்வரைவுக்காக ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. 1911ல் ஒரு முன்வரைவு அங்கீகரிக்கப்பட்டது. 1912ல் ஜான் பிராட்·பீல்ட் பாலத்தைக் கட்டுவதற்கான முதன்மைப்பொறியாளராகவும் டேனியல் நியூலான் உதவி பொறியாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். உலகின் பல்வேறு பாலங்களை நேரில்சென்று பார்த்த பின்னர் ஜான் பிராட்·பீல்ட் நியூயார்க் நகரின் ஹெல்கேட் பாலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இதை வடிவமைத்தார். அதற்குள் முதல் உலகப்போர் வெடித்தமையால் திட்டம் 1922 வரை ஒத்திப்போனது
1922 நவம்பரில் நியூசவுத் வேல்ஸ் பாராளுமன்றம் பாலம் கட்டும் பணியை துவக்க ஆணையிட்டது. உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. ஜான் பிராட்·பீல்ட் அதை நிர்வாக பொறியாளராக இருந்தார். பிரிட்டிஷ் நிறுவனமான டோர்மன் லாங் ஆண்ட் கோ லிட்[ மிடில்பரோ ]ஒப்பந்தத்தைப் பெற்றது. சர் .ரால்ப் ·ப்ரீமான் டோர்மன் லாங் நிறுவனத்தின் தலைமைப்பொறியாளர். கட்டிட வரைவாளர்கள் பிரிட்டன் நிறுவனமான ஜான் பர்னெட் ஆண்ட் பார்ட்னர்ஸ் கிளாஸ்கோ.
இந்தப்பாலம் கட்டப்படும்போதுதான் சிட்டி சர்கிள் என இன்று அழைக்கப்படும் சிட்னி நிலத்தடி ரயில்பாதைகளும் அமைக்கபப்ட்டன. பாலத்தின் அமைப்பும் அதனுடன் ஒத்துப்போகும்படியாக அமைக்கப்பட்டது. 1923ல் இதைக் கட்டும் பணி ஆரம்பமாகியது. ஜூலை 23 1923ல் இதன் கால்கோள் விழா நடந்தது. அஸ்திவாரப்பணிகள் 1928ல்தான் முடிவடைந்தன. அதன்பின் 1929ல் பாலத்தைக் கட்டும் பணி ஆரம்பமாகியது. இந்த பாலம் இரு கரைகளிலும் இரு பகுதிகளாக தனித்தனியாகக் கட்டப்பட்டது. தெற்குபகுதியில் பாலம் ஒரு மாதம் முன்னதாகவே பணிகள் நடக்கும்படி கட்டப்பட்டது. அந்தக் கட்டுமானத்தில் ஏதேனும் பிழைகள் நேர்ந்தால் அது வடக்கில் நிகழாதபடி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது
சுமைதூக்கிகள் மற்றும் தாங்குக் கம்பிகள் உதவியுடன் அந்தரத்தில் கட்டி எழுப்பப்பட்ட இந்தப்பாலத்தின் இரு பகுதிகளும் மெல்லமெல்ல இறக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டு தாங்கு கம்பிகள் நீக்கம்செய்யபப்ட்டன. 1929 ஆகஸ்ட் 19 ஆம்தேதி இப்பணி முடிவடைந்து பாலம் முழுமைபெற்றது. பாலம்மீது சாலை மற்றும் ரயில்பாதை போடும் பணி 1931ல்தான் முடிவுற்றது. 1932ல் முதல் நீராவி யந்திர ரயில் பாலத்தின் மீது ஓடியது. இப்பாலம் கட்டப்படும்போது பதினாறுபேர் இறந்திருக்கிறார்கள். மொத்தம் ஒருகோடி பவுன் செலவாகியிருக்கிறது. இது முதலில் திடமிட்டதைவிட இருமடங்காகும். 1932 மார்ச் மாதம் 19 ஆம் தேதி நியூசவுத்வேல்ஸ் கவர்னர் சர் பிலிப் கேம் முறைப்படி பாலத்தை திறந்துவைத்தார். அன்றுமுதல் இன்றுவரை சிட்னி பாலம் ஆஸ்திரேலியாவின் கம்பீரமான அடையாளமாக நிலைகொள்கிறது.
கடல்மேல் நிற்கும் அந்தப்பாலத்தை பார்த்துக்கொண்டிருப்பது வினோதமான மனக்கிளர்ச்சியை அளித்தது. அது கல்கத்தாவின் ஹௌரா பாலத்தை நினைவூட்டியது. காசியில் கங்கைமேல் உள்ள பெரும் பாலமும் சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்துசென்றது. பிரிட்டிஷ் கட்டிடக்கலை இரும்பை உபயோகித்து பெரும் கட்டுமானங்களை அமைப்பதில் வெற்றி பெற்ற ஒன்று. இந்தியா முழுக்க அவர்கள் அமைத்த இரும்புக்கட்டுமானங்கள் பல உள்ளன. எங்களூரில் திருவட்டாறில்கூட ஆற்றுக்குக் குறுக்கே ஒரு இரும்புப்பாலம் எழுபதுகள் வரை பயன்பாட்டில் இருந்தது.
இரும்பு ஐரோப்பியத் தொழிற்புரட்சியின் அடையாளம். ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் ஒருமுறை தொழில்புரட்சியை ‘மனித குலத்துக்கு மேல் கம்மியன் கொண்ட வெற்றி’ என்றார். நிலக்கரியும் இரும்பும் சந்தித்தபோது தொழில்புரட்சி பிறந்தது என்று சொல்லப்படுவதுண்டு. உலோகங்களை உருக்குவதில் பெற்ற வெற்றியே தொழில்புரட்சிக்கு அடிப்படை. அவ்வுலோகங்களின் அரசன் இரும்புதான். அரசன் என்பது நிலப்பிரபுத்துவ பெயர். சர்வாதிகாரி என்று சொல்லவேண்டும்.
தொழிற்புரட்சியை நிகழ்த்திய சர்வாதிகாரிகள் இரும்புமனிதர்கள் என அழைக்கப்பட்டார்கள்– ஆட்டோவான் பிஸ்மார்க், அட்டாதுர்க் முஸ்தபா கமால் பாஷா. அந்த தொழிற்புரட்சியின் விளைவான மார்க்ஸியப்புரட்சியும் தன்னை இரும்புடன் அடையாளப்படுத்திக்கொண்டது. ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர். ருஷ்யபுரட்சியைப் பற்றிய ஒரு நாவல் அதை ”இரும்புவெள்ளம்” என்று அடையாளப்படுத்திக் கொண்டது. இரும்புவெள்ளம் குறித்த ஒரு சித்தரிப்பு என்னுடைய ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் உள்ளது.
பலவகையிலும் இரும்பு தொழிற்புரட்சியின் சின்னம். உறுதியால் மட்டுமல்ல. பல நுண்ணிய கூறுகள் கலந்து இணைந்து ஒற்றைப்பேருறுப்பாக எழுந்து நிற்பதிலும்கூடத்தான். ஒரு பொதுக்கட்டமைப்பில் பலநூறு உட்கூறுகளை கச்சிதமாக இணைக்கும் முறையே தொழிற்புரட்சி உலகுக்கு அளித்த கொடை. ஒரு சாதாரண சைக்கிளில் எத்தனை வகையான திறமைகள் ஒருங்கிணைகின்றன. ஒரு தொழிற்சாலை எத்தனை வகையான நடவடிக்கைகளின் தொகை! அந்த அமைப்பு நுட்பமே நவீன ராணுவங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. நவீன அரசுகளாக ஆகியது.
பொன் அநுரவுடன்
அந்தப்பாலத்தைப் பார்ப்பதே பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பார்ப்பதுபோல் இருந்தது. இயற்கைக்கு எதிராக மானுட உழைப்பின் சவால் போன்றது அது. அதிகாரம், மிடுக்கு, கொஞ்சம் ஆணவம். அதன்மேல் மனிதர்கள் சின்னஞ்சிறிய உருவங்களாகச் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனிதர்கள் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணமும் அதேசமயம் தன்னை மானுடம் என ஒன்றாக திரட்டி இணைத்துக்கொள்கையில் எத்தனை வலிமை வந்து சேர்கிறது என்ற எண்ணமும் ஏற்பட்டது.
சிட்னி பாலத்துக்கு அருகே இருக்கிறது சிட்னி ஓபரா ஹவுஸ். ஒருவகையில் சிட்னி பாலத்தின் இன்னொரு வடிவம் அது. நவீன தொழிற்புரட்சியின் தொழில்நுட்பத்தின் அடையாளம் அந்தப்பாலம். அந்தத் தொழில்நுட்பம் கலையாக ஆவதன் சித்திரமே சிட்னி ஓபரா ஹவுஸ். அதை உலோகத்தின் கலைவடிவம் என்று சொல்லல்லாம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் கருங்கல், தாஜ்மகால் வெண்கல். இது உலோகம். முற்றிலும் வேறு காலகட்டத்தின் கலை. சினி பாலத்தின் அருகே துறைமுகம் நோக்கி நீளும் நிலத்துருத்தில் பென்னிலாங் பாயின் என்னும் இடத்தில் இருக்கிறது இது.
1950களில்தான் இந்த கட்டிடத்தைக் கட்டும் எண்ணம் நியூ சவுத் வேல்ஸ் அரசுக்கு எழுந்தது. இதற்கென ஒரு நிதி அமைக்கப்பட்டது. சர்வதேச போட்டி ஒன்று நடத்தப்பட்டு அதில் டேனிஷ் கட்டிட வரைவாளரான ஜோர்ன் உட்ஸொன் அவர்களின் மாதிரி வடிவம் தேர்வுசெய்யப்படது. அந்தவடிவம் அக்காலத்தின் கட்டிடக்கலையின் சாத்தியங்களுக்கு அப்பாற்படதாக இருந்ததாகவும் உட்ஸொன் அதை தேவைக்கேற்ப மாற்றி 1961ல் முழுமைப் படுத்தி அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக்கட்டிடம் மிகுந்த பொருட்செலவை இழுத்தது. ஆகவெ 1966ல் இதைக் கட்டுவதையே அரசு நிறுத்தி வைத்தது. உட்ஸொன் மனம் உடைந்து ராஜினாமா செய்து சென்றார். பின்னர் மீணும் ஆரம்பிக்கப்பட்டு சில சமரசங்களுடன் 1973ல் கை முடிக்கப்பட்டது. 1973 அகோபர் 20 அன்று பிரிட்டனின் எலிஸெபெத் மகாராணியால் இது திறந்து வைக்கப்பட்டது. இப்போது உலக கலைச்செல்வங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்படிருக்கிறது.
இக்கட்டிடத்தில் 2194 கான்கிரீட் தூண்கள் வார்த்து இணைக்கபப்ட்டன. 350 கிலோமீட்டர் தூரமுள்ள இரும்புக்கம்பிகள் இழுத்துக்கட்ட பயன்படுத்தப்பட்டன. பத்துலட்சம் ஓடுகள் கூரைமேல் பதிக்கப்படன. 6225 சதுர மீட்டர் கண்ணாடியும் 645 கிலோமீட்டர் மின்கம்பிகளும் பயன்படுத்தப்பட்டன. நவீனத்தொழில்நுட்பத்தின் வெற்றியை அறைகூவும் ஒரு ஆக்கம் இது.
ஓபரா ஹவுஸ் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய கட்டிடக்கலையின் இரண்டாவது கட்டத்தைச் சேர்ந்தது. ஈ·பில் டவர் முதலியவை முதல் காலகட்டத்தின் வடிவங்கள். தொழிற்புரட்சி உலோகங்களை வென்றதும் கட்டுமானத்துக்கு உலோகம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. அதுவரை கட்டுமானத்தில் இருந்த பல எல்லைகளை அது உடனடியாகக் கடந்தது. நம்முடைய கருங்கல் கோயில்களைப் பார்த்தால் அதிகபட்சம் இருபதைந்தடி அளவுக்குத்தான் கருங்கல் தூணையும் சட்டங்களையும் பிளந்தெடுக்க முடியும் என்னும் எல்லைக்குள் அவற்றின் அமைப்பு நிற்பதைக் காணலாம். அதே போல முகலாயக் கட்டிடக்கலை தூண்களை தவிர்க்கும்போது செங்கல்லால் ஆன கும்மட்டங்களை நாடவேண்டியதாயிற்று.
இந்த எல்லைகளை புதிய கட்டிடங்கள் சாதாரணமாக மீறின . தூண்கள் இல்லாத கூரைகள். பிடிப்பு இல்லாத எடுப்புகள். தாங்குகளும் வளைவுகளும் தேவையில்லாத அமைப்புகள் என பல சுதந்திரங்கள். ஆனால் காட்சி சார்ந்து அதற்கு முந்தைய காலகட்ட கட்டிடங்களின் பாதிப்பே நீடித்தது. தொழிற்புரட்சி உருவாக்கிய கட்டிடங்கள் அவற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் கட்டிடங்களை இன்னும் பிரம்மாண்டமாக இன்னும் சிக்கலாக செய்து பார்ப்பதாகவே ஆரம்பத்தில் இருந்தன. அவையே கண்ணுக்கு அழகு என்று அப்போது தோன்றின.
ஒரு கட்டிடமுறை தொழில்நுட்பம் சார்ர்து தேவையில்லாமல் ஆனால்கூட அழகுணர்வு சார்ந்து அப்படியே நீடிக்கிறது. நம்முடைய கல்கோயில்களைப் பார்த்தால் அவற்றில் கல்லிலேயே மரக்கூரையில் உள்ளதுபோன்ற உத்தரங்களும் பட்டியல்களும் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றுகான அமைப்புசார்ந்த தேவை இல்லைதான். ஆனால் அழகியல் ரீதியாக மனம் மரக்கட்டிடங்களை விட்டு வெளிவரவில்லை என்பதே காரணம். அதேபோல இன்றும் இஸ்லாமிய, சீக்கிய கட்டிடக்கலையில் கும்மட்டங்கள் உள்ளன. செங்கல்லால் உயரமான அமைப்புகளைக் கட்ட வளைவான கும்மட்டங்கள் தேவை. கான்கிரீட் வந்த பின்னர் கும்மட்டங்கள் தேவை இல்லைதான்.ஆனால் அழகுணர்வு அங்கேயே நின்றுவிடுகிறது
அடுத்த காலகட்டத்தில் அந்த முந்தையகால அழகுணர்வின் பிடியில் இருந்து கட்டிடக்கலை விடுபட முயன்றது. அதில் பிக்காஸோ போன்றவர்களின் கியூபிஸத்துக்கு பெரும் பங்கு இருந்தது என்கிறார்கள். இயற்கையின் வடிவங்களை பலவாறாக கலந்தும் மாற்றியமைத்தும் புத்தம் புதிய கட்டிட அமைப்புகள் கற்பனையில் உருவாக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் ஓப்பரா ஹால். இது முக்கால்வாசி மலர்ந்த ஒரு மலர் போல இருக்கிறது. அல்லது சிப்பியின் ஓடுகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வைத்து உருவாக்கபப்ட்டது போல் இருக்கிறது. பெரியதோர் கிளிஞ்சல் போலவும் தோற்றமளிக்கிறது.
அதன் பயன்பாட்டை விட ஒரு புதிய வகை அழகுக்காக செய்யப்பட்ட முயற்சியே முக்கியமானது. அதை ஒரு கடிடம் என்று பார்க்கும்போது நமக்கு ஒரு துணுக்குறல் ஏற்படுகிறது. இதென்ன என்று. அதை கட்டிடம் என ஏற்க நம்முடைய வழக்கமான வடிவபோதம் தடுக்கிறது. ஆனால் மெல்லமெல்ல கண்பழகும்போது அதை ரசிக்க முடிகிறது. குறிப்பாக சிட்னி பாலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நின்றுகொண்டு பல கோணங்களில் அதை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது மெல்லமெல்ல அது நம்மை கவர ஆரம்பிக்கிறது.
இருட்ட ஆரம்பிக்கும் வரை அங்கேயே நின்றோம். பின்னர் அநுரவின் காரில் ஏறி ஆசி கந்தராஜா அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். சென்று சேர இருட்டிவிட்டது. சிட்னியின் நெடுஞ்சாலைகளில் கார்கள் பெருக்கெடுத்தோடிக்கொண்டிருந்தன. ”ஓப்பரா ஹோலிலே நெல்ஸன் மன்டேலா வந்து பேசினார். 27 வருசம் சிறையிலே இருந்தபிறகு விடுதலை ஆகி அவர் வந்து பேசிய முதல் வெளிநாடு இதுதான்” என்றார் அநுர. அப்போது மாணவனாக இருந்த அநுர அந்த உரையை பெரும் ஆர்வத்துடன் சென்று கேட்டிருக்கிறார் ”அவரோட போராடங்களிலே ஆஸ்திரேலியா துணைநின்றது”
”விசித்திரமான கட்டிடம் அது” என்றாள் அருண்மொழி. நானும் அப்போது அதைத்தான் நினைத்தேன். அந்த கட்டிட வடிவமைப்பில் ஒரு குழந்தைத்தனம் உள்ளது. ஒரு மாபெரும் நிபுணரின் குழந்தைத்தனம் அது. எல்லா பெரிய கலையிலும் குழந்தைத்தனம் ஒன்று இருக்கும். அதுவே அந்தக்கலையின் மையம். ஒரு மொழியில் முற்றிலும் புதிய சொல்லாட்சியை குழந்தை அல்லது குழந்தைமனம் கொண்ட கவிஞன் மட்டுமே உருவாக்க முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. எல்லா கலையிலும் அந்த அடுத்தகட்டப் பாய்ச்சல் அதுவரை கற்றதையெல்லாம் உதிர்த்துவிட்டு குழந்தையாக நிற்கும் மேதையால்தான் நிகழ்த்தப்படுகிறது. பிக்காஸோவின் பல படைப்புகளைப் பார்க்கையில் ஆசாமி விளையாடுகிறார் என்று தோன்றுவதுண்டு.
சிட்னி பாலத்தைக் கட்டியவன் இயற்கையை சவாலுக்கழைக்கிறான். ஓபரா ஹாலைக் கட்டியவன் இயற்கையுடன் விளையாடுகிறான். ஒரு மாபெரும் கிளிஞ்சலைச் செய்து அவள் கடற்கரையில் போட்டு வைத்துவிட்டு சிரிக்கிறான் என எண்ணிக்கொண்டேன்.