எஸ்.வி.ராஜதுரையின் கடிதமும் பதிலும்

ஜெயமோகன்

எனது எதிர்வினையைப் பிரசுரித்து விட்டு, மிக சாதுரியமான வார்த்தைகளால் என் மீது உங்கள் வளைத் தலத்தில் 20.6.2012 அன்று நீங்கள் செய்துள்ள அவதூறை மறைக்கவும் மறுக்கவும் முயற்சி செய்திருக்கிறீர்கள்.

23.06.2012 அன்று உங்கள் வளைத் தளத்தில் எழுதுகிறீர்கள்:

“நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?”

“நான் அக்கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியபடி நிதியுதவிகள் பெரும்பாலும் பலவகையான அறிவார்ந்த நோக்கங்கள் சொல்லப்பட்டு விதவிதமான பண்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி போல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதே நமக்கு உண்மை தெரிகிறது. இல்லையேல் வாய்ப்பே இல்லை.

“அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.

“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.”

இப்போது,ஜெயமோகன், உங்கள் வளைத்தளத்தில் 20.6.2012 அன்று நீங்கள் எழுதிய வரிகளை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார்.மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும்.நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”.

லீனா மணிமேகலைக்கும் காலச்சுவடு கண்ணனுக்கும் நடக்கும் சர்ச்சைகள் குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றின் பகுதியாக அமைந்துள்ள இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? ·போர்ட் ·பவுண்டேஷனிடமிருந்தோ அல்லது இது போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களிலிருந்தோ நான் பணம் பெற்றுள்ளேன், அதுவும் ‘சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பை அளிக்கும் அளவு’க்கு பெற்றுள்ளேன் என்பதுதானே நீங்கள் எழுதியுள்ள வரிகளுக்கு அர்த்தம்?

இது என் மீது செய்யப்பட்ட அவதூறு அல்ல என்று கூறுகிறீர்கள். “நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?” என்று கேட்கிறீர்கள்.

எனது எதிர்வினையில் நான் எழுப்பிய கேள்வி இதுதான்: “அவருக்கு (ஜெயமோகனுக்கு) நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும். அவருக்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் தர விரும்புகிறேன்”.

வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பெரியார் பற்றிய நூலை நானும் வ.கீதாவும் எழுதிய பிறகுதான் இந்திய தேசி¢யம், இந்துப் பண்பாடு, நேரு, காந்தி போன்றோரை இழிவுபடுத்தும் ‘இந்து இந்தி இந்தியா’போன்ற நூல்களை நான் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறீர்கள். இந்த்துத்துவ எதிர்ப்பை வெளிப்படுத்துகிறவர்களுக்கு வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கின்றன என சங் பரிவாரம் கூறி வரும் கருத்தை ஒத்ததுதான் இது. உண்மையில் ‘இந்து இந்து இந்தியா’ நூல் வெளிவந்ததோ 1993இல். பெரியார் குறித்து நான் தனியாகவோ,வ.கீதாவுடன் இணைந்தோ எழுதிய நூல்கள் 1996இல் இருந்துதான் வெளியாகின.அதற்கு முன்பு, அயோத்திதாசர் குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் இந்துத்துவம் குறித்தும் நாங்கள் ஆங்கிலத்தில் சில கட்டுரைகள் எழுதியுள்ளோம்.

எனது புத்தகங்களைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ நீங்கள் கொண்டிருக்கும் கருத்துகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவற்றைக் குப்பைக்கட்டு எனத் தூக்கியெறிவது உங்கள் கருத்துச் சுதந்திரம்.

ஆனால்,’சராசரி வாசகர்களுக்குக் கொஞ்சம் பிரமிப்பை அளிக்கும் அளவுக்கு’ நான் ஏதேனும் ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுள்ளதாக நீங்கள் சொல்லும் ‘அவதூறுக்கு’ (உங்களைப் பொருத்தவரை இது வெறும் தகவலோ,கருத்தோ மட்டுமதான்) நிரூபணமாக நீங்கள் கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறீர்கள்:

“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.”

என் மீது நீங்கள் சுமத்தியுள்ளது அவதூறு அல்ல, தக்க சான்றாதாரங்களின் அடிபபடையில் முன் வைக்கப்படும் தகவல் மட்டுமே என்று எனது எதிர்வினைக்குப் பிறகே மேற்சொன்ன வரிகளை எழுதியுள்ளீர்கள். இதை உங்கள் சொந்த அறிவைக் கொண்டு அல்ல, வேறு யாரோ தந்த தகவலின் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறீர்கள். ஏனெனில் ‘விடியல் பதிப்பகம்’ 1996இல் வெளியிட்ட ‘பெரியார்:சுயமரியாதை சமதர்மம்’ நூலின் முதல் பதிப்பில் உள்ள எங்கள் முன்னுரையின் ix-xiஆம் பக்கங்களில் எங்கள் நூலின் ஆக்கத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவிய நண்பர்கள், சமூக செயலார்வலர்கள் ஆகியோரின் பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். இந்தப் பெயர்களில் எந்த உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரும் இல்லை. உங்களால் ‘குப்பைக் கட்டு’ என்று கருதப்படும் இந்த முதல் பதிப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது உங்களைப் போன்ற சாமர்த்தியசாலிகளுக்குக் கடினமானதல்ல.

இருப்பினும், நான் இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொண்டு தப்பி ஓட விரும்பவில்லை. துப்பறியும் பணியில் ஈடுபட வைத்து உங்களை சிரமப்படுத்த விரும்பாததாலும் நீங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கும் ஒளிவுமறைவற்ற தன்மையை நானும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலும், உங்களுக்குக்கு நானே ஒரு தகவலைத் தர விரும்புகிறேன். வ.கீதாவும் நானும் Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar’ என்னும் நூலின் முதல் பதிப்பின் (1998இல் கல்கத்தாவிலுள்ள ‘சாம்யா’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது) viiஆம் பக்கத்தில் அந்த நூலை எழுதுவதற்கான எங்களது ஆராய்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் உதவியவர்கள் என்ரு ஒரு பெரிய பட்டியலையே தந்திருக்கிறோம். அதில் உள்ள வரிகளிலொன்று: “None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work”.

ஜெயமோகன், இந்தத் தகவலுக்கு உங்கள் கற்பனை வளத்துக்கேற்ப விளக்கம் தந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. எனினும், எனது முதல் எதிர்வினையில் நான் கேட்ட கேள்வியை நான் மாற்றிக் கொள்ளவில்லை: “ஜெயமோகனுக்கு நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும்.”

உங்களது அவதூறை சட்டரீதியாக எதிர்கொள்ள எனக்கு இன்னும் வாய்ப்பி¢ருக்கிறது

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ஆர் அவர்களுக்கு,

சாமர்த்தியமான எதிர்வினை என்கிறீர்கள். நீங்கள் என் மீது சுமத்திய கூடங்குளம் பற்றிய அவதூறை அப்படியே தாண்டிச்சென்றதையே நான் சாமர்த்தியம் என்கிறேன். அதை உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் என்னிடம் ஒளிக்க ஏதுமில்லை.

உண்மையில் என்னைப்போன்ற ஒருவர் செய்யக்கூடாத பணியை ஒரு உந்துதலின் விளைவாக காமா சோமாவென்றுசெய்துகொண்டிருக்கிறேன். முறையான ஆய்வோ தகவல்சரிபார்ப்போ இல்லாமல் என்னுடைய நினைவுகளையும் மனப்பதிவுகளையும் கொண்டு கருத்துச் சொல்கிறேன். இதிலுள்ள அபாயங்கள் தெரியும். பிழை வந்தால் வரட்டும், ஆனால் மனமறிந்த உண்மையை சொல்லிப்பார்ப்போமே என்ற துணிவுதான் என்னுடையது. எந்நிலையிலும் என்னுடைய சொந்த நேர்மையை மட்டுமே நான் ஆதாரமாக கொள்கிறேன். எந்த மேடையிலும் அதையே முன்வைக்கிறேன்.

ஏனென்றால் நான் நன்றாக அறிந்த ஒரு உண்மையை பொது விவாதத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்தியாவில் இன்று புழங்கும் கருத்துக்கள் பலவற்றுக்குப்பின்னால் பல்வேறு நிதியுதவிகள் இருக்கின்றன. அவற்றை விவாதிக்காமல் கருத்துக்களை விவாதிப்பது வீண்வேலை. அவ்வாறு நிதியூட்டப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவில் ஏதேனும் வகையில் பிரிவினையை, பிளவுகளை உருவாக்கக்கூடியவை. நீண்டகால அளவில் பெரும் வன்முறைக்கும் மானுட அழிவுக்கும் வழிவகுக்கக்கூடியவை.

அவை மானுட உரிமைகள், சமூகநீதி என பல்வேறு போலி முற்போக்கு வேடங்களில் வருகின்றன. அவற்றைப்பற்றிய எச்சரிக்கை நம் சமூகத்துக்கு அவசியம். உண்மையான மானுட உரிமைகள் ,சமூகநீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களில் இருந்து அவற்றை நாம் பிரித்துக்காண வேண்டும். அவற்றின் லேபிள்களை மட்டும் கவனித்தோமென்றால் அவை நம்மை மாபெரும் மானுட அழிவை நோக்கியே கொண்டுசெல்லும். அந்த அழிவில் குளிர்காய நினைக்கும் ஏகாதிபத்திய சக்திகளால் அவை இங்கே வளர்க்கப்படுகின்றன.

அவை பற்றிய தகவல்கள் மிகமிகக் குறைவே. நிரூபிக்கப்படத்தக்க தகவல்கள் அபூர்வம். ஏனென்றால் இந்த மாபெரும் சர்வதேச நிதிவலைப்பின்னலை நம் அரசுகள் கூட இன்னும் ஊடுருவவில்லை. ஆனாலும் அவற்றைப்பற்றி பேசுவதன் மூலம் நான் உருவாக்க விரும்பும் விளைவுகள் இரண்டு. ஒன்று, இப்படி ஒரு விஷயம் நிகழ்கிறதென்றே தெரியாமல் , தெரிந்தும் நம்பாமல் இருக்கும் பெரும்பான்மை வாசகர்களிடம் இதைப்பற்றி ஒரு விவாதத்தை உருவாக்குகிறேன். இரண்டு, சம்பந்தப்பட்டவர்கள் சிலரேனும் சுயவிளக்கமளிக்கும் கட்டாயத்தை உருவாக்குகிறேன்.

ஆகவேதான் இவற்றைப்பற்றி பேசுகிறேன். போதாத தகவல்களுடன். பெரும்பாலும் ஊகங்களுடன். ஆனால் இது ஒரு தொடக்கமே. இது தொடங்கிவிட்டால் ஆராய்ச்சித்திறனும் அதற்கான வாய்ப்புகளும் உடையவர்கள் உள்ளே வருவார்கள்.

*

நேற்று உங்களுக்கான எதிர்வினையை வைத்ததுமே நள்ளிரவிலேயே நண்பர்கள் சொன்னார்கள் பெரியார் பற்றிய அந்த நூலில் -ஆம் அந்த குப்பைக்கட்டில் – நான் சொன்ன தகவல் இல்லை என. ஆனால் என் நினைவில் தகவல் இருந்தது, நான் அதற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறேன். அதை திடமாகவே நம்பினேன். ஆனால் மூளையிலிருந்து வெளியே எடுக்கமுடியவில்லை.

ஆகவே முதன்முதலில் என்னிடம் இந்த விவகாரத்தைப்பற்றிப் பேசிய நண்பரிடமே கேட்டேன். அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். WACC யுடன் தொடர்பு கொண்டிருந்த இறையியலாளராக இருந்தவர். இன்று நாத்திகர். அவர்தான் உங்கள் நூலைச் சுட்டிக்காட்டினார். ஆம் நீங்கள் குறிப்பிட்ட நூலேதான். Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar.

என்னுடைய நினைவுக்குழப்பத்துக்கு முக்கியமான காரணம் இந்த அமைப்பின் உதவி உங்களுக்கு பெரியார் பற்றிய நூலுக்காகவே அளிக்கப்பட்டது என்றும் அதற்கும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உங்களுக்கு அவ்வமைப்புடன் தொடர்பிருந்தது என்றும் அந்நண்பர் முன்பு எனக்கு சொல்லியிருந்ததுதான்.. ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar. என்ற நூல் தமிழில் எழுதிய நூல்களை மறுஆக்கம் செய்தது என்ற நிலையில் அது இப்போதும் தர்க்கபூர்வமாகச் சரிதான்.

கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைப் பேசும் நூல்களில் ஆங்கிலநூலில் நீங்கள் WACC யை குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயமிருந்தது. அந்தக்குறிப்புதான் அந்நூலை மேலைநாட்டு பல்கலைகளுக்கு கொண்டுசென்று சேர்க்கும்.

இனிமேல் உங்களைப்பற்றி முடிவெடுக்கவேண்டியது உங்கள் முற்போக்குமுகத்தை நம்பும் உங்கள் வாசகர்களின் மனசாட்சிதான். மிக எளிதாக வார்த்தைகளைப்போட்டு எல்லாவற்றையும் நியாயபடுத்திவிடமுடியும்தான். அப்படி இல்லை இப்படி என்றெல்லாம் வாதிடலாம்தான். ஆனால் தன் மக்கள் மீதும் தன்னுடைய கொள்கைமீதும் நம்பிக்கை கொண்ட ஒரு இடதுசாரி உதவிபெறவேண்டிய தகுதிகொண்ட நிறுவனம்தானா WACC என அவர்கள் அந்தரங்கமாக முடிவுசெய்யட்டும்.

மிகமிக மென்மையாக அவர்களாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்களை மேற்கோள்காட்டியே சொல்வதென்றால் The World Association for Christian Communication (WACC) என்பது ஒரு சர்வதேச தன்னார்வ நிறுவனம். அதன் தலைமையகம் கனடாவிலும் பிரிட்டனிலும் இருக்கிறது. நிதியாதாரங்கள் அமெரிக்காவிலும் பரந்து கிடக்கின்றன. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைநாடுகளில் மதப்பரப்ப்புவேலைகளில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு 1500 க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளைகொண்ட ஒரு குட்டி அரசாங்கம். அதன் ஒட்டுமொத்த ஊழியர்கள் கிட்டத்தட்ட லட்சம்பேர்.

எந்தத் தன்னார்வ நிறுவனத்தைப்போலவும் WACC யின் அறிவிக்கப்பட்ட இலக்கு என்பது மானுட உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும் சமூகநீதியை உருவாக்குவதும்தான். ஆனால் தெளிவாகவே அவற்றை கிறித்தவ விழுமியங்களாக அவ்வமைப்பு கருதுகிறது. அதற்காக மட்டுமே அது போராடுகிறது. வறுமையும் உள்நாட்டுப்போரும் ஓங்கிய, ஆனால் கனிவளம் மிக்க, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீனமேரிக்காவிலும் தன் கிளைகளை விரித்துக்கொண்டு செயல்படும் WACC அளவுக்கு செல்வமும் செல்வாக்கும் கொண்ட அமைப்புகள் உலகில் மிகக்குறைவே

1950களில் இடதுசாரி கருத்துக்கள் உலகமெங்கும் பரவியபோது அதற்கு எதிராக கிறித்தவ மதக்கருத்துக்களைப் பிரச்சாரம்செய்யும்பொருட்டு உருவான அமைப்பு WACC . ஏற்கனவே தனித்தனியாகச் செயல்பட்டுவந்த பல்வேறு கிறித்தவ மதப்பிரச்சார அமைப்புகள் இந்த பொதுக்குடைக்கீழ் இணைந்தன. World Council of Churches போன்ற மாபெரும் தேவாலயக்கூட்டமைப்புகள் இந்த அமைப்புக்கு துணைச்சக்தியாகச் செயல்பட்டன. பின்னர் அவை இவ்வமைப்பில் இணைந்துகொண்டன.

1959ல் கேரளத்தின் முதல் கம்யூனிஸ்டு அரசைக் கலைத்ததில் இந்த அமைப்பின் பெரும்நிதியுதவி இருந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப்பகுதிகளில் பிரிவினைவாத, இனவாத இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணிச்சக்தியாகவும் இந்த அமைப்பு குறிப்பிடப்படுகிறது. இந்த அமைப்பு உலக அளவில் பல்வேறு வகையான பதற்றங்களையும் வன்முறைகளையும் உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

ஆப்ரிக்காவின் பலநாடுகளில் கிறித்தவதேசியவாதம் முளைத்தெழவும் அவை இஸ்லாமியதேசியங்களுடன் மோதி வன்முறைகள் வெடிக்கவும் இவ்வமைப்பு காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நைஜீரியாவில் பயாஃப்ரா என்ற கிறித்தவதேசிய இயக்கம் உருவாகி உலகின் மாபெரும் மானுட அழிவுகளில் ஒன்று நிகழ இவ்வமைப்பின் நிதி மற்றும் கருத்தியல் பின்னணி உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது

[உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்று நைஜீரியா உள்நாட்டுப்பிரச்சினைகளை ஓரளவு தீர்த்துக்கொண்டு தன்னுடைய பெட்ரோலியத்தை கொள்ளையிட்டுச்செல்லும் ஐரோப்பியநாடுகளுடன் முரண்பட்டு வினவ முனைகிறது. அதற்கு பதிலடியாக பயாஃப்ரா கிறித்தவக் குடியரசை உயிர்த்தெழச்செய்ய முயல்கின்றன ஐரோப்பியநாடுகள். பயாஃப்ரா குடியரசுக்கான போராட்டத்தின் புண்களை கிளறும் நோக்கமுடைய சிமொண்டா அடிச்சியின் நாவலை [Half of a Yellow Sun ,Chimamanda Adichie] அவை விருதுக்குமேல் விருதாகக் கொடுத்து உலகமெங்கும் தூக்கிப்பிடிக்கின்றன. அந்தக்குப்பையை ஒரு மாபெரும் மானுட ஆவணம் என்று விசுவாசமாக புகழ்ந்து நீங்களும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்]

லத்தீனமேரிக்காவில் இடதுசாரி இயக்கங்கள் உருவானபோது அவற்றுக்கு எதிராக கிறித்தவ பிரச்சாரம்செய்ய WACC பெரும் நிதியையும் முயற்சியையும் செலவிட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட போலி புரட்சிச் சிந்தனையான விடுதலை இறையியல் அதன் சிருஷ்டி என்று சொல்லப்படுகிறது. இன்று அதைப்பற்றி மிகவிரிவான தக்வல்கள் வெளிவந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக WACC யின் செயல்பாடுகள் என்ன? அவர்களே அறிவித்துக்கொள்ளும் செயல்திட்டங்கள் இவை. முக்கியமாக ஊடகங்களைக் கைப்பற்றுதல். அவற்றில் கிறித்தவக்கொள்கைகளை ஊடுருவச்செய்தல். பல்வேறு பண்பாடுகளை கிறித்தவப்பிரச்சாரத்துக்கு உகந்தவகையில் மாற்றி எழுதுவதற்கு ஊக்கமளித்தல். அப்பண்பாட்டுத்தகவல்களை தொகுத்து சர்வதேசத்தன்மை கொண்ட ஒரு தகவல்களஞ்சியத்தை உருவாக்குதல். அவற்றைக்கொண்டு கிறித்தவ மதப்பரப்பலுக்கு உகந்த கொள்கைகளை வடிவமைத்தல்.

அதை இப்படிச் சொல்லலாம். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த பொதுச்சிந்தனைகளையும் ஊடுருவுதல். செய்திகளில், வரலாற்று ஆய்வுகளில், அரசியல் சொல்லாடல்களில், கல்விப்புலங்களில் தங்கள் கருத்துக்களை நுழைத்தல். தங்களுடைய நீண்டகால திட்டங்களுக்கு ஏற்ப பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் திரித்து வடிவமைத்தல்.

அதற்காக எல்லா இடங்களிலும் அவர்கள் ஆட்களைக் கண்டடைகிறார்கள். அவர்களுக்கிருக்கும் செல்வவளம் என்பது நினைத்துப்பார்ப்பதற்கரியது. ஒருவேளை இந்திய அரசின் வரவ்செலவு கணக்கைவிடப்பெரியது அது. அந்தப்பணத்தை பல்வேறு வழிகளில் அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள். நூலாய்வுகளுக்கு நூலாக்கங்களுக்கான நிதியுதவிகள், கருத்தரங்குகளில் கட்டுரை படிப்பதற்கான அழைப்புகள். அவற்றின் நிதியளிக்கைகள் ஒருபோதும் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற அரசுகள் எளிதில் அவற்றை பெறுவதும் சாத்தியமல்ல.

எஸ்.வி.ஆர் சொல்லுங்கள், WACC யின் மேலே சொன்ன எந்த நோக்கங்களுடன் நீங்கள் ஒத்துழைத்தீர்கள்? அப்படி ஒத்துழைக்காவிட்டால் எதற்காக அவர்கள் உங்களுக்கு உதவினார்கள்? ஒரு ’மார்க்ஸிய களப்போராளி’ ஒத்துழைக்கவேண்டிய, உதவிபெற்றுக்கொள்ளவேண்டிய அமைப்புதானா அது?

உலகமெங்கும் WACC செய்வதென்ன என்பதை மிக எளிதாக ஒருவர் இணையம் மூலமே வாசித்து மேலே ஊகிக்க முடியும். ஒன்று நிதியுதவிகள் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பரப்பத்திட்டமிட்டுள்ள நாடுகளின் பண்பாட்டாய்வுகளை எழுதச்செய்கிறார்கள். பின்னர் அந்நூல்களை அப்பண்பாடுகளுக்கான ஆவணமாக, ஆதாரநூல்களாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்நூல்களை மேற்கோள்காட்டி அப்பண்பாடுகளைப்பற்றிய தங்கள் ஊடகப்பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

அதாவது நைஜீரியாவின் மதச்சூழல் பற்றி பற்றி என்ன எழுதவேண்டும் என்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதன் பின் அந்நூல் ஐரோப்பாவெங்கும் பல்கலைகழகங்களில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்படுகிறது. அதன்பின் அந்நூலை மேற்கோளாக்கி நைஜீரியாவின் மதச்சூழல் பற்றிய இதழியல்கட்டுரைகள், செய்திகள் எழுதப்படுகின்றன. தொலைக்காட்சிச்செய்திகள் உருவாக்கப்படுகின்றன. விளைவாக அவர்கள் விரும்பினால் பயாப்ராவை எழுப்பலாம், அணைக்கலாம்.

உங்கள் நூல் இன்று உலகின் பல பல்கலைகளில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்பட்டிருக்கும் சூழலில் அந்நூல் பெற்ற உதவிகள் என்ன என்று பார்ப்பது இந்திய வாசகனாக என் கடமை அல்லவா? அந்நூலை மேற்கோளாக்கி இன்று ஆங்கில ஊடகங்களில் எழுதப்படும் பல்வேறுசெய்திக்கட்டுரைகளை காணும்போது, அந்த ஆங்கிலக் கட்டுரைகளை ஒட்டி வட்டாரமொழிகளில் வரும் கட்டுரைகளை காணும்போது அவற்றின் பின்னணி என்ன என்று ஏன் நான் யோசிக்கக்கூடாது?

கடைசியாக எந்த ஒரு பொதுவாசகனும் கேட்கும் கேள்வி. இத்தனை பிரம்மாண்டமான ஓர் அமைப்பு, உலகம் முழுக்க பரவியிருக்கும் ஓர் அரசாங்கம், எப்படி உருவாகிறது? ஐரோப்பாவில் தேய்ந்துகொண்டிருக்கும் கிறித்தவத்துக்கு இத்தனை நிதி பக்தர்களின் நன்கொடையாக குவிகிறதா என்ன?

மார்க்ஸிய அரிச்சுவடி தெரிந்த எவருக்கும் தெரியும், இது ஏகாதிபத்தியத்தின் கைத்தடி என. மதம் அதன் வாகனம் மட்டுமே. அல்லது முகமூடி. நைஜீரிய அரசு எண்ணைக்கு நியாய விலை கோருவதை கைவிட்டால் பயாப்ரா கிறித்தவக்குடியரசு அப்படியே அணைந்து போகும். உலகமெங்கும் பரவும் ஐரோப்பிய வணிகநிறுவனங்களின் மீசைமுறுக்கல்தான் இந்த வகை அமைப்புகள். அதற்காகவே நிதி வந்து குவிகிறது.

உங்கள் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதாப் நைனான் தாமஸ் பற்றி இன்னும் விரிவாகவே சொல்லமுடியும். இங்கே WACC யின் உச்சநிலை தொடர்பாளராக இருந்து பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் வழிநடத்தியவர் அவர். இந்திய ஊடகங்களை ஊடுருவுவதலை விரிவாகவே ஆவணப்படுத்திய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பின்னர் WACC யில் இருந்து விலகி அதைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்.

அரவிந்தன்நீலகண்டன் -ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய உடையும் இந்தியா என்ற நூலில் கூட அவரது நூலைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. உலகமெங்கும் உள்ள கிறித்தவ செய்தி அமைப்புகள், பிரச்சார அமைப்புகள், ஆய்வு அமைப்புகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு ‘கிறித்தவ உம்மாவை’ உருவாக்கியிருப்பதை இவர் பெருமையுடன் அறிவிக்கிறார். இந்நூலில் இந்தியாவில் செயல்படும் இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகள் அவர்களின் அறிக்கைகளில் இருந்தே விரிவாக எடுத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீங்கள் உங்கள் கடிதத்திலேயே முன்ஜாமீன் எடுத்துவிட்டீர்கள். எளிதாக இந்துத்துவ பிரச்சாரம் என்று சொல்லி தாண்டிச்சென்று விடுவீர்கள். மதசார்பற்ற தன்மைக்காகத்தான் எல்லாம் என்று சொல்லிவிட்டால் இங்கே எதையும் செய்யமுடியுமே. ஆனால் நான் பேசுவது மார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் உங்கள் வாசகர் சிலருக்காகத்தான்.

உங்கள் நிதியாதாரங்களைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். ஒன்று உங்களுக்காக வ.கீதா நிதி பெற்றிருக்கிறாரா என்ற கோணத்தில். இரண்டு, பாரதிதாசன் பற்கலையில் பெரியாரியலாய்வு இருக்கையில் கௌரவப்பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி. அந்த இருக்கையின் நிதியாதாரம் என்ன என்ற கோணத்தில்.

கடைசியாக, நீங்கள் வழக்கு தொடுப்பதைப்பற்றி. நீங்கள் அதைச்செய்யலாம். நான் அது அவசியமான ஒரு தொடக்கமாக இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். பல காரணங்கள். ஒன்று, இந்த விஷயம் நீதிமன்றம் சென்றதென்றால் முறையாகவே ஒரு வழக்கறிஞரை அமைத்து பல விஷயங்களை ஆராயச்செய்யலாம். தகவலறியும் சட்டத்தைக்கொண்டு தகவல்களை பெறலாம்.

இது என்னைப்போன்ற ஒரு சாமானியன் எதிர்கொள்ளவேண்டிய விஷயமல்ல. கடல். ஒன்றும் உருப்படியாக சிக்காமல் போகலாம். அப்போது நான் தண்டிக்கப்படலாம். பரவாயில்லை. ஒரு பொதுவிவாதத்தை பிரபல ஊடகங்கள் வழியாக உருவாக்க அது எனக்கு உதவும். இனி இவ்விவாதம் அந்த தளத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்

உண்மையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதுரையில் இந்த நிறுவனத்துடன் உங்கள் உறவைப்பற்றி கேள்விப்பட்டபோது நான் இவ்வளவு பெரிதாக நினைக்கவில்லை. நம்மூர் கலைக்காவேரி போல கிறித்தவர்களின் ஒரு சில்லறை கலாச்சார நிதியுதவி அமைப்பு என்றே எண்ணினேன். மேலே சென்று யோசிக்கவுமில்லை. இன்று இணையம் வழியாக WACC பற்றி அறிய வரும்போது பதற்றமும் துயரமும் ஏற்படுகிறது. எஸ்.வி.ஆர், என்னதான் சொல்லுங்கள், நீங்கள் இதைச்செய்யலாமா? உங்கள் மனசாட்சியுடன் ஒரு கணமாவது இந்தச்சொற்கள் பேசாதா என ஏங்குகிறேன்.

ஜெ

WACC இணையதளம்

WACC லண்டன் இணையதளம்

முந்தைய கட்டுரைவிடியல் சிவா கடிதம்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன?