புல்வெளிதேசம் 12,வேட்டையும் இரையும்

மெல்பர்ன் நகரில் இப்போது இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் மேல் நடக்கும் இன ரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப்போராட்டங்கள் நடைபெறுகின்றன. சென்ற சிலநாட்களாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆந்திராவைச்சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். பஞ்சாபைச்சேர்ந்த ஒருவர் மேல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. அவற்றை இனம் தெரியாத இளம்வயது குற்றவாளிகள் செய்திருக்கிறார்கள்

அவை இனக் காழ்ப்பின் வெளிப்பாடுகள் என இந்திய மாணவர்கள் சொல்கிறார்கள். பேட்டிகளில் மாணவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் பல்கலை வட்டாரங்களில் இன ஒடுக்குமுறை காணப்படுவதாகவும் அவையே இவ்வாறு வன்முறையாக வெடிக்கின்றன என்றும் சொன்னார்கள். ஆஸ்திரேலிய அரசு அத்தாக்குதல்கள் இனக்காழ்ப்பு கொண்டவை அல்ல என்றும் அவை திருட்டு நோக்கம் கொண்ட குற்றங்களே என்றும், அவற்றைச் செய்தவர்கள் பொதுவாக பலவீனமான சிறுபான்மையினர் என்பதனால்தான் இந்தியர்களை தேர்வுசெய்திருப்பதாகவும் சொல்கிறது.

இவை எந்த அளவில் உண்மை என்று இப்போது சொல்ல முடியாது. பயணிக்கு ஒரு நாடை புதிய கண்களுடன் பார்ப்பதனால் சில நுண்மனப்பதிவுகள் கிடைக்கின்றன. அதேசமயம் உள்ளே உள்ள பல விஷயங்கள் கண்ணுக்குப் படாமலும் போகின்றன. ஆனால் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது பேராசிரியர் ஆசி. கந்தராஜா மற்றும் அவரது மகன் ஐங்கரன் இருவருடனும் உரையாடிய விஷயங்களை இவற்றுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் போது எனக்குச் சில புரிதல்கள் உருவாகின்றன.

பொதுவாக வளங்கள் பங்கிடப்படும்போதுதான் இனக்காழ்ப்புகள் உருவாகின்றன, அல்லது உருவாக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இனங்கள் நடுவே ஒற்றுமை இருப்பதற்கு அங்குள்ள ஏராளமான நிலவளம் முக்கியமான காரணம். இந்தியச்சூழலில் பொதுவாக அடிப்படை உழைப்புத்தளங்களில்தான் இனவாதம் முதலில் வெளிப்படும். ஆனால் ஆஸ்திரேலியாவில் நான் விசாரித்தவரை அப்படி அத்தளங்களில் இல்லை என்றே அனைவரும் சொன்னார்கள்.

 

அப்படியானால் கல்வியில் குறிப்பாக உயர்கல்வித்துறையில் இப்பிரச்சினை எழுவதற்கான காரணம் என்ன? மூன்று அமைப்புகளில் அங்கே கடைப்பிடிக்கப்படும் கொள்கைக்கு இப்போது உருவாகியிருக்கும் நிலைமையுடன் தொடர்புண்டு. ஒன்று , ஆரம்பக்கல்வி. இங்குள்ளது போன்ற கடுமையான பயிற்சிமுறைகள் அங்கே இல்லை. குழந்தைகள் உற்சாகமாகக் கற்கும்பொருட்டு எளிமையான கல்வியே உள்ளது. கிட்டத்தட்ட பழங்கால ஆயுதப்பயிற்சி களரிகளில் உள்ளது போன்ற மிகக்கடுமையான பயிற்சிகள் வழியாக கடந்துவந்த இந்திய, ஜப்பானிய மாணவர்கள் கடுமையாக உழைக்கவும் கவனத்தை ஒருங்கிணைக்கவும் பழகியிருக்கிறார்கள். ஆகவே மிக இயல்பாக அவர்கள் கல்வியில் மேலாதிக்கம் பெறுகிறார்கள்.

கலிபோலி போரில் இந்தியர்கள்

இரண்டு, குடும்பம். இந்தியக்குடும்பம் ஓர் இளைஞனை அவன் விரும்பிய உயர்கல்வி பெற்று வெளியே வந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்வதுவரை தாங்கி நிற்கிறது. பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஐரோப்பாவில் உள்ளதுபோல குடும்பம் இளைஞனை பதினெட்டுவயதுக்குமேல் புரப்பதில்லை. அவன் வெளியேற நேர்கிறது. ஆகவே உயர்கல்வியை அவன் தானே உழைத்து பொருள்சேர்த்து பெற வேண்டியிருக்கிறது. அத்துடன் குடும்பம் இல்லாத நிலையில் அவன் அடையும் உணர்ச்சி அலைக்கழிப்புகள் மற்றும் வழிதவறல்கள் அவனை கல்வியிலிருந்து விலக்குகின்றன

மூன்றாவதாக, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள உயர்கல்விக் கொள்கை. உயர்கல்வியை  ஒரு வணிகமாகவே ஆக்கியுள்ளன அங்குள்ள பல்கலைகள். அரசு நிதி அனேகமாக இல்லை. ஆகவே கல்விக்கட்டணம் மிக அதிகம். கல்வியை முக்கியமான ஒரு ஏற்றுமதியாக கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. உயர்கல்விக்கான இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படுகின்றன.கிட்டத்தட்ட  அறுபதாயிரம் இந்திய மாணவர்கள் பயில்கிறார்கள்.

இந்தநிலையில் அங்குள்ள ஆஸ்திரேலிய மாணவர்கள் இந்திய மாணவர்கள் மீது காழ்ப்பும் கசப்பும் கொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அக்கசப்பு இவ்வாறு இன மதக் காழ்ப்பாகவே வெளிவரும். கிட்டத்தட்ட இதேநிலை ஜவகர்லால் நேரு  பல்கலை போன்ற வட இந்தியப் பல்கலைகளில் உள்ளது. தென்னிந்திய மாணவர்களுடன் சாதாரணமாக பிகாரிகள், உத்தரபிரதேசக்காரர்கள் போட்டி போட முடிவதில்லை. ஆகவே ‘மதராசி ‘ என்றும் ‘சாம்பார்’ என்றும் கிண்டல்செய்வதும் தாக்குவதும் வழக்கமாக நடைபெறுகிறது. தென்னிந்திய மாணவர்கள் அதற்காக குழுக்களாகவே இருக்கிறார்கள். ஆனால் தென்னிந்திய தலித்துக்கள் தனிக்குழுக்களாக இருக்கிறார்கள்.

இன்று ஆஸ்திரேலியாவில் நிகழும் இந்த வன்முறை இந்தியப் பல்கலைகளில் நிகழாத நாளே இல்லை. ஆனால் நாம் இம்மாதிரி விஷயங்களில் அதீதமாக உணர்ச்சி வசப்படுகிறோம். அதற்கான அருகதை நமக்கு பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை. முன்பு ஒருமுறை பிரிட்டிஷ் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நடிகை இந்திய நடிகை ஒருவரை இனக்காழ்ப்புடன் வசைபாடினார். அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது பிரிட்டிஷ் குடிமக்கள்தான். ஆனால் இந்திய ஊடகங்கள் ,தமிழ் இதழ்கள் அதை பெரிது படுத்தின. அதே நாளில் இங்கே பல தலைமுறைகளாக வாழும் வட இந்தியர்களை துரத்த வேண்டும் என ஓர் அரசியல்கட்சி வெளிப்படையாக அறைகூவல் விடுத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்தது. இன,மொழிக் காழ்ப்புகளை வெல்வதற்கான ஒரேவழி நாம் அவற்றை தாண்டிச்செல்வதே.

நியூசிலாந்தில் இந்தியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பிரிட்டிஷாரால் அடிமைகளாகக் குடியேற்றப்பட்டார்கள். இவர்களில் ஒருசாரார் பின்னர் ஆன்ஸாக் படைகளில் சேர்க்கப்பட்டு கலிபோலி போரிலும் பங்கெடுக்கச் செய்யப்பட்டார்கள். ஆனால் இவர்களுக்கு ஆஸ்திரேலியக் குடியுரிமை வழங்குவதை நெடுங்காலம் இன அடிப்படையில் ஆஸ்திரேலியா தடுத்து வைத்திருந்தது. இவர்களில் சீக்கியர்கள் அதிகம். இத்தகவல்களை இப்போது ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வரலாறுகளில் காணமுடிகிறது. இப்போது சீக்கியர்கள் ஆஸ்திரேலியாவில் ஏராளமாக வசிக்கிறார்கள். வாழைப்பழ வேளாண்மை கிட்டத்தட்ட அவர்கள் கையிலேயெ  இருக்கிறது.

ஆம் தேதி மாலையில் கன்பெரா நகரில் நானும் அருண்மொழியும் ரகுபதியும் மதுபாஷினியும் அவர்கள் மகள் துகிதையுடன்  நகர் நடுவே உள்ள ஏரிக்கரைக்குச் சென்றோம். இந்திய மாலைக்குப் பழகிய எனக்கு குளிர் சற்று அதிகமாக தெரிந்தது என்றாலும் மிக இனிமையான ஒரு அந்தி அது. ஏரி மாலையொளியில் சிவந்து கங்காகி அணைந்துகொண்டிருந்தது. வேறு ஒரு நிலத்தில் வேறு ஒரு அந்தி. ஒருவேளை மீண்டும் திரும்பிவரவே முடியாத நிலம் என எண்ணிக்கொண்டபோது எழுந்த மனஎழுச்சி அபூர்வமாக இருந்தது

துகிதையை தூக்கிப்போட்டு விளையாட்டுக் காட்டினேன். அருண்மொழி அங்கே வந்த ஒரு பறவையை புகைப்படமெடுப்பதில் ஆர்வமாக இருந்தாள்.நீரில் நீந்தும் புறா என்று அதை புரிந்துகொள்ளலாம். ஆஸ்திரேலியாவின் உள்ளூர் பறவைகளில் ஒன்று. புகைப்படம் எடுக்கப்பட்டு சலித்துப்போயிருக்கும்போல. பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. குற்றாலத்தில் குரங்குகள் என்றால் ‘போஸ்’கூட கொடுக்கும்

ஆஸ்திரேலியாவின் மையப்பிரச்சினையே அங்கே ‘குடியேறும்’ உயிரினங்களுக்கும் அங்கேயே உள்ள உயிரினங்களுக்கும் இடையேயான ஒத்திசைவுதான். பொதுவாக அங்கே குடியேறும் உயிரினங்கள் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த எதிர் உயிரியல் காரணி இல்லாததனால் கட்டற்று பெருகி கண்டத்தையே விழுங்க முற்படுகின்றன.

உதாரணமாக முயல்கள். ஆஸ்திரேலியாவுக்கு முயல்கள் பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்டன. முயல்கள் கப்பல்களில் உணவுக்காக வளர்க்கபப்ட்ட உயிரினங்கள். எளிதில் செழித்து பெருகும். குறைவான உணவு போதும். 1788ல் முயல்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தன என்று சொல்லப்படுகிறது. அங்கே அவை பெருகினால் உணவுக்கு உதவும் என்றே கொண்டு விடப்பட்டன. முப்பது வருடங்களுக்குள்  அவை பெருகி ஆஸ்திரேலியாவின் பிரம்மாண்டமான நிலப்பரப்பிலேயே நெரிசலை உருவாக்க ஆரம்பித்தன. 1827ல் டாஸ்மேனியாவில் அவை பயிர்களை அழிக்கும் பெரிய நாசகார சக்தியாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கோடைக்காலம் மிகுந்த நாடுகளில் முயல்கள் குளிர்காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். ஆஸ்திரேலியாவில் குளிர்காலமே அதிகமென்பதனால் அவற்றின் காதல்திறன் வளர்ந்தது. புல்வெளிகள் அளவில்லாத உணவு வழங்கின. அவற்றைக் கொன்று தின்னும் மிருகங்கள் அனேகமாக இல்லை. ஆகவே அவற்றின் வளர்ச்சி தடையில்லாததாக இருந்தது.

1859 வாக்கில் வருடத்துக்கு இருபது லட்சம் முயல்கள் பிடித்து தின்னப்பட்டன. ஆனாலும் முயல்களின் எண்ணிக்கையில் குறைவே ஏற்படவில்லை. ஆஸ்திரேலியப்பண்ணைகள் முயல்களால் அழிக்கப்பட்டன. 1901ல் முயல்களின் தொல்லையை களைவதற்கென்றே ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. முயல்கள் முழுமூச்சாக வேட்டையாடி அழிக்கப்பட்டன. கன்பெரா நகரின் அருங்காட்சியகத்தில் அன்றைய முயல்வேட்டையின் அரிய புகைப்படங்கள் உள்ளன. முள்ளங்கியை லாரி லாரியாகக் கொண்டுசெல்வதுபோல செத்த முயல்களைக் கொண்டுசெல்கிறார்கள். முயல்தோலால் ஆன கோட்டுகள், காலுறைகள், போர்வைகள், கூடாரக்கூரைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கையுறைகளுக்காக முயலின் தோல் ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

முயல் ‘தொல்லை’ இருபதாம் நூற்றாண்டின் ரசாயனப்போர் மூலமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்கிறார்கள். ஆனால் முதல் உலகப்போரை ஒட்டி உருவான பொருளியல் நெருக்கடியை எளிய மக்கள் முயலிறைச்சியை வைத்தே சமாளித்தார்கள் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

முயலைப்போல ஆஸ்திரேலியாவுக்கு வந்து பெருகிய இன்னொரு உயிரினம் டிங்கோ என்னும் நாய். இதை ·பெரல் மிருகம் என்கிறார்கள். பழகிய மிருகம் காட்டுச்சூழலில் மீண்டும் காட்டுமிருகமாக ஆவதை அப்படிச் சொல்கிறார்கள். அதாவது மீள்கானுயிர். டிங்கோவை நேரில் பார்க்கவேண்டுமென்றால் மத்திய ஆஸ்திரேலியாவின் காடுகளுக்குள்தான் செல்லவேண்டும். அது எங்களுக்குச் சாத்தியப்படவில்லை. அதன் பதப்படுத்தப்பட்ட உடலைத்தான் அருங்காட்சியகத்தில் பார்த்தேன். கிட்டத்தட்ட நம்மூர் செந்நாய், அல்லது தெருநாய். பெரிய காதுகள். சூம்பிய கூர்முகம். பெரிய கரிய நாசி. அதிக உயரமில்லை.

 

டிங்கோ

 

டிங்கோ என்ற பெயர் வளர்ப்புநாயைக் குறிக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் வார்த்தையில் இருந்து வந்தது. டிங்கோக்கள் ஆஸ்திரேலியாவுக்கு வெளிமனிதர்கள் கொண்டுவந்து வளர்த்த முகாம் நாய்கள் காட்டுக்குள் சென்று குடியேறி மெல்ல மெல்ல காட்டுக்குணங்களை வளர்த்துக்கொண்டு உருவானவை என்பது அவற்றின் வேட்டை இயல்புகளைப் பற்றி படிக்கும்போது பெரிதும் வியப்பளிக்கிறது.

டிங்கோ பொதுவாக தனியாகத்திரியும் நாய். ஆனான் தேவையென்றால் அவை மிக்ச்சிறப்பாக ஒரு குழுவாக இயங்கும். டிங்கோக்களின் வேட்டை உணவு எலிகள் சிறிய பூச்சிகள் முதல் பிரம்மாண்டமான எருமைகள் வரை பரந்திருக்கிறது. கங்காருக்களை அதிகம் வேட்டையாடும் மிருகம் டிங்கோக்களே. தனிக்கங்காருவை துரத்தி தன் குழுவை நோக்கிக் கொண்டுசென்று குழுவாகச் சூழ்ந்துகொண்டு வேட்டையாடும். கங்காருக்களை ஓடிக்களைக்கவைத்து கொல்லும் வழக்கம் உண்டு. பெரிய கங்காருக்களை துரத்திக்கொண்டுசென்று முள்கம்பிவேலியில் மாட்டவைத்துக் கொல்வதும் உண்டு என்று வாசித்தேன்.

கன்பெரா அருங்காட்சியகத்தில் டிங்கோவை மீண்டும் நினைவுற்றது நெட் கெல்லியைப்பற்றிய தகவலகளை அருங்காட்சியகத்தில் பார்த்தபோதுதான். அந்த ஊர் செம்புலிங்கம் அல்லது வீரப்பன். அவரது அப்பா ரெட் கெல்லி அயர்லாந்து நாட்டைச்சேர்ந்த குற்றவாளி. ஆஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வந்தார். நெட்கெல்லி மெல்பர்னில் 1855ல் பிறந்தார். சிறுவனாக இருந்தபோது நெட் கெல்லி ஒரு சிறுவன் நதியில் மூழ்காமல் காப்பாற்றினார். அதற்காக அச்சிறுவனின் குடும்பத்தார் அளித்த அடையாளத்தை கடைசிநாள் வரை அணிந்திருந்தார் என்கிறார்கள்

சிறுவயதிலேயே திருட்டு அவருடைய விருப்பத்திற்குரிய வேலையாக இருந்திருக்கிறது. கன்றுகாலிகளை திருடிவந்தவர் பக்கத்துவீட்டுக்காரரின் மாட்டை கொன்று தோல் உரிக்கும்போது மாட்டிக்கொண்டார். கில்மோர் கோல் என்னும் இடத்தில் உள்ள சிறையில் ஆறுமாத காலம் தண்டனை அனுபவித்தார். அந்தச் சிறைவாசம் அவரை முழுமையான குற்றவாளியாக ஆக்கியது. அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது ரெட் கெல்லி மரணமடைந்தார்.

நெட் கெல்லியில் இனவாதம் எப்போதும் இருந்தது. பழங்குடியினரையும் சீனர்களையும் அவர் தாக்கிவந்தார். ஆ ·பூக் என்னும் சீன பன்றி வளர்ப்பாளரை கொலைசெய்ய முயன்றதே அவரது முதல் பெரிய குற்றம். நெட் கெல்லி தன் பன்றிகளை திருடவந்ததாக ஆ சொன்னாலும்கூட நெட் கெல்லியின் தங்கையுடன் ஆ வுக்கு இருந்த தொடர்பே நெட் கெல்லியை கடுப்பேற்றியது என்கிறார்கள். அந்த குற்றத்தில் போலீஸ் நெட் கெல்லியிடம் கருணையுடன் நடந்துகொண்டது. அவரை அவர்கள் பத்துநாள் சிறைவாசத்துடன் விடுவித்தார்கள். காரணம் தாக்கப்பட்டது சீனர்.

நெட் கெல்லி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். 1870ல் ஜெர்மியா மெக் கோர்மெக் என்னும் வணிகரை தாக்கிக் கொள்ளையடித்தமைக்காக மீண்டும் கைதானார்.  அதற்காக மூன்றுமாத சிறைவாசம் கிடைத்தது. பின்னர் குதிரை திருட்டு சம்பந்தமான வழக்கில் மீண்டும் பதினெட்டு மாத சிறைவாசம்.

                                                                                நெட் கெல்லி

நெட் கெல்லியிடம் குற்றமனப்பான்மையுடன் இணைந்தே ஒருவகை நக்கலும் இருந்தது. அவரை பலர் ரசிக்க ஆரம்பித்தமைக்குக் காரணம் அதுவே. ஜெர்மியா மக் கோர்மெக் என்ற அந்த வணிகரின் குழந்தையில்லாத மனைவிக்கு ஆபாசமான ஒரு கடிதத்துடன் கன்றுகுட்டியின் விதைகளையும் வைத்து அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். குதிரை திருட்டுகாக தன்னை பிடிக்கவந்த ஹால் என்ற போலிஸ் அதிகாரியை பிடித்து குனியவைத்து அவர்மேலேயே குதிரை ஏறினார். இதெல்லாமே அவரது பதினாறு வயதுக்குள்

1878ல் நெட் கெல்லி அவரது அம்மாவுடனும் தம்பியுடனும் திருட்டு மற்றும் காவலரை தாக்கிய வழக்குக்காக குற்றம் சாட்டப்ட்டார். கணவனை இழந்து மறுமணம் புரிந்து குழந்தையுடன் இருந்த அம்மா எல்லென் சிறைக்குச்செல்ல நேரிட்டது. நெட் கெல்லி பிடிபடவில்லை. நெட் கெல்லி சில வருடங்கள் கழிந்து பிடிபட்டு கொல்லப்படும் வரை எல்லென் சிறையில்தான் இருந்தார்.

 

டான் கெல்லி

நெட் கெல்லியும் அவரது தம்பியும் தலைமறைவாக இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் நண்பர்கள் ஜோ பைர்னும் ஸ்டீவ் ஹார்ட்டும் சேர்ந்துகொண்டார்கள். அவர்களைப் பிடிக்க காவலர் படை தேடிவந்தது. அவர்கள் புல்வெளியில் முகாமிட்டு தேடினர். அப்போது அவர்கள் புறாக்களைச் சுட்ட ஒலியைக் கேட்டு உஷாரான நெட் கெல்லியும் தம்பியும் தேடிவந்து அவர்களைத்தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டார். இன்னொருவர் கடும் துப்பாக்கிச்சண்டையில் காயம்பட்டு தப்பினார். மூன்றாமவர் தப்பி ஓடிவிட்டார்.

போகும்போது ஒரு காவலரின் கைக்கடிகாரத்தை நெட் திருடிச்சென்றார். பின்பு விசாரணையில் ஏன் அப்படி செய்தார் என்று கேட்கப்பட்டபோது ”செத்தவன் ஏன் நேரம் பார்க்கவேண்டும்?” என்று நெட் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தக்கொலையைத் தொடர்ந்து இந்தக்குழுவை ஓரு குற்றவாளிக்குழுவாக அறிவித்த விக்டோரியா பாராளுமன்றம் அவர்களை கண்டதும் சுட உத்தரவிட்டது. அவர்களை பிடிப்பவர்களுக்கு 8000 பவுன் பரிசும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நெட் கெல்லி வங்கிகளைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார். 1878ல் யூராவில் உள்ள தேசியவங்கியை இக்குழு கொள்ளையடித்தது. வங்கிக்குள் நுழைந்து அங்குள்ளவர்களைக் கட்டிபோட்டு வன்முறையே இல்லாமல் அக்காலத்தில் பெருந்தொகையான இரண்டாயிரம் பவுண்டை கொள்ளையடித்துச் சென்றார்கள். நெட் ஒரு காவலரின் உடையில் இருந்தார். பொறுப்பான அதிகாரியை அறையில் அடைக்கும்போது கொள்ளையடித்தது யார் என்று அவர் மேலதிகாரியிடம் சொல்ல வேண்டுமென கேட்டபோதுதான் தான் நெட் கெல்லி என்று அவர் சொன்னாராம்.

நெட் கெல்லி அயர்லாந்தின் தேசிய உணர்வு கொண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். ஐரிஷ் கத்தோலிக்கர்கள் பிரிட்டிஷ்காரர்களால் வேட்டையாடப்படுவதாகவும் தானும் குடும்பமும் அதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார். வங்கிகளைக் கொள்ளையடிக்கும்போது அங்கே இருக்கும் அடமான பத்திரங்களையும் அழிப்பது அவரது வழக்கம். மேலும் அயர்லாந்து கத்தோலிக்க மக்களுக்கு அவர் சில நிதியுதவிகளும் செய்தார்.

1978ல் நெட் கெல்லி ஒரு நீண்ட கடிதத்தை எழுதி அச்சுக்கு அனுப்பினார். அதில் தன்னை அயர்லாந்து தேசியவாதியாக அறிவித்தார். தன் அப்பாவையும் ஒரு அயர்லாந்து போராளியாக சொல்லிக்கொண்டார். அயர்லாந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக தான் போராடுவதாக அதில் வாதிட்டிருந்தார்.ஜெரில்டெரீ என்னும் இடத்தில் இருந்தபோது அவர் அனுப்பிய இக்கடிதம் ஆஸ்திரேலிய இலக்கியத்தில் ஒரு அரிய ஆவணமாக கருதப்படுகிறது. நெட் கெல்லியின் ஆங்கில நடை படிமங்கள் நிறைந்ததாகவும் உணர்ச்சிகரமானதாகவும் மொழிவிளையாட்டுகள் கொண்டதாகவும் இருந்தது. அக்கடிதம் 1930ல் தான் பிரசுரிக்கப்பட்டது. 
    
ஜோ பெய்ரினின் நண்பரான ஆரோன் ஷெர்மிட் என்பவர் போலீஸ¤க்கு உளவு சொல்லும் செய்தியை அறிந்த கும்பல் 1880ல் அவரை அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றது. அப்போது அந்த வீட்டில் தங்கியிருந்த நான்கு போலீஸ்காரர்கள் கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டு தப்பினார்கள். அங்கிருந்து கிளம்பிய அக்கும்பல் அருகே இருந்த கிளென்ரோவென் என்னும் இடத்தில் ஒரு சத்திரத்தில் இருந்தவர்களை சிறைப்பிடித்துக்கொண்டது. அவர்களைப் பிடிக்கவந்த போலீஸ்ரயிலை கவிழ்க்க முயன்றது. ஆனால் அம்முயற்சி நிறைவேறவில்லை.

அப்போது அக்கும்பல் தங்களுக்கான கவச உடைகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். பல்வேறு இரும்புப்பொருட்களால் உருவாக்கப்பட்ட 50 கிலோ எடையுள்ள இரும்புக்கவசத்தை அவர்கள் அணிந்திருந்தார்கள். ஆனால் அது ஒரு முதிரா முயற்சி. அதை நம்பி அவர்கள் சண்டையில் இறங்கியபோது சுடப்பட்டார்கள். நெட் கெல்லியின் கால்கள் திறந்திருந்தன. போலீஸ் அவரது கால்களை நோக்கியே சுட்டு அவரை வீழ்த்தியது. ஒருவர் குண்டுபட்டு ரத்த இழப்பால் இறந்தார். பிறர் தற்கொலைசெய்துகொண்டார்கள். போரில் போலீஸ் அதிகார் ஹேர் என்பவருக்கு கையில் காயம்பட்டு அவர் களத்திலிருந்து தப்பி ஓடினார். பின்னர் அவர் போலீஸில் இருந்து விலக்கப்பட்டார்.

நெட் கெல்லி கைதுசெய்யபப்டு விசாரிக்கப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்தவர் அயர்லாந்துக்காரரான நீதிபதி சர்.ரெட்மண்ட் பாரி என்பவர். நீதிமன்றத்தில் நீதிபதிக்கும் நெட் கெல்லிக்குமான வாக்குவாதங்கள் அக்காலத்தில் பரவலான கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன. ‘உன் ஆத்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று நீதிபதி சொன்னபோது ”நான் அங்கேபோய் உங்களுக்காக காத்திருக்கிறேன்” என்று நெட் சொன்னதாகச் சொல்லப்படுகிறது

நெட் கெல்லி 1880 நவம்பர் 11 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அவருக்குக் கருணை காட்டவேண்டுமென 30000 அயர்லாந்துக்காரர்கள் கையெழுத்திட மனு அளிக்கப்பட்டது. அது நிராகரிக்கப்பட்டது. தூக்குமேடையில் ஏறும் முன் ”இதுதான் வாழ்க்கை!” என்று அவர் சொன்னதாக தி ஏஜ், தி ஹெரால்ட் ஆகிய நாளிதழ்கள் எழுதின. ஆனால் அவர் ஏதோ அர்த்தமில்லாமல் முனகியதாகவே அவரது சிறைக்காவலரின் டைரி சொல்கிறது. நீதிபதி பாரி 12 நாள் கழித்து உயிர்துறந்ததும் ஒரு ஆச்சரியமாகச் சொல்லபடுகிறது

சென்ற மார்ச் 2008 ல் பழைய சிறை வளாகத்தில்  நெட் கெல்லியின் கல்லறையை ஆய்வாளர்கள் தோண்டி எடுத்தார்கள்.  அது ஒரு கூட்டக்கல்லறை. அதில் இருந்த 44 பேரின் எலும்புகளில் இருந்து நெட் கெல்லியின் எலும்புகள் எடுக்கப்பட்டு அவரது வாரிசான எல்லென் ஹாலோ என்பவரின் மரபணுக்களுடன் ஒப்பிடப்பட்டு அது சரிபார்க்கப்பட்டது.

கன்பெரா அருங்காட்சியகத்தில் நெட் கெல்லியின் கவசம் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது சில ஆயுதங்களும் அக்காலத்து இதழ்குறிப்புகள் சிலவும் இருக்கின்றன. ஆனால் சிட்னி நோலான் என்பரின் ஓவியங்கள்தான் நெட் கெல்லியைப்பற்றிய பலவகையான கற்பனைகளை எழுப்புவனவாக இருக்கின்றன.அவற்றில் நெட் தன் கவச உடையுடன் பல கோணங்களில் தோற்றமளிக்கிறார். அந்தக் கவச உடையை ஒரு குறியீடாக மாற்ற சிட்னி நோலான் முயல்வதாகப் பட்டது.

நெட் கெல்லி ஒரு ஆஸ்திரேலிய கதாநாயகனாக வாய்மொழிக் கதைகளில் சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவரைப்பற்றிய புனைகதைகள் பல எழுதப்பட்டன. அவை திரைப்படங்களாக வந்திருக்கின்றன.  Bertram Chandler என்பவர் 1983ல் எழுதிய Kelly Country என்னும் நாவலில் ஒரு மாற்றுச் சாத்தியத்தை எழுதிப்பார்த்திருக்கிறார். அதில் நெட் கெல்லி ஒரு தேசியத்தலைவராக வளர்ந்து வலுவான ஆஸ்திரேலிய தேசியத்தை உருவாக்கி ஆஸ்திரேலியாவை உலகின் வல்லரசாக ஆக்குகிறார். 2000த்தில்  Peter Carey என்பவர் எழுதிய  True History of the Kelly Gang வெளிவந்து மறுவருடம் புக்கர் பரிசு பெற்றது.

நெட் கெல்லியின் வரலாற்றைப் பார்க்கும்போது பொதுவாக இத்தகைய ‘கதாநாயகர்களின்’ இயல்புகள் பல பொருந்திப்போவதைக் காணமுடிகிறது. ஒன்று இவர்கள் பிறவிக்குற்றவாளிகள். தங்கள் இயல்பான குற்றமனத்தால், சுயநலத்தால் குற்றங்களைச் செய்கிறார்கள். வெறும் குற்றவாளிகளாகவே இவர்கள் நெடுநாட்களாக அறியப்படுகிறார்கள். அவர்களின் சாகஸத்தன்மை மெல்லமெல்ல புகழ்பெறும்போது எளிய மனிதர்கள் நடுவே அவர்களுக்கு ஒரு ஆராதனை உருவாகிறது.

இப்புகழ் வந்தபின்னர் இவர்களின் மனநிலை மாறுபடுகிறது. அதன்பின் பெரும்பாலான விஷயங்களை அவர்கள் புகழுக்காகச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு ஒரு ‘மக்கள் சார்பை’ ‘கொள்கையை’ கற்பனைசெய்துகொள்கிறார்கள். அனேகமாக அது அவர்களின் எளிய குற்றமனத்துக்குப் புரியும் வகையில் இனவாதமாகவோ, சாதிவாதமாகவோ, மதவாதமாகவோதான் இருக்கும். அதாவது காழ்ப்பை முன்வைத்து தங்கள் குற்றங்களை நியாயப்படுத்தும் முயற்சி. தாங்களாகவோ அல்லது பிறர் உதவியுடனோ அவர்கள் தங்கள் ‘கொள்கைகளை’ பிரகடனம் செய்கிறார்கள்.

இந்தப்புகழே இவர்களின் அழிவை துரிதப்படுத்துகிறது என்றால் மிகையல்ல. அவர்கள் தங்கள் உண்மையான அளவை விடமேலான பிம்பத்தைச் சுமக்கிறார்கள். ஆகவே அவர்களால் செய்யமுடிவதை விட பெரிய குற்றங்களை அல்லது சாகஸங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அரசு இயந்திரத்திடம் பிடிபட்டுக் கொல்லப்படுகிறார்கள்

இவ்வாறு இவர்கள் கொல்லப்படும்போது ஊடகங்களும் வெகுஜன மனநிலையும் இணைந்து இவர்களைப்பற்றிய கட்டுக்கதைகளை உருவாக்குகின்றன. இவர்கள் தியாகத் திருவுருவங்களாக ஆக்கப்படுகிறார்கள். பொன்மொழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை பொய்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட உதிரி நிகழ்ச்சிகள். நம்முடைய ‘ராபின் ஹ¥ட்’கள் உண்மையில் எத்தனை எளிய மக்களுக்கு உண்மையில் உதவியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.  அனேகமாக மிகச்சிலருக்கு சில சில்லறைகள். அவ்வளவுதான்.

ஆனால் அவர்களால் எளிய மக்கள் பலவகையான சிக்கல்களுக்கு ஆளாகியிருப்பார்கள். ஏராளமான அப்பாவிகள் சந்தேகத்துக்கு ஆளாகி கொன்று தள்ளப்பட்டிருப்பார்கள். பலர் பிடிக்காத விஷயங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அந்த ராபின் ஹ¥ட் கொல்லப்படும்போது எளிய மக்களே நிம்மதிப்பெருமூச்சு விடுவார்கள். ஆனால் நடுத்தர வற்க மனநிலையும் ஊடகங்களும் சேர்ந்து அவர்களை ஏழைக்காவலராக சித்தரிக்க ஆரம்பிக்கும்போது அவர்களே அதை நம்பவும் ஆரம்பிப்பார்கள். இதை நான் தர்மபுரியில் வாழ்ந்த காலத்தில் வீரப்பன் விஷயத்தில் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

மேலும் அருங்கொலை செய்யபட்டவர்களை கடவுளாக்கும் மனநிலை உலகமெங்கும் உள்ளது. எப்படிக் கொலைசெய்யப்பட்டிருந்தாலும்! தென் மாவட்டங்களில் உள்ள கணிசமான மாடன், சங்கிலி, கருப்பன் சாமிகள் கொடும் குற்றங்களை இழைத்து மக்களாலேயே கழுவேற்றியோ பிற கொடூரமான வகையிலோ கொல்லப்பட்டவர்கள். மக்களின் குற்றவுணர்வு அவர்களை கடவுளாக்குகிறது.

உதாரணமாக குமரிமாவடத்தில் உள்ள மதுசூதனப்பெருமாள்மாடன் என்னும் சாமி. கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் செய்துவந்த திருடர் அவர். ஒருமுறை மக்களிடம் மாட்டிக்கொண்டபோது ஓடிப்போய் முத்தாரம்மன் கோலிலுக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டார். கோயிலோடு அவரைக் கொளுத்திவிட்டார்கள்.  செத்தவர் கனவுகளில் வந்து படையல் கேட்க ஆரம்பித்தார். படையல் போட ஆரம்பித்தவர்கள் அரைநூற்றாண்டுக்குள் அவரை கடவுளாக ஆக்கினார்கள்! நெட்கெல்லி ஒரு ஆஸ்திரேலிய மாடன், அவ்வளவுதான்.

ஏப்ரல் பதினேழு அன்று மாலை கன்பெராவின் உயரமான இடமான டெல்ஸ்டிரா டவர் என்னும் கோபுரத்தைப் பார்க்கச்சென்றோம். தொலைத்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட கோபுரத்தை ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்கியிருக்கிறார்கள். கோபுரத்தின் மேலே இருந்து கன்பெராவைப்பார்க்கையில் அதன் அமைப்பு அழகாக தெரிந்தது. சூழவும் அடர்ந்த நீலபப்ச்சை காடுகள். நடுவே ஏரி. ஏரியைச்சுற்றி உயரமில்லாத வீடுகளால் ஆன அழகான சிறிய நகரம். கன்பராவின் அழகே அந்த ஏரியில்தான் இருக்கிறது என்று பட்டது அத்தனை உயரத்தில் இருந்து அதை ஒரு மரகதப்பதக்கம் போல பார்க்கையில் மனம் நிறைந்து ததும்பியது.

 

அங்கே பலவகையான மக்கள். பலவகையான இனங்கள் மொழிகள். இன்று அதை நினைத்துக்கொள்ளும்போது ஓர் எண்ணம் வந்தது நெட் கெல்லி ஒரு டிங்கோ என்று. தன் வேட்டைக்குணங்களை மீட்டெடுத்த ஓநாய். இந்தியர்களும் இலங்கையரும் முயல்கள்.

 

 

  • புல்வெளிதேசம் 11, பிலம்
  • கடிதங்கள்
  • புல்வெளிதேசம் 10, காடும் வீடும்
  • புல்வெளிதேசம் ,9, கங்காரு
  • கடிதங்கள்
  • ஆஸ்திரேலியா:கடிதங்கள்
  • புல்வெளிதேசம் 8, கலைக்கூடம்
  • குப்பத்துமொழி
  • புல்வெளிதேசம்,7- கலிபோலி
  • முந்தைய கட்டுரைவிளம்பரங்கள்
    அடுத்த கட்டுரைஅஞ்சலி: ராஜமார்த்தாண்டன்