அன்புள்ள ஜெ,
உங்களின் அருகர்களின் பாதை பயணத்தொடர் படித்த பின்பு ஏனோ திடீரென்று ஸ்வதேஸ் (Swades) திரைப்படம் ஞாபகத்திற்கு வந்தது.
நீங்கள் அப்படத்தைப் பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை. ஒரு இனிய மெலோடிராமா.
ஷாருக்கின் பயணங்களூடாக இந்திய தேசத்தின் ஒரு சிறு துளியைக் காண்பித்திருப்பார் அசுதோஷ் கவ்ரிகர்.
படத்தில் ஒரு காட்சி, ஷாருக் தனக்குவேண்டிய பெண்ணின் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் விவசாயியிடம் வாடகை வசூலிக்கச் செல்வார்.
அப்போது மிகவும் வறுமையிலிருக்கும் அந்த விவசாயி, அவர்களை வரவேற்று அமரச்செய்து , பயணம்செய்து களைத்து வந்திருப்பீர்கள்,ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தாங்கள் சாப்பிட வைத்திருக்கும் ரொட்டியை ஷாருக்கிற்கு அளிப்பார்.ஷாருக் எதற்கு உங்களுக்கு சிரமம் என்று கேட்கும் போது ” எஹ்சா கைஸே ஹோசக்தாகே ? மெஹ்மான் பகவான் கி சம்மன் ஹோத்தாஹே”
அது எப்படி? விருந்தினர் தெய்வத்திற்கு சமம் என்று அந்த ஏழை விவசாயி பதிலளிப்பார். தங்கள் பயணங்களில் அன்பாக மிரட்டி கார் ஓட்டுனரை உணவு உண்ண வைத்த மராத்தியர் ஞாபகத்திற்கு வந்தார்.
இந்தியப் பண்பாட்டின் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் , தான் பசித்திருந்தாலும் விருந்தினரை உணவளித்து உபசரிக்கும் பண்பு மிக நெகிழ்ச்சியாக காட்டப்பட்டிருந்ததாகத் தோன்றியது எனக்கு.
நானும் ரயிலில் சிலமுறை நெடுந்தூரப் பயணங்கள் சென்றிருக்கிறேன். சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றபோது சந்தித்த ஒரு குடும்பம் , இது தின்னு பாபு , அது தின்னு பாபு என்று பழங்களும் உணவும் தந்து பரிவு காட்டினர். மகாராஷ்டிரா செல்லும் போதும் வட இந்தியர்கள் தங்களிடமிருக்கும் உணவை பகிர்ந்துண்ணுமாறு அளித்தனர்.
நேர்மாறாக தென் தமிழ்நாடு வரும் ரயில் பயணங்களில் பிற பயணிகளிடம் சிநேகம் பாராட்டும் பண்பு வெகு குறைவே. சென்னையிலிருந்து நாகர்கோயில் வரும் வேளைகளில் பிறரிடம் பேச விரும்பாத தமிழ்க் குடும்பங்கள்தான் அதிகம். அதுவும் குடும்பத்தில் ஒரு திருமணமாகாத இளம் பெண்ணிருந்தால், தந்தையின் கண்கள் நம்மீதே நிலைத்திருக்கும், எங்கே தன் மகளை சைட் அடிக்கிறானோ என்று. அவரவர் கவலை அவரவருக்கு.
ஸ்வதேஷ் திரைப்படத்தில் ஷாருக் உடனடியாக மிகப் பெரும் சமூக மாற்றமெல்லாம் நிகழ்த்தி விடுவதாக காண்பிக்கவில்லை இயக்குனர். அந்தச் சூழ்நிலையில் தன் சக்திக்கு உட்பட்டு எது சாத்தியமோ அதனையே செய்கிறார். மின் பற்றாக்குறையினால் அவதியுறும் கிராமத்திற்கு ஒரு சிறிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறார். காந்தி கனவு கண்ட கிராம சுயராஜ்ஜியம். தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளுதல்.
தமிழகத்தில் இன்று கிட்டத்தட்ட அனைத்து நீராதாரங்களும் விஷமாகிவிட்டன. எஞ்சியவை நிரப்பப்பட்டு வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நான் நீச்சல் பயின்ற புத்தேரி ஊரில் உள்ள குளமும் “algal blooming” இனால் பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட நல்ல நிலைமையிலிருந்தது நினைவிருக்கிறது. பார்வதிபுரம் சுந்தர் இன்ஸ்டிடியூட் அருகில் சானலில் செப்டிக் டேங் வடிகால்கள் வீடுகளிலிருந்து இணைக்கப்பட்டு நீரில் இறங்க முடியா வண்ணம் நாற்றமெடுக்கிறது. பள்ளியில் படித்த காலத்தில் தினமும் காலையில் சென்று அங்கு நீந்திக்குளித்த நாட்கள் இனி சாத்தியமில்லை.
இங்கு எல்லாவற்றையும் அழித்துவிட்டு கேரளா அணை கட்டுகிறது என்று தெரிந்தவுடன் வீராவேசமாக எதிர்க்கிறோம். உடனடித்தேவை தொலைநோக்குள்ள ஒரு தலைமை. துரதிர்ஷ்ட வசமாக தமிழக மக்களுக்கு அது வாய்க்கப் பெறும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறது கடிதம் :-)
மீண்டும் படத்திற்கு வருகிறேன். படத்தில் மிகப்பெரிய ஆச்சரியம் முடிந்தவரையில் தூய ஹிந்தி. ” அய்யா தாங்கள் நலமாக இருக்கிறீர்களா” என்று செந்தமிழில் செப்புவது போல தூய ஹிந்தியில் பேசுகிறார்கள். இதுநாள் வரையில் நான் ஹிந்தி என்று கொஞ்ச நஞ்சம் கற்று வைத்திருந்ததில் பாதியும் உருது என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
மொத்தத்தில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகுந்த மனவெழுச்சியை உண்டாக்கிய படம் இது. ஏற்கனவே இப்படத்தை பார்த்துவிட்டிருந்தாலும் தங்களுடடைய இந்தியப் பயணக் கட்டுரைக் குறிப்புகள் படித்து ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடும் மக்களிடத்தில் பெருகும் அன்பும் எளிய கிராமங்களில் இன்னும் ஜீவனுடன் வாழ்கிறது என்று தெரிந்து கொண்ட பின்பு மீண்டும் பார்த்தபோது மனம் மிகவும் நெகிழ்ந்தது.
அன்புடன்
ராஜேஷ்குமார்
[பேச்சிப்பாறை அணை]
அன்புள்ள ராஜேஷ்,
ஒரு பெரிய சண்டைக்கும் மனச்சோர்வுக்கும் பின்னர் வந்து அமர்ந்தபோது உங்கள் கடிதம் கண்டேன். காலைநடை சென்றபோது கண்டேன், ஒரு அம்மணி பழைய மெத்தையை கொண்டுவந்து பார்வதிபுரம் கால்வாயில் போடுகிறாள். முதலில் சாதாரணமாகக் கேட்டேன் ‘இத்தனைபேர் குளிக்கிற தண்ணீர் இல்லையா? கடற்கரை மக்களுக்கு இது குடிநீர்…இதிலே போடலாமா?’ என்று. ‘ஆமா…போவியா?’ என்றாள். வார்த்தை தடித்துவிட்டது. அந்த மெத்தையை கரையில் நின்று இழுக்கப்போக அது பிய்ந்து நீரெல்லாம் அழுக்குப்பஞ்சாக ஓடி குப்பைகள் முழுக்கத் தேங்கியது.
பரிசுத்தமான நீர் நிறைந்த மாவட்டம் இது. இங்குள்ள அபரிமிதமான மழையை சேமிக்க நீர்நிலைகளை பத்தாம்நூற்றாண்டில் சோழர்களும் பின்னர் நாயக்கர்களும் கடைசியாக திருவிதாங்கூர் அரசர்களும் அமைத்தார்கள். நீர் நிர்வாகத்துக்கு முறையான அமைப்புகளை உருவாக்கினார்கள்.
சுதந்திரத்துக்குப்பின் கொஞ்சநாள் தூர்வாருதல் முதலியவை நிகழ்ந்தன. வீழ்ச்சி ஆரம்பித்தது எழுபதுகளில்தான். நீர்நிலைகள் தூர்வாரப்படுவது அடியோடு நின்றது. பேச்சிப்பாறை அணை தமிழகத்துக்கு மகாராஜா மூலம்திருநாள் அவர்களின் கொடை. ஐம்பதாண்டுக்காலமாக அதை தூர்வாரக்கூட நம்மால் முடியவில்லை. சுற்றிலும் காடு அழிவதனால் சேறு தேங்கி கொள்ளளவின் பாதிகூட இன்றில்லை.
[புத்தேரி ஏரி.நாகர்கோயில்]
கடந்த இருபத்தைந்தாண்டுக்காலமாக நகரமயமாதல் ஓங்கியிருக்கிறது. ஏரிகளையும் குளங்களையும் அரசு நிரப்புகிறது. உதாரணமாக நாகர்கோயில் நகரில் உள்ள பேருந்துநிலையங்கள், மைதானங்கள், அரசு அலுவலகங்கள் எல்லாமே ஒரு காலத்தில் ஏரிகள்தான். நானே வடசேரி பேருந்துநிலையத்தை மாபெரும் ஏரியாக பார்த்திருக்கிறேன்
இன்று எல்லா குளங்களிலும் அரசே திட்டமிட்டு சாக்கடையைக் கொண்டுவந்து கலக்கிறது. சாக்கடை கலந்த நீரில் ஆக்ஸிஜன் ஏற்பு குறைவதனால் களைத்தாவரங்கள் மூடி அந்நீர்நிலைகள் அழிகின்றன. சாக்கடைக்குளத்தில் அரசு குப்பைகளை கொட்ட ஆரம்பிக்கிறது. அது நாறி மேடாக ஆகும்போது மக்களே அதை நிரப்பும்படி கோருகிறார்கள்.
நாகர்கோயிலில் புத்தேரி ஏரியை இருபதாண்டுகளுக்கு முன் கண்டவர்கள் அது இன்றிருக்கும் நிலையை எண்ணி கண்ணீர்வடிப்பார்கள். முத்துதிரையரங்கு முன்னாலுள்ள ஏரியை ஒரு நீலக்கடல் போல நான் கண்டிருக்கிறேன். இன்று மொத்த சாக்கடையையும் அதில் நிரப்புகிறார்கள். கிருஷ்ணன் கோயில் ஏரி சென்ற ஐந்தாண்டுகளில் சாக்கடையாக ஆகிவிட்டது.
இருபதாண்டுகளுக்கு முன் அருண்மொழியின் சொந்தகிராமமான தஞ்சைமாவட்டம் புள்ளமங்கலம் சென்றபோது அங்கே இருந்த நீர்நிலைகள் அனைத்துமே இன்று சாக்கடைத்தேக்கங்களாக களைநிறைந்து கிடக்கின்றன. மக்களே அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். பார்வதிபுரத்தில் நான் குடிவந்தபோது கண்ட பெரும் ஏரிகள் எல்லாமே இன்று களைமேடுகளாக நாறிக்கிடக்கின்றன. தமிழகம் முழுக்க இதுதான் நடக்கிறது.
குமரிமாவட்டத்தில் சென்ற முப்பதாண்டுக்காலத்தில் அழிக்கப்பட்ட நீர்நிலைகளின் மொத்த நீர்க்கொள்ளளவு தமிழகத்தின் மிகப்பெரிய அணைக்கட்டான மேட்டூர் அணைக்கு நிகர். அதன்வழியாக நாம் இழந்த நீர் காவேரியில் நமக்கு வருடத்திற்கு வரும் நீரில் கால்பங்கு. இவற்றைப்பற்றிப்பேசும் எந்த அரசியல்வாதியும் நமக்கில்லை.
ஏன்? காரணம், இவற்றைப்பேசினால் முதலில் குற்றம்சாட்டவேண்டியது நம்முடைய மக்களைத்தான். குடிநீர்நிலைகளில் குப்பைகளைக்கொட்டும் மக்கள் உலகில் வேறெங்காவது இருப்பார்கள் என்று தோன்றவில்லை. மக்களைக் குற்றம்சாட்டும் அரசியல்வாதிகள் வாழமுடியாது. தங்களுக்கு எதிரிகளை உருவாக்கிக்கொடுத்து அந்த எதிரிகள்மீது உச்சகட்ட வெறுப்பை வளர்க்கும் அரசியல்வாதிகளையே மக்கள் ஏற்பார்கள். அதனூடாக தங்கள் பிழைகளை தங்களிடமிருந்தே மறைக்கமுடியுமே.
பிரச்சாரம் மூலம் அல்லது சேவைகள் மூலம் இதை சரிசெய்யமுடியும் என்று நான் நினைக்கவில்லை. சமீபகாலத்தில் நெல்லை தாமிரவருணி நதி தூய்மைப்படுத்தப்பட்டது. காவல்துறை மற்றும் சேவை அமைப்புகளால். ஆனால் இன்னும் ஆறே மாதத்தில் நம் மக்கள் அங்கே குப்பைகளை குவித்துவிடுவார்கள்.
நமக்கு இன்று தேவை உறுதியான சட்டங்களும் தண்டனைகளும்தான். நீர்நிலைகளுக்கு அந்தந்த பிராந்திய அரசுகளும் அதிகாரிகளும் பொறுப்பேற்கவேண்டும். நன்னீர் மலினப்படுத்தப்படுவது ஒரு குற்றம், கொலை போல, என்று வகுக்கப்படவேண்டும். குற்றவாளிகள் புலன்விசாரணையில் கண்டுபிடித்து தண்டிக்கப்படவேண்டும்.
அதற்காக தமிழகம் தழுவிய ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்படவேண்டும். அண்ணா ஹசாரேயின் இயக்கம்போல உச்சகட்டமான ஒரு பிரச்சார இயக்கம். அதன் வழியாக அரசுகள் கட்டாயப்படுத்தப்படவேண்டும். இல்லையேல் திரும்பிப்பார்க்கையில் நாம் அனைத்தையும் இழந்திருப்போம்
ஆனால் மேலோட்டமாக உணர்ச்சிகளைத் தூண்டி ரத்தக்கொதிப்படையும் அரசியலுக்கு நம்மிடையே உள்ள மதிப்பு இத்தகைய ஆக்கபூர்வமான அரசியலுக்கு இல்லை. அறிவுஜீவிகளிடம் கூட. அங்கிருந்தே நம் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
ஜெ