ஷோபாசக்தி ஒரு கேள்வி

திரு ஜெமோ

ஷோபா சக்தியை நேர்மையின் சிகரம் என்றெல்லாம் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். அரசியலில் கடந்த பதினைந்து ஆண்டுக்காலமாக அவர் சோரம்போன கதையெல்லாம் உமக்கு தெரியாது. அதெல்லாம் எங்கள் விஷயம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். தமிழச்சி என்ற ஒரு பெண்மணி ஷோபாவின் பாலியல் அத்துமீறல்களைப்பற்றி ஆதாரபூர்வமாக எழுதியிருந்தார்கள் வாசித்தீர்களா? அதைப்பற்றி நீங்கள் வாயே திறக்கவில்லை. ஒரு சாமியார் அவருக்குப்பிடித்த பெண்ணுடன் படுத்தால் காமிரா வைத்து பிடித்து அவரை கொலைகாரனைப்போல நடத்துகிறீர்கள். ஒரு எழுத்தாலன் அவரிடம் சாட்டில் வலியவந்து வழிந்த பெண்ணுடன் பேசினால் உடனே கொலைக்குற்றம் என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு சாதகமான அரசியல் உடையவர் என்றால் பேசாமலிருப்பீர்கள். புலி எதிர்ப்பு அரசியல் மட்டும் இல்லை என்றால் ஷோபா சக்தியை இணையத்திலெ எப்படியெல்லாம் நீங்கள் துவைத்துக்காயப்போட்டிருப்பீர்கள் என்று எங்களுக்கும் தெரியும்

கெ.எஸ்

அன்புள்ள கெ.எஸ்,

நான் இணையத்திலோ பொதுவிலோ எவருடைய தனிப்பட்ட பாலியல் ஒழுக்கத்தையும் விவாதித்ததில்லை. அது என் வழிமுறை அல்ல. நான் உறுதியான ஒழுக்கவாதி என்பேன். ஆனால் பிறரது ஒழுக்கத்தைப்பற்றி விவாதிக்கும் தகுதி எனக்குண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். இத்தகைய செயல்பாடுகளில் நாம் எளியமுடிவுகளை எடுக்க முடியாது. மானுட அந்தரங்கம் என்பது மிகமிக சிக்கலானது என்பதை அறிந்தவனே எழுத்தாளனாக முடியும்.

நான் ஷோபா சக்தியை மதிப்பிடுவது இரு அடிப்படைகளில். ஒன்று அவரது எழுத்துக்கள். அவை கூரிய அங்கதமும் சீற்றமும் கொண்டவை. சமகால வரலாற்றின் முன் தயங்கிநிற்கும் நம் மனசாட்சியை சீண்டக்கூடியவை. இரண்டு, அவரது இதுகாறுமான தனிவாழ்க்கையில் அவர் எதை எழுதினாரோ அதற்கு உண்மையானவராகவே அவர் நடந்துகொண்டிருக்கிறார். அதற்காக தன் உயிரையே பணயமாக வைக்கவும் அவரால் முடிந்திருக்கிறது.

ஒருவேளை அவர் காஞ்சி மடத்திடமிருந்தோ ராஜபட்சேவிடமிருந்தோ காசு வாங்கிக்கொண்டு அவர்களை நியாயப்படுத்தி ஏதாவது செய்தால், பெரியாரியத்தை பரப்புவதற்கான நிதியாதாரத்துக்காக அதைச்செய்தேன் என்று சொன்னால் பார்ப்போம்.

[ஆனால் காஞ்சிமடத்தில் போய் கல்லுடைத்துக் கூலி பெற்றால் அது தவறும் அல்ல. கடவுளே இந்தச்சின்ன விஷயத்தை அறிவுஜீவிகளின் சால்ஜாப்புகளைத்தாண்டி உள்ளே கொண்டுபோவது நம் சூழலில் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!]

அப்படி நீங்கள் ஆதாரம் தரும்வரைக்கும் அவரது கருத்துக்களை நேர்மையாகவே எதிர்கொள்வேன்
ஜெ

முந்தைய கட்டுரைஎம்.டி.எம்.மின் கேள்விகள்
அடுத்த கட்டுரைமருதம்-சுதீர்செந்தில்