எஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

எஸ் வி ராஜதுரையின் எதிர்வினையும் உங்கள் பதிலும் படித்தேன். நீங்கள் அவரை அவதூறு செய்வதற்காகவே அக்கட்டுரையை எழுதியிருப்பதைப் போல பேசுகிறார். முதலில் உங்களைப் பற்றிய subjective judgement, “காந்தியவாதி என்னும் வேடத்தை அவ்வப்போது அணிந்து கொள்கிற, ஆனா……..” அவருடைய எதிர்வினைக்கு இந்த வரிகள் எப்படிப் பொருந்துகின்றன என்று புரியவில்லை. அவர் சொல்வது உண்மை என்று நிரூபிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறாரா? ( இதை நீங்கள் வலைதளத்தில் வெளியிட்டால் நானும் உங்கள் ‘உபாசகர்’ ஆகி விடுவேன் இல்லையா?)

இந்திய அமைதிப் படை இலங்கையில் நடத்திய அராஜகங்களைப் பற்றிய கட்டுரையும் அதன் பின் நடந்த இணைய விவாதங்களாலும் உங்களுக்கு ஏதாவது “பிரச்சினை” வந்ததா என்ன? இவர் மிக நிச்சயமாக, நீங்கள் அந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக இந்தக் கட்டுரையை எழுதி இருப்பதாகக் கூறுகிறார். அவ்வளவு தூரம் உங்கள் கட்டுரையின் ரிஷி மூலத்தை தெரிந்து வைத்திருப்பவர், ஒரு வருடம் முன்பே உங்கள் வலை தளத்தில் இட போதாமை காரணமாக எல்லோருக்கும் அறிவித்துவிட்டு பின்னூட்டங்கள் (comments) நிறுத்தப்பட்டதை எப்படி தெரிந்து கொள்ளாமல் போனார் என்று புரியவில்லை.

“தொடர்புடைய பதிவுகள்” எதுவும் இல்லாதது உங்கள் உள்நோக்கத்தைக் காட்டுவதாகக் கூறுகிறார். இறுதியில் அவதூறுக்காக உங்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார்.

ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது…..
(நிச்சயமாக premium pass வைத்துள்ள உபாசகன் தான் நான்!!!!!)

முத்துகிருஷ்ணன்.

அன்புள்ள முத்துகிருஷ்ணன்,

உபாசகர்களும் கொஞ்சம் தேவைதானே?

எஸ்.வி.ராஜதுரை எனக்கு ‘பிரச்சினைகள்’ வந்திருக்கும் என ஊகிப்பதற்குக் காரணம் உண்டு.

அவர் வழிநடத்தி வெளியாகும் ‘உயிர்எழுத்து’ மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்கு பதிலாக முறிந்தபனை நூலில் இருந்து சில பகுதிகளும். அதனுடன் அவ்விதழின் ஆசிரியர் சுதீர் செந்தில் என்னை கடுமையாக வசைபாடி எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது.

இதழ் வந்த சிலநாட்களுக்குள் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. செல்பேசியை எடுத்ததுமே காது கூசும் வசைகள். வேறுவேலையில் இல்லை என்றால் வசைபாடுபவர்கள் அனைவரிடமும் நான் பேசினேன். முக்கால்வாசிப்பேருக்கு நான் யாரென்றே தெரியவில்லை. என்னை இதழாளர் என்று நினைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. என்றுகூட ஒருவர் சொன்னார்.

என்னுடைய எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன். ‘எஸ்.எம்.எஸ். வந்திச்சி. கூப்பிட்டு கண்டியுங்கன்ன்னு சொன்னாங்க…அதான்’ என்றார்கள். அவர்களுக்கு உயிரெழுத்து இதழோ எஸ்.வி.ராஜதுரையோ சுதீர்செந்திலோ கூட யாரென்று தெரிந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளுக்கும் என்னுடைய செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்கள் எஸ்.வி.ராஜதுரையும் சுதீர் செந்திலும். கண்டிக்கும்படி கோரி தொலைபேசியில் மன்றாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டுவாரம் இருநூறு அழைப்புகள் வரை வந்தன. வசைகளை கேட்பதை ஒரு பயிற்சியாகவே வைத்திருக்கிறேன் என்பதனால் நான் அதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை.

மேலும் அப்படி அழைத்தவர்கள் பலருடைய உணர்ச்சிகள் நேர்மையானவை. அவர்கள் அறிந்த தகவல்களைக்கொண்டு அவர்கள் மிகையுணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒருவர் ஒரு பொதுவிஷயத்துக்காக உண்மையிலேயே கோபம் கொள்கிறார் என்றால் அது என்னவாக இருந்தாலும் மரியாதைக்குரியதே. அதிலும் இலங்கை அழிவுக்கு எதிராக தமிழகம் கொண்டிருந்த ஆழமான புறக்கணிப்பை ஒப்பிடும்போது இந்த தனிக்குரல்களில் உள்ள உணர்ச்சிவேகம் எனக்கு நிறைவையே அளித்தது.

இரண்டுவாரம் கழித்து அப்படி அழைத்தவர்களில் கணிசமானவர்கள் என்னை அவர்கள் அமைப்புகளில் உரையாற்ற அழைத்தார்கள். எல்லாருமே என் இணையதளத்தில் திருக்குறள் பற்றிய கட்டுரையை மட்டுமே படித்திருந்தார்கள். திருக்குறள் ஒரு சனாதனநூல் அல்ல என்று நான் பேசி நிரூபிக்கவேண்டும் என்று கோரிக்கைகள். பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

என்னுடைய எண் சுதீர் செந்திலுக்கு நான் நட்பு முறையில் கொடுத்தது. அவரது சிந்தனைகள் எதுவாக இருந்தாலும் நான் அவரை நட்புடன் மட்டுமே நினைத்திருந்தேன். பலவருடங்களுக்கு முன்னர் அவரே முன்வந்து சொல்புதிதுக்கு உதவுவதாகச் சொன்னார். ’மனுஷ்யபுத்திரனை நான் உருவாக்கினேன். அவன் இப்ப காலச்சுவடோட சேந்துட்டான். காலச்சுவடுக்கு போட்டியா நாம சொல்புதிதை கொண்டு வரணும்’ என்றார். அவரது முதிரா உணர்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அப்போதும் நான் மனுஷ்யபுத்திரனுக்கு நண்பனாகவே இருந்தேன். ஆனால் எனக்கு உதவிகள் தேவைப்பட்டன.

மருதம் என்ற இணைய இதழை ஆரம்பிப்பதாகவும் அதற்கான எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார். மருதத்தின் செலவில் சொல்புதிதையும் நடத்துவதாக திட்டம். மருதத்துக்கு அவர் ஒரு டொமெய்ன் பதிவுசெய்து கொடுத்தார். உண்மையில் அவர் தன் கட்டுமானத் தொழிலுக்காக உருவாக்கியிருந்த டொமெய்னில் ஒரு சிறுபகுதியையே மருதத்துக்காக ஒதுக்கினார். அது எனக்கு அன்று தெரியாது.

அவர் கொடுத்த வாக்குறுதியை நம்பி மருதத்தை பெரிய அளவில் ஆரம்பித்தோம். அன்றைய காலகட்டத்தில் மருதம் அளவுக்கு பெரிய இணைய இதழ் ஏதும் இருக்கவில்லை. அன்று எனக்கு கணிப்பொறி இல்லை என்பதனால் அதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் நாகர்கோயில் சரோஜினி கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் பக்கம் ஒன்றுக்கு இருபதுரூபாய் செலவில் தட்டச்சு செய்யப்பட்டன. ஒரு முழுநேர ஊழியரும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பின் சுதீர் செந்தில் வாக்களித்தபடி ஒரு பைசாகூட தரவில்லை. நான் அவர் தருவார் என நம்பி என் செலவில் மருதத்தை ஓருசில இதழ்கள் நடத்தியபடி சென்றேன்.

சுதீர் செந்தில் மருதம் அடங்கிய தன் டொமெய்னுக்கு ஆறுமாதம் மட்டுமே பணம் கட்டியிருந்தார். மேற்கொண்டு பணம் கட்டவில்லை. ஆகவே ஒருநாள் காலையில் திடீரென்று மருதம் நின்றுவிட்டது. எனக்கோ அந்த ஊழியருக்கோ இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே எந்த உள்ளடக்கத்துக்கும் ஃபீட்பேக் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை.

அவ்விதழில் மிகமுக்கியமான பல கட்டுரைகள் இருந்தன. என் நண்பர் சோதிப்பிரகாசம் இந்திய அரசியல் சட்டம் பற்றி, ஓநிக்ஸ் துப்புரவு இயக்கம் பற்றி, ஹெகல்-குரோச்சே பற்றி, மார்க்ஸிய மெய்யியல் பற்றி நிறைய எழுதியிருந்தார்.

அதேபோல குமரிமைந்தன் தமிழ்த்தேசியம் பற்றி மிகவிரிவான கட்டுரைகள் எழுதியிருந்தார். எல்லா கட்டுரைகளும் அழிந்தன. அவர்கள் பிரதி வைத்துக்கொள்பவர்கள் அல்ல. நான் எனக்களிப்பக்கப்பட்ட கைப்பிரதிகளை பாதுகாக்கவுமில்லை. ‘சரிதான் போகட்டும் தோழர்’ என்று அவர்கள் சொன்னாலும் இழப்பு என்னை இன்றும் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

விசாரித்தபோது சுதீர் செந்தில் உண்மையில் கட்டுமானத்தொழிலில் பெரும் நிதிச்சிக்கலில் இருப்பதாகத் தெரிந்தது. ஆகவே அதை நான் பெரிதுபடுத்தவில்லை. அந்த ஊழியரிடம் பேசி அவரது ஊதியத்தை பாதியாகக் குறைத்து சொல்புதிதின் நிதியிலிருந்து சமன்செய்து மீண்டேன். சொல்புதிது கொஞ்சநாள் நின்றபின் நண்பர் சதக்கத்துல்லா ஹசனீ அவர்கள் உதவியுடன் மீண்டும் வந்தது.

பின்னரும் சுதீர் செந்தில் என்னுடைய நண்பராகவே இருந்தார். மனுஷ்யபுத்திரனிடம் சண்டை போட்டு அவர் விலகி உயிரெழுத்து ஆரம்பித்தபோது அதில் தொடர்ந்து எழுதும்படி என்னைக்கோரினார். நான் அச்சு இதழ்களில் எழுதும் மனநிலையிலேயே இருக்கவில்லை. ஆனால் அவ்விதழை அறிமுகம் செய்தும் அதில் எனக்கு முக்கியம் என்று பட்ட படைப்புகள் வெளிவந்தபோது பாராட்டியும் எழுதினேன். அதில் மனுஷ்யபுத்திரன் கடுமையான வருத்தம் கொண்டார் என்றாலும் நான் என் சமநிலைக்கே விசுவாசமாக இருந்தேன்.

ஆக, ஒரு நீண்ட நட்பின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தொலைபேசி எண் அது. அதை இப்படி பரப்புவதென்பது மிகமிக அறமில்லாத ஒரு செயல். தன் கருத்தை அவர் எழுதியதில் பிழையில்லை, சரி வசைபாடியதுகூட ஒரு உணர்ச்சியின்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் பிறர் வசைபாட ஏற்பாடு செய்வதென்பது எந்த நியாயத்தின் பெயரிலானாலும் கீழ்மை. இதையே நான் அவருக்கும் செய்யமுடியும். நான் ஒருபோதும் செய்யப் போவதில்லை.

எஸ்.வி.ஆர். தன் கடிதத்தில் எனக்கு அவர் ‘சிக்கல்களை’ உருவாக்கியதாக கொக்கரிப்பது சுதீர் செந்தில் வழியாக அவர் செய்த இந்த சில்மிஷங்களை மட்டுமே. இதைச்செய்வதன் வழியாக எனக்கு என்னதான் ஆகப்போகிறது? வசை விழலாம். சரி, நாலைந்து அடிகூட விழலாம். அதனால் என்ன?

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரையின் கடிதமும் பதிலும்
அடுத்த கட்டுரைதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்