கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு தொடர்பு. நலமா?
எங்கள் குடும்பத்தில் நேர்ந்த ஒரு அசம்பாவித இழப்பு, என்னையும் எங்கள் குடும்பத்தினரையும் சற்று மௌனிக்க செய்திருந்தது.
தங்கள் இணைய எழுத்துகளை அவ்வப்போது வாசித்து வருகிறேன்.
சமீபத்திய காந்தி சார்ந்த எழுத்துக்களை மிகவும் ஆழ்ந்து படிக்கிறேன்.
காந்தியின் அணுகுமுறை இந்திய ஸமூகத்தை மனிதாபிமான அடிப்படையில் இணைக்க வல்லது. அதே சமயம், நம் (உலக ஆன்மீகம்என்றே சொல்லலாம் – ஏனெனில் அவர் ஏசுவின் ஆன்மிகததையும் ஒருங்கிணைத்தவர்) ஆன்மீக பரம்பரியதையும் ஒருங்கிணைத்து, எல்லோரையும் பங்கேற்க செய்வது. அங்கே தலைவர்களுக்கு இடமில்லை. அனைவரும் தொண்டர்களே. அவரும் தன்னை தொண்டராக
பங்கேற்க தயார் நிலையில் இருந்துள்ளார்..
இந்த ஊற்றை கண்டு கொண்டுவார்களின் ஆன்மீக பலமும்,  நியாயமாக உரிமைக்கு எழுந்து நிற்றலும், சிறப்பு தன்மை வாய்ந்தவை.
 
இன்றும், பாலஸ்தீனியர்கள், ஆயுதங்களை எறிந்து விட்டு அஹிம்சையை தழுவினால், அவர்களது அறத்தின் பலம் கூடும் என்பது என் கருத்து.
காந்தியை மீட்டலுக்கு நன்றி
அன்புடன்
முரளி

அன்புள்ள ஜெ,
நலமா?
தங்களின் காந்தி பற்றிய கட்டுரைகள் மிகவும் அருமை. எனக்கு மிகவும்
நம்பிக்கை கொடுக்கிறது.

நன்றி.

மகேஷ்

டியர் ஜெ
 
 
தங்களின் “தேர்தல் முடிவுகள்” கட்டுரை , ஒட்டுமொத்த தமிழக தமிழர்களின் குரலாக ஒலித்திருக்கிறது. சா¢யான நேரத்தில் வெளிவந்து, உலகெங்கும் வாழும் எம் தமிழ் சொந்தங்களுக்கு தமிழக தமிழர்களின் பா¢வும், ஆதரவும் உண்டு என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. நன்றி.
 
 
மதுரையிலிருந்து
 
குணசேகரன் அ
 
With Best Regards
 
Gunasekaran A
 
Madurai-20  

அன்புள்ள ஜெயமோகன் சார்,
காந்தியம் பற்றிய கேள்வியை என்னுடைய தெளிவுக்காக நான் தங்களிடம்
கேட்டிருந்தேன். தங்களின் விரிவான கட்டுரை என்னுடைய ஐயங்களை தெளிவு
செய்வதாக அமைந்திருந்தது. இந்த கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளையும்
தங்களின் தனித்த போராட்டங்களையும் பார்க்கும் போது உங்களை ஒருவிதமான
சங்கடத்திற்குள் தள்ளிவிட்டனோ என்று எனக்கு குற்றவுணர்வு ஏற்படுகிறது.
உங்களின் அன்றாட அலுவல்களுக்குள் எதிர்வினைகளுக்கு விளக்கம் அளிக்கும்
பாங்கையும் அதனுள் இருக்கும் உங்களுடைய உழைப்பையும் பார்க்கும்போது
நீங்கள் காந்தியத்தில் வைத்திருக்கும் நம்பிக்கை தெளிவாக தெரிகிறது. வன்முறைக்கு எதிரான, இந்திய தேசியத்தில், காந்திய முறைகளுக்கான அறிவியக்கம் வலுவாக இருகிறதா என்று கேட்டிருந்தேன். அதற்கான அடிகல்லாக
உங்கள் கட்டுரைகள் இருப்பதாய் எனக்கு படுகிறது.
 
 தங்களுடைய பொன்னான நேரத்தை, மன அமைதியை குலைத்து விட்டானோ ?.

அன்புடன்
குரு

 

அன்புள்ள குரு

கண்டிப்பாக இல்லை. ஒரு ஆக்கப்பூர்வமான விவாதத்தை தொடங்கிவைத்திருக்கிரீர்கல். பலருக்கு பல கோணங்களில் அது பயன்படுகிரது என்பதைக் காண்கிறேன். ஏராளமான கடிதங்கள் வருகின்ரன. அவை அக்கட்டுரைகளின் பயனை சுட்டுகின்ரன. மொழியாக்கம்செய்ய நேரமில்லாததனால் பெரும்பாலும் அவற்றை பிரசுரிக்க முடியவில்லை

நன்றி
ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 
வணக்கமும் வாழ்த்துகளும்!
கடந்த சில மாதங்களாக உங்கள் வலைத் தளத்தை வாசித்து வருகிறேன்.
ஆனால் இதுவரை தங்களுடன் எனது கருத்தினைப் பகிர்ந்துகொள்ள நினைத்ததில்லை.
எனினும் காந்தியாரின் அஹிம்சை பற்றியும் அதன் வெற்றி குறித்தும் இப்போ து எழுதியிருப்பதைப் படித்தேன்.
இந்திய சுதந்திரத்துக்காக மகாத்மா ஏந்திய ‘அஹிம்சாயுதம்’  , மிகப்பெரும் நாடொன்றில் அதன் முப்பது கோடி மக்களின்
துணையோடு வெற்றி பெற்றது !  சந்தேகமில்லை.
ஆனால் ,இந்திய சுதந்திரத்தின் பின் எத்தனை நாடுகள் அஹிம்சையால் தங்கள் சொந்த நாட்டை மீட்டன?
அதிலும் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் விடுதலை பெற்ற எந்த நாடும்
அஹிம்சையை பயன்படுத்தியதில்லையே ? அவை யாவும் தொடர்ச்சியான போர்களின் மூலமாக அநேக உயிரிழப்புகளின் பின்னரே தங்கள் இலட்சியத்தை அடைந்தனர். அதேசமயம்  அவர்களுக்கு வேறுநாடுகளின் துணையும் உரிய நேரத்தில் கிட்டியதும் மற்றொரு காரணம்
நல்லவேளையாக அவற்றிற்கு அடுத்திருந்த நாடுகள் போரிடும் இனத்துக்கு  துரோகம் செய்யவுமில்லை !
ஈழத்தில் நடந்தது , சாருநிவேதிதா சொல்வதுபோல் ‘வன் செயலின் தோல்வியல்ல ‘ அது வஞ்சகத்தின் வெற்றி ‘
ஈழத்தில் முதல் முப்பதாண்டுகள் காந்திவழி நின்று போராட்டங்களை நடத்திய தந்தை செல்வா  
இறுதியில் அது சிங்களரிடம் பயன்தராது என உணர்ந்து தனிமாநிலக் கோரிக்கையை  முன்வைத்து தேர்தலில் வென்றார்.இது நிகழ்ந்து ஐந்து வருடங்களின் பின்னரே ,அதுவும் 1983   இனப் படுகொலையின் தொடர்ச்சியாக அங்கு ஆயுதப்போர் தீவிரமடைந்தது. அதற்கு நெய்யூற்றி வளர்த்தது ‘இந்திராவின் ‘ இந்தியா!
இன்று அதே இந்தியா ஏனைய நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றோடு இணைந்து  சிங்களத்துக்கு உதவியதே தோல்விக்குக் காரணம் . இது பற்றி எழுதுவதெனின் இக்கடிதம்  கட்டுரையாகி நீண்டுவிடும்.
உலகில் யாரும் அமைதிக்கும் சமாதானத்துக்கும் எதிரிகளல்ல. ஆனால் போர் அவர்கள்மீது திணிக்கப்படும்போது போராடித்தான் ஆகவேண்டும் . அதனைக் கொச்சைப் படுத்துவது  நியாயமன்று .எல்லா வியாதிக்கும் ஒரே மருந்து தீர்வல்ல.
அன்புடன்,
“சர்வசித்தன்”    

 

அன்புள்ள சர்வசித்தன்

எதைவாவது படிக்க முயலுங்கள்
ஜெ

 

888

முந்தைய கட்டுரைகாந்தியும் கிலாஃபத்தும்:கடிதம்
அடுத்த கட்டுரைசே குவேராவும் காந்தியும்