சே குவேராவும் காந்தியும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ‘வெறுப்புடன் உரையாடுதல்’, ‘சாருவுக்கு கடிதம்’, ‘காந்தியின் துரோகம்’ மற்றும் சாருவின் ‘வன்முறையின் தோல்வி’ கட்டுரைகளின் தொடர்ச்சியாக எனக்கு எழுந்த கேள்விகளும், குழப்பங்களுமே இந்த கடிதம். எனக்கு வன்முறையின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், சில நேரங்களில் ஆயுத போராட்டம் என்பது தவிர்க்க முடியாமல் நிகழ்கிறது என்று நினைக்கின்றேன். குறிப்பாக சே குவேரா எடுத்த நிலைப்பாட்டினை பற்றியே இந்த கடிதம்.

சே குவேராவின் போராட்டம் அதிகார அடக்குமுறையையும், சுரண்டலையும் எதிர்த்துதானே இருந்தது? எந்த வித நிர்பந்தமும் இல்லாமல்,சக மனிதனின் துயரை கண்டே அவர் போராட முனைந்தார். அவர் அஹிம்சையை தேர்ந்தெடுக்காவிட்டாலும் அவரது போராட்டத்தில் நேர்மை இருந்ததே, தனி நபர் அதிகார வேட்கையில்லை. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பிரபாகாரனின் போராட்டத்துகும், சேவின் போராட்டத்துகும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? (பிரபாகாரன், சாதி, மத விதியாசம் பாரட்டியது மட்டுமல்ல, ஒரு தீவிர வலது சாரி போலவும், மக்களுக்கான போராட்டம் என்பதிலிருந்து விலகி தனி நபர் அதிகார வேட்கைகாக போராடியதின் விளைவே அவர் சொந்த மக்களிடம் ஆதரவை இழந்தார்).

‘துப்பாக்கியில்லாமல் போராட்டமா?’ என்பதிலிருந்து ‘போர் களத்தில் துப்பாக்கியால் சுடுவது மட்டும் போராட்டமல்ல” என்பது வரை அவர் மாறியிருந்தார். சக போராளிகள் படித்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர்களுக்கு கற்ப்பிக்கவும் செய்தார். (‘ராம்போ” படங்களை காட்டி போராளிகளை தயார் செய்யவில்லை). எந்த நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி அதை ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை, தென் அமேரிக்க நாடுகளின் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்றதானே போராடினார்?

நீங்கள்தான் உங்கள் கட்டுரைகளில் சேவை பற்றி குறிப்பிடவில்லையே, பின்பு நான் ஏன் சேவை பற்றி எழுதிகிறேன்?  காரணம் எனக்குள் இருக்கும் முரண்பாடு. காந்தியும், சேவும், இரு வேறு வழிகளில் போராடினாலும், அவர்கள் போராட்டத்தில் நேர்மை இருந்தது. மனித நேயத்திற்காக சக மனிதனை கொல்லுவது முரண்பட்ட விஷயமானலும், அதை அதிகார அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிரான போர் என புரிந்துகொள்ளலாமா? மனித நேயமே மனிதர்களுக்கான ஒரே அடையாளம் என நம்பும் நான், சேவின் போராட்டத்தால் குழப்பம் அடைந்துள்ளேன். அவர் கையில் துப்பாக்கியிருப்பதால், அவரின் நேர்மை பொய்யில்லையே? அவர் எந்த கற்பனைவாத தத்துவத்தையும் நம்பி போராடவில்லையே?

இங்குதான் எனக்கு காந்திக்கும், சேவுக்கும் இடையே உள்ள கோடு அழிகிறது…. கடிதத்தின் தோனி சேவுக்கு வக்காளத்து வாங்குவது போல் இருந்தாலும், சேவை பற்றிய எனது புரிதலையும், எனது முரண்பாடுகளையும் விளக்குவதே என் நோக்கம்.

மக்களுக்கான போராட்டத்தில் சேவின் இடம் என்ன? தேசியமே ஒரு வகையில் இன்னொரு மனிதனின் மீது வெறுப்பை உமிழ பயன்படுத்தபடும்போது (நான் இந்தியன், நீ பாக்கிஸ்த்தானி என்பது போல்) எப்படி காந்தி மனித நேயத்தை தேசியத்தின் மூலமாக எடுத்து செல்ல முயன்றார்? தயவு செய்து விளக்கவும்.

இப்படிக்கு
ராஜசேகர்.

***

அன்புள்ள ராஜசேகர்

பொதுவாக பெரும்பாலான வீரநாயக பிம்பங்களை நாம் உணர்ச்சிகரமாகவே உருவகித்துக் கொள்கிறோம். மறுபரிசீலனை செய்வதில்லை. காரணம்  நம்முடைய ஆழ்மனம் வீரவழிபாட்டு மரபைச் சேர்ந்தது.நாம் நம்மை ஒரு சாகசநிலையில் கற்பனைசெய்துகொள்ளவும் இவை உதவுகின்றன. நம்முடைய சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையில் இந்தவகையான சாகசச்செயல்கள் ஊட்டும் கனவு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

ஆனால் முதிர்ச்சியடைந்த ஒரு மனதுக்கு இத்தகைய வீரவழிபாடு இருக்காது என்றே நான் நினைக்கிறேன். அறத்துக்கு மாற்றான சொல்லாம மறத்தை – வீரத்தை- உருவகித்த ஒரு மாபெரும் சிந்தனை மரபும் நமக்குண்டு. அதுவே நம் பண்பாட்டின் உச்சம். மகாவீரர் என்று அகிம்சையின் உச்சியில் நின்ற வர்த்தமானரைச் சொல்லும் பண்பாடே தமிழின் சாரமென நான் நம்புகிறேன்

வீரச்செயல் என்பது பிரச்சினைகளை மிக மிக எளிமைப்படுத்தி ஒற்றைப்படையானதாக ஆக்கியபின்னர் முன்வைக்கப்படும் தீர்வு. உண்மையில் வாழக்கையும் வரலாறும் எல்லாம் அவ்வாறு சாகசங்கள் மூலம் தீர்க்கப்படும் சிக்கல்கள் கொண்டவை அல்ல. அவை சீரான பொறுமையான வளர்ச்சிநிலைகள் மூலம் தாண்டிச்செல்லவேண்டியவை என்ற புரிதல் கொண்டவர்கள் வன்முறை சார்ந்த வீரத்தை முக்கியமான ஒன்றாக எண்ண மாட்டார்கள்.  தன் அகத்தை ஒருவன் வெல்வதே உண்மையான வீரமென அவர்கள் எண்ணுவார்கள்

சென்ற சில பதிற்றாண்டுகளாக பெரிதாக கட்டமைக்கப்பட்ட வீரபிம்பம் சே. ஆனால் இப்பிம்பத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் சேவின் உண்மையான வாழ்க்கையையும் அவர் செயல்பட்ட வரலாற்றுத்தளங்களையும் அறிவார்கள் என்பது கேள்விக்குறியே. தமிழிலேயே கார்லோஸ் கஸ்நாடாவின் சேகுவேரா வாழ்க்கை வரலாறு வெளிவந்துள்ளது.[விடியல் பதிப்பகம். எஸ்பாலசந்திரன் மொழியாக்கம்] பெரிதும் வணக்கத்துடன் எழுதப்பட்டுள்ள அந்நூல் அளிக்கும் சேவின் பிம்பமேகூட நமக்கு பலவகையான திறப்புகளை அளிக்கக் கூடியதாகும்.

சே  கருணையும் மனிதாபிமானமும் கொண்ட ஒருவர். இலக்கியத்திறனும்  இலட்சியவாதமும் நிரைந்தவர். சாகசக்காரர். ஓர் இளைஞனாக மிக மிக மனதுக்கு நெருக்கமாக ஆகக்கூடிய ஆளுமை  அவர். எனக்கும் அவரது ஆளுமை மேல் ஈடுபாடு உண்டு. அவர்மேல் பிரியமும் உண்டு.

ஆனால் சேவின் அரசியல் புரிதலும் சரி, வரலாற்றுப்புரிதலும் சரி, மிக மேலோட்டமான கற்பனாவாத இலட்சியத்தன்மை கொண்டவை என்பதே உண்மை. அவருக்கு அவர் சார்ந்து செயல்பட்ட தளங்கள் குறித்து முற்றிலும் தவறான புரிதல்களே இருந்தன. அவரது தோல்வி அந்த பிழைபட்ட புரிதலில் இருந்தே எழுந்தது.

சே புரட்சியாளர். ஆயுதத்தில் நம்பிக்கை கொண்டவர். கியூபாவில் அவர் ·பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து அடைந்த வெற்றி அவருடைய தன்னம்பிக்கையை வளர்த்து வரலாறு குறித்த  மிகப்பிழையான ஒரு புரிதலைக் கொடுத்தது. அதை நாம் புரலட்டேரியனிசம் எனலாம். செயல்பாட்டாளரியம் என நண்பர் சோதிப்பிரகாசம் அச்சொல்லை மொழியாக்கம் செய்தார்.

அது ஒருவகை மேட்டிமைவாதம். ஒரு சமூகத்தில் இருந்து வரலாற்றுணர்வும் சமூகப்பொறுப்பும் கொண்ட சிலர் எழுந்துவந்து ஆயுதமேந்திப் போராடி, அந்தச் சமூகத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றி, அச்சமூகத்தை தங்கள் விருப்ப்பபடி மாற்றியமைத்துவிடலாம் என்னும் நம்பிக்கையே செயல்பாட்டாளரியம். இந்தச் சிலர் அச்சமூகத்தின் ஆகச்சிறந்த மனிதர்கள். அவர்களே அச்சமூகத்தின் சாரம். அவர்களே அச்சமூகத்தை தீர்மானிக்கும் தகுதி கொண்டவர்கள். மற்ற மக்களெல்லாம் அவர்களை ‘தொழுதுண்டு பின்செல்ல’ வேண்டியவர்கள் மட்டுமே.

இவர்களே புரட்சியாளர்கள். புரட்சியாளர்களினால் ஆனதே கட்சி. கட்சியே வரலாற்றை உருவாக்குகிறது. கவனிக்கவும் கட்சி வரலாற்றின் ஒரு பகுதி அல்ல அதுவே வரலாற்றை உருவாக்குகிறது. தன் விருப்பபடி சமூகத்தை மாற்றியமைக்கும் பொறுப்பும் தகுதியும் உரிமையும் அதற்கு உண்டு.

இந்த நம்பிக்கையானது வி.இ.லெனின் போல்ஷெவிக் புரட்சி வழியாக சோவியத் ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது உருவான ஒன்று. உண்மையில் போல்ஷெவிக் புரட்சி என்பது வரலாற்றில் மிக அபூர்வமாக  நிகழும் ஒரு தற்செயல். அதன் பின்விளைவுகளை வைத்து பார்த்தால் ஒரு விபத்து அது. அதற்கும் மார்க்சியக் கோட்பாடுகளுக்கும் நேரடி உறவு ஏதுமில்லை என்பதே உண்மை. உற்பத்தி- வினியோக சக்திகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக முதலாளித்துவ அமைப்பு சிதறி கம்யூனிசம் வரும் என்பதே மார்க்சியம். ஒரு செயலாபாட்டாலர் குழு சட்டென்று அதிகாரத்தைக் கைப்பற்றி அமைப்பை கம்யூனிசமாக மாற்றியமைக்கலாம் என்பது லெனின் கொடுத்த சந்தர்ப்பவாத விளக்கம்

ஜார் ஆட்சி முதல் உலகப்போரினால் அதன் வரலாற்றிலேயே ஆகப்பலவீனமாக இருந்த காலகட்டத்தில் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு  அங்கே ஜார் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. போரில் இருந்து திரும்பிவந்துகொண்டிருந்த துருப்புகள் போரில் சலித்திருந்தார்கள். சமாதானம் வரவேண்டுமென்றும் தாங்கள் ஊருக்கு திரும்ப வேண்டுமென்றும் விரும்பினார்கள். அந்த எண்ணத்தை புரிந்துகொள்ளாத ஜாரின் அரசு அவர்களை திரும்பவும் போர்முனைக்கே தள்ளியது.

அந்த உணர்ச்சிகளை புரிந்துகொண்ட லெனினும்  டிராட்ஸ்கியும் உடனடியானப் போர்நிறுத்தம் என்னும் வாக்குறுதியை முன்வைத்து அந்த வீரர்களின் ஆதரவை சட்டென்று பெற்றார்கள். மார்க்சியக் கோட்பாட்டுக்குச் சற்றும் ஒத்துப்போகாத ‘தந்தையர் நாடு’ கோஷத்தை முன்வைத்தார் லெனின். புரட்சிநடந்தது. ஜார் ஆட்சி இறக்கப்ப்பட்ட பின் கேரென்ஸ்கி என்னும் பலவீனமான ஆட்சியாளரின் கீழே ருஷ்ய அரசு தடுமாறிக்கொண்டிருந்தபோது ஓர் அதிரடி மூலம் போல்ஷெவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

போல்ஷெவிக்குகள் மக்களின் கருத்தை மாற்றியமைத்து சிவில் அதிகாரத்தை பிடித்து அதன் விளைவாக ஆட்சியை அடையவில்லை. ஆஅயுதம் ஏந்திய செயல்பாட்டாளர்க்கூட்டம் ஒன்றே அவர்களின் அதிகாரத்தின் ஊற்று. ஆகவேதான் உடனடியாகவே அனைத்து அதிகாரங்களும் அந்த செயல்பாட்டாளர்களின் கைகளுக்குச் சென்றது. ‘அதிகாரம் அனைத்தும் சோவியத்துகலுக்கே’ என்ற கோஷம் பிறந்தது. சோவியத் ருஷ்யாவின் அனைத்து அழிவுகளும் தொடங்கியது இங்குதான். பெரும்பான்மை மக்களுக்கு மேல் ஒரு சிறுகுழுவின் அதிகாரம் மூலம்.

அந்த சிறிபான்மை அதிகாரம்  மக்களின் அடித்தள ஆதரவு இல்லாதது. செயற்கையானது. ஆகவே எப்போதும் மக்களை அஞ்சிக் கொண்டிருந்தது. விளைவாக அது மக்களை கொடுமையாக ஒடுக்கியது. லட்சக்கணக்கில் ஏழை எளிய மக்களை அது பலிகொண்டது. எந்த முறையில் தாங்கள் அதிகாரத்தை பிடித்தோமோ அதேபோல தங்கள் அதிகாரமும் பிடுங்கப்படும் என்ற சந்தேகம் அதை வாட்டியது. ஆகவே தலைமை தன் அணிகளையே சந்தேகப்பட்டது. தனக்குள்ளேயே கொன்றுகொண்டது. இருபது வருடங்களுக்குள்பொட்டுமொத்த புரட்சித்தலைமையும் ஒருவரை ஒருவர் கொன்று அழிந்தது.

கியூபவின் புரட்சியும் இதேபோன்ற ஒரு வரலாற்றுத்தற்செயல் மட்டுமே. சிலநூறுபேர் கொண்ட இளைஞர் குழு விளையாட்டாக, உற்சாகமாகக் கிளம்பி தலைநகரைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. சோவியத் ருஷ்யாவின் துணை இருந்தமையால் அந்த ஆட்சி நீடித்தது.. அந்த நிகழ்ச்சியை வரலாற்றின் பொன்விதி என புரிந்துகொண்டார் சே. அதை அப்படியே பிறநாடுகளிலும் செயல்படுத்த முயன்றார்.

ஒரு நாட்டில்  ஒருசில புரட்சியாளர்களை திரட்டி அவர்களைக் கொண்டு அந்நாட்டின் மைய அதிகாரத்தை எதிர்பாராமல் தாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவதே அவரது அரசியல் திட்டம். அதன்பின்னர் அவர்கள் செய்யும் மக்கள்நல’ சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்தவழிமுறைப்படி காங்கோவில் ஆட்சியைப்பிடிக்க முயன்று அது படுதோல்வியடைவதைக் கண்டார். அதையே சலிக்காமல் மீண்டும் பொலிவியாவில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகளாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

சேவின் மரணம் அவரது அபத்தமான வரலாற்றுப்புரிதலுக்கு கிடைத்த  விலை. ஒரு தேசத்தின் லட்சக்கணக்கான மக்களின் கருத்துநிலையை அறவே உதாசீனப்படுத்திவிட்டு, புரட்சியாளர் என்னும் தேவதூதர்களின் அளவிலா அதிகாரத்தையும் வலிமையையும் நம்பிய மேட்டிமைவாதத்தின் விளைவு அது. சே உயிருடன் இருந்திருந்தால் அண்டோனியோ கிராம்ஷியின் நூல்களை முப்பதுமுறை பிரதிசெய்யவேண்டும் என்ற தண்டனையை அவருக்குக் கொடுக்கலாம். ஒரு சமூகத்தின் அதிகாரம் அதன் அரசில் இல்லை, அச்சமூகத்தின் மனத்தில் கருத்தியல் வடிவில் பரவியிருக்கிறது என அவர் புரிந்துகொண்டிருப்பார்

சேவின் வழிமுறைகளை நம்பி உலகமெங்கும் புரட்சியாளர் குழுக்கள் வன்முறைமூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றன. இளமையில் சேவின் கொள்கை அளவுக்கு நம்மை கவரும் எதுவும் இருப்பதில்லை. மக்களை ஒன்றும் தெரியாத மந்தைகளாகவும் நம்மை எல்லாம் தெரிந்த புரட்சியாளர்களாகவும் நாம் கற்பனைசெய்துகொள்கிறோம். நாம் மக்களை வழிநடத்திச்செல்ல விரும்புகிறோம். அதற்கு ஒப்புக்கொள்ளாத ‘அறிவில்லாத’ மக்களைக் கொல்லவும் நமக்கு தயக்கம் இருப்பதில்லை. அவ்வாறு உலகமெங்கும் தோன்றிய புரட்சிக்குழுக்கள் அனேகமாக அனைத்துமே கொடூரமாக ஒடுக்கப்பட்டன. பல லட்சம் இளைஞர்கள் உயிர் துறந்தார்கள்

இந்தியாவில் நகசலைட் இயக்கம் சேவின் முன்னுதாரணத்தை நம்பி எழுந்தது. சே அவர்களின் ஆதர்ச பிம்பம். நக்சலைட் இயக்கம் ஒடுக்கப்பட்டபோது வங்காளத்தில் மட்டும் 50000 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 70000 பேர். ஆம் எழுபதாயிரம் படித்த துடிப்பான இளைஞர்கள். கனவுகளும் லட்சியங்களும் கொண்டவர்கள். மனிதாபிமானமும் அறவுணர்வும் கொண்டவர்கள். வரலாற்றுப்பிழையின் பலிகள். அவர்களில் கால்வாசிபெபெர்தான் நக்சலைட்டுகளாக இருப்பார்கள். மற்றவர்கள் நடுவே மாட்டிக்கொண்ட அப்பாவிகள்.

இலங்கையில் எழுபதுகளில் சே வை முன்னுதாரணமாகக் கொண்டு எழுந்த ஜனதா விமுக்தி பெருமுனே என்னும் சிங்கள மார்க்சிய அமைப்பு  அந்த அரசால் வேருடன் பிடுங்கி அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் சிங்கள அரசால் கொல்லப்பட்டார்கள். அவர்களில் உண்மையான புரட்சியாளர்கள் அதிகம் போனால் பத்தாயிரம்பேர் இருப்பார்கள். மீதியெல்லாம் ஏழைச் சிங்கள இளைஞர்கள்.

சே குறைவான காலமே கியூபாவில் இருந்தார். அதற்குள் அவருக்கும் காஸ்டிரோவுக்கும் கடுமையான முரண்பாடுகள் உருவாகின. சே பொலிவியாவுக்குப் போய் சாவதற்கான காரணத்தை நாம் இங்குதான் தேடவேண்டும். கியூபாவிலேயே சே கொல்லப்படாமைக்குக் காரணமே அவர் கியூபாவின் அரசியலை முற்றாக கைவிட்டுவிட்டு பொலிவியாவுக்குப் போகத்தயாராக இருந்ததுதான்.

கியூபாவை கம்யூனிச நாடாக உருவாக்குவதில் சேவின் எல்லா திட்டங்களும் தோல்வியையே அடைந்தன. காரணம் மக்களை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ‘அறிவொளி’ பெற்ற செயல்பாட்டாளரின் பார்வைதான். நான் வரலாற்றை அறிந்த புரட்சியாளன் நான் சொல்லுவதுபோல மக்களும் வரலாறும் மாறவேண்டும் என்ற எண்ணம்.

சே தொடர்ந்து கியூபாவில் பதவியில் இருந்திருந்தால், அல்லது ஒரு வேளை வேறு நாட்டை வென்று ஆட்சியமைத்திருந்தால் மாவோ சே துங் சீனாவில் செய்தது போன்ற அதே பேரழிவை தானும் செய்திருப்பார். மாவோ சீனாவை ‘முன்னேற்ற’ தான் வைத்திருந்த திட்டங்களை மூர்க்கமாக அம்மக்கள் மேல் திணித்தார். அதை கலாச்சாரப் புரட்சி என்னும் பேரால் அழைத்தார். அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தார் என்பது வரலாறு.

சே அதே மனநிலை கொண்டிருந்தார். அதாவது தன் மக்களுக்கு நல்லது என நினைத்து தனக்குப்பிடித்தவனுக்கு அவளை பலவந்தமாகக் கட்டிவைக்கும் தகப்பனின் மனநிலை. கியூபாவில் சே செய்த விவசாய சீர்திருத்தங்கள் விவசாயத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாத புத்தகப்புழு செய்த அபத்தமான முயற்சிகள். ஆனால் அதன்பொருட்டு மூன்று வருடம் சே கியூப விவசாயிகளை ரத்தம் பெருகச் செய்தார்.

சேயின் முன்னுதாரணத்தை நம்பி புரட்சியில் ஈடுபட்டு, அப்புரட்சி தோற்று, கொல்லப்பட்டவர்கள் பல லட்சம் . அதேபோல சே’யை முன்னுதாரணமாகக் கொண்டு புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்து அம்மக்களை தன் விருப்பபடி மாற்ற முயன்று, அடிமைகளாக ஆக்கி, லட்சக்கணக்கில் கொன்றவர்களும் பலர் உண்டு. இரண்டு உதாரணங்கள். ஒன்று கம்போடியாவின் இடதுசாரித்தலைவரான போல்பாட். எழுபதுகளில் அவர் கம்போடிய சே என்றே அழைக்கப்பட்டார். அவர் கொன்றழித்த மக்கள் முப்பது லட்சம். நாட்டின் மொத்த மக்களில் மூன்றில் ஒரு பகுதி. இன்னொருவர் வடகொரியாவின் கிம் இல் சுங். அவர் கொன்ற லட்சங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை.

சே மாபெரும் மனிதாபிமானி. ஆனால் மனித குலத்துக்கு நன்மை செய்தவரல்ல.  மக்களை நேசித்த, அம்மக்களிடம் இருந்து கற்றுக்கொண்ட காந்தியிடமும் நெல்சன் மண்டேலாவிடமும் அவரை ஒப்பிடுவது அபத்தமானது.  கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்பது ஒரு பெரும் பிரவாகம் என்றும், அதில் தன் சிந்தனையும் கனவும் அகங்காரமும் துளியினும் துளியே என்றும் உணர்ந்தவனே தலைவன். அவன் மக்களில் ஒருவராக நின்று மக்களை வழிநடத்துவான். மக்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ பீடத்தில்  இருந்து கட்டளையிட மாட்டான். ஒருபோதும் ஒருபோதும் அவர்களை அழிவைநோக்கி கொண்டுசெல்லமாட்டான்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைதியானம்:கடிதங்கள்