அஞ்சலி:கமலா சுரையா

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டியை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்திருத்திருக்கிறேன். கேரள சாகித்ய அக்காதமி அலுவலகத்துக்கு அவர் வந்திருந்தார். நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஒருவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ”ஆ, எனக்குத்தெரியும்…நித்யா என்னுடைய காதலன்!” என்றார். எனக்கு கமலா தாஸ் எப்படிப்பட்டவர் என்று தெரியும் என்பதனால் ஆச்சரியம் அடையவில்லை. அப்போது கமலா தாஸ் விசித்திரமான கோலத்தில் இருந்தார். எப்படியும் முந்நூறு பவுன் எடையுள்ள நகைகள் அணிந்திருப்பார். இமைகளில் ஜிகினா. உதட்டுச்சாயம். ரூஜ். பளபளக்கும் ‘ஸீ த்ரூ’ சேலை. காதுகளில் அவர் அணிந்திருந்த தொங்கட்டான் மிகமிக விபரீதமாக இருந்தது. அதை சாண்ட்லியரின் குழந்தை எனலாம்.

 

 

என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி. அவர் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் வேடிக்கையானது. அவருக்கு குருவாயூர் கிருஷ்ணனுடன் காதல். காதல் மட்டுமல்ல காமமும் கூட. கிருஷ்ணனை பார்க்கச் சென்றிருந்தார். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்துவிட்டது. ”இனி ஆ கள்ளனோடு மிண்டில்ல…”என்றார் நாணத்துடன். ”பக்ஷே அவன் என்னை தேடி வரும்..அவனு ஞான் இல்லாதே ஜீவிக்கான் கழியில்ல” அருகே நின்ற ஒரு ஆசாமி உண்மையான பக்திப்பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

விசித்திரங்களும் கிறுக்குத்தனங்களும் நிறைந்த வாழ்க்கை கமலா தாசுடையது. கேரள வரலாற்றில் ஆழமான தடம் பதித்த நாலப்பாட்டு நாயர் ‘தறவாட்டி’ல் பிறந்தார். தாத்தா கெ.பி.கேசவமேனன் சுதந்திரப் போராட்ட தியாகி. மாத்ருபூமி நாளிதழை நிறுவியவர். இன்னொரு தாத்தா நாலப்பாட்டு நாராயண மேனன் கேரளத்தின் முக்கியமான கவிஞர். அப்பா வி.எம்.நாயர் மாத்ருப்பூமி நிர்வாக ஆசிரியர். அம்மா நாலப்பாட்டு பாலாமணி  அம்மா கேரளத்தின் முக்கியமான பெண் கவிஞர்.

சிறந்த கல்விக்கூடங்களில் கற்ற கமலா தாஸ் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். முதலில் கவிதைகள். அவை கவனிக்கப்படவில்லை. பின்னர் எழுதிய சுயசரிதை ‘My story’ பெரும் புகழ்பெற்றது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. பின்னாளில் அந்த நூலில் சொன்னவை எல்லாமே பொய்கள் என்றும், பணம் கிடைப்பதற்காக கணவரின் ஆலோசனைப்படி எழுதியவை என்றும் சொன்னார் கமலா.

மாதவிக்குட்டி என்ற பேரில் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய செயற்கையான ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது மலையாளத்தில் அவர் எழுதியவை முக்கியமான படைப்புகள். மலையாளச் சிறுகதையை கவிதைக்கு அருகே கொண்டு வந்தார். நடுக்கேரளத்தின் பேச்சு நடையை அழகாக புனைவாக்கினார். காமத்தை மென்மையாக எழுதுவதில் ஒரு சாதனையாளர் அவர். கேரள நவீன புனைகதை இலக்கியத்தின் முதல் பத்து சாதனையாளர்களில் அவரை நிச்சயமாகச் சேர்க்க முடியும்.

ஆனால் அவர் நாலப்பாட்டு குடும்பம் என்பதனாலேயே, அவரது மகன் எம்.டி.நாலப்பாடு மாத்ருபூமி ஆசிரியராக இருந்தமையாலேயே, அவர் மிகையாகப் புகழப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவரை பற்றி கட்டுரைகள் எழுதிக்குவிக்கப்பட்டன. அந்த வரிகள் வழியாக நாம் அவரை அணுகினால் ஏமாற்றமே ஏற்படும்.

கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்.

கமலாவின் அதிரடிகள் பல. சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அரசியல் கட்சி தொடங்கினார் — ஆம், தேசியக்கட்சி! ஓவியங்களை வரைந்து கண்காட்சி வைத்து உண்மையான ஓவியர்களை கதறி ஓடச்செய்தார். பயங்கரமாகப் பாட்டு பாடினார்.

அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.

நிர்மால்யா மொழியாக்கத்தில்  கமலாதாஸ் கதைகள் என்னும் ஒரு தொகுப்பு வெளிவந்தது. கவிதா பதிப்பக வெளியீடு. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் [கமலாவின் காதல்கள்] கமலாதாசின் இந்த கிறுக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர்  கடுமையாக எதிர்வினையாற்றியதாக என்னிடம் நடுவே உள்ள சில இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். நான் அவரை கூப்பிடவில்லை. ஆகவே ஆறுமாதம் கழித்து என்னை ·போனில் கூப்பிட்டு  வசைபாடினார். கமலாவைப் பொறுத்தவரை அந்த எதிர்வினையேகூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்பதனால் நான் எதிர்வினையாற்றவில்லை

அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே ‘பாதுகாப்பான துணை தேடி’ மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்.

கடைசிக்காலத்தில் கமலா தாஸ் மிக மிகச் சோர்வடைந்திருந்தார். இனிமேல் கேரளத்துக்கே வரமாட்டேன் என்று சொல்லி பூனாவுக்குச் சென்றார். அங்கே சென்ற மே 31 மாலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தன் கட்டற்ற இச்சைகளினால் அடித்துச்செல்லபப்ட்ட அலைக்கழிந்த ஓர் ஆத்மா. இதோ அது தன் இயல்பான அமைதியைக் கண்டுகொண்டிருக்கிறது. கவித்துவத்தைத் தொட்ட ஒரு பத்து சிறுகதைகள், பாலியகார நினைவுகள் என்னும் தலைப்பிலான ஆரம்பகால கட்டுரைகள் வழியாக கமலா இலக்கியத்தில் இருந்துகொண்டிருப்பார்.