அவதூறு செய்கிறேனா?

ஆசிரியருக்கு ,

மனசாட்சி சந்தையும், எஸ்.வி. ஆரின் பதிலையும் வாசித்தேன. பாரதி புத்தகாலயத்தில் இளங்கோவுடன் விவாதித்து இக்கேள்வியை இடுகிறேன். நீங்கள் நீண்ட நாட்களாகவே அ.மார்க்ஸ் , எஸ்.வி. ஆர் , வ.கீதா , சிலகாலமாக அ.முத்து கிருஷ்ணன் ஆகியோர்களை அயல்நாட்டு இந்திய அல்லது இந்து எதிர்ப்பு பெருநிறுவனங்களின் நிதியையோ அல்லது பன்னாட்டு/இந்திய பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் நிதியையோ பெற்று செயல்படுவதாகவும் எழுதுவதாகவும் சொல்கிறீர்கள்.

விசாரித்தவரை அவர்கள் தன்னளவில் அந்த அரசியலை நம்பி செயல்படுகிறார்கள் (பணம் பெறாமல் ) என்றே நான் நம்புகிறேன்.

நீங்கள் இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொண்டு அவர்கள் கருத்தாக்கத்தை உடைப்பதைப் பிரதானமாகக் கொள்ளாமல், ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் மனப் பதிவுகளின் அடிப்படையில் அவர்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். ஒரு எழுத்தாளனாக இந்த அரசியலில் செலவழிக்க நேரமும் சக்தியும் இல்லை என்றால், அவர்களின் நேர்மையைக் கேள்விகேட்காமல் இருப்பதே நன்று, அது அவதூறாகிவிடும்.

இதுவரை இதே அரசியலைத் தன்னளவில் நம்பி முன்வைக்கும் இடது சாரி மற்றும் திராவிட சிந்தனை தோழர்களை நீங்கள் சுட்டிக்காட்டியதாக நினைவில்லை.

உங்கள் பதிலுக்காக இடது சாரிகளுடன் காத்திருக்கும் ,

கிருஷ்ணன்
ஈரோடு

கோவை ஞானி

அன்புள்ள கிருஷ்ணன்,

வழக்கம்போல என்னிடம் கேட்கவேண்டியவற்றை உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். என்னுடைய மனசாட்சியின் இடத்தில் நின்றுகொண்டு அதை எனக்குத் திருப்பிவிட்டிருக்கிறீர்கள்.

ஒருவகையில் இது உண்மையான தருணம். நான் மிகையாக, உணர்ச்சிகள் மீது கட்டுப்பாடில்லாமல், இதைப்பற்றிச் சொல்கிறேனா என்று நானே பரிசோதனை செய்யவும் இந்தவகை எழுத்தால் என்ன உண்மையான பயன் விளையக்கூடும் என்று ஆராயவும் ஒரு வாய்ப்பு. அவ்வகையில் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

நீங்கள் உண்மையென நம்புவதை சொல்கிறீர்கள். அதனுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை. உங்களுக்கு அதற்கான ஆதாரங்கள் இருக்கலாம். நான் என்னளவில் எப்போதும் நேர்மையுடன் இருக்க நினைக்கிறேன் என்பதையும் என் கருத்தை அல்லது மதிப்பீட்டை காழ்ப்புகள் இன்றி முன்வைக்கவே முயல்கிறேன் என்பதையும் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

எஸ்.என்.நாகராஜன்

உங்கள் கடிதத்தில் உள்ள கருத்துக்கள் உங்களுடையவை என்றால் மிகுந்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அப்படியென்றால் நீங்கள் என்னுடைய பேச்சிலும் எழுத்திலும் எதைத்தான் கவனித்தீர்கள், எதை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்ற வியப்பும்.

இதுவரை இதே அரசியலைத் தன்னளவில் நம்பி முன்வைக்கும் இடது சாரி மற்றும் திராவிட சிந்தனை தோழர்களை நீங்கள் சுட்டிக்காட்டியதாக நினைவில்லை’ என்ற வரியை நான் எப்படி எதிர்கொள்வது? உங்களுக்கு எப்படி நினைவூட்டுவது?

கோவை ஞானி இடதுசாரி அல்லவா? பெரியாரியர் அல்லவா? அவர் முன்வைத்துப்பேசும் மார்க்ஸியம் மற்றும் தமிழியத்துக்கும் எனக்கும் என்ன உடன்பாடு? ஆனால் என்னை அவரது காலணிகளை எடுத்து வைக்கும் தகுதிகூட அற்றவன் என்ற நிலையிலேயே இன்று வரை எண்ணி, முன்வைத்திருக்கிறேன். அவருடைய கருத்தியல் நேர்மையை, வாழ்நாளையே தன் கொள்கைக்காக அர்ப்பணித்துள்ள தியாகத்தை நம் சமகால வரலாற்றின் ஒளிமிக்க ஒரு பக்கம் என்றே நான் எப்போதும் நினைத்திருக்கிறேன்.

எஸ்.என்.நாகராஜனை விட முக்கியமான மார்க்ஸியர் தமிழகத்தில் எவர் இருக்கிறார்கள்? எத்தனை கட்டுரைகளில் மீளமீள அவரைப்பற்றிப் பேசியிருக்கிறேன். அவரது பெரும்பாலான கருத்துநிலைகளில் எனக்கு எவ்வித உடன்பாடுமில்லை. அதைக் குறிப்பிடும்போதே அவரைத் தமிழகத்தின் முதற்சிந்தனையாளர்களில் ஒருவராகவே முன்வைத்து வருகிறேன்.

இவர்கள் சொல்லும் கருத்துக்களில் உடன்பாடற்றவன் என்ற நிலையிலும் அவர்கள் எழுதுவதை இருபதாண்டுகளுக்கும் மேலாகக் கூர்ந்து வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் அவர்களைவிடத் திறன்மிக்க மொழியில் அவர்கள் சொல்வனவற்றை சுருக்கியும் தொகுத்தும் விளக்கியும் பலமுறை எழுதியிருக்கிறேன். அடுத்த தலைமுறை வாசகர்களிடம் அவர்களைக் கொண்டுசென்று சேர்த்ததில் எனக்குப் பெரும்பங்குண்டு. ஆனால் அவர்கள் கருத்துக்களுடன் எப்போதும் முரண்பட்டபடித்தான் அதைச்செய்தேன்.

ராஜேந்திர சோழன்

உறுதியான இடதுசாரியும், அச்செயல்பாடுகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான சோதிப்பிரகாசம் என் இனியநண்பராகவே கடைசிவரை இருந்தார். கடைசிவரை அவரிடம் விவாதித்துக்கொண்டுதான் இருந்தேன். என்னுடைய நூலுக்கு அவரும் அவர் நூலுக்கு நானும் கடுமையாக விமர்சனம்செய்தபடி முன்னுரைகள் எழுதியிருக்கிறோம்.

பெரியாரியராக இருந்து தமிழியராக மாறிய குமரிமைந்தனைத் திரும்பத்திரும்ப கவனப்படுத்தியிருக்கிறேன். அவரது ஆக்கங்களை அதிகமாகப் பிரசுரித்த இதழ் நான் நடத்திய சொல்புதிதுதான். அவர் எழுதிய எல்லாக் கருத்துக்களையும் சுடச்சுட மறுத்துமிருக்கிறேன்.

மார்க்சிய சிந்தனையாளரும் புரட்சிகர மார்க்ஸியக்குழு ஒன்றின் களப்பணியாளருமான ராஜேந்திரசோழனைப்பற்றி வழிபாட்டின் தொனியில் அல்லாமல் பேசியதில்லை. தமிழ்ச்சிறுகதையின் சாதனையாளரும் உறுதியான இடதுசாரியுமான கந்தர்வனை அவரது நல்ல ஆக்கங்கள் வந்த ஒவ்வொரு தருணத்திலும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறேன். என் மீது தனிப்பட்ட பிரியமும் விமர்சனமும் கொண்ட நண்பராக இருந்தார். என் மீதான கடும் விமர்சனங்களுடன் என் கூட்டத்தில் இவர்கள் வந்து பேசியிருக்கிறார்கள்.

பொ.வேல்சாமி

சென்ற இருபதாண்டுக்காலமாக ராஜ் கௌதமன் என்னுடைய ஆதர்சநாயகர். இடதுசாரி சிந்தனைகொண்டவர்தான் அவரும். நான் வாசிக்கத்தொடங்கிய நாள் முதலே நான் ஞாநியைத் தமிழ் அறவுணர்வின் குரலாகவே எண்ணுகிறேன். அவர்களுக்கு நான் எழுதிய நூல்களை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். ஞாநி இடதுசாரி இல்லையா என்ன?

இடதுசாரி தலித் சிந்தனையாளரான பிரேம் எழுதிய பல கட்டுரைகளை நான் அச்சேற்றியிருக்கிறேன். அவற்றை மீளமீள கவனப்படுத்தியிருக்கிறேன். அவர் என் நண்பரும்கூட. இடதுசாரிச் சிந்தனையாளரான பொ.வேல்சாமி என்னை மிகமிகக் கடுமையாக விமர்சனம்செய்திருக்கிறார். ஆனால் அன்றும் இன்றும் அவர் மீதான மதிப்புடனேயே இருக்கிறேன். அவர் என்னை விமர்சனம் செய்த நாட்களிலேயே அவருடன் நட்பும் இருந்தது.

இந்த இணையதளத்தில் டி.டி.கோஸாம்பி பற்றி, இ.எம்.எஸ் பற்றி, கெ.தாமோதரன் பற்றி எத்தனை விரிவான எழுத்துக்கள் உள்ளன. டி.டி.கோஸாம்பி, ரொமீலா தாப்பர், ஆர்.எஸ்.சர்மா உட்பட பல மார்க்ஸிய வரலாற்றாசான்களின் எழுத்துக்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன். பார்வதி, கிருஷ்ணன், கெ.பி. என இதன் பக்கங்களில் உணர்வெழுச்சியுடன் பேசப்பட்டுள்ள அளவுக்கு மார்க்ஸியர்களை மார்க்ஸிய கட்சி இணையதளங்களில் மட்டுமே காணமுடியும்.

நீங்கள் என் இணையதளத்தை மட்டும் வாசித்தால்போதும், தமிழில் நேர்மையும் கொள்கைப்பிடிப்பும் கொண்ட ஒவ்வொரு இடதுசாரியையும் ஒவ்வொரு பெரியாரியரையும் நான் அங்கீகரித்து வழிபாட்டின் தொனியில் எழுதியிருப்பதைக் காணமுடியும். ஏனென்றால் நான் பார்ப்பது அந்தக்கருத்துக்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை மட்டுமே. நான் என் வாசிப்பாலும் அனுபவத்தாலும் அவர்களிடம் முரண்படுகிறேன் என்பது அந்த மதிப்பை ஒருபோதும் குறைப்பதில்லை.

ச.தமிழ்ச்செல்வன்

என் தலைமுறைக்காரர்களையும் அப்படித்தான் அணுகியிருக்கிறேன். கால்நூற்றாண்டாக என்னுடைய ஒவ்வொரு வரியையும் நிராகரித்துப்பேசும் தமிழ்ச்செல்வனைப்பற்றி இக்கணம் வரை பெருமதிப்புடனல்லாது ஒரு வரிகூட எழுதியதில்லை. நான் அவரது எழுத்துக்களைத் திட்டவட்டமாக விமர்சிப்பேன் என்றாலும் மேலாண்மை பொன்னுச்சாமியின் தனிப்பட்ட ஆளுமையை எங்கும் நிராகரித்து எழுதியதில்லை.

என்னை ஃபாசிச ஓநாய் என எழுதிய சு.வெங்கடேசன் என்னுடைய நோக்கில் அவரது கொள்கைக்கு நேர்மையான ஓர் அரசியல் செயல்பாட்டாளர். அந்த மதிப்பை அளிக்காமல் நான் அவரைப்பற்றி எழுதியதில்லை. சு.வெங்கடேசனை முழுமையாக நிராகரிக்கும் அவரது கட்சிக்காரரான மாதவராஜும் என் நோக்கில் மரியாதைக்குரியவரே. பவா செல்லத்துரையை போப்புவை எல்லாம் என் நெருக்கமான நண்பர்களாக நான் எண்ணுவது அந்த அடிப்படையிலேயே.

கந்தர்வன்

ஏனென்றால் சமூகநல நோக்கில் களப்பணியாற்றும் எவர் மீதும் மதிப்புடன் மட்டுமே நான் இருந்து வருகிறேன். தன் நம்பிக்கைமீது நேர்மையான பற்று கொண்ட ஒருவர் அதற்காக மக்களிடையே செயல்படும் ஒருவர் நம் சமூகத்தின் செல்வம். ஒவ்வொருநாளும் பிழைப்புவாதம் ஓங்கி வரும் இந்நாளில் தியாகமும் அர்ப்பணிப்பும் துளியானாலும் பெரும் விலைகொண்டது. ஒரு தருணத்திலும் என்னுடைய கருத்துமாறுபாடுகளுக்காக நான் அவர்களை இறக்கியதில்லை.

இந்த ஒரு விஷயத்திலேயே பார்க்கலாம். என்னுடைய கணிப்பில் எப்போதுமே லீனா மீது பெருமதிப்புதான் இருந்துவந்தது. அவரது கவிதைகள் என் ரசனைக்குள் வருவதில்லை. அவரது கருத்துக்கள் எனக்கு ஒவ்வாமை அளிப்பவை. ஆனால் தான் நம்பும் ஒன்றுக்காகத் தெருவில் இறங்கத்தயங்காதவர் என்றே நான் அவரைப்பற்றி நினைத்தேன். அத்தகையவர்கள் நம் சமூகத்தின் அறத்தின் குரல்கள் என்றே எண்ணினேன். அப்படித்தான் அவரைப்பற்றி முன்பு எழுதினேன். அவர் என்னைப்பற்றி என்னதான் கருத்து கொண்டிருந்தாலும் என் நோக்கில் அவர் மதிப்புக்குரியவரே என்று குறிப்பிட்டேன்.

ஆகவேதான் அவரது நேர்மையின்மை பற்றிய ஆதாரபூர்வமான செய்தி என்னை பாதிக்கிறது. அதை எளிதாக என்னால் தாண்டிச்செல்ல முடியாமலாகிறது. இப்போதும்கூட அவர் இனிமேல் செய்யக்கூடியதை, அச்செயல்களில் அவர் காட்டும் அர்ப்பணிப்பைக்கொண்டே அவரை மதிப்பிடுவேன்.

நான் மேலே சொன்ன ஒவ்வொரு இடதுசாரி, திராவிட இயக்கச் சிந்தனையாளரையும் அவர்கள் சென்றடைந்த வட்டத்தை விடப் பெரிய வட்டத்துக்கு நான் கொண்டுசேர்த்திருக்கிறேன். அவர்களைப்பற்றித் தொடர்ந்து எழுதி அடுத்த தலைமுறைக்கு அவர்களை முறையாக அறிமுகம் செய்திருக்கிறேன். கூடவே என் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறேன்.

ஷோபா சக்தி

எழுபதுகளில் தமிழகத்தில் இடதுசாரி சிந்தனைகளைக் கட்சி எல்லைக்கு வெளியே கொண்டுவந்து தமிழகத்தில் ஒரு தனித்த ஞானமரபாக வேரூன்றச் செய்தவர்கள் மூவர். எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை. அந்த எஸ்.வி.ஆர். பற்றி ஒரு குருநாதரின் இடத்தில் வைத்தல்லாமல் நான் பேசியதில்லை. அதன்பின் எஸ்.வி.ஆர். இறங்கிய இருண்ட ஆழம் சாதாரணமானதல்ல. நேருவையும் காந்தியையும் அவதூறு செய்து அவர் அதன்பின் எழுதிய நூல்களுக்காக அவரே உள்ளூரக் கூசுவார். அந்த வீழ்ச்சிக்குப்பின் அவர் என் நோக்கில் மதிப்புக்குரியவரே அல்ல.

எண்பதுகளில் சிற்றிதழ்களில் இடதுசாரி, திராவிடவாத நோக்கில் எழுதிவந்த அ.மார்க்ஸ் மீது முழுமையான மறுப்பும் அதேசமயம் பெருமதிப்பும் எனக்கிருந்தது. அதை எத்தனையோ இடங்களில் பதிவுசெய்திருக்கிறேன். மறுக்கும்போதுகூட மதிப்புடனேயே மறுத்திருக்கிறேன். ஆனால் இன்று வஹாபிய மேடைகளில் சென்று மானுடவிரோத நோக்குக்கு வக்காலத்துபேசும் அ.மார்க்ஸின் மீது மதிப்பில்லை. இந்த அ.மார்க்ஸை பழைய அ.மார்க்ஸின் நண்பர்கள் அனைவரும் கைவிட்டது அந்த நேர்மைவீழ்ச்சி காரணமாகவே. அதை அவர்கள் வாயாலேயே கேட்டிருக்கிறேன்.

என்னுடைய பிரச்சினை கருத்துக்கள் அல்ல. அ. மார்க்ஸின் அரசியலையே ஷோபா சக்தி முன்வைக்கிறார். ஆனால் ஷோபா சக்தியை நான் முக்கியமான கலைஞனாக, சிந்தனையாளனாக, களப்பணியாளனாகவே நினைக்கிறேன். எஸ்.வி.ராஜதுரையின் கடிதத்தை வெளியிட்டிருக்கும் ஆதவன் தீட்சண்யா என்னும் ரவி என்னுடைய முன்னாள் தொழிற்சங்கத்தலைவர். அவரது நேர்மை மீதும் அவரது ஆளுமை மீதும் பெருமதிப்பை மட்டுமே இன்றுவரை பதிவுசெய்திருக்கிறேன்.

ராஜ் கௌதமன்

அ.முத்துக்கிருஷ்ணன் எழுதவந்த நாள்முதல் என்னுடைய மதிப்புக்குரியவராகவே இருந்தார், அவருடைய கருத்துக்களுடன் முழுமையான முரண்பாடு எனக்கிருந்தபோதிலும். எங்களுக்கிடையே நல்ல தனிப்பட்ட நட்பும் இருந்தது. என் வீட்டுக்கு அவர் வந்திருக்கிறார், நானும் அவர் இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். தன்னுடைய எண்ணங்களுக்கு நேர்மையானவர் என்றே அவரை நான் நினைத்திருந்தேன். இந்த இணையதளத்திலேயே அவரது பாலஸ்தீனப்பயணம் பற்றிய செய்தியை நான் வெளியிட்டேன்.

ஆனால் அந்தப்பயணத்தின் பின்னணியை, அதன் பின் அவரது கருத்துக்களில் வந்த மாறுதலை அறிந்தேன். அப்பட்டமான வெறுப்புநோக்கையும் அவதூறுகளையும் பரப்பியபடி அவர் செயல்பட ஆரம்பித்ததை அதன்பின் கண்டேன். எந்த ஒரு பொதுவாசகரும் அ.முத்துகிருஷ்ணனின் பயணத்துக்கு முன்னும் பின்னும் அவரது பேச்சில் வந்துள்ள மாறுதல்களை கவனிக்கலாம்.

ஆக, நான் முன்வைப்பது ஒரு முக்கியமான வேறுபாட்டை. போலிக்கும் அசலுக்குமான வேறுபாட்டை. உண்மையான கருத்தியல் நிலைப்பாட்டுக்கும் உள்நோக்கம் கொண்ட வெறுப்புக்குரலுக்கும் இடையேயான மாபெரும் தூரத்தை.

ஞாநி

இவர்களின் மாற்றம், இவர்கள் அடைந்த வீழ்ச்சி இதுவே என்னுடைய பிரச்சினையாக இருக்கிறது. அப்பட்டமான அவதூறுகள் மூலம் இவர்கள் காந்தியில் இருந்து கடைசிநிலை எழுத்தாளன் வரை அனைவரையும் இழிவுசெய்கிறார்கள். தெளிவான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இவர்களின் நோக்கங்கள் மிகமிக நிழலானவை. அவை இவர்களுடையது அல்ல என்றே நான் ஐயம் கொள்கிறேன். இது கருத்தியல் நிலைப்பாடு அல்ல, இதன்பெயர் வேறு.

இவர்களின் கருத்துக்களுடன் மோதவேண்டிய தேவையே இல்லை. ஒருவரின் கருத்துக்களை நான் எதிர்கொள்ளவேண்டுமென்றால் அக்கருத்துக்களை அவர் நேர்மையுடன் சொல்கிறார் என்று நம்பவேண்டும். அந்நம்பிக்கை இல்லாதபோது நிழலுடன் போரிட்டு அடையப்போவது என்ன? அ.மார்க்ஸின் எந்தக்கருத்தும் எப்படியும் மாறும் என்னும்போது அவர் இப்போது சொல்லிக்கொண்டிருப்பதை நான் உட்கார்ந்து கட்டுடைப்பது எப்பேர்ப்பட்ட வீண்வேலை.

நான் நேர்மையான மார்க்ஸியர்களாக, திராவிட இயக்கத்தவர்களாக எண்ணும் அனைவருடனும் என்னுடைய சாத்தியங்களுக்குள் நின்றபடி மிக விரிவாகவே விவாதித்திருக்கிறேன். என்னுடைய தளம் எப்போதும் இலக்கியம் தத்துவம் மெய்யியல் என்பதனால் நான் அதிகமும் விவாதித்தது இ.எம்.எஸ்., ஞானி மற்றும் எஸ்.என்.நாகராஜனின் கருத்துக்களையே.

அ.மார்க்ஸிடமும் எஸ்.வி.ராஜதுரையிடமும் எதை விவாதிப்பது? தங்கள் மாற்றுத்தரப்பை வசைபாட மட்டுமே தெரிந்த இவர்களின் வசைக்கு மறு வசை தொடுப்பதா? அல்லது இவர்கள் எழுதிக்கொண்டே இருக்கும் அவதூறுகளின் உண்மையை நாள்தோறும் ஆராய்ச்சிசெய்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா?

இவர்களைப்பற்றிப் பேசும்போது பேசவேண்டியது இவர்களின் நோக்கம் பற்றித்தான். இவர்களின் ஆளுமையைப்பற்றிதான். இவர்கள் அவ்வப்போது தங்கள் கொள்கைகளில் அடிக்கும் அந்தர்பல்டிகளைப்பற்றித்தான். அதைப்பற்றிப் பேச இவர்களின் எழுத்துக்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டால்போதும். அவற்றின் தருணங்களை கவனித்தாலே போதும்.

உதாரணமாக, ஒரு சிறு கடிதத்திலேயே எஸ்.வி.ராஜதுரை சர்வசகஜமாக அவதூறுக்குச் செல்கிறார் என்பதை கவனியுங்கள். இப்படித்தான் இவர் காந்தி முதல் நேரு வரை அனைவரைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அ.மார்க்ஸும் பிறரும் தமிழ்ச்சூழலில் செயல்படும் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்களைப்பற்றி என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். சாதியையும் பிறப்பையும் சுட்டும் வசைகள். முழு அவதூறுகள். சமீப உதாரணம் அ.மார்க்ஸ் காலச்சுவடு கண்ணனைப்பற்றி எழுதிய அவதூறு.

இந்த வகையான அப்பட்டமான நேர்மையின்மையை, எதையும் சொல்லக்கூடிய மனநிலையை எப்படி எதிர்கொள்வது? இவர்களின் உள்நோக்கத்தை, அடிப்படையான ஆளுமைக்கோளாறை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டுவது மட்டுமே ஒரே வழி. அதையே நான் செய்கிறேன்.

ஆதாரங்கள் சொல்லி அவர்களை நிரூபிக்கவேண்டிய தேவை என்ன? அவர்களே எடுத்துள்ள நிலைப்பாடுகள் அவர்கள் எழுத்துக்களில் உள்ளன. அவற்றின் பின்னணி என்ன என்பதை இன்றைய கருத்தியல்சூழலில் வைத்துப்பார்க்கிறேன். அதற்காக அவர்களின் எழுத்துக்களை மட்டுமே ஆதாரம் காட்டுகிறேன். ஒருபோதும் அவர்களின் தனிவாழ்க்கைக்குச் செல்வதில்லை.

ஆதவன் தீட்சண்யா

ஆம், இந்தவகையான அணுகுமுறை அவதூறின் எல்லைக்குள் சென்றுவிட நேரும். நாம் உறுதியாக அறியாத தகவல்களைச் சொல்லிவிடக்கூடும். இன்னும் அதிக தகவல்களுடன் வேறு எவராவது இவர்களை ஆராய்ந்து எழுதுவதே நல்லது. ஆனால் தமிழ்ச்சூழலில் எவரும் அதைச்செய்வதில்லை. இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கெடுபிடிமனநிலை அனைவரையும் அச்சுறுத்துகிறது. எந்த எல்லைக்கும் சென்று அவதூறு செய்ய இவர்களால் முடியும்.

ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உள்ள சிந்தனைச்சூழலில் பல்வேறு நிதியளிக்கைகள் வழியாக, ஆராய்ச்சி உதவிகள் வழியாக மேலைநாட்டு சுரண்டலதிகாரத்தின் அறிவுப்புலம் உருவாக்கும் பாதிப்பைப்பற்றி பேசியே ஆகவேண்டிய காலகட்டம் வந்துவிட்டிருக்கிறது. இந்நாடுகளில் உள்ள அத்தனை பிளவுப்போக்குகளுக்குள்ளும் அந்த நிதியின் கரங்கள் உள்ளன.

இது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் பெரும்பாலும் திட்டவட்டமான ஆதாரங்களுடன் நிரூபிக்கமுடியாததும் கூட. அந்த அளவுக்கு நுட்பமாகவே அதன் வலை செயல்படுகிறது. உண்மையில் எனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு தூரம் நான் ஆதாரபூர்வமாகப் பேசமுடியாது.

ஆனால் நம் முன் பேசப்படும் கணிசமான கருத்துக்கள் யாரோ எங்கோ உருவாக்கி எவரைக்கொண்டோ நம் முன் பேசவைப்பவை என அறிந்தபின்னர் அந்தக் கருத்துக்களை உண்மை என நம்பி அவற்றுடன் பேசவேண்டுமென்பதும், அவற்றை கட்டுடைக்கவேண்டுமென்பதும் அபத்தமாகவே படுகிறது.

இந்நிலையில் செய்யக்கூடியது இந்த உண்மையை முடிந்தவரை உரத்துக்கூவுவதுதான். அதற்கு ஏதேனும் விளைவுகள் வருமென்றால் அதைச் சந்திப்பதுதான். அப்படி உரத்துக்கூவ முதன்மையான தகுதி நம் மடியில் கனமில்லாமல் இருப்பது. நமக்கு சுயலாப நோக்கங்கள் இல்லாமல், அவை பறிபோகுமா என்ற அச்சமில்லாமல் இருப்பது. அது எனக்கிருப்பதாக நம்புவதனால் இதைச் சொல்கிறேன்.

இப்படிச் சொல்வதனால் என்னாகிறது? ஒன்று, இக்கருத்துக்களை எளிய வாசகர் அப்படியே விழுங்குவது தடுக்கப்படுகிறது. தன் முன் வைக்கப்படும் கருத்துக்களை ஐயத்துடன் நோக்கவும் ஒப்பிட்டுப் பரிசீலிக்கவும் வழியமைகிறது. அத்துடன் பிறரை அவதூறுசெய்தே கருத்துலகில் பூச்சாண்டிகளாக நீடிக்கும் இவர்கள் தங்கள் அந்தரங்கம் பற்றிய அச்சம் கொள்ள நேர்கிறது. கருத்துலகில் செயல்படும் ஒவ்வொருவரும் தங்கள் அந்தரங்க சுத்தியை நிரூபித்தாகவேண்டியிருக்கிறது.

இது இன்று இன்றியமையாத வேலை என்றே நினைக்கிறேன். குறிப்பாக ஈழப்போராட்டம் என்ற மாபெரும் சோகக்கதை நம் முன் இருக்கையில் நம்மைப் பிறரது கைகள் ஆட்டுவிக்கின்றனவா என்ற எச்சரிக்கைக்காக நாம் எதைக் கொடுத்தாலும் தகும்.

எழுத்தாளனுக்கு இது வீண்வேலைதான். நம் மீது ஒன்றுக்குப் பத்தாக வசைகளையும் அவதூறுகளையும் வாங்கி சேர்த்துக்கொள்ளும் செயல். ஆனால் வேறு வழியில்லை. எவரேனும் செய்தாகவேண்டும்.

ஜெ


வாழ்க்கையின் கேள்விகள் , கேள்விகளுக்கு அப்பால்


சோதிப்பிரகாசமும் பாவாணரும்


கந்தர்வன்


ஞாநி இணையதளம்

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை கடிதம்
அடுத்த கட்டுரைகனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்