நாத்திகம், இலக்கணம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம். தங்களின் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. இந்துமதம் தொடர்பான ஆழ்ந்த அறிவு, அதை சரியான முறையில் வெளிப்படுத்தக்கூடிய மொழி ஆளுமை ஆகிய இரண்டும் உடையவராக கண்ணுக்கு எட்டியவரை நீங்கள் ஒருவரே தெரிகிறீர்கள். இpதை பயன்படுத்திக்கொள்வது கடமையாகும். எனவே உங்களின் நேரத்தில் சிறிது எடுத்துக்கொள்வதற்கு மன்னிக்கவும்.

உங்களின் பதில் சிறப்பான வரலாற்றுரீதியான ஒரு பின்புலத்தை அளித்தது. அத்துடன் நம் எழுத்தாளர்களின் காலத்தால் முன்னோடியான சிந்தனை வீச்சையும் அறிந்து கொண்டேன். அவர்கள் மீதான மரியாதை இன்னும் ஒருபடி கூடியிருக்கின்றது. உங்களின் பதிலுடன் முரண்படுவதற்கு எதுவுமில்லை. ஊசலாடும் மனதிற்கு ஒரு பிடி தேவைப்பட்டது. அது நீங்கள் அளித்த பதிலில் கிடைக்கின்றது என நினைக்கின்றேன்.

“சைவர்களில் சைவச்சடங்குகளில் வாழ்பவர்கள் ஓர் எல்லை என்றால் தூய சித்தாந்திகள் இன்னொரு எல்லை. சைவசித்தாந்தத்தின் தூயநிலையில் ஒரு சம்பிரதாயச் சைவனின் எந்த சடங்கையும், எந்த ஆசாரத்தையும், எந்த நம்பிக்கையையும் மேற்கொள்ளாமல் நீங்கள் இருக்கமுடியும். ஆம், ‘கடவுள்’ என்ற நம்பிக்கை இல்லாமலேயே கூட நீங்கள் இருக்கமுடியும்.”

“ஒரு சிவபக்தர் சைவசித்தாந்தி ஆவது என்பது மண்ணிலிருந்து விண்வரைக்குமான தூரத்தை கடப்பதற்குச் சமம்.” என்றவரிகள் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

ஆன்மீக தத்துவசிந்தனைகளும் நாத்திகவாதமும் ஒரு புள்ளியில் சென்று சந்திப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு. அதை இப்பதில் மீளெழுப்பி விட்டது. ஆயினும் சாதாரண தளத்தில் நிற்கும் என்னைப்போன்ற பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறு தென்படுவது கடற்கரையில் நின்று பார்க்கும் போது தெரியும் தொடுவானம் போன்றது என்றே கருதுகின்றேன்.

கடலும் வானும் உண்மையில் எவ்வாறு சந்திப்பதில்லையோ அவ்வாறே ஆன்மீகரீதியான தத்துவசிந்தனையின் வளர்ச்சியில் கிடைக்கும் மனநிலைக்கும் நாத்திகவாதத்தால் ஏற்படும் மனநிலைக்கும் வேறுபாடு இருக்கின்றதென ஊகிக்கின்றேன். ஒன்று நேர்நிலையானது, சமநிலைதருவது, வாழ்க்கையின் முடிவு குறித்த அச்சத்தை அகற்றுவது. மற்றையது எதிர்நிலையானது என எண்ணுகின்றேன்.

ந.சிவேந்திரன்

அன்புள்ள சிவேந்திரன்,

நாத்திகவாதம் என்பது எதிர்மறை மனநிலை. அதிலுள்ள வீம்பு காரணமாகவே அதில் உணர்வெழுச்சியோ கவித்துவமோ சாத்தியமாவதில்லை. அது சீர்திருத்தவாதிக்கு உதவலாம், சிந்தனையாளனுக்கும் இலக்கியவாதிக்கும் எதிர்விளைவையே உருவாக்கும்.

அத்துடன் அதிலுள்ள தர்க்க முழுமை என்பது பல விஷயங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கிறது. நாம் நம் மரபை குறியீடுகளாக, படிமங்களாக அறிகிறோம். அந்தப் படிமங்கள் நம்மில் முளைத்தெழ அந்தத் தர்க்கம் தடையாக ஆகிறது.

சமீபத்தில் இங்கே உள்ள தென்கரை மகாராஜன் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு நாட்டார் தெய்வம். கேரளத்தில் சாஸ்தா, தமிழகத்தில் அய்யனார். அந்த இடத்தின் தனிமையும் அங்கே நான் கற்பனைசெய்த இறந்தகாலமும் சேர்ந்து தீவிரமான மன எழுச்சி ஒன்றை உருவாக்கின. சாஸ்தாவை நான் எந்த மனிதரை அறிவதையும் விட உண்மையான இருப்பாக கண்முன் கண்டறிவதாக உணர்ந்தேன். அவரிடம் பேசமுடியும் போல, பேசினால் எனக்குக் கேட்கும் போல ஓரு நிலை.

சொல்லப்போனால் திரும்பும் வழி முழுக்க அந்த விசித்திரமான உச்ச அனுபவத்தையே எண்ணிக்கொண்டு வந்தேன். அது ஒரு உளநாடகமாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் நான் பல்லாயிரம் கால வரலாற்றில் முழுமையாக வாழ்ந்தேன்.

அந்த அனுபவத்தை இழக்காமல் இருக்கும் அளவுக்கே தத்துவம் நம்மிடம் இருக்கவேண்டும்.

ஜெ

வணக்கம் ஜெ.

நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் எழுத்துகளுக்கு நன்றி. அதன் வீரியம் ஒரு தொற்றுநோய் போல வந்து ஆட்டிப்படைக்கிறது.
தமிழ் இலக்கணத்தை கற்க ஆவலாக உள்ளது. கடைசியாக பள்ளியில் படித்தது  [6 வருடம் முன்னர்].
ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைக்கவும்.

நன்றி.

அசோக் குமார்

அன்புள்ள அசோக்,

எதற்காக நீங்கள் தமிழிலக்கணத்தை வாசிக்க விரும்புகிறீர்கள்?

நவீன உரைநடைக்காகவா? செய்யுள் எழுதுவதற்காகவா?

தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நமக்கு உரைநடைக்கான இலக்கணம் இல்லை.

உரைநடைக்கான இலக்கணம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. அதிகமும் ஆங்கில இலக்கணத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.

உரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை இலக்கணத்தை ஏதோ புனித விதிபோல கடைப்பிடிப்பதனால் இலக்கணத்தைக் கற்பதென்பதே நவீன உரைநடைக்கு எதிரான செயலாக ஆகிவிட்டிருக்கிறது.

ஆகவே இலக்கணத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அதை மொழி தன் படைப்பியக்கத்தில் அர்த்தபூர்வமாக மீறிச்செல்லும் சாத்தியங்களையும் புரிந்துகொள்ளுங்கள். ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் மரபு அதை திட்டவட்டமாக வகுத்தும் வைத்துள்ளது.

இன்றைய தமிழ் உரைநடைக்கும் நெருக்கமான இலக்கணம் என்பது அ.கி.பரந்தாமனார் எழுதிய நூல்களில் உள்ளதுதான். கொஞ்சம் பழையதாக இருந்தாலும் அவரது ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ ஒரு முக்கியமான வழிகாட்டி நூல்.

கண்டிப்பாக படிக்கக்கூடாத பல நூல்கள் இவ்வகையில் உள்ளன. நவீன உரைநடையை எவ்விதத்திலும் அறியாத அசட்டுப் பேராசிரியர்கள் அவர்கள் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது கற்ற மொழியிலக்கணத்தை மூர்க்கமான விதிகளாக வலியுறுத்தும் நூல்கள் அவை. பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் நன்னன் ஆகியோர் ஒவ்வாமை நோயை உருவாக்கும் சிலவகை செடிகளைப்போன்றவர்கள்.

நவீன உரைநடை மேலேயே ஒரு வெறுப்பை உருவாக்கி, நம்மையும் அவர்களின் செத்த நடைக்கு கொண்டுசெல்ல முயல்பவை இவை. உரைநடை என்பது சிந்தனையேதான். நல்ல உரைநடை என்பதற்கு நல்ல சிந்தனை என்றே பொருள். பழைய உரைநடை என்பது பழைய சிந்தனைதான்.

ஜெ


மதுரை நாயக்கர் வரலாறு. அ.கி.பரந்தாமனார்

முந்தைய கட்டுரைபயணத்துக்கு முன்…
அடுத்த கட்டுரையுவன் சந்திரசேகருக்கு விருது