அன்புள்ள ஜெ.
தகவலறியும் உரிமைச்சட்டம் குறித்த உங்கள் இடுகையில் உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரி. ஆனால் பெரும்பாலும் அது தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஒரு துறையின் அதிகாரி என்ற முறையில் இது குறித்தான என் அனுபவம் தங்களைப் போன்றே வருத்தமடையச் செய்கிறது.
பள்ளிக் கட்டுரை மட்டுமல்ல ஜெ. ஏதாவது ஒரு தலைப்பில் எடுத்துக் கொண்ட தீசிசுக்காக வெறும் பத்து ரூபாய் கட்டிவிட்டு ஒரு துறையின் கடந்த பத்து வருட செயல்பாட்டின் துல்லியமான புள்ளி விவரங்களைக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். கொல்கத்தாவிலிருந்து ஒருவர் முன்னூற்று இருபது கேள்விகள் கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளுக்கான தகவல்களைச் சேகரிக்கவே குறைந்தது ஆறுமாதம் பிடிக்கும்.
இதே போல் கேரளத்திலிருந்தும் யாராவது ஒரு பத்திரிகை நிருபர், பொது நல ஊழியர் என்ற பெயரில் துறையின் முக்காலம் குறித்தும் கேள்வி கேட்பார்கள். மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்தத் துறையின் ஊழியர்களே தங்களுடைய பதவி உயர்வு, இடமாற்றம் இன்ன பிற சொந்தப் பிரச்சனைகளில் தங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நிர்வாகத்தைப் பழிவாங்குகிறேன் பேர்வழி என்ற பெயரில் கேட்கும் கேள்விகள்தாம்.
தமிழக அரசின் ஒரு துறையே தன் அலுவலகப் பயன்பாட்டுக்கு தகவலறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி கேள்வி கேட்டு அதற்கு மத்திய அரசுத் துறை பதிலளித்த அவலமும் நடந்தேறி இருக்கிறது.
தகவலறியும் சட்டத்தின் முக்கியமான ஒரு பகுதி தகவலளிப்பதில் அதிகாரிகளின் மெத்தனம் மற்றும் விட்டேத்தியான போக்கைக் கட்டுப் படுத்தும் விதத்தில் தவறான தகவல் அளித்தாலோ அல்லது தாமதமாக பதிலளிப்பது அல்லது காரணமின்றி தகவலளிக்க மறுப்பது போன்ற செயல்களுக்கு அந்த அதிகாரிகளுக்கு தண்டனை அல்லது அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப் பட்ட ஒரு துகை நஷ்ட ஈடாக அளிக்க வழி செய்கிறது.
அத்தகைய தருணங்களில் மேல் முறையீட்டுக்கு வழிவகை இருப்பதாலும், அப்படி மேல் முறையீட்டில் சில சிறிய காரணங்களுக்காக வாதியின் தரப்பில் தீர்ப்பானதாலும் அதிகாரிகள் மட்டத்தில் எப்படியாவது விண்ணப்பதாரரின் கோரிக்கைக்கு சாதகமாக சமாதானப் படுத்தவேண்டும் என்ற தவறான மனநிலை வந்தமர்ந்துவிட்டது.
தகவலறியும் சட்டத்தில் மிகத் தெளிவாக விண்ணப்பதாரர் தனக்கு வேண்டிய வடிவத்தில் தகவல் பெறும் விருப்பத்தைக் குறிப்பிட வழியிருந்தாலும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட தகவலுக்கு நகலுக்கான கட்டணம் கேட்டால் சி.டி.யில் கொடுத்திருந்தால் பத்து ரூபாய்தான் ஆகி இருக்கும். வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் நகலுக்கான பல மடங்கு கட்டணம் கேட்கிறார்கள் என்று மேல் முறையீடு செய்பவர்களும் உண்டு.
சமீபத்தில் செய்தித் தாளில் அரசுத் துறையை குறை கூறி ஒரு செய்தி வந்திருந்தது. உணவுப் பங்கீட்டு அட்டையில் தன் மகனின் பெயரை நீக்கி அவர் பெயரில் ஒரு அட்டை வழங்க வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்து தகவலறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஒருவர் தன்னுடைய விண்ணப்பம் குறித்து மட்டுமின்றி குறிப்பிட்ட கால கட்டத்தில் எத்தனை மனுக்கள் வந்தன. அதன் மீதான என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு அந்தத் துறையின் அதிகாரி அந்தத் தகவல்களைச் சேகரிக்க ஒரு கடை நிலை ஊழியர், ஒரு குமாஸ்தா மற்றும் ஒரு மேற்பார்வையாளர் தனியாக தேவைப் படுவதாலும், போதிய ஊழியரின்மையாலும் அவர்களின் ஒரு நாள் சம்பளத்தைக் கணக்கிட்டுக் கூறி அதைக் கருவூலத்தில் கட்டிய ரசீதுடன் விண்ணப்பிக்க வேண்டி கூறியதுடன் அந்தத் தகவலைத் திரட்ட ஆகும் மொத்த வேலை நாட்களுக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகளைக் கட்டத் தயாராக இருப்பதாக ஒரு சம்மதக் கடிதத்தையும் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்ததாக அந்தச் செய்தி இருந்தது.
ஒரு புறம் இத்தகைய தேவையற்ற கேள்விகளை மட்டுப் படுத்த இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றிருந்தாலும் காலப் போக்கில் அதிகாரிகள் மத்தியில் இத்தகைய திணறடிக்கும் உத்திகள் படிந்து விட்டால் தங்களின் உண்மையான கோரிக்கைகளும் மறுக்கப்படும் என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
எந்த ஒரு நல்ல வாய்ப்பையும் தவறாகப் பயன்படுத்தியே இழப்பது நம்மவர்களுக்கு வழமைதானே.
நன்றி ஜெ.
அன்புடன்
வாசு பாலாஜி.