காந்தியின் வழி

சத்தியாகிரகப் போராட்டத்தின் மிக வலிமையான ஆயுதமாக ஊடகங்களை பாவிக்கலாம் என்று தோன்றுகிறது. சத்தியாகிரக போராட்டம் எதிர்தரப்புக்கு தங்கள் செயல்களின் மீதான ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இது நிகழ, போராட்டத்தின் அடிப்படை நியாயங்களை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊடகத்துறை பெருவளர்ச்சி அடைந்துள்ள இன்றைய சூழலில் சத்தியாகிரக போராட்டம் எவ்வாறு இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
சத்தியாகிரகம் என்பது எதிர்தரப்புக்கும் இத்தரப்புக்குமான ஒரு சமரச புள்ளியை நோக்கி இரு சமூகங்களையும் நகர்த்திக்கொண்டே செல்லும் ஒரு செயல். எனில், ஆயுதமேந்திய போராட்டத்தை விடவும் சத்தியாகிரக போராட்டமே மதிநுட்பம் மிகுந்த தலைமையை வேண்டி நிற்கிறது.
தெளிவான சிந்தனை, வரலாற்று ப்ரக்ஞை, மனதின் ஆழத்திலிருந்து ஊறும் உண்மையான கருணை, நிகழ்வுகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சாதூர்யம், மக்களை தன் வசப்படுத்தும் பேச்சுத்திறன் இவை எல்லாவற்றிற்கும் மேல், அதிகார மோகம் இல்லாது இருக்க வேண்டும். இது எல்லா இடங்களிலும் சாத்தியமா? எல்லா சமூகங்களில் இருந்தும் இப்படி ஒரு தலைவரை தகுந்த நேரத்தில் எதிர்பார்க்க முடியுமா? 
சித்தார்த். 


 

அன்புள்ள சித்தார்த்

காந்தியப் போராட்டம் என்பது உண்மையில் ஒரு நவீன ஜனநாயக சமூகத்துக்குரிய போராட்ட வழிமுறை. பொதுமக்களின் அரசியல் பன்கேற்பு, பொதுஊடகங்கள், நீதித்துறை ஆகியவை உருவாகிவரும் ஒரு சமூகத்திற்கு அது உகந்தது. உருவாகிவிட்ட சமூகத்துக்கு சிறந்தது. காந்தி ஊடகங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டார் என்பது ஒரு தனியான ஆய்வு விஷயம்.

காந்தி செய்தி ஊடகங்கள் வழியாக  மக்களுடன் ஓயாது உரையாடிக்கொண்டே இருந்தார். இந்திய அரசியல்தலைவர்களிலேயே மிக அதிகமாக எழுதியவர் காந்தி. தன் வாழ்நாள் முழுக்க அவர் சலிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார்.  அதிகமும் குஜராத்தில். அதன்பின் ஆங்கிலத்தில். குஜராத்தில் நவீனஇலக்கியம் காந்தியின் எளிய சுருக்கமான உரைநடை வழியாகவே உருவாகி வந்தது. இந்திய இதழியலை காந்தியைப் பற்றி பேசாமல் விவாதிக்க முடியாது என்றுசொல்லும் அளவுக்கு காந்தி இதழியலில் ஊடுருவியிருக்கிறார்

இன்னொரு விஷயம், நவீன தொஅர்பியலில் குறியீடுகளின் முக்கியத்துவம் குறித்து நுண் பிரக்ஞை கொண்ட அரசியல்வாதி அவர் என்பது. அவரது விவசாயித்தோற்றம் ஒரு முக்கியமான குறியீடு. கோடானுகோடி மக்கள் அவர் சொன்னதை அவரது தோற்றம் வழியாகவே புரிந்துகொண்டார்கள் என்றால் மிகையல்ல. கைராட்டை, மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் என காந்தியின் அன்றாட வாழ்க்கை குறியீடாக ஆகியது. அவரது போராட்டங்களும் உப்புகாய்ச்சுதல் அன்னியத்துணி எரிப்பு போல குறியீட்டு வடிவிலானவை. அக்குறியீடுகள் நவீன ஊடகங்கள் வழியாக எளிதில் மக்களிடம் சென்றடையும் என அவர் அறிவார்.

சத்யாக்ரகப்போராட்டம் அந்தச் சத்யாக்ரகியின் ஆன்ம பலத்தையும் தன் கொள்கைக்காக அவர்  கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும்தான் முதலில் நம்பியிருக்கிறது. அக்கோரிக்கையில் உள்ள நியாயம் மிக முக்கியமானது. அந்தக் கோரிக்கை வெற்றிபெறுவதென்பது அது நிகழும் சிவில் சமூகத்தின் மனநிலை, அந்த வரலாற்றுச்சந்தர்ப்பம் என பல விஷயங்களின் கூட்டுக்களால் முடிவாகிறது. சத்யாக்ரகம் வென்றேயாகுமா என்றால் யதார்த்தவாதியாக ஆம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் வெல்லக்கூடிய ஒரு போராட்டம் சத்யாக்ரகம் வாயிலாகவே நிகழ முடியும் என்பேன்.

நீங்கள் சொல்வதுபோல ஒரு பொருத்தமான தலைமை அமையாவிட்டாலும் சத்யாக்ரகத்தின் இழப்புகள் அதிகமில்லை. பொருத்தமில்லா தலைமை அமைந்து ஆயுதப்போராட்டத்துக்குச் செல்வதன் அழிவை விட அது மிகமிக பாதுகாப்பானது அல்லவா? திருத்திக்கொள்வதற்கும் பின்னால் திரும்பிவருவதற்கான வழி உள்ள ஒரே போராட்டம் அதுவே என்பதே அதன் சிறப்பாகும்

ஜெ

 

 

ஜெயமோகன் அவர்களே,
வணக்கம்.

நமது விடுதலை போராட்டத்தில் காந்தியின் பங்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனாலும் நீங்கள் நமது விடுதலையை உலக வரலாற்றுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நீங்கள் கூறியதுபோல பொதுமக்கள் அரசியலுக்கு வந்தவுடன் நமக்கு சுயராஜ்யம் என்பது, இருபது வருடங்களானாலும் அறுபது வருடங்களானாலும், கிடைத்துவிடக்கூடிய ஒன்று. ஆனால் நமக்கு சுதந்திரம் 1947 இல் கிடைத்ததற்கு காந்தி அல்லாத சில முக்கிய காரணங்கள் எனக்கு தெரிகின்றன. இரண்டாம் உலகப்போருக்கு அப்புறம் உலகமெங்கும் நடந்தது ஒரு பெரிய அதிகார மாற்றம். போருக்கு முன் காலனி ஆதிக்க நாடுகளாயிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதெர்லாந்து, பெல்ஜியம் ஆகியவை போர்முடிவில் கிட்டத்தட்ட திவாலாகிவிட்டிருந்தன. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் புதிய சக்திகளாக உருவாகின. அமெரிக்காவின் மார்ஷல் பிளான் உதவிக்காக கையேந்தி நின்ற அந்த நாடுகளுக்கு தங்கள் காலனிகளை கட்டி மேய்ப்பதற்கான சக்தி இருக்கவில்லை. இந்தியாவிலும் ஆகஸ்ட் புரட்சி, போஸ்-இன் INA, பாம்பே கப்பற்படை கலகம் என்று பல விதங்களிலும் இங்கிலாந்து தனது ஆதிக்க சக்திகளை இழந்து வந்தது. எனவே சுதந்திரம் அளிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆதிக்க நாடுகளின் அதிகார இழப்பினாலேயே நாற்பது மற்றும் ஐம்பதுகளில் பல நாடுகள் விடுதலை பெற்றன. இந்த லிஸ்டில் ஆயுதமேந்தி போராடிய மலேயா, தோற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்த வியட்நாமும் இந்தோனேஷியாவும் அடக்கம்.

எண்பதுகள் வரை பல நாடுகள் விடுதலை பெறாததற்கு காரணம், அந்நாடுகளில் சுயாட்சி செய்ய அரசியல் அமைப்புகள் இல்லாததும் (ஆப்ரிக்கா), அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாடுமே (வியெட்னாம்) ஆகும்.

மண்டேலா எவ்வளவு தூரம் காந்தியத்தை பின்பற்றினார் என்று சிறிது விளக்கவும். நானறிந்தவரை, அவர் அஹிம்சையை கைவிட்டு கொரில்லா போராட்டத்துக்கு திட்டமிட்டார். தலைமறைவாக இருந்து பிடிபட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தியம் போன்ற grassroots அமைப்புகள் பிறந்து வளர்வதற்கு கருத்து, எழுத்து சுதந்திரங்கள் மிக முக்கியம். இச்சுதந்திரங்கள் இல்லாத ஹிட்லர், ஸ்டாலின் போன்ற சர்வாதிகார அமைப்புகளில் காந்தியம் முளையிலேயே கிள்ளி எறியப்படுமல்லவா? சர்வாதிகாரத்தை காந்தியம் எதிர்கொண்டால் என்னவாகும் என்பதற்கு இன்றைய மயான்மரும் ஆங் சான் சூ கியியும் சான்று. காந்தியம் பெற்றுள்ள வெற்றிகள் (காந்தி, மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங்) எல்லாமே சற்றேறக்குறைய சுதந்திரங்களை மதிக்கும் அரசியல் அமைப்புகளுக்கு எதிராக என்பதையும் கருத்திற்கொள்ளவேண்டும்.

மாற்று கருத்துக்களை திருத்தங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

நன்றி,
நவீன்.

 

அன்புள்ள நவீன்,

உங்கள் கடிதத்தில் சொல்லியிருக்கும் பல விஷயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன். உடம்புக்குள் மருந்து செல்லும்போது உடம்பில் நிகழ்ந்துகோண்டிருக்கும் பலவிதமான உயிர்ச்செயல்பாடுகளுக்குள் அது ஊடுருவி அச்செயல்பாடுகளில் ஒரு தரப்பாக தானும் ஆகி தன் விளைவை ஆற்றுகிறது. எல்லா போராடங்களும் வரலாற்றின் சிக்கலான முரணியக்கத்தின் பகுதிகளாக ஆகித்தான் தன் விளைவை நிகழ்த்த முடியும். வரலாற்று நிகழ்வுகளின் தர்க்கம் என்பது எப்போதுமே மிகச் சிக்கலான ஒன்று. இந்தியவிடுதலைப்போராட்டத்துக்கு உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுமாற்றங்கள் பெரும் பங்களித்தன. அதை நேரு ராஜேந்திரபிரசாத் போன்றவர்கள் விரிவாகவே ஒத்துக்கோண்டு எழுதியிருக்கிறார்கள்.

போருக்குப்பின்னால் காலனி நாடுகளை ஆளமுடியாத நிலை உருவானமைக்குக் காரணமே இந்தியா போன்ற பெரும் நாடுகளில் உருவான சுதந்திரப்போராட்டம்தான். அதாவது மக்கள் கருத்து மாறிவிட்ட சூழலில் பெரும் அடக்குமுறையின் உதவியுடன் மட்டுமே ஆளமுடியும் என்ற நிலை காலனியாதிக்க நாடுகளுக்கு உருவானது. அது லாபகரமானதல்ல என்ற ஞானம் அவர்களுக்கு ஏற்பட்டது. கீழைநாடுகளில் இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் கருத்தியல் செல்வாக்கு மிகவும் விரிவான ஒன்று. அந்த முடிவை பிரிடிஷார் எடுத்திருக்காவிட்டாலும் சில வருடங்களில் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கும்

பொதுவாக நேதாஜியின் பங்களிப்பு கடற்படைப் புரட்சியின் பங்களிப்பு போன்றவை காங்கிரஸின் பங்களிப்பை குறைத்துக்காட்டும் நோக்குடன் அதீதமாகப் பிரச்சாரம்செய்யப்படுபவை. அவை உண்மையல்ல. இந்திய சுதந்திரப்போராட்டம் அதன் இயல்பான உச்சநிலையை அடைந்தபோதுதான் நேதாஜியின் படையைச் சேர்ந்த வீரர்கள் இங்கே விசாரிக்கப்படுகிறார்கள். அன்றைய உணர்ச்சிவேகத்துக்கான பேசுபொருளாக அவை அமைந்தன. சொல்லப்போனால் காங்கிரஸ் அவற்றை அப்படி பயன்படுத்திக்கோண்டது. அவை அந்த உனச்சியலையை உருவாக்கவில்லை. காங்கிரஸ் அந்தச்செய்திகளை கோடிக்கணக்கான மக்களிடையே கொண்டுசென்றிருக்காவிட்டால் நேதாஜியை யார் என்று கேட்டிருப்பார்கள் மக்கள்.

கடற்படைக் கலகத்தை இந்தியச் சுதந்திரப்போராட்டம் இங்கிருந்த சிவில் சமூகத்தை ஊடுருவியதன் ஒரு விளைவாகவே நாம் காண வேண்டும். அது இதற்கு வெளியே நிகழ்ந்த ஒரு தனி நிகழ்வு அல்ல.

மண்டேலா காந்தியத்தை விட்டு கெரில்லா போர்முறைக்கு வரவில்லை. கெரில்லாபோராளியாக இருந்து காந்தியத்துக்கு வந்தார். அவரது வரலாற்றுக்குறிப்புகளில் அது தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. தன்னை ஒரு காந்தியவாதி என்றே அறிவித்துக்கொண்டார். ஆனால் தென்னாப்ரிக்க அரசு அவரது மனைவி வின்னி செய்ததாகச் சொல்லபப்டும் பல தீவிரவாதச் செயல்பாடுகளை அவர்மேல் சுமத்தி அவரை ஒரு பயங்கரவாதியாக உலகுக்குக் காட்ட தொடர்ந்து முனைந்தது. அந்தப்பயங்கரவாதச் செயல்பாடுகளுக்காகவே அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தது. மண்டேலா அதை காந்தியவழியிலேயே எதிர்கொண்டார்.

கருத்த்சுதந்திரம் உள்ள நாடுகளில் காந்தியத்தின் இடம் வலுவானது என்பது உண்மை. ஆனால் காந்தியம் தனக்குரிய கருத்துவெளியை உருவாக்க முடியும். நான் ஏற்கனவே சொன்னதுபோல காந்தியம் ஓர் அரசின் அடித்தளமாக இருக்கும் சிவில்சமூகத்தின் கருத்தியலை மாற்றியமைக்கும். அதன்மூலம் எந்தச் சர்வாதிகாரத்தின் அடித்தளத்தையும் அதனால் அசைக்க முடியும்.

தென்னாப்ரிக்க காங்கிரஸின் போராட்டம் இந்தியக் காங்கிரஸின் போராட்டத்தை விடப் பழமையானது. அதன் வெற்றி நூறாண்டு தாண்டித்தான் முழுமை அடைந்தது. 1988ல் நாம் பேசியிருந்தால் தென்னாப்ரிக்காவின் சத்யாக்ரக வழிமுறைகள் தோல்விதானே என்றுதானே கேட்டிருப்பீர்கள்? தென்னாப்ரிக்கா தன்னை ஒரு வலுவான சிவில்-அரசியல் சமூகமாக எளிதில் திரட்டிக்கொள்ள முடியவில்லை. நெடும் போராட்டம் தேவையாக அமைந்தது. 1962ல் நைஜீரியா சுதந்திரம் அடைந்தது. பல லட்சம் பேர் இரந்த பெரும் உள்நாட்டுப்போர்களுக்குப்பின்னரே அது சமநிலை அடைந்தது.  தென்னாப்ரிக்கா அப்போது விடுதலை அடைந்திருந்தால் அதே ரத்தக்களரி நிகழ்ந்திருக்கும்.

மயான்மரின் கதையும் அதுவே. இன்றைய மயான்மர் போராட்டத்துக்கு முப்பதுவருடமே வரலாறு உள்ளது. மயான்மர் இன்றும் பெரும்பாலும் பல்வேறுவகை பழங்குடி இனக்குழுக்களின் தொகையாகவே உள்ளது. அக்குழுக்களில் பல இன  அடிப்படையில் ராணுவ அர்சை ஆதரிக்கின்றன. பழங்குடி இனங்களுக்குள் இன மோதலும் உள்ளது.  அங்கே உள்ள போராட்டம் இன்றும் நகரங்கள் மற்றும் பௌத்த பிட்சுகள் ஆகியோரைச் சார்ந்ததாக மட்டுமே உள்ளது.

அங்கே போராட்டம் தொடர்ந்து நடப்பதன் மூலம் அந்த தேசம் தன்னை ஒரு வலுவான சிவில்சமூகமாக தொகுத்துக்கொள்ள முடியும். ஒற்றைக்கருத்தியல் சக்தியாக ஆக முடியும். அதன்மூலம் அது விடுதலைபெற முடியும். அதுவே நிகழும். தென்னாப்ரிக்காவில் மண்டேலா பெற்ற வெற்றி சுதந்திர ஜனநாயக அரசுக்கு எதிரானதாக இருக்கவில்லை. அந்த அரசு உலக அபிப்பிராயத்தை பொருட்டாக எண்ணாத ஒரு இனவாத சர்வாதிகார அரசாகவே இருந்தது, பர்மா அரசைப்போல

காந்தியவழி என்பது தங்களை ஒரு சமூகம் தான் எதிர்த்துப் போராடும் விஷயத்தை விட பெரிதாக வளர்த்துக்கொள்வதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைதேர்தல்:கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தியும் கிலாஃபத்தும்:கடிதம்