பயணத்துக்கு முன்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் உங்களுக்கு ஏற்கனவே மூன்று முறை மின்னஞ்சலில் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நீங்களும் இரண்டு முறை பதில் எழுதியிருந்தீர்கள். 2010 ஜனவரி கோவையில் நடந்த சந்திப்புக்கு வந்திருந்தேன். வெளியே செருப்பை கழட்டிக்கொண்டிருந்தபோது நீங்கள் காரில் இருந்து இறங்கி வந்தீர்கள். புன்னகையோடு நீங்கள் என்னை நெருங்கி வந்தாலும், நான் எதுவும் பேசாமல் தயங்கி நின்றுவிட்டேன். நீங்களும் என் தயக்கத்தைப் புரிந்து கொண்டு மற்றவருடன் பேசிக்கொண்டு என்னை கடந்து சென்றுவிட்டீர்கள்.

ஒரு முறைகூட உங்களிடம் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவில்லையே என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் கடிதம் அனுப்புகிறேன்.

சில ஆண்டுக்கு முன்னர் எனக்கு ஜெயமோகன் என்று ஒருவர் இருக்கிறார் என்றே தெரியாது. இலக்கியம் தெரியாது. தத்துவம் தெரியாது. ஆனந்த விகடன், குமுதம் என் வாசிப்பு. ஆனால் பள்ளியில் பாடத்திட்டத்தில் உள்ள சில கதைகள், செய்யுள்கள் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தன. தாகூரின் “காபுலிவாலா”, கணியன் பூங்குன்றனாரின் “நீர்வழிப் படுவூம் புணைபோல”, இப்படி சில வரிகளும், கதைகளும். ஆனால் இலக்கியம் என்று ஒன்று உண்டென்றோ, அதைத் தேடி வசிக்க வேண்டுமென்றோ எனக்கு தெரிந்தும் இல்லை, தோன்றவும் இல்லை.

விகடன் “தொப்பி திலகம்” மூலம் உங்கள் பெயர் அறிமுகமானது. ஆனால் அந்தச் சம்பவம் என் கவனத்தை ஈர்க்கவில்லை. பின் 2008 பிப்ரவரி ஒரு பெரும் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து, படுக்கையோடு இருந்த காலகட்டத்தில் தான் விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூ பற்றிய தகவல் பார்த்தேன். அவரது எழுத்து விகடன் மூலம் ஏற்கனவே அறிமுகம். அவர் எழுத்து எனக்குப் பிடிக்கும். எப்படி தன்னுடைய ‘கிறுக்குத்தனங்களை’ தைரியமாக பத்திரிகையில் எழுதுகிறார் என்ற ஆச்சரியம் இருந்தது. அந்தக் ”கிறுக்குத்தனங்களை’ படிக்க பிடித்தும் இருந்தது, அவர் பேசும் விசயங்களோடு என் அனுபவங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.

நன்றாக ஞாபகம் இருக்கிறது, எஸ்ரா-வின் இணையத்தில் அவருடைய யாமம் நாவல் பற்றிய உங்களுடைய விமர்சனத்தை கட்டிலில் இருந்தவாறு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு இலக்கியம் பற்றியோ, இலக்கிய விமர்சனம் பற்றியோ எதுவும் தெரியாது. அந்த நாவலைப் பற்றியும் எதுவும் தெரியாது. ஆனால் உங்கள் விமர்சனம்… it just made sense. அதற்கு முன்பு மிகக் கொஞ்சமாக தத்துவம் படித்ததுண்டு, ஒரு தேர்விற்காக. எனக்கு அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு ஆச்சரியமும் ஆனந்தமுமாக இருந்தது. “எனக்கு புரியாது, நான் யோசிச்சுகிட்டு அல்லாடிகிட்டிருந்த கேள்விகள்தான் இதெல்லாம்” என்று.

அதன் பிறகு உடனே உங்கள் இணையதளத்திற்கு வந்தேன். அப்போது நீங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் கடவுள் நம்பிக்கையை சொல்லித் தரவேண்டுமா கூடாதா என்று ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு பதில் எழுதியிருந்தீர்கள். உங்கள் பதில் பிடித்துவிடவே உடனே நண்பன் ஒருத்தனுக்கு அந்தக் கேள்வி பதிலை அனுப்பிவிட்டேன். பின் வரிசையாக உங்கள் தளத்தில் இருந்த கட்டுரைகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். நீங்கள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது போல “பிறந்ததிலிருந்து சைவத்திற்குப் பழக்கப்படுத்தப்பட்ட நாயிடம் அகப்பட்ட எலும்புத் துண்டு”. ஒரு எலும்புத் துண்டல்ல, கறிக்கடை. பழகிவிட்டது.

பொதுவாக இப்படி நடு இருபது வயதில் புதிதாக இலக்கியம், தத்துவம் படிப்பவருக்கு இரண்டு உணர்ச்சிகள் உண்டாகுமென்று நினைக்கின்றேன். இப்படி ‘கிறுக்குத்தனமாக’ யோசித்துகொண்டிருப்பது நாம் மட்டுமல்ல என்ற எண்ணம். இது ஒரு மிகப்பெரிய நிம்மதி. சிறுவயதிலிருந்து அனுபவித்த isolation-லிருந்து வெளிவந்த விடுதலை உணர்வு. மற்றொன்று “நான் பெரிய அறிவாளி” என்றிருந்த கர்வம் அடிபட்டு, அதனால் வரும் கோபம், வலி. இந்த சில வருடங்களில் உங்களையும், உங்கள் மூலம் அறிமுகமானவர்களையும், பிற எழுத்தாளர்களையும் படிக்கும்போது இந்த இரண்டு உணர்வுகளையும் நான் அடைந்தேன். இதனூடே ஐந்தாறு அறுவை சிகிச்சைகள். நடக்க ஆரம்பித்தேன்.

ஒருமுறை உங்கள் ஆஸ்திரேலியா பயணக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது அதில் “ஒரு பண்பாட்டின் வெற்றியை எதைக்கொண்டு அறிவது” என்று காந்தியிடம் வெர்ரியர் எர்வின் கேட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு காந்தி தந்த பதில் “அந்தச் சமூகத்தின் மகிழ்ச்சியை வைத்து’ என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு காந்தியின் பதிலை விட அந்தக் கேள்வி ஆர்வத்தைத் தூண்டியது. உடனே நான் அதைப் பற்றி சில கேள்விகளைக் கேட்டு உங்கள் இணையதளத்தில் ஒரு பின்னூட்டம் போட்டேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை போல. அதையே ஒரு கடிதமாக உங்களுக்கு மின்னஞ்சல் எழுதினேன். என் மூன்றாவது கடிதம். உங்களிடம் இருந்து பதில் வரவில்லை. ஆனால் அந்தக் கேள்வியை பிடித்து தேட ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு முதுகலை பட்டப்படிப்புக்கு சேர்ந்தேன், பம்பாயில். இங்கே தத்துவம், சமூகவியல், இலக்கியம் என அறிமுகம் கிடைத்தது. மேலோட்டமான அறிமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் உண்டாகும் புதிய கேள்விகள், தொடர்ந்து வரும் சில அடிப்படை கேள்விகள். பதில்கள்தான் இன்னும் கிடைத்தபாடில்லை. கிடைக்குமா என்றுகூடத் தெரியவில்லை. ‘முழுமை அறிவு’ பற்றி நீங்கள் எழுதியிருந்தது இப்போது நினைவிற்கு வருகிறது.

இடையிடையே பயணம் செய்தேன், நண்பர்களுடன், தனியாக. தொடர்ந்து உங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். வாசித்துகொண்டிருக்கிறேன். “உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன், ஆனால் உங்களுடைய எல்லா கருத்துகளிலும் எனக்கு உடன்பாடில்லை” என்று சொல்லப்போவதில்லை. உங்களிடம் மட்டுமல்ல, யாரிடமும் உறுதியாக மறுத்தோ, ஏன் ஏற்றோகூட சொல்ல என்னிடம் ஆழமான கருத்துகள் இதுவரை இல்லை. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு எச்சரிக்கையுடனே உங்களை வாசிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் அடிப்படைகளை எளிதில் வடிவமைத்துவிடக் கூடாதென்ற எச்சரிகைதான். ‘தேர்ந்தெடுக்கபட்ட சிலர்’ என்ற கருத்தில் நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு உதாரணம். அந்தக் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொண்டால் நிறைய விசயங்களை புரிந்துணர முடியும்தான். ஆனால் அப்படி எளிதில் ஏற்றுகொள்ளக்கூடிய கருத்தல்ல அது என்றே நினைக்கின்றேன், அதன் உள்ளார்ந்த உண்மை புரிந்தாலும்.

இப்போது இருபதுகளின் பின்பாதிக்கு வந்துவிட்டேன். தன்னை மற்றவரிடமிருந்து சற்று வித்தியாசமாக உணர்ந்தவர்கள் தன் துறையாக பொதுவாக இரண்டு வழிகளை தேர்ந்தெடுப்பார்கள் என்று தோன்றுகிறது. ஒன்று மக்களுக்காக ‘சேவை’ செய்வது. மற்றொன்று ‘கலைஞன்’ ஆவது. இந்தத் தலைமுறையில் ஒரு நடுத்தர வர்க்கத்து ஆண் பிள்ளைக்கு இது முறையே மத்திய ஆட்சியாளர் பணி மற்றும் சினிமாத் துறை என்றிருக்கிறது. முதல் வழியில் செல்ல அரைகுறை முயற்சியை எடுத்துவிட்டு பின்வாங்கிவிட்டேன். இரண்டாவது வழி ஆசையை உண்டாக்குகிறதுதான். ஆனால் மனம் எதிலும் ஈடுபட மறுக்கிறது. விலகி விலகி ஓடுகிறது. இதுவல்ல இதுவல்ல என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆழமாக எதிலாவது தன்னையே இழந்து விடவேண்டுமென்று ஆசைப்படுகிறது மனம். அதே நேரத்தில் ஆழமான சுய விமர்சனமும், ஐயமும் எதையும் செய்ய விடாமல் தடுத்தாட்கொள்கிறது.

இப்போது இந்தப் படிப்பையும் முடித்துவிட்டேன். அடுத்து என்ன என்ற கேள்வி எல்லா திசைகளிலிருந்தும், எனக்குள்ளிருந்தும் வந்தது. ஒரு வருடம் இந்தியாவை சுற்றிவர வேண்டுமென ஒரு நாள் தோன்றியது. இன்னும் சில வாரங்களில் கிளம்புகிறேன், நண்பனொருவனும் நானுமாக. கிளம்புவதற்கு முன் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதத் தோன்றியது.

உங்கள் புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும். உங்களிடம் பேச நிறைய இருக்கிறது.

அன்புடன்,

புவனேஸ்வரன்.

அன்புள்ள புவனேஸ்வரன்,

உங்கள் கடிதம் ஒருவகை மனநிறைவை அளித்தது. முக்கியமான காரணம் அதிலிருந்த நேரடியான உண்மைத்தன்மை. ஒரு குழப்பமான மனநிலையில், சந்தி ஒன்றில், நிற்கும்போதுகூட அதை தெளிவான மொழியில் எழுத முடிவதென்பது ஒரு முக்கியமான கொடை. வாழ்த்துக்கள்.

பொதுவாக நான் சந்திக்கும் அனைவரிடமும் நெருங்கவே முயல்வேன். ஆனால் கூட்டமான சந்திப்புகளில் சில சமயம் நெருக்கம் உருவாகாமல் போகும். கூச்சப்பட்டு நிற்பவர்களின் கூச்சமும் ஒருவகை நல்லுணர்வே என சிலசமயம் தோன்றும். இன்னொரு முறை நாம் சந்திக்கும்போது மேலதிக நெருக்கம் உருவாகக்கூடுமென நினைக்கிறேன்.

உங்கள் வாசிப்புப்பயணம் இயல்பானதே. உண்மையில் மிக விரைவிலேயே நீங்கள் நவீன இலக்கியத்திற்குள்ளும் தீவிர வாசிப்புக்கும் வந்துவிட்டீர்கள். சென்ற தலைமுறையில் வாசகர்கள் வணிக எழுத்து வழியாகவும் முற்போக்கு எழுத்து வழியாகவும்தான் உள்ளே வருவார்கள். வணிக எழுத்துக்குப் பழகியவர்களுக்கு கூர்ந்து வாசிக்கும் பயிற்சியும் பொறுமையும் கைகூடுவது கடினம். முற்போக்கு எழுத்து வழியாக வருபவர்களால் அந்தக்கோட்பாட்டு சட்டகம் விட்டு இலக்கியத்துக்குள் இயல்பாக நுழைவது சாத்தியமாவதில்லை. இந்தத் தலைமுறையில் இவ்விரு தடைப்பிராந்தியங்களும் இல்லாமல் உள்ளே வருவது சாத்தியமாகியிருக்கிறது. இணையம், புத்தகச்சந்தைகள் போன்றவற்றுக்கு நன்றி சொல்லவேண்டும்.

வாசிப்பின் ஆரம்ப தளம் நிறைய குழப்பங்களையே உருவாக்கும். ஒன்று தன்னுடைய அடையாளம் பற்றிய சிக்கல். இரண்டு சமூகத்தைப் புரிந்துகொள்வது பற்றிய சிக்கல். கண்ணாடிப்பிம்பங்கள் போல அவை ஒன்றின் இரு முகங்கள்தான். ‘நான் இங்கே என்னை எப்படிப் பொருத்திக்கொள்வது?’ என்பதே அந்தக்குழப்பத்திற்கு ஆதாரமான கேள்வி.

வெளியே இருக்கும் உலகத்தின் இன்னொரு வடிவமே இலக்கியம். இலக்கியம் செறிவாக்கப்பட்ட வாழ்க்கை. சமைக்கப்பட்ட வாழ்க்கை என்றும் சொல்லலாம். இவ்விரு உலகிலும் சுதந்திரமாக உலவும்போது, உண்மையான தேடலில் சமரசங்கள் செய்யாமலிருக்கும்போது, ஆரம்பக்குழப்பங்களைத் தாண்டி இயல்பாக நீங்கள் உள்ளும் புறமும் உங்களைக் கண்டுகொள்ளமுடியும்.

இன்னும் கொஞ்சம் வாழ்க்கையில் அனுபவமுள்ளவன் என்ற முறையில் நான் என்ன சொல்வேன் என்பதை முன்வைக்கிறேன். ஒன்று நான் லௌகீகமான ஒரு குறைந்தபட்ச அடிப்படையை உருவாக்கிக்கொள்ளவே முதலில் ஆலோசனை சொல்வேன்.

கௌரவமான ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வது அப்படியொன்றும் பெரிய போராட்டமாக இன்றில்லை. எழுபதுகளில் அப்படி அல்ல. அதற்காகவே பெரும் போராட்டம் நிகழ்த்தவேண்டும். அதுவே மிகப்பெரிய வதையனுபவங்களை அவமதிப்புகளை அளிக்கும். அதிலேயே அக ஆற்றலிலும் காலத்திலும் பெரும்பகுதி வீணாகிப்போகும். இன்று அந்நிலை இல்லை என்பது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. நான் உங்கள் நிலையில் அதையே செய்வேன்.

அதன் பின்னர் நான் என் மனம் எதில் சென்று முழுமையாகப் படிகிறது என்பதை கவனிப்பேன். கலையிலா இலக்கியத்திலா சேவையிலா அரசியலிலா என அவதானிப்பேன். எங்கோ ஒரு புள்ளியில் என் மனம் முழுமையாக உணரும், இது என் இடம் என. அதில் என்னை முழுமையாகக் குவித்துச் செலுத்துவேன். அங்கே என்னை கண்டுகொள்ள, என்னை நிரூபிக்க, என்னை உருவாக்கிக்கொள்ள முயல்வேன்.

உண்மையில் நான் என் இளமையில் நான்கு வருடங்களை தத்தளிப்பில் அலைக்கழிப்பில் செலவிட்டபின் இதைக் கண்டடைந்தேன். தொலைபேசித்துறையில் ஓர் எளிய, ஆனால் உத்தரவாதித்துவம் உடைய, வேலை என்னை பல அன்றாடச் சிறுமைகளில் இருந்து விடுவித்தது. எது எனக்கு முக்கியமோ அதை மட்டுமே நான் செய்தால்போதும் என்ற விடுதலையை எனக்களித்தது. நான் அரசியல், தொழிற்சங்கம், ஆன்மீகம் என அலைமோதி இலக்கியத்தைக் கண்டுகொண்டேன்.

நீங்கள் செய்யும் பயணம் மிகமிக முக்கியமானது. நான் அதையே சொல்வேன். பயணம் என்பது வெளியே பார்ப்பதற்கானது மட்டுமல்ல, நம்முள் பார்த்துக்கொள்வதற்குமானது. எத்தனை வாசித்தாலும் விவாதித்தாலும் வராத தெளிவை பயணம் மூலம் நேரடியாகப் பார்ப்பது அளிக்கும். நான் தமிழக அறிவுஜீவிகளிடம் காணும் பிரச்சினையே அவர்கள் தமிழகத்தைப்பற்றியும் இந்தியாவைப்பற்றியும் பேசும்போது செய்தித்தாள்களைக் கொண்டே பேசுகிறார்கள் என்பதுதான். நேரில் பார்க்கும் மக்களும் நிலமும் அளிக்கும் மனச்சித்திரமே வேறு. அது இன்னும் உணர்ச்சிகரமானது, நேரடியானது, உறுதியானது.

உங்கள் எண்ணங்களில், புரிதல்களில் பயணம் உருவாக்கும் உறுதிப்பாடு கடைசிவரை உங்களுக்குத் துணைநிற்கும்.

வாழ்த்துக்கள்!

ஜெ

முந்தைய கட்டுரைதகவலறியும் உரிமை சட்டம்- ஓர் எதிர்வினை
அடுத்த கட்டுரைநாத்திகம், இலக்கணம்