காலச்சுவடும் வினவும்

ஒரு நண்பர் சில இணைப்புகளைத் தந்து அந்தக் கட்டுரைகளை வாசித்தீர்களா என்று கேட்டிருந்தார். அவரது உழைப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கது. இல்லை, நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன், கணிப்பொறி கைவசம் இல்லை என மின்னஞ்சல் அனுப்பினேன். மீண்டும் மின்னஞ்சல் செய்து தயவுசெய்து வாசியுங்கள் என்றார்.


முதல் கட்டுரை ஷோபா சக்தியுடையது.
காலச்சுவடு கண்ணனுக்கு சில கேள்விகளை எழுப்புகிறார். அதற்கான காலச்சுவடு கண்ணனுடைய பதில்கள். அடுத்த கட்டுரை கண்ணன் அ.மார்க்ஸையும் லீனா மணிமேகலையையும் அவரது பாணியில் ‘அம்பலப்படுத்துகிறார்’ .

கண்ணனின் எழுத்தில் உள்ள நக்கலும் கிண்டலும் ஆச்சரியமளிக்கிறது. எழுதி எழுதி இதில் தேறிவிட்டிருக்கிறார். இதில் மட்டும். அவரது எல்லா திறன்களும் தன்னை இப்படி ஒரு நக்கலான கசப்பான மனிதராக வெளிப்படுத்தும் மொழியை அடைவதில் செலவழிக்கப்பட்டுள்ளது என்று தோன்றியது.

சுந்தர ராமசாமி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த காலகட்டங்களில் எனக்கு கண்ணன் அறிமுகம். அப்போது பெங்களூரில் படித்துக்கொண்டிருந்தார். சில ஹலோக்கள் சொல்லியிருக்கிறோம். சுந்தர ராமசாமியுடனான பேச்சுக்களில் கலந்துகொண்டிருக்கிறார். பின்னர் அவர் படிப்பை முடித்துவிட்டு வந்த சில நாட்களிலேயே அவரிடம் மனவிலகல் ஏற்பட்டது. அது சுராவுடனான விலகலுக்கும் தொடக்கமாக அமைந்தது.

காரணம் நான் பொதுவாக அதிகார தோரணைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவனல்ல– எழுத்தாளர்களல்லாத பிறரிடம். அப்படியே அலுவலகத்தில் நீடிக்க தொழிற்சங்கமும், சினிமாவில் நீடிக்க எழுத்தாளன் என்ற இடமும் உதவின. அவை செல்லுபடியாகாத இடங்களுக்கு நான் போவதில்லை.

எனக்கு கண்ணனை சரியாகப் பழக்கமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு இருபது முறை நூறு சொற்றொடர்களுக்குள் பேசியிருப்போம். அவர் சில உரையாடல்களில் பங்கெடுத்ததை வைத்து அவர் முக்கியமான கட்டுரையாசிரியராக வருவார் என நினைத்திருந்தேன். ஆனால் காலச்சுவடு தானாகவே ஒரு குழியில் மாட்டிக்கொண்டது. அதற்குள் கண்ணன் இன்று இருக்கிறார் என நினைக்கிறேன்.

காலச்சுவடு திரும்ப ஆரம்பிக்கப்பட்டபோது அது விறுவிறுப்பாக நடக்க விவாதங்கள் அவசியமென்ற எண்ணம் ஏற்பட்டது. சொல்லப்போனால் அப்போது அதை மனுஷ்யபுத்திரனிடம் நானே சொன்னேன். அதற்காகவே கடிதங்களில் கடுமையான நேரடி மோதல்கள் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் மிக விரைவிலேயே அது ஒரு தெருமுனைச்சண்டைகளின் தரத்துக்கு வந்தது. ஜனநாயகம் என்ற பேரில் மாறிமாறி வசைபாடிக்கொள்ளும் இடமாக அது மாறியது.

இத்தனை வருடங்களில் தன் பக்கங்களில் காலச்சுவடு அச்சேற்றிய வசைகளையும் மறுவசைகளையும் ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்த்தால் அதுதான் தமிழின் மிகப்பெரிய வசைத்தொகுதியாக இருக்கும் என நினைக்கிறேன். காலச்சுவடு வெளியிட்ட தொகைநூல்களைப் பார்க்கையில் படைப்பிலக்கியத்துக்கு அதன் பங்களிப்பென்பது அனேகமாக ஏதுமில்லை என்ற எண்ணம்தான் உருவாகிறது. ஏற்கனவே தங்கள் இடங்களை உருவாக்கிக் கொண்டவர்களின் சில ஆக்கங்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவையாக உள்ளன.

ஆம், தமிழில் காலச்சுவடின் இடம் வசைகளாலும் போலித்தீவிரம் கொண்ட அரசியல் விவாதங்களாலும்தான் உருவாகிவந்திருக்கிறது என்று இன்று தோன்றுகிறது. இந்த விவாதங்களுக்கெல்லாம் வெறும் சமகால மதிப்புதான். ஒருவருடம் கழித்து புரட்டிப்பார்த்தால் சருகுக்குவையாகத் தெரிகிறது இதழ்த்தொகை. அதிலும் அதன் ஆசிரியர்களாக அமைந்த அரவிந்தன், தேவிபாரதி போன்றவர்கள் எழுதிய அசட்டுக்கதைகளும் அதற்கு அவர்களே பிரசுரித்துக்கொண்ட வாசகர்கடித புகழ்மாலைகளும் தமிழின் சிற்றிதழ்ச்சூழலில் பெரிய நகைச்சுவைகள்.

காலச்சுவடு உருவாக்கிய மனநிலை அதற்கான ஆட்களையும் தேடிக்கொண்டுவந்து சேர்க்கிறது. அதன் ஆசிரியர்களாகவோ நிழல் ஆசிரியர்களாகவோ இருந்தவர்கள் வம்புவிரும்பிகள். பலர் வம்புகளுக்கு அப்பால் ஆளுமை என ஏதும் இல்லாதவர்கள்.

தான் குழித்த இந்தக்குழியில் காலச்சுவடு இன்று விழுந்து கிடக்கிறது. அதைச்சுற்றி வெற்று வம்பாளர்களின் ஒரு பெரும்கூட்டம் திரண்டிருக்கிறது. அவர்களின் வம்புகளுக்குச் சலிக்காமல் அது பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆதாரங்களை அளிக்கிறது. மன்றாடுகிறது. மார்தட்டுகிறது. வசைபாடுகிறது.

தேவிபாரதியும் அரவிந்தனுமெல்லாம் அதைச்செய்யட்டும். அவர்களால் தமிழுக்கு ஆகப்போவதொன்றுமிலை. ஆனால் கண்ணன் வெறும் வம்புகளுக்கு அப்பால் ஏதும் எழுதாதவராக ஆகிவிட்டிருக்கிறார். அவரது குறிப்புகள் அல்லது கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘இதையெல்லாம் சொல்ல இவர் யார்? என்ன செய்திருக்கிறார்? வாரிசுரிமையாக ஒரு பத்திரிகையை வைத்திருப்பது தவிர இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று கேட்கும் நிலை இன்றுள்ளது.

நேரடியாகவே பேசப்போனால் இந்த விவாதங்களுக்கெல்லாம் என்ன அர்த்தம்? காலச்சுவடு கண்ணன் அவருக்கான ஓர் அரசியலைக் கொண்டிருக்கிறார். அது காலச்சுவடில் உள்ளது. அதை நான் இந்தியாவின் மைய ஓட்ட இதழியலில் வலுவாக இருக்கும் ‘இடதுசாரி தாராளவாத நோக்கு’ என்பேன். கிட்டத்தட்ட அதுதான் சுந்தர ராமசாமியின் அரசியலும். அவர்கள் இடதுசாரி கட்சியரசியலை ஐயத்துடன் பார்ப்பார்கள். இடதுசாரி தீவிரப்போக்கை ஏற்கமாட்டார்கள். ஆனால் ஜனநாயக கட்டமைப்புக்குள் செயல்படும் ஓர் இடதுசாரி தளத்துக்காக வாதாடுவார்கள்.

கண்ணனின் அரசியலை ஏற்காத எதிரிகள் தமிழில் வேரூன்றிய ஒரு வழக்கத்தின்படி அவரை எதிர்கொள்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் அவன் பிறந்த சாதி மத அடிப்படையிலேயே சிந்திக்கமுடியும், செயல்பட முடியும், அதற்கப்பால் செல்லவே முடியாது என்பது நம்மூர் திராவிட அரசியலின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது ஈவேராவிடமிருந்து வந்தது. பாரதிதாசனும் அண்ணாதுரையும் கருணாநிதியும் எல்லாமே அதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். எதிரிகளை அப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால் ஆதிக்கம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைப்பற்றிப் பேசும்போது அதை அப்பட்டமாகச் சொல்லமாட்டார்கள். தலித்துக்களைப்பற்றிச் சொல்லும்போது மேடைகளில் மட்டும் சொல்லமாட்டார்கள், சாதாரண சந்திப்புகளில் விஷம் கொட்டுவார்கள். பிராமணர்களைப்பற்றி மட்டும் மேடைகளில் எழுத்துக்களில் எங்கும் அப்பட்டமாக வெளிப்படையாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவார்கள்.

சுந்தர ராமசாமி அவர் முன்வைத்த அழகியல்வாத நோக்குக்காகவே ‘பார்ப்பனசக்தி’ என வசைபாடப்பட்டார். அப்படி இருக்க அரசியல்பேசும் கண்ணன் அவரது வாழ்நாளின் கடைசி வரை பார்ப்பனர் என்றே வசைபாடப்படுவார். திராவிடர் கழகத்தின் ஊதுகுழலாக அவர் தன்னை மாற்றிக்கொண்டால்கூட அந்த முத்திரையில் இருந்து வெளியே வர முடியாது. ஐயமிருந்தால் ஞாநியிடம் அனுபவங்களைக் கேட்டுப்பார்க்கலாம்.

கண்ணனிடம் எனக்கு ஒவ்வாத பல விஷயங்கள் உள்ளன. ஆகவே ஒருபோதும் அவரோ காலச்சுவடோ என் பாதையில் இடைவெட்டப்போவதுமில்லை. செல்வந்த வீட்டில் பிறந்தவர்களுக்கே உரிய அவரது தோரணை எனக்குக் கசப்பூட்டுவது. அவரது தந்தையிடம் நெருக்கமாக இருந்த அனைவருமே அவரிடமிருந்து விலகிப்போனமைக்கு அதுவே காரணம். அனேகமாக எந்த நல்ல எழுத்தாளரும் அவருடன் இருக்காமல் போனமைக்கும் அதுவே காரணம். அதிலும் அவரது தந்தைமேல் மிகப்பெரிய பற்றுதல்கொண்ட நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களையே அவரால் தக்கவைக்க முடியவில்லை.

ஆக கடைசியில் வெறும் அடிப்பொடிகளே எஞ்சினர். அந்த அல்லக்கைகள் விரிசல்களை இன்னும் அதிகரித்தனர். கண்ணனைப் பொறுத்தவரை நாஞ்சில்நாடனுக்கும் தேவிபாரதிக்கும் வேறுபாடு தெரியாது. தேவிபாரதி அவருக்கு மனதுக்குப் பிடித்தமாதிரி பேசுபவர் என்பதனால் இன்னும் பெரிய எழுத்தாளராகக் கூடத் தோன்றலாம்.

உண்மையில் கண்ணனுக்கு எந்த இலக்கியவாதியிடமும் எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் அவர் எந்த இலக்கிய ஆக்கத்தையும் வாசிப்பவரோ வாசித்தாலும் புரிந்துகொள்ளக்கூடியவரோ அல்ல. அவ்வகையில் அவரும் அ.மார்க்ஸும் ஒன்றுதான்.

கண்ணனின் இடதுசாரி அரசியல் ஒரு முதிராநோக்கு என்பதே என் எண்ணம். அது அருந்ததிராய் போன்றவர்களால் முன்வைக்கப்படுவது. அவரது பெரும்பாலான கருத்துக்கள் இந்திய இதழியல்சூழலில் ‘ரெடிமேடாக’ கிடைப்பவை என்பதே என் மதிப்பீடு.

ஆனால் அவரை ஒரு பார்ப்பனர் என்றோ பார்ப்பன மனநிலையோ அதற்கான அரசியலோ கொண்டவர் என்றோ நான் நினைக்கவில்லை. அந்த வாதம் அப்பட்டமான அவதூறு மட்டுமே என்றும், அப்படி அவதூறால் மட்டுமே அவரை எதிர்கொள்ளும் நிலையில் நம் அரசியல்சூழல் இருப்பது ஒரு கேவலநிலை என்றும் நினைக்கிறேன். ஆனால் அது மட்டுமே என்றும் இங்கே இருந்துள்ளது.

கண்ணன் இந்த அவதூறுஅரசியலுக்கு தொடர்ச்சியாக எதிர்வினையாற்றி அந்த எதிர்வினைகளல்லாமல் வேறெந்த பங்களிப்பும் இல்லாதவராக ஆகிவிட்டிருக்கிறார். எழுத்தில் நேர்நிலை உணர்ச்சிகளே இல்லாமல் கசப்பும் நக்கலும் மட்டுமே வெளிப்படுவதாக ஆகிவிட்டது. ஒருபோதும் ஒரு கட்டுரையும் நாம் ஏற்கனவே ஆங்கில இதழ்களில் வாசிக்க நேர்ந்த கருத்துக்களுக்கு மேலதிகமாக எதையுமே சொல்லக்கூடியவையாக அமைவதில்லை.

அதாவது கண்ணன் அவரது எதிரிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். அவர் என்ன பேசவேண்டும் என்பதை அவர்கள் இன்று தீர்மானிக்கிறார்கள். அவர் எவரை எதிர்த்தாரோ அவர்களைப் போலவே கண்ணன் ஆகியிருக்கிறார். அவருக்கும் அ.மார்க்ஸுக்கும் அணுகுமுறையில் மனநிலையில் மொழிநடையில் எந்த வேறுபாடும் இன்றில்லை.

நானே இந்த ஆவேசத்துடன் எல்லா பூசல்களிலும் ஈடுபட்டவன்தான். ஆனால் அவற்றை மட்டும் எழுதவில்லை. உக்கிரமான விவாதங்கள் நிகழ்ந்த அந்தக்காலகட்டத்தில் விஷ்ணுபுரமும் பின்தொடரும் நிழலின்குரலும் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த விவாதங்களைக்கூட அடிப்படையான அழகியல் விஷயங்களை விவாதிப்பவையாக மாற்ற முயன்றுகொண்டுமிருந்தேன். என் நாவல்கள்தான் என் குரல்களாக நின்றன, எனக்கான இடத்தை உருவாக்கின, என் ஆளுமையை வடிவமைத்தன.

கண்ணன் கொஞ்சநாள் எதிர்வினைகளே ஆற்றாமல், முழுக்கவே அவதூறுகளை உதாசீனம்செய்து, வம்புகளை தவிர்த்து எழுதிப்பார்க்கலாம். அவரது கருத்துக்களை எல்லா தளத்திலும் விரிவாக எழுதி அவற்றுக்கிடையே ஓர் ஒத்திசைவை உருவாக்க முயலலாம். அந்த கருத்துக்களின் ஒட்டுமொத்தமே அவருடன் மானசீகமாக விவாதிக்கும் உண்மையான வாசகர்களை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கும். அவர்கள் மூலம்தான் அவரது பங்களிப்பு உறுதிப்படும். அவர் மீதான அவதூறுகளுக்கு அது ஒரு திடமான பதிலாக காலத்தில் நிற்கும்.

நண்பர்கள் புன்னகைசெய்வது எனக்குத் தெரிகிறது– இந்தக் கட்டுரையே கூட ஆவேசமான ஒரு நக்கல், வம்புக்கட்டுரைக்குத்தான் வழிவகுக்கும். ஆனால் சொல்லித்தான் பார்ப்போமே, குருபீடம் என்று பட்டப்பெயரும் வந்துவிட்டது, இனி என்ன பயம் என்று தோன்றுகிறது.

*

இந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றி. மேற்படி கேள்விபதில் பகுதியில் தன்னை எளிமைப்படுத்தி முத்திரைகுத்தி ஒதுக்கும் போக்குக்கு எதிராக பொங்கும் கண்ணன் மற்றவர்களிடம் அதையே செய்கிறார். என்னுடைய எழுத்தில் பல்லாயிரம் பக்கங்களில் நான் இந்துத்துவ அரசியலையும் இந்து மெய்ஞானமரபையும் எப்படி வேறுபடுத்தி அணுகுகிறேன் என்பதை விரிவாக எழுதியிருக்கிறேன். கண்ணனுக்கு அவையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதவை. ஆகவே ஓர் எளிய ரப்பர்முத்திரையை கையிலெடுக்கிறார். அ.மார்க்ஸ் அச்சு அசலாக இதையேதான் சொல்வார் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம்.

லீனா மணிமேகலை மற்றும் அ.மார்க்ஸ் விஷயங்கள். இந்திய அறிவுத்துறையில் செயல்படுபவர்கள் எவருக்கெல்லாம் எங்கிருந்தெல்லாம் பணம் வருகிறது என்பதை என்றாவது ஏதாவது அமைப்பு விசாரிக்கப்புகுந்தால் என்ன ஆகும் என்றே பயமாக இருக்கிறது.

கனிமொழியை காலச்சுவடு ‘எதிர்த்து’ போரிட்ட தியாக வரலாறு மெல்லமெல்ல உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கனிமொழி தமிழகத்தின் தனிப்பெரும் அறிவுஜீவியாக தமிழின் சிற்றிதழ்ப்புரட்சியாளர்களால் முன்னிறுத்தப்படும்போதும் அவர் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலரசியல்வாதிகளில் ஒருவரின் மகளாக, கோடானுகோடி சொத்துக்கு அதிபதியாக, திராவிட இயக்கக் குஞ்சாகவே இருந்தார் என்பதை நமக்கே மறக்கடித்துவிடுவார்கள் போல. கனிமொழியே இவர்களை துரத்திவிடும்வரை இவர்கள் கூடவேதான் இருந்தார்கள் என்பதாவது இதழியல் வரலாற்றில் எஞ்சுமா?

உண்மையில் அ.மார்க்ஸுக்கும் காலச்சுவடுக்கும் என்ன வேறுபாடு? காலச்சுவடை கனிமொழி தூக்கிவீசியபோது அ.மார்க்ஸ் போய் சேர்ந்துகொண்டார். மனுஷ்யபுத்திரன் அதன்பின் போய்ச்சேர்ந்துகொண்டார். 3ஜி ஊழல் வெடிக்காவிட்டால் இப்போதுகூட அந்த அறிவார்ந்த உறவு நீடித்திருக்கும். அந்த ஊழல் மறக்கப்பட்டபின் அந்த உறவு புதுப்பிக்கப்படவும் கூடும்.

*


அடுத்த கட்டுரை வினவில் லீனா மணிமேகலையைப் பற்றி எழுதப்பட்டது.
அதற்கு லீனா அவரது தளத்திலே பதிலளிக்கிறார். அந்தக் கட்டுரைகளும் பதிலும் எல்லாம் எனக்கு எந்த ஆர்வத்தையும் உருவாக்கவில்லை. ஒட்டுமொத்தமாகவே இந்த உலகம் எனக்கு அப்பாற்பட்டது. கலைகளையும் இலக்கியத்தையும் நுட்பமான கருத்துக்களையும் பொறுத்தவரை அ.மார்க்ஸ், கண்ணன், லீனா, வினவுக்கும்பல் எல்லாரும் ஒரேதளத்தில் நிற்பவர்களே.

ஆனால் அந்தப் பின்னூட்டங்கள்.
அதை தமிழ் உளவியலை அறிய நினைப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டும். என்னென்ன வசைகள். எத்தனை வன்மம். பெரும்பாலும் புனைபெயர்களில். மாறிமாறி கடித்துக்கிழித்துக்குதறி….

தமிழில் இந்த அளவுக்கு கீழ்த்தரமான வன்மம் வேறெங்காவது வெளிப்படுகிறதா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களெல்லாம் யார்? என்ன வகையான மனநிறைவை இதிலிருந்து பெறுகிறார்கள்? என்னென்ன வகையான பாவனைகள், பிரமைகள். புரட்சியின் உச்சியில் நின்று அடுத்தகணம் போர்க்களத்தில் உயிர்துறக்கப் போகிறவர்களைப்போல. சமூகப்புரட்சிக்காக தெருவிலே வியர்வை சிந்துபவர்களைப்போல.

ஆனால் இவர்களுக்கு தங்களைத்தவிர பிற அனைவருமே போலிகள் ‘சொம்புகள்’. தாங்கள் என்ன, தான் மட்டுமே. ஒரு தற்காலிக தேவைக்காக நான்குபேர் சேர்ந்து கொள்கிறார்கள். அந்தப் புரட்சிகர சுயபாவனை என்பது முழுக்கமுழுக்க பிறரை வரைமுறையில்லாமல் வசைபாடுவதற்கான ஒரு சாக்கு மட்டுமே. அந்த ‘பிறர்’ சொல்வதற்கும் தாங்கள் சொல்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது கூட இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

ஒரு பயங்கரமான, கேலிக்கூத்தான நாடகத்தைப்பார்த்ததுபோல இருந்தது அந்தப் பின்னூட்டங்களை வாசித்தபோது. மாறிமாறி முகமூடிகளை மாட்டிக்கொண்டு வந்து ரத்தமும் சதையுமாகப் பிய்த்து கிழித்து தொங்கவிடுகிறார்கள். இந்த உளநோய்க்களம்தான் உண்மையில் தமிழ் அறிவுலகின் அந்தரங்கம் என்றால் இதனுடன்தானா எல்லாரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்? அல்லது இந்த உளநோய்க்களத்தில் விதவிதமான பாவனைகள் வழியாக தங்களை காலிசெய்துகொள்வது நாம் சமநிலையுடன் இருக்க நமக்கு உதவுகிறதா!

புரியவில்லை!


விவாதங்களின் எல்லை

வசைகள்

முந்தைய கட்டுரைசுவாமி தன்மயா
அடுத்த கட்டுரைநாஞ்சில் அமெரிக்காவில் – அரவிந்த்